9
நமக்கு ஜும்ஸும் போனவர்கள் திரும்ப வந்தால்ப் போதுமென்றாகி விட்டது. ராயல் ஃப்ளைட் கன்ட்ரோலருக்கோ அவ்விட விபத்துக்கு ஆளான விமான பாகங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காக பின்னும் பட்ஜெட் போடாமல் இருப்பவர்களை அங்கேயே மேலும் சில நாட்கள் தங்கவைத்து, மராமத்துப் பணிகளுக்கு அவர்களை உபயோகித்து
காப்டரை பாதுகாத்து மேலும் சில ட்ரிப்புகள் செய்து ராயல் ஃப்ளைட்டுக்கு ஆதாயம் கொடுக்க தீர்மானம் செய்து விட்டார்.
ஸரி யாருக்கு முக்திநாத் போகவேண்டுமோ நான் ஏற்பாடு செய்கிறேன்.
போய்வாருங்கள் என்று சொல்லி விட்டார். குஷிக்கு கேட்க வேண்டுமா? அப்பொழுதெல்லாம், குதிரையோ,இல்லை,இல்லை கோவேரி கழுதைன்னு,மட்டக் குதிரை என்று தான் சொல்ல வேண்டும். அதனுடன் ஒரு ஆள் வருவான். சில இடங்களில் அதன்மேல் உட்கார வைத்தும், கூட துணையாகவும் வந்து எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போய் திரும்ப மாலை வந்து சேர்ந்து விடுவார்கள். இப்படிக்,கும்பல்,கும்பலாக ஆட்கள் முக்திநாத் சென்று வருவார்களாம்.
அந்தக் கூட்டத்துடன் பாலஸில் வேலை செய்பவர்கள் என்ற விசேஷ மரியாதைக்குரியவர்களாக இவர்களுக்கு வேண்டியதெல்லாம் வசதி கொடுத்து, சாளக்ராமங்கள் அவ்விடம் சேகரித்திருந்தால் அதையும் சேர்த்து கொடுத்தனுப்பும் படி விசேஷ V.I.P.ஆக 4,5 பேருக்கு போவதற்கு ஏற்பாடு
ஆகி விட்டது. விஷயங்களும் எங்களுக்கு சொல்லியனுப்பினார்கள். ஆக முக்திநாத் போய் சாளக்ராமம் வரப்போகிறது. அப்படி என்ன ஸந்தோஷமா?
என்தகப்பனார் பஞ்ஜாயதன பூஜை செய்பவர். ஆதித்யம்அம்பிகாம் விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம் என்று,அபிஷேக பூஜை,ஆராதனை,நிவேதனம், தீர்த்தம் கொடுத்தல், என முறைப்படி
யாவும் நடைபெறும், வயதான காலத்தில் எப்போதும்,ராமாயண பாராயணம் செய்து கொண்டு
பக்கத்தில்,சிக்கு பலகை,ராமாயண க்ரன்த புத்தகம், கூடவே சாளக்ராமம் அடங்கிய பூஜை ஸம்படம் என எல்லாம் அவர் பக்கத்தில்யே இருக்க வேண்டும்.
தள்ளாமை இருந்தது. ஸூரியனுக்காக ஸ்படிகமும், அம்பாளுக்காக ஸ்வர்ணரேகாவும், விஷணுவிற்காக சாளக்ராமமும். பிள்ளையாருக்காக சோணபத்ரமும்,
சிவனுக்காக பாண லிங்கமும் எனக்கூறியதைக் கேட்டதுண்டு.
சிவனுக்காக அடிப்பாகம் வெள்ளியில் செய்த பீடமும் ,2கிராம் தங்கத்தில் செய்த வில்வ தளம் கோர்த்த வெள்ளிச் சங்கிலியால் இணைத்த நாக பீடமும் அதிலுண்டு. அபிஷேகம் முடிந்தவுடன், துடைத்து, மடியாக அரைத்த சந்தனத்தை இட்டு சிவனை பீடத்திலிருத்தி சந்தன காப்பின் மேல் வில்வத்தைப் பொருத்தி எல்லா வற்றையும் ஸம்படத்தில் வைத்து அர்ச்சனைகள் செய்து புஷ்பத்துடன் இறுதியில் மூடிவைத்தால் மறுநாள் பூஜைக்கு திரும்ப எடுக்கும்போது அன்றலர்ந்த புஷ்பத்துடன் இருக்கும் மாதிரி பூஜை இருக்கும்.
நல்ல வாஸனையுடன் புஷ்பங்களும். அநேகமாக நித்ய மல்லி இருக்கும். இம்மாதிரியான மனிதரிடமும் யாருக்கோ,திருட மனம் வந்தது. அப்பா உயிருடன் இருக்கும்போதே யாரோ எடுத்துப் போய்விட்டனர். அதன் பாதிப்பு அவரிடம் இருந்தது. வழி, வழியாக தலைமுறை, தலைமுறையாக பாதுகாத்த நிதி போய்விட்டதென புலம்பிக்கொண்டிருப்பார்.
என்னவோ அதன் நினைவுகளாக சாளக்ராம ஆசை எனக்கு வந்திருந்தது. என்ன ஒரு ஏழு, எட்டு, பத்து, சாளக்ராமம் கொண்டு வருவார்கள். அவ்வளவுதான். இல்லையா? மடி, ஆசாரம்,பூஜை,புனஸ்காரம், இதெல்லாம் என்னதென்றே தெரியாத உத்தியோகம்.
காலையில் ஃப்ளைட் கிளம்புவதற்கு மிகவும் முன்னதாக போய் -ப்ளைட் லேண்டான பிறகும் வெகு நேரம் கழித்து வருவதானால் இதற்கெல்லாம் நேரம்,காலம் வேண்டாமா?
அவரவர்கள் சூழ்நிலை,வளர்ப்பு, எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டாமா? திரும்பி நல்லபடியாக வரவேண்டுமே என்ற விசாரம் போய் சாளக்ராம பூஜையைப் பற்றி எதுவும்,தெரியாதவர்களாயிற்றே/? என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று மூளை அனாவசியமாக வேலை செய்யத் துவங்கியது. அந்த கால கட்டத்தில் இன்டியன் எம்பஸியிலும், இன்டியன் கோவபரேடிவ் மிஷனிலும், வேலை செய்யும் இந்தியர்கள், தமிழர்கள், ஆந்திராவைச்
சேர்ந்தவர்கள், U.N இல் வேலை செய்பவர்கள் என பல குடும்பங்கள் அறிமுகமாயிருந்தனர்.
கன்ட்ரோலரின் ட்ரிப்புகளும் நடந்து கொண்டு இருந்தது. ஜும் ஸும்மிலிருந்து கடைசியாக இரண்டு விங்குகள் பாக்கி. அது வந்துவிட்டால் பிறகு யாவரும் திரும்பி விடுவார்கள் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.
மறுநாள் காட்மாண்டுவிலேயே விங்குகளை{இரக்கைகளை} எப்படிக் கொண்டு வருவது என்ற முயற்சிக்கு பழைய விங்குகளைக் கட்டி பரீக்ஷார்த்தமாக முயற்சியை ஆரம்பித்தார்.கன்ட்ரோலர் ஓட்ட ஹெலிகாப்டர் நிதானமாகப் பறக்கத் துவங்கியது. பதிவு பதங்கள் 400 ரை நெருங்குகிறது
மிகவும் நீளமாகப் போய்விட்டால் படிப்பதற்கு கஷ்டம். அடுத்துப் பார்ப்போமா?