7
சிங்கப்பூர் பொன்விழாவையொட்டி சிங்கப்பூர் சார்ந்த தகவல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் ஷாநவாஸின் நூல் ”நனவு தேசம்”. சிங்கப்பூர் என்றவுடன் கனவு தேசம் என்று தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இவரோ நனவு தேசம் எனப் பெயர் வைத்துள்ளார். இந்தப் பெயர் தான் நூலிற்குள் நுழைவதற்கான திறப்பின் ஆவலை அதிகரிக்கச் செய்தது. ஒருவேளை கனவு தேசம் எனப் பெயர் வைத்திருந்தால் நாடுகளின் பிம்பங்களைப் பதிவு செய்து சந்தைக்கு வந்து குவிக்கின்ற ஒரு நூலாக நினைத்து புறந்தள்ளிப் போயிருக்க வாய்ப்புண்டு. என்னுரையில் தன் கனவுகளை நனவாக்கிய தேசம் என்பதால் நனவு தேசம் என நூலுக்கு பெயரிட்டதற்கான குறிப்பைச் சொல்கிறார்.
நாட்டின் பரப்பளவில் தொடங்கி அங்கு இருக்கும் சுற்றுலாத் தலங்கள், சீதோஷ்ண நிலை வரை பரவி நிற்கும் தகவல்களால் சிங்கப்பூரைப் பற்றிய பிம்பத்தை நம் முன் காட்டும் வழக்கமான புத்தகமாக இல்லாமல் அந்த தேசத்தைப் பற்றி அறிந்திராத, அறிந்து கொள்ள வேண்டிய புதிய தகவல்களை, அங்கு வாழும் பல்லின மக்களின் வாழ்வியல் மனநிலையைப் பதிவு செய்த படியே சிங்கப்பூரின் பிம்பத்தை புதிய கோணத்தில் விரித்துச் செல்கிறது நனவு தேசம்.
ஐம்பது பத்திக் கட்டுரைகள் கொண்ட நூலின் முதல் கட்டுரை உலகம் முழுக்க இரசிகர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கால்பந்து விளையாட்டுப் பற்றிய தகவல்களோடு தொடங்குகிறது. போர்க்கள யுத்தமாகவே பார்க்கப்படும் அவ்விளையாட்டு குறித்து அவருக்கு இருக்கும் பதிமூன்று சந்தேகங்களும் படிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த விளையாட்டைப் பார்க்கும் நேரமெல்லாம் தொற்றிக் கொள்வதோடு அதற்கான விடைகளைத் தேடும் முனைப்பையும் கொடுக்க ஆரம்பித்து விடும் என்றே சொல்லலாம். இப்படித் தேடல்களுக்கான சிந்தனைகளை கேள்விகளாக, ஆசிரியரின் கருத்துக்களாக பதியமிட்டு நகரும் கட்டுரைகள் நம்மைச் சிங்கப்பூர் என்ற தேசத்தின் அறிய வேண்டிய சுவராசியங்களுக்குள் தானகவே நுழைய வைத்து விடுகிறது.
உலகம் வியக்கும் ஒரு தேசம் தன்னைச் சீர் செய்து கொண்டு எழுந்த விதத்தை அதன் கடந்த கால, சமகால நிகழ்வுகளோடு பதிந்து கொடுப்பவன் தான் இலக்கியம் சார்ந்த படைப்பாளியாக இருக்க முடியும். அப்படி ஒரு படைப்பாளியாய் ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார் ஷாநவாஸ்.
