5
அகத்துறவு வெளியீடாக வந்திருக்கும் யாழிசை மணிவண்ணனின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு “தேவதைகள் தூவும் மழை”. இத் தொகுப்பில் முகநூலுக்கே உரிய வகையில் அமைந்த பதிவுகள் பல்வேறு தன்மைகளில் தன் தகவமைப்புகளால் நீண்டும், குறுகியும் சித்திரங்களாலான கூடாய் விரிந்து கிடக்கிறது.
முகநூல் நட்பு வட்டத்தில் இருப்பவர்களைக் கிளர்ச்சியடைய வைத்து விருப்பக்குறி இட வைக்கும் காதல் – காதலி – காதலன் சார்ந்த பதிவுகள் பரவலாக இருந்தாலும் அதை எல்லாம் களைந்தும், கடந்தும் பார்த்தால் நம்மை விழி விரியச் செய்பவைகளாக நிகழ்ந்த – நிகழும் சம்பவங்கள் வழியேயான அவரின் பதிவுகளைத் தயக்கமின்றி அடையாளம் காட்டலாம். அவைகள் நமக்கும் உரியனவாய் இருப்பதால் நிகழ்வுகளை மனதில் காட்சிப் படுத்திப் பார்த்த படியே வாசித்துச் செல்ல முடிகிறது.
இலங்கையும்
இந்தியாவில் உள்ள கையும்
இணைந்த கைகளான போது
கை கட்டி நின்றது தமிழினம்
களத்தில் கையறு நிலை கொண்டது ஈழம் – என்ற பதிவை வாசிக்கும் போது இதை விட எளிமையாகவும், மிகச் சரியாகவும் ஒரு இன அழிப்பின் உள்ளாடலாக நிகழ்ந்த விசயங்களைச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.
இலங்கையின் போர் முகங்கள் குறித்துப் பேசும் பெரும்பாலான படைப்புகளில் வாண்ட்டடாக புத்தனும் வந்து உட்கார்ந்து விடுவது அவனுக்கான சாபமாகிப் போனதை
சைவ மதத்தின்
இரத்தம் குடித்து
அசைவம் ஆகிறான்
புத்தன்
இலங்கையில் மட்டும் – என்ற பதிவு மறு உறுதி செய்கிறது.
எதற்காக வெண்பொங்கல்
கடவுளுக்கு இருக்குமோ?
சர்க்கரை வியாதி.
முதல் நாள் சாதி கேட்டு
பகிர்ந்து கொண்டு
மறுநாள், சாதிகள் இல்லையடி பாப்பா
என்ற போது
தொடங்குவது குழப்பமும், சந்தேகமும்.
காத்திருத்தல் சுகம் என்றவன்
கட்டாயம் நின்றிருக்க மாட்டான்
நியாய விலைக் கடை வரிசைகளில்.
ஒற்றைக் கையில் அர்ச்சனைக் கூடை
மறுகை விரல் பிடித்து நடைபயிலும் குழந்தை
எதிரே சீறி வரும் கோயில் காளை
இப்போது எதைக் காப்பீர்கள்?
அப்படித் தான் என் நாத்திகமும்.
ஆண்டுக்கொருமுறை
ஆற்றில் இறங்கும் அழகரின் காதுகளில்
தன்னைக் காக்க வேண்டியிருக்குமோ வைகை.
ஆணும்,பெண்ணும் சமமென்பது
அர்த்த நாரித் தத்துவம்
அங்கேயே ஆரம்பிக்குது ஆணாதிக்கம்
இறைவன் கொடுத்தாராம் இடப்பக்கம்
திருத்திச் சொல்வோம் இனி
இறைவி கொடுத்தார் வலப்பக்கம்.
ஒற்றைக் காலில்
ஊசிமுனியில் தவம் செய்து
ஆகாயக் கங்கையைக் கொணர்ந்த பகீரதன்
உணர்ந்திருப்பான் தன் தவற்றை
கழிவுநீர் கலந்த கங்கையைக் கண்டு.
