13
சட்டம் என் கையில்
ஒரு சில அதிகாரிகள் சட்டத்தை மட்டும் கட்டிப்பிடித்துக்கொண்டு மல்லாடுவார்கள். சட்டத்தினை இடம் பொருள் ஏவல் அறிந்து அதற்குத் தக்கவாறு பிரயோகிக்கவேண்டும். சட்டம் என்பது இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் போன்றது. ‘துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்பர். அதுபோன்று துஷ்டர்களை களைவதற்குத்தான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதே தவிர, நாம் ‘இஷ்ட பரிபாலன’மாக இஷ்டப்படி பயன்படுத்துவதற்காக அல்ல.
ஒரு குழந்தையின் கையில் கத்தி கிடைக்குமானால் அதனை தம் இஷ்ட்டப்படி வீசும். ஒன்று அந்தக் குழந்தையால் மற்றவர்களுக்குக் காயம் ஏற்படும். அல்லது அதன் கையில் உள்ள கத்தியினால் அந்தக் குழந்தைக்கே ஆபத்து ஏற்படும். அதிலும் அதிகாரிகள் சட்டத்தை மட்டுமே கையில் வைத்துக்கொண்டு அரசாட்சி செய்தால் அதன் பலாபலன்கள் குழந்தை கையில் கிடைத்த கத்திக்கு ஒப்பாகத்தான் பலனைத் தரும். வலுத்தவன் எல்லாம் குழந்தையின் கையில் உள்ள கத்தியைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னைக் காத்துக்கொண்டு தப்பி விடுவான். கடைசியில் பலியாகப்போவது குழந்தையாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமுண்டோ.
அப்படி ஒரு சம்பவம்தான் இது. காட்டுமன்னார்கோயில் வட்டம் தனி வட்டமாகப் பிரிக்கப்பட்ட நேரம். வந்த வட்டாட்சியர் கண்ணுக்கு சட்டப்பிரிவுகள் மட்டும்தான் தெரியும். உண்மையில் சட்டப் பிரிவுகளில் அவர் கரைகண்டவர். சற்றும் ஆணவமோ செருக்கோ இன்றி பணிபுரிபவர். மிகமிக நேர்மையானவர். அதனால் அவரை யாருக்கும் பிடிக்காது. அவரது நேர்மையின் காரணமாக அவரது நடை உடை பாவனைகள் எல்லாம் அவரை ஒரு அரசனைப் போல் சற்றேனும் காண்பிக்காது. மாறாக அவரிடம் வேலை பார்க்கும் சேவகர்கூட அவரை விடவும் சற்று அலங்காரமாக இருப்பார் என்றால் மிகையாகாது.
அப்படிப்பட்டவரை அரச பீடத்தில் அமர்த்திவிட்டனர். அவரது கண்டிப்பும் சட்டப்படி மட்டுமேயான செயல்பாடும். கீழே யாருக்கும் பிடிக்கவில்லை. தினமும் ஒரு போராட்டமாகக் கழிந்துகொண்டிருந்தது. அப்போது கிராம கர்ணம் மணியம் என்ற அலுவலர்கள் வேலை செய்த நேரம். ஒட்டுமொத்த கீழ் நிலை அலுவலர்களும் அவருக்கு எதிராகக் கொடி பிடித்த நிலை.
அப்படிப்பட்ட நிலையில் ஒரு கிராமத்தில் மணியம் வேலை செய்தார் ஒருவர். அவரும் சற்று கெடுபிடியான ஆள்தான். கிராமத்தில் வல்லமையானவரும்கூட. அங்கே அந்த கிராமத்தில் அவருக்கு சற்று எதிர்ப்பு. ஆனாலும் அவரை ஒன்றும் செய்ய இயலாத நிலைமை. இரண்டு நிலைமையும் ஒன்றாக சேர்ந்தது அந்த கிராமத்தைப் பொருத்தமட்டும்.
பார்த்தார் மணியம் நிலைமையை வைத்து தமக்கு சாதகமாக காய் நகர்த்தினார். குரங்கு கள்ளையும் குடித்ததோடு தேளும் கொட்டிய கதை அரங்கேறிற்று.
கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் காலை மாலை வேளையில் வீட்டைப் பெருக்கி குப்பையைக் கொண்டுவந்து வீட்டு வாசலில் ஒரு மூலையில் கொட்டிவிடுவர். அது சற்று சேர்ந்தவுடன் ஒரு நல்ல நாள் பார்த்து அதை அக்கினி பகவானுக்கு ஆகுதியாகக் கொடுத்துவிடுவர். ஆக, எல்லா வீட்டு வாசலிலும் ஒரு சிறு குப்பை மேடு இருப்பது அந்த நாளில் வெகு சாதாரணம். நம்ம மணியம் பார்த்தார். தெரு என்பது அரசு புறம்போக்குதானே. அதில் குப்பை கொட்டுவதன்மூலம் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்று அந்தந்த வீட்டு சொந்தக்காரர் பேரில் ‘பி.மெமோ’ புக் செய்துவிட்டார். தாலுக்கா ஆபீசிற்கு அறிக்கை அனுப்பும்போது மணியம் தனது பரிந்துரையில் குப்பைமேடு மூலம் ஆக்கிரமிப்பு. அதற்கு இருபது மடங்கு அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரைத்துவிட்டார். எப்போதும் கீழ் நிலை அலுவலர் அனுப்பும் பரிந்துரையை மேலே இருப்பவர்கள் ஆய்வு செய்து குறைக்க மாட்டார்கள். அப்படி குறைக்க வேண்டுமெனில் அவர் அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி எந்த அலுவலரும் பதிவு செய்யமாட்டார்கள். ஏனெனில் ‘சட்டப்படி உள்ளதே தவிர அபராதத்தினை குறைத்தால் பின்னர் அரசுக்கு வருவாய் இழப்பு என்று நம்மீது ஏதாவது குற்றம் சுமத்தப்பட்டால் என்னாவது’ என்று அப்படியே வழிமொழிந்துவிடுவர்.
இப்படியாக வருவாய் ஆய்வாளர் பரிந்துரைக்க அதனை வட்டாட்சியர், அப்படியே அங்கீகரித்துவிட்டார். ஆக “இம்புட்டுகாணம் காக்கா அசிங்கம் செய்ததற்கு இப்படி ஒரு கலவரமா” என்று வடிவேலு சொல்லுவது போன்று வட்டாட்சியர் அங்கீகரிக்க கணக்குகள் முடிவுக்கு வரும்போது இம்புட்டுகாணம் குப்பை கொட்டியதற்கு வரி, அபராதம், செஸ். சர்சார்ஜ் என்று எங்கேயோ போய்விட்டது.
அடுத்து, விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய புறம்போக்கு பகுதியில் சிறிதளவு சேர்த்து விவசாயம் செய்வது சர்வசாதாரணம். யாரும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்று எண்ணிச் செய்வதில்லை. பல ஆண்டுகாலமாக எல்லையை மிகச் சரியாக கணிக்காமல் செய்வதுதான். தற்போது மீனவர்கள் இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர் என்ற பிரச்சினை போன்றதுதான் இதுவும். அதையெல்லாம் கணக்கெடுத்து ஆக்கிரமிப்பு புக் செய்துவிட்டார். அதற்கும் இருபது மடங்கு தீர்வை பரிந்துரை.
அதோடு விட்டாரா அவர்கள் புறம்போக்கு நிலத்தில் சாகுபடி செய்வதற்கு அரசு ஆதாரத்திலிருந்து தண்ணீர் எடுத்துள்ளனர் என்பதைக் காரணம் காட்டி அதற்கும் இருபது மடங்கு அபராதம் விதித்தார். ஆக ஒரு குற்றம் கூட்டுறவு வங்கியில் தவணை தவறிய கடனுக்கு ஒப்பாக மடங்குகளில் பெருகியது.
அது மட்டும்தானா. இன்னும் கேளுங்க. கிராமத்தில் விவசாய நன்செய் நிலங்களுக்கு அனைத்திற்கும் தண்ணீர் தர அரசாங்கம் கியாரண்டி வழங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு சர்வே நம்பருக்கும் இன்னின்ன வாய்க்காலில்தான் தண்ணீர் பெறவேண்டும் என்று முறையாக அந்தக் காலத்திலேயே அதாவது 1920-களிலேயே செட்டில்மெண்டின்போது நிர்ணயம் செய்துவிட்டது. அதை இன்று வரையிலும் எந்தக் கொம்பனாலும் குறை என்று சொல்லி, திருத்த தைரியம் இல்லை. இதற்கும் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயி தமது நிலத்திற்கான பாசன ஆதாரத்தை மாற்றி பாசனம் செய்தால் அதற்கும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக விவசாயிகள் தண்ணீர் அருகில் கிடைக்கும் நிலையில் அதனைப் பாய்ச்சி சாகுபடி செய்துகொள்வது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் நம்மவர் அதனையும் புக் செய்தார். அதற்கும் இருபது மடங்கு பரிந்துரைத்தார். அதுவே புறம்போக்கு என்றால் ஆக்கிரமிப்பு அனுபத்திற்கு பிமொமோ இருபது மடங்கு அதில் சாகுபடி செய்தால் தண்ணீர் தீர்வை இருபது மடங்கு.
