எனது ஜென் கதைகள் புத்தகத்தின் முதன் பதிப்பு வெளிவந்து சுமார் 10 வருடங்களைக் கடந்திருக்கும்.
இன்றைய உலகம், இந்த இடைக்காலத்தில், மிகவும் மாறிவிட்டது. அதிகரித்த மக்கள் தொகை. வளமான வாழ்க்கைக்குத் தேவையான அதிகரித்த வாய்புகள். அதோடு வாழ்வின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு விதத்தில் நாமும் நமது நாடும் வளர்கிறது என்று மகிழலாம்.
ஆனால் அதிகரித்த எதுவும் தன்னோடு ஆபத்தையும் அழிவையும் கொண்டு வருவது இயற்கைதானே?
வாழ்வின் வேகம் நம் அனைவரையும் வெவ்வேறு அளவுகளில் பாதித்திருப்பதில் வியப்பு எதுவும் இல்லை.
முக்கியமாக அதிகப்படியான மக்கள் பல புதுவகை நோய்களால் அவதியுருகிறார்கள். புதிய குற்றங்கள் நிகழ்கின்றன. பழைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஏழைகள் அதிக ஏழ்மையைத் தழுவுகிறார்கள்.
மதங்கள் பிறந்தன:
அதையெல்லாம் இயற்கையின் நிகழ்வுகள். போகட்டும். அறிவியல் முன்னேற்றம் மனிதர்களை படிப்படியாக பின்னோக்கி தள்ளுகிறதே! பொருள் வேட்டையில் மனிதத் தன்மையை அல்லவா இழந்து வருகிறார்கள்.
மனிதரிடையே மனிதத் தன்மையை வளர்த்து, அவற்றை நிலை நிறுத்த மகான்கள் தோன்றி மதங்களைத் தோற்றுவித்தார்கள். அவர்களில் யாருமே, நம்மை போல குறுகிய மனம் கொண்டவரில்லை. இவர்கள் அனைவருமே மாமனிதர்கள். இறைவனின் தூதுவராக மக்கள்
அவர்களைக் கண்டார்கள். அதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
தன்னலம் எதுவும் இல்லாமல், நம் போன்ற மூடர்களுக்கு நல்லதொரு வாழ்வு அமைத்துத் தர உழைத்தவர்கள். அறிவில் மிக உயர்ந்தவரான இவர்களை, ஞானிகள் என்று அழைத்தால் அது மிகவும் குறைவு.
தடம் புரண்ட மதங்கள்:
இன்றோ, அதே மதங்கள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள ஒரு கருவியாக மாறியிருக்கிறது. எந்த ஒரு மதமும் மனிதர்களிடையே நட்பையும் நல்லுறவையும் ஏற்படுத்தாவிட்டால் அப்படிப்பட்ட மதங்கள் காலாவதியாகி விட்டதாகக் கொள்ளலாம் இல்லையா?
காலியான பெருங்காயப் டப்பியில் எஞ்சியிருப்பது என்ன? பெருங்காய வாசனை மட்டும்தானே? இன்று மதங்களில் எஞ்சியது என்ன? மதச் சின்னங்கள், விதவிதமான விழாக்கள், கொண்டாடங்கள் மற்றும் ஆலயங்கள். ஒருவர் இன்ன மதத்தை சாந்தவர் என்று குறிக்கும் பெயர்களும் உண்டு. இல்லாதது, மதத்தை அமைத்துத் தந்த மகான்கள் செய்த போதனைகள். என்றோ அவர்கள் அமைத்துத் தந்த வாழ்கைப் பாதை இன்று, காண்ட்ராக்டர் போட்ட சாலை போல, குண்டும் குழியுமாக உள்ளது.
மதங்களில் பெயரில் எத்தனை அழிவுகள்? எத்தனை கொலைகள் மற்றும் கொள்ளைகள்? வரலாற்றின் பக்கங்களில் மதத்தின் பெயரில் மக்கள் அடைந்த துன்பங்கள்தன் அதிகம்.
வாசகர்கள் ஒப்புக் கொண்டாலும் மறுத்துவிட்டாலும், நாமெல்லாம், சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்கள். அதனால் பெறும் அறிவிலும் மிகக் குறைந்தவர்கள.
நமது வாழ்க்கை நடந்தேறுவது பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் சில சுயனலமிக்க மனிதர்கள் மக்களின் நம்பிக்கையை முதலீடாக வைத்து மக்களை அழிவுப்பாதையில் வழி நடத்துவது தொடர்கிறது.
இன்றும் என்றும், நல்ல மதத் தலைவர்கள் எவருமே, மற்ற மதங்களின் மீது காழ்ப்போ அல்லது தாழ்வான எண்ணங்களைக் கொள்வதும் இல்லை. மற்ற மதங்களில் நம்பிக்கை கொண்ட மக்களை துன்புருத்தத் தூண்டுவதில்லை.
மதங்களும் சிந்தனையும்:
பொதுவாக மதங்களில் யாரும் கேள்விகள் எழுப்புவதில்லை. அதற்கு பதில்கள் எவரும் சொல்வதில்லை. (அதிகம் சிந்திக்க இயலாத பெரும் பகுதி மக்களான நமக்கு மதங்கள் காட்டும் வழிகள் மிகவும் அதிகமாகன பலன் தரும்).
புத்த மதத்தின் ஒரு பிரிவான ஜென் புத்திசம் (பௌத்த மதம்), இதற்கு ஒரு விதிவிலக்கு. மனிதனை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது மத விளக்கங்களும், அறிவுரை மற்றும் கதைகள்.
கதைகளைப் படிக்கும்போது வாழ்க்கையில் நாம் அறிந்திராத பல கோணங்கள் தெரியவரும்.
ஒரு மதத் தலைவர் மக்களை நல்ல வழியில் நடத்திச் செல்கிறார்களா, இல்லையா என்று அறிவது எப்படி? எந்த ஒரு மதத்தைப் பற்றியும் மற்ற மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? மதத் தலைவர்கள் மக்கள் நல்வாழ்வுக்கு எப்படியெல்லாம் உதவுகிறார்கள்? உண்மையான மதத்தலைவர்களின் தன்மை என்னவாயிருக்கும்? இதை வைத்து நாம் நாம் சுலபமாக அறிந்து கொள்ளலாம். இவற்றை இங்கே படிக்கலாம்.
இந்தப் புத்தகம் கதைகள் நிரம்பியது. இந்தக் கதைகளைப் படித்தால் மட்டும் போதாது. அவற்றை அலசி, சிந்தித்து, அதில் புதைந்துள்ள அறிவை தேடி எடுத்து, மனதில் இருத்தி, தினசரி வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
நடராஜன் நாகரெத்தினம்