"

கதை 01.

விவேகம் உள்ள ஒரு விவசாயி

farmer 1

வள்ளுவர் என்ன சொன்னார்? விவசாயியை, அதாவது, உழுதுண்டு வாழ்பவரையே வாழ்பவராகக் கொள்ள வேண்டும். மற்றவர் எல்லோருமே இவர்கள் பின்னால், அதுவும் கை கட்டி (மரியாதையாக) சென்றிட வேண்டும் என்றாரா இல்லையா?

ஆகவே இந்தப் புத்தகத்தில் ஒரு விவசாயியை முதல் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவோம்.
உலகின் எந்த மூலையில் சென்றாலும் ஒரு அலுவலகத்தையோ அல்லது சமுதாயத்தையோ எடுத்துக் கொண்டால் அதில் கெட்டவர்கள் பொல்லாதவர்கள், அயோக்கியர்கள் என்று ஒரு சிலரை தனியாக அடையாளம் தெரியும். அதே போல மிக மிக நல்லவர்கள் என்ற வகை மக்கள் குறைந்த அளவில் காணப்படுவார்கள்.

நமது கதாநாயகன் அப்படிப்பட்ட நல்ல வகை மனிதரில் ஒருவர். நல்லவருக்கு அடையாளம் என்னவாயிருக்கும்? அவர்களை விடாது தொடரும் இரண்டு அயிட்டங்கள். முதலில் எளிமை. அதன் பின்னால் தொடர்வது வறுமை.

நல்ல உள்ளம் கொண்ட இந்த விவசாயிக்கு இந்த உலகிலே உள்ளது. மனைவியைத் தவிர, சிறிய அளவிலான விவசாய நிலம், ஓரே ஒரு மகன், ஒரே ஒரு குதிரை ஆகியவை மட்டுமே. தம்மை அடுத்தவருக்கு தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வார். மற்றபடி எந்த வம்புக்கும் போகமாட்டார். கிராமமே, அவரைப் புகழ்ந்தது. இப்படியாகவே வருடங்கள் ஓடின.

ஒரு நாள், அவருடைய குதிரையும் ஓடிவிட்டது.

மனிதனுடன், நிலத்திலும் மற்றும் மனித வாழ்க்கையில் பல்வேறு பரிமாணங்களில (நம்ம ஊரில் மாடுகளை போல வேறு நாடுகளில்) குதிரைகள், உழைக்கின்றன.

கொடுப்பதை (கிடைப்பதை) உண்டு இயன்ற வரை உழைத்து, கிழடு தட்டியதும் கசாப்புகாரன் கடையில் கண்டதுண்டமாக மாறி, பலருக்கும் பசியைப் போக்கும், இந்த வாயில்லாப் பிராணி வகையில் ஒன்றே ஒன்று நமது கதாநாயகனுக்கு சொந்தமாக உண்டு.

அந்த ஒன்றும் இல்லை என்றால் அடுப்பில் பூனை குடியேறும் அவலமான நிலை.

கிட்டத்தட்ட முதுமையை எட்டிய நம் கதாநாயகன் வீட்டு அடுப்பில், திடீரென்று ஒரு நாள் ஒரு பூனை குடியேறப் பார்த்தது. அதாவது, குதிரை ஓடிப்போய் விட்டது. குதிரை உழைத்துக் களைத்ததோ, இல்லை அதற்கு விடுதலை தாகம் எடுத்ததோ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. ஓடிப் போனது மட்டும் தான் எல்லாருக்கும் தெரிந்தது. குதிரை ஓடிய வேகத்தை விட, அதிக வேகத்தில், அந்தச் செய்தி கிராம மக்களிடையே பரவியது.

கிராமங்களில் காணும் ஒரு நல்ல பழக்க-வழக்கம் என்னவென்றால், மக்கள் நரகங்களில், மன்னிக்கவும், நகரங்களில் வாழும் மக்களைப் போல இல்லாமல், அடுத்து வாழும் மக்களின் சுக-துக்கங்களில் முழுமனதுடன் பங்கெடுப்பார்கள்.

அண்டை வீட்டுக்காரரான நம் கதாநாயகனின் குதிரை காணாமல் போன செய்தி கேட்டு கிராமத்தார் வருத்தத்துடன் கூடினார்கள்.

முதியவர் ஒருவர் முன்வந்து, நமது கதாநாயகனை அணுகி, நண்பரே, கடவுள் உங்கள் மீது, ஏன் கோபம் கொண்டாரோ தெரியவில்லை.

இல்லாமையின் எல்லையில் அல்லாடும் உங்களை கடவுள் ஏன் சோதிக்கின்றாரோ? கவலை வேண்டாம். எங்களாலான உதவியும் ஒத்துழைப்பும் எப்போதும் உங்களுக்கும் உண்டு என்று சொன்னார். அதைக் கேட்ட விவசாயியோ, பதிலாகச் சொன்னார்: ‘அதனால் என்ன பார்க்கலாம்’.
மிகப் பெரிய இழப்பிலும், கலங்காத உள்ளத்துடன், தலை நிமர்ந்து நிற்கும் நண்பனைப் புரிந்து கொள்ள இயலாமல் வியந்தனர் பலர்.

சில நாட்கள் நகர்ந்தன. கிராமத்தில் மீண்டும் பரபரப்பான செய்தி ஒன்று பரவியது, ‘ஓடிப் போன குதிரை திரும்பி வந்தது‘. அது மட்டுமில்லை, ‘ஓடிப்போன குதிரை தன்னுடன், காட்டுக் குதிரைகள் நான்கையும் உடன் அழைத்து வந்துள்ளது‘.

(காட்டுக்குப் போன கிராமத்துக் குதிரை, காட்டுக்குதிரைக்கு என்ன சொல்லியிருந்தால் அந்த பரிதாபத்திற்குரிய குதிரைகள் காட்டை விட்டு விட்டு கிராமத்திற்கு வந்திருக்கும்?

அழகான, அமைதியான, மாசற்ற சூழ்நிலைகள் கொண்ட கிராமங்களை விட்டு நெரிசல், சுகாதாரம் இல்லாத குடியிருப்புகளும் கொண்ட நகரங்களுக்கு ஓடி வருகிறோமே. அது போலத்தானே இதுவும்!!!)

வழக்கம் போலவே, நல்லதையும் பொல்லாததையும் ஒன்று போலவே மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் நேசமுள்ள, கிராம மக்கள் நம் கதாநாயகனுக்கு வாழ்த்து தெரிவிக்கக் கூடினர்.

ஓடிப்போன குதிரை, திரும்பி வந்தது மட்டுமல்லாமல், இலவச இணைப்பாக உடன் வந்த நான்கு காட்டுக் குதிரைகள் கடவுளின் கருணையினால் வந்த ஒரு பெரும் செல்வம் அல்லவோ’ என்று

மனமாற வாழ்த்தினார்கள், கிராமத்து நன்மக்கள்.

அதிகக் குதிரைகளின் பலத்தினால் விரைவில் மிகப் பெரிய விவசாயியாக வளர்ந்து பின்னர் பெறும் செல்வந்தர்களாகவும் நண்பர் மாறப் போவது உறுதியென உறுதி கூறினார்கள் நண்பர்கள். வாழ்த்தி விடை பெற்ற கிராம மக்களுக்கு, நாயகன் சொன்னதென்னவோ,

‘அதனால் என்ன, பார்க்கலாம்’.

எதிர்பாராது வந்த செல்வத்திலும் நிலை தடுமாறாத மனிதனை வியந்து, நகர்ந்தது அந்த நல்லவர் கூட்டம்.

நாட்களும் நகர்ந்தன. விவசாயியின் வாலிப மகன் ஒருவன், ஓடிப்போன குதிரையுடன் இலவச இணைப்பாய் வந்த காட்டுக் குதிரை ஒன்றை பழக்க முயற்சித்தான்.

குதிரையின் மீது, அதன் விருப்பம் இல்லாமல் ஏற, மனித வாசனையைத் துளியும் அறிந்திடாத அந்தக் காட்டுக் குதிரை பயந்து ஓட்டமெடுத்தது. வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாத நிலையில் விவசாயியின் மகன் கீழே விழுந்தான். அவன் காலும் ஒடிந்தது.

கீழே விழுந்த விவசாயியின் மகனின் கால் ஒடிந்த செய்தி, மீண்டும் ஒரு காட்டுத்தீயைப் போல, ஊரெல்லாம் பரவிட்டது. மீண்டும் அண்டை அயலார் கூடினார்கள்.
இச்செய்தி கேட்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்த நண்பர்களுக்கு கிடைத்த பதில் என்னவோ வழக்கம் போல:“
‘அதனால் என்ன, பார்க்கலாம்’.

நகரமுடியாத நிலையில் உள்ள மகனுடன் விவசாயி வாழ்ந்திட, நாட்கள் மட்டும் விரைவில் நகருகிறது. ஒரு நாள் திடீரென கிராமமே அதிர்ந்தது. காரணம் அரசாங்க அலுவலர் பலர் பட்டாளத்திற்கு ஆள் சேர்க்க இளைஞர்களைத் தேடி,அக்கிராமத்திற்கு வந்துள்ளதே.

வாலிபர் பலர், போருக்குப் பின் திரும்பி வருவேனோ, என்று கேள்விகள் தலையில் சுமந்து, கனத்த இதயத்துடன் அரசாங்க அலுவலருடன் சென்றனர். காலொடிந்த, விவசாயின் மகள் மட்டும் சுமையற்று சுகமாக கிராமத்தில் தங்கினான். கால் இல்லாதவருக்கு பட்டாளத்தில் என்ன வேலை?
இது கண்ட கிராம நன்மக்கள் நண்பனுக்கு நல்வாழ்த்து கூற, நண்பன் பதில் சொன்னான் எப்போதும் போலவே,

“அதனால் என்ன, பார்க்கலாம்”.

பின் குறிப்பு :

சிறியதோ, பெரியதோ – தோல்விகண்டு துவளும் மனிதரகள் எத்தனை பேர்? எல்லா வெற்றிக்கும், தானே காரணம் என்று ஆணவம் கொண்டு, தோற்றவரை எள்ளி நகையாடித் திரியும் மனிதரகள் எத்தனை? வெற்றிக்கு – நான் தான் காரணமென்றால் – தோல்விக்கும் தானே?
மூட மனிதர்களே, மனம் தெளிவீர்.

வெற்றிக்கு முயற்சி அவசியம். தோல்விக்கு நமது முயற்சி குறைவும் ஒரு காரணம்.
நமது அறிவும், சக்தியும் மேலும் நமது முயற்சியும், வெற்றி அல்லது தோல்விக்கு அனேக கோடி காரணங்களில் அடக்கம். அதாவது, சில கோடி காரணங்களில் சில.
அதை உணராது, வெற்றியில் குதித்தும், தோல்வியில் துவண்டும் திண்டாடும் தீவட்டித் தடியர்களே – விழித்துக் கொள்ளுங்கள்.

வெற்றியோ, தோல்வியோ எதுவும், வெகுநாள் நிலைப்பதில்லை. மனிதன் தன் முயற்சியில் தொடர்ந்து நீடித்தால் வெற்றி எப்போதாவது வந்து அடையும். வென்றோம் என்ற திமிரும், தோற்றோம் என்று துயரமும் கொள்ளாதவர் உண்மையிலேயே அதிக வெற்றிகளைக் குவிப்பார்கள்.

கீதை காட்டும் பாதையும் ஆதுதான்.

கதை 02.
இது ஒரு பூனைக்கதை

sto 2 cat

நமது அன்றாட வாழ்க்கையில் கணக்கில் அடங்காத பூனைக் கதைகள் இருக்கும். முதலில் புத்த அறிவாலயம் ஒன்றில் வசித்த ஒரு பூனைக் கதை ஒன்றைப் படிக்கலாம்.

தினந்தோறும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குருவும் அவருடைய மாணவர்களும், அறிவாலயத்தின் தங்கும் விடுதியிலிருன்து புறப்பட்டு தியானம் செய்ய, அங்குள்ள தியானமண்டபத்திற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் அங்குள்ள சமையல் அறையில் வளர்ந்த

பூனை ஒன்று, பெரியதாக வளர்ந்து அவ்வப்பொழுது பெரியதாக சத்தம் எழுப்பத் தொடங்கியது.
இந்தப் பூனை போடும் சப்தம் தியானத்திற்கு இடையூறு செய்யவே, குரு, அப்பூனையை தொலைவில் உள்ள மரத்தில் கட்ட தன் மாணவன் ஒருவனுக்கு உத்திரவிட்டார்.

அடுத்த நாள் முதல், தியானத்திற்கு செல்வதற்கு முன், அந்தப் பூனையைப் பிடித்து தொலைவில் இருந்த ஒரு குறிப்பிட்ட மரத்தில் கட்ட முடிவு செய்தார்கள். (தியானநேரம் முடிந்த பின் பூனை அவிழ்த்து விடப்படும்).

அன்று முதல் தியானத்திற்கு செல்லும் முன்பே பூனையை ஒரு குறிப்பிட்ட மரத்தில் கட்டுவது வழக்கமாகிவிட்டது.

மாதங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டோடின. அந்த குருவும் மறைந்தார். பூனையும் இறந்தது. சில மாணவர்கள் குரு ஆனார்கள். புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். சில நூறு வருடங்களும் கழிந்தன.

அந்த அறிவாலயத்தில் பூனை ஒன்று வளர்க்கப்பட்டுமுன்ன, தியானம் தொடங்கும் முன்பாக, தவறாமல் குறிப்பிட்ட அந்த மரத்தில் கட்டப்படும்.

பூனையின் மகிமையையும், அந்த மரத்தின் மகிமையும், ஒரு பூனையை குறிப்பிட்ட மரத்தில் கட்டிவிட்டு பின்னர் தியானம் செய்யும்போது கிடைக்கும் அபூர்வ தியான பலன்களையும் விவரித்து பல குருமார்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய ஓலைச் சுவடிகள் இருப்பதாக யாரோ சொல்லக் கேள்வி.

பின் குறிப்பு

மனிதன் பயங்கரமானவன்.

நினைத்த மாத்திரத்தில் கடவுளையும் உருவாக்குவான். தான் இறபின்னும், வேண்டாத, கேடுகள் விளைவிக்கும் பல செயலையும், தவறான விளக்கங்களும் பல நூற்றாண்டுகள் நிலைக்கும்படியும் செய்வான். மேலே கண்ட பூனை விவகாரம் இந்த வகையில் சேரும்.
இது போன்ற பல ஆதாரமற்ற நம்பிக்கைகள் மற்றும் நமது கலாசாரத்தில் ஊறிய அபத்தங்கள் கணக்கில் அடங்காது. உதாரணத்திற்கு வேறு ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

கதை 03
ஒற்றை பிராமணன் எதிரே வந்தால்,
அது ஒரு அபசகுனம்.

ஒரு மனிதன், ஒரு தெரு வழியே, சென்று கொண்டிருந்தான்.

அவன் செல்லும் வழியில், ஒரு வீட்டில், அந்த வீட்டின் தலைவர், மிக முக்கியமான வேலையாக வெளியில் செல்லத் தயாராகிறார். சகுணம் பார்க்க, அவருடைய மனைவி வீட்டுக்கு வெளியே வந்து தெருவை ஒரு நோட்டம் விடுகிறாள்.

மேலே சொன்ன அந்த ஒற்றை மனிதன்- அந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தவர் அந்த அம்மாளின் கண்ணில் படுகிறார். அவர் ஒரு பிராமண குலத்தைச் சார்ந்தவர் என்பதையும் ஒரு நொடியில் புரிந்து கொள்கிறாள்.

வெளியில் செல்லத் தலைப்பட்ட மனிதருக்கு தடை எழுப்பப்படுகிறது. அவர் இப்போது பயணம் தொடங்கினால் சென்ற காரியம் நடைபெறாது என்று ஒரு ஆழமான நம்பிக்கை. இதைக் கண்டுபிடித்த் அதிபுத்திசாலி யார் என்று தெரியவில்லை.

இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியாது. மொத்தத்தில், இது ஒரு சகுனத்தடை.

நான் ஊகித்து அறிவது என்னவென்றால், வைதிகர்கள், அல்லது புரோகிதர்கள் என்பவர்கள் வேதம் கற்று, அதன் மூலம் சாதாரண மக்களுக்கு சடங்குகள் என்போமே, அதைச் செய்யும் (மத அடிப்படையில் வாழ்வு மற்றும் சாவில் உதவும்) தொழிலில் ஈடுபட்டு இருக்கும் (புரோகிதர்கள், பிராமணர்கள்) மனிதர்கள்.

வேதம் பயிலாமல் கிளார்க் அல்லது அக்கௌண்ட்ண்ட் மற்றும் வேறு பல தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிராமணன் வேறு.

மேலே சொன்ன இல்லத்தரசியின் கண்ணில் மாட்டியவர், சகுனத்தடையாய் வந்தவர். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

திருமணம் போன்றவைகள் சுபகாரியம் என்கிறோம் சாவு மற்றும் அது சம்பந்தமான காரியங்களை ஈமச்ச்டங்கு அல்லது அசுபகாரியம் என்கிறோம்.

சுபகாரியங்களில் இரண்டும் அதற்கு மேற்பட்ட புரோகிதர்கள் பங்கேற்பார்கள். அசுப காரியங்களுக்கு ஒரே புரோகிதர் செல்வார்.

ஒரே புரோகிதரை காணும் போது, அந்தச் சுற்று வட்டாரத்தில் ஏதோ ஒரு சாவு நிகழ்ந்திருப்பது தெரிய வரும். நல்ல ஒரு குடிமகன், உடனே கண்டறிந்து, உதவிக்கு செல்வானேயானால், அவர் திட்டமிட்ட பயணம் தடை பெறும்.

தன் காரியத்தில் மட்டுமே குறியாக இருப்பவனை சகுணம் என்ன செய்யும்?

நமது கலாசாரத்தில் நுழைந்து நம்மிடம் சேர்ந்த நம்பிக்கைகள் எல்லாமே தவறானது இலலை. நம்பிக்கையுடன் ‘ஏன்?‘ என்ற கேள்வியையும் அதோடு சிறிதளவு சிந்தனையையும் இணைத்து ஓடவிடுங்கள். தவறாக அறிந்த எல்லாமே பறந்து விடும்.

கதை 04.
சாதுவைத் தேடி

gnani hut

வாழ்க்கை என்கிற வண்டி நன்றாக ஓடும் வரை, நான்தான் அறிவாளி. நானே கடவுள் என்றெல்லாம் மார் தட்டுவோம். அவ்வப்போது வாழ்க்கைப் பாதையில் காணும் குண்டு குழியில் சிக்கி ஓட்டத்தில் தடை வரும்போது, கோவில், வேண்டுதல், சாமியார் என்று தடம் மாறி விடுவோம் இல்லையா?

உங்களையும் என்னையும் போல சாதாரணர் ஒருவர் வாழ்க்கை என்ற பயணத்தில் திக்கு முக்காடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சாது ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர்ஒரு ஞானி என்றும் அவரால் மனிதர்களில் துயரங்களை போக்கும் சக்தி உண்டென்றும் கேள்விப்பட்டிருந்தார். அவரைக் காண ஒரு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

மலைக் குன்றின் உச்சியில் ஒரு குடிசை, குடிசையில் மேலே குறிப்பிட்ட மகான் அதாவது ஒரு சாமியார் / சாது வசிப்பதாகக் கேள்வி. தேடி அலைந்து குடிசையை அடைந்தவரை எளிமையான தோற்றம் கொண்ட ஒருவர் எதிர் கொண்டார்.

அவரிடம், (அவரைத் வேலையாள் என்று தவறாக இனம் கண்டு) தான் சாதுவைக் காண வந்து இருப்பதாகத் தெரிவித்தார். எதிர் கொண்ட வேலையாளோ, புன் முறுவலிடன், அமைதியாக பதிலாகக் கூறினார்;

ஒவ்வொரு ஆடம்பரம் இல்லாதவரிலும், மிகச் காதாரணரிலும், சாதுவை (சாமியாரை அல்லது கடவுளின் தூதுவரை) காண்பாயாக. அதையும் விட சிறந்தது ஒன்று உண்டு. ஒவ்வொரு மனிதரின் மனதிலே நல்லவர், கெட்டவர், பேராசை கொண்டோர், மாயை விலகிய ஞானிகள், கொள்ளைக்காரர்கள், மிருக குணங்களையும், தெய்வங்களைப் போன்ற மிக நல்ல குணங்களைக் கொண்டவர் என்று வகை வகையாக பல வித குணங்களும் உண்டு.

உன்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒரு சாதுவும் அதில் உண்டு. அந்த சாதுவைத் தேடிக் கண்டுபிடி என்றார். அப்படிச் செய்தால், எந்த துன்பம் (காரணம்) உன்னை இங்கு கொண்டு வந்ததோ, அது தானாகவே மறைந்து விடும்.

தெரிந்து கொண்டார் நம் நண்பர் . எதிர் கொண்டவர் வேலையாள் அல்ல. தான் தேடி வந்த அந்த சாது தான் என்று.

பின்னுரை

இப்போதெல்லாம் ஊருக்கு ஊர் போலி சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள் என்றால், தவறு நம் ஜனங்கள் மீது தான். படிக்காமலேயே பரிட்சையில் பாஸ் செய்ய. உழைக்காமல் (லாட்டரி போன்ற) குறுக்கு வழியில் லட்சம் லட்சமாகப் பணம் சம்பாதிக்க, நமது மக்கள் உருவாக்கிய தீய சக்திகளில் ஒன்று தான், இந்த போலி சாமியார்கள்.

பொதுமக்களைப் பொறுத்த வரையில் சாமியார் என்பவர் யார்? நம்மைப் போன்ற சாதாரணரைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவர்கள், மனிதனால் அடைய முடியாதவைகளை எளிதில் அடையச் செய்ய இவர்களால் முடியும்.

