"

14

சிரஸ்ததார் அழைக்கிறார்.


 கலெக்டர் ஆபீஸ்.  அப்போதுதான் நான் வேலைக்கு வந்த கத்துக்குட்டி.   அப்போதெல்லாம் வேட்டி கட்டியதுபோன்ற பெல்பாட்டம் பேண்ட். லாடம் வைத்தது போன்ற டக்டக் ஷூ. கழுத்து வரை நீண்ட கிருதா. யாருக்கும் அஞ்சாதவன் என்ற மிடுக்கு.  இதுதான் நான். நான் மட்டுமென்ன எனக்குத் துணையாக இன்னும் நான்குபேர்.  இப்படியாக நூறுபேருக்கு மேல் வேலை பார்த்த அலுவலகத்தை நான்குபேர்  கலக்கிக்கொண்டிருந்தோம்.

வந்துசேர்ந்தார் ஒரு ஹிட்லர். அவர்தான் சிரஸ்ததார். அவரைக் கண்டால் அதிகாரிகளுக்கும் பயம். அப்புறம் கிழே வேலை பார்ப்பவர்களைச் சொல்லவா வேண்டும். ஆனால் நன்கு வேலை தெரிந்தவர். அதைவிட, வேலைவாங்கத் தெரிந்தவர். திரு டி.என். சேஷன் வந்தபின்னர்தான் தேர்தல் ஆணையத்திற்கு என்ன அதிகாரம் என்று மக்களுக்கு தெரிந்த மாதிரி அவர் சிரஸ்ததாராக வந்தபின்னர்தான் அதிகாரம் களைகட்டியது.

நாங்களும் எங்களின் கலக்கல்களை கொஞ்சம் குறைத்துக்கொண்டு கூடுமானவரை அவர் கண்ணில்படாமல் போய்வந்து கொண்டிருப்போம். இப்படியாக நல்லாவே போய்க்கொண்டிருக்கையில் எப்போதாவது அவர் கண்ணில் பட்டுவிட்டால் போயிற்று. மதியம் அவர் சாப்பிட்டுவிட்டு சற்றே ஓய்வாக பிரிவில் உட்கார்ந்திருக்கும்போது மாடு அசைபோடுவதுபோல் அவர் மனதில் எங்கள் நிகழ்க்சி வந்து படம் காட்டும்போலும்.

பிரிவில் நான் தலைகுனிந்து எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். ஒரு அலுவலக உதவியாளர் வந்து ‘சார் உங்களை சிரஸ்த்தார் கூப்பிடறார்’ என்பார்.  உடனே செய்த, செய்யாத, செய்யப்போகிற தப்பெல்லாம் மனக்கண்முன் வந்து இதற்கா அதற்கா என்று பட்டிமன்றம் நடத்தும்.    சிரஸ்ததார் கூப்பிடறார் என்றவுடனே எங்கள் ஹாலில் உள்ள எல்லாரும் தங்கள் வேலையை உடனடியாக நிறுத்திவிட்டு “மவனே மாட்டினியா செத்த போ” என்று மனதில் நினைத்துக்கொண்டு பாரிதாபப் பார்வை பார்ப்பர். எழுந்து தலைமுடி முதல் சட்டைப் பித்தான் வரை எல்லாத்தையும் இருக்கிக்கட்டி சரிசெய்துகொண்டு மெதுவாக எழுந்து கூனிக்குறுகிக்கொண்டு பயபக்தியுடன் இறுதித்தீர்ப்பு நாளில் கடவுள் முன்பாக நிற்கும் பாவாத்மாபோன்று போய் நிற்பேன்.

“அய்யா கூப்பிட்டீங்களா” இருகரம்கூப்பி வணக்கத்துடன் நான்.

“பி.டி.எல் (periodical reports) எல்லாம் அனுப்பியாச்சா” அடிவயிற்றிலிருந்து ஒரு உறுமலுடன்
– சிரஸ்தார்.

