"

9

325

2012 ம் ஆண்டிற்கான சிறந்த பண்பாட்டுக் கட்டுரையாக அயல் பசியை எஸ். இராமகிருஷ்ணன் தேர்வு செய்திருந்த சமயத்தில் அதன் சில கட்டுரைகளை இணையத்தில் நொறுக்குத் தீனியாய் அசை போட்டிருந்தாலும் எல்லாக் கட்டுரைகளையும் ஒரு சேர வாசித்து ருசிக்க சமீபத்தில் தான் நேரம் வாய்த்தது.

உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் மனித வாழ்வியலுக்கான அடிப்படைச் சாதனங்களாக மட்டுமல்லாமல். மனித குல வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களினால் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளில் உண்டாகிய தாக்கங்களையும், சிதைவுகளையும் வரலாற்றில் பதிவு செய்யும் கருவிகளாகவும் இருந்து வருகின்றன. அத்தகைய கருவிகளுள் ஒன்றான உணவு சார்ந்து வந்திருக்கும் இந்நூல் ஜப்பான், தென்கிழக்காசியா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இருக்கும் உணவு வகைமைகள், அதைத் தயார் செய்யும் முறைகள், பரிமாறும் விதங்கள் உள்ளிட்ட பல தகவல்களைத் தரும் இந்த நூற்றாண்டில் முக்கிய ஆவணம் எனலாம்.

பத்தி எழுத்துக்கே உரிய கவர்ச்சித் தலைப்பாக மட்டும் இல்லாமல் கட்டுரையின் மொத்த சாராம்சத்தையும் ஒரே வரியில் சொல்லும் மாவடு போன்ற சுரீர் தலைப்புகளில் காலம் காலமாக மனிதர்கள் உணவின் மீது காட்டிய ஈடுபாடு, தீரா வேட்கை ஆகியவைகளைப் பற்றிப் பேசும் இந்நூலில் முகலாயச் சக்கரவர்த்தி பாபர், அக்பர், ஜார்ஜ் வாஷிங்டன், ஸ்டாலின், ஹிட்லர், செங்கிஸ்கான், நிக்கோலே, இடிஅமீன், ரோமின் நீரோ, மாசேதுங், ஆப்ரகாம் லிங்கன், சர்ச்சில், ரீகன், மண்டேலா, டயானா, ஒபாமா, ஐசக் நியூட்டன், கிரகாம்பெல், பிக்காசோ, பில்கேட்ஸ், பீத்தோவன், கன்பூசியஸ், இராமகிருஷ்ண பரமஹம்சர் எனச் சகலரும் வலம் வருகிறார்கள்.

ஆம்லேட் என்று பெயர் வந்த காரணம், சலாடு (CAESAR SALAD) உருவான விதம் ஆகியவைகளோடு ஹவாய், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பெயரும் மேதான்  நகரின் பெயரும் உருவான விதம், உடுப்பி கிருஷ்ணா ராவ், ஆப்பிரிக்க – அமெரிக்க உணவுத் தொழிலில் சாதித்த ஆர்தர் கேஸ்டன் (ARTHUR G.GASTON) ஆகியோரின் வெற்றிக் கதைகள் வருகின்றன.

சிங்கப்பூரின் பிரபலமான ”முள்நாறிப் பழம்” (டூரியன்), பலரின் சூரிய உதயத்தை உயிர்பிக்கும் காப்பியின் கதை பேசும் ”ஆனந்தக் கசப்பு” ஆகிய கட்டுரைகளின் வழியாக  ப. சிங்காரத்தின் புயலிலேயே ஒரு தோணி நாவலும், எழுத்தாளர் தஞ்சை பிரகாஷின் வடிகால் வாரியம் கதையும் வருகிறது. இவைகள் தான் இந்நூலை வழக்கமான நூல்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஷாநவாஸின் தேடல்களையும், மெனக்கெடல்களையும் நமக்குப் பந்தி வைக்கின்றன.

