24
நடைமுடிந்து திரும்பி வந்த கணம்
எனக்காகவே காத்திருந்தவனாய்
மடிமுழுக்க அட்டைகளும்
வண்ணக்குச்சிகளும்
உருளையிலிட்ட ஒட்டுப்பசையுமாய்
என்னருகில் வந்தமர்ந்தான் அபி.
சில அறைகளுடன் கூடிய வீடாய்
அட்டைகளை உருமாற்றியவன்
அந்தச் சின்ன வீட்டிலும்
தனக்கென ஒரு அறை ஒதுக்கி
என் வழி உறுதியும் செய்து கொண்டான்.
முடிந்துபோன முகபாவனையுடன்
முன்கண் உயர்த்தியவனிடம்
யாருக்கு இந்த வீடு? என்றேன்.
பணித்திருந்த கண்களோடு
கட்டியணைத்துக் கொண்ட
அந்த ஆறு வயது கரங்களில் கனறத் தொடங்கியது
தனிமையின் ஆரம்பத் துயரம்!