கிழிஞ்சிதுடா என்கிறீர்களா. கிழிஞ்சாலும் ஆடவேண்டும் என்பதுதான் விதி.
அவர்பாட்டுக்கு அதிகபட்சத் தீர்வையை விதித்துவிட்டார். அதிகாரி பாட்டுக்கு தன் கடமையைச் செய்தார். அதுதான் – ‘அரசாங்க வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தாமல்’ – பார்த்துக் கொண்டார். ஆக, எல்லாரும் சட்டப்படியே நடந்து கொண்டனர். ஆனால் செக்கில் மாட்டிக்கொண்டு பிழிபட்டது அந்த கிராம மக்கள்தான். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்ற கதைதான்.
அடுத்ததாக ஜமாபந்தி வந்தது. வட்டாட்சியரோ ஒரு பைசாவானாலும் அரசாங்கத்திற்கு சேர வேண்டியது குறையக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கிராமக் கணக்கையும் தாமே கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து, என்று எல்லா திறமையையும் காட்டி கணக்குகளை திக்குமுக்காடச் செய்துவிட்டார். நம்ம கர்ணமோ அதிலும் கில்லாடி. அவர் கணக்கு எழுதுவதில் சிறந்த அறிவாளி என்றால் பொய்யில்லை. ஒரு கிராமக் கணக்கினை ஓரிரு மணிநேரத்தில் எழுதி முடித்துவிடுவார். அத்தனை வேகம். அத்தனை துல்லியம். கணக்கில் ஒரு பைசாகூட தப்பு கண்டுபிடிக்க முடியாது.
அவர் கணக்கு எழுதுவதில் ஒரு கலைநயம் இருக்கும். எல்லா வகை கணக்குகளும் அவரைச் சுற்றி பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அவர் தரையில் அமர்ந்து மடியில் வைத்துக்கொண்டுதான் எழுதுவார். கிராமத் தலையாரி அவ்வப்போது வெற்றிலை பாக்கு உட்பட தேவையானதை வாங்கிவருவார். ஒரு சில மணி நேரங்களில் அந்த கிராமக் கணக்கு முடித்து கட்டிவைக்கப் பட்டுவிடும். அடுத்து பக்கத்து கிராமத்தின் கணக்குப் பிள்ளை யாருக்கேனும் உதவி தேவையென்றால் அதை எழுத ஆரம்பித்துவிடுவார்.
நமது சட்டம் வட்டாட்சியாரிடம் கணக்கு போனது அப்படியே அங்கீகரித்து மேலே அனுப்பிவிட்டார். மொத்த கிராமத்திற்கான வரி ஒன்றும் அதிகமில்லை ஜெண்டில்மேன். இந்த கிராமத்திற்கான மொத்த வரியை விட அந்த தாலுக்காவிற்கான வரியானது குறைவுதான்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இதே வரிவிதிப்பு தொடர்ந்ததும் கிராமமக்கள் கொடிபிடித்ததும் அப்புறம் அரசாங்கத்திற்கு நிலைமையை எடுத்துச் சொல்லி அரசாங்கமும் பெரிய மனதுவைத்து தள்ளுபடி செய்ததும் பெரிய கதை.
இதுதான் என்றில்லை. சட்டத்தை வைத்துக்கொண்டு வராத தண்ணீருக்கு வரிவசூல் செய்த கதை தெரியுமா. அதுவும் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில்தான்.