பல்லின மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், நம்பிக்கைகள் என எல்லாத் தளங்களிலும் தன்னைக் கொண்டு செலுத்திய படியே முன்னேறி நிற்கும் சிங்கப்பூரின் வெற்றிக் கதையை அந்தந்த தளங்களில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் வழி நூலில் சொல்லப்பட்டிருக்கும் கட்டுரைகள் காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல இடங்களுக்குப் பெயரிடுவதற்கும், அழைக்கப்படுவதற்கும் கூட காரணங்கள் இருக்கின்றன. அத்தகைய காரணங்களோடு அழைக்கப்படும் இடங்களை சுட்டிக்காட்டும் ”சாங்கி மரம்” என்ற கட்டுரையில் ஒரு செய்தியைத் தருகிறார். ஒரு மீட்டருக்கும் அதிகமான சுற்றளவு கொண்ட மரங்களை வெட்ட வேண்டுமானால் சுற்றுச் சூழல் துறைக்குத் தெரியப் படுத்த வேண்டும் என்பது சிங்கப்பூர் சட்டம். இந்நிலையில் நிலச் சீரமைப்பிற்காக ஒரு தனியார் நிறுவனம் 3.4 மீட்ட பருமனுள்ள மரம் ஒன்றை வெட்டித் தள்ளியதற்காக 4.8 ஆயிரம் வெள்ளி அபராதமும், 4 இலட்சம் வெள்ளி இழப்பீட்டுத் தொகையும் அந்நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்டதாம். தவிர, வெட்டப்பட்ட அந்த மரத்தின் விதைகள் சேகரிக்கப் பட்டு அதிலிருந்து மரக்கன்றுகள் வளர்த்தெடுக்கப்பட்டது என்ற செய்தி சுற்றுச் சூழலில் சிங்கப்பூர் காட்டும் அக்கறையைச் சொல்கிறது.
மனிதர்களைப் புதைத்த இடங்களை இடுகாடு என்றழைக்கிறோம். சிங்கப்பூரில் அந்த இடுகாட்டைக் கல்லறைத் தோட்டம் என்கிறார்கள். இறந்து விட்ட தன் குடும்பத்தவர்கள் உறங்கும் இடத்தை ஒரு தோட்டம் போல அரசாங்கமே பராமரித்து வருவதைப் பற்றிய தகவல்களோடு கூடிய “இடம் மாறும் கல்லறைகள்” என்ற கட்டுரையில் புதிய நகர நிர்மாணிப்புப் பணிகளுக்காக கல்லறைகள் தோண்டப்பட்டு உடல்கள் எடுக்கப்படும் முறையையும், மீண்டும் மறு அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் சொல்லும் ஷாநவாஸ் சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகக் கல்லறைத் தோட்டங்களையும் குறிப்பிடுகிறார். கட்டுரையை வாசித்து முடிக்கும் போது வாய்ப்பிருந்தால் பயத்தைத் துறந்து சிங்கப்பூரின் கல்லறைப் பக்கம் போய் வரும் ஆவல் வந்து விடுகிறது.
பெயரில் என்னய்யா இருக்கு? என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெயரில் தான் பல சூட்சுமங்களும், அடையாளங்களும் மறைந்திருக்கின்றன என்ற தகவல்களால் “சொல்ல மறந்த பெயர்கள்” என்ற கட்டுரை விரிகிறது. தன் நண்பர்களை, தன் நிறுவன வாடிக்கையாளர்களைப் பெயரிட்டு அழைக்கும் போது ஏற்பட்ட சில சுவையான சம்பவங்களால் சூழ் கொண்டிருக்கும் இக்கட்டுரை இப்படியான நாடுகளுக்குப் பணிகள், தொழில் நிமித்தம் செல்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று.
இத்தாலி என்றால் நாடு என்று நமக்குத் தெரியும். அதைத் தவிர்த்து அந்தச் சொல்லை வேறு எதற்கும் பயன்படுத்தியிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இத்தாலி என்ற சொல்லை I Trust And Love You (ITALY) என்று தன் காதலியிடம் நேசத்தை வெளிப்படுத்தும் குறியீடாகப் பயன்படுத்திய ரசீத் என்ற மாணவனைப் பற்றியும், தான் சந்தித்த சில மனிதர்கள் பற்றியும் பேசும் “நிஷான் இச்சிபாங்” கட்டுரை நம்மைச் சுற்றி உள்ள மனித மன நிலைகளின் அலைவரிசையை கவனித்தலைக் கவனப்படுத்துகிறது.
