"

22

வி.ஏ.ஓக்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்.


ஒரு வி.ஏ.ஓ. அவர் சாதாரணமானவர் அல்ல. எதையும் ரொம்ப வேகமா கற்பனை செய்துக்குவார்.  ஒரு உதாரணம். தூறல் போட்டாலும் போதும். சின்னஞ்சிறு உலகம் நாகேஷ் கணக்கில் மழை வெள்ளமாகி, வாய்க்காலில் தண்ணீர் வந்து அது தம் ஊரில் புகுந்துவிட்டால் என்ன செய்வது.  உடனே வெள்ள நிவாரணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வந்து நிர்ப்பார்.

அதுவும் நேராக என் ஆபீசிற்குள் நுழைந்துகொண்டே “அய்யா என்ன செய்யப்போறீங்க என்ன ஏற்பாடு செய்திருக்கீங்க” என்ற ரீதியில் பேசுவார்.  அவர் என்ன கேட்கிறார் என்றே புரியாது நமக்கு சற்று கோபம்கூட வரும்.

ஏதோ தம் ஊர் மட்டும்தான் பள்ளக் கையில் இருப்பது போலவும், அதைத் தவிர வேறு எங்கும் வெள்ளம் வராது போலவும். அந்த ஊருக்கே தாம் மட்டும்தான் பாதுகாவலர் போலவும் பில்டப் கொடுப்பார்.   அதன் பின்னர் அவர் வரும்போதே வெள்ள நிவாரணம் தயார் செய்துவிடலாமா என்று அவர் பாணியிலேயே ஆரம்பிப்பேன். அதைவிட நேராகப் போய் வீராணத்தில் எவ்வளவு தண்ணீர் திறக்கிறாங்க என்று தெரிந்துவரச் சொல்வேன்.  அப்புறம்தான் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.  இருந்தாலும் உடன் பிறந்த அரிப்பு மட்டும் கடைசிவரை விடவில்லை.

அவரது கற்பனைக்கு உச்சக்கட்டமாக ஒரு சம்பவம் நடந்தது.  கொஞ்சநாள் கழிந்தது. அவருக்கு நோய் ஏற்பட்டது.  தாம் பிழைக்க மாட்டோம் என்று எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்தார்.  தம் சொத்துக்கள் அனைத்தையும் தம் தம்பிக்கு செட்டில்மெண்ட் எழுதிவைத்து தம் மனைவியை கடைசிவரை நன்கு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவிட்டார்.  அந்த மகானுபாவனுக்கு தம் மனைவிபேரில் சொத்து இருந்தால் அவரே தம்மை காப்பாற்றிக் கொள்வார் என்று தோன்றவில்லை.

நேராகப் போய் மருத்துவம் செய்துகொண்டார்.  அப்போதும் அவரது மனைவிதான் உடனிருந்து எல்லாம் கவனித்துக் கொண்டார்.  அவரது மனைவி ஒன்றும் படிப்பறியாதவர் அல்ல.  அந்த நாளிலேயே நன்கு படித்தவர்.  மிகக் குணமானவர்.  உலக விபரம் அறிந்தவர். உண்மையில் இவர்தான் மக்கு என்று சொல்ல வேண்டும்.

சில மாதங்களில் அவர் பூரண குணமடைந்துவிட்டார்.  வேலைக்கும் வந்துவிட்டார்.  தம்பியிடம் சொத்தைத் தரும்படி கேட்டார்.  கைக்குக் கிடைத்த சொத்தை விட்டுக்கொடுக்க அவர் என்ன இளிச்சவாயரா – அதுவும் செட்டில்மெண்டு எழுதிப் பதிவுசெய்து கொடுத்தபின்னர். இருவருக்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.   இந்த நிலையில்தான் எனக்குத் தெரியவந்தது.  என்னிடம் வந்து வழி சொல்லுங்கள் என்று புலம்புகிறார்.  அவர் மனைவியிடம் நீங்கள் ஏன் இப்படி நடக்க இடம் கொடுத்தீர்கள் என்றால் கணவன் பிடிவாதத்தின் முன் நான் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.  இழுத்துப்போட்டு உதைக்க வேண்டியதுதானே என்றேன் நான். வேறு என்ன செய்ய.  எல்லாம் போனது போனதுதான். பின்னர் வழக்கு தொடர்ந்தார் என்ன நடந்ததோ தெரியாது.

இது இன்னொரு வி.ஏ.ஓ பற்றியது.  நான் ஆர்.ஐ.யாகப் பதவியேற்ற ஒரு மாதத்தில் கலெக்டர் ஜமாபந்தி வந்தது.  என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் புரியாத நிலை. ஒரு வி.ஏ.ஓ. வந்தார்  “அய்யா நீங்கபாட்டுக்கு கவலையில்லாமல் இருக்கீங்க. கணக்கெல்லாம் யாரும் எழுதலை. கலெக்டர் ஜமாபந்தி. அப்புறம் ‘நொம்ப’ கஷ்டமாயிடும்” என்றெல்லாம் எனக்கு வார்ணிங் கொடுத்துவிட்டு இரண்டு மேசைகளை எடுத்து என் அலுவலகத்திலேயே அரேஞ்ச் செய்து கணக்குகளைப் பிரித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டார்.

எனக்கு பயம் கண்டுவிட்டது. வேலை நடக்கவில்லை என்று சொல்லி புளியைக் கரைத்துவிட்டார்.  இவர் பொருப்பாக வேலை பார்க்கிறார் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லையே என கவலை வந்துவிட்டது.  அப்போது எனக்கு இருபத்தாறு கிராமங்களுக்கும் ஆறு வி.ஏ.ஓக்கள் தான் இருந்தனர்.  மற்றவர்களைக் கேட்டால் அவர்கள் தங்கள் கணக்குகள் டைமுக்கு வந்துவிடும் என்றும் அவரை நீங்கள் கண்காணித்தால் போதும் என்றும் சொல்லிவிட்டனர்.

