16
மாமியாரா? சித்தியா? ஹெட்கிளார்க்கா? கொடுமையில் சிறந்தவர் எவர்?
சித்தியின் கொடுமையை அனுபவிக்கும் பேறு சிலருக்குக் கிடைத்திடும். தாயை இழந்து தகப்பனின் பாசமில்லாத நிலையில் ஒரு சித்தி என்கிற சின்னம்மா வந்து சேர்ந்தால் அந்த சிறுவனின் வாழ்வில் கொடுமை எட்டிப்பார்த்து ஏளனம் செய்யும்.
மாமியாரின் கொடுமையினை அனுபவிக்கும் பேறு பலருக்குக் கிடைக்கும். திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு வந்துவிட்டால் குறிப்பிட்ட பர்செண்டேஜ் பெண்களுக்கு சர்வ சகஜமாக சாதி, மத, இன, மொழி வேறுபாடு இன்றி கிடைக்கக் கூடிய அனுபவம்தான் இது. அதென்ன பெண்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பேரா என்ன. சில சமயம் சில ஆண்களுக்கும் கிடைக்கும். இதற்கு மாமியார் வீட்டு மருமகனாக செல்லும் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டு மட்டும் வாழ்வில் ஒருவருக்குக் கிடைக்க சாத்தியமான வழிகள்.
ஆனால் நான் சொல்லப் புகும் கொடுமை இருக்கே அது யாருக்கும் அவ்வளவு சுலபத்தில் கிடைக்கக்கூடியது அல்ல. அதற்கு முக்கியமாக சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி அரசு அலுவலகத்தில் சேரவேண்டும். அங்கேயும் ஒரு நல்ல ஹெட்கிளார்க்கு நமக்கு அமைய வேண்டும். அவர் சிந்தனைகளில் உருவாகி அவரிடம் வேலை பார்க்கும் பேரு கிடைத்தவர்களுக்கு மட்டுமே சித்திக்கும். அதனை அனுபவிப்பவர்கள் வேறு எந்த இடத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் மிகநல்ல பேரோடும் புகழோடும் வாழ்வாங்கு வாழ்வர் என்பது திண்ணம். ஹெட்கிளார்க்கு கொடுமை கிடைக்க பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும்.
நான் வேலைக்கு சேர்ந்த ‘அப்ரசண்டி பீரியடில்’ (அதாங்க புரபேஷன் பீரியட்) எனக்கு வாய்த்தவர்தான் நான் சொல்லும் கதை நாயகன். நல்ல மணலில் பிடுங்கிய வள்ளிக் கிழங்குபோல் மொழுமொழுவென்று இருப்பார். எப்போதும் சிரித்த முகம். யாரிடமும் கோபப்பட்டதாக வரலாறு கிடையாது. என்னை அங்கு போஸ்ட்டிங் போடுவதற்கு இரண்டு தினங்கள் முன்புதான் இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அவரை அந்தப் பிரிவுக்கு ஹெட்கிளார்க்காக அமர்த்தியிருந்தார் கலெக்டர்.
அந்தப் பிரிவில் போய் சேர்ந்தேன். அடுத்து என் நண்பனும் வந்து சேர்ந்தான். தவறு! ‘வந்து சேர்ந்ததால் நண்பனானான்’ என்பதுதான்சரி. ஆரம்பத்தில் எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.
தினமும் எழுதி வைக்கும் பைல்களில் ஒன்றிரண்டு மட்டும் திரும்பி வராது. கோப்பு வரவில்லை என்றால் காரணம் ஹெட்கிளார்க்குக்குத்தான் தெரியும். அவரிடம் தான் நாம் முறையிடவேண்டும். இருந்தாலும் நம் மீதே சந்தேகம் இருப்பதால் உண்மையில் வந்ததா இல்லை நாம் அனுப்பவில்லையா என்றெல்லாம் இரண்டொருநாள் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திவிட்டு, மெதுவாக அப்படி இப்படி ஆராய்ச்சி செய்துவிட்டு கடைசியில் மெதுவாக கேட்டால் சட்டென்று பதில்வரும். “ஆமாம் அது என்னிடம்தான் உள்ளது. பார்த்து அனுப்புகிறேன்” என்று. அப்பத்தான் நமக்கு நிம்மதி.
