11
இந்த ஒருமாதமாக என்ன செய்தீர்களென்று கேட்கிறீர்களா? அக்கம்,பக்கம், அரிந்தவர்,தெரிந்தவர்கள் இப்படி யாவரின் விசாரிப்புகளும், நல்லபடி வந்து சேர்ந்ததற்கு ஸந்தோஷமும் தெரிவித்த வண்ணமிருந்தனர்.
எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் C.P.W.D. இல் வேலை செய்பவர் I.c.mஇல் காட்மாண்டுவில் வேலை செய்து கொண்டு இருந்தார். வழிவழியாக தலைமுறை,தலை முறையாக நல்ல பூஜை,புனஸ்காரங்கள் செய்து பழக்கப் பட்டவர்கள் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரும் விடாது பூஜைகள்செய்பவர்.அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சாளக்ராமம் வேண்டும் என்று சொன்ன போது, முன்னதாகவே நான் கேட்டிருந்தேன். என்ன செய்யலாமென்று.
திருப்பதி போய்வந்தால்,வேங்கடாசலபதிக்கும், காசி,ராமேசுவரம் போய்வந்தால், கங்கையை வைத்து ,பூஜை,ஸமாராதனைகள் செய்வது போல இதையும், அப்படியே அபிஷேக ஆராதனைகள் முடிந்த அளவு செய்து, வேண்டியவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லி இருந்தார்.அப்படி செய்வது நல்லதென்றும் சொன்னார்.
அதை ஞாபகப்படுத்தி அவரையே நம் வீட்டிற்கு வந்து நல்லபடி பூஜையை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் வந்தார். மற்றும் சில குடும்பங்களையும் கூப்பிட்டோம்.
கூப்பிட்ட யாவரும் வந்து புஷ்பங்களும், பாலும்,பழங்களுமாக நிரப்பி ஒரு பக்தி பூர்வமாக அருமையான ஸமாராதனையாக நடத்திக் கொடுத்தனர். மந்திர பூர்வமாக, அபிஷேகங்களும்,அர்ச்சனைகளும் வந்தவர்களுக்கும்,மனம் நிறைந்த ஒரு ஸொந்த வீட்டு பூஜை,புனஸ்காரம் மாதிரி உணர்ந்தார்கள்.
வீட்டு,ஸமாராதனையாக ஒரு ஸந்தோஷத்தைக் கொடுத்தது. இதற்கு முன்னரே, சாளக்ராமங்களைப் பற்றிய அனுபவம் உள்ள ஒரு பெரியவரிடம் வகை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டோம்.
கைக்கடக்கமானவைகள்தான் வீட்டில் வைத்து பூஜிப்பதற்குச் சிரேஷ்டமானது. பெரிய அளவுள்ளவைகள் கோவிலுக்குக் கொடுத்து விடுங்கள், என்று சொன்னவர்,சங்கு சக்கரம் உள்ளவைகள், சிவாம்சம் உள்ளவைகள்,வம்ச விருத்திக்கான,ஸந்தானகோபாலர்கள்,
இப்படி பலவகையாகப் பிரித்துக் கொடுத்தார். பெரிய பெரிய தாம்பாளங்களில் வைத்து, பால்,தேன்,தயிர்,என விமரிசையாக அபிஷேகம் நடந்தது.
இது நர்மதாநதியில் கிடைக்கும் பாணம் என ப்படும் சாளக்ராமம். கீழே.
புத்தம் புதியதாக வருத்து,அரைத்து,பொடித்து, மடி ஆசாரமாக செய்த சமையல் எல்லோரும்,ஒன்று கூடி, மகிழ்ந்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு.
யார் யார்க்கு,அவரவர் தெரிந்தவர்களுக்கு, உறவினர்களுக்கு, எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு,புஷ்ப சந்தனத்துடன் கொடுத்ததுவுமல்லாமல் மீதி இவ்வளவு சாளக்ராமம் உள்ளது, யாருக்கு வேண்டுமோ ,வந்து வாங்கிப்போகலாம் என்று, அறிக்கை விடாத குறையாகச் சொல்லியும் அனுப்பினேன்.
அதன் விளைவு, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் இன்டியன் எம்பஸியில் வேலை செய்யும் பலரிடமிருந்து, இவர் சொன்னார்,
அவர் சொன்னார், என்ன விலை வேண்டுமோ கொடுத்து விடுகிறோமென்றும் வர ஆரம்பித்தனர் எல்லோருக்கும் விரும்பியதைக் கொடுத்தோம். எப்பவும் உங்களை மறக்க மாட்டோம், இம்மாதிரி எங்கு கிடைக்கும்? என்ற வாழ்த்துக்களோடு திக்கு,திக்காய், சாளக்ராமம் விஜயம் செய்ய போய்க்கொண்டிருந்தது.
என்னப்பா உன் சாளக்ராமங்கள் பாலக்காட்டிலும். வேறு ஊர்களிலும், வீட்டில் வாத்தியார் வைத்து,கிரமமாக பூஜை செய்யப்படுகிறது.
