"

12

அலுவலக உதவியாளர்களின் கூத்து


 அலுவலகங்களில் வேலைபார்க்கும் அலுவலக உதவியாளர்கள் அடிக்கும் லூட்டி இருக்கிறதே அது ரொம்பவும் ரசனைக்குரியது. அந்த நாளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட 15 அலுவலக உதவியாளர்கள் இருந்தனர். அனைவரும் நேற்று வேலைக்கு வந்த குமாஸ்த்தாவாக இருந்தாலும்கூட அவர்களிடம் மாரியாதையாகவும், பாசத்துடனும் பழகுவர்.  சிறு பிரச்சினை என்றாலும்கூட துணை நிற்பர்.  தப்பு என்று தெரிந்தால் இன்னமாதிரி பிரச்சினை உள்ளது என்று எச்சரிப்பர். அலுவலக நிருவாகத்தில் அலுவலர்களும் பியூன்களும், (பிற்காலத்தில்தான் அலுவலக உதவியாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) நெசவு செய்யப்பட்ட பின்னல் இழையாக இயங்குவர்.

அப்போது டேப்ரிக்கார்டர் என்றால் ஏதோ அதிசய எந்திரம் என்று நினைத்த காலம். எல்லாருக்கும் ஊசி வைத்து இயங்கிய இசைத்தட்டுக்களைத்தான் தெரியும். அப்படிப்பட்ட காலகட்டத்தில் நான் ஒரு டேப் ரிக்கார்டர் வைத்திருந்தேன். ரேடியோவில் பாட்டு போடும்போது காத்திருந்து, தற்போதும்கூட உள்ளத்தில் இனித்துக்கொண்டே இருக்கும் பாடல்களைப் பதிவு செய்து வைத்திருப்பேன்.

அந்நாளில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்த வேலைப் பளு தற்போதைப்போல் பத்துமடங்கு இருக்கும். இதனால் அதிகப்படியான நேரம் வேலை செய்தால்தான் கொஞ்சம் நல்ல பெயர் எடுக்க முடியும். எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இரவு நேரத்தில் வந்து அலுவலகத்தில் வேலை பார்ப்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

இப்படிப்பட்ட நிலையில் நானும், என் நண்பர்கள் ரகமத்துல்லா, சுந்தரராமன், செல்வராஜ், கண்ணையன் போன்றோர் ஒரு செட்டு.  இரவு ஒன்பது மணியளவில் வந்து உட்காருவோம். மறுநாள் காலை ஐந்து மணியளவில்தான் வீட்டுக்குப் போவோம். இப்படி வாரத்தில் இரண்டு நாளாவது வேலை செய்வோம். படுக்கை தூக்கம் ஓய்வு ஏதும் கிடையாது. இரவு பன்னிரண்டு மணியளவில் ஆளுக்கு ஒரு போர்வையைப் போர்த்துக்கொண்டு கடைத்தெருவிற்குப்போய் டீ குடித்துவிட்டு வருவதுதான் சிறிய இடைவேளை.  இரவு முழுவதும் வேலைசெய்து கோப்புகளை கட்டுக்கட்டாக அதிகாரியின் மேசைமேல் வைத்துவிட்டுப் போய்விடுவோம். மறுநாள் காலையில் துணை வட்டாட்சியர் வந்தவுடன் அனைத்தும் ஒப்புதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் மேசையில் அடுக்கப்பட்டிருக்கும். அதிகாலையிலேயே முகாம் செல்லும் வட்டாட்சியர், வெளி வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்தில் நுழைந்தவுடன் அவர் கண்ணில் கோப்பு மலை தட்டுப்படும். உடனே அவர் அந்த ‘ராக்கோழி’களை கூப்பிடு என்பார். எல்லாரையும் வைத்துக்கொண்டே கையோடு ஒப்புதல் செய்து கொடுத்துவிடுவார். அந்த சந்தோஷத்தில் எங்களுக்கு இரவு கண்விழித்த சுவடுகூட தெரியாது.  இப்படியாக எங்கள் ஆரம்ப சர்வீஸ் கழிந்தது. ஆனால் இப்போதுதான் நினைக்கிறோம். நாம் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உடலையும் மனதையும் கெடுத்துக்கொண்டு வேலை பார்த்திருக்க வேண்டாமோ என்று. ஏன்னா இப்பவும் அந்த அலுவலகம் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது.

இதிலே சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அலுவலகத்திற்கு என்று தனியே வாட்ச்மேன் கிடையாது. அலுவலக உதவியாளர்கள் முறை வைத்துக்கொண்டு நைட் டூட்டி பார்ப்பர். அதிலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக மூன்று நான்கு பேர் இரவில் அலுவலகத்திற்கு வந்துவிடுவர்.

