"

11

எல்லாத் திருட்டும் திருட்டல்ல.


 ஒருவருக்குத் தெரியாமல் எடுத்தால் அது திருட்டுதானே.  ஆனால் எல்லாத் திருட்டும் திருட்டல்ல. திருடனிடம் திருடினால் அது திருட்டல்லதானே.

திருட்டு என்பது எப்போது வருகிறது? ஒருவனுக்குப் பற்றாக்குறையாக உள்ள ஒரு பொருள் அடுத்தவனிடம் அபரிமிதமாக இருந்தால் அப்போதுதான் அதனை அபகரிக்கும் எண்ணம் மனிதன் மனதில் உதிக்கிறது. அப்படிப்பட்ட நிலை தொடரும்போது அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடனாக மாறிவிடுகிறான். சிலர் அதனை விட்டுத் திருந்துவர். சிலர் அதனை தன் பிரதானத் தொழிலாக ஆக்கிவிடுவர். அப்போதுதான் பிரச்சினை.

நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது என் பிரிவில்தான் அலுவலகத்திற்குத் தேவையான எழுதுபொருட்கள் வாங்கித் தரப்படும். அப்போதெல்லாம் அதிகாரிமுதல் கிளார்க்குவரை எழுதுவதற்குத் தேவையான இங்க் வகையறாக்கள் வாங்கித்தரும் பொறுப்பு எங்கள் பிரிவில் ஒரு குமாஸ்த்தாவிடம் இருந்தது. அவர் கொஞ்சம் சீனியர். நாங்கள் வேலைக்கு வந்த புதிது. அவரிடம் எழுதுவதற்கு இங்க் கேட்டால் இல்லை என்பார். எங்களிடம் “பில்போட்டால்தான் வாங்கமுடியும் இப்போதைக்கு நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்பார். அனால் சற்று நேரத்தில் முக்கியமான பிரிவிலிருந்து கேட்டால் உடனே எடுத்துக்கொண்டுபோய் கொடுப்பார்.

அப்போதெல்லாம், வாரத்தில் மூன்று நாளாவது இரவு முழுவதும் உட்கார்ந்து வேலை செய்வோம். அப்படி ஒருநாளில் எங்கள் பொறுமல் வெடித்தது. நாங்கள் மூன்று குமாஸ்த்தாக்கள் சேர்ந்து அவரது பெட்டியைத் திறந்து பார்த்தோம். சிகப்பு, நீலம், கருப்பு என்று வரிசையாக பாட்டில்கள் இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு இரண்டு அவுன்ஸ் பாட்டிலில் வேண்டியதை நிரப்பிக்கொண்டோம். அப்போதெல்லாம். இங்க்பாட்டிலுக்கு குப்பிபோல் ஒரு ஜிகினாத்தாள் முடியிருக்கும். நோகாமல் கழட்டி விடலாம். அப்படி எடுத்துவிட்டு அதில் தண்ணீர் ஊற்றி அதே சீலைமூடி வைத்துவிட்டோம். பத்து நாள் கழித்து ஒருநாள் தன் வீட்டுக்கு எடுத்துப்போவதற்காக இங்க் ஊற்றிக்கொண்டு தொட்டு எழுதினார். ஒரே மங்கலாக எழுத்துக்கள் வந்தன. ஹெட்கிளார்க்கிடம் புலம்பினார் நண்பர்.  “இப்பல்லாம் xxxகம்பெனி கொஞ்சம்கூட சரியில்லை சார். பாருங்க எவ்வளவு தண்ணியா எழுதுதுண்ணு” நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.

