6
இது உடன் பிறந்த ஸகோதரர்களுக்காக அவர்களின் நீண்ட ஆயுளைக்கோரி ஸகோதரிகள், அனுஸரிக்கும் ஒரு சடங்கு, அல்லது, கொண்டாட்டம் கலந்த அன்பு முறை, நேபாலில் இதை அனுஸரிக்கிறார்கள். அந்த ஸமயம் நெற்றியில் டீக்கா வைத்தும் கவுரவிக்கிறார்கள். இது ஸகோதரர்கள் இல்லாவிட்டாலும் ஆரம்ப முதலே உறவு முறையிலோ, சினேகித முறையிலோ சகோதரியாக ஒருவரை வரித்து , அவர் மூலமாகவோ இந்த ஸ்தானத்தைப் பெறுகிரார்கள். ஆக மொத்தம் ஸகோதரி ஒருவளாவது அவசியமாகிறது.
முன்கூட்டியே நிமித்தாதினி என்று கூப்பிடுவதற்குச் சொல்கிறார்கள். தீபாவளி அமாவாஸை கழித்த இரண்டாம் நாள் ப்ராத்ருத்விதியை. அன்று நேரம் காலம் எல்லாம் பண்டிதர்களால் அறிவிக்கப் படுகிறது. மன்னராட்சியில் அந்தநேரம் குண்டுகள் முழங்கப் பட்டுக்கொண்டிருந்தது. ராஜா,ராணி,பெண்கள், பிள்ளைகளென அவரவர்கள் அந்த நேரத்தில் இப்பூஜையை,வழங்கியும், ஏற்றுக்கொண்டும் ,இதே நேரத்தில் ப்ரஜைகளும் இதை அனுஸரித்துக் கொண்டுமிருந்தனர்.
மாற்று நல்ல நேரங்களும் உண்டு. இரவு வரை ஸவுகரியங்களை அனுஸரித்து இதைக் கொண்டாடுவார்கள். வான வில்லை ஒத்தக் கலர்ப் பொடிகளால் மண்டபமைக்கிறார்கள். கொடுகளால் சதுரக் கோலம்மாதிறி வரைந்தால் அதுவே மண்டபம். அதன் நடுவே உடன் பிறந்தவர்களை உட்கார வைத்து கழுத்தில் அருகம் புல்லாலன மாலையை அணிவிக்கிறார்கள். வாடாமல்லிப்பூ கோர்த்த மாலை மிகவும் முக்கியமாக அணிவிக்கிறார்கள். வாடாத பூ அல்லவா? இது முக்கியமாகக் கருதப்படுகிறது.
நான்கைந்து கலர்களில் சிந்தூர்த்திலகமிட்டு டீக்கா வைக்கப் படுகிறது. சுபசகுனமாக வாயில் வாழைப்பழம் கொடுக்கிறார்கள். சுபமாக ஏதேதோ பூஜைகள் செய்துவிட்டு மண்டபத்தைச் சுற்றி ஒரு கிண்டியிலிருந்து லேசாக தண்ணீரைத் தெளித்துச் சுற்றி வருகிறார்கள்.சிலர் எண்ணெய் கூட லேசாகத் தெளிப்பார்கள். கழுத்தில் சிவப்பு நிற ரிப்பன் போன்ற துணியினால் மாலை அணிவித்து பரிசுகலளித்து,கொப்பரை,ட்ரைஃப்ரூட்ஸ், இனிப்புகள்,பழங்கள்.ஸேல் ரோடி முதலானவைகளைப் பெரும் அளவில்க் கொடுத்து விருந்தளித்து விடையளிக்கிறார்கள்.
உடன் பிறந்தவர்களும் அவர்களுக்கு மனமுவந்த பரிசுகளை சக்திக்கேற்ப அளிக்கிறார்கள் .இந்த பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிரதாம்.கதையொன்றும் சொல்கின்றனர்.