நாங்கள் நால்வரும் இரவு அலுவலகம் வருகிறோம் என்றால் தவறாமல் மூன்று நான்கு பேர் இரவு ஆஜராகிவிடுவர். ஒன்றுமில்லை. என்னுடைய டேப்ரிக்கார்டரை வீட்டிலிருந்து எடுத்து வந்துவிடுவேன்.  அது ஒரு மேசைமேல் அரசர்போல் கொலுவீற்றிருக்கும். அதனைச்சுற்றி அமைச்சர் பெருமக்கள்போல் நான்கைந்து அலுவலக உதவியாளர்கள் உட்கார்ந்துகொள்வர். அவர்களின் காதுகள் பாட்டுக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் கண்கள் டேப் சக்கரம் சுழலுவதையே பார்த்துக்கொண்டிருக்கும். அவ்வளவு வசியம் அதன்பேரில்.  அவர்களில் சின்னசாமி என்பவர் ஒருவர். பெயர்தான் சின்னது. உருவம் மிகப் பெரியது. மிகவும் தமாஷ் பேர்வழி. மற்ற அலுவலக உதவியாளர்களின் பஃபூன் அவர்தான். அவரை உசுப்பேற்றி டான்ஸ் ஆட வைத்துவிடுவர். அவர் தம்மை ஜெமினிகணேசனாக எண்ணிக்கொண்டு பாட்டுக்கு நடனம் ஆட ஆரம்பித்துவிடுவார். சில சமயம் இரவு சப்ஜெயில் காவலுக்கு வரும் வயதான பெண்மணியை அழைத்துவந்து இருவரும் ராக் அண்டு ரோல் ஆடுவர்.  நாங்கள் எங்களின் வேலையை அலுப்பு தட்டாமல் பார்த்தோம் என்றால் இவர்களின் உற்சாகமும் ஒரு காரணம்.

அந்த நாட்களில் மசால்சி என்று ஒரு பணியிடம் இருந்தது. அலுவலகத்தினை சுத்தம் செய்தல், கவர்கள் ஒட்டி வைத்தல் அலுவலகத் தேவைக்கு பசை காய்சுதல் இன்னபிற எடுபிடி வேலைகளைச் செய்வதற்காக அமார்த்தப்பட்ட பணியிடம் அது. அவர்களுக்கு சில்லரை செலவினத்திலிருந்துதான் சம்பளம் கொடுக்கப்படும். கிட்டத்தட்ட தினக்கூலிதான். பெரும்பாலும் அந்த மசால்சி என்பவரை வரும் அதிகாரிகள் தமக்கு ஒரு அடிமை சிக்கிக்கிட்டான் என்று நினைத்து தம் வீட்டு வேலைக்கு அழைத்துக் கொள்வர்.

இந்த அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் தம்மை ஒரு அரசராகவே நினைத்துக்கொள்வர். சரி அப்படியானால் அவரது மனைவியர் அரசிகள்தானே. ஆம் அவர்கள் தங்களை மகாராணியாகவே நினைத்துக்கொள்வர். அரசர் இருக்கையில் வந்து உட்கார்ந்த நாள் முதல் அவர்களின் அந்தப்புற அரசாங்கம் கொடிகட்டிப் பறக்கும். அதற்காக சிக்கிக் கொள்ளும் அடிமைகள்தான் இந்த மசால்சிகள். சிலரிடம் அவர்கள் அந்தக்காலத்தில் கேள்விப்பட்ட அரபுநாட்டு அடிமைகள்போன்று சாட்டையடி மட்டும்தான் வாங்கியிருக்கமாட்டார்கள். மாறாக வாய்ச்சவுக்கால் பலமுறை விளாசப்பட்டிருப்பர். அவர்கள் வேலைக்கு வரும்போதே அவர்களை எந்த மந்திரம் போட்டோ வாயைக் கட்டிவிடுவர் அதிகாரிகள். அவர்கள் படும் அல்லல்கள் சொல்லிமாளாது. ஆனால் யாரிடமும் சொல்லவும் முடியாது. ஆனாலும், இந்த அலுவலக உதவியாளர்கள்மூலம் அரண்மனை ரகசியங்கள் வெளியே கசிந்துவிடும்.  ஸ்விஸ் வங்கி ரகசியமே வெளியே கசிந்துவிடும்போது இதெல்லாம் எம்மாத்திரம்.

இப்படிப்பட்ட ஒரு மாசால்சி ஒரு மகாராணியிடம் சிக்கிக்கொண்டார். அரசியார் அவரை தினமும் அம்மி அரைப்பது உட்பட சமையல் வேலையெல்லாம் வாங்கிக்கொண்டார். இந்தக்காலத்து டி.வி. சீரியல்களின் கதைக்கரு அந்தக்காலக் கதைகளிலிருந்துதான் உருவாகியிருக்கும் போலும்.  இவர் தமக்கு அந்த வேலைகள் செய்து பழக்கமில்லை என்றாராம். அதற்கு அரசியார் மசால்சி என்றால் என்ன மசாலா அரைப்பவர் என்றுதான் பொருள். அரைத்துக்கொடு என்று வேலை வாங்குவாராம்.   இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் அந்த மசால்சி நமது அலுவலக உதவியாளர் குழாத்திடம் வேலை வேண்டாம் என்றுசொல்லி அழுதிருக்கிறார். நம் மக்கள் என்ன லேசுப்பட்டவார்களா?  தீர்வினை சொல்லிக் கொடுத்துவிட்டனர்.