அன்னாளில் நடந்த ஒரு நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். கர்மவீரர், ஏழைகளின் தோழன், கல்விகண் திறந்த வள்ளல், எந்த ஒரு குழந்தையும் பசியின் காரணமாக படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவந்த படிக்காத மேதை ‘காமராசர்’ அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மெத்தப் படித்த இஞ்சினீயர்கள் எல்லாரும் ஏட்டில் எழுதிவைத்த ஒரு அணைக்கட்டுத் திட்டம் குறித்து அறிக்கை தயார்செய்து ஒப்புதலுக்குக் கொண்டு சென்றார்களாம். அத்திட்டத்தினைப்பற்றி விவரிக்கக்கேட்ட அளவில் காமராசர் அவர்கள் கேட்ட கேள்விக்கு அதிகாரிகளால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லையாம். வேறு மாற்றுத் திட்டமும் தோன்றவில்லையாம். அப்போது காமராசர் அவர்கள் இந்த திட்டத்தினால் இத்தனை விவசாயிகள் குடிகள் பாதிக்கப்படுவார்களே இதனை இப்படி மாற்றி அமைத்தால் என்ன என்று ஆலோசனை சொன்னாராம். ஏட்டுக்கறி சாப்பாட்டுக்கு உதவாது என்று நிரூபித்த அனுபவ அறிவாளர் அவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். ஆனால் எதிர்காலத்தில் வாடப்போகும் பயிர்களைப் பற்றி கவலைப்பட்ட வள்ளலார் காமராசர். நான் சொல்லப்போவது அதற்கு நேர்மாறான நிகழ்ச்சி.
திட்டக்குடி தாலுக்காவில் ஓடிய (இப்போதுதான் ஓடவில்லையே) வெள்ளாற்றில் ஒரு தடுப்பணை கட்டி அந்தத் தண்ணீரை காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாசனம் செய்யலாம் என்று ஒரு திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அதற்கு பெலாந்துறை வாய்க்கால் திட்டம் என்று பெயர் சூட்டினார்கள். திட்டம் முடிந்துவிட்டது. திட்டம்தான் முடிந்ததே ஒழிய திட்டமிட்டபடி தண்ணீர் வரவில்லை. நம்ம பொதுப்பணித்துறை திட்டங்கள் எல்லாம் இப்படித்தானே இருக்கு. இருக்கும் பொறியாளர்கள், காண்ட்ராக்டர்களுக்கு வேலை வேண்டும். அதற்காக இப்படி திட்டங்கள் போடுவதில் வல்லவர்கள்.
சரி திட்டம் தோல்விகண்டுவிட்டது. அதற்கு என்ன செய்வது என்கிறீர்களா. அங்கேதான் இருக்கிறது சிக்கல். இப்படி திட்டங்கள் கொண்டுவரும்போது அதற்கான செலவுத் தொகையை அதனால் பயன்பெறும் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்வதுதான் நோக்கம். இப்படியாக, போடும் திட்டத்தில் செலவு செய்வது, பலன் அடைவது எல்லாம் ஒரு துறை. அதன் செலவை இஞ்சினீயர் முதல் சுக்குநீர் வரை சம்பளம், படி, பயணப்படி இத்தியாதிகள் உட்பட எல்லாவற்றையும் சேர்த்து வரியாக வசூல் செய்யவேண்டியதும். விவசாயிகளின் வயிற்றொரிச்சலை வாங்கிக் கட்டிக்கொள்வதும் வேறு துறை. அதுதான் வருவாய்த்துறை. இப்படி என்னென்ன திட்டங்களோ செயல்பட்டதாகச் சொல்லப்பட்டு வசூல் செய்ய முடியாமல் திணறியுள்ளது வருவாய்த்துறை.
நம்ம திட்டத்திற்கு வருவோம். திட்டச் செலவினை விவசாயி வாரியாக பிரித்து டிமாண்டு லிஸ்ட் கொடுத்துவிட்டார்கள். தண்ணீரே வராத நிலையில் யார்தான் வரி கட்டுவார்கள். இப்படியே நாள் கடந்தது. வட்டிக்கடைக்காரன் போல் பாக்கிக்கு வட்டிகணக்கிட்டு அதையும் விவசாயிகளிடம் வசூல் செய்ய வேண்டிய நிலை. பல ஆண்டுகள் கடந்த நிலையில் சர்க்கார் கோழிமுட்டை குடியானவனின் அம்மிக்கல்லை உடைக்கும் என்று நினைத்த ஏதோ ஒரு சில பயந்தாங்கொள்ளிகளிடம் வசூல் செய்தனர். மற்றவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. இல்லாத திட்டத்திற்கு வசூல் செய்யக்கூடாது என்று நீதி மன்றத்திற்கு சென்றனர் விவசாயிகள். இதற்கிடையில் நிலைமையை எடுத்துச்சொல்லி தள்ளுபடி செய்யவேண்டும் என்று அறிக்கை அனுப்பினர் தாலுக்கா அலுவலகத்திலிருந்து. நம்ம அதிகாரிகளுக்கு அதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை. ஒவ்வொரு மீட்டிங்கிலும் அரசு உத்திரவு வரும் வரையில் வசூல் செய்வதற்கென்ன என்று கெடுபிடி செய்தனர். இப்படியாக, பெரும் போராட்டத்திற்கு இடையில் அரசு உத்திரவு வந்ததா. தள்ளுபடி ஆனாதா என்றெல்லாம் தெரியாது. மீட்டிங் சப்ஜெக்டிலிருந்து அந்த விபரம் சத்தமின்றி நீக்கப்பட்டுவிட்டது. ஆக முப்பது ஆண்டுக்கு மேலாக அந்த வாய்க்காலில் மழைத்தண்ணீராவது ஓடியதா என்றால் அதுவும் கிடையாது.
