"

1

அந்த ஹாலில் இருந்த அலுவலர்களுக்கு ஒரே அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ஆம் அந்த சிரிக்காத சின்னையா – அலுவலக உதவி மேலாளர், பகபகவென்று சிரித்துக் கொண்டிருந்தார்.  யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

இது நடந்து நாற்பது ஆண்டுக்கு மேலாகிவிட்டது.  முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக செட்டப் குறித்து ஒரு முன்னுரை.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலப்பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அல்லது ஐந்து கிளார்க்குகள் வேலை செய்வர்.  அவர்களுக்கு ஒரு பிரிவுத் தலைவர் (ஹெட்கிளார்க்கு) உண்டு. பிரிவுத் தலைவர் என்பவர் அப்போதெல்லாம் குட்டிக் குட்டி சமஸ்த்தான அரசர் போன்றவர்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட மேற்கில் உள்ள பெரிய ஹால்.  அதில் நிலம் சம்பந்தப்பட்ட ஐந்து பிரிவுகள் உண்டு.  அதில் ஒரு பிரிவுதான் ‘வி’ பிரிவு.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்கள் சேர்ந்து மிகவும் கச்சிதமாகவும் அதைவிட மிகவும் பொருத்தமாகவும் ஒரு பட்டப் பெயர் வைத்துவிடுவார். அவர் ரிட்டையராகிப் போனாலும் தலைமுறை தத்துவமாக அந்த பட்டப்பெயர் மாணவர்கள் மத்தியில் நிலைத்துவிடும். உதாரணம். எங்கள் கணக்கு ஆசிரியருக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் வெட்டுக்கிளி. அவர் வகுப்புக்கு வந்தால் ஒரு மணிநேரம் பாடம் நடத்துவதற்குள் எதையாவது கேட்டு ஒரு மாணவன் பாக்கியில்லாமல் ஒரு முறையாவது வரிசையாக வரவழைத்து கிள்ளிவிடுவார். என்ன பெயர் பொருத்தம் சரிதானே?

அதேபோன்று அந்த ஹெட்கிளார்க்குக்கு நாங்கள் வேலைக்கு வந்த புதிதில் எங்கள் முன்னோர்கள் வைத்திருந்த பெயர் ‘சிரிக்காத சின்னையா.’

ஒன்றுமில்லை. எப்போதும் அவர் முகத்தில் ‘உர்’ வழிந்துகொண்டே இருக்கும். யாரோடும் அதிகம் கலந்து பேசமாட்டார்.  அப்படி பேசினாலும் மற்றவர்கள் சிரித்துப் பேசினாலும் மகாபலிபுரத்து சிற்பம் போல் அவர் முகத்தில் ஒரே பாவம்தான்.  அவருடன் பழகுபவர்கள்தான் பாவம்.  அவருக்கு நினைப்பு.  ‘நாம் சற்று ரிலாக்ஸ்டாக முகத்தை வைத்துக்கொண்டால் நம் கீழ் உள்ளவர்கள் நம்மை ஏறி மேய்ந்து விடுவர்’ என்று.

போகட்டும். விஷயத்திற்கு வருவோம். அந்தப் பிரிவில் ஒரு கிளார்க்கு வேலைபார்த்து வந்தார். அவர் எம்.ஏ. படித்தவர். கிராமத்திலிருந்து வந்தவர். கிராமத்தில் ஏர் ஓட்டிக்கொண்டிருந்தவர் அப்படியே நகரத்திற்கு வேலையாக வந்தால் எப்படிப்பட்ட அலங்காரத்தில் இருப்பாரோ அப்படிதான் வேலைக்கு வருவார். அதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் நாகாரிகத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு(!?) அவர் ஒரு ஜோக்கர்.  அவர் வேலைக்கு வந்த புதிது.  அவர் படித்திருந்த அளவிற்கு புத்திசாலித்தனம் சற்று குறைவு.  ஆனால் பிழைக்கத் தெரிந்தவர். ஜால்ரா தட்டுவதிலும் குழைந்து குழைந்து குனிந்து கும்பிடு போடுவதிலும் தனி பட்டம் பெற்றவார்.