நாட்கள் கடந்தது. எல்லாக் கணக்குகளும் வந்து நானும் மொட்டைக் கையெழுத்து போட்டு தாலுக்காபீசுக்கு அனுப்பிவிட்டேன்.  இந்த வி.ஏ.ஓ மட்டும் எழுதினார். எழுதிக்கொண்டிருந்தார். எழுதிக்கொண்டேயிருந்தார். அப்புறம்தான் தெரிந்தது. அவர் எதுவும் செய்யாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது.  ஒரு தலையாரி வந்து “அய்யா அவர் வேலையே இப்படித்தான்  மாற்று ஏற்பாடு செய்தால்தான் தேறும்” என்று சொன்னார்.

என் மந்திரி சபையைக் கூட்டி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி மற்ற இரண்டு பேரிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு ஒரு கிராமத்தைமட்டும் ஒரு முன்னாள் கார்ணம் அவர்களை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தேன்.  அவர் கணக்கில் கில்லாடி அவரைப்பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன்.  அவரோ  அதற்கென்ன காலையில் கணக்கு இருக்கும் பயப்படாதீங்க என்று சொன்னார்.  கணக்குகள் அவர் வீட்டுக்குப் போய்விட்டது.  ஒரு தலையாரி எப்போதும் அவர் அருகில் இருந்தார். காலை பத்து மணிக்கு என் அலுவலகத்திற்கு கணக்கு தயாராகி வந்துவிட்டது.

அவரது கணக்குகளை தாலுக்காவுக்கு அனுப்ப வேண்டும் அதற்கு முன்னதாக வசூல் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டும்.  அப்போதெல்லாம். பதினைந்து ஆண்டுக்கு மேல் வரி பாக்கி இருந்தது.  மற்ற வி.ஏ.ஓக்கள் எல்லாம் வசூல் விவரத்தினை சிட்டாவில் பதிவு செய்யும்போது கூடுதல் தாள் ஒட்டியோ தனியே கலம் கட்டியோ விபரம் பதிவு செய்வர். ஏனென்றால் அரசாங்கப் படிவத்தில் ஒரு ஆண்டுக்கு மட்டும்தான் பதிவு செய்ய இடம் இருக்கும்.

நண்பரோ அந்த படிவத்திலேயே சின்னச்சின்ன இடம் ஒதுக்கி பல ஆண்டுகளை தனித்தனியே பதிவு செய்வார்.  அதிலும் அவரது கையெழுத்து.  ஊகூம். சொல்லக்கூடாது.  ஒரு கலம் அடுத்த கலத்தில் முக்கைநீட்டிப் பதிவாகும். இப்படியாக பல குழப்பங்கள் இருக்கும்.  கடைசியில் கூட்டும்போது பாம்பு ஊர்வது போல் வளைந்து வளைந்து கூட்டவேண்டும்.  அதிலும் அவர் கூட்டுப்புள்ளி போடும் அழகே அழகு.  அவருக்கு கைவிரல்கள் போதாது. கால் விரல்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒரு ஆண்டு வசூல் விபரத்தையும் இரண்டு மூன்று பேராக உட்கார்ந்து தனித் தாளில் எழுதி கூட்டிப் பார்த்தால் ஒரு வாரத்தில் தொகையைக் குறைத்துக் கட்டியிருப்பார். அடுத்த வாரத்தில் தொகையைக் கூட்டிக் கட்டியிருப்பார்.  தப்புத் தப்பாக கூட்டுப்புள்ளி போட்டால் கையில் இருப்பு அதிகமாக இருக்கும். எது என்று கண்டுபிடிக்கத் தெரியாமல் அடுத்த வாரம் அதனையும் சேர்த்து கட்டியிருப்பார்.

இப்படியாக ஆடிட் செய்ததில் அவர் அறுநுற்றுச் சொச்சம் கட்ட வேண்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது.  அவரிடமோ காசு இல்லை. கணக்கோ தாலுக்காவுக்கு அனுப்பியாக வேண்டும்.  வேறு வழியில்லாமல் என் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து அடகு வைத்து பணம் கட்டி ஜமாபந்தி முடிந்தது.  அன்று மோதிரத்தைக் கழற்றியவன்தான் மோதிரம் போடும் ஆசையே போய்விட்டது.

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு முன்னாள் கிராம மணியம் கர்ணம் ஆகியவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட்டிருந்த நேரம். என் நண்பன் வருவாய் ஆய்வாளராக இருந்தார்.  முன்னாள் மணியம் என்பதால் அந்த பழைய கித்தாய்ப்பிலேயே வேலை செய்துகொண்டிருந்தார்பெருந்தனக்காரர்ஒருவர்.  கிராமத்திற்கு வருவது கிடையாது. பணியையும் ஒழுங்காகச் செய்வது கிடையாது.  தாம் பெருந்தனக்காரர்என்ற நினைப்பிலேயே எல்லா நடவடிக்கைகளும் இருந்துவந்துள்ளது.  இப்படியாக காலம் நகர்ந்து கொண்டிருக்கையில் ஒருநாள் வசூல் பணிகள் ஆய்வு பற்றி ஆய்வுக்கூட்டம் நடத்தினார்வருவாய் ஆய்வாளர்.

அப்போது மிகவும் திமிர்த்தனமாக நடந்துகொண்டார் அந்த பெருந்தனக்கார வி.ஏ.ஓ.   பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆர்.ஐ.க்கு ரோஷம் வந்துவிட்டது.  நாளை காலை உங்கள் கிராமத்திற்குப் பயிராய்வு செய்ய முகாம் வருகிறேன் என்று ஒரு தாக்கீது வழங்கிவிட்டார். அவ்வளவுதான் தம்மை பெண்டு நிமிர்த்திவிடுவார் ஆர்.ஐ. என்று உணர்ந்துகொண்ட அந்த வி.ஏ.ஓ லீவுகொடுத்துவிட்டார்.

அந்த காலத்தில் மணியம் கர்ணம் பணிசெய்தவர்கள் அதிகாரியுடன் ஒத்துவரவில்லை என்றால் டக்கென்று ஆறு மாதம் ஒரு வருடம் லீவு எடுத்துவிடுவர்.  அதே பழக்கத்தில் லீவு போட்டவர்தான்.  அடுத்தடுத்து லீவில் இருந்துவந்தார்.  வேறு ஒரு ஆர்.ஐ.யாக இருந்திருந்தால் காட்டவேண்டியதைக் காட்டி தரவேண்டியதைத் தந்து சரிக்கட்டியிருப்பார். காசுக்கு மயங்காத இந்தக் கெட்டவனிடம் எதுவும் முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழிந்தது.  ஆர்.ஐ. மாறுதல் செய்யப்பட்டு விட்டார்.

