12
இரவு நேரத்திற்கான சமையல் செய்து கொண்டே யோசனை. காஸில் ரஸம் கொதிக்கிரது. மைக்ரோவேவிலிருந்து எடுத்த காலிபிளவரும் உருளைக்கிழங்கும் எண்ணெயில் வதங்குகிரது. எழுதரதை விட்டு விட்டாயா என்று உள் மனம் கேட்கிரது. காரணம் எதுவானா என்ன? எழுத நினைத்தால் எழுதணும். காரணம் தேடாதே!!! நம்மஊர்,நம்ம ஊர் என்று மனதால் நினைக்கும் ஊரைப் பற்றி எழுது. வளவனூர்.
தமிழ் நாட்டில் விழுப்புரத்தை அடுத்து புதுச்சேரி போகும் வழியில் 5 மைல்களைக் கடந்தால் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. ரயில்,பேருந்து, என எல்லா வசதிகளுமுடைய ஊர். ஊரைப் பற்றி ஆரம்ப கால கதைகள் சொல்லக் கேட்டிருக்கிரேன். சோழ மன்னர்களின் ஆட்சியில் ஏற்பட்ட ஊர் ஆகையால் வளவன் என்றால் அவர்களைக் குறிக்கும் காரணப் பெயர் கொண்டு வளவனூர் என்ற பெயருக்குக் காரணம் சொல்வார்கள்.
பச்சைப் பசுமையாக நில,புலன்களுடன்,ஆராவாரமில்லாத, அமைதியான ஊர். ரயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷன் எதிரே ப்ரமாண்டமான ஏரி. பெண்ணை நதியினின்றும் ஏரிக்கு தண்ணீர் வரத்து. ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால் சற்று இரண்டுநடை போட்டால் அழகான குளம். குளத்தைச் சுற்றி மாமரங்கள். வேம்பு,அரசு,இருவாக்ஷி, ஸரகொன்றை,கொன்றை போன்ற மரங்கள், பவழமல்லி, அரளி மற்றும் பூந்தோட்டம், தோட்டத்தைக் காக்க,வேலை செய்ய,நம்பகமான ஆட்கள்,
இப்படி. ஊரில் ஸ்டேஷனின்றும் வரும்போதே உள் நுழைந்தால் அக்ரஹாரம். என்னை ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போ என்று சொல்வதுபோல் ஒரு சிறிய வரப்ரஸாதியான ஸ்ரீ ஹனுமார் ஸன்னதி.பெருமாள் கோயில். இதே பஸ்மூலம் வருபவர்களுக்கு கடைத்தெரு, பிள்ளையார்,ஈசுவரன் கோயில்கள்,ஸ்கூல், ஹையர் எலிமென்டிரிஸ்கூல் என இருந்தது ஹைஸ்கூல்கள் காலேஜ் எனவும் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறது தற்போது.
ஆரம்ப காலத்தில் கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வசதிகளைக் கொடுத்து பெருமாள்கோயில் தெரு பூரவும் அமர்த்தியிருக்கிறார்கள். இப்படிபாரத்வாஜ கோத்திரம்,கௌசிக கோத்ரம்,ஹரித கோத்ரம், நைத்ர காசியப கோத்ரம், இப்படி பலவித கோத்திரக்காரர்கள், வேத விற்பன்னர்கள் குடிபுகுந்த ஒரு வேத கோஷம் ஒலிக்கும் ஒரு பவித்ரமான ஸ்தலமாக இருந்தது. மற்றும் மூன்று தெருவுகள் வசதி படைத்த, வியாபாரங்கள் செய்யுமளவிற்கு வசதி உள்ளவர்களாலும் நிரம்பப் பெற்று, ஒருவர்க்கொருவர் உதவி செய்தும், கொண்டு கொடுத்து, விவாக ஸம்பந்தங்கள் மூலம் பின்னிப் பிணைந்து இருந்தனர்.