ஒரு சில ரூபாய் செலவில், சில வாழைப்பழங்களில், பக்தர்களின் கூழைக் கும்பிடு ஆகியவற்றில் திருப்தி அடைந்து பல ரூபாய் பலன்களை அள்ளி அளிப்பவர். அப்படி யாருமே இல்லை.
உண்மையான சாதுக்கள், சாமியார்கள் ஆகியோரை எப்படி இனம்கண்டு கொள்வது? மிகச் சுலபம். மக்களை குறுக்கு வழியில் நடக்க ஆசைக் காட்ட மாட்டார்கள். பண வசூல் இருக்காது.

போலிச் சாமியார்கள் மக்களின் பேராசைகள் மற்றும் பலவீனங்களில் எதிரொலியே. மோசக்காரர்களைப் பேராசை பிடித்தவர்கள்தான் உருவாக்குகிறார்கள்.

உண்மையான ஞானிகள், எல்லா உயிர்களின் நன்மைக்காக, மனிதனை நல்வழிப்படுத்த வழி செய்வார்கள். மனிதர்கள் மட்டுமே அல்லாது மற்ற ஜீவராசிகளுடனும் கூட, இயற்கை என்னும் செல்வத்தை இனிதாகப் பகிர்ந்து இனிதாக வாழ வழி வகுக்கும் நல்ல மக்கள். இந்த வகையில் நன்மக்கள் பலர் இந்த உலகில் பிறந்திருந்தாலும் சிலர் கடவுளின் சேவகனாய், தொண்டனாய், தூதனாய்த் தோன்றி மதங்களை உருவாக்கினார்கள்.

கீழான எண்ணம்கொண்ட சிலர், இந்த மதங்களையே ஆயுதமாக ஏந்தி, மக்கள் மாக்களாய் (மிருகங்களாய்) மாற்றி, மிருகங்களிலும் கேவலமாக, தன்னைத் தானே, தன் இனத்தையே அழிக்கும் வகையில் செயல்படும் காலகட்டத்தில் நாம் இன்று வாழ்கிறோம்.

நல்ல சாமியாரின் தன்மைகளை கண்ட நாம், நல்ல குருமார்களின் தன்மையும் காண்போம். கீழே தந்துள்ள கதை நம்மையும், மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் மூட மனிதர்களின் அறிவுக் கண்களைத் திறக்கட்டும்.

கதை 05.
மத நல்லிணக்கம்
முன்னுரை

மூட மனிதர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவதற்கு, இன்ன தான் காரணம் என்று வேண்டு மென்பதில்லை. கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் நடக்கும் போர்கள், ஜாதி, இன, மத கலவரங்களால் ஏற்படும் மனித சாவுகள், ஆராத காயங்கள், தொலையாத துயரங்கள் எத்தனை எத்தனை!!

ஒரு மதத்தை சேர்ந்தவன் மற்றொரு மதத்தைப் பற்றி தாழ்வான எண்ணம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி கொள்வது ஏன்? உண்மையில் இவனுக்கு தான் பின்பற்றும் மதத்தைப் பற்றித் தெரியாது. தான் வெறுக்கும் பிற மதத்தையும் பற்றி எதுவுமே தெரியாது.

அறிவில்லாத மக்களுக்கு தங்களது தாங்க முடியாத வயிற்றுப் பசிக்கு, ஆற்றாமைக்கு, மதம் ஒரு சாக்கு. அடிதடிக்கும் அழிவுக்கும் இனம், சாதி, மதப்பிரிவுகள் அளவில்லாத சந்தர்ப்பம் தருகின்றன.
ஆனால் கற்று உணர்ந்தவன் தன் மதம் மட்டுமல்ல மற்ற மதத்தின் சிறப்புகளையும் பாராட்டத் தவற மாட்டான்.

மதங்கள் மனிதனின் மேன்மைக்காக மேன்மக்களால், தீர்க்க தரிசிகளால், தியாகிகளால், நல்ல மனிதர்களால், அறிவாளிகளால் மனித இனத்தின் மேல் அன்பு கொண்டவர்களால் உருவாக்கப்பட்டன.

தனி மனிதனோ, தன் மதி இழந்து, எடுப்பார் கைப் பிள்ளையாக மாறி, அதே மதத்தின் பெயரால், மற்ற மனிதர் மீது அன்பு காட்டாது, விலங்காய் மாறி, பிறர்க்கு தீங்கிழைத்து, தானும் அல்லலுற்று மடிவதைக் காண்கிறோம். கீழே கண்ட கதைகள் மூலம் மனம் தெளிவீர்.

மதங்கள் எதற்காக யாரால் எந்த சூழ்னிலைகளில் உருவாக்கப்பட்டன என்று வரலாற்றை புரட்டினால் தெரியவரும். இன்றும் அன்றும், எந்த கால கட்டத்திலும், அறிவில் குறைந்த மக்கள் மிக அதிகமாக இருப்பதுண்டு. இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு, ஏழ்மையில் தள்ளப்பட்டு அறியாமைன் காரணமாக பலவித தொல்லைகளுக்கு உள்ளாவதுண்டு. இவர்கள் நலமாக வாழ வழிகளை அறிவில் சிறந்த சிலர் உருவாக்கியது தான், மதப்பாதைகள்.

புத்தர், யேசு, தீர்க்கதரசியார் போன்ற எண்ணிக்கையில் அடங்காத ஞானிகள், யோகிகள், மற்றும் சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் அடக்கம். மதங்கள் மனிதனின் மனதை தூய்மை ஆக்குவதற்கே!

கதை 06.
பைபிளும் ஜென்ஆசிரியரும்

story 6 bible

ஒரு முறை ஜென் ஆசிரியர் காசான் என்பவரின் மாணவர் ஒருவர் டோக்கியோவிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்தார். அங்குள்ள பலருடன் உரையாடி பின்னர் ஒரு பைபிளைப் பெற்று தான் பயிலும் ஜென் ஆன்மீகக் கல்விக் கூடத்தை அடைந்தார்.

மாணவர், தன்னுடன் கொண்டு வந்த பைபிளை குருவிடம் காண்பித்தார். பிறகு தன் குருவை, தாங்கள் எப்போதாவது பைபிளை படித்திருக்கிறீர்களா என்று வினாவினார். . இல்லையே. தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அதிலிருந்து ஏதாவது உனக்குப் பிடித்ததைப் படித்துச் சொல்கிறாயா என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர் பைபிளைப் பிரித்து, சைண்ட் மேத்யூவிலுள்ள மலை மீது அளித்த புத்திமதிகளைப் படிக்கத் தொடங்கினார். கிறிஸ்துவின் ‘வயலில் வளர்ந்த அல்லிகளை’ப் பற்றி கூறியவைகளைப் படித்துவிட்டு, மேலும் படிப்பதை நிறுத்தினார்.

ஆசிரியர் காசான் மிகுந்த நேரம் சிந்தனையில் ஆழ்ந்து, பின்னர் பேசத் தொடங்கினார்.

இந்த வார்த்தைகளை எவர் சொன்னாரோ அவரை, அவர் பெயரால் நான் அறியேன். ஆனால் நிச்சயமாகச் சொல்வேன் அவர் ஒரு மகான். அவர் ஒரு மிகப் பெரிய மேதாவி. ஞான ஒளிவு பெற்றவர். மாணவனே, இவ்வளவு நாளாக நான் உனக்குச் சொல்ல முயன்ற அத்தனை செய்திகளையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார் இந்த மகான்.’ இதைப் போலவே வேறு ஒரு நிகழ்ச்சி.

கதை 07.
ஏசுவும் தீர்க்கதரிசியாரும்.

prophet

புகழ் வாய்ந்த ஜென் குரு ஒருவரைக்காண வெளி நாட்டிலிருந்து கல்லூரிப் பேராசிரியர் குழாம் ஒன்று வந்திருந்தது, ஜென் ஆசிரியரைப் பலரும் பல்வேறு கேள்விகள் கேட்க, ஒருவர் கேட்டார். ‘உங்களுக்கு ஜீஸசைத் (இயேசு கிறிஸ்துவை) தெரியுமா?’

‘அடியேன் அந்தப் பெயரை என்றுமே கேட்டதில்லையே’ என்று பதிலளித்தார் ஜென் ஆசிரியர். தாங்கள், அந்தப் பெயருடையவரைப் பற்றிச் சிறிது விளக்கமாகச் சொல்வீர்களேயானால், நான் பயனடைவேன் என்றார்.

கேள்வி கேட்டவர், விளக்கமாக, மக்களுக்காக ஏசு பிரான் செய்த தியாகங்களையும் பைபிளில் உள்ள சில முக்கிய உபதேசங்களையும் குறிப்பிட்டார்.

இவற்றை கூர்ந்து கவனித்த ஜென் ஆசிரியர். இந்தப் பெயரால், இவர் இன்னார் என்று எனக்கு தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அவருடைய செயல்களைக் கொண்டும், இவரையும் இவரைப் போன்ற எண்ணங்களும் செயல்பாடுகளும் உள்ளவர்களை

மகான்கள் என்று அறிகிறோம். புனிதர்களான இவர்களை நாங்கள், புத்தர்கள் என்று குறிப்பிடுவோம்.

மற்றொருவர் குறுக்கிட்டு, உங்களுக்கு தீர்க்கதரிசி முகம்மது அவர்களைத் தெரியுமா என்று கேட்டர். ஜென் ஆசிரியர், ‘இந்த பெயரையும் நான் இன்றுவரை கேள்விப்பட்டதில்லை’ என்று. பதிலளித்தார்.

மூட. நம்பிக்கை மற்றும் அப்போதைய அராபிய தேசத்தில் மலிந்திருந்த சமூகக் கேடுகளையும், அதனால் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விவரித்து, தீர்க்கதரிசியார் அந்த மக்களை நல்வழிப்படுத்த, மேன்மை அடையச் செய்ய, எவ்வாறு உழைத்தார். அதன் காரணமாக எவ்வாறெல்லாம் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அவர் தன் வழியைப் பற்றியோர்க்கு அளித்த குரான் என்னும் வாழ்க்கைப் பாதை என்பதைப் பற்றியெல்லாம் விவரித்தார்.

அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட ஜென் ஆசிரியர், முன்னால் சொன்னதையே திரும்பவும் சொன்னார்.

முன்னவரைப் போலவே இவரும் ஒரு மகான், இப்படிப் பட்ட மகான்களை, புனிதர்களை, ஞான ஒளிவு பெற்றவர்களை, நாங்கள் புத்தர் என்போம்.

பின்னுரை

பிற மனிதரை, அவன் அறிவைக் கொண்டு மதிப்பது என்பவை, நமது மானிடர்கள் தனதாக்கிக் கொள்ளாத ஒரு பெரும் குறைபாடு. தான் உச்சாணிக் கொம்பில் ஏறி நின்று மற்றவரை உயரம் காணாமல், சமதரையில் நின்று பார்த்தால் நமது தாழ்மையும் மற்றவரின் உயர்வும் புலப்படும்.

மதம் என்று கொண்டால், எதுவுமே கெட்டவை அல்ல, எல்லா மதங்களுமே மக்களை மேம்படச் செய்வதற்காக மிகச் சிறந்த அறிவும் அன்பும் கொண்ணவர்கள் பல தியாகங்களைச் செய்து, உண்டாக்கியவை.

மதத்தின் பெயரால் உண்டாகும் சண்டை சச்சரவுகள், தனிப்பட்ட நபர் அல்லது சிறியதொரு கூட்டத்தாரின் சுயநலத்திற்காக , மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு நடத்தப்படும் வியாபாரப் பொருள்களாக மாறிவிட்டன.

விஞ்ஞானம் முன்னேறி, மனிதன் விண்வெளியில் பவனி வந்து உலகத்தின் நீள அகலங்களைச் சுருக்கி விந்தைகள் நடத்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஜாதி, மத பூசல்கள் அதிகரித்துள்ளது எதைக் காட்டுகிறது என்றால், இப்போதும் அஞ்ஞானிகள் , அறிவிலிகள் தான் அதிகம் பேர் இன்னும் புவியில் வாழ்ந்து வருவதை.

கதை 08.
பொதுவான ஒரு எச்சரிக்கை

ஜென் கதைகள் – மற்றும் கிழக்கத்திய ஆன்மீக சம்பந்தமாக உள்ள கதைகளையும் அவர்கள் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை படிக்கும் போது சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

(1) அறிவும் பேச்சும்; அதிகம் பேசுபவர்கள், விஷயம் குறைவாக உள்ளவர்கள் (மாற்றாக) அதிகம் கற்றவர் என்றும் குறைவாகவே பேசுவார்கள்.
(2) பயணங்கள், சேருமிடம் இல்லை; ஜென் குருவோ அல்லது வேறு எந்தப் பாதையைச் சார்ந்தவராக இருந்தாலும்,, எவரும் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றவர்கள் இல்லை.
புலன்களுக்கு அப்பால் உள்ள அண்டத்தையும், கடவுளையும், உடல்களை ஆட்டிவைக்கும் ஆன்மாவையும் ‘தெளிவாக அறிதல்’ என்ற இலக்கை முன்வைத்து வாழ்க்கைப் பயணம் செய்பவர்கள்.
(3) மாணவர் ஒரு வழித்துணை; ஒருவர் அறிவு என்ற பாதையில் எத்தனைத் தொலைவு நடந்திருக்கிறாரோ, அத்தனை அளவு, அறிவில் முதிர்ச்சி பெறுகிறார். மக்கள் முன், குரு என்ற பெயருடன் நடமாடுபவர், பெரும்பாலும், அறிவுப் பாதையில் பயணம் செய்ய வழித்துணை தேடுபவராக இருக்கலாம். தான் கற்றவற்றைப் பிறருடன் பகிர்ந்து தனது அறிவை வளர்க்க முயல்பவராக இருக்கலாம்.
(4) உஷார் ; நான் எல்லாம் கற்றவன் என்ற தோற்றமோ, கடவுளின் பிரதிநிதி என்ற விளம்பரம் செய்து கொண்டாலோ அவர் நிச்சயமாக ஒரு ஏமாற்றுப் பேர்வழி என அறிந்து கொள்ளலாம்.
(5) அதிகரிக்கும் அறிவும் குறைந்துவரும் பேச்சும்; அறிவுப ¢பாதையில் செய்யும் பயணத்தில் ஒருவர் இலக்கை நோக்கிப் பயணம் தொடரும் போது மிக அதிக அளவில் உள்ள பேச்சு, காணப்படும். இலக்கை அடைந்ததும், அல்லது இலக்கின் மிக அருகாமையில் சென்றதும் பேசுவது நின்று விட்டு, செயல்பாடு தீவிரமாகும்.

கதை 09.
விருப்பம் நிறைவேற….
(என்ன செய்யவேண்டும்?)

மாற்றில்லா விருப்பம்: வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிப்பவர்கள் சிலரையும் காண்கிறோம். அதோடு, தவறாமல், எப்போதும் தோல்விகளைத் தவிர ஒன்றும் அறியாத அப்பாவிகளும் குவிந்து இருப்பதை நாம் அறிவோம்.

இந்த வெற்றி தோல்விகளுக்கு பல காரணங்களைச் சொல்லலாம். வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி மிகக் குறைவு. அந்த இடத்தை, அவநம்பிக்கையும், வெற்றிபெற வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாமையும் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

வெற்றிபெற மிக மிக அவசியமானது, ‘மாற்றில்லா, விருப்பம்.’
நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கே தெரியாது என்று சொன்னால் எவரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அது நூற்றுக்கு நூறு உண்மை.

பொதுவாக, நமது விருப்பங்கள் மாறும் தன்மை உள்ளவை. மாற்றில்லா விருப்பம் என்றால், எதை விரும்புகிறோமோ அதைத் தவிர வேறெதுவும் (நாம் விரும்பிய பொருள் அல்லது பதவியோ, அதை விட அதிக மதிப்புள்ள வேறு ஏதாகிலும்) மாறுதலாக கிடைக்குமானால், அதை ஒதுக்கித் தள்ளும் மனோபாவமும் நமக்கு வந்துவிட்டால் ‘”மாற்றில்லா விருப்பம்’ கொண்டவராக நம்மை நாம் கருதிக் கொள்ளலாம். அந்த மனப்பக்குவத்தை அடைந்து விட்டால் நாமொரு அரை முனிவராக மாறிய மாதிரிதான்.

மாற்றில்லா விருப்பம், நமக்கு வெற்றிகிட்டும் என்ற நம்பிக்கையும், வெற்றிகிட்டும் வரை விடா முயற்சியும் தரும். இந்த முயற்சியின் விளைவாக வரும் எந்த இடயூரை எதிர்கொள்ளும் மனத் திடமும் கிடைக்கும். அது வந்து விட்டால், நமக்கு என்ன வேண்டுமென்று நமக்குத் தெரியும் என்றும் கொள்ளலாம். இந்த மனப்பான்மையை வளர்த்தக் கொண்டால், வேண்டியதை அடையலாம்.

நமது கோரிக்கைகளும் விருப்பங்களும், ம வலிமை இல்லாதது, சிறிய எதிர்ப்பு வந்தாலேயே இலக்கத்தை விட்டு விட்டு ஓடிவிடுகிறோம். என்ன நம்ப முடியவில்லையா? ரிஷிகள் முனிவர்கள், தான் நினைப்பதை அடைவதில் வேறு ஒரு வித்தையும் இல்லை என்றால் நம்புவது கடினம்.

பல்லாண்டுகள் தவம் இருந்து அவர்கள் பெறுவது இந்த மனப்பான்மைதான் என்று சொன்னால் அது மிகுதி ஆகாது. நாம் மாற்றில்லா விருப்பத்தினால் விரும்பியதை அடையலாம் என்ற நம்பிக்கையும் அவசியம். நமது பெரும்பான்மையான தோல்விகளுக்கு காரணம் நம்பிக்கை இன்மை.

அருள் உலகத்திலும் பொருள் உலகத்திலும் பொதுவான பிரச்சனைகளில் மிகக் கடினமான ஒன்று ‘நம்பிக்கை கொள்ளுதல்’. நமது விருப்பங்கள் எத்தனை ‘நலிந்தது’ என்று தெரிய வேண்டுமா, படியுங்கள் மேலே.

கதை 10.
கடவுளைக்காண விரும்பியவன்

wanted see god

ஒரு ஆற்றில் கரையில் ஒரு முனிவர் தவம் இருந்தார். அப்போது ஒரு சிறு வயதினன், முனிவரை நமஸ்கரித்து, நான் உங்கள் மாணவராக் ஆக வேண்டுமமென்று விரும்புவதாகத் தெரிவித்தார். உனக்கு என் மாண வராவதில் குறிக்கோள் என்ன என்று கேட்டார் முனிவர்.

‘கடவுளைக் காண’ என்று பதிலளித்தார், இளவயதினன்..

முனிவர், அந்தச் சிறுவனைப் பிடித்து, ஆற்றின் நடுவே கொண்டு சென்றார். அங்கு முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் தலையைப் பிடித்து தண்ணீரில் அழுத்த, சுவாசிக்க இயலாமல், துடித்தான் அந்த புதியவன். சில வினடிகள் கழித்து, முனிவர் பிடியைத் தளர்த்த, தலையை வெளியே எடுத்தவனிடமும், இப்போது உனக்கு என்ன வேண்டும் என முனிவர் கேட்க, சிறுவன் சொன்னான்.
                                                        ‘காற்று’

இப்போது சென்றுவிட்டு, எப்போது, தீர்மானமாக, ‘கடவுள் தான்’ வேண்டுமென்று தோன்றுகின்றதோ,  அப்போது என்னிடம் வா, என்று விடை கொடுத்தார் முனிவர்.

கதை 11.
திடுக்கிட

ஒரு புத்த ஆலயத்தில் / ஆன்மிகப் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் பயப்படும் ஒரு குரு இருந்தார். அவர் அப்படி ஒன்றும் கொடுமையானவர் இல்லை. அவரது உறுதியான வெளித் தோற்றம் ஒரு காரணமாக இருக்கலாம். அவரை எந்த சக்தியும் அசைக்க முடியது என்ற தோற்றமும், அசாத்திய மனதிடமும் உள்ளவர் என்பதும் கண்ட மாத்திரத்திலே எவருக்கும் ஒரு எண்ணம் எழும்.

சுருக்கமாகச் சொன்னால், வெளிப்படையாக, அவர் ஒரு இரும்பு மனிதர் போலத் தோற்றம் அளிப்பார். எந்த ஒரு சாதாரண மனிதருக்கும், திடீரென, எதிர்பாராத வகையில், சப்தம் எழுமானால் அதிர்ச்சியடைவார்களில்லையா?

மாணவர்கள் சிலர், இந்த குருவை எப்படியாவது அதிர்ச்சி அடைய வைப்பது என்று தீர்மானித்து, சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தார்கள். (நமது மனப்போக்கே விசேஷமானது, நாம் ஒருவருக்கு கெடுதல் செய்வதற்கு மற்றவர் நமக்கு ஏதாவது ஒரு கெடுதல் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. நமக்கு, நம்முடைய பலமும் பிறரின் பலவீனமும், போதுமான காரணங்கள் தான்.)

ஒரு நாள், இந்த குரு மிகவும் சூடா ந டீ கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக தமது இருக்கையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

இதுதான் தக்க சமயம்மென்று, இந்த மாணவர் கூட்டம், திடீரென்று பலமாக சப்தம் எழுப்ப, குரு அதனால் எந்த வித பாதிப்பும் இன்றி, தன் வழி நடந்து தன் அறையை அடைந்தார். கையில் உள்ள டீ கோப்பையை மேசையின் மீது வைத்தது தான் தாமதம். தீடீரென்று அலறினார். கதை இங்கே முடிகிறது.

பின்னுறை

குரு அலறாமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. அலறிவிட்டார்.
சப்தம் கேட்டவுடனேயே அலறி இருக்க வேண்டும். அதுவும் இல்லை. மிகவும் தாமதித்துதான் அலறினார்.

இந்த கதை சொல்லும் பாடம்தான் என்ன?

குருவும் சாதாரண மனிதர்தான். ஆனால் ஜென் வழிப் பயிற்சியின் பயனாக, அதிர்ச்சியின் பின் விளைவுகளைச் சிறிது நேரம் பொறுத்துக் கொள்ள உதவுகிறதோ?