அதுமுதல் ஒவ்வொரு வேலையிலும் ஏதாவது தப்பு செய்து நஷ்டம் வைத்துக்கொண்டே வந்திருக்கிறார். அரசியாரும் தம் வாய் ஓயுமட்டும் திட்டித் தீர்த்திருக்கிறார்.  இவருக்கென்ன திட்டினால் மேலேவந்து ஒட்டிக்கொள்ளவா போகிறது என்று இருந்துவிட்டார். மசால்சியின் தினசரி வேலையில் ஒன்று அருகில் உள்ள அடிபம்பிலிருந்து ஒரு தவலையில் தண்ணீர் பிடித்துவந்து வீட்டில் நிரப்புவது.  யாரோதானே கஷ்டப்பட்டு தண்ணீர் கொண்டுவருகிறார்கள் தாராளமாக தண்ணீர் செலவாகிக் கொண்டிருந்தது குடும்பத்தில்.  இப்படியாகப்பட்ட ஒரு நல்ல நாளில் நம் அலுவலக உதவியாளர்கள் ஆலோசனைப்படி தோளில் சுமந்துவந்த அந்தப் பெரிய தவலையை வீட்டு வாசலில் தண்ணீருடன் தவறவிட்டுவிட்டார் நம் மசால்சி. அவ்வளவுதான் அத்தனை உயரத்திலிருந்து விழுந்த தவலையானது, லாரியில் அடிபட்ட தவக்களை (தவளை) மாதிரி வயிற்றைப் பிளந்துகொண்டு உயிரை விட்டுவிட்டது. சத்தம் கேட்டு திட்டிக்கொண்டே வெளியே வந்தார் அரசியார்.

வாசலிலோ தண்ணீர் வெள்ளமாக ஓடியிருக்க தவலையானது கோணல்மாணலாக வளைந்துபோய் வாயைப்பிளந்துகொண்டு தரையில் கிடக்க, அதற்கு மத்தியில் நமது மசால்சியார் முழுவதும் குளித்த நிலையில் காலைப் பிடித்துக்கொண்டு அரற்றிக்கொண்டு கிடந்தார். திட்டிக்கொண்டே வெளியேவந்த அரசியாருக்கு ஒரே அதிர்ச்சி. அய்யாவைப் பார்ப்பதற்கு என்று வந்து காத்திருந்த பொதுமக்களின் கனிவான கவனிப்பில் இருந்தார் மசால்சி. இப்படியா வேலைவாங்குவது என்ற கண்டனம் வேறு.  அந்த உடைந்த குடத்துடன் மசால்சியின் அடிமை விலங்கும் உடைந்தது.  மசால்சியை வீட்டு வேலைக்கு வரவேண்டாம் என்று ஆபீசுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார். கொத்தடிமைத் தளையிலிருந்து மீட்கப்பட்டவர் போன்று அலுவலகத்திற்கு வந்துவிட்டார் நம் மசால்சி.  அதன் பின்னர் அதிகாரி வீட்டு அரண்மனை ரகசியங்கள் கதாகாலட்சேபமாக அவ்வப்போது அலுவலகத்தில் பிரசங்கிக்கப்படும்.

இங்கே மற்றொரு மசால்சி பற்றி சொல்லவேண்டும்.  குடும்ப சூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு வேலைக்குப் போயாக வேண்டிய நிலையில் படித்த அந்த இளைஞன் மசால்சியாக சேர்ந்தான்.  பத்தாம் வகுப்பு படித்துவிட்டால் ஏதோ முனைவர் பட்டம் பெற்றவர்போல் அலட்டிக்கொள்ளும் அந்த காலத்தில் பட்டம் பெற்றிருந்தும் சற்றும் வெட்கமோ கவலையோபடாமல் இட்ட பணிகளை செய்து யாவரும் விரும்பும் நிலைக்கு உயர்ந்தான்.   அலுவலகத்தில் தந்த ஊக்கத்தினால் சர்வீஸ் கமிஷண் தேர்வு எழுதி வெற்றிபெற்று அதே அலுவலகத்தில் கிளார்க்காக சேர்ந்தான்.  கடும் உழைப்பினால் பிற்காலத்தில் துணைக்கலைக்டர் வரையிலும் பதவி உயர்வுகள் பெற்று எல்லாருடைய அன்பையும் பெற்று ஓய்வு பெற்றார் அந்த முன்னாள் இளைஞன்.  கனிவான பேச்சு, யாரிடமும் அன்பாகப் பழகுவது கெளரவம் பாராமல் வேலைகளைச் செய்வது என்று பல குணநலன்கள்.  அவரைப் பார்த்து நானும்கூட நற்குணங்களைக் கற்றுக்கொண்டேன் என்பது உண்மை.

