6
ஈரோடு கதிர் அவர்களின் நாற்பத்தைந்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு கிளையிலிருந்து வேர்வரை”. அவருடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இத்தொகுப்பின் பல கட்டுரைகளை இணையம் வழி முன்னரே வாசித்திருந்த போதும் ஒரு தொகுப்பாக வாசிக்கும் போது அவைகள் உருவாக்கும் தாக்கத்தை, விட்டுச் செல்லும் சில மென் புரட்டல்களை, புரிந்தும் – அறிந்தும் அசை போட முடிகிறது.
முதல் கட்டுரையின் இரண்டாவது நிகழ்வைச் சிங்கப்பூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவரே நேரடியாக விவரித்ததைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரின் அந்தச் சொல்லாடல் மனநிலையைச் சற்றும் மாறாமல் அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறார். நிகழ்வுகளுக்கு மையத்தில் நம்மை நிறுத்தி நமக்கான சொல்லாடலையும், காட்சிப்படுத்தலையும் அவருக்கான மொழியில் சொல்லும் கதிரின் இந்தத் திறன் தான் கட்டுரைகளை வெறும் செய்தியாக ஆக்காமல் வாழ்வியலாகப் பார்க்க வைப்பதோடு தன் இறுப்பையும் நம்மிடம் உறுதி செய்து விடுகிறது. தாய் தந்தையாதல் சாத்தியம். ஆனால் ஒரு தந்தை தாயாவது அத்தனை சாத்தியமான விசயமில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ப்பில் தந்தையும் தாயாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசும் முதல் கட்டுரையில் வேரை நோக்கிய விரவல் தொடங்குகிறது..
”தேர் நோம்பி” கட்டுரையில் நம் தலைமுறையில் மிச்சமாகவும், நம் குழந்தைகள் தலைமுறையில் முழுவதுமாகவும் தொலைந்து நிற்கும் கிராமத்துத் திருவிழாக்களையும் அதையொட்டி விரியும் கிராமத்தையும் காட்டும் அதேநேரம் நகரத்தின் தாக்கத்தால் தகர்ந்து நிற்கும் கிராமச் சூழலையும் சுட்டிக் காட்டுகிறார். கட்டுரையை வாசித்து முடித்ததும் இருப்பவைகள் வழியும், இழந்து கொண்டிருப்பவைகள் வழியும் ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குச் சென்று வந்த உணர்வு நமக்குள் வந்து உட்கார்ந்து விடுகிறது.
இதுவரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்குக் குழந்தைகளைத் தாங்கிக் கொண்டாடும் இந்தத் தலைமுறை எனத் தொடங்கி குழந்தை வளர்ப்பில் நாம் எங்கே பாதை மாறுகிறோம்? எது அதற்கான திருப்பத்தை நமக்குள் நிகழ்த்துகிறது? என்பதை அழகாகச் சுட்டிக் காட்டும் “தங்கக்கூண்டு” கட்டுரை பெற்றோர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை என்பேன்..
தொகுப்பின் முகப்பை அலங்கரித்து நிற்கும் கட்டுரை நடவு நடுவதில் தொடங்கி நெல் மணிகளை உதிர்த்து அரிசியாக்குவது வரையிலான ஒரு நெடிய உழைப்பை அழகிய சித்திரமாய் நமக்குள் தீட்டுகிறது. விளைநிலங்கள் எல்லாம் மனைநிலங்களாக மாறிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் விவசாயம் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்லவும், எனக்கும் விவசாயம் தெரியும் என நம் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்ளவும் இந்த ஐந்து பக்கக் கட்டுரையை அப்படியே மனனம் செய்து வைத்துக் கொள்ளலாம்!
மனிதாபிமானம் என்ற வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது நம்மைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களிடமிருந்தே நமக்கும் – இந்தச் சமூகத்திற்கும் போதிக்கப்படுகிறது என்ற உண்மையை உரக்க மட்டுமல்ல தன் செயலின் வழி காட்சிப் படுத்தியும் ஞான போதியாய் ஒளிர்ந்தும் நிகழ்த்திக்காட்டிய அந்த ஒற்றைக் கண் பெண்ணைப் போன்ற மனிதர்கள் நம் அருகிலும் வசிக்கவே செய்கிறார்கள். நாம் தான் அவர்களைக் கவனித்தும் கவனியாமல் பயணித்துப் போகிறோம். ஆனால் கதிர் அவர்களைக் கவனித்ததோடு மட்டுமில்லாமல் அத்தகையவர்களை இப்படியான கட்டுரை வழி நம்மிடம் கவனப்படுத்தவும் செய்கிறார்.
வைத்திருந்து, வைத்திருந்து புழங்கியவர்கள் என்ற அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் நாம் “யூஸ் அண்ட் த்ரோ” என எல்லாவற்றையும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம், நம்மில் நுழைய ஆரம்பித்திருக்கும் இந்த அழுகல் மனநிலையானது சக மனிதர்களைக் கையாளும் விசயத்திலாவது ஊடுருவாமல் இருக்க வேண்டும் என்ற கதிரின் கவலை கவலையாகவே இருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றினாலும் எதார்த்த நிலையோ அந்தக் கவலை மோட்சமடையும் நாள் அத்தனை தொலைவில் இல்லை என்பதாகவே இருக்கிறது.
மனிதர்களுக்காக, அவர்களின் வாழ்வியல் நிலைகளுக்காக மட்டுமே பேசும் கலியுகத்தில் விலங்குகளுக்காகவும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரை பேசுகிறது. விலங்குகளின் வாழ்வியல் முறையைச் சிதைத்துச் சிரிக்கும் மனித மனம் குறித்து ”நீர்த்துப் போகும் சுயம்” கட்டுரையில் யானையின் வாழ்வியலில் நாம் செய்த சுயநல வன்மத்தை பந்தி வைக்கிறார். விலங்குகளின் வாழ்வியலை நாம் சிதைத்தெறிந்து திரியும் நிலைக்கு ஒரு சோறு பதமாய் இக்கட்டுரை இருக்கிறது.
