3
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வழி வந்திருக்கும் கவிஞர் இரா.பூபாலனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு “பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு”. இத்தொகுப்பில் விரவி நிற்கும் தன் கவிதைகள் பற்றித் தன்னுரையில் ”எனது எல்லாத் தப்பித்தலுக்கும், மறு மொழிகளுக்கும், வலிகளுக்குமான என் யுக்தி” என்று குறிப்பிடுகிறார். படைப்புத்தளத்தில் நிற்கும் பெரும்பாலான படைப்பாளிகள் தன் வடிகாலாகத் தன்னுடைய படைப்புகளை வைத்திருப்பதைப் போல இல்லாமல் பூபாலன் தன் வடிகால்கள் வழி வாசிப்பாளனின் அக, புற வயங்களைத் திறந்து விடுகிறார். இத்தொகுப்பின் ஒவ்வொரு பக்கமும் ஒரு இறகாய் மாறி நமக்குள் பறக்கத் துவங்குகிறது. நம்மை மையமாகக் கொண்டு சக்கர ஆரங்களாய் விரிந்து செல்கிறது.
பூபாலன் பார்க்கும் ஒரு காட்சியில் அசைவற்ற குளத்தில் கொக்கும் அசைவற்றே நிற்கிறது. கொக்கின் அசைவற்ற நிலை அதன் உணவின் வருக்கைக்கான காத்திருப்பாக இருந்தபோதும் குளத்தின் அசைவற்ற நிலை அதற்குச் சாதகமாக இல்லையோ? என அவரை நினைக்க வைக்கிறது. உடனே தன் கையிலிருக்கும் பந்தால் குளத்தில் ஒரு அசைவை உருவாக்க முனைகிறார். ஆனால், அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை
குளத்தில் மோதி
என் மீதே எம்பியடித்தது என்கிறார். தொடர்ந்து நகரும் அந்தக் கவிதையை
அறையின் சுவற்றில்
மாட்டியிருந்த அந்தக் குளத்தில்
கொக்கை வரைந்தவன்
ஒரு மீனைக் கூட
நீந்தவிடவில்லை – என்று ஒரு வரைபடமாக மட்டுமே நிறுத்தி விடாமல்
என்னையே பார்க்கும்
கொக்கின் அலகில்
மீனாகிறேன்
நான் இப்போது – எனச் சொல்லி அந்த வரைபடத்திற்குத் தன்னையே ஒப்புக் கொடுக்கிறார். முதல் கவிதையில் அவரின் இந்த ஒப்புக் கொடுத்தலைப் போலவே நாமும் நம்மை இத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒப்புக் கொடுப்பதை வாசிக்கும் போதே பல இடங்களில் உணர முடிகிறது.
தந்திரமாய் ஒரு வியத்தலை நிகழ்த்திக் காட்ட செய்ய வேண்டிய எத்தனங்களின் உச்சத்தைப் பேசும் கவிதையை
மனசாட்சியை ஒரு
கந்தல்துணியைப் போல கழற்றி
சாக்கடையில் வீசியெறிய
சம்மதிக்க வேண்டும் – என்று முடிக்கிறார். வெறுமனே மனசாட்சியை வீசி எறிந்தால் போதும் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஒருவேளை அது மீண்டு வந்து நிகழ்த்தும் சமரில் வியத்தலில் லயித்தல் நிகழாது போய்விட்டால்? அதற்காகக் கையாண்ட நுட்பம் சிதைவடைந்து விட்டால்? என்ற கேள்வி தொக்கி நிற்கக் கூடும். அதையே நெருங்க அருவெறுப்பூட்டும் துர்நாற்றச் சாக்கடையில் வீசி விட்டால் மனசாட்சியின் மீள இயலா நிலை வியத்தலையும், நுட்பத்தையும் சிதைவின்றி வைத்திருக்கும் என்பதாலயே அப்படிச் சொல்கிறாரோ? என நினைக்கத் தோன்றுகிறது.
கடவுளிடம் அருள் வாங்க சாதியின் சாயம் துறக்கும் உயர் சாதி மனம் அதே கடவுள் அருள் தருவதற்காக வந்திறங்கிய மனிதனை மட்டும் ஏற்க மறுக்கும் முரணை ”அய்யனார்(எ)மாரப்பன்” கவிதையில் பகடி செய்கிறார்.
கடனட்டைக்கு அழைத்த சகோதரியின் அழைப்பால் நிகழ்ந்த கவிதை கருக்கலைப்பைச் சொல்லும் கவிதை நம் கவனத்தின் கூர்களைச் சட்டெனக் கிளர்ந்து எழும் எவரும், எதுவும் முனை மழுங்கச் செய்து விடும் அபாயத்தை நேர்த்தியாய் நம் முன் விரிக்கிறது.