கழிவறைகளைப் பற்றி இன்று உலகம் முழுக்க முழக்கங்கள் கிளர்ந்தெழத் தொடங்கி விட்டன. இந்தியா போன்ற நாடுகளில் வீட்டுக்கொரு கழிவறை கட்டாயம் என்று நாட்டின் பிரதமரே அறிவிக்கும் சூழலில் கழிவறைகள் குறித்து இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் “வெறுப்பின் அடையாளங்கள்” என்ற கட்டுரை மிக முக்கியமான ஒன்று. சில நாடுகளில் கழிவறைக்குச் செல்வதும், பராமரிப்பதும் வெறும் தனிமனித குறியீடாக இல்லாமல் சமூகத்தின் குறியீடாக மாறியிருப்பது போல உலகம் முழுக்க மாற வேண்டும் என்ற தன் விருப்பத்தை சொல்லும் ஆசிரியர் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் கழிவறைகள் சார்ந்து காட்டும் அக்கறைகளைப் பட்டியலிட்டிருப்பதை வாசிக்கும் போது நம்மை அறியாமலே நம் கண்கள் நம் வீட்டுக் கழிவறையை ஒரு முறை மெல்ல நோட்டமிட ஆரம்பித்து விடுகிறது.
இரவெல்லாம் சுற்றித்திரிந்து விட்டு காலையில் நம் வீட்டு வாசலில் ”நமஸ்தே சாப்” எனக் கூறிய படி வந்து நிற்கும் கூர்க்காக்கள் சிங்கப்பூரில் எப்படி வாழ்கிறார்கள், சிங்கப்பூர் காவல் படையில் அவர்களின் பங்கு, அதற்கு அவர்கள் தேர்வு செய்யப்படும் விதம், சிங்கப்பூரின் கடந்த கால கலவரங்களில் கூர்க்கா படையினரின் பங்களிப்புகள் என அவர்களைப் பற்றிப் பேசும் “மானெஷாவின் தொப்பி” கட்டுரையில் ஆண்டு தோறும் நிரப்பப்படும் 200 பணியிடங்களுக்கு 20,000 பேர் வரை போட்டியிடுகின்றனர் என்ற புள்ளி விபரமும், அவர்களுக்கு குடியுரிமையோ, நிரந்தரவாச உரிமையோ தரப் படுவதில்லை என்பதோடு பணி ஓய்விற்குப் பின் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதோடு ஓய்வூதியம் மாதா மாதம் அங்கேயே அனுப்பித் தரப்படுகிறது என்ற தகவல்களும் ஆச்சர்யம் தருகின்றன.
நூலாசிரியர் ஷாநவாஸ் சிங்கப்பூரில் தொழில்கள் சார்ந்து நிறைய அனுபவம் பெற்றவர். அங்கேயே சொந்தமாகத் தொழில் செய்து வருபவர் என்பதால் கட்டுரைகளில் தன் சொந்த அனுபவங்களின் வழி கற்ற பாடங்களை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆங்காங்கே கோடி காட்டிய படியே செல்கிறார். ஒரு பணியாளன் தன் சக பணியாளனிடமிருந்து எப்படி வேறுபடுகிறான்? அதற்காக எத்தகைய வழிமுறைகளைக் கையாள்கிறான்? என்பதை உச்சி முகர்ந்து சொல்லும் ”கதவு திறந்தது” கட்டுரை யோசிக்க வைக்கிறது. எவ்வளவு தூரம் யோசிக்கிறோம் என்பதைக் கணக்கிட கட்டுரையின் இறுதியில் ஒரு கணித அளவீடையும் சொல்லி இருக்கிறார்.
சிங்கப்பூர் என்றவுடன் அங்கு சென்று வந்தவர்களுக்கு “பளிச்” சென நினைவில் வரக்கூடிய விசயங்களில் 4D (நான்கு நம்பர்) என்றழைக்கப்படும் குலுக்கல் லாட்டரிச் சீட்டும் ஒன்று. ”தீர்க்க தரிசனம்” என்ற கட்டுரை நாள்காட்டி சார்ந்து பயணித்து 4D எடுக்க டிப்ஸ் கொடுக்கும் “பை சைக்கிள் அப்பே” என்ற மனிதரின் மூலமாக காலம் காலமாக அங்கு வாழும் மக்களிடம் இருக்கும் நம்பிக்கையை சுவராசியமாகவும், நகைச்சுவையாகவும் நமக்குச் சொல்கிறது.
