"

8

02

நாளிதழகள், இணைய இதழ்களில் வந்த ஆசிரியரின் காலத்திற்கேற்ற கட்டுரைகளே ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” என்ற கட்டுரைத் தொகுப்பாக வந்துள்ளது. இத் தொகுப்பின் ஆசிரியரான நா.முத்துநிலவன் உலகறிந்த பட்டிமன்றப் பேச்சாளர், பாடகர், கவிஞர், கட்டுரையாளர், சமூகச் சிந்தனையாளர், வலைப்பதிவாளர், கருத்தரங்குகளில் மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் முழங்குபவர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தாலும் பள்ளி ஆசிரியர் என்ற அவரின் தகுதி தான் இந்த நூலை இன்னும் வேகமெடுத்து உண்மை நிலையை உரக்கப் பேச வைக்கிறது. பொதுவாக மதிப்பெண்களை நோக்கி ஓடவைக்கும் பற்சக்கரங்களாக இருக்கும் ஆசிரிய சமூகத்தைச் சேர்ந்த  ஒருவரிடமிருந்து முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் என்று வந்த குரல் தான் இத்தொகுப்பை நோக்கி என்னை நகர்த்திப் போனது.

குறை சொல்பவர்களும், பிறர் மீது குற்றச்சாட்டுகளை விசிறி அடிப்பவர்களும் எப்பொழுதும் தங்களை நல்லவர்களாக அல்லது அப்படியான நிகழ்வுகளுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். இந்தப் பொதுப் புத்தியை தன் கட்டுரைகளில் நா.முத்து நிலவன் பிடரியில் அடித்துச் சாய்த்திருக்கிறார். ”ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்?” என்ற முதல் கட்டுரையில் “போராடக் கற்றுத்தந்த சங்கம் பாடம் நடத்தவும், பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நம் சொந்தப்பிள்ளை போல பார்த்துக் கொள்ளவும் கற்றுத் தரவில்லை” என்ற உண்மையைப் உரக்கச் சொல்கிறார்.

பாடங்கள் பிள்ளைகளுக்கு வேம்பாகவும், பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்களாகவும், ஆசிரியர்கள் அன்னியன்களாகவும் மாறிப் போனதற்கு கல்வியைத் திகட்ட,த் திகட்ட அவனுக்கு கொடுப்பதே காரணம் என வாதிடுவதோடு மட்டும் நின்றிருந்தால் இத்தொகுப்பின் ஆசிரியரும் சராசரி ஆசிரியராகத்தான் நம் முன் இருந்திருப்பார். மாறாக, காரணம் சொல்லி விட்டு மட்டும் போகாமல் காரியம் செய்யும் வழிமுறைகளையும் சொல்கிறார். ”கல்வி புகட்டப்படுவதல்ல! பூக்க வைப்பது” என்கிறார். எத்தனை பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் அதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள்? யோசித்தால் வெறும் ஆற்றாமை தான் மிஞ்சுகிறது.

சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில் இருந்த சிக்கல்கள், வந்த பின் அதில் நிகழ்ந்த குழப்பங்கள், குளறுபடிகள் ஆகியவைகளுக்கான காரணங்களையும், அதற்குப் பொறுப்பானவர்களையும் தன் கூரிய கருத்துக்களால் சாடும் நா.முத்துநிலவனின் ”விண்ணப்பித்து வாங்குவதா விருது?” என்ற கட்டுரை ஆசிரியர் துறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல விருதுகளுக்காக கண்ணி வைத்துக் காத்திருப்பவர்களும் வாசித்து சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று! விருது வழங்குவதில் இருக்கும் அடிப்படைத் தவறை அழகான சொல்லாடல்கள் வழி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றித் தரும் அதே சமயம் மாணவர் தேர்வு முறையைப் போல விருதுகளுக்குத் தேர்வு செய்யப்படும் முறைகளும் மாற வேண்டும் என்கிறார். ஒருமுறை கலைமாமணி விருது அறிவிப்புச் சமயத்தில் கார்டூனிஸ்ட் மதி வரைந்திருந்த கார்டூன் தான் இந்தக் கட்டுரைய படித்த போது என் நினைவுக்கு வந்தது. விருதுகளுக்கு தேர்வு செய்யும், பரிந்துரைக்கும் முறைகள் பற்றி இத்தொகுப்பில் சொல்லி இருக்கும் யோசனைகளை அலட்சியம் செய்யாமல் அரசாங்கமும், அமைப்புகளும் பரிசீலணை செய்தால் எந்த ஒரு விருதும் அதைப் பெறுபவர்களால் நிச்சயம் பெருமை கொள்ளும் என நம்பலாம்.

தொகுப்பின் தலைப்பாய் அலங்கரிக்கும் கட்டுரை பெற்றோர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை, பாடங்களைச் செரிக்க வைக்கும் இயந்திரங்களாக பிள்ளைகளை மாற்ற வைப்பதற்குஆசிரியர் பிரயாசைப் படுகிறார் என்றால் அது அவர் வாங்கும் சம்பளத்திற்காக! பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு சிறக்கப் பாடுபடும் பெற்றோர்கள் அவரைப் போல பிரயாசைப்படக் கூடாது. அந்தப் பிரயாசை என்னும் பேராசை குழந்தைகள் பெற வேண்டிய பல விசயங்களை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்து விடுகிறது என்பதை கடிதமாகவே கட்டுரை பேசுகிறது. வாய்ப்பிருக்கும் குழந்தை நல அமைப்புகள் இந்தக் கட்டுரையை மட்டுமாவது பிரதி எடுத்து பொற்றோர்களுக்கு இலவசமாக வழங்கலாம்.