இதுவும் ஒரு மசால்சி மேட்டர்தான்.  வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்காலத்தில் மின்விளக்கு கிடையாது ஆளாளுக்கு ஒரு அரிக்கேன் விளக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். மசால்சி என்பவர் தினசரி அவற்றைத் துடைத்து எண்ணை விட்டு மாலையில் ஏற்றி வைப்பார். மின் விசிறியாவது ஒண்ணாவது. கரண்டே இல்லையாம் இதில் மின்விசிறிக்கு எங்கே போவது. எல்லாம் கைவிசிறிதான்.   ஆனால் தாசில்தாருக்கு மட்டும். ஒரு பங்கா உண்டு. இன்றும்கூட பழைய கட்டிடங்களில் அதன் சுவட்டைப் பார்க்கலாம்.   ஆம் பங்காக்கள் அகற்றப்பட்டு விட்டன.  ஓ அது எப்படி இருக்கும் என்றே தெரியாதல்லவா. ஒன்றுமில்லை. தாசில்தாரின் தலைக்கு மேலாக உயரத்தில் இரண்டு பக்கச் சுவருக்கும் இணைத்து ஒரு மரத்தண்டு பொருத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து சுமார் நான்கடி உயரத்திற்கு ஒரு தடித்த பாய் மற்றும் துணியினால் அமைக்கப்பட்ட தடுப்புபோன்ற அமைப்பு தொங்கிக்கொண்டிருக்கும்.  அதனை இயக்குவதற்காக தாசில்தார் சீட்டுக்கு பின்பக்கம் உள்ள சுவரில் ஒரு சக்கரம் வைத்து அதன் வழியாக விசிறி அமைப்பின்பேரில் கயிறுமூலமாக  இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்தக் கயிற்றினை தாசில்தார் கோர்ட் ஹாலுக்கு பின்பக்கம் உள்ள வெராண்டாவில் உட்கார்ந்திருக்கும் நபர் பிடித்து இழுத்தால் அந்த விசிறி அமைப்பு முன்னும்பின்னும் ஊஞ்சல்போல் ஆடி காற்றினை வழங்கும். இதற்காகவே ஒருவர் ‘பங்காபுல்லர்’ என்ற பெயரில் அமர்த்தப்பட்டிருப்பார். அவரும் மசால்சி போன்றவர்தான்.  ஏன் அந்த அமைப்பினை உள்ளேயே இருந்து இயக்கினால் என்ன என்று நினைப்பது புரிகிறது.  அதெப்படி அவர் உள்ளே இருந்து இயக்கினால் அவருக்கும் காற்றுவருமே அப்புறம் ஆண்டியும் அரசனும் ஒன்றாகிவிட மாட்டார்களா. இதெல்லாம் வெள்ளைக்காரன் காலத்து அமைப்பு.

அப்படிப்பட்ட ஒரு பங்காபுல்லர் என்ற மசால்சி தாசில்தார் இருக்கும்போது பின் வெராண்டாவில் அமர்ந்துகொண்டு கயிற்றை இயக்கிக் கொண்டிருப்பார். சமயத்தில் கை அசந்தாலோ துங்கிவிட்டாலோ டோஸ் கிடைக்கும். இதனையெல்லாம் டபேதார் கண்காணிப்பார். இந்த அமைப்பையெல்லாம் நான் பணியில் சேர்ந்த காலத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் கூத்துகளை நேரில் கண்டதில்லை. அப்படி வேலைக்கு சேர்ந்தவர்கள் பின்னாளில் பியூன்களாக ஆகிய சமயத்தில் சக பியூன்களால் கேலி பேசப்பட்டதை கேட்டு ரசித்ததுண்டு.

ஒரு மசால்சி பங்காபுல்லராக இருந்தபோது தாசில்தாருக்கு வரும் சாப்பாட்டை அவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விடுவராம். தாசில்தார் சாப்பிட அமர்ந்தவுடன் பரிமாறிவிட்டு  பாத்திரங்களை கழுவி வீட்டுக்கு அனுப்பவேண்டும். ஆனால் நம்மாளு அதனைத் திறந்துபார்த்து அதில் உள்ள உணவுகளை முன்னதாகவே ருசித்துவிடுவார்.  இப்படியாக பல நாளாக நடந்துவந்துள்ளது. இவரது ருசிபார்த்தலானது முழுவதையும் காலி செய்யும் அளவிற்கு பாரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது.  இப்படியாக ஒருநாள் மீன் குழம்பு வைத்து அனுப்பியிருந்தார் தாசில்தாரிணி.  நம்மாளுக்கு ஆசை அத்துமீறி கொஞ்சம் கொஞ்சமாக மீன் முழுவதையும் காலி செய்துவிட்டு முட்களையெல்லாம் அந்தக் குழம்பிலேயே போட்டுவிட்டார். சோதனையாக, அந்த மீன் தாசில்தாரால் ஏற்பாடு செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்டது.  மாலையில் தாசில்தாரிணியிடம் குழம்பில் மீனைக்காணோம் முள்தான் இருந்தது என்று தாசில்தார் சொல்லப்போக அவரோ தாம்தான் மீனை வைத்து அனுப்பியதாக சொல்லப்போக விசாரணைக் கமிஷண் அமைக்கப்பட்டு உண்மை கண்டறியப்பட்டது. அப்போதுதான் மசால்சி செய்ததெல்லாம் வெளியில் வந்துள்ளது. விளைவு?