கட்டுப்பாட்டுடன் எல்லா நிகழ்வுகளிலும் யாவரும் பங்கு பெற்று ஒரு அமைதியான கிராமமாக இருந்தது. எங்கள் ஊர் ஏரியைச் சுற்றி ப் பதினெட்டு கிராமங்கள் இருந்தன.இருக்கின்றன. எங்கும் பயிர் பச்சை, எல்லோரிடமும்,நில புலன்கள். மாடு கன்றுகள். எங்களூரில் கூடும் சந்தை பெயர் பெற்றது. கரும்பு,கடலைக்கொட்டை, நெல் போன்றவை நிறைய விளையும். பக்கத்து கிராமங்களினின்றும் வரும் காய்கறிகள் பெயர் பெற்றவை. இப்படிகுடுமாங்குப்பத்து கத்தரிக்காய்,மடுக்கரை நாரத்தங்காய், மற்றும் சில ஊர்களின், காய்கறிகள், புதுப்பாளையம் தயிர் பால். ஆலயம்பாளைய தோட்டத்து வாழைக்காய், என பெயர் பெற்ற ஸாமான்களுண்டு.
மிளகாய் தோட்டத்துக் கீரை மிகவும் ருசியாக இருக்கும். உப்பு,வெல்லம்,சவுக்கு விறகு, பண்ணுருட்டி முந்திரிப் பருப்பு,பலாப்பழம் அடுப்பெறிக்கும் கறி முதலானவைகள் பெரிய கூண்டு வண்டிகளில், கட்டை வண்டிகளில் மலிந்த விலையில் விற்பனைக்கு வரும். அக்காலத்தில் போக்கு வரத்து வசதிகள் குறைவாக இருந்தாலும். பண்டங்கள் யாவும் வீட்டு வாயிலில் வாங்கும்படியான வியாபாரங்கள் இருந்தது. பலவித கடைகளும் இருந்தது.
ஊரைச்சுற்றி, பல குடியிருப்பான இடங்கள், குமார குப்பம் என்று ஒரு பெரிய அடுத்தபடியான வசதியான ஒரு ஊரும் இணைக்கப்பட்ட வளவனூராக இருந்தது. போஸ்டாபீஸ், போலீஸ்டேஷன்,ரிஜிஸ்டாராபீஸ், பஞ்சாயத்துபோர்ட் ஆஸ்ப்பத்திரி, பேங்குகள் எலக்டிரிக் ஆபீஸ் என எல்லா வசதியும் இருந்தது. புண்யகாலங்கள், துலாஸ்நானம், மாகஸ்நானம், கிரஹணபுண்யகாலங்கள், தினப்படி குளிப்பது என எல்லாம் குளத்தில்தான். நல்ல, அல்ல பிற விஷயங்களுக்கு, அங்குதான் ஏற்ற இடமாகவும் இருக்கும்.
குளக்கரையில், நந்த வனத்திலென, ஊரில் ஸன்னியாஸம் வாங்கிக்கொண்டு முக்தியடைந்த ஸன்னியாசிகளின் அதிஷ்டானமும் இருக்கும். ஸன்னியாசிகளை எரிப்பதில்லை. என்னுடைய பாட்டியின் தகப்பனார் ஸன்னியாஸம் வாங்கிக் கொண்டவர். அவருடைய ஸமாதி, அதுதான் அதிஷ்டானமென்று சொல்லுவார்கள்.