அப்போதெல்லாம் அலுவலக நடைமுறை முழுவதும் ஆங்கிலத்தில்தான். தமிழ் கொஞ்சமாகத் தலைகாட்டிக்கொண்டிருந்தது. மாதம் இரண்டு முறை பிரிவுத் தலைவருக்கு கிளார்க்குகள் தங்களின் பதிவேடுகள் அனைத்தையும் தணிக்கைக்கு வைக்க வேண்டும்.  மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியரின் பி.ஏ-விற்கு வைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட வருவாய் அலுவலருக்கோ தணிக்கைக்கு வைக்க வேண்டும்.. அந்தந்த அலுவலரும் தங்கள் மன நிலைக்கு தகுந்தபடி தணிக்கைக் குறிப்பு எழுதுவர். அதில் குறைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். அதனை நாம் சரி செய்து வைக்கவேண்டும்.  அப்படித்தான் ஒவ்வொரு கிளார்க்கின் வேலைத்திறனும் கண்காணிக்கப்படும்.

அதிலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட வருவாய் அலுவலருக்கோ தணிக்கைக்கு வைக்கும்போது கிளாக்குகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பர். ஏனென்றால் ஒவ்வொரு சமயம் தணிக்கை செய்து வந்தவுடன் சில கிளார்க்குகளுக்கு மெமோ கொடுக்கப்பட்டதுண்டு.  சிலர் நேரில் அழைத்து ‘இதைவிட்டு வேறுவேலைக்கு போயிருக்கக்கூடாதா’ என்று வெறுத்துப்போகும் அளவிற்கு திட்டு வாங்குவதுண்டு.  நேரம் நல்லா இல்லையென்றால் டிராஸ்பர் கூட கிடைக்கும் மாவட்டத்தின் கடைக்கோடிக்கு.  இப்படிப்பட்ட கொடுமையில் அதிகாரி சமயத்தில் நல்ல மூடிலிருந்தாலோ அல்லது சோம்பலாக இருந்தாலோ  ‘குறிப்பில்லை’ என்று ஒற்றை வார்த்தையில் பதிவுசெய்து அனுப்பிவிடுவார்.

பங்களாவிலிருந்து தணிக்கை செய்து பதிவேடுகள் பிரிவில் கொண்டு வைக்கப்பட்டதும் கிளார்க்குக்கு தெரிகிறதோ இல்லையோ. கொண்டு வரும் ஜவான் மூலம் எல்லோருக்கும் தெரிந்துவிடும். எல்லாரும் ஆவலாகப் பதிவேட்டைப் பிரித்துப்பார்த்து குறிப்புகளின் அழுத்தத்திற்கு தகுந்தபடி கமெண்ட் அடித்து கொண்டிருப்பர்.  தப்பித்தவறி ‘குறிப்பில்லை’ என்று வந்துவிட்டால் போச்சு. அந்த கிளார்கிடமிருந்து அன்று டிபன் காப்பி என்று ஏதாவது எப்பாடுபட்டாவது வசூல் செய்துவிடுவர் அந்த வசூல் ராஜாக்கள்.

அன்றும் அப்படித்தான். மேற்படி ஹாலில் எல்லாரும் தங்கள் பிரிவு வேலையில் மூழ்கியிருந்தநர்.  இப்போது போன்று அந்த காலத்தில் அலுவல் நேரத்தில் பிரிவில் உட்கார்ந்துகொண்டு அரட்டை அடித்து வெட்டிப் பேச்செல்லாம் பேசமுடியாது.  மிலிட்டரி ஒழுங்கில் வேலை நடக்கும். எப்போதாவதுதான் கலகலப்பு இருக்கும்.  அல்லது அலுவலக நேரம் அல்லாத சமயத்தில் பேசிக்கொள்வர்.

பங்களாவிலிருந்து பைல்களின் மூட்டை கொண்டு வந்து வைக்கப்பட்டது. சிரிக்காத சின்னையா  தமது பிரிவுக்கான பைல்களை எடுத்து பார்த்தார். அதில் நமது நண்பரின் பதிவேடுகள் தணிக்கை செய்து வந்திருந்தது.  மாவட்ட ஆட்சியர் பதிவேடுகளை தணிக்கை செய்ததற்கு அடையாளமாக அதற்குறிய குறிப்புப் பதிவேட்டில் ஒவ்வொரு பதிவேட்டின் பெயரையும் குறிப்பிட்டு ‘குறிப்பில்லை’ என்று எழுதியிருந்தார்.  சிரிக்காத  சின்னையாவிற்கு சற்று  அதிர்ச்சி.  ‘என்னடா இது மாய்ந்து மாய்ந்து வேலை செய்பவனுக்கெல்லாம் கன்னாபின்னாண்ணு குறிப்பு எழுதுறாங்க.  ஆனா இவருக்கு என்னடான்னா குறிப்பில்லை என்று இருக்கு’ என்று நொந்துகொண்டே பிரிவிக்கு அனுப்பிவிட்டார்.  நாங்களென்றால் குறிப்பில்லை என்று வந்தவுடன் ஆப்கனிஸ்த்தானை கிரிக்கெட்டில் தோற்கடித்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து கொண்டாடியிருப்போம். நம்ம ஆளு வாய் திறக்கவில்லை.  தெரிந்தால் செலவு வைத்துவிடுவார்களே என்றுதான்.