வீட்டிலே வேண்டாத தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் ஒரு மூலை அறையில் போட்டு வைத்திருப்பார்கள். அதுபோல்தான் அந்த ‘எம்’ பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைப் பொருத்தமட்டும். உதிரி துக்கடா சப்ஜெக்டெல்லாம் அதில்தான் வந்து சேரும். ஆனாலும் முக்கியமான கோப்புகள் சேர்ந்ததுதான் அந்தப் பிரிவு. மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்தான் அதில் உள்ள கோப்புகளைக் கவனிக்கமுடியும். திடீர் திடீரென்று சில கோப்புகள் ஜாடிக்குள் அடைபட்ட பூதம் வெளிவருவதுபோல் விஸ்வரூபம் எடுக்கும். என்மாதிரி கத்துக்குட்டியையெல்லாம் அதில் போட்டார்கள் என்றால் மற்றவர் யாரும் அதற்கு வர விரும்பமாட்டார்கள். போஸ்ட்டிங் கேட்கும்போதே தரவேண்டியதைத் தந்து பெறவேண்டியதை பெற்றுவிடுவர். ஒரு ஸ்டேஜில் நான் அப்படியே விட்டுவிட்டு வடநாட்டிலிருந்து கொத்தடிமைகள் தப்பி ஓடிவருவதுபோல் ஓடிவிட, அடுத்து ஆறு மாதத்திற்கு மேலாக பிரிவு காலியாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படிப்பட்ட பிரிவில் நான் மட்டும் எப்படி குப்பை கொட்டினேன் என்றால் ஒரு அக்கவுண்டெண்ட் இருந்தார். நல்ல வேலைத் திறமை மிக்கவர். எந்தப் பேப்பரானாலும். கோப்பினைப் பார்த்தமாத்திரம் முடிவுசெய்து எழுதித்தள்ளிவிடுவர். அவரிடம்தான் போய் நிற்பேன்.
“தம்பி… நான் அட்டெண்ட் செய்து கொடுத்தால் உன் ஹெட்கிளார்க்குக்கு கோபம் வந்துவிடும். நீயும் வேலை கத்துக்கமாட்டே. சோ… எப்படி எழுதவேண்டும் என்று சொல்கிறேன். நீ எழுதி எடுத்துவா. நான் சரிபார்த்துத் தருகிறேன்” என்பார் அந்த அக்கவுண்டெண்ட். அப்படியே செய்வேன். அவர் சொன்னபடி செய்திருக்கிறேனா என்று படிக்கக்சொல்லி கேட்பார். திருத்தங்கள் செய்வர். அடுத்து அப்படியே ஹெட்கிளார்க்குக்கு அனுப்பிவிடுவேன். அப்படி எழுதி வைத்த பெரிய அறிக்கைகள் ஹெட்கிளார்க் என்ற அணைக்கட்டில் சிக்கி அங்கேயே தங்கி கோமா நிலைக்குச் சென்றுவிடும். மேலேயிருந்து கடுமையான நினைவூட்டு வந்தால்மட்டும் அதற்கு சுயநினைவூட்டப்பட்டு அதிகாரிக்குப் போகும்.
அப்படிப்பட்ட நிலையில் நான் பிரிவிலிருந்து ஓடிப்போனபோது இருபத்து மூன்று கோப்புகள், ஒரு வருடம் ஏழுமாதங்கள் ஹெட்கிளார்க் என்ற பெரிய ஆஸ்பத்திரியில் கோமாநிலையில் இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறமும்கூட நான் லீவில் இருந்த ஐந்து மாத காலமும் தூங்கியே காலம் கழிந்தது என்று பின்னர் தெரிந்தது. இப்படியே முன்னுரையே முழுவுரையாக போய்க்கொண்டிருந்தால் எப்படி என்று முணுமுணுப்பது கேட்கிறது.
