4
மரபு மயங்கி நிற்க புதுக்கவிதை, நவீனக்கவிதை, பின் நவீனக் கவிதை எனக் கவிதையின் குழம்படிகள் வேறு, வேறு ஓசைகளை எழுப்பிய படியே வேகம் கொள்ளும் இத்தருணத்தில் வாசிப்பாளனோடு படைப்பவனும் தன்னுடைய படைப்பை அந்தந்தத் தளத்தில் கொண்டு நிறுத்த வேண்டியது இன்றைக்கு அவசியமாகிறது. அப்படி இல்லாது போகும் போது அந்தப் படைப்பு அதன் வெளியை முழுமையாக எட்டாமல் ஒரு அடைப்புக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைச் சந்திக்க நேரும். இந்தச் சூழலில் புதியதாக கவிதைப் பரப்பிற்குள் நுழைபவன் தன்னுடைய படைப்பை தொகுப்பாக்கி முன்னெடுத்துச் செல்வதற்குச் சாதகமாக கவிதைகளுக்கான விற்பனைக் கேந்திரம் இல்லாத நிலையில் துணிந்து இந்தத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் தங்கமீன் பதிப்பகத்துக்கும், அதன் பதிப்பாளருக்கும் வாழ்த்துகள்.
”காலப்பெருவெளி” என்ற இந்தத் தொகுப்பில் முப்பது கவிஞர்களின் எழுபது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மாதந்தோறும் வாசகர் வட்டத்தில் கொடுக்கப்படும் கருவைக் கொண்டு எழுதப்பட்டு பரிசுக்குரியவைகளாக தேர்வான கவிதைகளின் தொகுப்பு தான் இந்நூல். புதிர்களை உள் நிறுத்துவதாய் காட்டி புரியாத் தன்மையோடு வாசகனை நகர்ந்து போகச் செய்யும் நவீனம் சாராமல் வரி விளையாட்டு, வார்த்தைத் திருகல் எதுவுமின்றி எளிமையான மொழியில் சம்பவங்களையும், காட்சிகளையும், நிகழ்வுகளையும் நேரடியாக விரித்துச் செல்லும் இக்கவிதைகள் ஒரு கருவை மட்டுமே மையமிட்டு எழுதியதால் அந்த மையத்திற்குள்லேயே குவிந்து கிடந்தாலும் ஒட்டுமொத்தமாக தொகுப்பை வாசிக்கும் போது சில கவிதைகள் அந்த மையத்தைத் தாண்டியும் சமகால நிகழ்வுகளையும், சூழலையும் பேசுவதைக் காண முடிகிறது. ஈழம் சார்ந்த கவிஞர் யாழிசை மணிவண்ணனின் ”புலம் பெயர்தல்” என்ற கவிதையை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆண், பெண் பேதம் படைப்புகளுக்கு இல்லை என்ற நிலையிலும் பெண் தனக்கான விசயங்களையும், ஆண் தனக்கான விசயங்களையும் தன் படைப்புகளில் முன்னிலைப்படுத்திக் காட்டுவது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது என்பதற்கு இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அடையாளமாகின்றன. பெண் கவிஞர்கள் பலரும் தங்களைச் சார்ந்த விசயங்களையே கொடுக்கப்பட்ட கருவுக்குள் கொண்டு வந்து நிறுத்தி கவிதையாக்கி இருக்கிறார்கள். இத்தொகுப்பில் இருக்கும் கவிஞர்கள் பிரேமா மகாலிங்கம், சுஜா செல்லப்பன் ஆகியோரின் கவிதைகள் அந்த வகையானவைகள்! இது இயல்பாக நிகழக்கூடியதாயினும் இந்த மன நிலை படைப்பாளிக்கு அவசியமற்றுப் போனால் மட்டுமே புதிய தளமும், களமும் வசப்படும்.
மணமான பின் பெண்கள் தங்களிடமிருந்து நழுவி நகரும் சுயத்தை அவர்கள் இழந்து விட்டதாய் மற்றவர்கள் நினைக்கும் விசயங்களில் இருந்தே மீட்டெடுக்கிறார்கள். ஆனால் அதை மற்றவர்கள் அறியாமல் அல்லது அறிவதற்கு முன்பாகச் செய்து முடித்து விடுகிறார்கள் என்பதை ”புகுந்த வீடு” என்ற தன் கவிதையில் கவிஞர் சுஜா செல்லப்பன் –
செழித்து வளர்ந்து கிளை பரப்பியது
இடப்பட்ட உரத்தினால் என்பதாகவே
அனைவரும் எண்ணிக் கொள்ளட்டும்!
வேரோடு ஒட்டிக் கொண்டு வந்த
சில மண்துகள்கள் தான்
என் உயிருக்கு ஆதாரமானவை
என்பது எனக்குள் மட்டுமே
புதைந்த ரகசியமாகவே இருக்கட்டும்! – என்று பேசுகிறார்.