மசால்சியெல்லாம் வைத்தால் குடுமி எடுத்தால் மொட்டை கதைதான்.  பிடிக்கவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவர்.  ஆனால் நம்மாளு அய்யா அப்படி இப்படி என்று காலில் விழுந்து கெஞ்சியதும் மனம் இளகி வேறு வேலை கொடுத்துவிட்டனர். அப்போதெல்லாம் அலுவலகத்தில் மசால்சி தகுதியில் வாட்சுமேன், தோட்டக்காரன், முச்சி, பங்காபுல்லர் என்று பலர் இருந்திருக்கின்றனர்.  அதிகாரிக்கு பிடித்த வகையில் புகார் இன்றி வேலை செய்தால் பிழைக்கலாம் இல்லையென்றால் மூட்டைகட்ட வேண்டியதுதான்.

இப்படியாக சிலகாலம் கழித்து ஒருநாள் அவருக்கு துணைக்கலெக்டர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.  அப்போதெல்லாம் துணைக்கலெக்டர் ‘கேம்பு’ போகிறார் என்றால் இரண்டு மூன்று நாட்கள் பயணத்திலேயே இருப்பார். அந்தந்த இடத்திற்கும் ஆபீசிலிருந்து கோப்புகள் பெட்டியில் அடைத்து சீல் வைத்து ஒரு பியூன் அல்லது மசால்சி தலையில் பயணமாகும். அங்கே சென்றதும். தம்மிடம் உள்ள சாவியால் திறந்து கோப்புகளை எடுத்துக்கொண்டு தாம் ஒப்புதல் செய்த கோப்புகளை வைத்து சீல்வைத்து திருப்பி அனுப்புவார் அதிகாரி.  இப்போது மாதிரி பஸ் வசதியெல்லாம் கிடையாது. ஏதோ ஓரிரு பஸ் போகும்.  இடைப்பட்ட இடங்களுக்கு தலைச்சுமைதான்.  வேறு வழியெல்லாம் கிடையாது. இப்படி செல்பவருக்கு கொசுறு சுமையாக அதிகாரி வீட்டம்மாவால் சமையல் செய்து கேரியரும் கொடுத்தனுப்பப்படும்.

இந்த மாதிரியான காலத்தில் ஒரு துணை கலெக்டர் இருந்தார். அவருக்கு சாப்பாடு ருசியாக இருக்கிறதோ இல்லையோ அவர் சாப்பிடும் இலை நன்றாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அன்று அந்த சாப்பாடு கொண்டுவந்தவர் வீட்டுக்கு மூட்டைகட்ட வேண்டியதுதான்.  இப்படிப்பட்ட நிலையில் மீன்குழம்பு புகழ் மசால்சிக்கு அழைப்பு வந்தது. அவரிடம் இலை குறித்த முக்கிய அறிவுரைகள் சொல்லிக் கொடுத்தனுப்பப்பட்டது.  அவர் நேராக சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அதிகாரி தங்கும் பங்களாவுக்குப் போய்ச்சேர்ந்தார். அதிகாரி பசியோடும் வீட்டுச்சாப்பாட்டு ஆவலோடும் வந்துசேர்ந்தார்.  டபேதார் சாப்பாட்டுக் கூடையைப் பிரித்தார்.  அவ்வளவுதான்.  ‘கெட்டது மசால்சி குடி’ ஏன்று முடிவாகிவிட்டது.  ஆம். சாப்பாட்டுக் கூடையுடன் கொண்டுவந்த வாழை இலை டர்ர்ர்.  அய்யாவோ சாப்பிட ரெடியாகிவிட்டார். ஓடிப்போய் வேறு இலை வாங்கிவரவும் முடியாத அளவில் அந்துவான காட்டில் இருந்தது அந்த பங்களா.  டபேதாரிடம் சரண்டர் ஆனார் மசால்சி.  பக்கத்து அறையில் தங்கியிருந்த ஒரு அதிகாரி சாப்பிட்ட இலை வெளியே அப்போதுதான் ஒரு விக்கினமும் இல்லாமல் வந்து விழுந்திருந்தது.  ஓடிப்போய் எடுத்துவந்து கழுவிவிட்டு சாப்பாட்டைப் பறிமாறிவிட்டார் மசால்சி.  அப்புறம் என்ன. முடிவு சுபம்தான்.  பிற்பாடு அவரை அடிக்கடி மற்ற அலுவலக உதவியாளர்கள் இப்படி செய்தவன்தானே நீ என்று கிண்டல் செய்ததை கேட்டிருக்கிறேன்.