தனியார் பள்ளிகள் முதல் நிலையில் தங்களின் பெயரைத் தக்க வைப்பதற்காக நிகழ்த்தும் திகிடுதத்தங்கள், அவர்களோடு அரசுப் பள்ளிகள் போட்டியில் நிற்க முடியாமல் போவதற்கான காரணங்கள், அதை முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களையச் செய்ய வேண்டிய முன்முயற்சிகள் ஆகியவைகளைத் தன் 34 ஆண்டுகால ஆசிரிய அனுபவத்தை முன் வைத்துப் பேசும் ஆசிரியரின் கட்டுரைகள் கல்விமுறையில் அரசாங்கத்தின் பாரா முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தோலுரித்துத் தொங்க விடுகின்றன.

கற்பிக்கும் ஆசிரியர் தன் கற்பித்தல் முறையில் முன்னேற்றம் பெறாதவரை அவரிடம் கற்கும் மாணவன் கரை சேரத் தனக்கொரு படகைத் தேடிக் கொண்டு தான் இருப்பான் என்ற உண்மையை உணர்ந்து அதை நீக்கத் தயாராகுங்கள் என தன் ஆசிரியத் தோழமைகளுக்கு வெளிப்படையாகவே அறை கூவல் விடுக்கிறார்.

சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் பேசும் போது மருத்துவக்கல்விக்கான திசுவியல் பாடத்தில் பல மாணவர்கள் தோல்வியடைந்ததற்கான காரணத்தை அவர்களிடமே விசாரித்த போது 11 ஆம் வகுப்பில் தங்களுக்கு 12 ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தியதால் 11 ஆம் வகுப்பிற்கான பாடநூலில் இருக்கும் திசுவியல் பாடத்தைப் பற்றி அதிகம் படிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னதாகக் கூறி தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். அதே ஆதங்கத்தை  2007 லேயே “9,11 ஆம் வகுப்புகள் தேவையில்லையா?” என்ற தலைப்பில் ஆசிரியர் கட்டுரையாக எழுதி இருப்பதை வாசித்த போது ஆச்சர்யமாக இருந்தது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக இந்த நிலை மாறாமல் இன்றும் தொடரும் அவலத்தை என்னவென்பது?

”எனது ஆசிரியப்பணியில் சில நல்ல நாள்கள்” என்ற கட்டுரை சொல்லும் அனுபவத்தைப் பெறாத ஆசிரியர்கள் துரதிருஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். இந்த விசயத்தில் அதிர்ஷ்டசாலி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்கத் தான் ஆசிரியர் – மாணவர் உறவின் தன்மை இளகும். நெகிழ்ச்சியாக மாறும். அந்த இளகலும், மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருந்தால் மட்டுமே ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? என்ற கேள்வி எதிர்காலத்தில் எழ வாய்ப்பில்லாது போகும்.

வறண்டு போன மெக்காலே பாடத் திட்டத்தை கைவிடத் தயங்கும் கல்வித்துறை, ஆட்சியாளர்களுக்கேற்ப எழுதப்படும் வரைமுறையற்ற பாடத் திட்டங்கள், தமிழ், தமிழ் என வாய் கிழியப் பேசுபவர்கள் கொல்லைப் புற வேலையாக தமிழ் மொழிக் கல்விக்குச் செய்யும் மறைமுகத் தடைகள், பாடநூல் தயாரிப்புக் குழுவினரின் எதேச்சாதிகார, பொறுப்பற்ற போக்கு, மாணவர்களுக்குத் தர வேண்டிய அடிப்படை விசயங்கள் குறித்து தெளிவில்லாத பாடத்திட்ட தயாரிப்புகள், மாணவ சமுதாயத்தை திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்கு, கற்றல் – கற்பித்தலில் நிகழும் குறைபாடுகள், மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் புறக்கணிப்பிற்கான காரணங்கள் என ஒரு அரசாங்கமும், கல்வித்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விசயங்களை ஆசிரியர் நிறைய முன் தயாரிப்புகளோடும், தன் அனுபவம் கொண்டும் 18  கட்டுரைகளால் தொகுத்து தந்திருக்கும் இந்நூல் ஒவ்வொரு ஆசிரியரும் – ஆசிரியராகப் பணி செய்ய விரும்புபவரும் – பெற்றோரும் வாசிக்க வேண்டிய நூல்.

வருங்காலப் பாடத்திட்ட தயாரிப்புகளிலும், கல்விமுறை மேம்பாடுகளிலும் செய்ய வேண்டியவைகள் குறித்து ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு, கல்வித்துறைக்கு என ஒரு முக்கோணமாய் அமைந்து இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பேசும் கருத்துக்களில் கவனம் கொண்டால் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வாசகம் இன்னும் நன்றாகவே வேர் பிடித்துச் செழிக்கும் என்பதில் ஐயமில்லை.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

விரியும் வனம் Copyright © 2016 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.