அடுத்து வந்தான் ஒரு கிராதகன்.  அது வேறுயாருமல்ல நான்தான்.  ‘புதிய ஆர்.ஐ. பணியேற்றிருக்கிறார்.  நாம் சரி செய்துகொள்ளலாம்’ என்ற தைரியத்தில் வந்து என்னைப் பார்த்து தாம் நெடுநாளாக விடுப்பில் இருப்பதாகவும். பணியில் சேருவதாகவும் தெரிவித்தார்.  இருபது பேர் இருக்கவேண்டிய பிர்க்காவில் ஆறுபேரை வைத்துக்கொண்டு தடுமாறிய எனக்கு சந்தோஷம்.  எப்போதும், ஒரு அதிகாரி புதிதாக வந்து சேர்ந்தார் என்றால் கீழ் நிலையில் உள்ளவர்கள் அவரைப்பற்றி பல வழிகளிலும் விசாரித்து நமக்கு ஒத்துவருவாரா என்றெல்லாம் முன்னதாக அலசி ஆராய்வர்.  அப்படியாக இவரும் நண்பர்கள் மத்தியிலும் அலுவலகத்திலும் ஆர்.ஐ. எப்படி என்று உசாவியுள்ளார்.  அவருக்குக் கிடைத்த உளவுத் துறை அறிக்கைப்படி, அவனே  பரவாயில்லை இவன் அவனைவிட மோசமானவன்.  அவனுடைய நண்பன்தான் இவனும், என்று பேதி கொடுத்துவிட்டனர்.

அவ்வளவுதான். தாம் பணியேற்பதாக என்னிடம் சொல்லிவிட்டுப் போனவர், ‘இந்த ஆள் இன்னும் குறைந்தபட்சம் இரண்டு வருடம் வேலை பார்ப்பான்.  நமக்கு எதற்கு வம்பு’ என்று தன் பணியையே ராஜினாமா செய்துவிட்டார்.  ஆனால் ஒன்று அவருடைய வசதிக்கு இந்த வேலையெல்லாம் அனாவசியம்.

இன்னொரு கிராம நிர்வாக அலுவலர்.  அவருக்கு வரி வசூல் பணி என்றால் கொஞ்சம் கசப்பு.  பாவம் பட்டாதார்களை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்று எண்ணம் போலும்.  நானோ இன்னும் அலுவலகத்திலிருந்து யாராவதோ போய் வசூல் செய்தால் அந்த தொகைமட்டும்தான் கஜானாவுக்கு வரும்.  அதிகாரிகளோ ஜப்தி செய்தாகிலும் வசூல் செய்யவேண்டும் என்று கெடுபிடி செய்வர்.

ஒருநாள் நான் ஜீப்பில் போய் ஒவ்வொரு கிராமமாக வசூல் வேலையைக் கண்காணித்துக்கொண்டே வந்தேன். எல்லா கிராமத்திலும் வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது. கடைக்கோடியில் இருந்த இந்த கிராமத்திற்குப்போய் ஆபீஸ் வாசலில் இறங்கினால் வி.ஏ.ஓ. ஒரு ஈசிசேரில் அமர்ந்தவண்ணம் அவரைச் சுற்றி நான்கு தலையாரிகளும் அவருக்குத் துணையாக இரண்டு பார்வையாளார்களாக பக்கத்து கிராமத் தலையாரிகள் இருவரும் வட்டமாக உட்கார்ந்து கதாகாலட்சேபம் நடந்துகொண்டிருந்தது.

டிரைவர் படி, டீசல் உட்பட என் சொந்த செலவில் (பின் என்ன அதிகாரி ஜீப்புதான் தருவார். அதுவே பெரிதில்லையா) போட்டுக்கொண்டு வந்தால் இங்கே ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால் எப்படி.  வந்ததே கோபம். ஏதோ அவருக்கு இரண்டு அறை விடுபவன் போல் கோபத்தோடு ஜீப்பிலிருந்து குதித்து ஓடினேன்.  ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டல்லவா.  தாழ்ந்த கூரையின் மூங்கில்கள் நீட்டிக்கொண்டிருக்க நான் வேகமாகக் குனிந்து நுழைந்தவன்  முதுகில் ஒரு மூங்கில் சரியாக பாடம் புகட்ட, தவித்துப்போனேன்.  அத்துடன் அவரைத் திட்டிவிட்டு நேராக அலுவலகம் வந்துவிட்டேன்.

மறுநாள் தாலுக்கா ஆபீசுக்குப் போனவன் என் நண்பரான துணை வட்டாட்சியரிடம் என் ஆற்றாமையைச் சொன்னேன்.  அவரோ காட்டுடா பார்க்கலாம் என. நானும் அப்பாவியாக என் சட்டையைக் கழற்றி முதுகைக் காட்டப்போக வெடுக்கென்று எட்டி அந்த இடத்தை ஒரு கசக்கு கசக்கிவிட்டார்.   எனக்கு மயக்கமே வந்துவிட்டது.  என்னை அறியாமல் கண்டபடி திட்டிவிட்டு வந்தது தனிக் கதை.

வருவாய் ஆய்வாளர் பணியேற்றதும். என்னிடம் வேலை பார்த்த ஆறு கிராம நிர்வாக அலுவலர்களும் வந்து மரியாதை நிமித்தமாக கண்டுகொண்டனர்.  அய்யா எப்படிப்பட்டவர் என்பது புரிபடும் வரையிலும் எப்போதும் சில தினங்கள் விட்டுப் பிடிப்பர்.  அதன் பின்னர்தான் நம்மை வளைக்க முயற்சிகள் மேற்கொள்வர்.