கதை 12.
விதியை வென்ற மதி

coins

முன்னுரை
முதலாம், இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த பல சம்பவங்கள் வியப்பூட்டும் தன்மையுள்ளவை. மிகக் கடினமான, முற்றிலும் இயலாது என்ற சூழ்நிலையில், சிறிய படையை நடத்திச்சென்று, வெற்றி பெற்ற சாகசங்கள் பல. இவை நவீன நிர்வாக இயககம் தொடர்பான புத்தகங்களில் இடம்பெறுகின்றன.

அப்படிப்பட்ட கதை ஒன்றை இப்போது பார்ப்போமா?

ஒரு சிறிய ஜப்பானிய படைப்பிரிவு, எண்ணிக்கையில் மிக அதிகமான எதிரியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. நடடத்திச் சென்ற தளபதியோ, எப்படியும் எதிரியை முறியடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தார். படையினருக்கோ, வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கையில்லை.

ஜப்பானியப் படைப் பிரிவு இப்போது ஒரு கோவில் வழியாகச் சென்று கொண்டிருந்தது.

தளபதி தனது படையினரை அங்கேயே நிறுத்தினார். இறைவன் விருப்பம் என்ன என்று பார்த்துவிட்டு, எதிரியுடன் மோதுவதா இல்லையா என்று முடிவு செய்யலாம் என்று தன் படையினருக்குக் கூறினார். படையினரும் இதற்குச் சம்மதித்தனர்.

தன் பையில் இருந்த ஒரு காசை எடுத்து, பூவா தலையா என்று சுண்டிவிட, தலை வந்தால் இறைவனின் சித்தம் நாம் எதிரியுடன் மோதுவது என்று கூறினார். படையினர் இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். தலையும் வந்தது, ஜப்பானியப் படை போரில் வெற்றியும் பெற்றனர்.

யுத்தம் கழிந்து சில மஅந்பதம் கழிந்து உபதளபதி ஒருவர் தளபதியுடன் உரையாடினார். வெற்றி பெற்ற அந்தப் போரைப் பற்றி குறிப்பிட்டு, அதன் வெற்றி விதியின் வசம் நிகழ்ந்தது என்றார்.
விதியை வெல்ல எவராலும் முடியாது என்றும் அவர் கூற, அதை மறுத்த தளபதியோ பாதுகாத்து வைத்திருந்த, தன் அரிய பொக்கிஷமான அந்தக் காசைக் காண்பித்தார். அதன் இருபக்கமும் இருந்தது தலை தான்.

கதை 13.
வித்தியாசமான சாதுக்கள்.

ஆன்மீகப் பாதையில் பற்பல பாதைகளும், பல்வேறு வகைகளும் உள்ளன. எல்லாப் பாதைகளும் சேருமிடம் ஒன்றுதான் என்பது காலம் காலமாக பல பாதைகளில் உலகின் பல பாகங்களைச் சேர்ந்த மேதைகள் கண்கூடாக கண்டறிந்த உண்மை.

எப்பாதையிலும் உள்ள எல்லோரும் ’அனைத்தும் கற்றவரல்லர், அவரவர் செய்யும் தீவிர உழைப்பின் விளைவாகவும், அவருடைய குருவின் அறிவையும், மற்ற இதர பல காரணங்களால் அவர்கள் முன்னேற்றம் காண்கின்றனர்.

அறிவு அல்லது ஆன்மிகப் பாதையில் செல்லும் போது வழித்துணைக்காகவே சிலரை, அதே ஆர்வம் உள்ள, சிலரைத் தேர்ந்தெடுத்து மாணவர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். பிறர்க்கு சொல்லிக் கொடுத்தால் தன் அறிவு அதிகமாகும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. பல தலைகள் ஒரு தலையை விட பலம் தரும் என்பது, நவீன நிர்வாக விஞ்ஞானம் திட்டவட்டமாக கூறும் ஒரு உண்மை.

ப்ரைன் ஸ்டார்மிங் (Brain storming) டீம் வொர்க் (Team work) போன்ற உத்திகள் .நிர்வாகத்தின் உயர்ந்த அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை பங்கேற்கும் ஒரு பண்பாடு உலகெங்கும் உபயோகத்தில் உள்ளது. முன்னேறும் நாடுகள், முக்கியமாக ஜப்பானில், செயல்படுவது இந்த அடிப்படையில்தான்.

உலகில் எல்லா ஆன்மிகர்களும் பெரும்பாலான குரு என்பவர். மாணவர்கள் புடை சூழ ஒரு கூட்டமாக, அருள் அல்லது அறிவுப் பாதையில் செல்வார்கள். இந்த வகை ஆன்மிகர்களில் சிலர், தன்னந்தனியே செல்பவர்களும் உண்டு.

அருட் பயணத்தின் போது தன்னை நாடிவருவோர்க்கு அறிவை ஊட்டுவதும் மக்களுக்கு பயன் தரும் (மருத்துவம் முதலான) நல்ல பணிகளைச் செய்வது மிக உயர்ந்தது என்ற கருத்து உள்ளவர்கள். (கர்ம யோகிகள்- கடமை வழி செல்பவர்கள்)

தான் அறிந்ததை, தன் அறிவின் பலனை மகிழ்ச்சியுடன் விரும்பிய எல்லொருக்கும் வழங்கத் தயாராக உள்ளவர்கள் இம்மாமனிதர்கள், தன்னைச் சோதனை செய்வதையும் அடாவடி செய்பவரையும் இனம் கண்டு கொண்டு அவர்களுக்கு உதை வழங்குவதையும் வழக்கமாகக் கொண்ட வேறு சிலரும் உண்டு.

கதை 14.
டீ டீச்சர்

tea ceremony

முன்னுரை

நமது ஊரில் டீ சாப்பிடுவது ஒரு சாதாரணமான விஷயம்.

டீ கடைகளில் டீ தயாரிப்பவரை டீ மாஸ்டர் என்று அழைப்பதுண்டு. அவர் டீ தயாரிக்கும் காட்சியே ஒரு சுவாரசியமானது. ஒரு கப் டீயை-சுமார் 100 மில்லி லிட்டெர் டீயை – டம்ளலிருந்து டவராவிற்கு ஊற்றும்போது அதை ஒரு மீட்டர் டீயாக மாற்றி, நுரை பொங்கச் செய்து தருவார்.

கப்பிலிருந்து சாசரில் ஊற்றி, சர் சர் என்று அடுத்தவன் காதைத் துளைக்கும் வகையில் உறிஞ்சும் வகைகளை தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. (இந்தியாவில் கப்-சாசர் உபயோகிக்கும் முறையை, அதைக் கண்டுபிடித்வன் பார்த்தாலோ, தவறாது தற்கொலை செய்து கொள்வான்).

(சாசர் என்பதற்குப் பதிலாக சர் சர் என்று சொல்லலாமே!)

ஆனால் ஜப்பானில் டீ அளிப்பது (வ்) என்பது விசேஷமானது. மேலும், முற்றிலும் வித்யாசமானதும் கூட. ஜென் மாஸ்டர் ஹகுயின் (ஏதடுதடிண) தனது மாணவர்களுக்கு, அவர் அறிந்த ஒரு பெண்மணி, டீ செரிமெனியில் (கூஞுச் இஞுணூஞுட்ணிணதூ) தேர்ந்தவர் என்றும் அவர் ஒரு டீக்கடை  நடத்தி வந்தாரென்றும் குறிப்பிட்டார்.

அப்பெண்மனி ஜென் குறித்து மிக ஆழ்ந்த அறிவு படைத்தவரென்றும் குறிப்பிட்டார். அனேக மாணவர்கள், குரு குறிப்பிட்ட அப்பெண்மணியைப் பற்றி விவாதித்த பின்னர், தாமே நேரில் கண்டுவரத் தீர்மானித்தனர்.

அப்படி அம்முதிய அம்மணியைக் காணச் சென்றவரில் இரு வகையானவர் இருந்தனர். அம்மணி வழங்கும் டீயை அனுபவிக்க வந்தவர் ஒரு தரத்தினர். மற்றவர், அவரின் ஜென் அறிவு எத்தனை என்று பரிசோதிக்க வந்தவர்.

இரு தர மனிதர்களையும் வெகு தூரத்திலிருந்தே இனம் கண்டறியும் அந்த அம்மணி, முதலாவது வகையினருக்கு மிக அருமையாக உபசரித்து, அன்புடன் டீ வழங்குவார். இரண்டாவது வகையினரைக் காணும்போது, ஒளிந்திருந்து அடி வழங்குவார் இப்பெண்மணி. தப்பித்தால் போதுமென்று ஓட்டம் பிடிக்கும் இரண்டாம் வகையினரில் பலமான அடி படாது தப்பியவர் பத்தில் ஒரிருவர்தான் என்றால் மிகையாகாது.

கதை 15.
மாணவரே இல்லாத ஆசிரியர்

teacher in class room

இது டாங்க்  வம்சத்தைச் சேர்ந்த ஒரு ஜென் ஆசிரியர் ஹொடீ பற்றிய ஒரு விசித்திர வரலாறு. அவர் தன்னை ஜென் ஆசிரியரென்று பறைசாற்றிக் கொள்ளவோ தன்னைச் சுற்றி மாணவர்களை சேர்த்துக் கொள்ளவோ செய்ததில்லை.

மாறாக சாக்குப்பை ஒன்றை சுமந்து செல்வர். அதில் குழ்ந்தைகளுக்காக, பழங்கள், இனிப்புகள் முதலியவைகளைக் கொண்டு வருவார். வீதியில் தன்னை சூழும் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுத்து மகிழ்வார்.

தன்னைக் காணவரும் ஜென் பக்தர்களிடம் ஒரு காசு கொடு என்று கேட்பார். ஒரு முறை ஒரு ஜென் மாஸ்டர், கேட்டார். ஜென் வழியின் மகத்துவம் என்ன என்று. (பதிலாக) மௌனமாக ஹொடீ தனது முதுகில் சுமந்து கொண்டிருந்தமூட்டையைக் கீழே இறக்கி, பிறகு இறக்கி வைத்த மூட்டையை மீண்டும் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு திரும்பிப்பாராமல் நடப்பார்.

கேட்டவருக்குப் புரிந்தது. உங்களுக்கு?

கதை 16.
மூன்று பதிப்புகள்

learning two children with books

வித்தியாசமான சாதுக்களின் பட்டியலில் டெட்சுகென் குறிப்பிடத் தகுந்தவர். அவர்கள் ஊரில் அவரை எப்படி அழைப்பார்களோ தெரியவில்லை, நமக்கு இது போதுமென்று கருதி கதையை மேலே பார்ப்போம்.

புத்த மதத்தைச் சார்ந்த விளக்கம் அடங்கிய புத்தகம் ஒன்று சீன மொழியில் மாத்திரம் இருந்தது. இந்தச் சாது, இப்புத்தகத்தை ஜப்பானிய மொழியில் பிரதிகளாக பதிப்பிக்க விரும்பினார். அப்போதிருந்த அச்சடிக்கும் முறையின்படி பார்த்தால் இது ஒரு மிகப் பெரிய கடினமான காரியம்.

இப்போதும் நல்ல விஷயங்களைச் சொல்லும் என்போன்ற எழுத்தாளர்களுக்கு பதிப்பகத்தார் கிடைப்பது கடினமாக இருப்பது போல, அவர் காலத்திலும் இருந்தது போலும்.

தாமே பல இடங்களுக்கும் சென்று தனி நபர்களிடமிருந்து இப்பணிக்காக நிதி வசூல் செய்தார். மிகச் சிலரே கணிசாமான தொகையைக் கொடுத்து உதவினார்கள். கொடுத்தவரில் பெரும்பாலோர் சில்லறைகளையே கொடுத்தனர். (எக்காலத்திலும் சில்லரை மனிதர்கள் அதிகம் காணுவார்கள் போலும்).

இப்படி வசூல் செய்து போதுமான பொருள் சேர்க்க பத்து வருடங்களாயின. (நல்ல வேளை தற்போதய பொருளாதார ரீதியில் பத்து வருடங்களில் இந்தப் பணம் பல முறை தனது வாங்கும் சக்தியை (பண வீக்கம்) இழந்திருக்கும். பத்து வருடமென்ன, அவர் தம் வாழ்நாளில் பதிப்பிக்க வேண்டிய பணம் என்றுமே கிடைத்திருக்காது).

தன் பணியைத் தொடங்க நினைத்திருந்த பொழுது, உஜி என்ற ஆற்றில் வௌந்ளம் பெருக்கெடுத்தது கரையோரம் வாழ்ந்த மக்களுக்கு பொருட் சேதமும் பின்னால் பஞ்சமும் தலை விரித்தாடியது.

பத்து வருஷமாக் மிகந்த கஷ்டத்துடன் பணம் சேர்த்து, தான் தொடங்க இருந்த பதிப்பிக்கும் பணியைக் காற்றில் பறக்கவிட்டார்.

சேகரித்திருந்த பணத்தை வௌந்ளத்தினால் உண்டான பிணி மற்றும் பசியின் கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்ற உபயோகப்படுத்தினார்.

இந்தப் பிரச்சினை ஒரு பாடாகத் தீர்ந்ததும், திரும்பவும் பணம் சேர்க்கும் முயற்சியில் மேலும் பல வருடங்கள் ஈடுபட்டார். போதிய பணம் சேர்ந்த தறுவாயில் நாடு முழுவதும் ஒரு தொற்று நோய் பரவ, தான் சேர்த்திருந்த பணம் முழுவதும் மக்கள் துத்நலனுக்கு பயன்படுத்தினார்.

மூன்றாம் முறையாக அவர் நிதி திரட்டத் தொடங்க, சுமார் இருபது வருடங்கள் கழித்து அவர் தம் குறிக்கோள் நிறைவேறியது.

அப்போது அவர் உருவாக்கிய புத்தகம் க்யொடொ என்ற இடத்திலுள்ள ஒபாகு அறிவாலயத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது..

பிற்காலத்தில் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லும் போது, பெற்றோர்கள் கூறினர். டெட்சுகென மூன்று புத்தகங்ககளை (பதிப்புக்களை) உருவாக்கினார். அதில் முந்தைய இரண்டும் கண்ணுக்குத் தெரியாதவை ஆனாலும் மூன்றாவதைவிட மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று.

ஏனென்று புரிகிறதா? மனிதாபிமானத்தைவிட அரியதான கடவுள் வழிபாடோ அறிவு வழங்குதலோ இல்லை.

கதை 17.
ஆபத்தான சில செயல்பாடுகள்

முதிர்ந்த ஜென் மாஸ்டர்கள் தன் அறிவினால் மிக உயர்ந்தவர்கள். தன்னை அணுகுபவர்களைக் கையாளும் விதமே ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். குறைந்த வார்த்தைகளில், மிகச் சிறிய நேரத்தில், சொல்ல வேண்டியதை பச்சை மரத்தில் அடித்த ஆணி போல, கேட்பவர் மனதில் பதியச் செய்வதில் திறமை வாய்ந்தவர்கள்.

சில சமயம் அவர்களின் பேச்சும் செயல்பாடுகளும் அவர்களைபேராபத்தில் கொண்டுவிடுமோ என்ற பயம் அடுத்து உள்ளவர்க்கு எழுவதில் அதிசயம் எதுவும் இல்லை.
இந்த வகையில் சில கதைகளைப் பார்ப்போம்.

கதை 18.
சுவர்க்கமும் நரகமும்

zadik

மிக மிக உயரமான, முரட்டு உருவமும் தோற்றமும் உள்ள ஒரு ஜப்பானியப் போர்வீரன் ஒரு சிறிய உருவமுள்ள புகழ்பெற்ற ஜென் மாஸ்டரை அணுகி நரகம் சுவர்க்கம், பாவ புண்ணியங்கள் போன்ற அறிவை அடைய எண்ணினான்.

ஜென் மாஸ்டரைக் கண்டார் போர் வீரன். நரகம், சுவர்க்கம் பற்றி தெரிவிக்கும்படி, போர்வீரனுக்கே உண்டான முரட்டு அதிகாரத் தொனியில் கோரினான்.
அந்த முரட்டு வீரனின் முகத்தை சற்று நேரம் பார்த்து விட்டு சிறிது மௌனத்தில் ஆழ்ந்தார், ஜென் முனி.

திடீரென்று, நீ ஒரு அசிங்ககம். உன்னிடமிருந்து சகிக்க முடியாத நாற்ற வருகிறது. உன் போர்வீர சமுதாயத்திற்கே நீ ஒரு களங்கம் என்றெல்லாம் சரமாரியாகத் திட்டினார் ஜென் மாஸ்டர். என் கண் பார்வையிலிருந்து உடனே போ, உன்னை இன்னும் சிறிது நேரம் கூட பார்க்கச் சகிக்க முடியாது. என் கண் பார்வையிலிருந்து உடனே சென்று ஒழி என்றெல்லாம் கூறினார்.

போர்வீரன் உடனே ஆத்திரமடைந்தான். முகம் கோபத்தில் சிவந்தது. மிகுந்த கோபத்தினால் போர்வீரன் பேச்சிழந்தான். கோபம் கொப்பளிக்க தன் வாளை உருவினான். தன் தலை மேலாக வாளைப் பிடித்து, ஜென் குருவை வெட்டித் தள்ளத் தயாரானான்.

ஜென் குரு சொன்னார் “‘அதுதான் நரகம்’ என்று போர்வீரன் திடுக்கிட்டான். தனக்கு அறிவு புகட்ட தன் உயிரையே பணையம் வைக்கத் தயாரான ஜென் குருவின் அன்பும் , மேன்மையும் போர்வீரனை தத்தளிக்க வைத்தது.

வாளைத் தாழ்த்தினான். விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சி அவன் உடல் முழவதும் வியாபித்தது. திடீரென்று, அவன் மனம் அமைதி அடைவதை உணர்ந்தான். இப்போது ஜென் மாஸ்டர் சொன்னார், இதுதான் ‘”சுவர்க்கம்’ என்று.

கதை 19.
பேசாமல் இருப்பது எப்படி?
முன்னுரை

sto 19 candle

நாம், நமது குறிக்கோள்களில் வெற்றி பெறாதது எதனால்?

இலக்கு ஒன்று குறித்தாலும் நமது செயல்பாடுகள் அதன் இலக்கை நோக்கிச் செல்வதில்லை. இலக்கை மறந்து, மனம்போன போக்கில் நாம் செல்வது ஒரு முக்கிய காரணம்.

ஜென் மாஸ்டர்களோ, வேறெந்த ஆன்மிகப் பாதையில் செல்லும் குருவோ, தன் மாணவர்களைப் பயிற்சி செய்விப்பது மாணவரிடயே பரவலாக் காணப்படும் இது போன்ற குறைகளை நீக்குவதாகும்.

தேர்ந்தெடுத்த குறிக்கோளிலிருந்து, பயிற்சி பெறாதவர்களான நாமெல்லாம் எவ்வாறு விலகிப் போகிறோம் என்பது கீழே காணும் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நான்கு புத்த பிட்சுக்கள் அமைதியாக, யாதொரு பேச்சும் இல்லாமல், பதினைந்து நாட்கள் தொடர்ந்து தியானம் செய்வதென்று தீர்மானித்தார்கள்.

முதல் நாள் இரவுப் பொழுது வந்தது. ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்தி, காற்றில் அணைந்தது.
முதல் பிட்சு ‘அய்யோ, மெழுகுவர்த்தி அணைந்து விட்டதே’. என்றார்.

இரண்டாவது பிட்சு ‘நாம் பேசக்கூடாதென்று முடிவு செய்தோம் இல்லையா? என்றார். மூன்றாமவரோ, ‘நீங்கள் இருவரும் நமது தீர்மானத்தை உடைத்து விட்டீர்கள்’ என்று கோபமாகச் சொன்னார்.

நாங்காமவர் சொன்னார் கடைசியாக்க, ‘நான் மட்டும்தான் ஒன்றுமே பேசாதவன்’.

இதற்கு விளக்கம் தேவை இல்லை. உண்மைதானே?

கதை 20.
நியமனம்.

2012- 13 ஆம் ஆண்டிலே, இந்திய வரலாற்றில், குறிப்பாக அரசியலில், நியமனங்கள் குறித்து மிகுந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஒரு ரயில்வே அமைச்சர், ரெயில்வே போர்டு மெம்பர் நியமனத்திற்காக சில கோடி ரூபாய்கள் பேசப்பட்டு சுமார் ஒரு கோடிவரை கை மாறியதாக கண்டுபிடித்து சில காலம் பதவி ஒதுங்கியிருந்தார்.

ஒரு மாதிரியாக மந்திரியில் தலை தப்புவிக்கப்பட்டு, அதில் அவர் மைத்துணரின் தலையை சிக்க வைத்ததாக ஒரு செய்தி.

ஹரியானா மானில ராஜ்யசபா MP ஒருவர், அந்தப் பதவிக்கு வழககமாக ஆகும் செலவு (லஞ்சம்) ரூ 100 கோடிகள் என்று தெரிவித்து சற்று பரபரப்பு நிலவியது. சிறிய தனியார் தொழில் நிர்வாகமானாலும் சரி, பொது நிர்வாகமானாலும் சரி, தலைமை அதிகாரி எவ்வளவு திறன் வாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவே அந்த நிர்வாகத்தின் திறனும் இருக்கும்.

ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஒரு தலைமைப் பொறுப்பும் மற்றும் அதன் கீழே, பல தட்டுகளாக பல தனித் தனி பிரிவுகளும் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் பிரிவிற்கும் உப பிரிவிற்கும் தலைமை ஏற்கத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.

ஆனால், நடைமுறையில் அவ்வித நியமனம் சாத்தியம் ஆவதில்லை.

எந்தத் தலைமைப் பதவிக்கும் தனிச் சலுகைகளும், கூடுதல் வருமானமும், அதிக அதிகாரமும் இருப்பது இயல்பே. அந்தச் சலுகைகளும், அதிகாரமும் நிர்வாகத்தைத் திறம் பட நடத்துவதை மனதில் கொண்டு உபயோகப்படுத்துவது அவசியும்.

