"

10

மாடுகள் பேப்பர் தின்னப் பழகியது எப்படி


 எந்த ஒரு அலுவலகத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கே இளக்காரமான ஒரு பணியிடம் இருக்கும். அது பெரும்பாலும் டைப்பிஸ்ட் பணியிடமாகத்தான் இருக்கும். மனிதனுக்குக் கையாலாகாத வேலைகளையெல்லாம் வேறு யாராவது செய்யக் கூடியவர்களைக் கண்டால் அவ்வளவுதான். அவர்கள் பேரில் ஒரு இனம் புரியாத காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகிவிடுவான். அப்படிப்பட்ட நிலையில்தான் இந்த டைப்பிஸ்ட்டுகளைக் கண்டால் கொஞ்சம் வெறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு. அது அரசன் முதல் சேவகன் வரை ஒரே மாதிரிதான் வெளிப்படும்.

எப்போதும் டைப்பிஸ்ட்டுகளுக்கும், குமாஸ்த்தாக்களுக்கும், ஒரு பனிப்போர் ஏதோ ஒரு காரணத்தை வைத்து நடந்துகொண்டே இருக்கும். அப்போதெல்லாம் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் போன்ற இந்த அதிகார வர்க்கம் இருக்கிறதே அவர்கள் குமாஸ்த்தாக்கள் பக்கம்தான் ‘கோடுவார்.’  ‘கோடாமை’ குறித்த வள்ளுவர் வாக்கெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. ஏன்னா, இவர்களுக்கு டைப்படிக்கத் தெரியாது. அடுத்து அவர்கள் மூலமாக வருமானம் வராது.

குமாஸ்த்தாக்கள் நாள் கணக்கில் ஏன் மாதக் கணக்கில்கூட ஒரு கோப்பினை கட்டி வைத்துவிடுவர்.  பார்ட்டி வந்து கவனித்தாலோ அல்லது வேறு எந்த வகையிலாவது நெருக்கடி வந்தாலோ உடன் அந்த கோப்பிற்கு சிறப்பு விசா அந்தஸ்த்து வழங்கப்பட்டு ஒவ்வொரு அலுவலராகக் கடந்து ஒப்புதல் பெற்று கடைசியாக டைப்பிஸ்ட்டிடம் வந்து சேரும். ஆனால் டைப்பிஸ்ட்டு மட்டும் உடனே அடித்துத் தந்துவிடவேண்டும். வரும்போதே ‘அவசரம்’ என்று கட்டியங் கூறிக்கொண்டே கொண்டுவந்து தருவார் குமாஸ்த்தா.

ஆச்சு. டைப்பிஸ்ட் வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ தாமதம் செய்தால் உடனே அவதுறு கிளம்பிவிடும். நேராக அதிகாரியிடம் போய் நம்ம டைப்பிஸ்ட்டு எந்த பேப்பர் கொடுத்தாலும் அடித்து தரமாட்டேன் என்கிறார். ரொம்ப லேட் செய்கிறார் என்று கோள் சொல்வார் குமாஸ்த்தா. “ஆமாங்க எனக்குகூட அப்படிதான்” என்று அதற்கு வழி மொழியவும் ஒரு குமாஸ்த்தா இருப்பார்.  ஆரம்பித்துவிடும் ஒரு சத்தமில்லாத மெளன யுத்தம்.

இப்படித்தான் ஒரு வட்டாட்சியர் வந்துசேர்ந்தவுடனேயே ஒரு பிரச்சினையை அவரிடம் கொண்டுபோய்விட்டார்கள்.  அவரும் உடனே அதை நம்பிவிட்டார்.

ஒரு சில தினங்கள் சென்றது. நமது டைப்பிஸ்ட்டு நண்பர் தமது ஈட்டிய விடுப்பில் 15 தினங்கள் சரண்டர் செய்வதாகவும் அதற்கான ஊதியத்தினை வழங்கும்படியும் கேட்டு மனு கொடுத்தார். வட்டாட்சியர் ஏற்கனவே தம்மிடம் வந்த புகாரை நினைவு வைத்துக்கொண்டு தமக்கு இந்த சரண்டர் விடுப்பினை அங்கீகரிக்க அதிகாரம் உள்ளதா என்று கேள்விகேட்டு திருப்பி அனுப்பிவிட்டார். அது விபரம் நண்பருக்கு தெரிந்துவிட்டது.