எங்கள் பிரிவில் எப்போதும் ஆச்சரியம், அதிர்ச்சி, புன்னகைதான் ஓடும். மற்ற பிரிவுகளில் அவ்வளவு செளஜன்னியம் இருக்காது. பயபக்தியுடன் வேலை நடக்கும். சிலசமயம் சற்று சகஜமாகப் போய்க்கொண்டிருக்கும்.
எங்கள் பிரிவில் ஹெட்கிளார்க்கு “மிஸ்டர்” என்று குரல் கொடுத்தால்போதும். நாங்கள் மூன்றுபேர் ஓடிச்சென்று அவரைச் சூழ்ந்துகொள்வோம். அவர் ஜமீன்தார்போன்று மேசைமேல் ஒரு பலகையை வைத்துக்கொண்டு சாய்ந்தவாறு உட்கார்ந்திருப்பார். அவரைச்சுற்றி நாங்கள் நின்றுகொள்வோம். யாரைக் கூப்பிட்டாலும் இதுதான் நிலைமை. உடனே இலக்கிய ஆராய்ச்சி நடக்க ஆரம்பித்துவிடும். ஆம். நானும் என் நண்பனும் கிளார்க்கு வேலைக்கு ஆகாதவர்கள். நான் அந்நாளில் இந்து பேப்பரில் வெளியாகும் ஜி.கே.ரெட்டி என்பவரின் செய்தியை ரசித்துப் படிப்பேன். அதில் வரும் ஏதோ ஒரு வர்த்தையையோ அன்றி வரியையோ அன்று உபயோகித்துவிடுவேன். சற்று நிரடலாக இருக்கும். எனக்கேகூட சமயத்தில் அர்த்தம் விளங்காது. இருந்தாலும் அதனை பயன்படுத்தவேண்டும் என்பதற்காகவே வளைத்து வளைத்து எழுதுவேன்.
என் நண்பனோ ஆங்கிலம் நன்கறிந்தவன். ஞானி. அந்த வயதில் அந்தப் படிப்பில் அவனது ஆங்கிலம் மிகத் தூய்மையாக மிக அழகாக இருக்கும். இருவரது எழுத்தில் ஒன்றின் பேரில்தான் விவாதம் நடக்கும். சும்மா சொல்லக்கூடாது எங்கள் ஹெட்கிளார்க்கு ஆங்கிலத்தில் செம டேலண்ட்டானவர். ரசனையும் மிக்கவர். அதனால் இலக்கிய ஆராய்ச்சி மிக சாதாரணமாக நடக்கும். எங்கள் எழுத்தை மனமாறப் பாராட்டுபவர். சமயத்தில், இப்படி எழுதியிருக்கலாம் என்று விவாதிப்பார். இதில் மயங்கிப்போய் மற்ற விபரீதம் ஏதும் எங்கள் புத்தியில் உறைக்கவில்லை.
தினசரி வைக்கும் கோப்புகளில் பாதியில் கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்பிவிடுவார். அதுவும் ஒரு மாதம் கட்டி வைத்திருந்துவிட்டு. அதில் உங்கள் பாதிப்பு என்ன என்கிறீர்களா. நாம் இன்று வைத்த கோப்பினை அவர் ஒரு மாதம் கழித்து இன்றைய தேதியில் கேள்விகேட்டு திருப்பித் தந்துவிடுவர். அதற்குப் பதிலை நாம் எழுதி வைத்தால் வைத்த தேதிதான் போடவேண்டும். ஆக அவர் கேட்ட கேள்விக்கு ஒருமாதம் கட்டிவைத்துவிட்டுத் தாமதமாகப் பதில்வைத்த குற்றம் நம்மைச் சேர்ந்துவிடும்.
அடுத்து அவர் கேட்கும் விபரங்கள் ஏற்கனவே அந்தக் கோப்பிலேயே இருக்கும். ஆனால் அவர் அதனை வைக்கும்படி ஒருமாதம் கழித்து பழைய தேதியில் கேள்வி எழுப்புவார். நாம் அதிலேயே இருப்பதை சொன்னவுடன் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு “அய்யா தற்போது வைத்துள்ளேன்” என்று எழுதி ஒப்புதல் செய்யச்சொல்வார். தாமதத்திற்கு நாம் பொறுப்பாகிவிடுவோம்.