“அனுப்பிச்சிட்டேங்க” – நான்

“போய் 347 சூன் மாத பிடிஎல் எடுத்துவா” மீண்டும் உத்திரவு

விட்டால் போதும் என்று வெளியே ஓடிவந்து பிரிவில் போய்ப் பதிவேட்டை எடுத்து அதனை எப்போது பதிவறைக்கு ஒப்படைத்தோம் என்று பார்த்து, பதிவறைக்கு ஓடிப்போய் ‘சிரஸ்தார் கேட்கிறார்’ என்று கேட்டால் இன்னும் வரவில்லை என்பார் பதிவுக்காப்பாளர். உடனே மாடிக்கு ஓடிவந்து ஒப்படைத்த பிரிவில் தேடினால் இருக்காது. சமயத்தில், ‘நீ ஒப்படைக்கவில்லை’ என்பார் சுத்த நகல் பிரிவு சூப்பிரண்டு. பதிவேட்டைக் காட்டி நிரூபித்த பின்னர்.  ‘பதிவறையில்தான் உள்ளது நல்லா தேடிப் பார்க்கச்சொல்’ என்று தட்டிக் கழித்துவிடுவார் கண்காணிப்பாளர்.

மீண்டும் தடதடவென்று படிகளில் இறங்கி – அதுவும் ஒன்று இரண்டு மூன்று என்று ஒவ்வொரு படியாக இறங்குவதெல்லாம் கிடையாது. ஒன்று மூன்று ஐந்து என்று ஒன்றுவிட்டு ஒருபடியாக தாவித்தான் செல்வது. அப்படி இறங்கி, பதிவறையில் மீண்டும் முறையிட்டால். ரொம்ப அலட்சியமாக ‘வாண்டட் ஸ்லிப் கொடுங்கள் பார்த்துத் தருகிறேன்’ என்று அலட்சியமாக பதில்சொல்வார்.  கொஞ்சம் கோபம் வரும்.  இருந்தாலும் ‘சிரஸ்ததார் கேட்கிறார்  நான் அப்படியே சொல்லிவிடுகிறேன்’ என்று எனது பதிவேட்டைக் காட்டியதும் கொஞ்சம் இருங்க என்று எடுக்கச்செல்வார். இருக்காதா பின்னே. அவர் மட்டும் என்ன சிரஸ்ததாருக்கு முன்பாக இறுதித் தீர்ப்புக்கு அழைக்கப்பட மாட்டாரா என்ன.

அதற்குள் கிட்டத்தட்ட அரைமணிநேரம் கடந்துவிடும். நமக்கென்னவோ ஆறுமணிநேரம் கடந்துவிட்டது போலவும் மீண்டும் அழைப்பு வந்துவிட்டால் என்னசெய்வது என்றெல்லாம் பயம் வந்துவிடும்.

மெதுவாக நான் கேட்ட கோப்பினை எடுத்து நீட்டுவார் பதிவறை எழுத்தர். அதனைப் பிடுங்கிக்கொண்டு புலியைக் கண்ட மான்போல் பாய்ந்து சென்று சிரஸ்த்ததார் முன்பாக நிற்பேன்.  அவர்பாட்டுக்கு கோப்பினைப் பார்த்துக்கொண்டு இருப்பார். அந்த அறையில் உள்ள மேசை நாற்காலி போன்று நானும் ஒரு ஜடப்பொருளாக மாறிவிடுவேன்.  மெதுவாக நிமிர்ந்து பார்த்து கையில் உள்ளதை வாங்கிப் பார்ப்பார். திருப்திதானா என்பதெல்லாம் அவரது முகத்தில் தெரியாது. “சரி போ” என்று அடிவயிற்றிலிருந்து மீண்டும் ஒரு உறுமல் வரும். இப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியாது.  சர்க்கஸ் கூடாரம் அடித்திருப்பார்களே அதன் அருகில் போய் நின்றால் அங்கு அவ்வப்போது சிங்கத்தின் உறுமல் கேட்டிருப்பீர்களே அப்படித்தான் அவரது சொற்களும் வந்துவிழும்.

