3
லக்ஷ்மி பூஜை படமிருந்தது. நீங்களும் தரிசியுங்கள். பஜனைக்கு வரவர்கள் சாயங்காலமே புறப்பட்டுவந்து லேட்டாக போவதை உத்தேசித்து எல்லோருமேகொஞ்சம் வயிறு நிறையும்படி ப்ரஸாதம் செய்து வினியோகிக்க விரும்புவார்கள்.
மேலும் வெளியூர் படியாக பணம் கூட கிடைத்ததால் யாருமே இதனை ஒரு பெறிய சிலவாக யோசிப்பதில்லை என்பது அங்கு யாவரின் அபிப்ராயமாக இருந்தது.
பூண்டு, வெங்காயமில்லாத, ஏதாவது ஒரு பாத், டால்டா கலப்பில்லாத ஒரு இனிப்பு , ஒரு சுண்டல். இருக்கவே இருக்கும் நிவேதனமான வாழைப்பழங்கள்.
ஹூக்லி கரையோரம் பாரக்பூர். அக்கரைக்கு படகில் போனால் சுராபுளி என்ற இடம். வாழைப்பழங்கள், வாழைஇலை, காய்கறிகள் என எல்லாம் மலிவாகக் கிடைக்கும். யாராவது போவார்கள். நிறைய வாங்கி வந்து எல்லோரும் பாகம் போட்டு வாங்கிக் கொள்வார்கள். கேட்கணுமா?
மண்டலிக்கென்று சில பெறிய அலுமினியப் பாத்திரங்கள் உண்டு. அடுப்புதான் சற்று கேள்விக்குறி? காஸ்,மைக்ரோவேவ்,அவன் இதெல்லாம் வரவுமில்லை. தெறியவும் தெறியாது. நான்தான் எப்பவும் செய்து கொண்டிருந்தேனா? அதுவும்தான் இல்லை. யார்வீட்டிலாவது செய்து எடுத்து வருவார்களாகத்தானிருக்கும்.
முதலில் இரண்டு முறை பாரக்பூர் அவுட் ஸ்டேஷன் போன போது நான் பஜனைக்குப் போனதில்லை. கொஞ்சம் துலைவு. ஆனால் போனவர்கள் ப்ரஸாதம் கொண்டு வருவதில் கொடுப்பார்கள்.
எப்படியோ மூன்றாவது முறை அதே ஊர் வந்தபோது இருக்க ஒரு போர்ஷன் பஜனைமண்டலியின் பக்கத்திலேயே கிடைத்தது.
நாங்களும் ஒருநாள் பஜனைச் சிலவை செய்ய உத்தேசித்து ப்ரஸாதமும் நாங்களே செய்தோம். அப்புறம் பக்கத்தில் போர்ஷன். எதற்கும் சுலபம், அப்படி, இப்படி, அவர்களும், ஒத்தாசைக்கு வந்து விட்டு அலைச்சலில்லாமற் போகும் இப்படியாக அதே ஒரு கைங்கர்யமாஆகிவிட்டதென்றே நினைக்கத் தோன்றியது. கூடவே மற்ற குடும்பங்களின் ஒத்தாசை. சனிக்கிழமை எங்களுடைய ஒர்க் ஷாப் என்றே சொல்லிக் கொள்ளலாம்.
முதற் காரியம் என்ன செய்தேன் தெரியுமா? அடுப்புபோட்டேன்.
விறகடுப்பா, இல்லை கொயிலா போட்டேறியும் மண் குமட்டி.
ஹூக்லி நதிக்கறையில் களிமண்ணுக்கா பஞ்சம்? சாயங்கால நடை குழந்தைகளுடன் போகும் போது களிமண்ணைக் கட்டி சைக்கிள் ரிக்க்ஷாவில் கொண்டு வந்து ஊற வைச்சும் ஆச்சு.
சமையல் ரூம் என்ன பெறிய இடமா? புகை வெளியேபோக நிறைய வசதியுடன் ஒரு 12 பேர் உட்கார்ந்து சாப்பிடும்டைனிங் டேபிள் மாதிறி. பக்கத்தில் பாய்லர் வைக்க,தண்ணிகொட்ட, நிரப்ப என சேர்ந்தாற் போல இடம். அது ரொம்ப உதவியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
உள்ளேயே ஒரு மூலையில் செங்கல்லை அடுக்கி அழுத்தமா மண்ணைப் பிசைந்து பூசி நடுவில் நல்ல கெட்டியான இரும்புக் கம்பிகளை இடம் வைத்து இருகோடுகளாக 4,5 கோடுகள் அமைத்து மேலே சுற்றிலும் சுவரமைத்து , மேலே கொம்மைகளமைத்து அழகான பெறிய சைஸ் மண் குமட்டி தயார். அது உலரஉலர களி மண்ணைக் கறைத்துப் பூசி மழமழ என்று எக்ஸிபிஷனில் வைக்காத குறைதான். ஒரு அடுப்புக்கு இவ்வளவு வர்ணனை தேவையா? எங்களுக்கெல்லாம் ஒரு வீடுகட்டிய பெருமை!!!!!!!!!!!!!!!!!!!!!!இருக்காதா பின்னே?