ஆனால் அதே அதிகாரத்தைச் சொந்த நலனுக்காகப் பயன் படுத்துவோரே அனேகம். அதனால் கிடைக்கும் லாபம் கருதி, தகுதி இல்லாதவர் பலர் பல குறுக்கு வழிகளை தேடிப்பிடித்து, சிபாரிசுகளை சேகரித்து, அப்படிப்பட்ட தலைமையை பிடிக்கும் மக்கள்தான் எத்தனை?

அத்தகைய தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் அதிகாரம் உள்ளவர்கள் கூட, தன்  சுயலாபத்திற்காக, தகுதி இல்லாதவருக்குப் பதவிகளை வழங்குவதும் நமது நாட்டில் புதியதல்ல. அரசு இயந்திரத்தின் முக்கிய பதவிகள் ஏலம் போடப்படுவதையும், விலை போவதை செய்திகள் மூலம் நாம் அறிகிறோம்.

நமது நாட்டில் பல பொது நிறுவனங்கள் சீரழிகிறன்றன என்றாலும். அரசு இந்திரங்கள் திறன் பட இயங்கவில்லை என்றாலும், நியமன்ங்களில் வந்த கோளாறு என்பது தெளிவாகும்.

லஞ்ச ஊழல்கள் ஒரு முக்கிய காரணமாகவும், சிபாரிசுகளின் காரணமாக் தகுதி இல்லாதவருக்கு சுயலாபம் கருதி, முக்கியப் பதவிகள் தவறான ஆட்கள் கையில் கொடுப்பதே.

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. வேறு மாநிலங்களிலும் கூட, இந்து கோவில் சொத்துக்கள், வருமானங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகிதம் அரசியல் நியமனமாக பங்கேற்கும் பிரதினிதிகளும் மற்ற அலுவலர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்துச் செல்லப் படு வதை அறியாதவரில்லை.

தலைமைப் பதவிக்கு எப்போதும் திறமை உள்ளவரே தேர்ந்தெடுக்கப் படுவாரேயானால் அந்த நிர்வாகம் மிக நன்றாக இயங்கும் என்பதற்கு நமது நாட்டின் தனியார் துறை தொழில்கள் பல செவ்வனே செயல்படுவதே சாட்சி.
நிர்வாகத்தின் மீதும், நாட்டின் நலம் மீதும் அக்கரையும் கருத்தும் உள்ளவர் தலைமை நியமனத்தில் மிகக் கவனம் செலுத்துவார்கள். குறுக்குவழியில் தலைமையைப் பிடிக்க முயல்பவர்களைத் தோற்கடிப்பார்கள்.
தகுதியானவர் எவரும் எப்படியேனும் பதவியைப் பிடிக்க முயல்பவரின் கூட்டத்தில் இருக்கமாட்டார். அப்படிப்பட்டவரை எங்கிருந்தாலும் தேடிக்கொண்டு பிடிக்கத்தான் வேண்டும்.

கதை 21.
தலைமைப் பதவி

high position

நியமனத்தில் (அருள் உலகத்தில்) எப்படிப்பட்ட முறைகளைப் பின் பற்றுகிறார்கள் என்பதையும், பொருள் உலகத்தில் உள்ளது போலவே அருள் உலகத்திலும் தலைமைப் பதவிக்கு எவ்வாறு மனிதர்கள் அடிதடியில் இறங்குகிறார்கள் என்பதை விளக்க இரண்டு அருமையான ஜென் கதைகளை இங்கு பார்ப்போம்.

இந்தக் கதை நடந்த இடம் ஒரு மொனாஸ்றீ – அதாவது ஆன்மீக கல்விக்கூடமும் மற்றும் அதோடு இணைந்த பௌத்த கோவில்.

நம்ம ஊரிலே மெடிகல் காலேஜும் அதோட மருத்துவ நிலையமும் இணைந்து இருப்பது போலத்தான்.

அதன் தலைவர், வயது முதிர்ந்து, தன் முடிவு காலம் வந்ததை உணர்ந்து தன் தலைமையைத் தகுதியானவரின் கையில் ஒப்படைக்கச் சித்தமானார்.

அடுத்து தலைமையை ஏற்பவர் தலைமையை ஏற்பவர் தலைவரின் உடை மற்றும் உணவுப் பாத்திரத்தையும் ஒப்படைப்பது ஒரு சம்பிரதாயம்.

அடுத்து வரும் நாட்களில் தாம் இவ்விரண்டையும் தகுதியாணவரிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார். தலைமைக்கு, அடுத்த நபரை, தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்திருப்பதையும் தெரிவித்தார்.

போட்டி, ஒரு கவிதை எழுதுவது. தான் தகுதியுள்ளவர் என்று எவரேனும் கருதினால், அவர் தனது ஆன்மீக அறிவை வெளிக்காட்டும் வகையில் ஒரு கவிதை எழுதி தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
எல்லாப் பிட்சுக்களும் எதிர்பார்த்தது போல், உதவித் தலைமைப் பிட்சு நல்ல கவிதை ஒன்றை எழுதிச் சமர்ப்பித்தார். அந்தக் கவிதை அவர் கவித்துவத்தையும் அதன் பொருள் அடக்கமும் எல்லோரும் பாராட்டும் வகையில் அமைந்து இருந்தது.

எல்லா பிட்சுக்களும் அவர்தான் அடுத்த தலைவர் என முடிவாக நினைத்த போது, மறுநாள் கட்டிடத்தின் மத்தியபாகத்தில், வழிச் சுவரில், மிக அருமையன சக்தி வாய்ந்த கருத்துக்களுடன் கூடிய கவிதை ஒன்று காணப்பட்டது. எழுதிய விதும், நிச்சயமாக நள்ளிரவில் சிறிதேனும் வெளிச்சமில்லாமல் இருந்தபோது எழுதப்பட்டது புலனாகும்.

முதியவர் சுவற்றில் கண்ட கவதையை இயற்றியவரைக் கண்டறிவதில் முற்பட்டார்.

அந்தக் கவிதை, சமையல் அறையில் மாவு இடிக்கும் ஒரு தொழிலாளி எழுதியது என்றறிந்த தலைவர் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். அடுத்த தலைவர் யார் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாயிற்று.

தனது வாய்ப்பை இழந்த உப தலைமைப் பிட்சுவும் அவர் தம் கூட்டாளிகளும் சேர்ந்து, போட்டியாளராகத் தோன்றிய சமையல் அறைத் தொழிலாளியைக் கொல்ல முடிவு செய்தனர். (நமது நாட்டு கெட்ட அரசியல்வாதிகளைப் போல ஆன்மிக உலகிலும் கேடு கெட்ட மனிதர்கள் இருக்கிறார்களே).

இதை எதிர்பார்த்த தலைவர், தனது உடுப்பையும், உணவுப் பாத்திரத்தையும் ரகசியமாக, தேர்ந்தெடுத்த அந்த சமையல் தொழிலாளிக்குக் கொடுக்க, அவைகளுடன் உயிர் தப்ப தாற்காலிகமாக தலைமறைவு ஆகப் பணித்தார்.

பின்னாளில் தலமையை ஏற்று மிகப் பிரபலமான ஜென் ஆசிரியராகக் கருதபட்ட சிலரில் ஒருவராகக் குறிப்பிடப்படுபவரில் ஒருவரானார்.

இரண்டாவது கதை

பின்வரும் கதையில், மிகச் சிறந்த நிர்வாகிகள் எப்போதும் தலைமையிடத்தில் நியமித்திருக்கச் சிறந்ததொரு உத்தியைக ¢காணலாம் ஒரு காலத்தில் புத்த ஆன்மீகக் கூடங்களில் உபயோகத்தில் இருந்தது போலும்.

இந்த அருள் உலக உத்தியை, பொருள் உலகிலும் கடைப்பிடிப்பது சிறந்ததென்று தோன்றுகிறது.

புத்த பிட்சுக்களில் இருவகை உண்டு. (Stationary Monks) அலையாத மற்றும் (Wandering monks ¢) திரியும் பிக்சுக்கள் எனப்படுவர்.

புத்த ஆன்மீகக் கூடங்களில் காணப்படும் பிட்சுக்களும், அதில் தலைமை வகிப்பவரும் திரியாத வகை., ஆன்மீகக் கூடங்களில் தங்காமல் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து, அதன் மூலம் கற்றறியும் பிட்சுக்களை, திரியும் பிட்சு என்றும் அறிவார்கள்.

எப்போது ஒரு திரியும் பிட்சு, தான் அறிய வேண்டியதை கற்றறிந்தேன் என்று கருதுராரோ அப்போது தான் விரும்பிய ஒரு ஆன்மீகக் கூடத்திற்குச் சென்று, அங்குள்ள தலைவரை அணுகி விவாதத்திற்கு அழைக்க வேண்டும். நியதிப்படி, ஆன்மிகக் கூடத்தின் தலைவர் தட்டாமல் விவாதத்திற்கு உடன்படுவார். விவாதத்தில், வந்தவர் வெற்றி பெற்றால் தலைவராக இருந்தவர் விலகி, திரியும் பிட்சுவாக மாறிவிடுவார். திரிந்தவர் தலைவராவார்.

திரியும் பிட்சு, தோல்வியுற்றாலோ, அவர் அறிவை முழுமையாக்க அறிவைத்தேடி திரும்பவும் அலைய வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி, புத்த ஆன்மீகக் கூட்டத்தில், எப்போதும், உள்ள பிட்சுக்களில் சிறந்த ஆன்மீக வளர்ச்சி பெற்றவரே தலைமை தாங்கி இருப்பார் அல்லவா.

குறிப்பிட்ட ஆன்மீகக் கூடத்தில் மிக அறிவு படைத்த தலைவர் ஒருவர் இருந்தார். அவருடைய ஒற்றை கண்ணுடைய தம்பி ஒருவன். அறிவு வளர்ச்சி மிகவும் குறைவு. ஆகவே, ஆன்மீகக் கூடத்தில் சுற்றுவேலை செய்யும் பணி ஒன்றை ஏற்றுக் கொண்டிருந்தான். அந்தத் தம்பி கல்வி

அறிவு இல்லாதவனாக இருந்தாலும், கீழ்ப்படிதல் என்ற இயல்பு உள்ளவனாக இருந்தான்.

ஒருநாள் ஒரு திரியும் பிட்சு வந்துள்ளதாகவும் அவர் தம்மை விவாதத்திற்கு அழைப்பதாகவும் ஆன்மீகக்கூடத் தலைவர் அறிவிக்கப்பட்டார். மிக அத்யாவசிய வேலையிலிருந்து ஆன்மீகக் கூடத்தலைவர், வந்தவர் யாரென தெரிந்து கொண்டார்.

தான் தற்போது ஒரு முக்கியமான வேலையில் இருப்பதாகவும், அதனால் தாற்காலிகமாக மௌன விரதம் இருக்கும் தனது தம்பியை அனுப்புவதாகவும் வந்தவருக்குத் தெரிவித்தார்.

தம்பியைப் பற்றி சுருக்கமாக சொன்னால் ஒரு பணிவுள்ள முட்டாள். அண்ணன் சொல்லைத் தட்ட மாட்டார். விசுவாசமானவர்.

மேலும், தலைவர் தனது தம்பியிடம் ஒரு உத்தரவு கொடுத்தார். வந்தவருடன், வாயைத் திறந்து சப்தம் எழுப்பாமல், சைகையாலேயே தர்க்கம் செய்ய வேண்டும் என்பதே அது.

அதோடு தனது தம்பி இன்று, தர்க்கம் முடிந்து விருந்தினர் திரும்பிச் செல்லும் வரை வாய் திறந்து பேசுவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

அவ்வாறே உறுதிமொழி அளித்த தம்பி விருந்தினரைக் காணச் சென்றார். குறிப்பிட்ட நேரத்தில், கடைப்பிடித்து வரும் சம்பிரதாயப்படி தர்க்கம் தொடங்கியது.

வந்தவர் தன் ஆள்காட்டின் விரலை உயர்த்தி, தர்க்கத்தைத் தொடங்கினார்.

பதிலுக்கு ஒற்றைக்கண் தம்பி, தன் இரு விரலைக் காண்பித்தார்.
வந்தவர், தனது மூன்று விரலைக் காண்பிக்க, பதிலுக்கு ஒற்றைக்கண்ணன் நான்கு விரலைக் காண்பித்தார்.

வெகுவிரைவிலேயே தர்க்கம் முடியும் தருவாயை அடைந்தது.

வந்தவர், தன் கையை விரித்து ஐந்து விரலையும் காண்பிக்க, மற்றவர் ஐந்து விரல்களையும் மடக்கிக் கையை உயர்த்தினார்.

உடனே, வந்தவர் எழுந்து, திடீரென்று ஓட்டம் பிடிக்க, அவரைத் துரத்திக் கொண்டு ஒற்றைக்கண்ணன் பின் தொடர்ந்தார்.

திரியும் பிட்சு ஓடிச்சென்று தலைமை குருவைக் கண்டு, ஐயா, நான் உமது தம்பியின் அறிவிற்க்கு முன் அவர் கால் தூசு போலும் பெறமாட்டேன். ஆன்மீகக் கூடத்தில் சுற்று வேலை செய்யும் உங்கள் தம்பி என்னை விட மிக அறிவு படைத்தவரென்றும் கூறி, தாம் நிரந்தர பிட்சுவாக இன்னும் பலகாலம் செல்ல வேண்டுமென்றும் புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

விவாதம் செய்ய வந்த பிட்சுவை விவாதம் எவ்வாறு நடந்தது என்ற கேள்விக்கு, ‘திரியும் பிட்சு’ சொன்னார்:

நான் உலகத்தில் உள்ள எல்லாமே ஒரே ஒரு பரம்பொருளில் அடக்கம் என்ற வகையில் ஒரு விரலை உயர்த்தி சைகையில் காண்பித்தேன்.

தங்கள் தம்பியோ, அது தவறு என்ற வகையில் பரமாத்மா ஜீவாத்மா என்று இரண்டு உண்டு என்ற பொருளில் இரு விரலை உயர்த்திக் காட்டினார்.

நான் அகில அண்டமே, உருவாக்குதல், காத்தல், வளர்த்தல் ஆகிய மூன்றில் அடக்கம் என்று மூன்று விரல்களை நான் உயர்த்த. . .

சாம, யஜுர், ரிக், அதர்வண வேதங்களின் சாராம்சம் அந்த மூன்று விளக்கங்களில் அடக்கம் என்று பொருள்படும் வகையில் நான்கு விரல்களை உங்கள் தம்பி காண்பிக்க, பஞ்ச பூதங்கள் ஐந்தில் எல்லாமே அடக்கமென்று நான் ஐந்து விரல்களை உயர்த்த.

எல்லாமே ஒன்றில் ஐக்கியம் என்று மூடிய கையைத் தங்கள் தம்பி உயர்த்த நான் என் அறியாமையை எண்ணி வெட்கித்து, இனி சில விணாடிகூட, இந்த ஆன்மீகக் கூடத்தில் தங்க நான் அருகதை அற்றவன் என்று உணர்ந்து உங்களிடம் விடை பெற்றுக்கொண்டு செல்ல வேகமாக வந்துள்ளேன் என்றார் திரியும் பிட்சு.

நான் கற்க வேண்டியது மிக நிறையவே உள்ளது. எனவே நான் விடை பெறுகிறேன் என்றார். இவர் ஒரு வழி வெளியில் வெளியேற, மறுவழியாக தலைவரின் தம்பி ஒடோடி வந்தார். எங்கே அந்த விருந்தாளி என்று கூவிக்கோன்டே!

என்ன நடைபெற்றது உங்கள் தர்க்கத்தில், என்று தலைவர் வினவ, தம்பியின் விளக்கம் கீழே கண்டது போல்.

எடுத்த எடுப்பில் எனக்கு ஒரே கண்தான் உண்டு என்பதைச் சுட்டிக் காட்டி ஒரே ஒரு விரலை உயர்த்திக் காட்டினார் விவாதத்திற்கு வந்தவர். அது எனக்குப் பிடிக்கவில்லை, என்றாலும், நமது விருந்தினராயிற்றே என்று கோபத்தை அடக்கி, கடவுள் உங்களுக்கு இரு கண் கொடுத்து இருக்கிறார். அதுபோல் எனக்கும் இரு கண் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்த்த, இரு விரல்களைக் காண்பித்தேன்.

அந்த திமிர் பிடித்தவன் மூன்று விரலைக் காட்டி, என் ஒற்றைக் கண்ணை மீண்டும் சுட்டிக்காட்டி உனக்கும் எனக்கும் சேர்த்து மூன்று கண்தானே உள்ளது என்று சொல்ல மூன்று விரல்களை உயர்த்த.

போனால் போகிறதென்று, என் கட்டுக்கடங்கா கோபத்தை அடக்கி வைத்து, கடவுள் நம்மிருவருக்கும் சேர்த்து நான்கு கண்கள் கொடுத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உணர்த்த, நான்கு விரல்களை விரித்துக் காண்பித்தேன்.

இதற்கு மேலும் விருந்தினர் கையை உயர்த்தியதும் என் கோபம் எல்லையைக் கடந்தது. விட்டேனா பார் என்று முகத்தில் குத்த விரல்களை மடித்து நான் தயாராக, எடுத்தான் ஓட்டம் அந்த விருந்தினன் என்றார் ஆன்மீகத்தில் வடிகட்டின அறிவிலியாகத் தன்னை இனம் காட்டிக் கொண்ட அந்த மூட தம்பி.

பின்னுரை

இந்தக் கதையில் பல கருத்துக்களை நாம் காணலாம்:

முட்டாள் புத்திசாலியை வெல்லலாம் என்பது கூட ஒரு பாடம்.
குறைவாகச் சைகையால் பேசியதினால் முட்டாளின் வெற்றி சாத்தியமானது என்பதையும் காணலாம்.

அதிக அறிவு படைத்தவர் சிறிய ஒரு ஆயுதத்தால் (மிகக் குறைந்த அறிவுபடைத்தவரை வைத்து) மற்றவரை சோதிக்க முடியுமென்பதையும் இங்கே காணலாம்.

இவைகள் முக்கியமானவை அல்ல. நல்லதொரு நிர்வாகம் அமைய வேண்டுமானால் எப்போதும் தகுதிவாய்ந்த தலைமை உருவாக, நிலைபெறச் செய்தல் அவசியம்.

ஜென் ஆன்மீகக் கூடங்களில் கடைப்பிடிக்கும் இந்த உத்தி, பொருள் உலகத்தில் மக்களுடன் இணைந்த பல்வேறு நிர்வாகங்களுக்கும் இது பொருந்தும், மிகச் சிறந்ததும் கூட.

கதை 23.
ஜென்னும் தீவிர கவனமும்
முன்னுரை

நான் பல்வகை ஆன்மீகப் பள்ளிகள் அவற்றின் பயிற்சி முறைகளைப்பற்றி படிக்கும்போது, பொருள் உலக வெற்றிக்கும் அருள் உலக வெற்றிக்கும் பயிற்சியிலோ மற்ற விதிமுறைகளிலோ வேறுபாடு ஒன்றையும் காணமுடியவில்லை.

ரமணர் போன்ற ‘ஆசிரியரில்லா மாணவர்களும்’ மேன்மை பெற்றதும் இந்தக் கருத்தை வலியுறுத்தும்.

நமது மூளை இயங்கும் விதம் விசித்திரமானது. நமது மூளையோ அல்லது இயக்க விதிகளோ அல்லது நமது தவறுதலான பயிற்சியோ, நம்மால் எதையும் தீவிரமாக கவனிக்க இயல்வதில்லை. எதையும் மேலோட்டமாக- சில முக்கிய பரிமாணங்களை மட்டும் கவனித்து சேமிக்கும் பழக்கம் எல்லாரிடத்திலும் பழக்கத்தில் உள்ளது.

வெகு சில ஒற்றுமைகளை மட்டும் உடையவர்களை தெரிந்தவராக நினைத்து அவரிடம் பேச முயற்சி செய்து, எத்தனை முறை நாம் ஏமாந்து இருக்கிறோம்.

அன்றாடம் பலமுறை காணும் நமது கையின் கைரேகைகளைப் பதிவு செய்து பிறகு காண்பித்தால் எத்தனை பேருக்கு தன்னால் தன் கை ரேகைகளை இனம் கண்டுகொள்ள இயலும்?

ஆன்மீகப் பள்ளிகளில், தன் கையில் உள்ள ரேகைகளை உற்று நோக்கி மனதில் பதியவைத்து, பின், மனக்கண் முன் பார்ப்பது ஒரு முக்கியமான பயிற்சியாக செயல்படுகிறது.

கதை 24.
கவனம்

புகழ் பெற்ற அந்த நான்-இன் என்ற ஜென் ஆசிரியரின் மாணவர் டென்னோ என்பவர். நான்-இன் அவர்களின் வீட்டிற்கு வந்தார்.

தாமே ஒரு ஜென் ஆசிரியராக இருந்த டென்னொ அவர்களை நான்-இன் அவர்கள் கீழே கண்டவாறு கேட்டார்.

தாங்கள் உள்ளே வரும்போது தங்களின் மர மிதியடிகளையும் குடையையும் வாசல் படியின் அருகில் விட்டுவந்தீரா?

ஆமாம் என்றார். வந்த விருதினர்.

உங்கள் மிதியடிகளை குடையின் இடதுபுறத்தில் வைத்தீர்களா அல்லது வலது புறத்திலா?
இந்தக் கேள்விக்கு டென்னோவினால் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. அப்போதிருந்து நான்-இன் அவர்களின் கீழ், டென்னோ, மாணவராக, மேலும் பத்து ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.

கதை 25
எரித்த புத்தகங்கள்

ஒரு ஜென் மாணவரும் புகழ்பெற்ற அறிஞருமான ஒருவர் பல வருடங்கள் ஜென் மற்றும் பல நூல்களைக் கற்று, ஒருநாள், ஞான ஒளிவு பெற்றார்.

அவர் தம் புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து தீயிலிட்டார்.

பின்னுரை

நாம் புத்தகங்களைப் பாதுகாப்பது எதனால்? நமக்கு அவசியப்படும்போது திரும்பவும் படித்து அறிந்து கொள்ள. புத்தகத்திலுள்ள கருத்துக்களை நாம் குறைவறக் கற்று நமது மனதில் இருத்திக்கொண்டோமேயானால், எதற்காக திரும்பவும் அப்புத்தகத்தைத் தேட வேண்டும்.

