"

2

100

சிங்கப்பூர் இலக்கியத் தளத்தில் கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், தொகுப்பாசிரியர், இணைய இதழாசிரியர், வாசகர் வட்ட அமைப்பாளர் என்ற பன்முகத்தன்மையோடு இயங்கி வரும் பாலு மணிமாறனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ”சக பயணிகளோடு சில உரையாடல்கள்”. சக பயணிகள் என்ற வார்த்தை தன்னோடு பயணம் செய்கின்றவர்களை குறிப்பிடுவதாக இருந்தாலும் பயணிக்கின்ற வழியில் தான் பார்க்கின்றவர்களின், தன்னைக் கடந்து போகின்றவர்களின் சம்பவங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் முதலியவைகளின் வெளிப்பாடுகள் வழி இத்தொகுப்பில் கவிஞர் தன்னையே பயணியாக்கிக் கொள்கிறார்.

அகம், புறம் என மனித வாழ்வை இரு கூராக்கி நீளும் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் இத்தொகுப்பும் அத்தகைய இரு கூறுகளைக் கொண்டிருக்கிறது. சரிபாதி பக்கங்களில் முதல் பகுதி புறம் சார்ந்த நிகழ்வுகளைக் கவிதையாக்குகிறது, இரண்டாவது பகுதி அகம் சார்ந்த காதலை உரையாடல் படுத்துகிறது. காதல் கவிதை என்றாலே காததூரம் ஓடும் நிலையில் ”காதல் உரையாடல்கள்” என அப்பகுதிக்கு தலைப்பிட்டிருப்பது தற்செயல் நிகழ்வாய் இருக்காது என நினைக்கிறேன். அகப்பகுதியில் காதல் உரையாடல்களை ஒரு நாட்குறிப்பின் பதிவாய் பதிவிட்ட கவிஞர் புறப்பகுதியில் தான் வாழும் நாடான சிங்கப்பூரின் வாழ்வியல் நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு படிமத்தை மட்டும் உருவாக்கிக் காட்டி விட்டு அதன் போக்கின் நீளத்தை, பார்வையின் பரப்பை வாசிப்பாளனிடம் தந்து விடுவது. அதேபோல, தான் உருவாக்கிக் காட்டும் படிமத்தின் மீது வாசிப்பாளனை தானே கொண்டு செலுத்துவது என்று விரிந்து பரவும் கவிதையின் இரண்டு முகமும் இந்தத் தொகுப்பில் சம அளவில் விரவிக் கிடக்கிறது.

இந்தத் தொகுப்பில் இருக்கும் “ஒரு தொலைக்காட்சி நடிகை” எனக்குப் பிடித்த ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று. ஒரு தொலைக்காட்சி நடிகைக்கும், அதே புளோக்கில் (குடியிருப்பில்) வசிக்கும் தனக்குமான ஒரு உரையாடலை மொழியற்ற முகக்குறிப்பில் கவிஞர் நிகழ்த்திக் காட்டுகிறார். மின் தூக்கியில் அவ்வப்போது தன்னைப் பார்த்த ஒருவன் தான் தொலைக்காட்சி நடிகையானதை உணர்ந்தானா? என்பதையும், பின்னொரு நாளில் பிள்ளைகளோடு தன்னைக் கண்ட போது அடையாளம் கண்டு கொண்டானா? என்பதையும் அறிந்து கொள்ள அவள் ஆர்வம் கொள்கிறாள். அந்த ஆர்வத்தின் அர்த்தம் உணர்ந்தும் அறியாதவர் போல் இவர் நடிக்கிறார். தன்னால் அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஏமாற்ற உணர்வு மேலோங்க அவள் அங்கிருந்து போய்விட்ட பின் அங்கு எழும் ஒரு வெற்று நிலையை
சற்றே ஏமாற்றம் வடியும் நடையோடு
போய்விட்டாள்
நான் இன்னும் நடிக்கிறேன் ; தெரிகிறது!
அவள் இன்னும் நடிக்கிறாளா?
தெரியவில்லை! – என்று நிறைவு செய்கிறார். இந்தச் சில நிறைவு வரிகளில் இந்த வாழ்வில் நம் சக மனிதர்களிடம் அவர்கள் நம் அண்டை வீட்டில் இருந்த போதும் கூட எப்படி புழங்குகிறோம் என்பதைச் சொல்லி விடுகிறார். சக மனிதனிடம் வேடதாரிகளாக இருந்து வரும் நமக்கு நம் முன் நிற்கும் அந்த சக மனிதனும் நம்மைப் போலவே பாவணை செய்து கொண்டிருக்கிறானோ? என்ற சந்தேகக் கேள்வி எப்பொழுதும் தொக்கி நிற்பதையும், அது விடையில்லா வினாவாகவே தொடர்வதையும் ”தெரியவில்லை” என்று தனக்குத் தானே கூறிக்கொள்ளும் ஒற்றை பதிலில் சுட்டி விடுகிறார்.