தொலைபேசியால் உறவுகளைத் தோற்கடித்தும் அலைபேசியால் அதை இன்னும் தொலைவாக்கியும் காக்கைகளின் சகுனத்திற்கே சனி பிடிக்க வைத்த நாம் தான் உறவுகள் விசயத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் ”காக்கைச் சகுனம்” கட்டுரையில் அலசுகிறார்.
பொதுவான கட்டுரைகளில் கூட வழமையான விசயங்களைத் தவிர்த்து சில புதிய விசயங்களைச் சொல்ல வேண்டும் என்பதில் கதிர் அதிக அக்கறை காட்டி இருக்கிறார். அதற்கென மெனக்கெட்டிருக்கிறார் என்பதற்கு சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளின் பயணக் கட்டுரைகளையும், நம்முடைய அலட்சியம் மற்றும் அறியாமை மீதான எதிர்வினைகளின் தீவிரத்தைச் சொல்லும் சினிமா சார்ந்த கட்டுரையையும் உதாரணமாகச் சொல்லலாம்,.
”கேரி பேக்” கட்டுரையில் விஞ்ஞானத்திற்குத் தண்ணீரைச் சிதைத்துச் சீரழிக்கத் தெரியும். புதிதாய் ஒரு சொட்டுத் தண்ணீரை உருவாக்கத் தெரியுமா? என்று எழும்பி நிற்கும் கேள்வி விழிப்புணர்வின்மையால் மண்னின் சுவாசக்குழாய்கள் மீது நம் கால்களை அழுத்திச் சாகடிக்கும் துயரை மாற்றுமா? என்ற இன்னொரு கேள்வியாகத் தொக்கி நின்றாலும் மாற்ற வேண்டும் என்றே தோன்றுகிறது. அந்த மாற்றம் நிகழாது போனால் ஒரு உலக யுத்தத்தை தண்ணீருக்காக நாம் நிகழ்த்த வேண்டி இருக்கும் என்ற அச்சம் நிச்சயமாகி விடும்.
பசிக்குச் சாப்பிடு என்றார்கள். அதுவே வேக வாழ்க்கையிலும் பணப் புழக்கத்திலும் ருசிக்கச் சாப்பிடு என்ற பரிணாமம் கொண்டு மெல்லக் கிளை பரப்பியதில் பசி திணிக்கப்படும் விசயமாகி விட்டது. ”திணிக்கப்படும் பசி” என்ற கடைசிக் கட்டுரையில் ஒரு ஸ்டெயிலிசான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளும் முகமாக நமக்கு நாமே திணித்துக் கொள்ளும் பசியால் வீணடிக்கப்படுவது உணவு மட்டுமல்ல இன்னொருவனின் பசி என்பதில் எத்தனை உண்மை.
”எல்லா நாட்களும் ஒன்றேயல்ல” என்ற கட்டுரையில் ஒரு நாளை எப்படிக் கடக்கலாம் அல்லது கடத்தலாம்? எனக் கேள்வி கேட்டு அதற்குக் கதிர் சொல்லும் பல பதில்களில் ஒன்றாய் ”இந்தத் தொகுப்பை வாசித்தும் கடத்தலாம்” என்பதையும் சேர்த்தே எனக்குப் படிக்கத் தோன்றியதைப் போல. 165 பக்கங்களைக் கடந்து நீங்கள் இந்தத் தலைப்புக்கு வரும் போது உங்களுக்கும் தோன்றக்கூடும்.
மரணம் சார்ந்த அம்சங்கள் – குழந்தை வளர்ப்பு – சக மனிதர்களால் சூழப்பட்டு நிற்கும் வாழ்க்கையை நாம் எதிர்கொள்ளும் தன்மை – காலச்சக்கரத்தின் வேகத்தில் நாம் தொலைத்த, தொலைக்கும் விசயங்கள் என்ற நான்கு அடுக்கில் நிரல்பட நிற்கும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளின் முடிவு வரிகள் நம்மைப் புரட்டிப் போடுகின்றன – புடம் போடுகின்றன – புன்னகை பூக்கச் செய்கின்றன. வாசிக்கும் மனநிலைக்கேற்ப கணித வரைபடங்களின் பரிணாமங்களை வரைந்து செல்கின்றன. பிழைத்தலை விட வாழ்தலின் அவசியத்தைப் புரிய வைக்கின்றன
வாழ்வை எத்தனை முரண்களோடு அணுகிக் கொண்டும், வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் என்பதைத் தொகுப்பு முழுக்க விதைக்கப்படிருக்கும் வார்த்தைகளின் வழி கடந்து கடைசிப் பக்கத்திற்கு வந்து சேரும் போது இரண்டாவது கட்டுரையின் இறுதியில் இத்தனை எளிமையாக்கப்பட்ட பிறகும் நாம் ஏன் இத்தனை ”பிசி”யாகவே இருக்கின்றோம்? என்ற கேள்விக்குப் பதிலும் கிடைத்து விடுகிறது.
இப்படியான தொகுப்புகளில் படைப்பாளியின் தனிப்பட்ட நிகழ்வுகள் சார்ந்த விசயங்கள் தானாகவே நுழைந்து நிரப்பிக் கொள்ளும் என்ற பொது அபாயத்தில் இருந்து இத்தொகுப்பும் தப்பவில்லை என்ற போதும் கிளையிலிருந்து வேர் வரை காலத்தின் நீட்சியாக நகர்வதோடு நம்மையும் நகர்த்திப் போகிறது.