சில சமயத்தில் அவர் மேசையில் மாதங்கள் கணக்கில் கட்டி வைக்கப்பட்டிருந்த கோப்பில் ஏதோ ஒன்றில் அவசரம் தொற்றிக் கொள்ளும். மனிதர் அந்தக் கோப்பினை எடுத்து வைத்துக்கொண்டு நம்மை அழைத்து பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு நாம் வைத்த தேதியில் அவர் படித்துப் பார்த்து கேள்வி கேட்டது போலவும், அடுத்து நாம் பதிலை பத்து நாள் தாமதமாக வைத்ததுபோலும் அடுத்து அவர் வேறு கேள்வி கேட்டதுபோலும், அதற்கும் நாம் தாமதமாக வைத்ததுபோலும் தயார்செய்து நம்மை சிக்க வைத்துவிடுவார்.
யாரேனும் கோப்பினைப் பார்த்தால் தாமதம் எல்லாம் நம் தலையில் சுமந்திருக்கும். நமது மூல எழுத்தைச் சுற்றிலும் மாலைபோட்டதுபோன்று கேள்வியும் அதன் கீழே அவரது டிக்டேஷனில் நாம் எழுதிய பதிலும் என்று ஒரு கிரிமினல் வழக்கில் நாம் சிக்கியிருப்போம். பழைய தேதியிட்டு நாம் கோப்பினைத் தயார்செய்தால் அது போர்ஜாரி இல்லையா. ஆக, அவரது அறிவுரையைப் பின்பற்றி நாம் குற்றம் புரிந்திருப்போம். ஆனால் அவர் அதில் ஏதும் சம்பந்தப் பட்டிருக்கமாட்டார். இது தெரியாமலே ‘அவர் சொல்வதையெல்லாம் செய்தோம் என்றால் யார்தான் ஒப்புக்கொள்வர். அந்நாளில் ஹெட்கிளார்க்கு சொன்னால் கலைக்டர்கூட அதைத்தான் கேட்பார். குமாஸ்த்தாவுக்கெல்லாம் தன் கட்சியைக்கூற எந்த யோக்கியதையும் கிடையாது.
இப்படியெல்லாம் அவ்வப்போது அவசரம் ஏற்பட்டு தில்லு முல்லுசெய்து அறிக்கை அனுப்பப்பட்ட கோப்புகள் போக அவசரம் பிடிக்காத நிலையில் அவரது மேசையில் கட்டிவைக்கப் பட்டிருந்தவைதான் முன்சொன்னபடி நான் பிரிவிலிருந்து ஓடிப்போனபோது ஒரு வருடம் ஏழுமாதங்கள் ஹெட்கிளார்க் என்ற பெரிய ஆஸ்பத்திரியில் கோமாநிலையில் இருந்த இருபத்து மூன்று கோப்புகளும்.
பதிவேடுகள் மாதம் இரண்டு முறை தணிக்கை செய்யப்படும்போது உரிய காலத்தில் அவர் தணிக்கை செய்யமாட்டார். அடுத்து, மாதம் ஒருமுறை பி.ஏ. தணிக்கைக்கு வைக்கவேண்டும். அதற்கு முன்னதாக அவரிடம்போய் பிரிவு சரியில்லையென்றும் சரி செய்து பின்னர் தணிக்கை செய்யலாம் என்றும் சொல்லிவிடுவார். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பவேண்டும். அப்போதுதான் சூடுபிடிக்கும்.
நம்மை அருகில் அழைத்து உட்காரவைத்துக்கொண்டு ஒவ்வொரு கோப்பிற்கும் உரிய பக்கங்களில் அந்தந்த கோப்புகளிலும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோலும், பதில் வந்ததுபோலும் பதிவுகளை அவர் சொல்லச்சொல்ல நம் கையால் பதிவு செய்யப்பட்டுவிடும். ஆக ஒரு போர்ஜரி ரிக்கார்டு தயார் செய்யப்பட்டு அதிகாரிக்கு அனுப்பப்பட்டுவிடும். அதோடு சரி மீண்டும் மூன்று மாதத்திற்கு கவலை கிடையாது கோப்பு ஏதும் நகராது.
