25
பழுத்ததை உதிர்த்து
பருவங்கள் காட்டுகிறது
மரம்
வனப்பில் நின்று
வறுமையைக் காட்டுகின்றன
அலமாரி அங்கீகாரங்கள்
எல்லை தாண்டல்கள்
ஏற்கப்படுகின்றன
பறவைகளின் பயணம்
வேண்டுதல்களின் போதெல்லாம்
விட்டு விடுதலையாகின்றன
வாயில்லா ஜீவன்கள்
கடைசி பந்தமும்
கை கழுவியது
உதிர்ந்து விழும் இலை
நகரவாழ்வுக்கு
பழகிவிட்டன பறவைகள்
அடுக்ககத்தில் கூடு
ஏந்திச் செல்கிறது
நிர்வாணத்தை
ஆடை
உயிரற்ற சிலை
உயிர் பெறுகிறது
கர்ப்பகிரகம்
தேவையற்றதை இழந்து
தெய்வமானது
பாறை
யாத்திரைக்கு
தயாராகி விட்டது
உதட்டுச்சாயமேறிய கோப்பை
சங்கமமாவதற்குள்
ஓராயிரம் சலசலப்பு
நதிகளின் ஓட்டம்
வேட்கையும், வேதனையும்
வேரறுந்து சாய்கிறது
விடியலுக்கு முந்திய இரவு
கூடலுக்கான அழைப்பை
மீற முடியவில்லை
திரும்பி ஓடும் அலைகள்
தோல் உரித்து
உயிர் பெறுகிறது
பென்சில்
மோகத்தில் கணவன்
வெட்கத்தில் மனைவி
ஆடையற்ற பால்
இரதங்கள் கிளம்பின
வதங்கள் செய்ய
அரசியல் யாத்திரை
ஆயிரம் ஏக்கர் மடத்தில்
பகட்டாய் தொடங்கியது
“பற்றற்று இரு” வகுப்பு
பெருங்கோபத்துடன்
புணர்தலுக்குத் தயாரானது
மழை
தரத்தவறிய பணம்
மாறி,மாறி வந்து போனது முகம்
அஞ்சலிக் கூட்டம்
பேசாமல் பேச
பழகிக் கொண்டிருந்தது குழந்தை
பள்ளிக்கூடம்
பவனி வர யானை
பல்லக்குத் தூக்கப் பக்தன்
சோம்பேறியாய் கடவுள்
பாறையிடுக்கிலிருந்து
எழும்பி வந்தது எச்சம்
தன்னம்பிக்கை
சவமாகிக் கிடந்தது
வீடும், வீதியும்
பள்ளி சென்று விட்ட குழந்தைகள்.
களத்துமேடு செல்ல
காத்துக்கிடக்கிறது கதிர்
முதிர் கன்னி
நரகாசுரனை அழிப்பதற்குள்
கிருஷ்ணர்கள் பலி
பட்டாசு ஆலை விபத்து
இரண்டாம் பந்திக்காக
காத்திருந்தார்கள்
எச்சில் உணவு பொறுக்குபவர்கள்
தழுவலுக்காக
தவித்திருக்கிறது கரை
வற்றிய நதி
கர்ப்பகிரகத்திற்குள் இருப்பவனும் சாமி
கற்பூரம் காட்டுபவனும் சாமி
முட்டாளாய் பக்தன்
யாருக்கு முதல் பரிவட்டம்
முட்டிக்கொண்ட பங்காளிகள்
இரசித்தபடி கடவுள்
தீயில் குளித்தாள்
தீயால் குளிக்க வைத்தாள்
கணவனின் கறை போக்க!
குழிகளுக்குள்
குவிந்து கிடக்கிறது
ஈழம்
இடம் மாறிக் காத்திருக்கின்றனர்
கடவுளும், பிச்சைக்காரர்களும்
தட்சணையும், தருமமும்!
தன்னை மாய்த்து
அவன் தரித்திரம் போக்கியது
திருஷ்டிப் பூசணிக்காய்
காளைகளுமில்லை
கழனிப்பானையுமில்லை
கதிர் அறுக்கும் கருவி!
அவதார நம்பிக்கைகளில்
ஆணியடிக்கப்பட்ட மக்கள்
ஆசிரமத்தில் இறை வழிபாடு!
சாளரத்தைச் சாத்து
காற்று வெளியேறுகிறது
குளிர்சாதன அறை.