ஆடு, மாடு, பன்றி, கோழி என நாம் அறிந்த, சுவைத்துப் பழகிய அசைவ உணவுகளால் மட்டும் உலகம் சூழப்படவில்லை. சட்டெனப் பிடித்துப் பட்டென சமைத்துத் தின்று விடுவதில் மனிதன் எப்பொழுதும் திருப்தி அடைவதில்லை. பிரான்சின் தென்மேற்கு வட்டாரங்களில் ஒரு பாடும் பறவையை விரும்பிச் சாப்பிடும் மக்கள் அதைப் பிடித்து வெளிச்சம் கிடைக்காத வகையில் ஒரு இரும்புப் பெட்டிக்குள் போட்டு அடைத்து விடுவார்களாம். இன்னும் விடியவே இல்லை என்ற நினைப்பில் அந்தப் பறவை நான்கு நாட்களாகத் தூங்கித் தூங்கியே தன் எடையை நான்கு மடங்காக்கிக் கொண்டதும் அதன் தலையைத் திருகி எறிந்து விட்டு அந்தக் குருவியின் கொழுப்பிலேயே வருத்துத் தின்பார்களாம்.

பிரான்ஸ் மக்கள் தான் இப்படி என்றால் ரஷ்யர்கள் முழு ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தமாக்கி அதனுள் ஒரு ஆடு, அந்த ஆட்டின் வயிற்றில் இருபது கோழிகள், அந்தக் கோழிகளின் வயிற்றில் முட்டை, அரிசி ஆகியவைகளை வைத்து அவித்துச் சாப்பிடுவார்களாம். இப்படியாகத் தொகுப்பு முழுக்க விரிந்து கிடக்கும் தகவல்களை வாசிக்கும் போது உணவு இரசனை என்பது மனிதனுக்கே உரிய ஆறாம் அறிவின் உற்பத்தியாகத் தனித்து நிற்கும் வியப்பு மெல்ல நம்முள்   ஊடேறுகிறது.

குறிப்பிட்ட சிலவகை உணவுகளை நாம் சாப்பிட மறுப்பதற்கான காரணத்தையும், நமக்கு ஒவ்வாத போது சிலவகை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதற்கான காரணத்தையும் ”கிளாடியேட்டர்களின் இரத்தம்” என்ற கட்டுரையில் அலசும் ஷாநவாஸ்  உணவு விசயத்தில் மனிதன் கொண்டிருந்த நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் பற்றியும் விரிவாகவே எழுதிச் செல்கிறார்.

ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யவும், இன்ன பிற உடல்ரீதியான காரணங்களுக்காகவும் கரப்பான் பூச்சி, பாம்பு, புழு, எறும்பு, பூனை, நாய், கழுதைப்புலியின் தலைக்கறி ஆகியவைகளைச் சாப்பிட சாமானிய மனிதன் விரும்புவதைப் போல நீண்ட நாட்கள் தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக வட கொரியாவின் ஆட்சியாளராக இருந்த இரண்டாம் கிம் ஜோங் ஏழு செண்டி மீட்டருக்குக் குறையக்கூடாது என்ற நிபந்தனையோடு நாயின் உறுப்பைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாராம். இப்படிச் சாமானியனில் தொடங்கி உலகத்தலைவர்கள் வரை பலரும் உணவு விசயத்தில் கொண்டிருந்த நம்பிக்கைகளை நூல் முழுக்க அறியத் தருகிறார்.

பெரும்பாலான உலகத் தயாரிப்புகளில் சீனர்களின் ஆதிக்கம் தொடர்வதைப் போல உணவு விசயத்திலும் சீனர்கள் அப்போதிருந்தே சகட்டு மேனிக்கு ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றனர். ஒருவேளை பலகாரம், இரண்டு வேளை சோறு என உணவு அட்டவணையை வைத்திருக்கும் நம்மில் பலருக்கும் அவர்களின் உணவுக் கலாச்சாரமும், உணவு முறைகளும் நிச்சயம் திகிலூட்டுபவைகளாக இருக்கும். ”நகரும் எதையும் தன் வயிற்றிற்குள் நகர்த்தி விடுவார்கள்” என்று சீனர்கள் பற்றிச் சொல்லப்படும் வாய்வழிச் செய்தியை எழுத்தின் வழி அவர்களின் உணவுக் கலாச்சாரத்தோடு இந்நூல் தெளிவாய் விவரிக்கிறது.