நமது கல்வி முறையில் உள்ள முக்கியக் குறைபாடு என்னவென்றால் புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை பிரித்தெடுத்து அவற்றை ‘மனதின் உள்ளிருத்தும்’ திறன் அடையாதது. அதோடு, நாம் சொல்லாட்டத்தில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

சொல்லப்பட்ட விஷயத்தைவிட சொல்லியவரைத் துதித்து அதன் மூலம் புகழ் தேடுகிறோம். இப்படிப் பட்ட கல்வி ஒரு செல்லாக்காசு. எவருக்கும் பயன்படாது. இவைதான் புத்தகத்தை பேணிக் காப்பதில் நமக்குள்ள நாட்டம். கற்றுணர்ந்தவருக்கு புத்தகம் ஒரு வழிச்சுமை.

கதை 26
ஒரு கண்

இப்போதய மருத்துவ, பொறியியல் கல்வியைப் போல பழைய நாள் ஜப்பான், சைனா போன்ற நாடுகளில் போர்க் கலைகள் முக்கியத்துவம் வாய்ந்திருந்தன.

இப்படிப்பட்ட கலைகளில் தேர்ச்சி பெற இத்தனை வருடங்கள் ஆகும் என குறிப்பிடுவதில்லை. ஆசிரியர் அளிக்கும் பயிற்சியும் மாணவரின் தீவிர முயற்சியும் பயிற்சிக் காலத்தை நிர்ணயிக்கிறது.

மாணவனொருவன், தான் கற்க வந்த ஆசிரியரிடம் கேட்டான், ஐயா, நான் என் பயிற்சியை முடித்து சிறந்ததொரு, வாள் வீரனாக வளர எத்தனை வருடங்கள் ஆகும்? ஆசிரியர் பதிலளித்தார், ‘மாணவரே, சுமார் பத்து வருடங்கள் ஆகலாம்’.

நான் தினமும் பயிற்சிநேரத்தை அதிகரித்து தினமும் எட்டு மணி நேரம் பயிற்சி செய்தாலோ என்று மாணவர் கேட்டார். ஆசிரியர் பதிலளித்தார், சுமார் ‘இருபது வருடங்கள்.’

ஆசிரியரின் பதில் மாணவனை திகைப்பூட்டியது. எட்டு மணி நேரம் இல்லாமல், இரவும் பகலும் பயிற்சி செய்தாலோ?

ஆசிரியர் சில நேர மௌனத்திற்குப் பிறகு பதிலளித்தார்.சுமார் ‘முப்பது வருடங்கள்’ என்று.
திகைத்திருந்த மாணவனுக்கு விளக்கம் சொன்னார், ஆசிரியர்.

முழுகவனத்தையும் நாம் எடுத்த காரியத்தில் இருத்துவது நமக்கு அதிவேக முன்னேற்றத்தைக் கொடுக்கும். நமது இரு கண்களில் ஒன்றை பாதையிலும் ஒரு கண்ணை நேரம் காலம் போன்ற உபரி பரிமாணங்களில் செலுத்தினால் நமது பயணம் விரைவாக நடைபெற முடியாதல்லவா?

கதை 27.
இரண்டு முயல்கள்

மேலே கண்டது போல வேறொரு அவசரக் குடுக்கை மாணவர் தனது ஆசிரியரை அணுகி ஐயா, நான் எனது பயிற்சின் வேகத்தை அதிகரிக்க எண்ணுகிறேன்.

இரண்டாவது ஆசிரியர் ஒருவரை நியமித்தால் என் எண்ணம் கைகூடுமெனத் தோன்றுகிறது. நாங்கள் சரியானதொரு ஆசிரியரை அமர்த்திக் கொள்ள உதவுவீரா? என்று கேட்டார்.

ஆசிரியர் பதிலளித்தார்: அன்பனே, ஒரே சமயத்தில் இரு முயல்களை வேட்டை ஆடுபவனுக்கு ஒரு முயலும் கிடைப்பதில்லைஞ்

இதே கருத்தை பைபிளின் வாசகமொன்று வலியுறுத்தும்:

‘ஒருவன் இரு எஜமானர்களுக்குக் கீழ் பணியாற்ற முடியாது’.

கதை 26.
வழியும் கோப்பை

tea cup

நான்-இன் என்ற ஜப்பானிய ஜென் ஆசிரியர் வாழ்ந்த காலம் 1868-1912.

அக்காலத்தில் பிரபலமான ஒரு பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் ஒருவர் நான்-இன் அவர்களைக் காண வந்தார்.

வந்தவரை சம்பிரதாயப்படி வரவேற்று உபசரித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தனர். நான்-இன் அவர்கள் பேச்சின் நடுவே தேநீர் வழங்க ஆரம்பித்தார். பேச்சின் ஒரு கட்டத்தில், பேராசிரியர் தான் ஜென் குறித்து கற்க விரும்புவதாகக் கூறினார்.

கெட்டிலில் இருந்து பேராசிரியரின் கோப்பையில் தேநீர் ஊற்றுத் தொடங்கிய ஜென் ஆசிரியர் கோப்பை நிரம்பி வழிந்தபோதும் கூட ஊற்றுவதை நிறுத்தவில்லை. மிகுந்த தேநீர் வழிந்தோடி வீணானது. இது கண்டு பேராசிரியர், ஐயா தேநீர் வீணாகிறது. ஊற்றுவதை நிறுத்தி விடுங்கள் என்றார்.

நான்-இன் அவர்கள் சொன்னார். ஐயா உங்கள் மனநிலை இந்தக் கோப்பையைப் போன்றது. உங்கள் சிந்தனை பதிந்து போன நம்பிக்கைகள். காலம் காலமாய் வளர்ந்துவிட்ட ஊகங்கள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. நிரம்பிய கோப்பையில் ஊற்றிய தேநீர் வழிந்தோடி வீணாவதைப் போல், இப்போது எந்தப் புதிய அறிவும் உங்களுக்குப் பயன்படாது.

உமது எண்ணம் என்ற கோப்பையை காலி செய்து கொண்டு வாரும் என்று கூறி அனுப்பினார்.

கதை 27.
எலி பிடித்த மாணவன்.

முன்னுரை

முன்னொரு காலம். சீன தேசம். அரசியல்வாதியின் சிபாரிசு, பணபலம், ஆகியவற்றால் கல்வியை வாங்க முடியாதென்ற காலம் அது.

மாணவர்கள் தன் சுயமுயற்சியால், அறிவு தரும் தகுதி உள்ள ஆசிரியரைத் தேடிக் கண்டு பிடிக்கணும். அந்த ஆசிரியரும் பயிற்சி தர ஒப்புக்கணும். அந்த ஆசிரியரின் மனதை எப்படியாவது கவர வேண்டும். பின் அவரும் தன்னை மாணவராக ஏற்றுக்கொள்ளப் படாத பாடுபடவேண்டும்.

எப்பொழுதும், தன் ஆசிரியரின் கோபத்துக்கு ஆளாகாமல் கவனம் தேவை. அவருக்கு பணிவிடைகள் செய்து, கல்விபெற வேண்டிய ஒரு காலம் அது.

கதை

rat catch

வாட்போரில் மிக பெரிய பெயர் பெற்ற ஆசிரியர் ஒருkவர் தன் நண்பர் ஒருவரின் வீட்டில் விருந்தினராக வந்திருந்தார். அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்து வந்த சிறுவன் ஒருவனுக்கு அந்த ஆசிரியரின் கீழ் மாணவனாக பயிற்சி பெற ஆர்வம். அதற்க்காக்க எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ள மனநிலை.

எஜமானரிடம் மன்றாடி, விருந்தினராய் வந்த ஆசிரியருக்குப் பணி செய்யும் பொறுப்பைப் பெற்றான். ஆசிரியர் உணவருந்தும் நேரம் வந்தது.

அக்கால சீனர்கள் விருந்து கொடுக்கும் முறை சற்று வேடிக்கையாக இருக்கும்.

தனியான அறை ஒன்றில் சிறிய ஒரு மேஜை மீது உணவு படைக்கப் படும். உணவு படைப்பவர், அறையின் ஒரு மூலையில், விருந்தினரின் அடுத்த கட்டளைக்குக் காத்திருப்பார். மிகவும் பொருப்பு நிறைந்த வேலை. ஒரு மாதிரியாக பல எச்சரிக்கைகள் செய்து அதன் பின் அந்தச் சிறுவனுக்கு புணவு பரிமாறும் பொருப்பு தரப்பட்டது.

உணவு படைக்கும்போதும் மற்றும் தான் பணிவிடை செய்யும் போதும் எந்த வித களங்கமும் இல்லாதிருந்து ஆசிரியரின் பாராட்டுதலைப் பெற (முக்கியமாக ஆசிரியரிடம் கெட்ட பெயர் வராதிருக்க) முழு கவனமாக இருந்தான்.

நடுவே நுழைந்த எலி ஒன்று:

இன்றைய பாலத்தைப் போலவே அன்றும், ஐயோ பாவம், எலியைக் கண்டால் எவருக்கும் தாங்க முடியாத ஒரு அருவருப்பு இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட துர்பாக்கிய எலி ஒன்று எதிர்பாராத விதமாக, வேகமாக ஆசிரியர் உணவருந்தும் அறைக்குள் பிரவேசிக்க, திடுக்கிட்டான் அந்தச் சிறுவன்.

அடுத்த சில வினாடிகளில் அச்சிறுவன், அந்தப் பொல்லாத எலி, தன் கையில் சிக்கி இருப்பதை உணர்ந்தான். இது அனிச்சையாக நிகழ்ந்தது. (க்ஷீமீயீறீமீஜ்). கண், எலியைக் காண, கை விரைந்து அதை லாவகமாக பிடித்தது. கண்டதற்கும் பிடித்ததும் இடையிலே மூளைக்கு வேலை இல்லை எனலாம். அந்த எலியை வெளியே சென்று எறிந்துவிட்டு வர. ஆசிரியரின் உணவருந்தலும் முடிந்தது.

சரியான ஒரு தருணத்தில் ஆசிரியரின் அருகாமையில் வந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தான் அந்தச் சிறுவன்.

சிறுவன் எலி பிடித்த விதத்தைக் கண்ட அந்த வினடியே ஆசிரியர், அச்சிறுவனைத் தன் மாணவனாக்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்.

அச்சிறுவனும், அந்த ஆசிரியரின் மாணவன் ஆனான்.

மிகுந்த ஆர்வத்துடனும், கடும் உழைப்புடனும், அச்சிறுவன் வாள் வித்தையில் விறபன்னனானான். புகழ் எய்திய பல வாள் விற்பன்னரை வென்று ஆசிரியனுக்கும் ஏற்படுத்தினான்.

பின் ஒருநாள், அந்த நாட்டிலேயே மிகச் சிறந்த வாட்போர் வித்தகன் என்று பெயர் எடுத்த ஒருவருடன் போட்டியிட நாள் குறிப்படப்பட்டிருந்தது.

ஆசிரியரை அணுகி, ஐயா, இந்த வீரனோடு போட்டியிடும் நான் எந்த ஒரு யுக்தி அல்லது விசேஷ பயிற்சி செய்யவேண்டுமென வினவ, ஆசிரியர் பதில் கூறினார்.

வாட்போரிலோ, வாழ்க்கையிலோ பயிற்சி மாத்திரமே வெற்றிக்குத் துணை தராது, வெற்றி பெற வேண்டும் என்ற வெறி தன்னுள் காட்டுத்தீ போல இருக்கு மானால், அனிச்சை செயலாக மாறி தகுந்த போர் முறைகள் தானாகவே வருமென்று கூறினார்.

மேலும் தொடந்தார். என்னை முதல் முதல் காணும்போது எவ்வாறு எலி பிடித்தாயோ, அதே உத்தியை கையாள்வாயாக என்று அறிவுறித்தனர்.

கேட்கணுமா, வெற்றி மாணவருக்குத்தான்.

கதை 28.
கொடியவருக்கும், நல்லவர் நல்லவரே

மனித இயல்புகள்.

two monks

இரண்டு புத்த பிட்சுக்கள் ஆற்றங்கரையில் தனது பாத்திரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்விருவரும் தேள் ஒன்று ஆற்றில் முழுகுவதைக் கண்டனர்.

ஒரு பிட்சு விரைந்து சென்று அத்தேளைப்பற்றி கரையில் சேர்க்க, இதனிடையே தேளும் பிட்சுவைக் கொட்டியது. தேள் விஷம் தாக்கியவுடன் பிட்சு தன் விட்ட வேலையில் தொடர்ந்து கவனமானார்.

திரும்பவும் அவர் காப்பாற்றிய தேள் ஆற்றில் விழ மீண்டும் அதைப் பிடித்து கரையிலேற்றினார். மீண்டும் தேள் பிட்சுவின் கையைப் பதம் பார்த்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டாம் பிட்சு கேட்டார். ஐயா, தேள் ஒருமுறை கொட்டியும் கூட திரும்பவும் எதற்கு அதைக் காப்பாற்ற முற்படுகிறீர் என்று வினவ, முதல் பிட்சு சொன்னார்.

கொட்டுவது தேளின் இயல்பு
காப்பாற்றுவது என் இயல்பு.
இயல்பை மாற்றுவது கடினம்.

கதையைப் படித்த சில நண்பர்கள் கேட்டார்கள். முதல் பிட்சு கழுவிக்கொண்டிருந்த பாத்திரத்தை உபயோகித்து தேளைக் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா என்று.

இயல்பு என்று வரும்போது லாஜிகோ அல்லது வேறு வழிமுறைகளோ பயன் தராது. நாம் எல்லோருமே, மனம் வேறு தீவிர சிந்தனைகளில் மூழ்கியிருக்கும் போது நாம் இயல்பினால் அல்லது அனிச்சையாக செயல்படுவது உண்டு.

மனதைக் கேட்காமல் கண் காண கை செய்கிறது என்பார்களே! அதுபோல. சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செயல்பாட்டை, மனித இயல்பு என்கிறோம்.

நல்ல மனிதர்கள் சூழ்ந்திருக்கும் ஒரு சூழல். நல்ல சிந்தனைகள் கொண்ட சுற்றம், நல்ல அறிவு தரும் கல்வி ஆகிவை கொண்ட ஒருவருக்கு நல்ல இயல்புகள் அமைய வாய்ப்புகள் அதிகம்.

கதை 29.
பாலைவனத்தில் இரு மனிதர்கள்
மிக உயந்த செயல்.
முன்னுரை

பெரும்பாலான மனிதர்களின் இயல்பு என்ன தெரியுமா?
சுகம் எதுவோ அது தனக்கு. துக்கம் தருவது பிறருக்கு.
லாபம் கிடைத்தால், அது தனது. நஷ்டங்களை பிறருக்கு.

தன் நலத்தை தள்ளிவைத்து பிறர் நலத்தில் அக்கரை கொண்டவர்களுக்கும் எந்த கால கட்டத்திலும் இருப்பதுண்டு.

கோடை வெய்யில், ஒரு பாலைவனத்தில் எங்கோ, ஒரு மனிதக் கூட்டம் திசை தெரியாமல் பல்வேறாகப் பிரிந்து திரியத் தொடங்கினார்கள். குடிப்பதற்கு நீரோ, தங்க நிழலோ கிடைக்காமல், தேடி அலைந்தவர்களில் இருவர் சென்ற திசையில் ஒரு பெரிய சுவர் காணப்பட்டது.

இருவரும் அந்தச் சுவர் மேல் ஏற, சுவரின் மறுபுறம் நீர்நிலைகளும், இனிய சங்கீதமும், செடி கொடிகளும், நறுமணமும் தென்றலும் வீசக்கண்டார்கள். இதுதான் சுவர்க்கம் என்று தெரிந்து கொண்டார்கள்.

இருவரில் ஒருவர் என்னவோ சுவரின் மறுபுறம் குதித்து மறைந்து போனார்.

இரண்டாமவரோ, சுற்றித்திரியும் தன் சகாக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு சுவற்கத்திற்கு வழி காட்டும் நோக்கத்துடன், வந்த வழி திரும்பினார்.

பின்னுரை:

முன்னவரை புத்திசாலி என்றும் பின்னவரை முட்டாளென்றும் கருதுவோரில் நீங்களும் ஒருவரா? தியாகத்திலும், பிறர் நலம் பேணுதலில் உள்ள ஒரு சுகம், அதம் புனிதம், திருப்தி அனுபவித்தவர்கு மாத்திரமே தெரியும்.

கதை 30.
உபயோகமில்லா தந்தை.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், என்ற முதுமொழி என்றும் பொய்த்ததில்லை என்பதை வாழ்வில் பலமுறை கண்டு இருக்கிறோம். அதற்கு சாட்சியாக, இதோ ஒரு கதை.

சென்ற பத்து வருடங்களாக, நாமெல்லாம் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்கிறோம். நமது பிள்ளை குட்டிகள் இன்று பல நாடுகளுக்கு செல்கிறார்கள். என் மகன் அல்லது மகள் குடும்பத்தோடு அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார்கள் என்று சொல்லும் பல பெற்றோரை சந்திக்கிறோம். இதன் காரணமோ, இப்போதெல்லாம் நாம் பொருள் உலகத்தின் அடிமைகளாக முற்றிலும் மாறிவருகிறோம்.

கிழக்கத்திய நாடுகளிலுள்ள அரசாங்கமும் சரி சமுதாயமும் சரி, எல்லோருமே, கண்மூடித்தனமாக, மேற்கத்திய சமுதாயத்திலிருந்து தேவை இல்லாத பொருள்கள், ஆபத்தான அமைப்புகள், பொருந்தாத வாழ்கை முறை எல்லாவற்றையும் இறக்குமதி செய்துவருகின்றன.

நமது அணுகுமுறையில் பல மாறுதல்கள் தோன்றியிருக்கின்றன. எதிலும் எதையும் நமக்கு உபயோகம் என்ன என்றும் எதிலும் லாபம் நட்டம் என்ற சிந்தனையுடன் அணுகுகிறோம்.போன்ற பொருளாதார வளர்ச்சியில் பொருள் லாபம் நட்டம் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. காணாமல் போன பரிமாணத்தை மென்மையாகக் கட்டி உணர்த்தும் சிறிய கதை இது.

நமது கதையில் வரும் இரண்டாவது விவசாயி. ஐயோ பாவம்! மிகவும் முதுமை அடைந்தவர். உழைத்துக் களைத்து ஓய்ந்து போனவருக்கு ஒரே ஒரு மகன். முதியவர், இயலாமை என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனது குடிசையின் முன் பகுதியில் நிரந்தரமாகக் குடியேறினார்.
வயல் வேலைகளில், படிப்படியாகத் தந்தையின் உதவி குறைய, தானே எல்லா வேலையையும் செய்ய வேண்டிய நிலையில் மகன் தள்ளப்பட்டான்.

தந்தையின் இயலாமை தனயனுக்கு அனுதாபத்தைவிட, எரிச்சலை ஊட்டியது. நாட்கள் நகர்ந்து செல்ல தனயனின் பொறுமையும் எல்லையைக் கடந்தது. தந்தை வயல் வேலையில் உதவி இல்லாதது ஒரு பக்கம். அது போதாதென்று விளைந்த தானியத்திற்குமல்லவா பங்காக இருக்கிறார் என்ற எண்ணம் தலை தூக்கியது.

தினம் தினம் தந்தையைக் காணும் போதெல்லாம் ஆத்திரமும், கோபமும் கொண்டான் தனயன்.
ஒரு நாள், தனயன் ஒரு தேக்குமரத்தால் ஆன சவப்பெட்டியுடன் வீட்டை அடைந்தான். தந்தையை அச்சவப் பெட்டியில் அடைத்து மலையுச்சிக்கு கொண்டு சென்று உருட்டிவிடுவதாக திட்டமிட்டு அதை தந்தைக்கும் சொன்னான் தனயன்.

இதைக்கேட்ட தந்தை மறுசொல் ஏதுமில்லாமல் சவப்பெட்டியில் குடியேறினார். சவப்பெட்டியை மூடி, மலையுச்சிக்கு இழுத்து சென்றான் தனயன்.

மலை உச்சியை அடைய இன்னும் சிறிதே செல்ல வேண்டும். அப்போது சவப்பெட்டியிலிருந்து தட்டும் சத்தம் கேட்டது.

கோபத்துடன் என்ன வேண்டும் என தந்தையை வினவினார் தனயன். தந்தை சொன்னார், மகனே, ஒரு சின்ன உத்தி சொல்கிறேன் கேள். ‘ உச்சி வந்தவுடன் சவப்பெட்டியுடன் என்னை உருட்டிவிடாதே. பெட்டி நன்றாக இருக்கிறது. பிற்காலத்தில் உன் மகனுக்குப் பயன்படலாம்.

என்னை மட்டும் மலை உச்சியிலிருந்து உருட்டி விடு’.

இதுபோல கதை ஒன்று பழைய தமிழ் இலக்கியத்திலும் காணலாம்.

வயதான தந்தையை வீட்டிலிருந்து திண்ணையில் குடிபுகச் செய்தான் கொடுத்தான் அவர் மகன்.
பழைய சட்டி ஒன்று தந்தையின் புது குடியிருப்பை அலங்காரம் செய்தது. மழைக்கும், வெய்யிலுக்கும் சம விருந்தினராகிய பெரியவரை வெகு விரைவிலேயே இயற்கை அன்னை தன்னிடம் அழைத்துக் கொண்டாள்.

போனது புண்ணியம் என்று, தந்தை கடைசி நாளில் குடியிருந்த திண்ணையைச் சுத்தம் செய்ய முனைந்திட்டான் தனயன்.

சட்டியை உடைத்து எறிய மனைவிக்கு உத்தரவிட்டன் மகன். அப்போது தன் தந்தையை கூவி அழைத்தான் பெரியவரின் பேரன். “தந்தையே! தங்களின் பிற்கால உபயோகத்திற்காகுமே. உடைக்காதீர் அந்த சட்டியை “ என்றான்.