இன்னொரு சமயம், நான் தாலுக்கா ஆபீசில் சம்பளப்பட்டியல் கிளார்க்காக இருந்தேன்.  பட்டியல் போடத் தேவைப்படும் படிவங்கள் எல்லாம் பதிவறையில் ஏராளமாக இருந்தது. ஆனால் பதிவறை அட்டெண்டர் மனது வைத்தால்தான் கிடைக்கும். தனக்கு ஏதேனும் காரியம் ஆகவேண்டும் என்றால் கேட்டவுடன் தருவார். இல்லையென்றால் படிவம் இல்லை வேறு அலுவலகத்தில் கேட்டுதான் வாங்கித் தரவேண்டும் என்று கைவிரிப்பார். என்னிடம் ஒரு பழக்கம். ஏதாவது கோப்பு போன்றவை தேவையென்றால் நானே கெளரவம் பாராமல் போய் சட்டையைக் கழற்றிவிட்டுக்கூட ரேக்குகள் மேலேறி தேடி எடுப்பேன். யார் தயவும் பார்த்துக்கொண்டு நிற்கமாட்டேன். அப்படி தேடும் சமயத்தில் எங்கெங்கே என்னென்ன கண்ணில் படுகிறதோ அதனை நினைவில் வைத்துக்கொள்வேன்.

நான் சம்பளப்பட்டியல் குமாஸ்த்தாவாக இருக்கும்போது ஒரு துணை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தங்கி எங்களுடன் வேலை பார்ப்பார். ஒருநாள் அவரிடம் இப்படி நடக்கிறது எந்தப் படிவம் கேட்டாலும் தருவதில்லை.  அவரை கண்டிக்கக்கூடாதா என்றேன். ஆனால் அவரோ படிவம் இருப்பது நிஜம்தானே. இந்தா டார்ச் லைட், இந்தா சாவிக்கொத்து போய் வேண்டிய படிவத்தை எடுத்துக் கொள் என்று கொடுத்தார்.  அது போதாதா! நேராகப் போய் இருந்த எல்லா வகைப் படிவங்களையும் கிளப்பிக்கொண்டு வந்து துணை வட்டாட்சியரின் பீரோவில் அடுக்கிவைத்துவிட்டோம். இரண்டொரு நாட்கள் கழிந்தது. வந்தார் பதிவறை அட்டெண்டர்.  ஐயா இன்ன படிவம் இருக்குமா ரொம்ப வேண்டியவங்க கேட்கிறாங்க நான் வைத்திருந்தேன் காணவில்லை என்றார்.  வழக்கமாக அவர் எங்களுக்கு சொல்லும் பதிலை அவருக்கு திருப்பிவிட்டேன்.

அதற்கப்புறம் யாரிடமும் போய் படிவத்திற்கு பிச்சை எடுத்ததில்லை. அடுத்தாற்போல் அந்த ஆண்டுக்கான படிவம் வந்தபோது துணை வட்டாட்சியர் பார்த்தார்.  யார் யார் பிரிவுக்கு என்னென்ன படிவம் தேவையோ அவற்றை மொத்தமாக பிரித்து வழங்கி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் பிற்பாடு படிவம் இல்லை என்று சொல்லக்கூடாது என்று கொடுத்து புதிய வழிமுறை ஏற்பாடு செய்துவிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும். அலுவலகத்திற்குத் தேவையான எழுதுபொருட்கள் வந்து சேரும். ஆனால் குமாஸ்த்தாக்களுக்கு மட்டும் தேவைக்கேற்ப வழங்கப்படமாட்டாது. அப்படியே பதுக்கி வைத்து கடைசியில் வெளியே விற்றுவிடுகிற அலுவலர்கள் இருந்தார்கள்.

அப்போதெல்லாம் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை எப்படியும் மாறுதல் செய்துவிடுவர். இப்போதுபோல் ஒரே அலுவலகத்தில் ஒரே சீட்டில் ஒரு மாமாங்கம் எல்லாம் இருக்க முடியாது. அதிலும் எமர்ஜென்சி வேறு. எல்லாரையும் வேறு வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள்.