இப்போதுதான் அவரது அறைக்கு வெளியே தங்கியிருந்த நமது உயிர் மெல்ல நமது உடலுக்குள் வந்து உட்காரும். அப்புறமென்ன தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து பிரிவில் காலரைத் தூக்கிக்கொண்டு உட்காருவேன்.  சுற்றிலும் உள்ள கண்களில் “அடப்பாவி தப்பிச்சிட்டியா” என்ற ஏக்கம் தெரியும்.  என் செட்டு நண்பர்கள் கூடுவர். என்ன என்று அறிந்துகொண்டு தங்கள் அனுபத்தை சொல்விச் செல்வர்.  இப்படியாக  ஒருமாதம் போகும். மீண்டும் ஒரு நல்லநாள் இல்லையில்லை எனக்கு கெட்ட நாள் வரும். அதேபோன்று ஏதாவது கேள்வி – ஓட்டம் – தேடல் – தப்பித்தல்தான். வேறென்ன. நல்ல வேளை ஒரு முறைகூட நான் மாட்டிக்கொண்டு பலியாகவில்லை. எங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் ரொம்ப பக்திமான்கள் அந்த புண்ணியம் என்னை காப்பாற்றியது என்று நினைக்கிறேன்.

எங்கள் பிரிவில் நான்கு குமாஸ்த்தாக்கள். அதிலே நான்மட்டும் கத்துக்குட்டி. ஒரு வருடம்தான் சர்வீஸ். மற்றவர்கள் சீனியர். இப்படியாகப்பட்ட நிலையில் ஒரு குமாஸ்த்தா தாங்கமுடியாமல் லீவுபோட்டுவிட்டுப் போய்விட்டார்.

ஒருநாள் மதியம் சாப்பாட்டு வேளையில் ஒரு நபரை, கையைப்பிடித்து இழுத்து (கூட்டி) வந்தார் சிரஸ்ததார். எங்கள் ஹெட்கிளார்க்கை விளித்து ‘’இந்தப் பையனை அந்த சீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் போஸ்ட்டிங் போடுகிறேன்’’ என்று சொல்லி அந்தகாலத்தில் மகனை ஆசிரியரிடம் இழுத்துவந்து ஒப்படைக்கும் தகப்பன் போன்று ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டார்.  வந்த பையனோ ஆடு திருடிய கள்ளன் போன்று பேந்தப்பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.  எங்கள் ஹெட்கிளார்க்கோ புன்னகை மாறாமல் கழுத்தில் கத்தி இறக்குபவர்.  கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருந்தார்.  இரண்டு நாள் கழித்து அந்தப் பையனுக்கு அந்த சீட்டில் போஸ்ட்டிங் உத்திரவு வந்தது.

அப்புறம் சக குமாஸ்த்தாவாகி, அடுத்து அனுபவங்கள் பகிரப்பட்டு, கடைசியில் நண்பராகி அடுத்து ஆப்த நண்னாகிவிட்டான் அந்த அந்நாளைய பையன். அவன்தான் என் தற்போதைய ஆப்த நண்பன் திரு ரகமத்துல்லா. இருவரும் பிற்பாடு அடித்த லுட்டிகள். பட்ட துன்பங்கள், எங்கள் சிந்தனைகள், எங்களின் செயல்பாடுகள் எல்லாம் ஒன்றுபோலவே இருக்கும்.

அப்போதே ஆரம்பித்துவிட்டது எங்களின் இரவுப்பணி. விடியவிடிய வேலை பார்ப்பது; காலை ஆறுமணிக்குச் சென்று காலைக்கடன் முடித்துவிட்டு எல்லாரும் அலுவலகத்திற்கு வரும் முன்னர் வந்துவிடுவது என்று பழகிவிட்டோம்.