நான் போய் டைப்பிஸ்ட் நண்பரிடம் ஒரு கடிதம் தட்டச்சு செய்யலாமென்று சென்றேன். அங்கே இரண்டு டைப்பிஸ்ட்டுகள் இருந்தனர். இருவரும் சீனியர்கள். இருவரும் படு வேகமாக தட்டச்சு செய்துகொண்டிருந்தனர். ஆனால் முகம் மட்டும் கடுகடு.  டைப்படிக்கும் கடிதங்களில் எல்லாம் ஒரு எழுத்தை அடித்தால் இரண்டு அரை எழுத்தாக இரண்டு வரிகளாக அடித்துக்கொண்டிருக்கிறது. “என்ன அண்ணே இது இப்படி இருக்கே” என்றேன்.

“அது அப்படித்தான் உன் வேலையை முடித்துக்கொண்டு போ” என்று எனக்கு சரியாக அடித்துக் கொடுத்தார்.  அப்புறம்தான் தெரிந்தது எரிமலை குமுறிக்கொண்டு இருக்கும் விஷயம்.

நீங்கள் வட்டாட்சியரிடம் நேரில் போய் கேட்பதுதானே என்றேன். நண்பர் சொன்னார். “இவன் (வட்டாட்சியர்) இத்தனை காலம் வேலை பார்த்திருக்கானே. அவனும் சரண்டர் வாங்கியிருக்கானே அவனுக்கு யார் சாங்ஷண் செய்தார்கள் என்று தெரியாதா? அதிசயமா தாசில்தார் சீட்டில் உட்கார்ந்தவுடன் இவன்களுக்கு இப்பதான் அதிகாரம் இருக்கா இல்லையான்னு சந்தேகம் வருதா. நீ பாட்டுக்கு போய் உன் வேலையைப் பார்” என்று சொல்லிவிட்டார்.

இரண்டு நாட்கள் ஆனது அலுவலகத்திலிருந்த எந்த கடிதமும் மேலே அனுப்பப்படவில்லை. ஏன்னா எல்லாம் படிக்க முடியாதபடி இரண்டு இரண்டு வரிகளில் அரைவாசி எழுத்துக்களில் உள்ளதே. குமாஸ்த்தா போய் கேட்டால் “மிஷின் அப்படிதான் அடிக்கிறது நீ வேணுமானா பார்த்துக்கோ” என்றுவிட்டனர். துணை வட்டாட்சியர் கேட்டார்.  அவருக்கும் அதே பதில்தான்.

பிரச்சினை வட்டாட்சியரிடம் கொண்டுபோகப்பட்டது. அவருக்கு ஒரே கோபம். கூப்பிட்டார் டைப்பிஸ்ட்டுகளை.  விசாரணை துவங்கியதும் ஒரே பதில்தான் சொன்னார் டைப்பிஸ்ட்.

“மிஷின் லட்சணம் இதுதான். இருப்பதைக் கொண்டுதானே அடிக்க முடியும்”

“இவ்வளவு நாள் எப்படி அடித்தீர்கள் திடீரென்று இரண்டு மிஷினுமா ரிப்பேர்.”

“அது என்ன சொல்லிவைத்தா ரிப்பேராகுது”

“மெக்கானிக்கை கூப்பிட்டு கேட்டீர்களா”

“எல்லாம் காண்பிச்சாச்சு இனி ரிப்பேர் செய்ய முடியாது அதற்கு புது மிஷின்
வாங்கிவிடலாம். அதனால் ஸ்டேஷனரி அண்டு பிரிண்டிங் ஆபீசுக்கு
அனுப்பிவிட்டு வேறு மிஷின்தான் வாங்கவேண்டும் என்று

சொல்லிவிட்டார்.”

“முக்கியமான கடிதங்களையாவது பக்கத்து ஆபீசில் போய் அடித்துக்கொண்டு
வரக்கூடாதா”

“அது எப்படிங்க அதுமாதிரி எல்லாம் சட்டத்தில் இடமில்லை.”

“என்னதான் சொல்றீங்க”

“பேசாமல் எங்களை ரிலீவ் பண்ணிடுங்க நாங்க வேற நல்ல ஆபீசுக்கு
போஸ்ட்டிங் வாங்கிக்கிறோம்.”

பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. இதற்குள் பிரச்சினையின் மூல காரணம் என்ன என்று வட்டாட்சியர் காதில் போட்டுவிட்டார்கள். பார்த்தார் வட்டாட்சியர் கூப்பிட்டார் சம்பந்தப்பட்ட குமாஸ்த்தாவை. டைப்பிஸ்ட்டின் சரண்டர் விண்ணப்பத்தில் ஒப்புதல் செய்து அனுப்பி வைத்துவிட்டார். பிரச்சினை சரியாகிவிடும் என்று நினைத்தார். இரண்டும் அடிபட்ட புலியாயிற்றே அவ்வப்போது உறுமிக்கொண்டே இருந்தது. சின்னச்சின்ன பிரச்சினைகளும் பூதக்கண்ணாடிமூலம் பார்க்கப்பட்டது.

விளைவு. மீண்டும் ஒருநாள் வட்டாட்சியர் கூப்பிட்டார். டைப்பிஸ்ட்டுகள் வேலையில் எப்போதும் புகார் வந்துகொண்டே இருக்கு. என்ன வேலை நடக்கிறது என்றே தெரியவில்லை. உங்க செக்ஷனை கொண்டு வந்து என் ரூமுக்கு பக்கத்தில் உள்ள வெராண்டாவில் போடுங்கள் என்று உத்திரவிட்டுவிட்டார். அதன்படி தாசில்தார் கோர்ட்டு ஹாலுக்கு அருகில் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பார்வையில் வெராண்டாவில் போடப்பட்டுவிட்டது.

அப்புறம்தான் நல்ல நல்ல கூத்தெல்லாம் நடக்க ஆரம்பித்தது. அலுவலகங்கள் நிறைந்த பகுதி என்றாலே ஏதாவது தின்னக் கிடைக்காதா என்று மாடுகள் சுற்றித் திரிவது வழக்கம். நம்ம டைப்பிஸ்ட்டு ஆபீசுக்கு வரும்போதே ஒரு குப்பை காகிதத்தை காட்டி அந்த மாட்டை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வரவைத்துவிட்டார். மாடும் சில தினங்களில் சுதந்திரமாக பேப்பர் தேடிக்கொண்டு ஆபீசுக்குள் வரும் அளவிற்கு பழகிக்கொண்டுவிட்டது. சில சமயம் ஆபீஸ் வாசலில்வந்து பேப்பர் கிடைக்காதா என்று ஏக்கப் பார்வையை வீசிக்கொண்டு நிற்கும். அதை யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அந்த வழியாக கடந்து செல்லும் சிலர் அதைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு செல்வதும் உண்டு, (மாடு லட்சுமிக்கு சமமானதாமே)

ஒருநாள் இப்படி அந்த மாடு வந்து ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து வட்டாட்சியர் டைப்பிஸ்ட்டை கூப்பிட்டு ஏதே கேட்டுக்கொண்டிருந்தார். ஒருவர் அன்று லீவு எடுத்திருந்தார். நண்பர் மேசைமேல் எல்லா கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

மாடு இதுதான் சமயம் என்று சற்றே தலையை உள்ளே நீட்டி ஒரே சுழற்றில் ஒரு கட்டு கடிதங்களை சுனாமி போல் உள்ளே இழுத்து ஆற அமற சுவைத்துக் கொண்டிருந்தது. வட்டாட்சியரிடமிருந்து வந்த டைப்பிஸ்ட்டு அலறி அடித்துக்கொண்டு மாட்டை விரட்டுவது போலவும், அதன் வாயிலிருந்து கடிதங்களை பிடுங்குவதுபோலவும் பாவனை செய்துகொண்டிருந்தார். அதற்குள் சத்தம் கேட்டு நாலைந்துபேர் ஓடிவந்ததும் மாடு வாயில் கிடைத்த உணவுடன் ஓடிப்போய்விட்டது.

“இப்படி பொறுப்பில்லாமல் எல்லாத்தையும் வைத்துவிட்டு எங்கே போனீங்க” என்று எரிந்து விழுந்தார் துணை வட்டாட்சியர்.  “ஏன்சார் தாசில்தார் கூப்பிட்டார் என்று நீங்க சொல்லித்தானே போனேன்.  உங்க கண்காணிப்பில்தானே நாங்க வேலை செய்கிறோம். நீங்க பார்த்து விரட்டியிருக்கக்கூடாதா” என்று ராம பாணத்தைத் திருப்பிவிட்டார்  டைப்பிஸ்ட்டு.