இதுபோல் வெட்டாத கிணற்றுக் கடன், அடிக்காத பூச்சிமருந்துக்கு வசூல், வாங்காத டிராக்டருக்கு வசூல் என்று யாரோ ஒருவர் திட்டத்தை செயல்படுத்தி விடுவார். வசூல் செய்யும் பொருப்பு வருவாய்த்துறைக்கு. இப்படியாக ஒரு நிலையில் 36 வகை கடன்கள் வசூல் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் விவசாயி என்னவோ சுதந்திரம் வாங்கியபோது இருந்த நிலையில்தான் இன்றும் இருக்கிறான் சுதந்திரமாக.
ஃப்பூ! இதுதானே என்கிறீர்களா வீராணம் ஏரி என்று ஒன்று ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது தெரியுமோ. அந்த ஏரியை கட்டிய புண்ணியவான் அதில் எவ்வளவு பலன் கண்டானோ தெரியாது. ஆனால் தற்காலத்தில் அது விவசாயிகளுக்கு பலன் கொடுக்கிறதோ இல்லையோ பலருக்குப் பலன் கொடுக்கிற கதை தொரியுமோ. 1984 ஆம் ஆண்டில் நான் வருவாய் ஆய்வாளராக இருந்தேன். அப்போது எங்கள் கோட்டாட்சியர் பங்களாவில் தங்கியிருக்கும்போது ஒரு கேள்வி கேட்டார். இந்த வீராணம் ஏரி இவ்வளவு பெரியதாக உள்ளது. அதனைத் தூர் வாரினால் நல்லது. ஆனால் ஒரே பிரச்சினை. அந்த மண்ணை என்ன செய்வது என்று பேச்சுவாக்கில் சொன்னார். நான் அதற்கு முன்னதாக 1980ல் ஆதி திராவிடர் நல தனி வருவாய் ஆய்வாளராகப் பணி புரிந்திருக்கிறேன். அப்போது இந்தப் பகுதி முழுவதும் எனக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு கிராமத்தைக் கடந்துபோகும்போது அங்கு உள்ள ஆதி திராவிடர் ஒருவர் கப்பென்று என் சைக்கிளை மறித்துவிடுவார். என்னை இறக்கி இளநீர், டீ என்று ஏதாவது கொடுத்து உபசரித்துதான் அனுப்புவார். அந்த அன்புத்தொல்லையில் நான் பலமுறை நெகிழ்ந்திருக்கிறேன். அதனால் அவர்களின் நிலை எனக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியும் பள்ளக்கையில் இருக்கும். சிறு மழை வெள்ளம் என்றாலும். அவர்களுக்குத் தண்ணீர் பஞ்சம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் வீட்டுக்குள் புகுந்துதானே வெள்ளம் வடியும்.
இந்த அனுபவத்தை வைத்து நான் ஒரு ஆலோசனை சொன்னேன். ஏரியில் அப்புறப்படுத்தும் மண்ணை அப்படியே எல்லா குடியிருப்பு பகுதியிலும் கொட்டி மேடாக்கிவிடலாம். அப்படி செய்தால் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் எந்த குடியிருப்பும் வெள்ளத்தால் பாதிக்காது என்பதுதான் அது. என் அதிகாரி சொன்னார் “நீ என்னவோ நல்லாதான்யா சொல்றே ஏழை சொல் அம்பலம் ஏறாதய்யா.” அப்போது அது சாதாரண பேச்சுதான். பேச்சு என்பதைவிட ஒரு அங்கலாய்ப்பு என்பரே அதுதான் பொருந்தும்.