தன்னை விடப் பிறர் மீது அக்கறை கொள்ளும் தனிநபர்களால் சூழ்ந்தது தான் சமூகம். அந்தச் சமூக அமைப்பில் தனிமனிதன் வழி நமக்குள் இழையோடும் சந்தோசம் போலவே துயரங்களும் அளப்பறியது. தேன் தடவிய கோப்பையில் விசம் தரும் மனித சமூகத்தின் புற வெளிப்பாடுகள் ஒருவனைக் கண் கொத்திப் பாம்பாய் பார்த்து எக்காளமிடுகின்றன. அக்கறை என்ற பெயரில் நிகழும் இப்படியான வன்மங்கள் அவனின் சுய தேடலை புதைகுழிகளுக்கு அஞ்சல் செய்கின்றன. இது தலைமுறைக் கடத்தல் நிகழ்வாகி விட்டதாலோ என்னவோ
எப்போதாவது அவன்
உங்களைச் சந்திக்க வருவான்
அப்போதாவது அவனிடம்
கேட்காதிருங்கள்
அவன் என்ன செய்கிறான் என – கோரிக்கையாக நம் முன் நீட்டுகிறார்.
”அடுத்த வீட்டில் நடந்தால் அது செய்தி. அதுவே நம் வீட்டில் என்றால் துக்கம்” என்ற பொது விதிக்குப் பொருந்தாத பத்திரிக்கையாளர்களின் பணி பற்றிப் பேசும் கவிதையில் வரும்
உங்கள் தந்தை
கொல்லப்பட்டதை
நீங்களே செய்தியாக்கும்
படியும் அமையலாம் – என்ற வரிகளை வாசித்து முடித்ததும் அதற்கிடப்பட்டிருக்கும் “அத்தனை சுலபமில்லை” என்ற தலைப்பை உதடுகள் தாமாகவே முணுமுணுத்து விடுகின்றன.
”கடன் அன்பை முறிக்கும்” என்ற வணிகத்துக்கான வரி இன்று சற்றே பிறழ்ந்து நட்புக்கான உத்திரவாத வரியாகவும் புழக்கத்திற்கு வந்து விட்டது. உதவிகளைச் செய்கின்ற நட்பு உதவிகளைக் கோரும் போது குறிப்பாக அந்தக் கோரல் பணம் சார்ந்ததாக அமைந்து விட்டால் அங்கு நட்பு விரிசல் விட வரிந்து கட்டுகிறது. உங்களுக்கு நண்பனாக இருப்பது எனக்கு மிகச் சிரமமாயிருக்கிறது என்ற வரி அச்சரம் பிசகாது நம் நண்பனுக்கும் பொருந்திப் போவதால் விதிவிலக்குகள் எடுத்துக்காட்டாகாது என்ற சொல்லாடலை நட்பில் நிலை கொள்ளச் செய்தல் அவசியமாகிறது.
மரங்கள் குறித்து அக்கறையும், ஆதங்கமுமாய் நிற்கும் கவிதைகளை வாசிக்க, வாசிக்க நம் மீதே நமக்கு ஒரு சுய பகடித்தனம் உருவாகிறது. சுற்றுச்சூழல் மாசுபடலில் தொடங்கி, ஓசோன் பொத்தல் வரை நிகழும் மாற்றங்கள் குறித்துத் கற்றுத்தரும், கற்றுக் கொள்ளும் நாம் அதைப் போதனைகளாக மட்டும் சேமித்துத் திரிகிறோம். ஒரு பக்கம் கதறிக்கொண்டே மறுபக்கம் கழுத்தறுப்பு வேலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இந்த விழிப்புணர்வின்மையை தன் கவிதைகள் வழி சாடும் பூபாலனின் கோபத்திற்கு தெய்வமும் தப்பவில்லை.
கோடாரிகளே இல்லாத
மனிதனாக அவனை
மாற்றி விடும்
மதிக்கூர்மை கூட இல்லாத நீ
என்ன தேவதையென – மரம் வெட்டிக்குக் கோடாரி கொடுத்த தெய்வத்தை விளாசி எடுக்கிறார்.
ஒவ்வொரு இறகாக/ வெட்டி எறியப்பட்ட பறவை/ வெலவெலத்த படி/ நிற்பதாக இருந்தது / அந்தக் கவிதை இறுதியில் –
நீங்கள் புரிந்து கொண்டதாக / ஒரு விளக்கவுரை/ கொடுக்கும் போது தான்/ அழத் தொடங்கும்/ கவிதை – போன்ற வரிகளில் அடர்த்தி குறைந்த தன் மேதாவித்தனங்கள் காட்டும் தேர்ச்சியற்ற விமர்சிப்பால் ஒரு படைப்பை அதன் நிலையிலிருந்து கீழிறக்கி, உருச்சிதைத்துப் பார்க்கும் மனநிலையைச் சாடும் அதே சமயம் மறைமுகமாகச் சில கேள்விகளையும் விமர்சகர்களிடம் வைக்கிறார்.
வெற்றுப்பார்வையாளன் படைப்பாளியாக ஆக முடியாது என்பதைப் போல ஒரு காட்சியை எதிர் நிலையில் மாற்றிப் பார்க்காமல் அப்படியே உள் வாங்குபவன் கலைஞனாக – கவிஞனாக மாற முடியாது என்பதற்கு
அறையெங்கும் நிறைந்திருக்கிறது
மெழுகுவர்த்தி வெளிச்சம்
ஒளிக்குப் பயந்து விட்ட இருள்
ஒளிந்து கொண்டுள்ளது.
