7
சுண்டல் வினியோகம், ஸ்வீட் வினியோகம், ஏழைகளுக்கு புடவை வேஷ்டிவினியோகம், தற்காலத்தில் ஸ்கூல் பசங்களுக்கு இலவச லேப்டாப் வினியோகம், எலக்க்ஷன் காலத்தில் என்னென்னவோ பலவித எலெக்டிரிக் ஸாமான்கள் இலவசம் இதெல்லாம்தான் எல்லோருக்கும் தெரியும்.
எங்களின் காட்மாண்டு வாஸத்தின் போது வித்தியாஸமான ஸாளக்ராம வினியோகம் செய்யும்படி ஒரு நேரம் அமைந்தது. ராயல்ஃப்ளைட்டின் சேவையா, எங்கள் வீட்டுக்காரரின் சேவையா?
எதிர் பாராத விதமான காலகட்டம். எதுவும் நடந்திருக்கலாம். இப்பவும் யாராவது கேட்டால் முடிந்தபோது வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறோம். என் வீட்டுக்காரரின் அனுபவம்தானிது.
முதலில் ராயல்ஃப்ளைட்.
என்னுடைய பிள்ளைகள் ஆகாயத்தில் ஃப்ளைட் சப்தம் கேட்டவுடனே அப்பா -ப்ளைட், ஆவ்ரோ, டகோடா, ஹெலிகாப்டர், பெல் என பார்க்காமலே அதன் பெயரை நான் ஃபஸ்ட், நீ ஃபஸ்ட் என போட்டி போட்டுக்கொண்டு சொல்வார்கள். அப்பா வேலை செய்யும் ப்ளேன் அவர்களுடயதாக எண்ணம்.
ராயல்ப்ளைட்டுடா அப்பாது இல்லை. என்ன சொன்னாலும் அவர்களுக்கு அப்பா ப்ளேன்தான்.
ராஜ குடும்பத்திற்கான ப்ளேன்கள், டகோடD.C 3இ ல் ஆரம்பமாகிஆவ்ரோ, ட்வின் ஆட்டர்,ட்வின் பைனர்,ஹெலிகாப்டர்கள் எல்யூட், பெல்,பூமா, என வந்து கொண்டிருந்தது. வருடங்கள் ஸரியாக ஞாபகமில்லை. 1970 என்ற வருஷத்தின் பின்னாக இருக்கலாம்.
அப்பொழுதெல்லாம் முக்தி நாத்திற்குப் போக ப்ரைவேட் ஏர்லைன்ஸ் வசதி எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்.
ராஜ குடும்பத்தினர் ஸவாரி, அதுதான் பிரயாணம் செய்யும் போது,எங்கு போகவேண்டுமானாலும் விமானம், உள்ளே அலங்கரிக்கப்பட்டு விசேஷ வசதிகளுடன் மாறுதலாகிவிடும்.
ஸவாரி இல்லாத நாட்களில், கார்கோவாக மாற்றி விடுவார்கள். முக்கியமான ஸாமான்கள் கொண்டுவர, எடுத்துப்போக என கமர்ஷியலாக மாறிவிடும். மெயின்டனன்ஸுக்கு பணம் வேண்டுமல்லவா?
இந்தியாவிற்கு வரபோக R.N.A.C என்ற பொது ஜனவிமான ஸேவை ஒன்றும்இருந்தது. ராயல் ஃப்ளைட்டை அரச குடும்பத்து உறவினரும், தேர்ந்த பைலட்டுமான ஒருவர் நிர்வகித்து வந்தார். நிர்வாகம் தெறிந்தவர். அரசகுமாரர் சற்று குனிந்து ஏறும்படி பிளேனின் நுழைவாயில் இருக்கிரதென்று மற்று வேறு ப்ளேன் வாங்கியது நிர்வாகம். அரசர் தலை வணங்கக் கூடாது என்பது அந்நாளைய சித்தாந்தம்.
அந்த காலத்தில் ஏர்கிராஃப்ட் இன்ஜின் சேஞ்ஜ் செய்வதென்றால் மும்பை கொல்க்கத்தாவின் பாரக்பூர், பெங்களூர் என ப்ளேனைக் கொண்டுவந்து, இன்ஜின்மாற்றி ஒவரால் செய்து கொண்டு நேபால் செல்வார்கள்.
அப்படி பாரக்பூரில் சேஞ்ஜ் செய்ய வந்த போதுதான் அவர்கள் ஏர்கிராப்டில் துடிப்பாக வேலை செய்த இரண்டு பேர்களை வா என்று கூப்பிட்டு வேலை கொடுத்து படிப்படியாக வசதிகளை அதிகரிக்கிறோம் என்று சொல்லிச் ச்்்்்்்்்்்்்்்சொல்லி காட்மாண்டுவாஸ கஷ்ட வாஸமாக கடவுளை நம்பும் வாஸமாக அமைத்துத் தந்தது தனிக் கதை.
ராயல் ஃப்ளைட்டின் ஹெலிகாப்டர் ஒன்று அதி முக்கியமான ஸாமான்களை ஏற்றிக் கொண்டு ஜும்ஸும் போகவேண்டி இருந்தது. பல செங்குத்தான மலை முகட்டுக்களிடையே ஜூம்ஸும் அமைந்துள்ளது.
சிறிய ரக விமானங்கள்தான் இறங்க முடியும். காற்றும் அதிகம் என்று சொல்வார்கள். தேர்ந்த பைலட்டுகளே போக அஞ்சுமிடமாக இருந்தது அக்காலத்தில். துரதிருஷ்டவசமாக போன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விட்டது.
இவரின் முக்கியாக வேண்டப் பட்டவர்களை திரும்பப் பார்க்க முடியவில்லை. அடுத்தபடியாக விபத்திற்காளான ப்ளேனின் இன்ஜின்முதலானவைகளைக் கொண்டுவர சில வாரம் கழித்து ட்வின் ஹாட்டர் என்ற சிறியவகை ப்ளேன் ஜும்ஸும் சென்றது. உடன் சென்ற குழுவினரை இறக்கிவிட்டு விபத்திற்குள்ளான ப்ளேனின் பாகங்களை எவ் வெப்படி வைத்து எடுத்துப் போகலாம் என்ற பரிசோதனை செய்து கொண்டிருந்தது.
ராயல்ஃப்ளைட் கதையா?
அப்படியே கதையாகவே நினைத்துப் படியுங்கள்.
அடுத்து திரும்ப வருகிறேன்.