மேலே உள்ள படம் ஸதாபிஷேகத்தில் வாத்தியார் செய்த அபிஷேக படம். அபிஷேகம் நடக்கிரது.
வயதான பெரியவர் கேட்டிருந்தார், அவருக்குக் கொடுத்தேன்,என்ன ஸந்தோஷம் அவருக்குத் தெரியுமா?திருநெல்வேலியில் என் மாமாவுக்கு அனுப்பினேன்.
அவருக்கு வேண்டியவர்களுக்கு வேண்டுமாம்,ஆந்திராவில் இப்படி நான்கைந்து பேர்கள் இப்படியாக வாங்கிப் போனவர்களின் நல்லாசிகளுடன்,அன்பு வார்த்தைகளும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது.
எவ்வளவு திருப்தியாக இருந்தது தெரியுமா? குதிரை சுமந்து,ப்ளேனில் வந்து யார்யாரிடமோ போய் என்னளவில் இதிஹாஸம் படைத்து, நல்ல , நல்ல ,பின்னூட்டங்களையும், கொடுத்துக் கொண்டிருந்தது.
கட்டுக்கதையல்ல நிஜம்.
பாக்கி இருந்த வைகளை,பின்னொரு ஸமயம் சென்னை போகும்போது காஞ்சி மடத்தில் சேர்த்து விடலாமென்று அங்கு போனோம்.
மஹாப்பெரியவர், சிவாஸ்தானம் என்ற இடத்தில் தங்கி இருந்தார். நாங்கள் ஒரு மூங்கில் தட்டில் சாளக்ராமங்களை வைத்து, இதைச் சேர்ப்பதற்காக வந்திருக்கிரோம் என்று சொன்னோம். அவர் தங்கியிருந்த இடத்தின் நடுவே ஒரு கிணறு. அந்தப்புறம் நின்று கொண்டு தரிசனம் _கொடுத்ததுடன், எப்படி இவ்வளவு சாளக்ராமங்கள், எல்லாம் இவ்விடத்திற்கேயா?என்று விசாரித்தார்.
மளமள வென்று சுருக்கமாகவும்,விவரமாகவும் நாங்கள் சொன்னோம். மேலும் விஷயங்களையெல்லாம் கேட்டார். எங்களுக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி ,நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டு, மற்றும் கோவில்களைத் தரிசித்துத் திரும்பினோம்.
அச்சமயம் புதுப் பெரியவர் திக் விஜயத்திலிருந்தார். ஆக இந்த வகையிலும் பலயிடங்களுக்குச் சென்றது சாளக்ராமங்கள். பிள்ளைகள் துரைப்பாக்கம் D.B ஜெயின் காலேஜில் படிக்கும் போது அதன் பிரின்ஸ்பால் உயர்.திரு. நாகராஜன் என்பவரிருந்தார்.
அவருக்கு வேண்டி பின்நாளில் சாளக்ராமங்களை விலைக்கு வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தோம்.
ஒன்றுமில்லாவிட்டாலும்,சாளக்ராமங்களை மடியாக அலம்பித் துடைத்து, காயத்ரி சொல்லி,துளசி தளம் சேர்த்தால் கூட போதுமென்றார்.சந்தன குங்குமம், இட்டால் போதும் என்றார். இதெல்லாம் ஒருவர்க்கொருவர் அபிப்ராயம் மாறுபடும். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் இவரின் ஸதாபிஷேகத்தில், தானங்கள் செய்யும் போது அதில்,சாளக்ராமம்,ருத்திராக்ஷம் முதலானவைகள் வைத்திருந்தது. வாத்யாரின் மொத்த காண்டிராக்ட் அது.
ஓஹோ!! இவைகள் தானத்தில் விசேஷம் போலும் நம்மை அறியாமலேயே நாமும் இவைகளை வாங்கிக் கொடுத்துள்ளோம் என்ற நினைவு வந்த போது பழைய ஒரு ரீல் மனக்கண் முன் ஓடி வந்து விட்டு மறைந்தது.
ராயல் ஃப்ளைட்டிற்கும், சாளக்ராமத்திற்கும் என்ன ஸம்பந்தம்?
எல்லாம் வல்ல பசுபதீசுவரர்,கிருபையால், ராஜ சேவகமும், ராயல்ஃப்ளைட்டால்,சாளக்ராம வினியோகமும், இதை எழுத எனக்கு ஒரு ப்ளாகும் கிடைத்தது எதைக் குறிக்கிறது.?
அனுபவம் கணவருக்கும், எடுத்துரைப்பது எனக்கும் கிடைத்த முக்கியமான நிகழ்வுகளென்பதில் யாருக்கும் ஸந்தேகமிராது. இது வரை என்னுடன் வந்து இந்த நிகழ்வுகளை அக்கரையுடன் படித்து,பின்னூட்டங்களும் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளைச் சொல்லுகிறேன்.