இப்படியே சில நாள் போயிற்று. ஒருநாள் செமத்தியான மழை பிடித்தது. அந்த வெராண்டாவின் கூரைக்கு பதிலாக அவரைக்கொடி போட்டு வைத்திருக்கலாம். அவ்வளவு சிறப்பான கூரை. விடிய விடிய பெய்த மழையில் மிஷின்கள் மட்டுமில்லாமல் கடிதங்கள் வைத்திருந்த பெட்டியில் தண்ணீர் புகுந்து ஊறி எல்லாம் காகிதக்கூழ்போல் ஆகிவிட்டது. அப்புறம் என்ன வட்டாட்சியரே முன்னின்று சொல்லாமல் கொள்ளாமல் பழைய இடத்திற்கே சீட்டை மாற்றிப் போட்டுவிட்டார்கள். விடுவாரா டைப்பிஸ்ட். நேராக வட்டாட்சியரிடம் போய் “நாளைபின்னே எவனாவது புகார் சொன்னா நாங்க என்ன வேலை செய்றோம்னு நீங்க சந்தேகப் படுவீங்க அதனால் உங்க பக்கத்திலேயே எங்களுக்கு இடம் கொடுங்க உங்க கண்ணெதிரிலேயே வேலை செய்கிறோம்” என்று வாதாட, அப்புறம் ஒரு வழியா சமாதானம் ஆனது.

டைப்பிஸ்ட்டுகளிடம் வைத்துக் கொண்டால் அவர்களுக்கு வாதாட யாராவது வருவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அவர்களிடம் சரியான ஆயுதம் வைத்திருப்பர்.  அதுதான் முக்கியமான நேரத்தில் மிஷினை ஏதாவது செய்து அவதிப்பட வைத்துவிடுவர்.

ஆனால் டைப்பிஸ்ட்டு என்று இளக்காரமாக எண்ணிவிடக்கூடாது.  ‘நான் பல ஊர் தண்ணிகுடித்து வளர்ந்தவன்டா’ என்று சிலர் பெருமை பேசுவர். அதுமாதிரிதான் பல அதிகாரிகளைக் கண்டவர்கள் டைப்பிஸ்டுகள். பல குமாஸ்த்தாக்களின் கடிதங்களையும் தட்டச்சு செய்தவர்கள். அதில் உள்ள விபரங்களை மனதில் கிரகித்து வைத்துக்கொண்டு சரியான நேரத்தில் ஆலோசனை சொல்லும் திறமையான டைப்பிஸ்ட்டுகள் இருந்துள்ளனர்.  சில அதிகாரிகள் சமயத்தில் டைப்பிஸ்டை கூப்பிட்டு இப்படி ஒரு விபரம் தேவை. உங்களுக்கு ஏதேனும் தெரியுமா என்று ஆலோசனை கேட்பது வழக்கம்.

இப்படித்தான் நான் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா ஆபீசில் வேலையில் சேர்ந்த நேரம். அங்கு ஒரு மதாச்சாரப்படி குடுமிவைத்த டைப்பிஸ்ட் இருந்தார். அவர் பெயரை அவசியம் சொல்லவேண்டும். அவர்தான் திரு ராமசாமி. நான் அவரை குடுமி அங்கிள் என்று கேலியாக கூப்பிடுவேன். அவர் என் கையெழுத்தை வைத்து என்னைப் பார்த்ததும் என்ன புறா பறக்காதா என்பார்.

மலை புறம்போக்கு விபரம் கேட்டு ஒரு கடிதம் வந்தது. நான் பாட்டுக்கு இந்த தாலுக்காவில் மலை புறம்போக்கு இல்லை என்று எழுதிவிட்டேன். கடிதம் டைப்பிஸ்ட்டிடம் போனது. அவர் அதை அடிக்காமல் எடுத்து வைத்துவிட்டார். மற்ற எல்லாம் அடித்து வந்துவிட்டது. இதுமட்டும் குறைகிறதே என்று பார்த்து நேரில் சென்று கேட்டேன். நான் போனதும் “இங்கே வாடா இந்த தாலுக்காவில் மலைபுறம்போக்கு இல்லை என்று உனக்கு நல்லா தொரியுமா. உனக்குதான் தெரியாது. இதில் கையெழுத்து போட்ட எவனுக்கும் தெரியாதா. யாரையாவது கேட்கவேண்டாமா” என்று கேட்டுவிட்டு இன்னின்ன கிராமத்தில் உள்ளது. போய் பழைய கட்டை எடுத்துப் பார் என்றார். உண்மையில் அப்படி ஒரு பகுதி இருந்தது அந்தப் தாலுக்காவில்  அதிலிருந்து அவர்பேரில் கூடுதல் மரியாதை ஏற்பட்டது. பலமுறை அவரிடம் விபரங்கள் கேட்டு அறிக்கைகள் தயார் செய்துள்ளேன்.