எப்போதும் தணிக்கை செய்துமுடித்து வந்ததும் 48 மணிநேரத்திற்குள் குறிப்புகளுக்கு பதில் வைத்துவிடவேண்டும். பெரும்பாலும் மன்னிப்புக் கேட்டுதான் பதில் இருக்கும்.

நம்ம ஆளு என்ன செய்தார் தெரியுமா?  தணிக்கைக் குறிப்பு பதிவேட்டில் மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு பதிவேட்டிற்கு நேராகவும் குறைகள் இல்லை என்ற அர்த்தத்தில் ‘குறிப்பில்லை’ என்று எழுதியிருந்தார் அல்லவா! அதன் அருகில் ஐயா ‘குறிப்பு வைத்துவிடுகிறேன்’ என்று பொருப்பாக எழுதி ஹெட்கிளார்க் மேசையில் வைத்துவிட்டார்.  குறிப்பில்லை என்றால் நம்ம ஆளு ஏதோ குறிப்பு வைக்கத் தவறிவிட்டோம் என்று அர்த்தம் செய்துகொண்டு அப்படி எழுதிவிட்டார்.

அதனை எடுத்துப்பார்த்த சிரிக்காத சின்னையாவிற்கு ஆரம்பத்தில் சொன்னபடி சிரிப்பு கட்டுப்படுத்தமுடியாமல் வந்துவிட்டது. இந்தக் களேபரத்தில் நாங்கள் எல்லாரும் என்ன நடந்தது என்று தெரியாமல் சிரிக்காத சின்னையாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்து அதிர்ச்சியும் சந்தேகமுமாக ஆகிவிட்டோம். அதற்குள் சற்று சுதாரித்துக்கொண்ட பக்கத்து ஹெட்கிளார்க்கு என்ன என்று கேட்க சிரிக்காத சின்னையா அப்படியே அந்த பதிவேட்டை தூக்கிக் கொடுத்துவிட்டார்.  அப்போதுதான் தெரிந்தது அந்த சிரிப்பிற்குக் காரணம்..

போதாதா எல்லாருக்கும். அலுவலகம் என்பதையும் மறந்து எல்லாரும் சிரித்துவிட்டோம். மிலிட்டிரி பரேடுபோல் நடந்துகொண்டிருந்த ஆபீசில் திடீரென்று சிரிப்பு சத்தம் கேட்டால் என்ன ஆகும். பக்கத்து ஹால்களில் இருந்தவர்கள் என்னவோ ஏதோவென்று வந்து பார்த்துவிட்டு விஷயத்தை அறிந்ததும் அவர்களும் சேர்ந்துகொண்டனர்.  ஒரு நிமிடத்தில் அலுவலகம் முழுவதும் சுமார் 200க்கு மேல் வேலை பார்த்தவர்களுக்கு தகவல் பரவிவிட்டது. பி.ஏ-வின் அலுவலக உதவியாளர். மூலம் தகவல் தெரிந்த நேர்முக உதவியாளர் ஆவலும் சிரிப்பும் தாங்காமல் தாம் யானை மேல் இருந்துகொண்டு அதிகாரம் செய்யும் பெரீரீரீய அதிகாரி என்பதையும் மறந்து நேரில் பிரிவுக்கு வந்து சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
ஆனால் சம்பந்தப்பட்ட நம்ம ஆளு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தம் வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.  அப்படி நடித்தார்.  இல்லைண்ணா பார்ஸ் காலியாயிடுமே. எப்படியோ அன்று பொழுது இப்படி கழிந்துவிட்டாலும். இதனை பல ஆண்டுகள் சொல்லிச் சொல்லி சிரிக்க வைத்துவிட்டார் நம்ம ஆளு. அதைவிட சிரிக்காத சின்னையாவையே சிரிக்க வைத்த கில்லாடி என்று பாராட்டும் வேறு.