எங்களூர் நந்த வனத்தின் ஒரு பக்கத்தில் ஒரு இருவாக்ஷி மரத்தடியில் இருந்தது.பிருந்தாவனமாக துளசி மடம் மாதிரி அமைப்பதும் உண்டு. இவருக்கு பிரமாதமாக எதுவும் கட்டவில்லை. உயரமான ஒரு கல்லை நட்டு அடையாளம் குறிப்பிட்டிருந்தனர். பிருந்தாவனம் எழுப்ப நினைத்தும் அவரது வாரிசுகள் ஒருவர்பின் ஒருவராக காலஞ் சென்று விட்டனர். அவருடைய பெண்ணான எங்கள், தாய்வழிப்பாட்டி எங்களுடனே இருந்தார். அவர் குளத்திற்கு போகும் போதெல்லாம், அந்த அதிஷ்டானத்திற்குப்போய் ஸ்நானம் செய்வித்து மலரஞ்சலி செய்து விட்டு வருவார். ஸ்வாமிகள் தாத்தா இங்குதான் இருக்கிறார் என்று சொல்லுவார். அவருடைய நினைவு நாளன்று, விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து விட்டு வந்து பிருந்தாவன ஸமாராதனை என்று சொல்லி, வகையாக சமைத்து உறவினர்களுடன் , உணவளித்து மகிழ்வார். என் அப்பாவும் பாட்டியின் உறவுமுறையில் ஸகோதரர் ஆகும். நான் பாட்டியிடம் அது எப்படி, இது எபபடி என்று கேள்விகளெல்லாம் கேட்பேன். அதனால் சில பழைய, பழக்க வழக்கங்கள்,எப்படி அந்தக் காலம் இருந்தது என்பதெல்லாம் ஏறக் குறைய தெரியும். அடுத்த தலை முறைக்கு சொன்னால் கூட தெரியாது. சொல்வதற்கு இம்மாதிரி கதைகளும் இருக்காது.
நந்த வனத்தின் மாமரங்கள் காய்த்தால் அதில் சில குடும்பங்களுக்கு பங்கு உண்டு. நிலத்திற்கு பட்டா கிடையாது. மரத்திற்கு உண்டு என்பார்கள். காவல் கார்ப்பவர்கள் மாங்காய்களைப் பரித்துக் கோணியில் மூட்டைகளாகக் கட்டி எடுத்து வருவார்கள். பரித்த காய்களை விகிதாசாரமாகக் கொடுத்து விட்டு இரண்டு பங்கு காய்கள் அவர்களுக்காக எடுத்துப் போவார்கள். அவர்கள் பங்கையும் அவ்விடமே வேண்டுபவர்களுக்கு விற்று விட்டு பணமாக்கி விடுவார்கள்.
கால ஓட்டத்தில் மரங்களுமில்லை. நந்த வனங்களுமில்லை. பங்குதாரர்களுமில்லை. பராமரிக்கவும் இல்லை. குளத்தின் உபயோகங்களும் குறைந்து கொண்டே வர ஊரின் புராதன மக்களின் வாரிசுகள் நகர வாஸங்களில் வேலைக்குப்போக பழமை மறந்து புதுமை புகுந்து, நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற, எல்லாமே மறந்த ஒன்றாக எப்பொழுதோ ஆகிவிட்டது. இன்னமும் சில குடும்ப வாரிசுகளின் மூன்றாம்,நான்காம் தலை முறைகள் உறவு சொல்ல இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்.
கோயிலின் உத்ஸவங்கள் கூட ஒவ்வொரு குடும்பத்தினரே செய்ய வேண்டுமென்ற விதிமுறையும் உண்டு. அது மாத்திரம் வாரிசுதாரர்கள் எங்கிருந்தாலும் வந்து,அல்லது உறவினர்களைக் கொண்டோ நடத்தும் பழக்கம் இன்றும் நடைபெறுகிரது. நாங்கள் சிறு வயதில் அதுவும், பெண் பசங்கள், மாசிநிலா, ஊரைச் சுற்றி ஒவ்வொரு வீட்டின், வாசலிலும் பாட்டுகள் பாடி கும்மியடித்து, கூடை,கூடையாக நெல்லை வாங்கிக்கொண்டு, மூன்று நாட்கள் அதாவது மாசிமாத பௌர்ணமியின் முதல் மூன்று நாட்கள் இரவில் நிலவின் தண்மையான வெளிச்சத்தில் கூடிக் களித்ததை, பகிர்ந்துகொள்ளலாமென்ற எண்ணம் எங்கிருந்தோ வந்து விட்டது. படியுங்கள் நீங்களும்!!!!!!!!! வருகிறேன்.