அந்த நாளில் அதிகாரிகள் ரொம்பவும் கெடுபிடியாக இருப்பர். கீழே வேலை பார்ப்பவர்களிடம் கனிவுடன் இருந்தாலும் கண்டிப்பும் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் மெமோ வந்து சேரும்.  ஆனால் இந்த அலுவலக உதவியாளர்களுக்குப் பெரும்பாலும் மெமோ எல்லாம் தரமாட்டார்கள். அடங்காத குதிரை என்றால் அதிகாரியிடம் ஓதிவிடுவர்.  அதிகாரிகள் காலையில் முகாம் சென்று மாலை வீட்டுக்கு வந்து சேருவது எல்லாம் கிடையாது. தற்போது இரண்டு அல்லது மூன்று தாலுக்காக்கள் சேர்ந்தது அக்காலத்தில் ஒரு தாலுக்கா. தற்போதைய கடலுர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் சேர்ந்தது ஒரு ஜில்லா. அதனை இரண்டு சப்கலெக்டர்கள் பார்த்தனர். சிதம்பரம் சப்கலெக்டர் ஒருவர், திண்டிவனம் சப்கலெக்டர் ஒருவர்.  ஆக அவர்கள் கேம்பு போகும் தூரம் அளவுகளை தெரிந்துகொள்ளலாம்.

இப்படியாக தாலுக்கா டிப்டி தாசில்தாராகப்பட்டவர், தாசில்தார் முகாம் சென்ற இடத்துக்கும் சப்கலெக்டர் முகாம் சென்ற இடத்திற்கும் பெட்டிகளில் தபால் வைத்து பூட்டி சீல் வைத்து கோப்புகளை அனுப்பி வைப்பார். முன்பே சொன்னமாதிரி தலைச்சுமையுடன் லோல்பட்டு தபால் கொண்டுபோய் சேர்ப்பார் பியூன்.  போன் கிடைக்கும் பெருந்தனக்காரர் வீட்டிலிருந்தோ போலீஸ் ஸ்டேஷன் மூலமோ தகவல் வரும். அவ்வளவுதான் தகவல் பறிமாற்றம் எல்லாம். மற்றபடி தபால்தான். தனிநபர் பயணம்தான்.

இப்படிப்பட்ட அடங்காத குதிரையை அடக்க ஒரு அதிகாரி கையாண்ட முறை சுவாரசியமானது.  அதிகாரி முன்னதாக தாம் செல்லவிருக்கும் இடங்கள் பற்றி தகவல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.  அடுத்து டிப்டிதாசில்தார் ஒரு பெட்டியை சீல் வைத்து அலுவலக உதவியாளரை அழைத்து மிகவும் அவசரம். அய்யா இன்ன ஊருக்குப் போயிருக்கிறார். உடனே கொண்டு போகவும் என்று கனிவாகப் பேசி தலையில் தூக்கிவிட்டார்.  நம்மவர் பெட்டியைத் துக்கிக்கொண்டு பொறுப்பாக கால்நடை சபரிமலை யாத்திரைபோன்று கிளம்பிப் போய்விட்டார். அந்த கிராமத்திற்குப்போய் மணியத்தை சந்தித்து விபரத்தைச் சொன்னர்.  அந்த மணியமோ ‘அடடா அய்யா இப்பதானே கிளம்பி இந்த ஊருக்கு போகிறார். சீக்கிரம் போனால் நல்லது’ என்று தெரிவித்து அனுப்பிவைத்தார்.  அடுத்தடுத்து இரண்டுமூன்று ஊர் சுற்றி, கொண்டுபோய்ச் சேர்த்தார் கடைசியில்.  அதிகாரியோ மிகவும் அவசரமான தகவல் என்று சொல்லியும் இப்படி வந்தாயே என்று கடிந்துகொண்டு பெட்டியை வைத்துவிட்டுக் காத்திருக்கச் சொன்னர். பின்னர் கொஞ்சநேரம் கழித்து அவரைக் கூப்பிட்டு இந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஆபீசில் கொண்டுபோய் கொடு மிகவும் அவசரம் என்று முடுக்கிவிட்டார்.  மீண்டும் அந்த பெட்டியை தலையில் துக்கிக்கொண்டு நடைப்பயணம் செய்து ஆபீசுக்குப் போய்ச்சேர்ந்தார். வழியெல்லாம் சுமையின் கனம்பற்றி சந்தேகம் அப்படி என்னதான் அந்த பெட்டியில் இருக்கு இந்த கனம் கனக்கிறதே என்று.  என்ன செய்வது தலைவிதியல்லவா தலைச்சுமையாக வந்து உட்கார்ந்திருக்கிறது.