ஸாதாரணமாக சின்ன பக்கெட்டில் இம்மாதிறி அடுப்புகள் விற்கும். கொயிலான்னா நிலக்கரி. அதை வாங்கி ஹாமர் வைத்து கறி உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பக்கெட் அடுப்பில் ஒரு வறட்டியை பிச்சுப்போட்டு மேலே கறியைப்போட்டு , கீழ் பாகத்திலே வறட்டியிலே கிரஸின் துளி விட்டு பத்த வைத்து பால்டியை வெளியில் வைத்துவிட வேண்டும். புகையை கக்கி வரட்டி கனன்று கொயிலா தகதக என்று தீப்பிடிக்கும்.. பால்டி சமயலறையில் வந்து பக்குவம் செய்ய த் தயாராகிவிடும். நீண்டநேரம் எறியும். ரயில் இன்ஜின் மாதிரிதான்.
பிரஸாதம் தயார் செய்ய ரவை வெஜிடபிள் பாத். கிச்சடிதான்.
என்ன உறித்த பட்டாணியே ஸீஸன் என்றால் 2 கிலோ.
கோஸ்,காலிஃப்ளவர் 2 கிலோ, கொஞ்சம் கேரட்
கடுகு,உ.பருப்பு, நிறையமுந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை பச்சை
மிளகாய், எ.பழம், 2கிலோ ரவை.
நெய், எண்ணெய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் பொடி
கறிகாயெல்லாம் நறுக்கி எண்ணெயில் தனியா வதக்கறது.
பெறிய பாத்திரத்தில் விடற நெய்யை விட்டுகாயவைத்து இறக்கி ரவையைக் கொட்டி வறுத்து, ஏற்கெனவே கொதிக்க வைத்த ஜலத்தை உப்பு போட்டு அதில் விட்டுக் கிளறி நிதானமா அடுப்பில் வைத்துக் கிளறி மூடி இறக்கினா பாத்தோட மெயின் ஐட்டம் தயார். அழகாய் சிறிக்கிறமாதிறி வெந்து இருக்கும்.
தாளித்து வதக்கின காய்களுடன் ஸரிவர ரவைக்கலவையைச் சேர்த்து, முந்திரி சேர்த்துப் பக்குவமாகக் கிளறி எலுமிச்சம்பழம் பிழிந்து ஒரு ப்ரஸாதம் தயார். சற்று சூடு படுத்தினால் சுடச்சுட சும்மா ஒரு ஸேம்பிளுக்கு எழுதினேன் .காரமெல்லாம் போட்டுதான். தனித்தனியா செய்து கலந்தாதான் கையிலே ஒட்டாம இலையிலும் ஒட்டாம நன்றாக இருக்கும். பொடி இடித்தும் போடுவோம். மற்றபடி, புளியஞ்சாதம், எள், எலுமிச்சை, தேங்காய் என சித்ரான்னங்களும் அவ்வப்போது உண்டு.
புளி அவல், வெல்ல அவல்,வெண் பொங்கல், சக்கரைப்பொங்கல் ரவா கேஸரி, பாயஸங்கள் இப்படி ஸீஸனுக்கேற்ப வகைகள் மாறும். சுண்டல் வகைகள் மாமூல்.
இப்போது நினைத்தாலும் இரண்டொரு படங்கள் கூட எடுத்து வைக்கவில்லையே என்று தோன்றுகிறது.
ரேடியோ,எலக்டிரிகல், இன்ஜின்,என பெறிய, சிறிய உத்தியோகத்துக் கணவர்களின் திருமதிகள் எல்லோரும் பஜனையின் வெகுமதிகள்தான். அவ்வளவு நெருக்கம்.
ஸுசீலம்மா,ஸரஸ்வத்தம்மா,மைதிலம்மா,வேதம்மா, மீனாம்மா,,சூடாமணி,ஜெயம்மா, விமலாம்மா,ஸீதாம்மா இப்படி எத்தனை பெயர்கள்? பத்மாம்மா விட்டுப்போச்சா?
நவராத்ரி ஆரம்பமாகப்போகிறது. என்னுடைய சமையல் குறிப்புகளில் தேவையானதை எடுத்து உபயோகியுங்கள்.
எ ல்லோருக்கும் மஞ்சள் குங்குமத்துடன் என் ஆசிகள்..
ப்ரஸாதமெல்லாம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் இலையில் மடித்து நியூஸ் பேப்பரில் சுற்றியும் கொடுத்தாச்சு. பாலிதீன் பை எல்லாம் கிடையாது.
கொஞ்சம் விமர்சனமும் பண்ணிவிட்டு புதுப்பாட்டு யாராவது பாடினால் அந்தப் பாட்டின் வரியை நினைச்சுண்டு, மனம் நிறைய ஸந்தோஷத்தை சுமந்துகொண்டு அடுத்தவார பஜனையை எதிர்பாத்துண்டு என்ன அழகான நினைவுகள் என்று லயித்துப் போகிறேன். நிஜம்தானே?