நான் வேலையில் சேர்ந்த நாள் முதல் என் அரசாங்க இல்லத்திலேயே தனியே தங்கி ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.  ஆக பணியேற்றாச்சு. எல்லா வி.ஏ.ஓக்களும் அறிமுகம் ஆனார்கள்.  ஒருவர் என் கட்டடத்தை சுற்றிப் பார்த்தார்.  அவருக்கு என் தட்டுமுட்டு சாமான்கள் போதுமானதாகத் தெரியவில்லை.  அய்யா எங்க படுக்கப் போறீங்க என்றார். தரையில்தான் என்றதும் ‘அதிகாரி’ தரையில் படுப்பது அவருக்கே கெளரவக் குறைச்சலாகப் போய்விட்டது.  உடனே என் ஓ.ஏ. மூலம் பேசி எனக்கு ஒரு நாடா கட்டில் ஏற்பாடு செய்வதாக சொன்னார்.

இவர் பாட்டுக்கு மரம் வெட்ட ஏற்பாடு செய்கிறாரோ என்று எனக்கு பயம்.  நான் மறுத்தும் கேளாமல் கட்டாயப்படுத்தவே நான் இலவசமாக வாங்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.  பல்வேறு கண்டிஷனுக்குப் பின் என்னிடம் வேண்டா வெறுப்பாக பணம் வாங்கிக்கொண்டார். முப்பது ரூபாய் அப்போதே கைமாறியது.  இரண்டு நாளில் ஸ்பேர் பார்ட்ஸாக கட்டில் வந்தது.  ஒரு வாரத்தில் அவர் வந்து பொறியியல் இஞ்சினீயராக மேற்பார்வையிட தலையாரி கட்டிலை இணைத்துப் பின்னி என்னிடம் ஒப்படைத்தார்.

வாழ்வில் முதன் முதலாவது கட்டில் படுக்கை சுகமாகவே இருந்தது.  இரண்டு நாள் கழித்து ஒரு பக்கம் லேசான விரிசல். ஒருவாரத்தில் பல விரிசல்கள். பயம் கண்டு தரையிலேயே படுக்க ஆரம்பித்தேன்.  வந்தபோதே கட்டில் முழுகாமல் இருந்ததோ என்னவோ. பத்து பதினைந்து நாட்களுக்குள் மற்றொரு கட்டிலைப் பிரசவித்துவிட்டது.   ஆம் எல்லா சட்டங்களும் நான்கு கால்களும் இரண்டிரண்டாக பிளந்துவிட்டது.  என் ஓ.ஏ.விற்கு ரொம்ப கோபம். அந்த வி.ஏ.ஓவை பிலுபிலுவென்று பிடித்துவிட்டார்.  மறுநாள் கட்டில் செய்தவன் ஏமாற்றிவிட்டான் என்று சொல்லி எடுத்துச் சென்றுவிட்டார்.

அப்புறம் ஒரு மாதம் வரை சர்க்கார் வேலை மாதிரி இழுபறி செய்து கடைசியில் வேறு ஒரு கட்டில் வந்து சேர்ந்தது. அதுவும் ஏனோ சரிப்பட்டு வரவில்லை. நான் வழக்கம்போல் தரையிலோ அல்லது மேசைமேலேயோ படுத்துத்தான் கடைசி வரை துங்கினேன். அவருக்கு நல்ல புறம்போக்கு மரம் ஏதும் கிடைக்கவில்லை போலும்.  கட்டில் வாங்கிய நான் தூக்கத்தை வாங்கத் தவறிவிட்டேன் போலும். தரையில் படுக்கிற சுகத்தை விட எனக்குத்தான் மனம் வரவில்லை.

இந்த வி.ஏ.ஓ.-க்கள் சில சமயம் செய்யும் லுட்டி கொஞ்சம் ஓவராகவே இருக்கும்.  ஒருவர் என் அலுவலகத்திற்கு வருவார் அங்கு இருக்கும் தலையாரியை விளித்து “அய்யா வீட்டை சுத்தம் செய்யக்கூடாதா” என்பார்.  ஒருவர் தாமே கட்டடத்திற்கு வெள்ளை அடித்துத் தருகிறேன் என்பார்.  ஒருவர் சுற்றிலும் செடி வைத்தால் நல்லா இருக்கும் என்பார்.  யாரும் செயல்படுத்தமாட்டார்கள்.  எனக்கு என்று ஒருசில தலையாரிகள், – சொல்லப்போனால் அவர்கள் தலையாரிகள் அல்ல பழக்கத்தால் என் சகோதரர்கள் – அவர்கள்தான் அவ்வப்போது இந்த மாதிரி வேலைகளை நான் முகாம் சென்றிருக்கும் வேளைகளில் செய்து நான் உள்ளே நுழைந்ததும் அதையெல்லாம் செய்ததற்காக என்னிடம் கடியும் வாங்கிக் கொள்வர்.

அவர்கள் அரசாங்கப் பணியாளார்களேயன்றி என் சொந்த வேலைக்காரர்கள் அல்ல என்பதால் என்னிடம் திட்டு வாங்குவர்.  ஆனால் அடுத்தும் அவர்கள் அப்படியே நடந்துகொள்வர்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு வி.ஏ.ஓ. வந்தார்.  வீட்டை சுத்தம் செய்யப் புகுந்தார்.  நான் முகாமிலிருந்து வந்தால் வீடு சுத்தம் செய்து கழுவி விடப்பட்டிருந்தது.  ஒரு பக்கம் இருந்த பூஞ்செடிகளைக் காணோம்.  எல்லாம் பின் பக்கம் கொண்டு வைக்கப்பட்டிருந்தது. வெளிச்சம் நல்லா வருமாம் அதற்காக.  அங்கே பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி.  ஒரு தொட்டியில் இருந்த நன்கு வளர்ந்த ரோஜாசெடி பிடுங்கப்பட்டு சாத்தி வைக்கப்பட்டிருந்தது.  தலையாரிகள்தான் இப்படி துப்புகெட்டு காரியம் செய்திருக்கிறார்கள் என்று சற்று கடிந்துகொண்டேன்.  ஆனால் நடந்தது வேறு.  மேனேஜ்மெண்ட் பார்த்த வி.ஏ.ஓ.தான் தொட்டியை நகர்த்திப் பார்த்திருக்கிறார். அவரால் நகர்த்த முடியவில்லை.  செடியைப் பிடித்து துக்கியுள்ளார்.  செடி கையோடு வந்துவிட்டது.  அப்படியே சத்தமில்லாமல் ஓரமாக வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரே இப்படியென்றால் மற்றவர்களை என்ன சொல்வது.  இப்படியும் சில அனுகூலச் சத்துருக்கள் உண்டு.