கதை 31.
வில்லாளியும் ஜென் மாஸ்டரும்
முன்னுரை

sto 31

தன்னடக்கம் ஒரு மனிதனுக்கு எப்போதும் அவசியம். நிறை குடம் தளும்பாது என்பதைப் போல, முழுவதும் அறிந்தோர் அல்லது அதிகம் கற்றோர் அலட்டிக் கொள்வதில்லை.

அரைகுறை மனிதர்கள், தங்கள் சாதனைகளை மிகுதிப்படுத்தி மகிழ்ச்சியில் வாழ்வது மட்டும் இல்லை. குடத்துள் இட்ட விளக்காக இருக்கும். தன்னடகதுடன் வாழும் அதிகத் திறமை உள்ளவரையும் குறைத்து மதிப்பிடுவார்கள்.

இடை விடாத தீவிரமான பயிற்சி ஒருவரை சிறந்த கலைஞனாக உருவாக்கும். ஆனால் மனத்திடம் என்பது அறிவுடன் தொடர்புள்ளது. மனதை கட்டுக்குள் வைக்க தனிப்பட்ட பயிற்சி மட்டும் இன்று அறிவாற்றலும் அவசியம். அறிவும் மிக முக்கியம் என்பதையும் கீழேக் கண்ட கதை விளக்கிடும்.

சமதரை அறியா வில்லாளி

வில் வித்தையில் தேர்ந்த, பல போட்டிகளில் வென்று பரிசுகள் பல பெற்ற தற்பெருமையும் திமிரும் கொண்ட, ஒரு இளைஞன் ஒருவன், அதே வித்தையில் புகழ்பெற்ற ஜென் மாஸ்டர் ஒருவரை தன்னை தோற்கடிக்குமாறு சவால் விட்டான்.

வில் வித்தையில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் துல்லியமாக அறிந்து இந்த வாலிபன் உண்மையிலேயே சிறந்த வில்லாளி. தொலைவில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் புள்ளி தவறாது அம்பை எய்தான். அடுத்த அம்பு முந்தைய அம்பை இரு கூராகப் பிளந்தது.

ஐயா, இதற்கு இணையாக உங்கள் வித்தையை காட்டுவீரா என்று வில்லாளி கேட்க, சிறிதும் சலனப்படாத ஜென் குரு, வில்லாளியை தன் பின்னே வருமாறு சைகை செய்து முன்னே நடந்தார்.
இளைஞனோ ஜென் குரு தன் வில்லை எடுத்து தானும் எய்து காட்டுவார் என்று எதிர்ப்பார்த்தார். அதற்கு பதிலாக தன் பின்னே வருமாறு அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல், வில்லாளி, அந்த குருவை பின் தொடர்ந்தான்.

தன்னை எதற்காக, எங்கே அழைத்துச் செல்கிறார், என்ன செய்வாரோ என்று புரியாமல், குழம்பிய மனதுடன் அந்த வில்லாளி ஒரு மலைப் பாதையில் குருவின் பின்னால் நடந்தான். இருவரும் குன்றின் உச்சியை அடைந்தனர்.

இரு குன்றுகளின் நடுவில் ஒரு பள்ளத்தாக்கு. இதை இணைக்கும் மெல்லிய மரத்துண்டினாலான உறுதியில்லாத நீண்ட பாலமும். பாலத்தின் அடியில் அதல பாதாளமும் கண்டான். அமைதியாக குரு அப்பாலத்தில், மெதுவாக மெல்லிய அடியெடுத்து நடந்து முன்னேறினார். ஒவ்வொறுமுறை அடியெடுத்து வைத்தபோது அந்த மெல்லிய மரத்துண்டு இப்போது முறிந்து விடும் என்பது போல அதிர்ந்தது. அதைக் கண்டு நடுங்கினார் வில்லாளி. ஆசிரியரின் செய்கையை சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்ரார் அந்த வில்லாளி.

யாதொரு சலனமும் என்றி மெல்லிய அடியெடுத்து வைத்து மரத்துண்டின் மத்தியில் வந்து சேர்ந்த அந்த குரு, தூரத்தில் கண்ட ஒரு மரத்தின் கிளையை தேர்ந்தெடுத்தார். ஒருமுறை எய்த அம்பு கிளையில் குத்திட்டு நிலைபட, அடுத்த அம்பு முன்னதை இரண்டாகப் பிளந்தது.

மெதுவாக, சாந்தம் நிறைந்த முகத்துடன், அந்த நிலை இல்லாத, ஒற்றைமரப்பாலத்தில், பின்னாலேயே நடந்து முழு தொலைவையும் கடந்து, தரையை அடைந்தார்.

அடிகாணாத அந்த அதள பாதாளத்தையும் அதன் மீதிருந்த உறுதியற்ற பாலத்தையும் கண்டு நிலைகுலைந்திருந்த வில்லாளியைப் பார்த்து குரு சொன்னார்.

வில் வித்தையில் தேர்ந்தவரே! அறிவீர்.

வில்லில் உங்கள் வித்தை மேன்மையானதே. அதே அளவு தாங்களின் “”மனதை கையாளும் திறமையும் இருக்குமானால் நீங்கள் நான் செய்ததை முயற்சி செய்து பார்க்கலாம்”.

வில்லாளி ஜென் ஆசிரியரின் கணிப்பை தவரென்று நிரூபிப்பாரா?

சரியாக கணித்தீர்.

சமதரையில் அதாவது சாதாரண சூழ்நிலையில், சாகசம் செய்ய உடற்பயிற்சி ஒன்றே போதும். மனதை கலக்கும், திகிலூட்டும், சிக்கலான சூழ்நிலையில் எந்த விற்பன்னரும் செயல்பட சிறந்த மனப்பயிற்சியும் தேவை.

ஆன்மீகப் பயிற்சி பெற்றவர் எவரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களை விட, எந்தக் காலத்தும் எதிலும் உயர்ந்திருப்பார் என்பது தெளிவு.

இதல்லாது வேறு சில முக்கிய அம்சங்களை கவனிக்கவேண்டும்.

தற்பெருமையும், எதிராளியைக் குறைத்து மதிப்பிடுவதும் ஒருபோதும் பயன்படாது.

திமிராக, தற்பெருமை பேசினால், ஒரு நாள் மிக பெரிய தலைகுனிவை சந்திக்க நேரிடும்.

கைவித்தை எப்போதுமே எல்லா சந்தர்பத்திலும் கைகொடுக்காது. மனோவித்தையும் சேர்ந்தால் கைவித்தை அதிக பலன் தரும்.

கதை 32.
குருமார்களின் இலக்குகள்
முன்னுரை:

ஜென் என்ற ஆன்மீகப் பாதை, புத்த மதத்தின் ஒரு கிளைப்பாதை எனலாம். இந்தப் பாதையை குறிப்பிடும் போது, பல்வேறு, கற்ற பெரிய மனிதர்கள், பல்வேறாக புகழ்வார்கள்.

ஜென் ஒரு கவித்துவமான மதம்.

மிகவும் குறைந்த வார்த்தைகளை கையாள்வது என்றால், இப்பாதையைச் சொல்லலாம். தத்துவ விவாதங்கள், விளக்கங்கள் போன்றவை இப்பாதையில் அறவே இல்லை என்று சொல்வதற்கில்லை. மிக மிக அவசியமான இடத்தில், குறைந்த அளவில் அழகாக கையாளப்படுகிறது.

இனிப்பு பற்றி எத்தனை நேரம் விவாதம் செய்தால், நமது வாய் இனிக்கும்?

விவாதங்கள், (தர்க்கம்) சிந்தனையின் அடிப்படையில், இதுவரை வெளியில் தெரியாத, சொல்லப்படாத கருத்துக்கள் அலசப்படுமானால் கேட்பவருக்கு பயனுன்டாக சாத்தியம் உண்டு, பேசுபவர்க்கு அல்ல.

கிழக்கிந்திய ஆன்மீக பாதையில், அஷ்ட சித்திகள் என்கிற சக்திகள், தற்போதய மனித அறிவின் அப்பாற்பட்ட ஒன்று என்று அறியப்படும். இவைகள், சாதாரண மனிதர்களால் செய்யமுடியாதவை.
இவைகள், மகிழ்சிக்காகவோ, சாதாரண மக்களுக்கு வித்தை காட்டவோ, நான் உங்களை விட மேலானவன், கடவுளின் அருள் பெற்றவன் என்று மற்றவர் பாராட்டுவதற்காக செய்யப்படுவதில்லை.

ஆன்மிகப் பாதையில் உள்ள ஒருவர், தங்கள் பயிர்சிகளில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதை அறிவதற்காக செய்யப் படுகிறது. மாணவர்கள் முன்னேற்றத்தை ஆசிரியர்கள் கணிக்க பயனாகிறது. இதுவல்லாது வேறெந்த சமயத்திலும் உபயோகப்படுத்துவது தவறு என்பது எழுதி வைக்காத ஒரு கட்டளை.

ஆன்மிகப் பாதையை தேடுவோரில் சிலர், இந்த வகையிலான சக்திகளை தனதாக்கிக்கொள்ள வருகின்றனர். அதன் காரணமாக அஷ்ட சித்திகளும், அதில் தேர்ந்தோரும் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றனர். மற்றபடி, இப்பாதையில் குறிப்பிட்ட இலக்கை எட்டியவர்கள். இப்படிப்பட்ட சக்திகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

கதை 33.
ஞான ஒளி

ஒரு மாணவன் தன் ஜென் ஆசிரியரை வினவினான். ஞான ஒளி பெற்றவர், எப்படி இருப்பார்?
ஆசிரியரின் பதில்: பசி வரும்போது உணவு கொள்வது, உறக்கம் வரும்போது உறங்குவது’ என்ற சக்தி படைத்தவராக இருப்பார்.

சுருக்கமாக சொன்னால், ஞான ஓளி பெற்றவர் நல்லவராகவும் வல்லவராகவும் இருப்பார்.
இந்த வகையில் வேறொரு கதை:

வெவ்வேறு குருவிடம் படிக்கும் இரு மாணவர்கள் ஒரு நாள் சந்தித்தார்கள்.

முதலாமவர் சொன்னார், என் குரு செய்ய முடியாத அதிசயங்கள் என்று ஒன்றும் இல்லை. காற்றில் பேனாவால் எழுத, அது தொலைவிலுள்ள ஒரு காகிதத்தில் பதிவாகும். உன் குரு இப்படிப்பட்ட சாதனைகள் செய்வாரா என்று கேட்டார்.

இரண்டாமவர் சொன்னார், இதைவிட மிக அபரிதமான மாய வேலைகளை செய்வார் என்றார். ஒரு சிறிய உதாரணம் வேண்டுமென்றால்,

அயற்சி அடையும்போது உறங்குவார், பசிக்கும் போது உணவு உட்கொள்வார். சுருங்கச் சொன்னால் அவர் உறங்கும்போது உறங்குவதும், உணவு உண்ணும்போது உணவு கொள்வதும் அவருக்கு கை வந்த கலை.

கதை 34.
சுமை தாங்கிகள்.

 

  • நாம் எல்லோரும் ஒரு வகையில் சுமை தாங்கிகளே !
  • ஒவ்வொருவரும் தாங்கும் சுமைதான் வேறுபடுகிறது.
  • ஒருவகையில் பார்த்தால், நாம் வாழ்க்கையின் அடிப்படையே இதில் அடங்கி இருக்கிறது.
    கையால் எடுத்து, தலையில், முதுகில் சுமக்கும் சுமையை இறக்குவது எளிது.
  • கண்ணால் எடுத்து, மனதில் சுமக்கும் சுமை இருக்கிறதே. அதை இறக்குவது மிக கடினமானது.
    ஏற்றினால் வாழ்நாள் முழுவதும் இறக்க முடியாத சுமை சில சொல்ல வேண்டுமானால், அதில்
  • முக்கியமான ஒன்று குற்ற உணர்ச்சி.

பல மதங்கள், மனதால் செய்யும் குற்றங்களை தீவிரமாக கண்டிக்கின்றன.

கிறிஸ்தவ மதத்தின் பாப மன்னிப்பு கோருதல், பாபச் சுமையை இறக்க ஒரு வழி எனலாம். இந்த ரகத்தில் ஒரு ஜென் கதையைப் பார்ப்போமா!

மனதால் தொட்டவன் கதையை இப்போது படிக்கலாம்.

இந்தக் கதை பல்வேறு கதாநாயகர்கள் பெயருடன், பல்வேறு சூழ்நிலையில் சொல்லப்ப்டுகின்றன. நாம் அவ்வகையில் ஒன்றே ஒன்றைப் பார்ப்போம்.

பிட்சுக்கள் இருவர் ஓர் நதியைக் கடந்து பயணம் செய்யவிருந்தார்கள். நதியைக் கடக்கும்போது நங்கை ஒருத்தி நதியைக் கடக்கையில் நிலை குலைந்து ஆற்றுடன் அடித்து செல்லவிருந்தாள்.
உடனே ஒரு பிட்சு, அந்த நங்கையைத் தோளில் சுமந்து அக்கறையில் விட்டுவிட்டு தன் வழியே பயணத்தை தொடர்ந்தார்.

உடன் வந்த பிட்சுவுக்கோ ஒரே கோபம், சம்பிரதாய்ப்படி ஒரு பிட்சு பெண்களைத் தீண்டலாகாது. அப்படியிருக்க, உடன்வந்தவர் பெரும் தவறு இழைத்துவிட்டதாக முனகிக் கொண்டே வந்தார்.

நமது சம்பிரதாயப்படி பெண்ணைத் தொடுவது தவறு. அதிலும் இளமையான பெண்ணைத் தொடுவது மிகவும் தவறு. அதிலும் அழகுடன் கூடிய பெண்ணைத் தீண்டுவதோ மிகவும் கொடியது. தாங்களோ அப்பெண்ணை வெகுநேரம் சுமந்து சென்றீர். இது மாபெரும் பாபச் செயல் என்றல்லாம் கூறினார்.

முதல் பிட்சுவோ, நிதானமாக, நானோ தோளில் சுமந்த அப்பெண்ணை கரையிலேயே விட்டுவிட்டேன். நீயோ இன்னமும் உன்னுடன் சுமந்து வருகிறாயே என்றார்.

பின்னுரை:

நமது சாதாரண அறிவிற்கு முதல் பிட்சு செய்ததில் தவறென்று தோன்றவில்லை. தவறென்று விவாதிப்போரும் இருக்கலாம்.

அறிவாயங்களில் மட்டுமல்ல, வாழ்கையில் கட்டுப்பாடுகள், சம்பிரதாயங்கள் எல்லாமே ஒருவரின் மனதை கட்டுப்பாடிற்குள் வைத்து இருப்பதற்கே. ஆபத்தில் உள்ள ஒருவரை காப்பாற்ற சம்பிரதாயங்கள் தடையாக வருவதாக சொன்னால் அறியாமைதான் காரணமாக இருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால் தீண்தக்கூடாது மனதால். ஆழ்ந்து நோக்கும்போது இரண்டாமவர் உள்ளதால் ஒரேயடியாகத் தீண்டி, அதனால் அதிகம் தவிக்கிறாரோ என்றுகூட நமக்குத் தோன்றுகிறது.

உள்ளத்தால் தீண்டுவதற்கும், உடலால் தீண்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை தமிழ்க் கதை ஒன்று தெளிய வைக்கும்.

கதை 35.

இரு நண்பர்கள்

சிறு வயதிலிருந்தே ஒன்றாகவே பழகி வளர்ந்த இருவர் தனது இறுதி நாள் வரை ஒரே ஊரிலேயே நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். விதியின் சதியினாலோ, சந்தர்ப்பவசத்தாலோ, இருவரின் தொழிலிலும் வாழ்க்கை முறையும் மிகவும் மாறுபட்டிருந்தது.

ஒருவர் கோவில் பூசாரியாகவும் மற்றவர் ஆலைத் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்தார்கள். பூசாரித்தொழிலில் ஈடுபட்டிருந்தவரோ நாள் முழுவதும் கோவில் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டார்.

மற்றவரோ, ஆலைத்தொழிலில் ஈடுபட்ட மிகுதி நேரங்களில் கேளிக்கைகளிலும் விலைமாதர்களிடேயும் கழித்து வந்தார்.

இரு நண்பர்களும் மற்றவரைப் பற்றி நினைப்பதுண்டு. பூசாரியானவர், தம் தொழிலில் அதிருப்தி கண்டார். இறைவன் இருக்கிறானோ என்ற ஐயம் கூட கொண்டிருந்தார். தான் ஆராதித்தும் பயன் ஒன்றும் இல்லை என்று நினைத்து வந்தார். பூசைத்தொழிலில் இல்லாமல் ஆலைத்தொழிலில் ஈடுபட்டும் பலவித சுகங்களை அனுபவிக்கும் நண்பன் வாழ்க்கை சிறந்ததென கருதி வந்தார்.

மற்றவரோ, தன் வாழ்க்கை ஈனமானது என்றும், நண்பர்போலவே தானும் அடுத்த பிறவியிலாவது இறைவன் பணியில் வாழவேண்டும் என்று நினைப்பார். தான் இறை பணியில் இல்லாதது தனது துர்பாக்கியம் என்றும், நண்பனே நல்வாழ்க்கை வாழ்பவனென்றும் கருதினான்.

இருவரையும் ஒன்றாகவே மரணம் வந்தடைந்தது.

பூவுலகிருந்து ஒன்றாகவே மேலுலகம் சென்று, அடுத்தடுத்து இயங்கும் நரகம் சுவர்கத்தின் நுழைவாயில்களை இருவரும் அடைந்தனர்.

பூசாரி சுவர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து தன்னை அடையாளம் சொல்ல, அவ்விடத்து கணக்காளர், அவருக்கு அங்கு அனுமதி இல்லை என்றும், அவருக்கு நரகம் அனுபவிக்க விதித்திருப்பதாகக் கூறினார்.

அதை நம்ப இயலாத பூசாரி, நரகத்தை நோக்கி செல்லத் தொடங்கினார்.

சிற்றின்பங்களில் ஈடுபட்டாலும் நண்பனின் நற்செயல்களில் மனதை பறிகொடுத்த நண்பன் தனக்கு நரகம் தான் கிடைக்கும் என்று உறுதியாக நம்பி நரக வாயிலில் காத்திருக்க, கணக்கர் அவருக்கு சுவர்க்கம் விதித்திருப்பதாகக் கூற நம்ப இயலாத மனத்துடன் சுவர்க்கத்தை நோக்கி நடக்கலானார். வழியில் சந்தித்தார் நண்பனை.

குழம்பி நின்ற மானிட உயிருடல்களை வழியில் வந்த தேவர் ஒருவர் விளக்கம் கொடுத்தார்.

நாம் செய்யும் பாவங்கள் புண்ணிய செயல்கள், உடலால் செய்யும் செயல்களைப் பற்றியது மாத்திரம் இல்லை. அது ஒருவரின் உள்ளத்தின் செயல் பாட்டையும் பற்றியது. மனதின் செயல்பாடு பூசாரியை நரகத்துக்கு கொண்டு சென்றது..

சிற்றின்பங்களில் ஈடுபட்டிருன்தாலும் மனதினால் இறைவனையும், இறைபணியைம் தீண்டியதால் சுவர்க்கத்திற்கு உரியவரானார் அவருடைய நண்பர்.

மனதினால் செய்யும் நற்காரியங்களும் குற்றமும் அருள் உலகத்தில் கண் காணிக்கப்படுகின்றது.
உடலளவில் செய்யும் நன்மை தீமைக்கு பொருள் உலகில் பரிசோ, தண்டனையோ அளிக்கப்படுகிறது.

கதை 36.
உறக்கம்

ஜப்பானிய போர்வீரரொருவர் எதிரிகளின் பிடியில் சிக்கினார். சிறைப்படுத்தப்பட்டவருக்கு , இரவு உறக்கமே வரவில்லை. பொழுது விடிந்ததும் எதிரிகள் கேள்விகளால் துளைப்பார்கள். துன்புருத்தலுக்கும் சித்திரவதைக்கும் குறைவிருக்காது. இவ்வளவுக்குப்பின் கொலையும் செய்வார்கள்.

இந்த எண்ணங்கள் போர்வீரரை வாட்ட, இரவு உறக்கம் இன்றித் தவித்தார். அப்போது ஜென் ஆசிரியரின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அது என்னவென்றால்:

நாளை என்பது உண்மை அல்ல. அது ஒரு கற்பனை. அதாவது நமது ஐந்து உணர்வுகளால் உணரக்கூடியது எல்லாமே கற்பனைதான்.

(இந்த விளக்கத்தை சீரணிப்பது அவ்வளவு சுலபமில்லை. அதனால், இதை மனதின் ஒரு மூலையில் பத்திரமாக வைத்திருங்கள். என்றோ ஒருநாள் ஆன்மிக அறிவில் – பௌதிக அறிவுகளை அடைந்தாலும், அதையும் கடந்த அறிவின் மீது ஒரு விருப்பம் வரும். அன்று இதன் உண்மை தெளிவாகும்)

இந்த எண்ணங்கள் மனதில் படர, அமைதியடைந்து ஆழ்ந்த உறக்கத்தை ஆட்கொண்டார். அந்த போர் வீரர்.

மனோதிடம்.

அஞ்சா நெஞ்சு, கலங்கா உள்ளம், என்றெல்லாம் அடை மொழியாக கேட்பதுண்டு.
இந்த புகழப்பட்ட மனத்திடம் அடைந்திருப்பது ஆன்மிக அல்லது அறிவு வளர்ச்சியில் எல்லையை தொட்டவராக இருப்பது உறுதி.

நான் முன்னமே சொன்னதைத் திரும்ப சொல்கிறேன், ஜென் ஆசிரியரோ, வேறெந்தபாதையில் உள்ள “”குரு” என்று அழைக்கப்படுபவர் எவருமே அத்தனையும் கற்றவர் இல்லை. அறிவின் எல்லையைத் தொட்டவர் இல்லை.