ஒவ்வொரு முறையும் நம் மீது திணிக்கப்படும் மற்றவர்களின் பிம்பங்களால் நாம் நாமாக இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை என்ற எதார்த்தத்தை ”நான் நானாக இருப்பதில்லை” என்ற கவிதையில்
யாரின் முகத்தையோ, குணத்தையோ
யார் மேலேயோ திணித்து திணித்து
தனிமனித அடையாளம்
இங்கு திவாலாகி விட்டது – என்று குறைபட்டுக் கொள்கிறார் கவிஞர் சேகர். நிவாரணியற்ற நோவுகள் போல இந்தக் குறை மனித இனம் உள்ளவரை இருக்கத்தான் செய்யும்!
துணையை இழந்த பெண்ணின் குரலாய் ஒலிக்கும் ”வெளிச்சமாக நீ” என்ற தன் நீண்ட கவிதையின் முழு வீச்சையும்
பெளர்ணமி இரவில்
அமாவாசையாய் என் வானம்
இருண்டு கிடக்கிறது!
என்ற கடைசி மூன்று வரியில் நிலை நிறுத்திப் போகிறார் கவிஞர் பிரேமா மகாலிங்கம்.
நவீன கவிதைகளின் நுழைவாயிலாய் இருந்த, இருக்கின்ற குறீயீடுகளின் வழியே கவிதையை விரித்துச் செல்லும் கவிதைகளும் இதில் இருக்கின்றது. உதாரணமாக இணைந்து முரண்பாடுகளால் பிரியும் வாழ் நிலைக்கு இரவு, பகலை குறியீடாக்கிப் பேசும் கவிஞர் கிருத்திகாவின் ”எதிர் பால்!” கவிதையைச் சொல்லலாம்.
”தாய் தானம்” என்ற கவிதையில் கவிஞர் சமயமுத்து சந்திரசேகர்
தாய் ஈவதும்
தாய்க்கு ஈவதும்
தானம்
தலைசிறந்த தானம் – என்கிறார். தாய் ஈவது தானம். ஆனால், தாய்க்கு ஈவது தானமாகுமா? அது பொறுப்புடன் கூடிய கடமையல்லவா?
இத்தொகுப்பில் இருக்கும் சிறு கவிதைகளில் என் மனதைத் தொட்ட கவிதை கவிஞர் கீழை அ. கதிர்வேலின் ”தானத்தின் மொழி”
குருட்டுப் பிச்சைக்காரனின்
பாத்திரத்தில்
கணீர் என்று சப்தமெழ
நாணயத்தைப் போட்ட பின்பும்
சற்றே காத்திருந்தான்
“நீங்க மவராசனா இருக்கணும்”கிற
பிச்சைக்காரனின்
வார்த்தைகளுக்காக! – வயிற்றுக்கு யாசித்தவனிடமே மனதுக்கு யாசிக்கக் காத்திருக்கும் மனித இயல்பைப் படம் போடுகிறது கவிதை!
வார்த்தைகளை உடைத்து வரிகளை நீட்டித்தல், கவிதை அதன் நிலையை எட்டிய பின்பும் விரித்தல் என கவிதையின் செழுமையை வறட்சியாக்கக் கூடிய விசயங்களால் கட்டமைக்கப்படிருக்கும் சில கவிதைகளுக்கிடையே இத்தொகுப்பில் கவனிக்கத்தக்க கவிதைகளாக மகேஷ்குமாரின் ”வலையில் விழாதவை”, ”ஒற்றை மரம்”, முளைப்பாரி, ராஜீரமேஷின் ”நான்”, மதிக்குமாரின் ”செய்தியாகாதவர்களின் கதை” பாலாவின் “நத்தையின் தலை மீதொரு சிறுவன்“ ஆகியவைகளை அடையாளப்படுத்தலாம்.
காற்றில் ஆடும் தாவணியை காதலின் முக்தி நிலையாக்கி காதல் கவிதைகளாய் வார்த்தைகளை இணையப் பக்கங்களில் வரிகளாக்கி அதன் ஈரத்தன்மையை உலரச் செய்து விட்ட நிலையில் இத்தொகுப்பில் அப்படியான காதல் கதறல் கவிதைகள் இல்லாது இருப்பது சந்தோசமான விசயம். நல்ல ஆரம்பத்தின் அறிகுறி.
தன் பழைய ஆடையைக் கழைத்து புதிய ஆடை தரித்து நகர ஆரம்பித்திருக்கும் கவிதையின் தடத்தைக் குறைவாகக் கொண்டிருக்கும் இத்தொகுப்பின் ஆக்கத்திலும், வடிவமைப்பிலும் சமரசமற்றிருந்த போதும் ஊர் கூடி தேர் இழுப்பதைப் போல படைத்தவர்களே பங்களிப்புச் செய்து இத்தொகுப்பை கொண்டு வந்திருப்பதால் ஒரு தொகுப்பு நூலுக்கான அத்தனை சமரசங்களையும் உள்ளடக்கிய தொகுப்பாய் மிளிர்கிறது காலப்பெருவெளி.