"

10

09

ஒரு மாலை நேரப் பொழுதில் நண்பராய் அறிமுகமான கீழை அ. கதிர்வேல் அவர்கள் தன்னுடைய “நகைச்சுவை நானூறு” நூலை என்னிடம் கொடுத்தார். நகைச்சுவையின் மூலம் வேலைப்பளுவின் அழுத்தங்களை அகற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கும் எனக்கு அது அற்புதப் பரிசாக இருந்தது. மனம் கொஞ்சம் குன்றும் போதெல்லாம் புத்துணர்வு கொடுத்துக் கொள்ள வசதியாக என் அலுவலகத்திலேயே எப்பொழுதும் வைத்திருக்கிறேன். நீங்களும் வாங்கி வைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

நகைச்சுவை நானூறு என்ற பெயருக்கேற்ப நகை (புன்னகை) + சுவையால் நிரம்பி நிற்கும் இந்நூலின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் உங்களுக்கான சிரிப்பை பெற்றுக் கொள்ளமுடியும்.  நீண்ட பத்திரிக்கை அனுபவம் கொண்ட கதிர்வேல் அவர்கள் வாழ்வின் நெடிய நிகழ்வுகளை எல்லாம் நகைச்சுவையாக இந்நூலில் பிழிந்து தந்திருக்கிறார். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் இந்நூலில் நகைச்சுவையாய் நகர்கிறது. நம்மையும் நகர்த்துகிறது!

உலகம் முழுக்க பரவி நிற்கும் வேகத்தடையான இலஞ்சத்தின் உயரம் இந்தியாவில் சற்றே அதிகம். அதைக் கடக்காமல் யாரும் எந்த ஒன்றையும் செய்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால் அது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கவே செய்யும். அந்த அனுபவக் குமுறலை –

அந்த செக்‌ஷனில் ஏன் சார் கூட்டம்?

ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இலஞ்சம் கொடுக்கிறவர்களுக்கு ஒரு ”கேஷ்பேக்” அன்பளிப்பாய் கொடுக்கிறாங்களாம் – என நகைச்சுவை தேன் தடவித் தருகிறார். இலஞ்சத்திற்கே அன்பளிப்பு தரும் வேதனையின் துயரம் நகைச்சுவையின் வழி சாடலாகிறது!.

வாச ரோஜாவை……வா சரோஜா என வாசிப்பதைப் போல புரிந்து கொள்ளலில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை –

என்ன சார் பாங்க் பூரா ஒரே நோயாளிகள் கூட்டமா இருக்கு?

நலிவடைந்தோருக்கு கடன் வழங்கறதா சொல்லி இருந்தாங்களாம் அதான்”. –  என்று எளிமையாக எடுத்துக்காட்டும் நகைச்சுவைகள் நூல் முழுக்க விரவி கிடக்கிறது.

அலுவலகங்களில் கோப்புகள் நகர்வது குதிரைக் கொம்பு. அதை –

எதுக்கு உங்க ஆபிஸ் கோபுவை “கோப்பு”, “கோப்பு”ன்னு கூப்பிடறீங்க?

இருக்கிற இடத்திலிருந்து இரு இஞ்ச் நகரமாட்டானே! – என அந்தச் சூழலில் இருந்தே சுட்டிக்காட்டுகிறார்.

சிலர் விளக்கம் சொல்லும் விதமே வியக்க வைத்துவிடும். எப்படி தான் யோசிப்பானுகளோன்னு வடிவேலு சொல்லுவதை நம் கண்முன் கொண்டுவந்து போகும். அப்படி எனக்கு வரச்செய்த நகைச்சுவைகள் இதில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்று –

ஏம்பா சாமி சிலையைத் திருடுனே?

கடவுள் இந்த உலகத்துக்கே  பொதுவானவர். அதனால் தான்  அவரை நாங்க வெளிநாட்டுக்கெல்லாம்கூட்டிட்டு போறோம்!

அதேபோல, தங்களுடைய வார்த்தை விளையாட்டுகள் மூலமாகத் தன் தவறுகளைச்  சரியாய் இருப்பதைப் போலக் காட்டி விடுவார்கள், ஒரு ஜோக்கைப் பாருங்கள்.

எங்க ஸ்கூலில் நன்கொடை வாங்கறதில்லை

அப்படியா?

ஆமாம். எல்லாத்தையும் பீசாகவே வாங்கிடறோம்!

சரியாகக் கவனிக்கா விட்டால் தவறை சரி என நம்மை ஒப்புக் கொள்ள வைத்து விடும் நிகழ்வுகளைக் கூட நகைச்சுவையாக இந்நூலில் தந்திருக்கிறார்.

சொந்த வீடு என்பது பலருக்கும் வாய்க்காத கனவு. வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வீட்டைக் கட்டிப் பார் என்பது சவாலான விசயம் என்பதை –

என்ன சார் சொல்றீங்க? வீட்டுக்கு அஸ்திவாரம் போட்டதோட வேலை நிக்குதுங்களா?

ஆமாசார். இருந்த ஆஸ்தி எல்லாம் அஸ்திவாரத்தோட முடிஞ்சுட்டது! –எனச்  சுட்டுகிறது இந்த நகைச்சுவை.

எழுத்தாளர் : போனவாரம் வெளியான என் சிறுகதையைப் பற்றி கடிதங்கள் வந்ததா?

பத்திரிக்கை ஆசிரியர் : ஓ……வந்ததே மூணு பேர் அது தங்களோட கதையின் “காப்பி”ன்னு எழுதியிருக்காங்க.

இப்படி பக்கத்துக்குப் பக்கம் நகைச்சுவையோடு நம்மைச் சிந்திக்க வைத்த படியே நகரும் நிகழ்வுகள் வழக்கமான மருத்துவம், அரசியல், குடும்பம், பள்ளிக்கூடம், இலஞ்சம் போன்றவைகளோடு அறிவுத் திருட்டு, டைமிங் காமெடி, மனித இயல்புகள், சக மனிதர்களின் குணங்கள் எனப் புதிய பக்கங்கள் வழியேயும் நம்மை அழைத்துப் போகிறது. இந்த நூலின், இந்த நூலாசிரியரின் சிறப்பு இது எனலாம். இதற்காகவே இந்நூலை விலை கொடுத்து வாங்கலாம். ஒரு காக்டெயில் நகைச்சுவை போதை நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்,

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

விரியும் வனம் Copyright © 2016 by Creative Commons Attribution-ShareAlike 4.0 International License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.