அந்த வகையில் இருபது பேருக்கு மேல் சிதம்பரம் தாலுக்கா ஆபீசில் கடலூர் காரர்கள் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். தினமும் ரயிலில் வந்து போவார்கள். மாலையில் மட்டும் அலுவலகம் விடும் நேரத்தில் ரயில் புறப்பட்டுவிடும். அதனால் கடலூர்க்காரர்கள் மட்டும் நிரந்தரமாக ஒரு அனுமதி கடிதம் துணை வட்டாட்சியரிடம் கொடுத்து வைத்திருப்பார்கள். கடன் பிரிவு குமாஸ்தாக்கள் மட்டும் யாரையும் கண்டுகொள்ளாமல் அரை மணிநேரம் முன்னதாக புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக சென்று ரயிலைப் பிடித்துவிடுவர்.

பொதுப்பிரிவில் மட்டும் ஏங்கித் தவிப்பர்.  அப்போதைய தலைமை இடத்து துணை வட்டாச்சியர் மிகவும் இளகிய மனது கொண்டவர்.  கடலூர்க்காரர்களை ரகசியமாக அழைத்து காதுக்குள் நீ போகலையா என்பார்.  அத்துடன் போகிறவர்கள் எல்லாம் தனித்தனியா போங்க. கும்பலா போனா வெளியே தெரிந்துவிடும் என்பார். தப்பி தவறி அதிகாரி வந்துவிட்டால் இன்றுதான் அனுமதி கொடுத்துவிட்டு போகிறார் என்று காப்பற்றிவிடுவார்.

இந்த நிலையிலும் ஒரு குமாஸ்தா தினமும் பதினோரு மணிக்குதான் வருவார். மாலை நாலு மணிக்கே கம்பிநீட்டிவிடுவார். வேலையும் செய்யமாட்டார். வயதானவர் என்பதால்  தாசில்தார் கண்டிக்கவும் மாட்டார். இவரைப் பற்றி சப்கலெக்டர் வரை நன்கு தெரியும்.

இப்படியாகப்பட்ட நிலையில் சப்கலெக்டர் ஆண்டு தணிக்கை வந்தது. எல்லோரும் ரயில் லேட்டாக வந்தால் சங்கடமாகிவிடும் என்பதால் முதல் நாள் அலுவலகத்திலேயே தங்கி வேலை பார்த்தனர். காலை பத்து மணிக்கெல்லாம் சப்கலெக்டர் வந்து விட்டார். ஒவ்வொரு பிரிவாக பதிவேடுகள் தணிக்கை நடக்க ஆரம்பித்துவிட்டது. நம்ம நாயகனோ அன்றும் பதினோரு மணிக்குதான் அலுவலகம் வந்தார். அதற்குள் அவரை தணிக்கைக்கு அழைத்துவிட்டார்கள். இதோ அதோ என்று சாக்கு சொல்லி சமாளித்துவிட்டார்கள்.  நண்பர் உள்ளே நுழைந்தார் ஒரு பையுடன். அவர் வரும் முன்பே கொய்யாப்பழ வாசனை வந்தது. என்ன வாசனை அடிக்கிறது என்று கேட்டதற்கு தாம் கொய்யாப்பழ சென்ட் போட்டிருப்பதாக பதில் சொன்னார் அவர்.

அவரை பிடித்து கோர்ட் ஹாலுக்குள் தள்ளி விட்டார்கள். சப்கலெக்டருக்கு செம கோபம்.  ஏன் தாமதம் என்றார். நண்பரோ “அது வந்துங்க காலையிலேயே கிளம்பிட்டேங்க. வழியில் மயக்கம் வந்து விழுந்துட்டேன்.  ஆஸ்பத்திரிக்கு போய் காட்டிட்டு வரேனுங்க” என்றார்.  சப்கலெக்டருக்கோ கோபத்தை முந்திக்கொண்டு சிரிப்பு வந்துவிட்டது.  “என் அப்பா மாதிரி இருக்கீங்க. பொய் பேசாதீங்க. நீங்க போகலாம்” என்று வெளியே அனுப்பி விட்டார்.

