23
புதிதாய் பயணிக்கும் வழித்தடத்தில்
சட்டென நுழையும் திருப்பமாய்
ஊடுருவிய நினைவுகளால்
சூல் கொண்டு கிடக்கிறது மனது.
அகழ்ந்தெடுத்த வடுவாய் பதியமான
அவைகளின் கோரப் பற்கள்
தழுவல்களாய் நிற்கும் சுக நினைவுகளைக்
கீறிச் சுவைத்துக் கொண்டேயிருக்கிறது நித்தமும்.
கூடடைய மீளும் பறவையாய்
உழிந்து விட மெனக்கெடும் போதெல்லாம்
புதிதாய் ஒன்று பதியமாகி விடுகிறது
அதே சாயல் தரித்த வேகப் பாய்ச்சலில்!
திருப்பங்களைத் தந்து போன நினைவுகளை விடவும்
திருப்பங்களைத் தரக் காத்திருக்கும் நினைவுகள்
எப்பொழுதும்
”திக்”கைத்தருபவைகளாகவே இருக்கின்றன.