அறையிலுள்ள பொருட்கள்
ஒவ்வொன்றின் பின்னால்
அதனதன் நிழலாக – என்ற கவிதை இன்னும் ஒரு சாட்சியாகிறது
நம்மை நோக்கி நீட்டப்படும் எதுவும் நமக்கு உவப்பானவைகளாக இல்லாத போது செய்கின்ற முதல் காரியம் அந்த இடத்தை விட்டு கடந்து போய் விடுவோம். இது நேரில் சாத்தியம். அதுவே ஒரு படைப்பாய் நம் மடியில் அமர்ந்து கொண்டு நம்மோடு யுத்தப் பிரகடனம் நிகழ்த்தினால் என்ன செய்ய முடியும்? மடியில் இருந்து அதை இறக்கி விடலாம். அப்படிச் செய்யும் போது அடுத்து வரும் பக்கங்கள் நமக்கு உவப்பனவையாக இருக்குமோ? என்ற சந்தேகம் அக்குள் அரிப்பாய் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான சமயங்களில்
வெடுக்கென்று புரட்டி விடுங்கள்
இந்தப் பக்கத்தை – என்கிறார். நம் வாழ்வியல் பக்கங்களில் துயரங்களைக் கடந்து தொடர்ந்து செல்ல இந்தக் கடைசி இரண்டு வரிகள் தரும் புரட்டல் – தாவல் அவசியம். அப்போது தான் வாழ்வை அதன் நீள் வட்டப் பாதையில் அறுபடாமல் நகர்த்திச் செல்ல முடியும்.
அன்பைப் போதிக்கும் அம்மாக்களின் வாஞ்சைகளுக்கு அப்பாக்கள் எக்காலத்திலும் இணையாக முடியாததைப் போல அப்பாக்கள் பிள்ளைகள் சார்ந்து முனையும் சேகரிப்புகளுக்கும், தேடல்களுக்கும் அவர்கள் மட்டுமே அவர்களுக்கு இணையாவார்கள். அவர்களின் எல்லா இயங்கு தளங்களிலும் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமே அச்சாணியாய் சுழலும். அதனால் தான் காலத்தை புகைப்படமாய் உறையவைக்கும் போது கூட அப்பாவை அவராக மட்டுமே அதில் பதிய முடிகிறது பூபாலனுக்கு.
உறைவித்த புகைப்படத்திலும் அவர்
உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன
பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்
வீடு கட்டணும்
என்று நீளமாய் – என்ற வரிகளை வாசித்து முடிக்கையில் நம் அப்பாக்களும் நம் மனதில் அப்படியாகவே உறைகிறார்கள்,
கடவுளுக்கு நிகர் இல்லை என்பதால் அந்தக் கடவுளாகவே குழந்தைகளைத் தன் கவிதைகளில் கொண்டாடித்திரியும் கவிஞர் பூபாலன் அந்தக் கடவுள்கள் இழி மனிதர்கள் சூழ்ந்த தேசத்தில் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள். சிறகொடிக்கப் படுகிறார்கள் என்பதையும், சக மனிதர்களிடம் நாம் கவனிக்க மறந்தவைகளையும் அவர்களிடம் நாம் அறிந்திருக்க வேண்டிய விசயங்களையும் உன்னிப்பாய் அவதானித்துச் சொல்கிறார். நம் கை பற்றிக் கவிதை மொழியில் பேசுகிறார்.
ஒருமுகமாய் ஓடும் நதியாய் இல்லாமல் மலையிலிருந்து விழும் அருவி சிதறி நாலா பக்கமும் பாய்ந்து சங்கமத்திற்காகக் கடலை நோக்கி நகருவதைப் போல பூபாலனின் கவிதைகள் ஒற்றையாய் இல்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் பேசுகிறது. ஒருவித அக்கறையோடும், சில இடங்களில் ஆற்றாமையோடும் அவைகள் தொகுப்பிலிருந்து நமக்குள் மடை மாறுகின்றன.
சில கவிதைகளில் ஒரு வரியில் இடைவெளி விட்டு நிற்க வேண்டிய சில வார்த்தைகள் தன்னை முறித்துக் கொண்டு அடுத்தடுத்த வரிகளுக்குத் தாவி நிற்கிறது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். தனக்கான மொழி அறிவைக் காட்டி வாசகனிடம் மொழிச்சிக்கலை உருவாக்கும் தந்திரங்கள் ஏதுமின்றி தேர்ந்தெடுத்த எளிய சொற்களில் தன் கவிதைகளை பூபாலன் கட்டமைத்திருக்கிறார். அதுதான் தொகுப்பை இன்னும் இளக்கமாய், இணக்கமாய் நம்மோடு இயைந்து நிற்கச் செய்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில், கண்ணை உறுத்தாத எழுத்தளவில் வந்திருக்கும் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கையில் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு – ஒற்றைச் சாளரம் அல்ல என்பதை உறுதிப் படுத்தி விடுகிறது.