இரவு நேரத்தில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருப்போம். அமைதியான அந்த நேரத்தில் பன்னிரண்டு மணியளவில் திடீரென்று ஒரு மிரட்டல் குரல் “யாரது என்ன செய்கிறீர்கள்” என்று உறுமலுடன் வரும். நிமிர்ந்து பார்த்தால் யாரும் இருக்கமாட்டார்கள். அடைத்த கதவுகள் அடைத்தபடி இருக்கும்.  பயத்துடன் பார்த்தால் ஒரு ஜன்னலை லேசாகத் திறந்துகொண்டு தம் முகத்தைமட்டும் காட்டிக்கொண்டு சிரஸ்ததார் நிற்பார்.  அவருக்குத் தொரியாதா வேலை பார்க்கிறோம் என்பது.  இருந்தாலும் ஒரு மிரட்டல் கேள்வி. ஒரு பயந்த பதில்.  அவர்பாட்டுக்குப் போய்விடுவார்.  எங்கள் அதிர்ச்சி கொஞ்சநேரம் நீடிக்கும்.

பக்கத்தில் உள்ள சங்கக் கட்டிடத்தில் சீட்டு விளையாடிவிட்டு வீட்டுக்குப் போகும்போது அப்படியே எட்டிப்பார்த்துவிட்டு எங்களை மிரட்டிவிட்டுப் போவது அவருக்கு வேடிக்கை.   செத்து செத்துப் பிழைப்பது எங்களுக்கு வாடிக்கை.

இப்படியாகத்தானே பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கையில் எங்களின் ஹெட்கிளார்க்கு தாசில்தாராகப் பதவி உயர்வில் போய்விட்டார்.  ஆகா எங்களின் சந்தோஷம் இருக்கிறதே. ஏதோ எங்களுக்கே பிரமோஷன் வந்ததுபோல் கொண்டாட்டம். பின் என்ன! மாமியார் கொடுமையிலிருந்து விடுபட்டு தனிக்குடித்தனம் போன மருமகள் நிலையிலல்லவா நாங்கள் இருந்தோம்!

அவருக்கு பார்ட்டி கொடுத்தோம் ஒரு ஓட்டலுக்கு அழைத்துச்சென்று.  இரண்டு ஸ்வீட், நெய் ரோஸ்ட் என்று ஆர்டர். நெய் ரோஸ்ட்டில் நெய் இல்லை என்று ஓட்டல்காரரிடம் தகறாறு வேறு.  இப்படியாக எங்களின் சந்தோஷத்தைக் கொண்டாடி அனுப்பி வைத்தோம்.

ஒருவாரம் ஆகவில்லை. ஒருநாள் காலை அதே இடத்தில்வந்து உட்கார்ந்திருந்தார் அந்த பாசக்கார ஹெட்கிளார்க்.  ஆபீசுக்குள் நுழைந்தவுடன் எங்களுக்கு அதிர்ச்சி.  அப்புறம்தான் தெரிந்தது. அவர் ஒருவாரம் மட்டும்தான் தாசில்தார் புரமோஷனில் சென்ற விஷயம்.  டபுள் ஸ்வீட் வீணானதுதான் கண்ட பலன்.  மீண்டும் செக்கில் சிக்கி சின்னா பின்னமானோம்.

நாமாவது வேறு இடத்திற்கு போகலாம் என்றால் ஹிட்லர் சிரஸ்த்ததாரிடம் செல்லுபடியாகாது.  இப்படியே ஓரிரு மாதம் போனது. ஒருநாள் சிரஸ்த்ததார் லீவில் போய்விட்டார். அதனைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர் ஆர்.ஐ. பணியிடம் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.  ஒருவர் கள்ளக்குறிச்சிக்கு ஓடிவிட்டார்.

இதற்கிடையில் சிரஸ்ததார் லீவுமுடிந்து மீண்டும் வருகிறார் என்று சேதி வந்தது.  என் நண்பன் ரஹமத்துல்லா நைசாக சிதம்பரத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடிவிட்டான். நால்வரில் மிஞ்சியது நான் மட்டுமே. “அடிப்பியா உங்கப்பன் மவனே சிங்கண்டா” என்று வீராப்புடன் இருந்து பார்த்தேன். எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை.  ஹெட்கிளார்க்கின் எல்லா கொடுமைக்கும் நான்தான் பலியானேன்.