”கிளிஜோசியம்” என்றொரு கவிதை சற்றே வித்தியாசமான கவிதை. கவிதையின் பாடுபொருளாய் இருக்கும் ”கிளி” – க்காக பேசிச் செல்லும் இந்தக் கவிதையில் –
கூடு திறந்தாலும்
பறக்காத அதன் தன்மை
அடிமைகளைப் பழக்குவது
எளிதென்று உங்களுக்கு
எளிதாகப் புரிய வைக்கும் – என்று அதன் தன்மையைச் சாடும் முறையில் ஒரு அறிவுரையைச் சொல்லி முடித்த அடுத்த நொடியில் – அடியில்
நீங்கள்
கிளி ஜோசியம்
பார்ப்பது நல்லது…
குறிப்பாக
கிளிகளின் உடம்புக்கு! – என முடித்து நவீன யுகத்திலும் சிந்திக்கும் தன்மை கொண்ட மனிதன் கூட்டைத் திறந்த பின்னும் பறத்தல் என் சுதந்திரம் என உணராது மீண்டும் கூட்டிற்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளும் ஒரு ஐந்தறிவு உயிரினத்திடம் தன்னுடைய எதிர்காலத்தைக் கொடுப்பதைச் சாடுகிறார்.

நம்பிக்கை சார்ந்து நகரும் ”உணவைப் பற்றிய சிந்தனை” என்ற கவிதை அழுத்துப் போகச் செய்யும், போரடிக்க வைக்கும் போதனைகளால் சூழாமல்
தவறிச் செல்லும் வாழ்க்கை
திராட்சை ரசமென
திசையில்லாப் பாதையின்
விளிம்பில் நின்று
சோகம் சிந்தியவனின் இளமையைக்
கொத்தித் தின்னும் காலம்.
ஆறுதல்களினால்
திரும்பப் பெற முடியாததாகவே
இருக்கிறது இளமை.
ஒரு பாத்திரத்தின் உணவெடுத்து
இன்னொருவருக்குப் பிச்சையிடுவோர்
நிறைந்ததே இவ்வுலகு.
தம் உணவைத் தாமே
சமைக்கத் துணிபவனின்
நதிகளின் கரைகளில்
முளைத்து தலையசைக்கும்
நம்பிக்கை நாணல்காடு! – என சில தெறிப்புகளால் நம்மை விழிப்படைய வைக்கிறது. எதார்த்த நிகழ்வுகளின் நிஜத்தை எளிய வரிகளில் உணர வைத்து விடுகிறார் கவிஞர் பாலு மணிமாறன்.

நம்மைப் பற்றிய ஒரு தீர்மானத்தோடு வருபவர்களிடம் தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் என்பது ஒரு வழிப்பாதையாகவே இருக்கும். தீர்மானித்தவரே நமக்கான பேச்சை அவரிடமிருந்து நமக்குக் கடத்திக் கொண்டிருப்பார். அங்கு உரையாடல் என்பது உவப்பானதாய் இருப்பதற்கு பதில் ஒருவித மென் உபாதையாகவே இருக்கும் என்பதை ”ஓர் உரையாடலுக்கு முன்” என்ற கவிதையில்
என்னைப்பற்றிய எல்லா
தீர்மானங்களோடும்
உரையாட வந்திருக்கும்
உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் ஏதுமில்லை – என்ற வரிகளில் எளிமையாய் முடித்து விடுகிறார்.

”நானறிந்த நாலு” என்ற கவிதையில் இடம் பெற்றிருக்கும்-
ஒரு லட்சம் செலவு செய்து
ஊர்விட்டு ஊர்வந்து
ஒரு வருட முடிவில்
ஒரு லட்சம் ஈட்டுபவர்கள்
ஊழியர்களாய் இருக்கிறார்கள் – என்ற வரிகள் மனித ஆற்றல்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஊழியர்களாய் சென்று சேர்ந்தவர்களின் நிலையை மட்டுமல்ல இப்படி வருகின்றவர்கள் கடைசி வரையிலும் ஊழியர்களாக மட்டுமே இருக்க முடிகிறது என்னும் உண்மையைச் சூசகமாய் சொல்கிறது.