ஒரு வி.ஏ.ஓ. நேர்மையும் அஞ்சா நெஞ்சும் மிக்கவர்.  அவரது கிராமத்தில் ஒரு மிகமிகப் பெரிய மனிதர்.  பெரிய மனிதர் என்றாலே அரசாங்கத்திற்கு பாக்கி வைக்க வேண்டும் அல்லவா.  அவரிடம் வசூல் செய்வதை தன் லட்சியமாக ஏற்றுக்கொண்டார் வி.ஏ.ஓ.  ஒருநாள் அவர் வந்து வாசலில் இறங்கும்போது இவர் சைக்கிளில் போய் காலை ஊன்றி நின்றுகொண்டு வாரிபாக்கியைக் கேட்டார்.  அவர் முன்பாக வருபவர்கள் செருப்பைக் கழற்றி துரத்தில் விட்டுவிட்டு தோள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவர் சொல்வதைத்தான் கேட்க முடியுமே அன்றி அவரை கேள்வி கேட்க முடியாது. அப்படிப்பட்டவரை சைக்கிளில் தெனாவட்டாக உட்கார்ந்துகொண்டு காலை ஊன்றிக்கொண்டு வரிபாக்கியைக் கேட்டால் அவர் கடவுளே ஆனாலும் மன்னிக்க முடியுமா என்ன!

கை சுத்தமாக இருந்ததால் அவரை ஒன்றும் செய்ய இயலவில்லை.    தினசரி வீட்டுக்குப் போய்ப் பார்த்தார். வி.ஏ.ஓ-விற்கும் ஒன்றும் பெயரவில்லை. பணம் கட்டவில்லை. பதில்கூட கிடைக்கவில்லை.  கடைசியில் ஒரு காரியம் செய்தார்.  போஸ்ட் கார்டுகள் வாங்கினார்.  சிகப்பு மையினால் அவருக்குக் கடிதம் எழுதினார். தாங்கள் அரசாங்கத்திற்கு இவ்வளவு பாக்கி வைத்திருக்கிறீர்கள்.  இத்தனை முறை கேட்டும் தாங்கள் தொகை செலுத்தாமல் இருப்பதால் உங்களுக்குக் கடிதம் மூலம் நினைவுட்டப்படுகிறது என்ற ரீதியில் தினமும் கடிதம் போட ஆரம்பித்துவிட்டார்.

ஒருநாள் ஏதோ முக்கிய விசேஷம். பிரமுகர் வீட்டில். பல உறவினர்களும் கூடியிருந்த வேளையில் போஸ்ட்மேன் அந்தக் கடிதத்தினை வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்க அவர் யோக்கியதை உறவினர்களுக்கும் தெரிந்துவிட்டது, அதிகாரிகளிட-மெல்லாம் முறையிட்டுப் பார்த்தார்.   வி.ஏ.ஓ. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

கடைசியில் தம்மை அவமானப் படுத்திவிட்டதாகவும் நஷ்ட ஈடு கேட்கப் போவதாகவும் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் வி.ஏ.ஓ. பதில் சொல்லவில்லை.   அப்புறம் வழக்குப் போட வக்கீலை நாடியிருக்கிறார்.  அவரோ பாக்கியை கட்டிவிட்டுப் போட்டால்தான் செல்லும் என்று சொல்லியிருப்பார் போலும்.  ஒருநாள் முழுபாக்கியையும் செலுத்திவிட்டார்.  அடுத்து கேசும் போட்டார். எதற்கும் கவலைப்படவில்லை வி.ஏ.ஓ. பின்னர் வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

ஒரு முன்னாள் மணியம்.  அவருக்கு ஒரு கிராமத்தில் ஏராளமான நிலம் இருந்தது. வரிமட்டும் பாக்கி வைத்திருந்தார்.  வி.ஏ.ஓ. கேட்டால் கட்டுவோம் என்பார்.  ஒருநாள் வி.ஏ.ஓவிடம் கூடுதலாகக் கட்டியவர்களிடமிருந்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதுதானே என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.  என் காதுக்கு வந்தது. எனக்கோ கோபம். ‘ஊரில் பெரிய மனிதராக நடமாடிக்கொண்டு வரிகட்டக்கூட யோக்கியதை இல்லாமல் இருக்கிறாரே.  ஏழைகள் எல்லாம் காலம் தவறாமல் வரி செலுத்தும்போது இவருக்கு என்ன கேடு’ என்று மனதில் பலவாறாக பொருமிக்கொண்டிருந்தேன்.

ஒருநாள் குரூப் கலெக்ஷன் டவுணில் நடத்தினோம். பத்து பதினைந்து கிராம சிப்பந்திகளும் வி.ஏ.ஓக்களும். தெருத்தெருவாக வசூல் வேட்டையில் ஈடுபட்டோம். பாக்கிதாரர் வீட்டு முன்பாக தண்டோரா அடித்து சத்தமாக கூவுவார் தலையாரி.  பாக்கி வைத்திருப்பவர் யோக்கியதை அக்கம் பக்கம் தெரிந்துவிடும்.  அவரது தெருவிற்குள் நுழைந்ததும் ஒரு தலையாரியை அழைத்து “மணியார் இருக்காரா பார்” என்றேன்.  பதவி போய் நாலைந்து ஆண்டுகள் ஆனாலும்கூட மணியம் கர்ணம் வீடுகளை அவர் பதவியைச் சொல்லி அழைப்பதுதான் மக்கள் வழக்கம்.