கடைசியில் என் நண்பனை அழைத்துக்கொண்டு எங்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கும் வேலையைக் கவனிக்கும் கிளார்க்கிடம் போய் கேட்டேன்.  அவரோ இரண்டு மூன்று தினங்கள் முன்பே சொல்லியிருந்தால் செய்திருக்கலாம். சிரஸ்ததார் மீண்டும் வரும் நிலையில் ‘அவரன்றி ஓரணுவும் அசையாது’ என்று சொல்லிவிட்டார்.  வேறு வழியின்றி என்னையே நான் நொந்துகொண்டு அலுவலகம் வந்துகொண்டிருந்தேன்.

ஒருநாள் அலுவலகத்திற்கு சோத்து மூட்டையுடன் புறப்பட்ட நான் அப்படியே சைக்கிளில் கேப்பர் மலைப் பக்கம் போய்விட்டேன். நான்பாட்டுக்கு சைக்கிள் மிதித்துக்கொண்டே எங்கே போகிறோம் என்ற இலக்கு இல்லாமல் போய்க்கொண்டே இருந்தேன்.  ஓரிடத்தில் மலைமேல் வெகு ஆழத்திற்கு போர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  பள்ளிக்கூடம் போகிற வழியில் எதையாவது வித்தியாசமாகப் பார்த்தால் நின்று பார்க்கின்ற எலிமெண்டரி ஸ்கூல் மாணவன் மாதிரி அங்கே நின்று வேடிக்கை பார்த்தேன். அங்கேயே சாப்பிட்டேன். மாலையானதும். அவர்கள் வேலை முடித்தார்கள். நானும் என் வேடிக்கையை முடித்துக்கொண்டு கிளம்பினேன். லீவு லெட்டராவது ஒண்ணாவது. அந்த சிந்தனையெல்லாம். மறுநாள் ஆபீசுக்கு கிளம்பும் நேரம் வந்தபோதுதான் ஏற்பட்டது.  மீண்டும் மனதில் வெறுப்பு.  நேராக சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கொண்டு கல்யாணப்பரிசு தங்கவேலு பாணியில் நேராக ஆர்ட்டிஸ்ட் நண்பர் ஒருவரின் கடையில் போய் உட்கார்ந்துவிட்டேன். இப்படியாக, பத்துநாள் கடந்துவிட்டது.

பாசக்கார ஹெட்கிளார்க்கு வீட்டுக்கு ஆள் அனுப்பிவிட்டார்.  அப்போதுதான் தெரிந்தது நான் ஆபீசுக்குப் போகாதது.  அப்புறம் என்ன வசவுதான். இருந்தாலும் மாறுதல் கேட்டுப் பெற்றுவிடலாம் என்று முயற்சித்தேன்.  ஹெட்கிளார்க்கோ எனக்கு வேறு இடம் கிடைக்காதபடி பார்த்துக்கெண்டார். நானோ அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்று வீட்டிலேயே இருந்துவிட்டேன்.  ஐந்து மாதங்கள் அல்லவா தாக்குத் தகவல் இல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறேன்.  வேலை போனாலும் பரவாயில்லை. அங்கு போவதில்லை என்று வைராக்கியம்.

அப்புறம் யார்யாரோ சிபாரிசுசெய்து பெரியமனது வைத்து சிதம்பரம் மாறுதல் வாங்கித் தந்தனரோ பிழைத்தேனோ.   இங்கே வந்தால் அங்கே இருந்த எங்கள் செட்டு இங்கேயும் வந்துள்ளது.  அப்புறம் என்ன டிப்டாப் சுருதியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் அடையாளம் மாறி வாலைச் சுருட்டிக்கொண்டு ‘எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோமே’ என்று நினைத்துக்கொண்டே வேலைபார்த்தேன்.  சிதம்பரம் வந்தபின்னர் நடந்ததெல்லாம் வேறு கதை. அது அப்புறம்.