12
திசை நான்கும் தினமென
ஓடிக்கொண்டிருந்த உன்னிடம்
இப்பொழுதெல்லாம் நிறைய மாற்றங்கள்.
நிர்வாகச் சீர்திருத்தமென
நம் நிறுவனப் பங்குகளை
என் பெயருக்கு மடை மாற்றுகிறாய்.
சட்டச் சிக்கல்கள் வருமென
சேமிப்புகளில் எல்லாம்
என்னை வாரிசாய் உறுதி செய்கிறாய்.
எவருக்காகவும் இழக்க விரும்பாத
உன் பொழுதுகளை
என் பொழுதாக்கிச் செரிக்க அனுமதிக்கிறாய்.
நடப்பதெல்லாம் கனவோ என
பிரமை கொள்ளும் அளவுக்கு
உன் இறுக்கத்தில் என்னை நெருக்கமாக்குகிறாய்
எல்லாவற்றையும்
திட்டமிட்டே செய்யும் நீ
திட்டமிட்டேனும் மறைத்திருக்கலாம்
புற்றுச் செல்களால் சிதைந்து வரும்
உன் தேகம் குறித்த
மருத்துவ அறிக்கையையும்!