தோளில் தண்டோரா சட்டி தொங்க நேராக (முன்னாள்) ‘மணியார்’ வீட்டு முன்போய் நின்று “ஆச்சியோவ் மணியார் இல்லிங்களா” என்று கூவினார் தலையாரி.  நபர் உள்ளே இல்லை.  ஆச்சிதான் எட்டிப்பார்த்தார்.  நிர்வாகம் எல்லாம் ஆச்சி கையில்தான்.  எட்டிப் பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி தன் வீட்டு வாசலில் செருப்புகூட இல்லாமல் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்த தலையாரி வாசலில் தண்டோராவுடன் காட்சி அளித்ததும் கோபம் அவமானம் எல்லாமும் வந்துவிட்டது. ஆச்சி கத்த, தலையாரி பயந்துபோய் ஓடிவர, நாங்கள் ஒடிப்போய் என்னவென்று பார்க்க அந்த அம்மாவோ தம் வீட்டு வாசலில் தண்டோராவுடன் வந்தது கெளரவம் குறைந்ததாக வாதாடினார்.

“தண்டோரா அடித்தாரா? இல்லையே, தண்டோராவுடன் வந்ததே கெளரவக் குறைவாக நீங்கள் நினைக்கிறீர்கள்.  ஆனால் உங்கள் வீட்டைப் பற்றி பாக்கி கட்டாதவர் என்று மற்றவர்களும் அதிகாரிகளும் நினைக்கிறார்களே.  அது தொரியுமா?” என்று நான் கேட்டேன். அதோடு தலையாரியைப் பார்த்து அவர் ஏதோ கூடாத பெரும் தவறு செய்தவர் போல் கடுமையாகப் பேசி தராதரம் பார்த்து நடந்துகொள் என்று கண்டித்து அனுப்பிவிட்டேன்.  நான் பேசியது கொஞ்சம் குத்தலாகவும் அவருக்கு சாதகமாகவும் இருந்ததால் சற்று மனதில் தைத்துவிட்டது போலும்.

பின்னர் தலையாரியை அழைத்து ‘நல்ல காரியம் செய்தாய்’ என்று பாராட்டி சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டேன்.  மறுநாள் அவர் கட்டவேண்டிய ஆயிரக் கணக்கான பாக்கியும் பைசா சுத்தமாகப் பைசலாகிவிட்டது.

சில சமயம் இப்படிப்பட்ட நாடகம் எனக்கும் தலையாரிக்கும் இடையில் நடக்கும். சில முறட்டு கேஸ்கள் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அப்படியே அறையலாம் போல் இருக்கும்.  கொஞ்சம் ஓவராகவே அலம்பல் செய்வர். நான் என் தலையாரியை வாங்குகிற வாங்கில் தலையாரிக்காக பட்டாதார் பரிந்து பேச நான் தலையாரியை அடிக்கப் போக கடைசியில் மிரண்டுபோன பட்டாதாரர் பணத்தைக் கட்டிவிடுவார்.  ஒரு சிலருக்கு இது நாடகம் என்று தெரியும். இருந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டுவிடும்.

ஒரு கிராமத்தில் ஒரு பெருந்தனக்காரர் இருந்தார்.  தலையாரிகள் அவரிடம் வசூல் செய்ய முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டனர்.  காரணம் கிராம நிர்வாக அலுவலரின் உள் குத்து என்பது தெரிந்தது. அதே கிராமத்தில் ஏழைகள் புறம்போக்கில் வசிப்பவர்கள் எல்லாரும் பாக்கியைக் கட்டிவிட்டனர்.  அந்த கிராமத்தில் குடியிருந்த ஆலமரத்துப் பேயாக இவர் மட்டும் பாக்கிப் பட்டியலில் இருந்து வெளியேறாமல் இருந்தார்.  ஒருநாள் ஜீப்பில் கிராமத்திற்குப் போய் இறங்கினேன். வி.ஏ.ஓ. இல்லை.  பட்டாதார் களத்துமேட்டில் இருப்பதாகத் தகவல் தெரிந்தது.  நான் தெருவில் நின்றுகொண்டு தலையாரிகளை அடிக்காத குறையாக திட்டினேன். “வரி கட்டாதவன் எவனா இருந்தாலும் களத்து மேட்டில் மறிக்க வேண்டியதுதானே”.  அப்படி இப்படி என்று ஏக வசனத்தில் பாடினேன்.  “புறம்போக்கில் குடியிருக்கும் அன்னாடங் காய்ச்சிகளிடம்தான் உன் வீரத்தைக் காட்டி வசூல் செய்வியா. இவனுக்கெல்லாம் என்ன கேடு” என்ற ரீதியில் பத்து நிமிஷம் பொழிந்து தள்ளிவிட்டேன்.  கூடவே வீ.ஏ.ஓவையும் ஒழித்துவிடுகிறேன் அவன்-இவன், அப்படி-இப்படி என்று திட்டல் வேறு.

அவ்வளவுதான் மறுநாள் வரி கட்டாத பெருந்தனக்காரர் வாரிபாக்கியில்லாத பெருந்தனக்காரர் ஆகிவிட்டார். கொசுறாக என் சாதிப் பெயரைச் சொல்லி இவர் வாயிலிருந்து இப்படியெல்லாம் வரலாமா என்று அங்கலாய்ப்பு வேறு.  இதிலே விசேடம் என்னவென்றால் வாய்க்கால் ஓரம் குடியிருந்த ஏராளமானவார்களுக்கு நான் வேண்டியவனாகிவிட்டேன்.

அத்துடன், அந்த ஏழைகள் வசதிக்காக தண்ணீர் தொட்டி சிறு பாலம் போன்ற வசதிகள் தேவை என்றும் வெள்ளக் காலங்களில் அவர்கள் படும் பாட்டையும் குறிப்பிட்டு ஒரு சிறப்பு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைத்தேன்.  எல்லாம் கொஞ்சம் தாமதமாக நிறைவேறிவிட்டதை சமீபத்தில் அறிந்தேன்.  தாமதம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு இருபது வருடங்கள்தான்.

மறுநாள் வி.ஏ.ஓ. நேரில் வந்து அய்யா இப்படி பேசிவிட்டீர்களே தெருவில் எல்லாரும் எட்டிப் பார்த்து பெரிய மனிதருக்கு அவமானமாகப் போய்விட்டதாக வருத்தப்படுகிறார் என்றார்.  நானோ ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு மாரியாதை கொடுத்து வந்ததை அவர் கெடுத்துக்கொண்டாரே. நீங்கள் அவரிடம் ஏன் சொல்லவில்லை என்றேன்.  வி.ஏ.ஓ வந்தது, “என்னை ஏன் திட்டினீர்கள்” என்று கேட்கத்தான்.  ஆனால் அவருக்குக் கேட்கத் தைரியம் இல்லாமல் போய்விட்டது.