நாங்கள் எழுத்துப் பிழையுடன் எழுதும் வார்த்தைகளை எல்லாம் சரிசெய்து அடிப்பதுடன் எங்களிடம் இன்ன பிழை இருக்கிறது என்று சுட்டிக்கட்டுவார்.

வருடம் ஒரு முறை ஜமாபந்தி திருவிழா நடைபெறும். உண்மையில் அது ஒரு திருவிழா மாதிரிதான். எல்லா கிராமக் கணக்குகளும் தாலுக்கா அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு தணிக்கை செய்யப்படும். மேல் அலுவலகங்களிலிருந்து வந்து கணக்குத் தணிக்கையில் ஈடுபடுவர். நம்ம குடுமி அங்கிளும் கணக்கு தணிக்கை செய்வார். அவரிடம் மட்டும் கணக்கு போட்டுவிடாதீர்கள் என்று கேட்கும் கிராம கார்ணம் மணியம் (தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள்) உண்டு. ஏனென்றால் அவருக்கு எல்லா கணக்கும் அத்துப்படி. தணிக்கை செய்து கணக்கில் உள்ள குறைபாடுகளை சி.ஏ.ஜி. ரேஞ்சில் கண்டுபிடித்துவிடுவார்.

அதேபோன்று என் நண்பர் பழனியப்பன் என்பவர்.  அவரை நாங்கள் அண்ணே என்றுதான் அழைப்போம். டைப் அடிப்பதில் செம ஸ்பீடு. ஒரு தப்பு இருக்காது. அவரிடம் பழகிய அளவில் உண்மையில் ஒரு அண்ணனாகத்தான் இருந்தார். எல்லாருக்கும் உதவி செய்வார். யாரிடமும் அவர் சண்டை வளர்த்தியதாக நானறியேன். இன்னும் ஒருபடி மேலே போய் என் திருமணத்தின்போதும் நான் முன்னின்று நடத்திய ஒரு திருமணத்தின்போதும். மற்றும் என் வீட்டில் ஒரு இறப்பு ஏற்பட்டபோதும் என் குடும்ப உறுப்பினர் போன்று இருந்து எல்லாம் செய்தார். அது நட்பைவிடவும் பல மடங்கு அதிகம் என்றால் மிகையாகாது.

இன்னும் ஒரு டைப்பிஸ்ட் அவர் எப்போதும் சிரித்த முகமாகத்தான் – சிரித்த முகமாக மட்டும்தான் இருப்பார்.  அவருக்கு ஏனோ வேலை என்றால் அவ்வளவு எரிச்சல். அதன் காரணமாக எப்போதும் பல்லைக் ‘கடித்துக்’கொண்டே செய்வார். ஆனால் பார்ப்பவர்களுக்கு எப்போதும் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதால் சிரிப்பதாகத் தோன்றும். அலுவலகத்துக்கு வந்த ஒரு பெரியவர் இவரைப் பார்த்துவிட்டு இந்த ஆபீசில் எப்போவும் சிரித்துக்கொண்டே இருக்கிறாரே அவர் யார் என்று கேட்டார் என்றல் பார்த்துகொள்ளுங்கள்.

டைப் அடிக்கக் கொடுக்கப்படும் சில கடிதங்களில் திருத்தம் ஏதும் இருக்காது. உடனே இதையெல்லாம் முதலிலேயே ஓ.சி. அண்டு எப்.சி. ஒரே தடவையில் அடிக்கக்கூடாதா என்பார். சின்னச் சின்ன நினைவூட்டுக் கடிதங்களையெல்லாம் நீங்கள் கையால் எழுதக்கூடாதா என்று வாதாடுவார். எல்லா குமாஸ்த்தாவுக்கும் அவரை கண்டால் சற்று கசப்பாகவே இருக்கும்.