இதன் விளைவுகள் நம்மைப் பாதிக்கும் என்பதையோ அதன்காரணமாக நம் உத்தியோகம்கூட பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதையோ உணராமல் ஒரு ஆண்டுக்குமேல் ஓடிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சக கிளார்க்குகளிடம் புலம்பியதில் சீனியர்கள் அறிவுரைகள் சொல்லச் சொல்லத்தான் புத்தியில் உறைத்தது. ஆனால் நிலைமை கைமீறிய நிலையில் பனிஷ்மெண்ட் அது இது என்று செல்லமாக மிரட்டி வைக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் திரைப்பட வில்லன்கள் போன்று எதுவுமே அவர் நடவடிக்கைகளில் தெரியாது. அப்பாவியாய் ‘சிரித்துச் சிரித்தே எங்களை சிறையில் இட்டுவிட்டார்’. புதைசேற்றில் சிக்கிக்கொண்டு மீள முடியாத நிலையில்தான் சிரஸ்ததார் தலைப்பில் சொன்னபடி ஆளாளுக்கு போய்விட்டனர். நான் பைத்தியக்காரன் ரேஞ்சில் சீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டேன்.
காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பது சரிதான். ஆறுமாங்கள் கழித்து நாங்கள் செய்த குற்றங்கள் என்று மேலேசொன்ன எல்லாவற்றையும் பட்டியல் போட்டு மெமோ கொடுத்துவிட்டனர். அப்போது எமர்ஜ்ன்சி வேறு. எல்லாரும் எங்களைப் பயமுறுத்த ஆரம்பித்துவிட்டனர். கடைசியில் ஒரு சீனியர் குமாஸ்த்தாவிடம் போய் மெமோவிற்கு பதில் எழுதுவதற்காக ஆலோசனை கேட்டோம். அவரோ ரிக்கார்டுபடி நீங்கள்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் இதில் முறண்டு பிடித்தால் இப்போதிருக்கும் கெடுபிடியில் நீங்கள் பலியாகிவிடுவீர்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் தண்டனை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று அறிவுரை சொன்னார்.
என்ன நடந்தது என்று எழுதி என்னுடன் வேலைபார்த்த மற்ற பிரிவு குமாஸ்தாக்கள் ஹெட்கிளார்க்குகள் ஆகியவர்களை சாட்சிக்கு அழைத்திருந்தால் எல்லாம் திசைமாறிப்போய் வில்லன்மேல் நாகாஸ்த்திரம் திரும்பியிருக்கும். என்ன செய்ய. எல்லாம் எங்கள் போதாதகாலம்.
மேலும் அப்போதைய நிலையில் நானும் என் நண்பனும் புகைப்படக் கலையிலும், ஆர்ட் ஒர்க்கிலும் மிக ஈடுபாட்டுடன் இருந்ததால் எப்போதும் திட்டம் போட்டுக்கொண்டே இருப்போம். “டேய் இன்னும் ஆறு மாதம் மட்டும் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடுவோம். அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு ஸ்டூடியோ வைத்துவிடுவோம்” என்று அடிக்கடி பேசிக்கொள்வோம். திருநாளைப் போவார் கதைதான். வருடம், மாதம், தேதி நிர்ணயம் செய்யாததால் நாளை நாளை என்று எங்கள் காலம் முப்பது ஆண்டுக்கு மேல் ஓடிவிட்டது என்றால் என்ன சொல்ல. அதற்குள் நாடி தளர்ந்து அரசாங்க அடிமையாகப் போய்விட்டோம்.
இதில் எங்கம்மாவுக்கும் ஒரு பங்கு உண்டு. நான் சற்று முனைப்பாக இறங்க நினைக்கும்போதெல்லாம் “என் காலம் மட்டும் நீ வேலையை விட்டுவிடாதே” என்று கோரிக்கை வைத்து கடைசியில் நான் ரிட்டையர் ஆனதுதான் மிச்சம். கையிலிருந்த தொழிலும் மங்கி தைரியமும் போன இடம் தெரியாமல் முடிந்துபோனது.