தான் படித்த கல்லூரி, பயணித்த இடங்கள், வாசித்த நூல்கள், சேகரித்த தகவல்கள், பொருத்தமான கவிதைகள், திரட்டிய புள்ளி விபரங்கள், தரவுகள் ஆகியவைகளிலிருந்து நனவு தேசமான சிங்கப்பூர் பற்றித் தான் சொல்லப் போகின்ற தகவல்களுக்குப் பொருத்தமானவைகளை எல்லாக் கட்டுரைகளிலும் பயன்படுத்தி இருப்பதால் சம்பந்தப்பட்ட தகவல்கள் குறித்துக் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அருணகிரிநாதரும் கூட தன் கருத்தால் ஒரு கட்டுரையில் வந்து போகிறார்!
சிங்கப்பூரின் அரசியல், நிர்வாகத்திறன், மக்களின் வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு, அங்கிருக்கும் இடங்கள், நூலகங்கள், முதலில் தொடங்கப்பட்ட தமிழ் இதழ்கள், தமிழர்களூக்காக சீனர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கை, சிங்கப்பூரின் படைப்பாளுமைகள், சுற்றுச்சூழல், சிங்கப்பூர் கொண்டிருக்கும் எதிர்காலத் திட்டங்கள், இணையத்தையும் இன்றைய சூழலையும் தனக்குச் சாதகமாக்கி முன்னேறும் வேகம் என எல்லா விசயங்களின் வழியும் பயணிக்கும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளைத் தன்னைச் சந்தித்த, தான் சந்தித்த மனிதர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற, அறிந்து கொண்ட தகவல்களாலும், அத்தகைய மனிதர்களாலும் முடித்திருக்கிறார்.
வழக்கமான நூலில் இருந்து மாறுபட்ட ஒரு நூலின் வழி சிங்கப்பூர் என்ற தேசத்தை அறிந்து கொள்ள வைத்த இந்த ஐம்பது கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும் போது எப்படி ஷாநவாஸிற்கு மட்டும் இப்படியான நண்பர்கள் கிடைக்கிறார்கள்? அண்டை வீட்டுக் காரர்கள் உள்ளிட்ட எவரிடமும் இணக்கமாகப் பழகவும், அவர்களுக்குள் இருக்கும் அறிந்திராத – அறிய வேண்டிய தகவல்களை அடையாளம் காணவும், வாங்கவும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என்ற இரண்டு கேள்விகள் மிஞ்சுகிறது!
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனக்கான இரையைத் தேடிச் செல்லும் ஒரு வேட்டை நாய் போல பத்திரிக்கையாளனான நான் ஷாநவாஸைக் கண்டுபிடித்தேன் என நூலின் பின்னட்டையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் நினைவு கூர்ந்திருப்பதைப் போல தகவல்களைத் திரட்டவும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளவும் ஒரு வேட்டை நாய் தனக்கான இரையை தேடிச் செல்வது போலத் தேடித் திரட்டி அதை சுவராசியம் குன்றாத வகையில் ஷாநவாஸ் கொடுத்திருக்கிறார். மனிதர்களை நகலெடுக்காத வகையில் அவர்களாகவே நூல் முழுக்க இயங்க விட்டிருக்கிறார். விமர்சனமற்ற உரையாடல்கள் மூலமாக அவர்களை நம்மருகில் அழைத்து வந்து காட்டுகிறார்.
நூலில் இடம் பெற்றிருக்கும் கணக்கெடுப்பு சார்ந்த புள்ளி விபரத் தகவல்களை குறைத்திருக்கலாம். நாடுகள் பற்றிய தகவல்கள் தாங்கி வரும் நூல்களில் இந்த முயற்சி புதிது. இந்த நூலின் எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் சிங்கப்பூரை, அங்குள்ள மக்களை அறிந்து கொள்வதற்கான தகவல்களை நீங்கள் பெற முடியும் என்ற உத்திரவாதத்தைத் தரும் நனவு தேசம் சிங்கப்பூர் எழுத்திலக்கியத்தில் ஒரு ஆவணப்பதிவு. நூல்களின் வழி ஆவணமாக்கும் முயற்சியை ஷாநவாஸ் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு படைப்பாளியாய் அது அவரின் கடமை.