சில சமயம் அவரை சீண்டுவதில் எனக்கும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.  என்னைப் பொருத்தவரை நான் சொந்தமாக டைப்ரைட்டர் வைத்திருந்தேன். நான் எங்கே போனாலும் அதனை எடுத்துச் சென்றுவிடுவேன். என் கடிதங்கள் பெரும்பாலும் டைப்பிஸ்ட்டிற்கு போகாது. இருந்தாலும் சில சமயம் வேண்டுமென்றே ஏதாவது கடிதத்தை அவரிடம் கொடுப்பேன்.   அவர் வேலை அதிகமாக இருப்பதாகவும் நானே அடித்துக் கொள்ளக்கூடாதா என்றும் கேட்பார். நான் பாட்டுக்கு அவரிடம் ரொம்ப அவசரம் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்.   அவர் கையில் வாங்கி பேப்பர் வெயிட்டால் அதன் தலையில் ஒரு கொட்டு வைப்பார்.  அடுத்து அதை எடுத்து வேறு இடத்தில் வைப்பார்.  வாய் முணறிக்கொண்டே இருக்கும்.

அரைப்பக்கம்தான் இருக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு வேகவேகமாக அடிப்பார். ஒரு நேர்முகக் கடிதம். அதில் கட்டாயமாக கலெக்டர் பேயரையோ அல்லது அதற்கு ஏற்றார்போல் முக்கியமான இடத்திலோ ஒரு பிழையுடன் அடித்திருப்பார்.  கொடுத்த ஐந்தாவது நிமிடம் இந்தா என்று கடுகடுப்புடன் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போய்விடுவார். நான் எடுத்துப்பார்த்து அந்த இடத்தை வேண்டுமென்றே இங்கினால் மண்டையாக திருத்துவேன். அப்புறம் அதனை கொண்டுபோய் “முக்கியமாக இந்த இடத்தில் தப்பாக இருக்கு. கலெக்டர் நேரடியாகப் பார்ப்பது. பரவாயில்லையா” என்று அங்கலாய்ப்பேன். மனதிற்குள் சிரித்தாலும் முகத்தில் ரொம்ப பாவமாக காட்டிக்கொள்வேன். நான் காட்டியதுதான் தாமதம். வெடுக்கென்று அதனைப் பிடுங்குவார். இதனை மெலிதாகத் திருத்தியிருக்கக்கூடாதா என்று புலம்பிக்கொண்டே அப்படியே கசக்கி வீசிவிட்டு வேறு ஒன்று அடித்துத் தருவார்.

அரைகுறை மனத்துடன் கடமையே என்று செய்யும் காரியங்கள் எதுவும் இப்படித்தான் ஒன்றுக்கு இரண்டாக நமக்கு வேலைவைக்கும் என்பதை அவர் ரிட்டையர் ஆகும் வரையிலும் உணரவே இல்லை பாவம். எப்போதும் பல்லைக் கடித்துக்கொண்டு தன் கோபத்தையெல்லாம் மிஷிண்மேல் காட்டுவதால் டைப் அடித்து வரும் கடிதங்கள் எல்லாம் எழுத்துக்கள் தைத்து ஓட்டை உடைசலாக வந்துசேரும்.

ஆனால் அந்நாளில் டைப்பிஸ்ட்டுகள் பாவம்தான். சில கடிதங்கள் பல நகல்கள் தேவைப்படும். அவற்றுக்கு பல அடுக்கு கார்பன் வைத்து அடிக்கவேண்டும். கடைசி காப்பியும் தெளிவாக இருக்கவேண்டும் என்பதால் அழுத்தம் அதிகமாக கொடுக்க வேண்டும். தோள்கள் விரல்களில் கடுமையாக வலி எடுக்கும். அதைப்பற்றி குமாஸ்த்தாவுக்கு என்ன கவலை. ஆடு நனையுதேண்ணு ஓநாய் கவலைப்பட முடியுமா?

இதே துறையில் டைப்பிஸ்ட்டாக பணி துவங்கி முன்னேறி இதே துறைக்கு மாநிலத் தலைவரா (CRA) – சீப் செக்கரட்டரிக்கு இணையாக வேலை பார்த்தவர்கூட உண்டு என்றால் நம்ப முடியுமா?