இப்படியாக இவருக்குமட்டும் அடிக்கடி வெயிட்டான தபால்கள் கொண்டுபோகும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டு வந்ததில் பார்ட்டி நொந்து நுடுல்ஸ் ஆகிவிட்டார்.  இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக சுருதி அடங்கிவிட்டது.  உடனிருக்கும் பணியாளர்களிடையில் வேலை என்றால் மூக்கால் அழுபவன் என்று கெட்ட பெயர்வேறு கூடுதல் பலனாக வந்து ஒட்டிக்கொண்டது.

ரொம்பநாள் கழித்துதான் விஷயம் வெளியே வந்தது. பெட்டி முழுவதும் செங்கலை அடுக்கி முக்கிய கோப்புகள் என்று சொல்லி, தம்மை பழிவாங்குவதற்காகத் தம் தலையில் கட்டிவிட்ட சேதி.  எடுத்துச்செல்லும் பெட்டியில் என்ன இருக்கு என்று திறந்து பார்த்தாலோ கொண்டுபோகாவிட்டாலோ தலைவிதியானது வயிற்றில் வேலையைக் காட்டிவிட்டால் என்னசெய்வது.  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அனுபவித்தார். அப்புறம் என்ன அதான் மூக்கணாங்கயிறுதான் போட்டுவிட்டார்களே. அடங்கிப்போகவேண்டியதுதான்.

அந்தநாளில் அப்படி என்றால், பஸ் வசதி எல்லாம் உள்ள நாளில், அதாவது இருபத்தைந்து வருடம் முன்பு ஒரு சம்பவம். அப்போது அடிக்கடி சமூகப் பிரச்சினைகள் நடந்துகொண்டிருந்த நேரம். ஒரு பெரிய பிரச்சினை நடந்துவிட்டது. தினமும் அன்றைய நடவடிக்கை குறித்து அறிக்கை தயார் செய்து இரவு ஒரு அலுவலக உதவியாளர் மூலம் கலெக்டர் பங்களாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய நிலை.  அப்போதெல்லாம் அலுவலக உதவியாளர்கள் கொஞ்சம்  தேறிவிட்டனர்.  நான் மாட்டேன் நீ மாட்டேன் என்று போட்டி போட ஆரம்பித்துவிட்டனர். அவசரம் என்பதால் மறுக்க முடியாத நிலைமை.

ஒருநாள் மாலை ஆறு மணியளவில் அறிக்கை தயார் செய்து ஒரு அலுவலக உதவியாளாரிடம் கொடுத்து உடன் மாவட்ட ஆட்சியர் பங்களாவில் சேர்க்கும்படி தாசில்தார் சொல்லிவிட்டார். இவருக்கு ரொம்ப கடுப்பு. கூட இருந்தவர்கள் வேறு உசுப்பேற்றினர். அப்படி என்னதான் தலைபோகிறது. எல்லாம் அதிகாலையில் கொண்டுபோய் கொடுத்தால் போகிறது என்று முடிவு செய்து வீட்டிற்குச் சென்று படுத்துவிட்டார்.  அங்கே அறிக்கையை பெற்று அரசுக்கு அனுப்புவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். போனில் கேட்டால் தாசில்தார் ‘அப்பவே அனுப்பிவிட்டேன்’ என்பதும் அங்கே ‘இன்னும் வரவில்லையே’ என்பதும் கடைசியில் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குப் போய்விட்டது.

தாசில்தாருக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏதோ தப்பு நடந்துள்ளது என்று உணர்ந்தார். நேராக அந்த அலுவலக உதவியாளர் வீட்டுக்கு விட்டார் வண்டியை.   அங்கே போனால் ஆசுவாசமாக நம்மாளு எழுந்துவந்தார். தாசில்தார் ஒன்றும் சொல்லவில்லை. “இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் தபால் கடலூருக்குப் போய் சேரவில்லையென்றால் நீ காலையில் வேலையில் இல்லை” என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டார். அந்த நள்ளிரவில் எந்த பஸ் போகிறது. இப்போது போல் டூவிலர் எல்லாம் அப்போது கிடையாது.

வேறு வழி. ஒரு டாக்சி வைத்துக்கொண்டு தபால் கொண்டுபோய் சேர்த்தார். வாடகைதான் கொஞ்சம் அதிகம்.   வண்டி வாடகையும் அவரது ஒருமாத சம்பளமும் சரியாய்ப் போய்விட்டது.  வேறு ஒரு பாதிப்பும் இல்லை. அதிலிருந்து, எந்தத் தபாலைக் கொடுத்தாலும் வாய்மூடிக்கொண்டு எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் ஒன்று. ‘அய்யா பஸ் காசு கொடுங்கள்’ என்று கேட்டுவாங்கிக் கொள்வர்.  அவ்வளவுதான்.