அப்போதைய கணக்குப்படி வீராணம் ஏரியில் பதினெட்டு அடி உயரத்திற்கு சேரு படிந்திருப்பதாக சொல்லப்பட்டது. இதே வீராணம் ஏரியை ஒட்டிய சாலையில் 1972க்கு முன்னர் பல முறை பயணம் செய்திருக்கிறேன். கடலில் அடிப்பது போன்று சிறு அலைகள் கிளம்பி பஸ்சில் போகிறவர்கள் பேரில் தண்ணீர்த் துளிகளை வீசும். அவ்வளவு அழகான காட்சி அது. அதன் கதி இப்போது எப்படி என்று சொல்லத் தேவையில்லை. ஏதோ சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் நோக்கத்தில் வீராணம் ஏரியில் சில ஆண்டுகளாகத் தண்ணீர் கொஞ்சமேனும் உள்ளது. இதற்கு முன்னர் கோடை காலத்தில் வீராணம் ஏரியானது சோழத்தரம் பகுதியின் இணைப்பு சாலையாகவோ விளையாட்டுத் திடலாகவோதான் இருக்கும்.
இப்படிப்பட்ட ஏரியை துர்வாரப்போவதாக திட்டங்கள் போட்டதும். பில் போட்டதும்தான் கண்ட பலன். அந்த ஏரி என்னவோ அப்படியேதான் இருக்கிறது. கோடிகளைக் கொட்டி பலன் இல்லாத இந்தத் திட்டத்திற்கு சிறு அளவு நிதியைக்கொண்டு மிகச் சிறப்பாக சீர் செய்திருக்க முடியும் மனம்தான் இல்லையே அப்புறம் எப்படி,
எனது ஆலோசனை (1) நெய்வேலியில் இயங்கும் ஒரு மண்வெட்டும் இயந்திரத்தின் பழைய சிறிய இயந்திரத்தை கொண்டுவந்து ஏரிக்குள் இறக்கிவிட்டால். அது ஒரே மாதத்தில் ஆழப்படுத்திவிடும். இதற்கு நெய்வேலி நிறுவனத்திற்கு பெரிய தொகை ஏதும் தரவேண்டியதில்லை.
(2). கடலூரில், துறைமுகத்தில் மண் வெட்டுவதற்கென்று ஒரு இயந்திரம் உள்ளது. மண்வெட்டிக் கப்பல் என்பர். அதில் முன்பக்கம் ஒரு கை நீண்டு அதில் உள்ள மண்வெட்டி சுழன்றபடியே தண்ணீரை இழுத்து வெளியேற்றும். அதனைப் பெரிய குழாய்கள் மூலம் தொலை துரத்திற்குக் கொண்டு கொட்டிவிடுவர் மண்மட்டும் அங்கேயே தங்கிவிடும் தண்ணீர் மீண்டும் ஏரிக்குள் வந்துவிடும். அந்த இயந்திரம் ஒன்றும் கோடி ரூபாய் பெறுமானதல்ல. அதனை கொண்டுவந்து எரியில் இறக்கிவிட்டால் தண்ணீர் இருக்கும்போதே அது வேலை செய்துகொண்டிருக்கும். வெட்டும் மண்ணை கரையில் கொட்டிவிட்டால் கரை பலமடைந்துவிடும். செலவு குறைந்த சீரமைப்பு. ஆனால் செலவு குறைந்த திட்டத்தைப் போட்டால் யாருக்கு லாபம்.
(3) இது எல்லாவற்றையும் விட ஒரு சிறப்பான திட்டம் உள்ளது. ஏரி மண்ணை யார் வேண்டுமானாலும் தங்கள் சொந்த செலவில் எடுத்துக்கொள்ளலாம். ஒரு லோடுக்கு இவ்வளவு என்று ஒரு குறைந்தபட்சத் தொகையை நிர்ணயம் செய்து அறிவிப்பு கொடுத்துவிட்டால் போதும். ஏரியானது ஒரு மாதத்திற்குள் துர்வாரப்பட்டுவிடும்.
ம். இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால் வடரெட்டை வாய்க்கால் பழமலைப்பிள்ளை போன்று நமக்கும் ஒரு பைத்தியக்காரன் பட்டம் கிடைக்கும் அவ்வளவுதான்.