நண்பர் வெளியே வந்து என் பிரிவில் ஒரு குறையும் இல்லை என்று என்னை பாராட்டி அனுப்பி விட்டார் என்று பெருமையாக சொல்லிகொண்டார்.

இதில் சுவாரசிய சமாசாரம் என்னன்னா, நண்பர் கொண்டுவந்த பையை ஒரு மேஜை சந்தில் ஒளித்துவைத்துவிட்டு போனாரா! மக்கள் அந்த பையை எடுத்து சோதனை செய்தார்கள். பை நிறைய கொய்யா பழம். எல்லா குமாஸ்தாக்களும் எடுத்து பங்குபோட்டு காலி செய்துவிட்டார்கள். நண்பர் வந்து வெறும் பையைப் பார்த்து யார் எடுத்தது என்று அறியாமல் நொந்து போய்விட்டார்.  அவர் யாரிடம் கேட்டாலும் ‘நீங்கள் கொய்யாப்பழ சென்ட் போட்டதாகத்தானே சொன்னீர்கள். பழம் ஏதும் கொண்டு வந்ததாகச் சொல்லவில்லையே. என்னிடம் கொடுத்து வைத்திருந்தால்   பத்திரமாக இருந்திருக்குமே’ என்று வெறுப்பெற்றிவிட்டனர்.  திருடனைத் தேள் கொட்டிய கதைதான்.

இந்த நண்பர் வயதான காலத்திலும் அற்பத்தனமாகக் காரியங்கள் செய்வார். அதனால் கடலூர் நண்பர்கள் இவரோடு சேர்ந்திருக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் கடலூர் – சிதம்பரம் இடையில் ரயில் சீசன் டிக்கெட் மாதத்துக்கு இருபது ரூபாய்க்குள்தான்.  எந்த ரயிலில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம்.  நமது நண்பரோ அந்த சீசன் டிக்கெட் கூட எடுக்காமல் பழையதிலேயே தேதி திருத்தி பயன்படுத்துவார். என்றாவது டி.டி.ஆர். பார்த்தால் வயசானவர் என்பதால் திட்டிவிட்டு போகச் சொல்லிவிடுவார்.  இவரோ வெட்கமில்லாமல் அதையே பெருமையாகச் செய்துவந்தார்.  ஒருநாள் ஸ்குவார்டு வந்துவிட்டது. நண்பர் மாட்டிகொண்டார்.  மற்ற நண்பர்களிடம் உதவி செய்யும்படி கேட்டு பார்த்தார்.  முன்பே கண்டித்திருந்தும் அவர் திருந்தாததால் அனைவரும் கைவிட்டுவிட்டனர்.

நண்பர் ஒன்றும் பெரிய தப்பு செய்துவிடவில்லை. பல முறை திருத்தியதால் அந்த அட்டையே ஓட்டை விழும் நிலையில் இருந்தது.  நண்பர் சொன்னார். அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. என்னுடைய சீசன் டிக்கெட்டில் என் மகள்தான் இப்படிச் செய்துவிட்டார் என்று சொல்லப்போக, தணிக்கை செய்தவர்களுக்கு கோபம் வந்து இவ்வளவு நாளா திருட்டு ரயிலில் வந்ததற்கு கடுமையான தொகை கணக்கிட்டு பணத்தைக் கட்டு அல்லது ஜெயிலுக்குப் போ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டனர். மாலை வரை ஸ்டேஷனிலேயே உட்காரவைத்து கடைசியில் பணத்தை கறந்துவிட்டுத்தான் வெளியே விட்டனர்.

அவருடன் வந்தவர்கள் அலுவலகத்தில் வந்து செய்தி வாசித்ததில் எல்லோருக்கும் தகவல் தெரிந்துவிட்டது.

இப்படிப்பட்டவர்களிடம் திருடினால் அது திருட்டல்லதானே.