ஒரு வி.ஏ.ஓ. புதிதாகப் பணி ஏற்றார்.  நாலைந்து வி.ஏ.ஓக்கள் சேர்ந்து ஒரு வீட்டை எடுத்துக்கொண்டு தங்கியிருந்தனர்.  இவர் கொஞ்சம் சினிமாப் பைத்தியம். கதை எழுதப்போறேன். பாட்டு எழுதப்போறேன் என்று ஒருதலைக்காதலாக அலைந்து கொண்டிருந்தார்.  மனதிற்குள் மட்டும் நினைத்துக்கொண்டு திரிந்துகொண்டிருந்தால் அப்படித்தானே.

எல்லாரும் அரட்டை அடித்துவிட்டு பத்துமணிக்கு மேல் படுத்துத் துங்கும்போது இவரது சினிமாக் கதை உணர்ச்சி விழித்துக்கொள்ளும்.  இவர்பாட்டுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதிக்காரன்போல் எழுந்து கதவைக்கூட சாத்தாமல் வெளியே கிளம்பிவிடுவார்.  எப்போது வருவார் என்று தெரியாது.  உடனிருந்தவர்கள் இவரது ரவுசு தாங்காமல் என்னிடம் புலம்புவர். யாராவது வீட்டில் புகுந்து கணக்குகளை கிளப்பிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு.

அவரை அழைத்து கண்டித்தால் தாம் விரைவில் சினிமாவுக்குப் போகப் போவதாக சொல்வார்.  அவருக்கு வேண்டியவர் யாரோ திரைத் துறையில் இருந்ததன் தாக்கம் அது.  எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.  அவர் நம்மிடமே “சார் நீங்க தத்தரக்கா சொல்லுங்க.  நான் பாட்டுக் கட்டுறேன்” என்று நம்மையும் கூட்டணி சேர்ப்பார்.  வீட்டிலேயே இருந்து உன் கற்பனைக் குதிரையில் சவாரி செய்யவேண்டியதுதானே என்றால். தோப்பு துறவில் போய் இருந்தால்தான் சந்தம் எல்லாம் வரும் என்பார். இதுவரை எழுதியதை எடுத்துவா என்றால் ‘இன்றுபோய் நாளை வருகிறேன்’ என்று போயே போய்விடுவார்.

ஒருநாள் என் அலுவலக உதவியாளர் ஒரு பிட்டைப் போட்டார்.

– “வி.ஏ.ஓ. சார்! நீங்கபாட்டுக்குக் கண்ட இடத்திற்கும் ராத்திரியில் போகாதீங்க
இங்கல்லாம் காத்து கருப்பு நடமாட்டம் இருக்கு”

– “அடப் போப்பா.  இந்த காலத்திலும் நீங்க இதையெல்லாம் நம்பறீங்களே”

– “சார்  நீங்க  நம்புனா நம்புங்க இல்லாட்டி போங்க ஒரு நாளைக்கு
பாத்தாதான் நம்புவீங்க.  அப்புறம் ஒண்ணும் செய்ய முடியாது”

இதற்குள் நான் குறுக்கிட்டு “வி.ஏ.ஓ. நீங்க நம்பாட்டி இல்லைன்னு ஆகிடாது. வேணும்ணா நீங்க என்னோட வியாழக்கிழமை லால்பேட்டை பங்களாவுக்கு வாங்க. இரவு என்னோட தங்குங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க” என்றேன்.

தம்பி மனதில் பயம் சிறிது உதயமாகிவிட்டது.  மெதுவாக அது என்ன என்று கேட்டார்.  அதுதானே எனக்கு வேணும்.

அது ஒன்றுமில்லை. ஒருமுறை லால்பேட்டை பங்களாவில் கோட்டாட்சியர் தங்கியிருந்ததால் நானும் பக்கத்து அறையில் படுத்துக்கொண்டேன்.   நள்ளிரவில் ஒரே இறைச்சல். ஏதோ நூறு நாய்கள் கத்துவது போன்று சத்தம்.  நான் ஏண்டா தங்கினேன் என்று நொந்துகொண்டேன்.  மறுநாள் அந்த பங்களா வாட்சுமேனிடம் இதுபற்றி சொன்னதும் அவர் சொன்ன தகவல் என் மனதில் கொஞ்சம் புளி கரைத்துவிட்டது.

அதாவது லால்பேட்டை பங்களா இருப்பது வீராணம் ஏரிக்கரையில் ஷட்டர்களுக்கு அருகில். அதில் முனீஸ்வரன் இருக்கிறாராம். வியாழக்கிழமை நள்ளிரவில் அவர் ஊர்வலம் புறப்படுவாராம். அப்படியே ஏரிக் கரையில் சிறிது போய் அங்கிருந்து கீழிறங்கி மெயின்ரோட்டுக்கு வந்து அங்கிருந்து பங்களா வழியாக மீண்டும் ஏரிக்கரைக்குப் போய்விடுவாராம். அந்த நேரத்தில் நாய் குரைக்குமாம்.  “நீங்க வேணா பாருங்க முதலில் நாய்கள் ஏரிக்கரைப்பக்கம் குரைக்க ஆரம்பித்து திசை மாறிக்கொண்டே வந்து கடைசியில் ஏரிக் கரையில் போய் முடிந்துவிடும்.  அப்புறம் எதுவும் நடக்காது” என்றார்.  அதற்குப்பின் நான் ஏன் பங்களாவில் படுக்கிறேன். எத்தனை மணி ஆனாலும் வீட்டுக்கு வந்துவிடுவேன்.  அல்லது வி.ஏ.ஓ. வீட்டுக்கு ஓடிவிடுவேன்.

இந்த கதையை கேட்டதால் ஆடாத மனமும் ஆடுதே என்ற நிலை ஏற்பட்டது தலைவருக்கு.  அத்துடன் நள்ளிரவுப் பயணத்தை விட்டுவிட்டார்.