அது என்ன என்கிறீர்களா. வடரெட்டை வாய்க்கால் என்பது வீராணம் ஏரியின் முக்கிய வாய்க்கால். அதில் பாசனம் பெறும் விவசாயிகளில் பழமலைப் பிள்ளை என்பவர் ஒருவர். அவர் விவசாயத்தில் புலி. அதைவிட வீராணம் ஏரியையும் அதனைச் சார்ந்த வாய்க்கால்களையும் சீர் செய்ய வேண்டிய அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர். ஒவ்வொரு வாரமும், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என்று யாரையாவது சந்தித்து மனு கொடுப்பது வழக்கம். நான் அவரை முதன்முதலில் பார்க்க நேர்கையில் அவரைப்பற்றி நக்கலடித்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிறேன். “இந்தாள் ஒருத்தன் சலிக்காமல் ஒரு மனுவைத் துக்கிக்கொண்டு வந்துவிடுகிறான்.” என்று கமெண்ட் அடித்ததைப்பார்த்து நானும்கூட அவரை இகழ்ச்சியாக நினைத்ததுண்டு. ஆனால் விரைவிலேயே அவரது கோரிக்கைகள் பற்றி தெரிந்துகொண்டதும் அதற்காக மிகவும் வருந்தியிருக்கிறேன். அவர் பேரில் ஒரு மரியாதையே ஏற்பட்டது. அவரது கருத்துக்களைக் கொஞ்சமாவது அதிகாரிகள் கேட்டிருந்தால் எத்தனையோ விவசாயிகள் பயனடைந்திருப்பர் அத்தனை திட்டங்களை வைத்திருந்தார்.
இன்னொருவரைப்பற்றிக்கூட இங்கே சொல்லவேண்டியது அவசியம். அப்போது விவசாயிகள் வரிகொடா இயக்கம் நடத்திவந்த நேரம். கீழதங்குடியில் சேதுராமன் என்று ஒரு பெரியவர். அவர்தான் இயக்கத்திற்கு தலைமை வகிப்பவர். நாங்கள் கிராமத்திற்கு வரிவசூல் செய்யச் சென்றால் விவசாயிகள் அவர் சொன்னால் பணம் கட்டுகிறோம் என்று கைகாட்டிவிடுவர். மறுபக்கம் அதிகாரிகள் நிலவரி வசூலுக்கு நெருக்கடி கொடுப்பர். இந்த நிலையில் ஒருநாள் நேரில் அவரைப்பார்த்து விபரம் தெரிவிக்கலாம் என்று சென்றேன். போனவுடனே அவர் இன்று நல்ல நாள் எனக்கான வரி எவ்வளவு என்று கணக்கிட்டு சொல்லுங்கள் என்று கேட்டு பைசா சுத்தமாக செலுத்திவிட்டார். எனக்கோ ஆச்சரியம். அவர் சொன்னார் “இந்த நிலம்தான் எனக்கு சோறுபோடுகிற தெய்வம். அதற்கான வரி செலுத்தவேண்டியது எனது கடமை. அப்பத்தான் என் நிலம் எனக்கு சோறுபோடும்.”
உண்மைதான். அவரது நிலத்தைச் சுற்றி எல்லாரும் புகையான் தாக்கம், அது இது என்று நஷ்டப்பட்டுக் கொண்டிருப்பர். ஆனால் இவரது நிலம் முழுவதும் ஒரு சிறு பிரச்சினை இல்லாமல் அறுவடையாகி விதை நெல்லாக விற்றுப்போகும். தமது சாப்பாட்டுக்கு அவர் வெளியே நெல் வாங்கிக்கொள்வதும் உண்டு. விவசாயத்தில் இப்படி ஒரு மேதை இருந்தார். அவரைப்பார்த்து அவர் செய்யும் வேலைகளை அப்படியே பின்பற்றிய ஒருசில விவசாயிகளும் உண்டு. இப்படிப்பட்டவார்களை கேலி பேசுபவர்கள் ஏராளம். அந்தக்குணம்தானே நம்மிடம் தாராளம். வேறு என்ன செய்ய.
ஆனால் ஒன்று “நான் கட்டிவிட்டேன் என்று சொல்லி யாரிடமும் வசூல் செய்யக்கூடாது” என்பார். வாரிகொடா போராட்டம் என்றால் முன் நிற்பார். அது என்ன லாஜிக்கோ.