அவர் அறிவுப்பாதையில் பயணம் செய்கிறார். வழித் துணைக்கு மாணவர்களை அழைத்துச் செகிறார். தான் வழி நடத்தும் மாணவரை விட அதிகம் அறிந்தவராக இருக்க சாத்தியம் உண்டு. இதே ஜென் பாதையில் சில சமயங்களில் வழி நடத்தி செல்லப்படுபவர் வழிகாட்டியை விட சிறந்தவராக இருந்த வரலாறும் உண்டு.

மனோதிடம் அவசியமா? உறுதியான மனம் படைத்தவர் உடல் திடம் மாத்திரம் உள்ளவரைவிட அதிக சாதனைகளைப் படைத்த வரலாறுகள் கணக்கில் அடங்காது.

மனோதிடத்தின் சிறப்பை உணர்ந்தவர், இல்லாத ஒரு மனோதிடம் தமக்கு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வவதும் காட்டிக் கொள்வதும் ஒரு சாதாரண நிகழ்வு.

மாணவர் ஒருவர் (தான் மனோதிடத்தோடு இருந்து) ஆசிரியரின் பிழையை சுட்டிக் காட்டும் கதை ஒன்றை கீழே பார்ப்போம்.

கதை 37
. குடித்தது தண்ணீர்

நில நடுக்கத்துக்கும் இயற்கையின் மற்ற கோபங்களுக்கும் பழகிப்போன ஜப்பான் நாட்டின் கதைகளில் இதுவும் ஒன்று.

முன் தினம், நில நடுக்கத்தின்போது மாணவர்களை அங்கும் இங்கும் அழைத்துச் சென்றவர். தனது மாணவர்களுக்கு மனோதிடம் கொள்ள வேண்டுயதின் அவசியத்தை வலியுறுத்த இதுதான் சரியான் தருணமென்று எண்ணினார்.

மாணவர்களை அழைத்து, நீங்கள், ஒரு ஜென் பயிற்சி பெற்றவர்கள், மிக குழப்பமான அல்லது திகிலூட்டும் சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுவாரென்று நேரிடையாகக் காண்பதற்கு ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றீர்கள்.

நிலநடுக்கம் ஆரம்பித்ததிலிருந்து முடிவுவரை நான் பதற்றமே அடையாதிருந்ததை நீங்கள் கண்கூடாக கண்டீர்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பதற்றமடையாமல் சரியான முடிவுகளை எடுப்பது முக்கியம்.

நமது அறிவாலயத்தில் மிகவும் வலுவான கட்டட அமைப்பைப் பெற்றது சமையல் அறை மாத்திரமே. உங்கள் எல்லோரையும் நான் காலம் கடத்தாது அங்கே அழைத்துச் சென்றேன். நான் திடமனத்துடன் செயல்பட்டதற்கு இது ஒரு அடையாளம். எவரும் காயங்களின்றி தப்பித்ததற்கு நான் பதற்றமடையாமல் நிலையான தெளிவான மன நிலையில் செயல்பட்டதுதான் காரணம்.

நான், என் மனது, சுயகட்டுப்பாட்டில் இருந்தாலும், சிறிதளவு அழுந்தலுக்கு உட்பட்டேன் என்பதை, நீங்கள் அறிவீர்களா?

நான் சாதாரணமாக அதிகமான தண்ணீர் அருந்துவதில்லை. (நிலநடுக்கத்தின்போது) நாம் சமையல் அறையில் இருந்தபோது நான் மிக அதிக அளவில் தண்ணீர் அருந்தினேன்.

எல்லா மாணவர்களும் மௌனமாக ஆசிரியரின் பேச்சில் கவனமாக இருக்க ஒரு மாணவன் மாத்திரம் சிரித்துக் கொண்டிருந்தார்.

கோபமுற்ற ஆசிரியர், எதற்காக சிரிக்கிறாய் என்று வினவ, மாணவன் பதில் சொன்னார், ‘அய்யா, நீங்கள் குடித்தது தண்ணீர் அல்ல, சோயாவில் தயாரிக்கப்பட்ட ரசம்’ என்று.

வாசகர்களே, கவனியுங்கள், ‘ஆசிரியர் எந்த மனநிலையில் இருந்திருக்கிறார். தண்ணீருக்கும் ரசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்”!!

நாளை என்ற கானல் நீர்

நாம் அறிந்தவரில் வாழாமலேயே செத்தவர்கள் எத்தனை பேர்?

மக்களில் நூறில் தொண்ணூற்று ஒன்பது பேர் வாழாமலே இறந்தவர்கள் என்று சொல்லலாம். இதில் பாதி, செத்து மடிந்த கடந்த காலத்திலேயே மனதை மூழ்கடித்து கடைசியில் மடிந்தவர். மீதி தெரியாத, இன்று இல்லாத நாளையில் மூழ்கி மடிந்தவர்.

இன்று வசதி அடைந்தவரும், நேற்றுவரை எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டேன் என்று அங்கலாய்த்துக் கொண்டு, இன்றைய பொழுதையும் துயரத்தில் கழித்தவர்கள். இன்றுள்ள சுகத்தை அனுபவிக்காது நாளை வரவிருக்கும் துக்கத்தை மனதில் நிரப்பிக் கொண்டு அழுதே வாழும் மக்கள் வகைக்கும் குறைவில்லை.

நமது வாழ்நாளில் எத்தனநேரம் நாம் வாழ்கிறோம்?

உறங்குகின்ற நேரத்தைக் கழித்தால் மூன்றில் ஒன்று அடிபட்டுவிடும். மிகுந்த மூன்றில் இரண்டு பங்கில் பெரும் பகுதி கடந்தகால சம்பவங்கள், பிரத்தியேகமாக கசப்பான சம்பவங்களும், எதிர்காலத்தில் பயமுறுத்த சாத்தியமுள்ள சம்பவங்களும் ஆக்கிறமித்துக் கொள்கின்றன. நாம் வாழ்கிறோம் என்றால், இங்கு, இப்போது உணர்வதை, நேற்று உணர்ந்ததை அல்ல நாளை உணரலாம் என்ற நம்பிக்கையும் அல்ல.

ஆக, இறந்து போன கடந்த காலத்துள் நுழைந்து, இல்லாத கற்பனையில் வளர்ந்த பயங்களை தலைமேல் சுமந்து – நமது வாழ்வை துக்கம் நிரம்பியதாக செய்துகொள்ள உத்திகள் எத்தனை உண்டோ அத்தனையும் செய்துவிடுகிறோம்.

இன்றைய பசிக்கு நேற்று உண்டதும் நாளை உண்ண உள்ள வாய்ப்பும் உதவுமா?

நேற்றைய உணர்வு (கடந்தது) நிணைத்துப் பயன் இல்லை. நாளை உணர்வு ஒரு சாத்தியக்கூறு, வரும் வரை நிச்சயம் இல்லை.

நாம் இதில் செலவிடும் நேரத்தையும் கழித்தால், ஒரு நாளில் சில நிமிடங்களே நாம் இங்கு, இப்போது என்று உணர்ந்து வாழ்கிறோம்.

கீழ்வரும் குட்டிக்கதையில் ஆன்மீகப் பயிற்சி நமக்கு எவ்வாறு உதவும் என்று பார்க்கலாம்.
செயற்கை அழித்த இயற்கை அழகு

ஒரு மிக புகழ்பெற்ற, பெரிய ஜென் கோயில். அந்தக் கோயிலில் ஒரு மிகப்பெரிய தோட்டம். அந்தத் தோட்டத்தை நிர்வகிக்கும் வேலை ஒரு கோவில் பூசாரிகளில் ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. இந்தப் பூசாரிக்கு மரம், செடி, கொடி, மலர் என்றால் கொள்ளைப் பிரியம் இவரை பூ- பூசாரி என்போமா?

இந்த பெரிய ஜென் கோவிலுக்கருகில் ஒரு சின்ன ஜென் கோயில். அதில் ஒரு வயதான ஜென் ஆசிரியர்.

பெரிய ஜென் கோவிலுக்கு ஒரு விசேஷ விருந்தினர் அல்லது ஒரு வி.ஐ.பி வரவிருக்கிறார்.

பூசாரி அன்று தோட்டத்தைச் சுற்றி வந்தார். தோட்டத்தை சுத்தம் செய்வதிலும், அழகு செய்வதிலும் முழு கவனமாக இருந்தார். களைககைப் பிடிங்கி எரிந்தார். செடிகளை வெட்டி சீர் செய்தார். செடி, கொடிகளிலுள்ள பூச்சிக்கூடுகளை, சிலந்தி வலைகளை களைவதிலும் நேரம் செலவிட்டார். மேலும் தோட்டத்தில் வாடி உதிர்ந்திருந்த காய்ந்த இலைகளை அழகழகாக குவித்தும் வைத்தார்.

இரண்டு கோவில்களையும் பிரித்த அந்த மதில் மேலிருந்து சிறிய கோவிலைச் சேர்ந்த கிழ ஜென் ஆசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார்.

செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்த திருப்தியில் தான் செய்த வேலையில் தாமே பெருமிதம் கொண்டார்.

மதிலின் அப்புறம் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவரை நோக்கி , தோட்டம் இப்போது மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது அல்லவா என்றார்.

”ஆம்” என்று பதிலளித்த அம்முதியவர், ஆனால் ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது. என்னை மதிலைக் கடக்க உதவினால் நான் சரி செய்ய உதவுகிறேன் என்றார்.

சற்று தயங்கிய பின்னர் பூசாரி கிழவரை மதிலின் இப்புறம் வர உதவினார்.

மதிலைக் கடந்தவர் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, தோட்டத்தின் நடுவே உள்ள பெரிய மரத்தை அணுகினார்.

மரத்தைப் பற்றி, சில வினாடிகள் அதன் பெரிய கிளையை குலுக்க, அதிலிருந்த வாடிய இலைகள் சுற்றும் விழ ஆரம்பித்தது.

“இப்போது சரியாகிவிட்டது”, என்னை மதிலின் அப்புறம் கடக்க உதவுங்கள் என்றார். கதை முடிந்தது! கருத்து புரிந்ததா?

இயற்கையே அழகு.

\கதை 38.
வெற்றி கொள்ள

வாட்போர் வீரரை வெற்றிகொள்ள என்ன தகுதி வேண்டும்?

நிச்சயமாக வாட்போரில் வல்லுனராக இருக்க வேண்டும். அதுபோல, எந்தத் துறையிலும் வெற்றிபெற அத்துறையில் பயிற்சியும் திறமையும் அவசியம் என்று நாம் அறிவோம்.

நாம் அறியாதது.

தான் வாட்போரில் வீரரென்றால் வாட்போர் அறியாதவரை வாட்போருக்கு அழைப்பது அறிவீனம். அப்படிப்பட்ட, அறிவில்லாத வீரர்களை வெல்வது எளிது என்பது கீழே காணும் கதை தெரிவிக்கும்.
வாள் வீரனை வென்ற டீ வீரர்

ஜப்பானிய டீ உபசரிப்பு என்ற கலையில் தேர்ந்த ஒருவர், (டீ மாஸ்டர் என்போமா?) தற்செயலாக போர்வீரன் ஒருவரை கோபப்படுத்திவிட்டார்.

கோபம்கொண்ட வீரரோ, விஷயத்தை ஓர் வாட்போரில் முடிவு செய்யலாம் என்று அறிவித்துவிட்டார்.

நமது மாஸ்டர், வாளே தூக்கியதில்லை. அவர் ஒரு வாட்போர் வீரருடன் போர் செய்வதாவது!
குழ்ப்பத்தின் எல்லையை எட்டியவர் வாட்போரில் சிறந்தவராகக் கருதப்பட்ட ஜென் ஆசிரியரான ஒரு நண்பரை உதவி கேட்க தீர்மானித்தார்.

நம்ம ஊர் மாதிரிதான். முதலில், தனது ஜென் ஆசிரியர் நண்பரை வரவழைத்து தேனீர் விருந்தளித்தார்.

விருந்தாளியாக வந்த ஜென் ஆசிரியர் டீ மாஸ்டர் டீ வழங்கியபோது, டீ மாஸ்டரின் வழங்கும் கலைத் திறமையையும், அதில் நேர்த்தியையும் பிழை இல்லா கவனமும், அப்போது அவர் முகத்தில் திகழ்ந்த நிகரில்லா சாந்தியையும் கண்டு வியந்தார்.

டீ மாஸ்டரின் பிரச்சினையைக் கேட்ட ஜென் ஆசிரியர், கூறினார்.

‘நண்பரே, நாளை அந்த வாட் போர்வீரருடன் யுத்தம் செய்ய தயாராகுங்கள்’.

‘அப்போது, கொடுக்கப்பட்ட வாளை தலைக்கு உயரே உயர்த்தி பிடியுங்கள். அடுத்த கணம் வாளை வீச தயாராக இருப்பதைப்போல், அதேச் சமயம் உங்கள் மனநிலை இப்போது டீ வழங்கும் கலையை கையாளும்போது உள்ளதைப்போல மிக தீர்க்கமான கவனமும் சாந்தமான பார்வையும் உடன் இருத்தல் வேண்டும்’ என்றார்.

அந்த நாளும் வந்தது. ஜென் ஆசிரியர் சொன்னபடி டீ மாஸ்டர் நடந்தார்.

வாட்போர் வீரர் முன்னேறினார். தன் வாளுடன், எதிரியின் முகத்தை உற்று நோக்கினார்.

டீ மாஸ்டர், முழு கவனத்துடன் கூடிய சாந்தமான முகத்துடன், வாட்போர் வீரரான தன் எதிரியைப் பார்த்த வண்ணம் இருந்தார்.

சிறிது நேரம் சென்றது. வாட்போர் வீரர் தன் வாளை உரையில் இட்டார். தலை குனிந்தார். மறுபேச்சின்றி வந்த வழியே விரைந்து நடந்தார்.

தான் எந்தத் தொழிலில் இருந்தாலும் செய்யும் தொழிலில் தீவிரமாக மனதை செலுத்தினால், அதில் சிறந்து விளங்குவது மட்டுமல்ல மற்ற புதிய தொழிலிலும் வெற்றி பெறலாம்.

போர் வீரர் ஏன் பின் வாங்கினார்?. சாந்தமான, சலனம், பயம், கோபம் இல்லாத முகம் கொண்ட ஒருவருடன் , கத்திச் சண்டை என்ன, கத்திப் பேசி சண்டை கூட போட முடியாது.

கதை 39.
பரிசு.

மிக வயதான ஒரு போர்வீரர். ஆனாலும் எவரையும் வெல்லும் திடமும் சக்தியும் உள்ளவர். அவர்தம் பெருமை அந்நாட்டில் வெகுவாக பரவி இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து அவரிடம் கற்க, மாணவராக விரும்பி அவர் வசித்த கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

ஒருநாள் வயதில் குறைந்த, திமிர் பிடித்த ஒரு போர்வீரர் அந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். எப்படியாவது பெரும் பேரும் புகழும் உள்ள இந்த ஆசிரியரை வென்று புகழ் ஈட்ட விரும்பினார்.

இந்த இளையவருக்கு ஒரு தனித்திறமை என்னவென்றால், எதிரியின் குறையை எளிதில் கண்டுபிடித்து அதை உபயோகித்து எதிரியை வீழ்த்துவதாகும்

முக்கியமாக, வாட் போரிலும், குத்துச் சண்டை ஆகிய போட்டிகளிலும் எப்போதுமே எதிரியை முதலில் அசையச் செய்து, அதிலிருந்து அவர் குறையை கவனிப்பதாகும். வாள் வீச்சில் மட்டுமல்லாமல், இந்த அணுகுமுறை வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப் படுகிறது.

குறையை கண்டுபிடித்த மறுகணமே தகுந்த உத்தியோடு எதிரியின் மீது அசுர பலத்தோடு, மின்னல் வேகத்தில் பாய்ந்து, எதிரியை வீழ்த்துவதாகும்.

அன்று வரை அவரிடம் போட்டியிட அனைவருமே தோற்றார்கள் எனலாம்.

அப்படிப்பட்ட போர்வீரர் முதிய ஆசிரியரிடம் போருக்கு அழைப்பு விடுக்க, ஆசிரியரும் முழுமனதுடன் போரிட சம்மதித்தார். ஆனால் மாணவர்களோ தனது ஆசிரியர் திமிர் பிடித்த போர்வீரருடன் போரிடுவதை விரும்பவில்லை.

குறித்த நாள் – நேரத்தில், இருவரும் வாள் முனையில் சந்தித்தனர். ஆசிரியர் அமைதி காக்க, வாலிபன் பொறுமை இழந்தான். ஆசிரியரை முதல் அடி எடுத்து வைக்க செய்ய ஏதேதோ முயற்சிக்க, ஒன்றும் பயனளிக்கவில்லை.

கடைசியாக தீச்சொற்களை உபயோகித்து திட்டவும் முகத்தில் புழுதியை வாரிவிட, எச்சிலை துப்ப – அப்படியாவது ஆசிரியர் கோபமுற்று முதல் அடி வைப்பாரோ என்று காத்திருக்க, எதிர்பார்த்த முதல் அடியை ஆசிரியர் எடுத்த வைக்காதிருக்க, மேலும் மேலும் புதியவன் கெட்ட வார்த்தைகளைக் கொட்டினான்.

என்றாலும், அவன் எதிர்பார்த்த பலன் ஒன்றும் கிட்டவில்லை. மணிக்கணக்கில் ஆசிரியர் அமைதியாகவும், சலனம் இன்றி போருக்கு தயார் நிலையில் நின்றார்.

போட்டிக்கு அழைத்தவர் என்ன செய்தார்? ஓட வேண்டியது தானே?

தன் முயற்சியில் தோல்வியுற்ற இளையவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினான்.

ஆசிரியரை சூழ்ந்த மாணவர்கள், தங்கள் எவ்வாறு அந்தத் திமிர் பிடித்தவனை தப்பிக்க விட்டீர்கள்? அவனது அத்தனை திட்டுகளையும் அசிங்க செயலையும் பொருத்துக் கொண்டீர்கள்? எதனால் எதிரி தோல்வியை தழுவினான்? என்று சரமாரியாக வினவ, ஆசிரியரின் மறுகேள்வியில் எல்லா பதிலும் அடங்கி இருந்தது.

ஒருவர் பரிசு ஒன்று கொண்டு வந்து உங்களுக்கு தருகிறார். நீங்கள் வாங்க மறுத்து விடுகிறீர்கள். கொண்டு வந்த பரிசு யாருக்கு சொந்தம்?”

கதை 40.
நிதானம்

கீழே வரும் கதைக்கு முன்னுரை தேவைப்பட்டால், இத்தனை கதைகளை முன்னால் படித்ததற்குப் பயன் எதுவும் இல்லை.

அடே, அப்படியா!

ஒரு அழகான கிராமம். அதில் ஒரு மிக அழகான இளம் பெண் ஒருத்தி, வயதோ, “”திருமண ரெடி”
ஆனால் திருமணம் ஆகவில்லை. பெண்ணோ கருவுற்றிருந்தாள்.

கண்டுபிடித்த பெற்றோர்க்கு கட்டுக்கடங்காத கோபம். பெண்ணின் கள்ளக்காதலன் யார் என்று கேட்டு அவர்கள் துளைத்தார்கள்.

உண்மையை சொல்ல பெண்ணுக்கு பயம். காதலனை கட்டி வைத்து உரித்து விடுவார்களோ என்று.

முதலில் வாயைத் திறவாத பெண். வெகுநேரத்திற்கு பின்னர் அங்கே வசித்த ஜென் ஆசிரியர் ககுயின்தான் தன் கள்ளக்காதலன் என சுட்டிக் காட்டினான்.

அப்பழுக்கற்ற வாழ்க்கை நடத்தி நற்பெயருடன் வாழும் நல்லவர் பேர் சொன்னால் அவருக்கு கேடு ஒன்றும் வராது, தன் காதலனும் அடி-உதையிலிருந்து பப்பலாம் என்று நினைத்தாள் போலும் அந்த பெண்.

நம்பாதவர்களும் நம்பினார்கள்.

கோபத்தில் கொதித்த பெற்றோர்கள் ககுயின் அவர்களிடம் சென்று தம் மகள் சொன்னது உண்மைதானா என்று கேட்க, அவர் பதிலளித்தார். “அப்படியா?”

மாதங்கள் கடந்தன. பெண்ணும் ஒரு குழந்தையைப் பெற்றள்.

கிராமமே ககுயின் அவர்களை குற்றவாளியாகவும், ஈனனாகவும் பார்த்தது.

பெண்ணின் பெற்றோரும் மற்றோரும், அந்தக் குழந்தையை ஜென் ஆசிரியர் ககுயின் அவர்களிடம் கொண்டு சென்று, இந்தக் குழந்தை பிறப்பதற்கு காரணமாகியதால் நீ தான் இதை வளர்ப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்கள்.

மக்களின் நன்மதிப்பை இழந்து ஏளனத்திற்கு உள்ளாகி பின்னரும் அமைதியை இழக்காத ககுயின் அவர்கள், இப்போது பதில் சொன்னதும், அதே. “”அடே அப்படியா?”
குழந்தையைப் பெற்றோரிடமிருந்து வாங்கிக் கொண்ட ககுயின், அன்புடன் அந்த குழந்தையை வளர்த்தார்.

சில மாதங்கள் கடந்தன. உண்மையைச் சொன்னால் தன் காதலனை துன்புறுத்துவார்களோ என்று பயந்து பொய் சொன்ன பெண்ணால் வெகுகாலம் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒருநாள், குழந்தையின் உண்மை தந்தை யார் என்று சொன்னாள்.

பெண்ணின் பெற்றோர், ககுயின் அவர்களைக் கண்டு, நடந்ததை கூறி, மன்னிப்பு கேட்டனர்.
குழந்தையைத் திருப்பி தருமாறு கோரினர். ‘அடே, அப்படியா’ ? என்று சொல்லி குழந்தையைத் திருப்பி தந்தார் ககுயின் அவர்கள்.

கதை 41.
புதுமையான வாழ்த்து

35-MDS1- BLESSINGS OR CURSE

நமக்குத் தெரிந்தவரை வாழ்த்து என்றால், இப்படித்தான் இருக்கும்:

‘நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க’. ‘நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் வாழ்க’, என்றெல்லாம் வாழ்த்தக் கேட்டுப் பழகியிருக்கிறோம்.

