13
மாசி நிலவு மாத்திரமில்லை. ஆடிப்பூரம் உத்ஸவத்திற்கும் எங்கள் ஊரில் இரண்டு கோயில்களிலும் அதாவது ,ஈச்வரன் , பெருமாள் கோயில்களிலும், சாயங்கால வேளையிலிருந்து இரவு 10 மணி வரையில் கூட,சுமங்கலிப் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடிக் கும்மியடித்து மகிழும் வழக்கம் இருந்தது.
காரணம் எல்லோரும் வழக்கமறிந்து பழகிப்போன அவ்வூர்ப் பெண்களே. கொடுக்கல், வாங்கல் என்ற முறையில் எல்லாப் பெண்களும் அவ்வூரின்,பெண்களாகவும், நாட்டுப் பெண்களாகவும் இருந்ததின் காரணம் என்று நினைக்கிறேன்.
இப்போதும், ஒரு,கல்யாணம், உபநயனம், வளைகாப்பு, சீமந்தம், போன்றவைபவங்களின் முடிவில் ஒரு சுற்றாவது கும்மி பெரியவர்களும்,சிறுமிகளுமாக சேர்ந்து, கும்மியடிப்பது வழக்கமாக இருக்கிறது. ஐயோ எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று பிகு பண்ணிக் கொண்டாவது கை கொட்டும் வழக்கம் இருக்கிறது.
ஒரு பெரியவர், குனிந்து நிமிர்ந்து கை கொட்டினால் தொடரவேண்டிய கட்டாயம் வந்து விடுகிறது. பழைய காலத்தில், பெண்கள் புஷ்பவதி ஆனால், 4,5 தினங்கள் வரை இவ்வழக்கம் ,ஸந்தோஷமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது இதன் தொடர்ச்சிதான் எங்களூர் ஆடிப்பூர உற்சவம்.
அதற்கும் வசூல் செய்து,நான்குநாள் அம்மனை ஊஞ்சலிலிருத்தி, ஊர் முழுவதிலும் வீட்டுக்கு வீடு, மூன்றாவது நாள், புட்டு,சர்க்கரை, பழம், முதலானவைகளைமேளதாளம் புடை சூழ ,அலங்காரம் செய்து கொண்டசிறுமிகளும்,பெரியபெண்களுமாக கொடுத்துவிட்டு வருவது ஒரு அழகான நிகழ்ச்சியாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று, காலையில் எல்லோருக்கும், வளை அடுக்கி, எண்ணெய், மஞ்சள் கொடுப்பார்கள். இவையெல்லாம் யாராவது நேர்ந்து கொண்டு செய்வார்கள். எத்த வருஷமும் இவைகளில்லாமலில்லை. இரண்டு கோயில்களிலும் இவை எல்லாம் தனித்தனியாக நடக்கும்.
கலியாணமாக,பேரன் பிறக்க, என வேண்டுதல்களில் இவை எல்லாம் அடங்கும். மத்தியானம், ஊர் பூராவுக்கும் சாப்பாடு. சாயங்காலம், அம்மன் ஊரைச் சுற்றி வீதி வலம், இப்படியாக . ஆடிப்பூரம் நடக்கும்.
கும்மி பாட்டுகளில் தமயந்து ஸுயம்வரம் அழகாக இருக்கும்.
காதலியாள் காதிரண்டும்,
கத்தரிக்கோல் ஒத்திருக்கும் திலதத்தின்மலர் போன்றாம்,
தேன் விழியாள் நாசிகையும்,
கண்ணாடி போல இரு கபோலத்தின் காந்தியும்,
கதிரவன்போல் ஒளி வீசும் கட்டழகி மேனி காண் முத்துச்சிப்பி திறப்பது போல் முறுவலிடும்,
கனி வாயும் முருக்கம்பூ இதழ் போன்றாம் மெல்லியலாள் அதரமும்
இப்படி தமயந்தியை,வர்ணிப்பது சில ஞாபகம் வருகிரது.
பெரியவர்கள் பாய்ந்தடிப்பது என்று வேகவேகமாக எதிரும் புதிருமாக இடம்மாறி பாய்ந்தடிப்பார்கள். பருமனாக இருப்பவர்கள் கூட வேகவேகமாகப் பாயும் போது மற்றவர்களுக்கு குஷியோகுஷி மங்கை நடையில் அன்னத்தைப் பழித்தாள் நகையால் மின்னலை ஜெயித்தாள் நீதி மொழியில் வேதத்தை கெலிப்பாள், மதன் கணைக்கே இளைத்தாள்.
அவள் ஸங்கதி இதுதானே!!!!!!!!!!!!! பாட்டில் வர்ணனை இவைகள்.
இந்த இரண்டுவரிகளும் திடீர் ஞாபகம். மாசி நிலவைக்கூப்பிட வந்து ஆடிப்பூரத்திற்கு போய் நினைவலைகளை பாயவிட்டு , ரஸித்து விட்டு இருக்கும் இடம் வந்து விட்டேன். நடந்தவைகளாகவே இருந்தாலும், நினைக்க ரஸிக்க முடிகிரது.
வாங்க மாசி நிலவைப் பார்ப்போம்.