இன்றைக்கு உடல் பருமனைக் குறைக்க டயட்டில் இருப்பதாய் சொல்லிக் கொள்கிறோம். இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாகவும் அது மாறி வருகிறது. பருமனைக் குறைப்பதற்கான மருத்துவ ஆய்வுகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நாடாப்புழுவை விழுங்குதல், நீலநிறக் கண்ணாடி அணிந்து கொள்ளுதல், தினமும் 5 தடவை குளித்தல் போன்ற நம்பிக்கைகளின் வழி மனிதர்கள் தாங்களே செய்து கொள்ளும் சுய பரிசோதனை முயற்சிகளை ”ஆபரேஷன் டயட்” கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

சமையல் கலையைக் கற்றுத் தரும் நூல்கள் குவிந்து கிடக்கும் அளவுக்கு  உணவின் வழியாகக் கலாச்சாரப் பதிவுகளைத் தரும் இது போன்ற நூல்கள் தமிழில் மிக, மிகக் குறைவு. வெகு அரிதாக வரும் இப்படியான நூல்களை எழுதுவது என்பது சிரமமான விசயம்.  கயிறு மேல் நடக்கும் வித்தை போன்றது. கொஞ்சம் பிசகிப் போய் சுவராசியம் குன்ற ஆரம்பித்தால் வாசிப்பாளன் தயவு தாட்சண்யமின்றி நூலை ஓரங்கட்டி விடுவான்.  ஆனால் அப்படியான சுவராசியக் குறையுணர்வு தோன்றா வகையில் பிரபலங்களின் உணவு முறைகள், பேட்டிகள், தான் சந்தித்த, தன்னைச் சந்தித்த நபர்கள், தன் அனுபவத்தோடு நண்பர்களின் அனுபவங்கள், தன் பயணங்கள்,  வாசிப்புகள் ஆகியவைகளின் வழி உணவும், உணர்வுமாய் தனக்கே உரிய தனித்த, எழுத்து நடையில் ஷாநவாஸ் எழுதி இருக்கிறார்..

கலாச்சாரப் பிண்ணனியோடு தேசங்களின் உணவு வகைமைகளையும், முறைகளையும் அதன் மீதான அம்மக்களின் பெரு விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் விரிவாய் சொல்வதற்காக இந்நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் தகவல்களும், விவரணைகளும் விலகியோ, துருத்தியோ தெரியாமல் அமைந்திருப்பது நூலின் பலம்,

ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா கண்டங்களுக்கும் பயணம் மேற்கொள்பவர்கள் அங்குள்ள உணவுக் கலாச்சார முறைகளை அறிந்து கொள்ள இந்நூலை தயங்காமல் வாசிக்கலாம்.

உணவைத் தயார் செய்வதற்காகச் சமையலறையில் பயன்படுத்தப்படும் விதவிதமான கத்திகள், அவைகளைக் கையாளும் விதம் குறித்து பேசும் கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல் வழி பண்டைத் தமிழன் ஆமை ஓட்டில் வைத்து கத்தியைக் கூர் செய்ததையும், அகநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகியவைகளிலிருந்து சரிவிகித உணவு குறித்தும், 16 ம் நூற்றாண்டில் புரந்தரதாசர் பாடிய பாடலில் இருந்து கருமிளகு பயன்பாடு பற்றியும் அறியத் தரும் இந்நூலில் தமிழக உணவு பற்றிய தனிக்கட்டுரை ஏதும் இல்லாதது ஏமாற்றமே!

பத்திக்குப் பத்தி அபூர்வமான, வியக்க வைக்கும் தகவல்களால் ஆன இந்நூலில் இருக்கும் கட்டுரைகளைப் பருந்துப் பார்வையில், நுனிப்புல் மேயும் வேகத்தில் வாசித்துக் கடக்காமல். பசித்தும், இரசித்தும், ருசித்தும் புசிப்பதைப் போல வாசித்துக் கடந்தால் மட்டுமே முழு விசயங்களையும், வாசிப்புணர்வையும் பெற முடியும். வெறும் சமையல் சார்ந்த விசயங்களைப் பேசும் ரெசிபி (RECIPE) தொகுப்பாக இல்லாமல் உணவின் வழி நாடுகளின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளை அடையாளம் காட்டும் அயல் பசி வாசிக்க, வாசிக்கத் தான் அற்புதம். அருமையான போஜனம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

விரியும் வனம் Copyright © 2016 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.