காலநதி என்பது கடந்து மட்டும் செல்வதில்லை. யாருக்காகவும் காத்திருக்காமல் நகர்ந்து விடுவதைப் போல யாருடையதையும் பாகுபாடில்லாமல் கடத்திக் கொண்டும் போகிறது. கவனித்து கவனமாய் இருப்பவர்கள் மட்டுமே அந்த நதிக்கு இரையாகாமல் தப்பி விடுகிறார்கள். தப்பிக்க மறந்து சிக்கியவர்களுக்காக ஒரு போதும் நதி கவலைப்படுவதில்லை. அதற்காக அது எந்தச் சலனமும் கொள்வதில்லை என்பதைச் சொல்லும் ”என்றுமிருக்கும் நதி” –

கண்களற்ற சாலை, பயணிகளைக் கவனிக்கவும், அவரவர் வாழ்க்கை, வசிப்பிடச் சிக்கல்கள், ஐந்து வெள்ளி பத்துக் காசு ஆகிய கவிதைகள் சட்டென கடந்து போகவிடாமல் நம் கால்களை இருத்தி வைக்கின்றன. வாழ்வியல் பார்வைகளின் எதார்த்தங்களை சுமந்து கொண்டு நகர்ந்து வரும் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பகுதி ”காதல், சில உரையாடல்கள்” என அகம் சார்ந்து பேசுகிறது. இங்கு கவிஞர் தனக்குத் தானே சக பயணியாகி நம் முன் உரையாடுவதோடு வாசிக்கும் நம்மையும் அப்படியான சூழலுக்குள் கொண்டு போய் நிறுத்தி விடுகிறார்.

காதலியின் எதிர்வினைகளை மட்டுமே காதலுக்கான பாடு பொருளாய் அள்ளி வந்தவர்களுக்கு மத்தியில் கவிஞர் பாலு மணிமாறனின் காதல் உரையாடல்கள் மாறுபட்ட வாசிப்பை, இரசணையைத் தருகிறது. காதல் சார்ந்து கலந்து கட்டிய கட்டிச்சோறாய் இருக்கும் உரையாடலானது காதல் நினைவுகளில் குவிந்து விரிந்தாலும் –
ஒரு காதலின் தொடக்கம்
உனக்கு நான், எனக்கு நீ
என்பதை உணர்ந்து கொள்ளும்
தருணங்கள் நிறைந்ததாகவும்,
ஒரு காதலின் முடிவு
உனக்கு நீ, எனக்கு நான்
என்பதை உணர்ந்து கொள்ளும்
துயரங்கள் நிறைந்ததாகவும்
இருக்கிறது! – என எதார்த்த உண்மைகளையும் சொல்லிச் செல்கிறது.
உனக்கு வருவது
எனக்கு வருவதில்லை
எனக்கு வருவது
உனக்கு வருவதில்லை
சமயத்தில் காதல்

சமயத்தில் கவிதை – இந்தக் கவிதையை கவிதை எழுதுபவர்களும் எடுத்துக் கொள்ளலாம். காதலிப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டும் இல்லாதவர்கள் யாராவது இருந்தால்(!) அவரவர் மனநிலைக் கேற்ப எந்த வார்த்தைகளைப் போட்டுக் கொண்டாலும் இந்தக் கவிதை அவர்களுக்குரியதாகி விடுவதைப் போல தொகுப்பின் ஒவ்வொரு கவிதையின் வழி நிகழும் காதல் உரையாடல்கள் எனக்கும் – உங்களுக்கும் – நமக்கும் ஆனதாகவே இருப்பதை வாசிப்பவர்கள் உணர முடியும். அது தான் இந்தப் பகுதியின் சிறப்பு – வெற்றி எனக் கருதுகிறேன்.

நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என நிகழ்வுகளின் சாயலை சிறிய வரிகளுக்குள் சிக்க வைத்து வாசிப்பாளனை சிக்கலெடுக்கச் சொல்லும் வார்த்தைகள், ஜோடனை நடைகள், அகராதி வைத்து அர்த்தம் காண வேண்டிய துயரங்கள் ஏதுமில்லாமல் பரப்பளவில் குறைந்து பொருள் அளவில் விரியும் பாசாங்கில்லா வார்த்தைகள், அதற்கேற்றால் போல ஓவியர்களின் எளிய கோட்டுருவ காட்சிகள் சகிதம் இத்தொகுப்பின் வழி நம்மோடு உரையாடல்களை நிகழ்த்தி முடிக்கும் கவிஞர் அதற்குப் பிந்தைய உரையாடல்களை நமக்கும், நம் மனதுக்குமானதாக மடை மாற்றி விடுகிறார். மடை மாறியதுமே கரை நுகர நுரை தழும்ப தவழ்ந்து வரும் அலையாய் நமக்குள்ளும் நினைவலைகள் தவழ ஆரம்பித்து விடுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

விரியும் வனம் Copyright © 2016 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.