ஒரு வி.ஏ.ஓ. அவர் குடும்பத்துடன் தங்கியிருந்தார் கிராமத்தில்.  அவர் வீடும் ஆபீசும் ஒன்றுதான்.  நான் எப்போது போனாலும் என்னை உபசரிக்கத் தவறமாட்டார் அவரது தர்மபத்தினி.  மிக நல்ல பெண்மணி.  நன்கு படித்தவரும் கூட.  அவர் பிரசவத்திற்காக கொள்ளிடத்திற்கு அக்கரையில் மயிலாடுதுறை தாலுக்கா கிராமம் ஒன்றில் போய் தங்கியிருந்தார்.  நானும் என் அலுவலக உதவியாளரும், மற்றும் இரண்டு வி.ஏ.ஓக்களும் அவரது கிராமத்திற்குப் போனோம்.  அங்கு வி.ஏ.ஓ. இல்லை.  தலையாரியை வரவழைத்தால் அவருக்கும் எங்கு போனார் என்பது தெரியவில்லை.  பக்கத்து வீட்டுக்கார அம்மாள் இலவச தகவல் சொன்னார்.  அவரது மனைவிக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், அவரைப் பார்க்கக் காலையிலேயே போயிருப்பதாகவும் சொன்னார்.  அவர் அத்துடன் விட்டிருக்கலாம். கூடவே ஒரு வீட்டைக் குறிப்பிட்டு அந்த அம்மாவையும் கூட்டிக்கொண்டு சிதம்பரம் வழியாகப் போயிருக்கிறார் என்றார்.

எங்களுக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.  எங்களுக்கும் வேலை எதுவும் இல்லை. கூட வந்த வி.ஏ.ஓக்கள் இருவரும் அவருக்கு நண்பர்கள். ஒருவர் சொன்னார் “அய்யா வாங்க நாம் இப்படியே போய்ப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே ஒரு பட்டாதாரார் நிலவரி, லோன் எல்லாம் கட்டவேண்டும் அதையும் கேட்டுவிட்டு வருவோம்” என்றார்.  அவசர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சைக்கிளிலேயே போவதென்று முடிவாகிவிட்டது.  அப்போது காலை பதினோரு மணி இருக்கும் நால்வரும் அங்கிருந்து காட்டுமன்னார்கோயில் போய் அங்கிருந்து முட்டம் கிராமம் வழியாக ஆற்றைக் கடந்து அக்கரை போய்ச் சேர்ந்தோம்.

ஊர் பெயர். விலாசம் எல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஒரு உரக்கடை இருந்தது. அங்குபோய் இன்ன பேர்வழி பொண்ணு கட்டியது இந்தப்பக்கம் யாராவது இருக்காங்களா தெரியுமா என்று கேட்கப்போக அவரோ வி.ஏ.ஓ.-வின் அங்கமச்ச அடையாளம், சாதகக் குறிப்பு உட்பட புட்டுப்புட்டு வைத்துவிட்டார்.  எங்களுக்கு ஆச்சரியம். கடைசியில் அவர் இவரது மைத்துனர் என்று தெரிந்தது.  ஆக அவரது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பிரசவமான அந்த பெண்மணிக்கு தன் கணவர்கூட வரவில்லை அதற்குள் ஆர்.ஐ., வி.ஏ.ஓ. எல்லாம் வந்துவிட்டார்கள் என்பதில் ஏக மகிழ்ச்சி.  நாங்கள் சும்மா இருக்கக்கூடாதா.  காலையில் போய்ப் பார்த்ததையும் அங்கு தகவல் கிடைத்து வருவதையும் சொன்னதுடன் “நாங்களே வந்துவிட்டோம். எங்களுக்கு முன்னரே புறப்பட்டவர் இன்னுமா வரவில்லை அதுவும் சிதம்பரம் சுற்றிக்கொண்டு ஏன் வரவேண்டும்” என்று சந்தேகத்தை எங்களை அறியாமலே விதைத்துவிட்டோம்.

அவரது பிடிவாதத்தால் மதியம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மூன்று மணியளவில் புறப்பட்டோம்.  அதுவரை தம்பிரான் வந்து சேரவில்லை.  அப்படியே பாக்கிதாரர் கிராமத்திற்குப் போய்ப் பார்த்து வரி வசூல் செய்துவிட்டு அருகிலேயே திருமணஞ்சேரி இருப்பதாகக் கேள்விப்பட்டு என்னுடன் வந்த வி.ஏ.ஓ. ஒருவருக்கு திருமணத்திற்கு பிரார்த்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட ஐம்பதுகிலோ மீட்டராவது சைக்கிளில் போயிருப்போம்.

நாலைந்துநாள் கழித்து விடை கிடைத்தது. வந்தார் வி.ஏ.ஓ. அவருக்கு கோபமும் சிரிப்பும் பொங்கியது.  “அய்யா நீங்கபாட்டுக்கு வீட்டில போய் ஒண்ணுகிடக்க ஒண்ணு சொல்லிட்டு வந்திட்டீங்க வீடே பெரிய போர்க்களமாயிட்டுது” என்றார்.

நடந்தது இதுதான். தலைவர் ஒரு பெண்ணையும் அழைத்துக்கொண்டு சிதம்பரம் போய் சினிமா பார்த்துவிட்டு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நடந்த விபரம் எதுவும் தெரியாமல் மாலையில் மாமியார் வீட்டுக்குப் போய் நுழைந்திருக்கிறார்.  மனைவியோ யார் வந்தார். எப்படி தகவல் வந்தது என்பதையெல்லாம் சொல்லாமல் ‘எப்போது புறப்பட்டீர்கள்’ என்று கேட்க ‘இப்பத்தான் நேரா வறேன்’ என்று அப்பாவியாகப் பதில் சொல்ல ‘எப்படி வந்தீர்கள்’ என, ‘வழக்கம்போல் கொள்ளிடம் ஆற்றைக் கடந்துதான்’ என பதில் சொல்ல, வசமாக மாட்டிக்கொண்டார்.  எரிமலை பூகம்பம் சுனாமி என்று எல்லாமாக தாக்குதல் நடத்த திக்குமுக்காடிப்போனார்.

அதன்பின் அடிக்கடி அக்கறைக்கு போகலாமா என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர் நண்பர்கள்.