இப்படிப்பட்ட வாழ்த்துக் கேட்டு பழக்கப்பட்டவருக்கு, கீழே வரும் கதையில் வரும் வாழ்த்து எந்த ஒரு சாதாரண மக்களுக்கும் கோபத்தையும் ஆச்சரியத்தையும் தரும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்றாலும் விளக்கம் கேட்டவுடன், இது தப்பில்லை என்றும் தோன்றுகிறது அல்லவா. படித்துவிட்டு சொல்லுங்கள்.

ஒரு தனவந்தர் இருந்தார். அவர் ஒரு ஜென் ஆசிரியரை விருந்துக்கு அழைத்தார்.

பல பணக்காரர்கள் எப்போதும் புகழ்பெற்றவரை, சாமியார்களை (ஆதாயம் தேடித்தான்) விருந்துக்கு அழைப்பார்கள்.

தொழில் அதிபர்கள் உயர் அதிகாரிகள் என்று ஒரு கூட்டம் பலர் தாங்கள் அடையும் கெட்ட பெயரிலிருந்து சிறிய விடுதலை பெற, பிரலமான சாமியார்களைச் சுற்றி வருவதுண்டு.

தவறாமல் தவறு செய்யும் பொல்லாத தலைவர்கள் தான் செய்த பாபங்களிலிருந்து விடுதலை பெற எல்லோரும் கையாளும் வித்தை சாமியார்களை சரண் அடைவது நாம் கண்டதே?

இப்படியெல்லாம் செய்து வருவதனால் பாபங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறதா இல்லையா என்பது நமது விவாதத்தில் இல்லை.

விருந்து முடிந்ததும், ஜென் ஆசிரியரை, நானும் என் குடும்பத்தாரும் நலமாக வாழ நாலு வார்த்தைகள் கூறுங்களேன் என்றார், விருந்தோம்பியவர்.

ஆசிரியர் சொன்னார்.

உன் பாட்டனார், பாட்டி அவர்கள் சாக,

உன் தந்தை தாய் சாக,

பின்னர் நீங்கள் உங்கள் மனைவி சாக.

திகிலடைந்த தனவந்தர். ஆசிரியரே, நிறுத்தும் உங்கள் ஆசிகளை. இதற்காகவா உஙளை அழைத்து மரியாதை செய்தேன் என்று கதறினார்..

ஆசிரியர் கூறினார்.

ஐய்யனே, கவனித்துப்பாரும், உங்கள் பாட்டனார் பாட்டியார் உயிருடன் இருக்கும்போது உங்கள் தாயோ தந்தையோ இறந்தால் அது எத்தகைய தாங்க முடியாத துயரை முதியோருக்குத் தரும். அது போலவே உங்கள் தாய் தகப்பனுக்கு முன் நீங்கள் இறந்தாலோ ..

மாறாக, அவர் அவர் ஆயுட்காலம் வாழ்ந்து, குறைந்த வயதில் இறந்து போகாமல், வரிசைப்படி வாழ்ந்து இறந்தார்கள் என்றால் துயரம் குறையும்.

தனவந்தர் சொன்னார், ஐயா புரிந்தது.

வாசகரே, உங்களுக்கு புரிந்ததா?

கதை 42.
செத்தால் தான் தெரியும்

ஒரு குறுநில மன்னர் ஒரு ஜென் ஆசிரியருடன் உறையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது மன்னர் கேட்டார். இறந்த பின்னர், நாம் கற்ற ஜென் முதலான அருள் கல்விகள் பயனுக்கு வருமல்லவா என்று.

ஆசிரியர் சொன்னார், நான் இதுவரை செத்ததில்லையே, உங்களின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல என்று.

பின்னுரை:

நமக்கு தெரிந்த சாமியார்கள், சமயவாதிகள் மகாவிஷ்ணுவுடன் டெலிபோனில் பேசியதாகக்கூட சொல்வார்கள். நாரதரைப்போல மூன்று உலகங்களையும் தினம்தோரும் சுற்றிவருவது போலவும் பேசுகிறார்கள்.

மேலும், சிலர் “” நான் கல்கி அவதாரம், நான் கிருஷ்ணாவதாரம் என்றெல்லாம் கூறிக்கொண்டு திரியும் போலி ஆசாமிகள் திரியும் இந்நாளில், உண்மை பேசும் மக்களை, அதாவது “” நான் செத்து உணர்ந்தால் மட்டுமே, சாவின் பின் நடக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி பேச அருகதை உண்டு என்று சொல்பவர்”, தங்களுக்குத் தெரியாது என்று, நான் உணர்ந்து அறியாதவைகளை பேசமாட்டேன் என்பவர் கிடைப்பது அதிசயந்தான்!

தான் உணர்ந்து அறியாத, ஏட்டுக் கல்வியின் ஆதாரத்தில் மாத்திரமே, அறிந்தவர் உணர்ந்து அறிந்தவர் நிலையிலிருந்து பிறருக்கு விளக்கம் அளிப்பது சரியல்ல.

இங்கு நாம் காண்பது ஒரு சிறந்த ஜென் ஆசிரியரை மட்டுமல்லாமல் ஒரு நேர்மையான மனிதரையும் தான்.

பேச்சுகள்:

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், விவாதம் செய்வது ஒரு கலையாகவும், கல்வி முறையாகவும் செயல்பட்டு வந்தது. இதை தர்க்க ஸாஸ்திரம் என்று அழைத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் பல கருத்துகள் உண்டாக்கப்பட்டு வந்தன. உயிர்கள் எவ்வாறு தோன்றின? கடவுள் இருக்கிறாரா? இப்படிப் பெறும் அறிவு, சித்தாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தான் அறிந்தவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் மேன்மையானதே. அது பிறர்க்கு பயன் தரும்.

பகிர்ந்தளிப்பதையே முழு நேர வேலையாக வைத்துக் கொண்டால்.. சுய முன்னேற்றம் தடை படுமே.

அதுவல்லாமல், நாம் கற்கும் பல விஷயங்கள் பேசுவதற்கல்ல. மனதில் உள்ளாக்கிக் கொண்டு அதன்படி வாழ்வதே.

உதாரணமாக, ஐஸ்கிரீமைப்பற்றி எத்தனை பேசினால் (அல்லது எத்தனை கேட்டால்) நமது வாய் இனிக்கும்?

கதை 43.
ஏன் பதில் சொல்ல முடியாது?

ஒருவர், க்யொகென் என்ற ஒரு ஜென் மாஸ்டரை அணுகி, ஜென் என்றால் என்ன என்று கேட்டார்..
இந்த ஜென் ஆசிரியரை ‘ ஐயா, புத்த பகவான் இந்தியாவில் இ¤ருந்து சீனாவுக்கு ஏன் வந்தார் என்று கேட்கிறார் ஒருவர்’.

அவர் பதிலளித்தார் ஜென் என்பது, ஒரு சூழ்நிலை. ‘ஒரு மனிதன் ஒரு மலையின் உச்சியில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் வாயினால் கௌவிக்கொண்டு, அதே சமயம் தன் கைகளோ கிளையைப் பற்றி இருக்கவில்லை. காலோ தரையில் இல்லை.

இப்படிப் பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல வாயை திறந்தால், கீழே இருக்கும் அதல பாதாளத்தில் விழுந்து உருத்தெறியாமல் அழிந்து போகும் அபாயம்.

என்னதான் கற்றிருந்தாலும் இப்போது பதிலளிக்க வாய் திறந்தால், சப்தம் வரும் முன்னரே ஆள் காலி. மௌனமாக இருந்தாலோ இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியாதோ என்று சந்தேகிக்கும் நிலை.
இதோடு முடிகிறது இந்த கதை. இந்தக் கதை, கற்பிக்கும் பாடம் என்னவென்றால், “”ஐயா, பல விஷயங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. ஒருவர் விருபம்¤ விளக்க முயன்றாலோ, மிகப்பெரும் தோல்வி அடைவார். பல விஷயங்கள் தானே உணருவது அல்லது அந்தக் குறிக்கோளை நோக்கி செல்வது பயன் தரும். அப்படி இல்லாமல் வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டால் அது எவருக்கும் பயன் தராது’ என்பதே.

கதை 44.
அகங்காரம்

ஈகோ (EGO) என்ற ஆங்கில பதத்திற்கு நான் அறிந்த தமிழ் விளக்கம். ‘தான் தன் எண்ணங்கள் எல்லாமே ஒரு முக்கியமானது என்ற மனப்பான்மை’.

இது போன்ற மனோபாவங்கள் மனிதனுக்கு துயர் தந்தாலும் மனித செயல்பாட்டுக்கு மிக அவசியமாக உள்ளது. ஆனால் இதுவே பல இன்னல்களுக்கு வித்தாகும்.

இது போன்ற எண்ணங்களைக் களைந்துவிட்டால் ஒருவனை ஞானி என்று மக்கள் அறிகிறார்கள்.
இந்தவித மக்களில் சிலர் அதிபுத்திசாலிகள், திறமைசாலிகள் என்று சமூ கத்திலே அங்கீகாரம் பெற்றவர்கள்.

இவர்கள் தங்கள் எடுத்த பணியில் வெற்றிகள் பெறுவதுண்டு. புகழ் அடைவதும் உண்டு.

இதைவிட முக்கியமாக, இவர்கள் எளிதில் தோல்வியையும் அடைவார்கள்.

டாங்க் வம்சத்தை சேர்ந்த ஒருவர், ஒரு நாட்டின் தலைமை அமைச்சராக இருந்து வந்தார். அந்தநாட்டிலே, புத்த மதக் கோட்பாடுகளில் அதிக அறிவு படைத்தவர் என்ற புகழ் பெற்ற அவர் சிறந்த ராஜ தந்திரியாகவும், படைத் தளபதியாகவும் பெயர் பெற்று விளங்கினார்.

பெரும் புகழ் கொண்டவராக இருந்தாலும் செல்வத்தில் செழித்தவராக இருந்தாலும் பணிவுடன் ஒரு புத்தர் வழி நடக்கும் சாதாரணமானவராகவே நடந்து கொண்டார்.

தன் மதிப்பிற்குரிய ஒரு ஜென் ஆசிரியரின் கீழ் மாணவராக இருந்து வந்தார். ஆசிரியருக்கும் மாணவருக்கும் யாதொரு பிரச்சனையும் இன்றி காலம் கழிந்தது.

ஒருநாள், மாணவர் தன் ஆசிரியரை, “”ஐயா புத்த மத கோட்பாடுகளின்படி அகம்பாவம் என்றால் என்ன?” என்று மிகப்பணிவுடன் வினவினார்.

ஆசிரியரின் முகம் சிவந்தது. எப்படிப்பட்ட முட்டாள்த் தனமான கேள்வியை கேட்கிறீர்கள் என்று கேலி மிகுந்த தோரணையில் பதிலளித்தார்.

முற்றிலும் எதிர்பாராத ஒரு பதிலும், அதில் கண்ட கேலியும் அமைச்சரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருள் கோபம் பொங்கியெழுந்தது.

புன்முறுவல் பூக்க, ஆசிரியர் கூறினார். பெருமதிப்பிற்குரிய முதலமைச்சரே ‘இதுதான்’ (தாங்கள் வெளிக்காட்டியது) அகங்காரம் என்பது, தான் என்ற மனோபாவம் என்று விளக்கினார்.

கதை 45.
பகல் கனா

இது ஒரு பெரிய விஷயம். எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் பெரும்பாலோர்க்குப் புரியாது. சிலருக்குப் புரிந்தாலும் பயன்படாது.

ஓட்டங்கள் என்னும் வரவிருக்கும் புத்தகத்தை முழுவதும் ஆழ்ந்து அலசி அறிந்தால் இது எளிதில் விளங்கும்.

ஆன்மிக அறிவில் முதிர்ந்தவர்க்கு சுலபமாக தானாகவே புரியும். நான் முன்னால் சொன்ன கதையில் வந்த (மரக்கிளையை வாயினால் கௌவிக் கொண்டிருக்கும்) மனிதனின் நிலையில் உள்ளேன். இருந்தாலும் விளக்கம் சொல்ல முயற்சி செய்கிறேன்.

ஆசிரியர்

புகழ் பெற்ற “தோ” மாஸ்டர் (TAO) சுவங்க் ட்சூ அவர்கள் ஒருமுறை ஒரு கணா கண்டார். அவர் ஒரு பட்டாம் பூச்சியாக அங்குமிங்கும் பறப்பதைப் போல.

அந்தக் கனவில் தான் ஒரு மனிதனென்ற உணர்ச்சியோ எண்ணமோ முற்றிலும் இல்லாததை உணர்ந்தார். தான் ஒரு பட்டாம் பூச்சியாகவே உணர்ந்தார். உறக்கத்திலிருந்து மீண்டபோது தான் மனிதனாகக் கிடப்பதை உணர்ந்தார்.

அவருள் எழுந்த சந்தேகம் என்னவேன்றால், ‘நான் மனிதனாக் இருந்து பட்டாம்பூச்சியாகக் கற்பனை செய்து கொண்டிருந்தேனா‘ அல்லது ‘பட்டாம்பூச்சியாக இருந்து இப்போது நான் மனிதனாக இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறேனா‘ என்று..

விளக்கம்:

உடல் கம்யூட்டர் ஹார்ட்வேர் போலவும் உயிர் என்பதை சாப்ட்வேர் போல கற்பனை செய்து கொள்ளலாம்..

கண்ணில் தெரியாத சாப்ட்வேர் ஹார்டுவேர் அனுப்பும் செய்திகளின் அடிப்படையில் கண்ணில் தெரியும் ஹார்டுவேரை இயக்குவது என்பதை இன்று அறி¤யாதவர் எவரும் இல்லை.

மனம் என்பதை கருவிகளிலிருந்து செய்திகளையும், அதை சேமித்து வைத்திருக்கும் நான்கு அறைகள் கொண்ட ஒரு வீடாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மனம் என்னும் அறையில் வசிக்க ஆள் தேவை இல்லையா? அதன் பெயரை புத்தி எனக் கொள்வோம். அது செய்திகளின் சாரம் அல்லது சத்து.. அதை உணர்வுகள் என்றும் சொல்லலாம்.
ஒவ்வொரு தனி மனிதனின் அறிவும் அதன் சாரமும் வேறுபடுகிறது. அதனால், ஒரே காட்சியை பலர் கண்டாலும், ஒவ்வொருவரும் வெவ்வேறாக உணர்கிரார்கள்.

மனிதனுக்கு,கு மனம் என்பது, குறிப்பாக, நான்கு தனி அறைகள் உள்ள ஒரு வீடாக நினைத்துப் பார்த்தோம், இல்லையா?. எல்லா உயிர்களுக்கும் மனம் இருக்கவேண்டும். அதில் நான்கு அறைகளும் இருக்கவேண்டும். உணரும் கருவிகள் ஐந்தும் அறைக்கு வெளியிலுள்ள நிகழ்வுகளை தெரிவித்தபடி இருக்கும். உணர்வுகள் அந்த செய்திகளை தெரிந்தவரை, முடிந்தவரை சேகரித்து

அறைக்குளே வசிப்பது, உணர்வுகள் அல்லது நினைவுகள். (Consciousness or awareness). இதுதான், உயிரின் முக்கிய பாகமாக இருக்க வேண்டும்.

நாம் விழித்திருக்கும் போது, உணர்வுகள் தங்கும் அறை விழி-நிலை என்போம். இதுவே மனம் என்ற வீட்டின்¢ முதல் அறை என்போம்.

அப்போது, ஐந்து அறியும் கருவிகள் மூலம் செய்திகளப் பெற்று, அதன் விளைவாக நம் உடல் இயங்குது..

சுவாரசியமான நினைவுகள், மனிதனின் கவனத்தை (உணர்வுகளை) ஐந்து கருவிகளுக்கும் வெளியே கொண்டு செல்கின்றது. (நல்ல இசை, சினிமா, சுவாரசியமான கதைப் புத்தகம் – இவற்றில் மாட்டிக்கிட்டு சுலபமாக வெளியே வர இயலாத நிலை). துன்பங்களை மறந்து மகிழ்ச்சி பெறுகிறோம்..

இதுவும் விழித்த நிலை தான். . அப்போது உதவிக்கு வருவது – ஒரு உதவி-நிலை (sub conscious state). உதவி-நிலை முதல் அறையின் பாகமாக, ஒரு சிறிய அறையாக, நம் மனக் கண் முன்னாலே நிருத்தலாம்.

இது எப்போதுமே முதல் அறையை சார்ந்தே இருப்பதால் இதற்கு அறை எண் கிடையாது. ஒரு உதவியாளர் போல. பெரும்பாலான காரியங்களை தன்னிச்சையாகவே செய்யும்.கடந்த அனுபவஙைலிருந்து அறிவு பெறும்..

அடுத்தது அல்லது இரண்டாவது அறை அல்லது மன-நிலை உறக்க நிலை, என்று சொல்கிறோம்.
உடலுக்கு ஓய்வு. சுத்தமாக ஐந்து கருவிகளுக்கும் தாற்காலிக விடுதலை. உதவி-நிலை அத்தியாவசிய தேவைகளைத் தன்னிச்சையாகக் கவனிக்கும். அதற்குத் தேவையான அறிவை உள்ளுணர்வு அல்லது கற்று உணர்ந்து அடைந்த, இயல்புகள் என்றெல்லாம் குறிப்பிடுவோம். மனிதன் தன் நினைவுகளை (Consciousness) இழந்த ஒரு நிலை.

ஆழ்ந்த உறக்கநிலை. இதை மூன்றாவது அறைக்கு ஒப்பிடலாம். ஒருவர் ஆழ்ந்து உறங்கும் பொழுது எழும் சாதாரண சத்தம், வலி ஆகியவை உதவி-நிலையை அடையாது. உயிரே போகும் என்ற அளவு கருவிகளிருந்து பெறும் செய்திகள் மாத்திரமே இந்த நிலையிலிருந்து இரண்டாம் மற்றும் முதல் அறைக்கு (நிலைக்கு) நினைவுகளை திரும்ப வைக்கும். சுருக்கமா சொன்னால், இது கும்ப கர்ணன் உறங்கும் நிலை. விளக்கம் போதும் இல்லையா? உதவியாளர் வருவார், அதன் முன்னால் சேதம் அதிகமாயிருக்கும்.

அடுத்தது – துரியம் (வட மொழியில், நான்காவது என்ற பொருள்)¢ அல்லது நான்காம் நிலை. நினைவுகளின் நான்காவது அறை.

இதை சமாதி நிலை என்று சொல்வார்கள். அந்த அறைக்குள் நமது உணர்வுகள் நுழைவது அவ்வளவு சுலபம் இல்லை. மரண பயம் நம்மை நுழைய விடாது. நுழைந்து விட்டாலோ, நம்மை ஒரு ஆன்மிகப் பெரியவராக உலகம் அறியும்.

நான்கு நினைவுகள் செல்லும் அறைகளையும் கடந்த நிலை. -அதி-தூரியம் – என்ற மெயின் ரோட்டில் வந்தடைவோம். சில கனவுகள், சில உடல் நலக் குறைவுகள் மனித நினைவுகளை இங்கே அழைத்துச் செல்லும். ஆனால் ஒருவர் விரும்பி, அறிந்து, சில ஆன்மிகப் பயிற்சிகள் செய்துவரும் போது, பயனுள்ள வகையில் நினைவுகளின் பயணங்கள் நடைபெறும்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதனின் மனம், அறியும் கருவிகளால், புலன்களால் மனம் ஒரு நிலை கொள்ளாது அலைக்கழிக்கப்பட்டு வாழ்கிறோம். ஆன்மிகப் பாதையில் செல்ல விரும்பி, நான்கு கிளைப் பாதைகளில் (பக்தி, கடமை, ஞான, யோகம்) ஒன்றின் தன்னை இணைத்துக் கொண்டவர் மனது அவரவர் கட்டுப்பாட்டில் நிற்கும். உடலும் கருவிகளும் மனதை தன் இஷ்டம் ஓட்டிச் செல்லாது.

அப்படிப்பட்ட மனிதன், தனது மனதை கட்டுப்பாட்டில் வைத்ரதால், தனது நினைவுகளை, மேலே சொன்ன நான்கு அறைக்குள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம்.

அதி-தூரியம், அறை அல்ல, மனிதனில் மனதின் வெளியே, அதாவது தன்னையும், தன் உடலின் உணர்வுகளைத் தாண்டிய நிலை. இதை அடைய ஒரு குருவின் உதவி இந்த கட்டத்தில் மிக அவசியம்.

இங்கிருந்து நினைவுகளின் பயணம் அதிக விளக்கம் தேவைப்படும்.

இந்த நிலையில் பல்வேறு உயிர்களின் மன வீடுகளை உணரலாம். விரும்பிய ஒரு மன வீட்டில் நுழைந்து அதன் உணர்வுகளை அறியலாம்.

இப்ப, கதைக்கு வருவோம்.

இந்த ஜென் ஆசிரியர், தான் அதி-துரியம் என்ற நிலையை அடைந்திருப்பதை அறியாமல், ஒரு பட்டாம் பூச்சியின் மன-வீட்டிலே புகுந்து (அதன் மனம் – விழித்திருக்கும் அறைக்குள்) – அவ்வப்போது சென்று வருகிறார்.

சித்தர்கள் தான் விருப்பிய உடலை தேர்வு செய்து அதில் வாழ்ந்து அதன் மூலம் தன் அறிவை, விரிவாக்கி பிரமனைப் பற்றியும் அறித துவங்கி அண்டத்தையும் அதிலுள்ள எல்லா பிண்டங்களையும் கசடற கற்கிறார்கள்.

ஜென் குரு, பட்டாம் பூச்சி அல்லாது, பாம்பு தேள் சிங்கம் புலி ஆகியவற்றில் மன அறையில் புகுந்திருந்தாலோ. (ஆகா இதை வைத்து ஒரு காமெடி சினிமா எடுக்கலாமே)!.

License

Icon for the Public Domain license

This work (அறிவு தரும் ஜென் கதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book