1
சுற்றுலா செல்வதற்கு ஒரு காலத்தில் சாத்தியமானதாக இருந்த கப்பல் பயணம் பொருளாதாரபலம், நேர விரய தவிர்ப்பு ஆகியவைகளால் ஆகாயவிமானங்களுக்கு மாறின. விமான பயணங்களின் மூலம் பார்க்க வேண்டிய இடங்களின் தூரங்கள் குறைந்தது போலவே அந்தப் பயணம் சார்ந்த நினைவுகளின் வாழ்நாளும் குறைந்து போயின. இந்த நிஜத்தை உணர்ந்த கப்பல் நிறுவனங்கள் தங்களுடைய உல்லாசக் கப்பல்கள் மூலம் ”க்ரூஸ்” எனப்படும் பயணங்களை அறிமுகம் செய்தன. இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக அது மாறிவிட்டது. விமான பயணச் சுற்றுலாக்கள் போல கப்பல் பயணச் சுற்றுலாக்கள் சட்டென அது சார்ந்த நினைவுகளை நீர்த்து போக வைப்பதில்லை. விரைவாக இன்னொரு மனநிலைக்கு நம்மை கடத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பசுமரத்தாணியாய் மனதில் உறைந்து அவ்வப்போது அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கும். கப்பலின் பிரமாண்டம் போலவே அதில் கிடைக்கும் பிரமாண்ட வசதிகள், பல நாட்டவரோடு குறிப்பிட்ட சில தினங்கள் கலந்து குழுவாக இன்னும் சொல்லப்போனால் நவநாகரீக வசதி கொண்ட கிராமத்தில் வாழ்தல் போன்ற உணர்வு (கப்பல் சிப்பந்திகள், கலைஞர்கள் தவிர இந்த பயணநாவல் பேசும் கப்பல் பயணத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த 3624 பிரயாணிகள் பயணம் செய்துள்ளனர்) ஆகியவைகள் அதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த காரணத்தை ஏற்க முகாந்திரம் கேட்பவர்களுக்கு அதற்கான எல்லா தரவுகளையும் தாராளமாய் அள்ளித் தருகிறது இந்த உல்லாசக் கப்பல் பயணம் நூல்.
”நாவல்” என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தாலும் இதில் நாவலுக்கான இழை பூரணி, அருண், குமிகோ, லெனின், வாங்லி, யாசியன், திசைகள் மாறி வந்து ஒரு சேர கப்பலில் பயணிக்கும் நண்பர்கள் என கதாபாத்திரங்களால் வாழ்வியலுக்கான விசயங்களை தலையில் குட்டு வைப்பது போல சொல்லியும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படியும், சுவராசியமாய் ஒரு மெல்லிய சரடாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. மற்றபடி நூல் ஒரு கப்பல் பயணத்தை மட்டுமே முழுமையாக தருகிறது.
சிங்கப்பூர் – மலேசியா – தாய்லாந்து என மூன்று நாடுகள் ஐந்து நாட்கள் என சுற்றி வந்த இந்த கப்பல் பயணத்தை நூலாசிரியரே மேற்கொண்டு அனுபவித்து அதன் ஈரம் காயாமல் கொடுத்திருப்பதால் நேரடியாக நாமே பயணம் செய்த அனுபவத்தை உணர முடிகிறது. உணர்ந்தால் மட்டும் போதாது அனுபவிக்க வேண்டும் என்றால் பயணம் செய்து தான் ஆக வேண்டும். செலவு என்று பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை என மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 1,75,000 ரூபாயாம்! கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம்!! கப்பலில் ஏறும் போதே அடையாள அட்டையோடு (SEE PASS) கடன் அட்டையையும் (CREDIT CARD) இணைத்து விடுவார்களாம்!!!
சிங்கப்பூரில் தொடங்கும் ஐந்து நாள் கப்பல் பயணத்தை தனித்தனி நாளாக பிரித்து வரிசைப்படுத்தி அழகாக நூலாசிரியர் கிருத்திகா சொல்லியிருக்கிறார். ஓரளவு விபரம் தெரிந்த குழந்தைகள் உள்ள பெற்றோர் மட்டுமல்ல கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் கூட இந்த க்ரூஸ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும், அதற்காக கப்பலிலேயே இருக்கும் வசதிகளை சொல்லியும் சகலருக்கும் பயண ஆசையை தூண்டும் தகவல்களோடு கப்பலில் பின்பற்றப்படும் நடைமுறைகள், அச்சமயங்களில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள், கப்பலில் கிடைக்கும் வசதிகள், கப்பல் பணியாளர்கள் பிரயாணிகளை கவனித்துக் கொள்ளும் விதம், பிரமாண்டமான அரங்குகள், கப்பலின் பதினைந்து தளங்கலிலும் கிடைக்கும் பொழுது போக்கு சார்ந்த அம்சங்கள், அதை எப்படியெல்லாம் முழுமையாக பயன்படுத்தலாம் என்பதை நேரவரிசைப்படி சொல்லி இருப்பதால் அயர்ச்சியுறாமல் நூலை வாசிக்க முடிகிறது. எழுத்தில் சொன்னதை கண்களில் கண்டு இரசிக்க ஏதுவாக வண்ண புகைப்படங்களையும் இணைத்துள்ளது நூலை இன்னும் சிறப்பாக்குகிறது.
பயணத்தை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், அன்னியநாட்டில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு (VISA) நடைமுறைகள், அந்தந்த நாடுகளின் துறைமுகத்திற்கு கப்பல் சென்ற பின் வெளியேறி சுற்றிப்பார்ப்பதற்கான நடைமுறைகள், அங்கு வாங்கக் கூடிய பொருட்கள் போன்ற தகவல்களை சொல்லி வரும் நூலாசிரியர் கட்டம் கட்டப்பட்ட அடையாளங்களுக்குள் பயணக்காப்புறுதி உள்ளிட்ட பயணங்களின் போது மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.
நூலாசிரியர் ஒரு கவிஞர் என்பதால் கப்பலுக்கு வெளியே, வானிற்கு கீழே நிகழும் நிகழ்வுகளை ஆங்காங்கே கவிதைகளின் வழியே கைப்பிடித்து காட்டுகிறார். கடலில் பயணிக்கும் கப்பலுக்குள்ளும், துறைமுகத்தில் இறங்கி நாடுகளை சுற்றிப்பார்க்கும் பொழுதும் சிக்கனமாய் இருப்பதற்கான யோசனைகளை சிக்கனமில்லாமல் நூல் முழுக்க சொல்லியிருக்கிறார். கூடுதல் தகவல்களை அறிய ஏதுவாக சம்பந்தப்பட்டவைகளின் இணையதள முகவரிகள் தேவையான இடங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது.
சரளமான தமிழ் நடையில் நூலாசிரியரின் எழுத்திலேயே சொல்ல வேண்டுமானால் ”குழிகள் இலாத விரைவுச்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பயணம் போல” வாசித்தலின் வழி ஒரு முழு கப்பல் பயணத்தை அதன் பிரமாண்டத்தோடும், அழகியலோடும் என்னை அனுபவிக்க வைத்தது இந்நூல். நீங்களும் வாசியுங்கள், நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.