யமராஜின் ஸகோதரி யமுனா. அவர் பூஜை செய்யும்போது யமராஜிடம் வேண்டிக் கொண்டாளாம். இந்தபூஜை செய்து ஸகோதரனுக்கு நீண்ட ஆயுளை வேண்டுபவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும். வாடாமல்லிமாலை எப்போதும் வாடாமலிருக்கும். அதற்காக அடையாளமான மாலை உபயோகிப்போம். அக்ரூட்,தமிழ்ப் பெயர் தெறியலே!!!!!!!!!!!!!!!! அதன் மேல் ஓடு உள்ப்பருப்பை காப்பதுபோல உடன் பிறந்தவர்கள் உயிர் கார்க்கப் படவேணும் என்று யமுனா தர்ம ராஜனிடம் வேண்டிக் கொண்டாளாம்.
அந்த வகையாகவே இது கடைபிடிக்கப்படுகிறது என்று கதை.
வேறு கதைகளும் உண்டு. நான் கேட்டறிந்த கதை இது.
நாங்கள் காட்மாண்டு போன புதிதில் ராயல் ஃப்ளைட்டில் வேலை செய்யும் இளம் வாலிபர். காதல் கல்யாணம் செய்து கொண்ட மனைவிக்கு , பூஜை செய்ய அண்ணனோ,தம்பியோ வேண்டும். வீட்டினருக்கெதிராக மணம் புரிந்து கொண்ட பெண். எங்கள் வீட்டுப் பிள்ளகளை அனுப்பி வைக்கும்படி கேட்க நாங்கள் அனுப்பி வைத்தோம். காலக் கிரமத்தில் அசல் உடன் பிறந்தவர்கள் வரபோக ஆரம்பித்த பின்னும் நாங்கள் அவ்விடம் இருக்கும் வரை அவர்கள் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. பரஸ்பரம் சக்திக்குத் தகுந்ததை நாங்களும் செய்தோம்.
இரண்டாவதாக ராயல் ஃப்ளைட்டிலிருந்து கொலம்பு ப்ளானில் ஏரோநாடிகல் இன்ஜிநீயரிங் படிக்க மூன்று பேர்கள் சென்னை வந்தனர். அவர்களுக்கு உதவி செய்ய எங்கள் மாப்பிள்ளைக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.
அவ்விடம் உள்ள நான்கு வருடங்களும் என் பெண்ணை ஸகோதரியாக நினைத்து பரிசுகளளித்து அங்கே சாப்பிட்டு ஆசிகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.பாய்டீக்கா சென்னையில். ஜ்வை என்றால் மாப்பிள்ளை. இன்றும் அவர்களுக்கு எங்கள் மாப்பிள்ளை ஜ்வை தான்.வேண்டிய எல்லா ஒத்தாசைகளும் அவர் செய்து கொடுத்தார். என் பெண் ஸுதா தீதி உறவு. பொதுவில் யாவரையும், தீதி,பஹினி,அதாவது அக்கா, தங்கை முறையில்தான் சொல்வார்கள்.
தாயி,பாயி அண்ணா, தம்பி முறை. ஹிந்து கலாசாரம் என்று நேபாலிகள் அதிகம் கொண்டாடுவது அதிகம். கதைகளெல்லாம் காலக்கிரமத்தில் உரு மாறி விடுகிறது. அதையெல்லாம் கேள்வி கேட்டுப் பிரயோஜனமில்லை. உறவுகள் தொடரப்படுகிரது. பகைகள் மன்னிக்கப் படுகிறது. ஒரு தாய் மக்கள்.
நேசம் சீரமைக்கப் படுகிரது. நாளை பாய்டீக்கா. அங்குள்ள எனது பிள்ளைக்கும், பேரனுக்கும் இப்படி பாய்டீக்கா கொடுக்க ஸகோதரி உண்டு. எல்லோரும் நன்றாக இருக்க பாய் டீக்கா தினமான நாளை ஸகோதரர்கள் தினமாக நேபாலிகள் கொண்டாடுகின்றனர்.
ஸகோதரர்கள் வாழ்க என்று நாமும் கடவுளை வேண்டுவோம்.