19
விரிந்து கிடந்த வெளியை
நீல வானமாக்கி
பச்சை தரையாக்கி
அப்படியும், இப்படியுமாய்
விழி விரித்து நோக்கிய அபி
சாரல் துளிகளாய்
மழையை இறக்கினான்.
சட்டென
கிளைகளும், இலைகளுமாய்
நெடுதுயர் கழிகளை நட்டு
பட்சிகளுக்கு இடமளித்தவனிடம்
இருக்கையும் போடு என்றேன்.
மறுத்தவன்
வண்ண வண்ணப் பூக்களை
விதைத்து விட்டு
காடு என பெயரிட்டு
அழுத்தமாய் அடிக்கோடிட்டான்.
பூங்கா பார்த்தே புழங்கிய நான்
இப்படியா இருக்கும் காடு? என்றேன்
இப்படியும் இருக்கும் என்றான்
விரிந்து கிடந்த வெளியை
நீல வானமாக்கிய படி!