நான் வருவாய் ஆய்வாளராக இருந்தபோது நடந்தது இது. திடீரென்று ஒரு போலீஸ்காரர் என்னிடம் வந்து உங்களை உடனடியாக மாவட்ட ஆட்சியர் பி.ஏ. பேசச்சொல்கிறார் என்று தகவல் சொன்னார்.  எனக்கோ என்னடா விஷயம் நம்மை ஏன் பேசச்சொல்கிறார் என்று சற்று பயம் கலந்த சந்தேகம். செய்யாத தப்புகள்கூட கண் மூன்பாக விஸ்வரூப தரிசனம் தந்தது.  பக்கத்தில்தான் வட்டாட்சியர் அலுவலகம்.   போய் போன் போட்டு பேசினேன்.  தாசில்தார் ஜீப் ஆபீசுக்குள் புகுந்துவிட்டதாமே ஆபீஸ் இடிந்துவிட்டதாமே என்றார் அதிகாரி.  ‘அப்படியெல்லாம் இல்லீங்க அய்யா’ என்று சொல்லிவிட்டு விசாரித்துச் சொல்கிறேன் என்று தகவல் சொல்லிவிட்டு வந்து பார்த்தால். அப்புறம்தான் நடந்தது தெரிந்தது.

பெரிதாக ஒன்றும் நடந்து விடவில்லை. லீவுநாள் என்பதால் தாசில்தார் கடலூருக்குப் போய்விட்டார். தாசில்தார் இல்லையென்றதும் சாரதியும் கடலூருக்குப் போய்விட்டார். அலுவலக உதவியாளர் மற்றும் ஆக்டிங் டிரைவரான ஒருவர் காலையில் வந்தார்.  வண்டியைத் தமது சீடரை வைத்துக் கொண்டு சுத்தம் செய்தார்.  அடுத்து அவ்வளவு சூட்டிக்கை இல்லாத அந்த நபரை டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்யச்சொன்னார்.  இவர் வண்டி கண்டிஷனை சோதிக்கிறாராம். அதனால் வண்டியைப் பார்த்துக்கொண்டு கீழே நின்றுகொண்டிருந்தார்.  அவரோ சாவியைப் போட்டுப்பார்த்தார். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. கீழே நின்ற பரமார்த்த குருவோ சீடனைப்பார்த்து “இவ்வளவு நாளா அசிஸ்டண்டா இருந்தென்ன பயன் xxxxமாதிரி ஸ்டார்ட் செய்கிறியே! நல்லா சாவியைத் திருப்பி ஆக்சிலேட்டர்கொடு” என்றார். அவ்வளவுதான். தம்மைத்தான் கெட்டவார்த்தையில் திட்டவிட்டார் என்று அந்த ஜீப்புக்கு ரோஷம் வந்து சீறிப்பாய்ந்துவிட்டது.

தாலுக்கா ஆபீசின் மூன்று படிக்கட்டுகளையும் ஏறிக்கடந்து வெராண்டா கட்டைச் சுவற்றை இடித்துக்கொண்டு உள்ளே பாய்ந்துவிட்டது.  பயந்துபோன இருவரும் ஒரு கொத்தனாரை ஏற்பாடு செய்து பெயர்ந்துபோன கட்டைச்சுவர் துண்களை இழுத்துவைத்து முன்பு இருந்ததுபோல் பூசிவிட்டனர். ஜீப்பு பட்டறைக்குப் போய்விட்டது.  ஒன்றுமே நடக்காததுபோல் தாலுக்கா அலுவலகம் அமைதியாக இருந்தது. ஆபீசில் வழக்கமாக வந்துநிற்கும் காக்கா குருவிகூட இல்லை. எதிர் கடையில் விசாரித்தபின்தான் நடந்த விபரம் தெரிந்தது.

இந்த அசம்பாவிதத்திலும் ஒரு நல்ல நேரம். அந்த ஜீப்பு தெருவை நோக்கி நிற்காமல் ஆபீசைப்பார்த்து நின்றதுதான். இல்லையென்றால் அதுபாட்டுக்கு எப்போதும் கூட்டம் உள்ள தெருவில் பாய்ந்து சிலபலரை பதம் பார்த்துவிட்டு எதிர் கடையில் பார்ச்சேசுக்கு போயிருக்கும்.

அதற்குள் கலெட்டர் ஆபீசுக்கு தாசில்தார் வரவழைக்கப்பட்டு பி.ஏ.விடம் இலவச தரிசனமும் அர்ச்சனையும் செய்து அனுப்பி வைக்கப்பட்டார்.  பின் என்ன. யாருடைய அனுமதியும் பெறாமல் தலைமையிடத்தைவிட்டு சென்றால் கொஞ்சவா செய்வார்கள்.  அந்த அப்பாவி அலுவலக உதவியாளரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ‘கொஞ்சம் வண்டி எடுக்கிறீர்களா கேம்ப் போகலாம்’ என்று கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.