சபரிமலைப் பக்தரை
சரியாய் எழச் செய்தது
அதிகாலை ஓதப்படும்
பள்ளிவாசல் தொழுகை – வாசித்த பின் சட்டென கடந்து போக முடியாத இப்படியான பல பதிவுகளால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் யாழிசை கவிதைக்கு மிக நெருக்கத்தில் அமைந்த –
கிறுக்கும் குழந்தை
திட்டாதீர்
யாருக்குத் தெரியும்
அது கடவுளின்
கையொப்பமாகக் கூட இருக்கலாம்.
நொறுக்குத் தீனி
உடைந்த முறுக்கு
சிதறிய குழந்தை மனசு.
நூறு கல்லடிகளைப்
பெற்றுக் கொண்ட மாமரம்
எனக்களித்தது ஒன்றிரண்டு மாங்கனியும்
ஒரு கூடை சகிப்புத்தன்மையும் – போன்ற பதிவுகளின் வழியே தன்னுள் முகிழக் காத்திருக்கும் கவி மனநிலையையும் நம்மிடம் நீட்டிச் செல்கிறார்.
அன்றைய தினங்களுக்கும், மனநிலைக்கும் ஏற்பக் கிளர்ந்த வெளிப்பாடுகளை, கோபங்களை அக்கறைகளாக, ஐயப்பாடுகளாக, புன்னகைகளாக, கேலிகளாக, கவிதையின் சாயல் தரித்த வரிகளின் வீச்சுக்களாக வெவ்வேறு சலனங்களில் பதியமிட்டிருக்கும் பதிவுகளாலான இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது ஒரு தேர்ந்த இரசனைக்காரனின் முகநூல் பக்கத்தை வாசிக்கும் மனநிலையை எட்ட முடிகிறது என்பது தான் தொகுப்பின் ஆகப் பெரிய பலம்.
கோபுலுவின் கோட்டுருவ சித்திரமாய் சிலாகிக்க மட்டுமல்ல சிந்திக்க வைக்கவும் வேண்டும். அதேநேரம் மனச் சிக்கல்களையும் தந்து விடக்கூடாது என்ற தன்மையில் ஒரு தொகுப்பை வேண்டினால் –
அயர்ச்சி கொள்ளும் மனதை மடை மாற்ற விரும்பினால் – அதற்கு ”தேவதைகள் தூவும் மழை” உத்திரவாதம்.
அபாய வளைவுகள்
அதிகம் உள்ள இடங்களில்
தகவல் பலகை உண்டு
அன்பே
உன்னில் ஏன் இல்லை – என்பன போன்ற மிகச் சாதாரண, தொகுப்புகளுக்கு உடன்பாடற்ற பதிவுகளையும், புத்தாண்டு வாழ்த்து, தலைவர்களின் நினைவேந்தல், ”உன் சதாரணம் – என்னில் சதா ரணம்”, கள்ளி, அள்ளி, மல்லி, தள்ளி, துள்ளி, கிள்ளி, சொல்லி, பல்லி, பள்ளி என சப்த சுவைக்கு மட்டுமே உரிய எதுகை, மோனைப் பதிவுகளையும், பதிவுகளுக்கிடையேயான இடைவெளிகளைத் தனித்துக் காட்டுவதில் சில பக்கங்களில் காணப்படும் குறைகளையும் தவிர்த்திருந்தால் வாசிப்பின் சுவையில் ஆங்காங்கே நிகழும் வறட்சியைத் தவிர்த்திருக்கலாம். முகநூல் பக்கத்தில் கரைந்து போகும் தன் பதிவுகளைக் காலத்தால் அழியா அச்சுப் பக்கத்திற்கு மடை மாற்றும் நவீன வரவுகளுள் ஒன்றான “தேவதைகள் தூவும் மழை”க்கும், மழை தந்த யாழுக்கும் வாழ்த்துகள்.