மொத்தம் நாலு தெரு. பாடற பசங்க லீடர். மொத்தம் நாலு, அல்லது மூன்று ஸெட் தேரும். பெரியவா யாராவது கூட வந்து கண்காணிப்பும் உண்டு. நீ பாடு, நான் பாடியாச்சு, இப்படி வாக்கு வாதமும் வந்து விடும். அவரவர்களுக்கு வேண்டிய வீட்டில் நெல் நிரைய வரும். என்னால்தான் நெல்லு நிரைய வந்தது. போதும் ஒரு வார்த்தை.
நாளைக்கு நான் வல்லேபோ. பிகுவேரு இருக்கும். பக்கபக்கத்தில்தானேவீடு. அந்த பாட்டு பாடு. இது பாடு என்பார்கள்.
பிருந்தாவநத்திலே நாமுமவிளையாடுவோம்.
நாமும் விளையாடுவோம், நந்த மகனைக் கூடுவோம்
கூடுவோம் கோபால கிருஷ்ணன் குணங்களைக் கொண்டாடுவோம்.
பாட்டு அழகானது.. குனிந்து நிமிர்ந்து கொட்டுவோம் கும்மியை.
சின்ன பசங்களும் வருமே.!!!!!!!!!!!!
ல்கூல் பாட்டையெல்லாம் எடுத்து வீசவேண்டியதுதான். அவ பாவாடை நன்னா இருந்தது. என்னிது நன்னாலே. பாட்டி மனஸே ஆகலியா. கூடையோடு நெல்லு குடுங்கோ. இந்த வருஷம் ஸரியா வெளையலே. நன்னா வெளெஞ்ஜா நிறைய கொடுப்பேன்.
போங்க பாட்டி, மநஸே ஆகலே உங்களுக்கு. எங்களுக்கு நெலமே இல்லே. நீங்க பாடுங்கோ. நான் காசு தரேன். கால் ரூபாயா, அதுக்கு நெல்லா குடுத்தா எவ்ளோ இருக்கும் தெரியுமா நாங்க வெலெக்கு விப்போம் வாங்கமாட்டோம். இப்படி வாக்கு வாதம், நெல்லு எடுத்துப் போக ஆள் வைத்து நெல்லைச் சேர்த்து ஒரு வீட்டிலே வைத்து கடைசியிலே நெல் புழுக்குவதற்கு யாராவது வாங்கிப்பார்கள்.
நான் பாடறேன். நீங்களெல்லாம் பின்னாடி பாடிண்டே கும்மி அடிக்கணும்.
கீழே குனிந்து இரண்டு கொட்டு, மாலே நிமிர்நது றெண்டு கொட்டு,
ஒண்ணு,ரெண்டு,
மூணு, நாலு
பாடுங்கோ, தில்லை, நடராஜரடீ, சிவகாமி நேசனடீ
செண்பகப்பூ மாலை கொண்டு சித்சபையில் வராரடீ
மூன்றாம் திரு நாளிலடி மோக்ஷ வாகனங்களடி
முல்லையரும்பு மாலை கொண்டு முன்னும்,பின்னும் வராரடி
எங்கே பாடிண்டே அடிக்கணும்,
நாலாம் திரு நாளிலடி நாக வாகனங்களடி
நாட்டமுள்ள ஜனங்களுக்கு நல்ல சிவகங்கை ஸ்னானமடி
ஐந்தாம் திரு நாளிலடி அழகான ரிஷபமடி
ஐந்து பஞ்ச பேர்கள் கூடி அழகாய் வீதியில் வராரடி.
மாமி, மீதி அஞ்சு நாள் நாளைக்கு. நெல்லு நிறைய குடுங்கோ!!!! 1மூணுநாளும் பாடி ஆடி,அவா ளவாள்வாயெக்காட்டி, நெல்லை வித்து பாகம் பிரிச்சுண்டு, அவா கட்சிக்கு இவ்ளோ காசு வரலே, எங்களுக்குதாந் இவ்ளோ காசு வந்தது என்று எல்லோரும்,பெருமை பேசிண்டு, அடுத்த வருஷம் பாட்டி அனுப்ப மாட்டா. இப்பவே வேண்டாம்னு சொன்னா, அந்தந்த வட்டாரத்தில் மொட்டை மாடியில் நிலாச்சாப்பாடு சித்ரான்னங்கள்,பொரித்த வெள்ளை வெளேறென்ற,அரிசி அப்பளாம்,பொரிவடாம் வாஸனையான கூழ் வடாம், கட்டை வடாம், வத்தல் எல்லாவற்றுடனும் ஒரு பிடி பிடிக்க, சொன்னா கேக்கலே.
மாசிநிலா, பனியிலே சுத்திண்டு வந்துட்டு ஒரே இருமல். கஷாயம் சித்தரத்தே போட்டு வச்சிருக்கேன். குடிக்க வேறு பாடு படுத்துங்கோ. எல்லா அம்மாமாரும் ஸந்தோஷமாக சலித்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது, மனக்கண்ணால் மட்டும்.
இப்போ என்ன ஆகிரது. ரொம்ப வருஷங்கள் நடந்து கொண்டு இருந்தது. யாரும் நிலமே வைத்துக் கொள்வதில்லை. நெல் யார் கொடுப்பார்கள்?
என் பெண்ணும் என் அம்மாவுடனிருந்து இந்த வழக்கங்களில் பங்கு கொண்டிருக்கிறாள். என் அனுபவம். படிக்கும் உங்களுக்கும் ஏதோ பழைய அனுபவப் பரிமாரல்.. போதும். இனி திகட்டிவிடும். ஸரியா?