1
என்னைப்பற்றி சிறிது எழுதியதுடன் எனக்குத் தெரிந்த எளிமையான சமையல் குறிப்புகளைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டேன்.
எனக்குப் ப்ளாகில் எழுதக் கற்றுக் கொடுத்த என் மகன் அம்மா உனக்கு இது மட்டும்தான் எழுத வருமா. உன்னைப் பற்றியே நிறைய எழுதலாமே, என்று சொல்லவே அதற்கு மேல் அதே மனதில் பதிந்து விட்டது.
இந்தியா போகிறீர்கள். எங்களிடம் பகிர்ந்தவைகளை எல்லாம் திரும்பவும் எழுதுங்கள் . மிச்சம் மிகுதிகளும் ஞாபகம் வருமே, அதை எழுதினாலே போதுமே என்று அடிஎடுத்துக் கொடுத்தான்.
அவர்கள் யாவருக்கும் தமிழ் பேசத்தான் தெரியும். மும்பை வந்திருக்கும் எனக்கு ஏனோ எதுவும் செய்யவேத தோன்றவில்லை.
இதுசரியில்லை. மனது சுறுசுறுப்பாக இருக்க ஏதாவது செய்யத்தான் வேண்டும். எனத தீர்மானம்செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.
நான் பிறந்து எட்டு வயது வரை வளர்ந்த ஊர் திருவண்ணாமலை. இப்பொழுது போல ஜனக் கூட்டமில்லாத ஊராக இருந்தது. கோவில் முதலானவைகளுக்கு சிறுமிகளாகிய நானும் என் சகோதரியும்தானாகவே போகவும், வீட்டுக்கு வருகிறவர்களையும் அழைத்துப் போக முடிந்த காலம். வீடு இருந்தது சன்னதித் தெரு. புரிந்து அனுபவித்து பார்க்காவிட்டாலும் கோவிலைச் சுற்றிவந்து நமஸ்காரம் செய்துவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.
இதேபோல பகவான் ரமண மகரிஷி ஆசிரமத்துக்கும் பிறரை அழைத்துப்போகவரவும் நன்கு தெரியும். என் தகப்பனார் டேனிஷ் மிஷின் ஹைஸ்கூலில் தமிழாசிரியர். பகவானிடம் அவருக்கு பக்தியும், பேசிப் பழகும் வாய்ப்பும் இருந்தது. நாங்களும் பகவான் உட்கார்ந்திருக்கும் இடத்தினருகில் சென்று வணங்குவோம். ஓரிருவார்த்தை புன் முறுவலுடன் சொல்லுவார்.
பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் பழங்களில் ஏதாவதை எங்களுக்குக் கொடுக்கச் சொல்லுவார். உடன் வந்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். எல்லோரும் அமைதியாகஉட்கார்ந்திருப்பார்கள். பாடத் தெரிந்தவர்கள் பக்தியுடன் பாடுவார்கள். சின்ன பசங்கள் நாங்களும் ஸ்கூலில் சொல்லிக் கொடுத்த பாட்டுகள் ஏதாவது பாடுவோம்.
பக்தி பரவசம் என்பதை எல்லாம்விட குஷியாக பெருமையாகப் இருப்போம் என்றுதான் சொல்ல முடியும். இப்போதாயிருந்தால் இதைவிட பாக்கியம் வேறு இல்லைஎன நினைத்திருப்போம்.
பகல் வேளையாகின் ஆசிரம போஜன சாலையில், அவருடனேயே எல்லோருக்கும் பந்தியில் சாப்பாடும் கிடைக்கும். எந்த வித்தியாஸமும் கிடையாது. ஆசிரமத்து ஊறுகாயும், அரைத்துவிட்ட சாம்பாரும் எல்லோரும் புகழும்படியாக அவ்வளவு ருசியாக இருக்கும்.
நல்ல சாப்பாடுகள் பொது விசேஷங்களில் சாப்பிடும் போது ஆசிரம சாப்பாடு மாதிரி இருக்கிரதென்று என் தாயார் குறிப்பிடாமல் இருந்ததில்லை.
மதயானம் மூன்று மணிக்குமேல் பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் பழ வகைகளை நறுக்கிக் கலந்து மிச்ச மீதி இல்லாமல் எல்லோருக்கும்வினியோகம் செய்து விடுவார்கள்.
மகரிஷி அவர்களின் தலை சற்று அசைந்து கொண்டே இருக்கும். அன்று பார்த்த முகம் இன்றும் ஞாபகம் உள்ளது.
பகவானின் சகோதரர் நிரஞ்சனானந்தஸ்வாமிகளுடனும் அப்பாவிற்கு பழக்கமுண்டு. ஒரு பத்திரிக்கை விசேஷ நிருபராக எங்கிலும் நல்ல பரிச்சயமிருந்தது.
சுதேசமித்திரனில் ஸப் எடிட்டராக இருந்திருக்கிரார். அவர் ஜீவித காலம்வரைதின வாரப் பதிப்புக்கள் இலவசமாக தபாலில் வந்துகொண்டிருந்தன. நிறைய எழுதிக் கொண்டிருந்தார். சிறியவர்களாதலால் எதுவும் ஞாபகமில்லை. நாற்பதுகளில் ரிடயராகி சொந்த ஊர் வளவனூர் வந்து சேர்ந்தோம். ப்ஞ்சாயதன பூஜையும் இராமயண பாராயணமும் மறக்க முடியாதவை. பஞ்ச கச்ச வேஷ்டி, ஷர்ட், கோட், விபூதி கோபிசந்தன நெற்றி, பிடிவாதமானபழையனவற்றில் நம்பிக்கையுள்ள மனிதர் .திருவண்ணாமலையில் காங்கிரஸ் அண்ணாமலைப் பிள்ளை காலத்தில் கட்சிக் கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்ட போட்டோவைப் பார்த்திருக்கிரேன்.
கார்த்திகைத் தீபத் திருவிழா எங்கள் வீட்டில் 15 நாடகள் திருவண்ணாமலையில் உறவினர்களுடன் கூட்டம் திமிலோகப்படும். தெறிந்தவர்கள் வேறு எங்காவது தங்கி விட்டால் அப்பாவிற்கு வரும் கோபம் சொல்லி முடியாது.
தீபத்திருவிழாவில் அந்த நாளில்ப் பார்த்த பிடாரன், பிடாரச்சி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பலவித வாகனங்கள் தேரோட்டங்கள், மின்விளக்கு அலங்காரங்கள், அதையொட்டிய பின்னால் வரும் மின் வசதி வண்டிகளின் சத்தம், கடைகளின் அணிவகுப்பு, பொரி உருண்டையும்,பஞ்சு மிட்டாயும் பசங்களின் இலக்கு. ஒரு ரூபாவிற்கு ஒரு குலை வாழைப்பழம் வாங்கி, கை எட்டும்படியாக கட்டித் தொங்கும் அழகு.
இப்படியாக கார்த்திகை தீபம் வரும் அடுத்த நாட்களை எவ்வளவோ வருடங்களுக்கு முன்பான என்நினைவுகளை எழுதியிருக்கும் நான் காமாட்சி.