இதற்கிடையில் நாகாஸ்த்திரத்தை ஏவிவிட்ட மேற்படி ஹெட்கிளார்க்குக்கு அது நம்மேல் திரும்பிவிடவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்துவிட்டது. அதனால் சிதம்பரம் தாலுக்காவில் வேலைபார்த்த எங்களை உடனே வந்து பார்க்கும்படி பலமுறை அழைத்துப் பார்த்தார். நாங்களோ அந்த மூஞ்சிமட்டுமில்லை கட்டிடத்தையேகூட மிதிக்கமாட்டோம் என்று வெறுப்பில் இருந்துவிட்டோம். பனிஷ்மெண்ட் வந்துவிடும் என்றெல்லாம் பயமுறுத்திப் பார்த்தார். நாங்களோ “அடப் போப்பா வேலையையே துக்கி வீசப்போறோம். அதிலே பனிஷ்மெண்ட் எம்மாத்திரம்” என்று உதார் விட்டுக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டோம். போதாததற்கு நாங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுவேறு எழுதிக் கொடுத்துவிட்டதால் சவுகாரியமாகப் போய்விட்டது அவருக்கு
எங்கள் இன்கிரிமெண்டை ஒரு ஆண்டுக்கு தொடர்ச்சியாக நிறுத்திவைத்து உத்திரவு பிறப்பித்துவிட்டார்கள். நாங்கள் உத்தியோகத்தையே விடப்போகிறோம் என்ற மிதப்பில் அதனை பாராட்டுப் பத்திரம்போல் ஏற்றுக்கொண்டோம்.
நானோ “வேலையை விட்டுப் போய்விட்டபின் இந்த பனிஷ்மெண்ட் காகிதத்தை வைத்துக்கொண்டு நாக்கா வழிக்க முடியும்” என்று சவடால் பேசிக் கொண்டிருந்தேன்.
என் நண்பனோ ஒருபடி மேலே போய் அந்த பனிஷ்மெண்ட் விபரத்தை தன் பணிப்பதிவேட்டில் தன் கைப்பட அழகிய எழுத்தில் பதிவுசெய்வேன் என்று அடம் பிடித்தான். உண்மையில் அவனது கையெழுத்து மிக மிக அழகாக அச்செழுத்துக்கள் போன்று விதவிதமான ஃபாண்ட்களில் இருக்கும். அதனால்தானோ என்னவோ தலையெழுத்து சரியில்லாமல் இப்படி மாட்டிக்கொண்டானோ என்னவோ. சொலவடைகளிலும் பொருள் இருக்கத்தானே செய்கிறது.
உண்மையில் அதன் தாக்கத்தில் எங்கள் சர்வீஸ் பூராவும் ஒரு இன்கிரிமெண்ட்டின் பாதிப்பு தொடர் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அடுத்த வருடமே ஒரு சம்பளக் கமிஷன் ஏற்பட்டதில் அந்த இன்கிரிமெண்ட் நிறுத்தம் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. ஆக, ஒருவருட பலன் மட்டுமே நஷ்டம்.
அந்த ஹெட்கிளார்க்கு என்ற புதைகுழியில் சிக்கிக்கொண்டபோதிலும் அவ்வப்போது நடந்த பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் எங்களைத் துன்பங்களிலிருந்து வெகுதுரத்தில் நிறுத்திவைத்திருந்தன என்றால் சற்றும் மிகையாகாது. அப்படித்தான் ஒரு நிகழ்ச்சி.
அதற்கு முன்பாக ஒரு முன்னுரை – என் நண்பனின் அழகிய, விதவிதமான கையெழுத்துத் திறனும், என் புகைப்படத் திறனும் அலுவலகப் பிரசித்தம். சென்னையிலிருந்து இன்ஸ்பெக்ஷன் என்றால் பல பதிவேடுகளில் அலங்கார வேலைகள் அது இது என்று என் நண்பனிடம் கொண்டுவந்து எழுதி வாங்கிச் செல்வர். ஆர்ட் ஒர்க்கிற்கு நானும் ஆலோசனைகள் சொல்வேன். சமயத்தில் புகைப்படம் எடுத்துத்தரும் வேலை என் தலையில் விழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியில்கூட புகைப்படம் எடுத்திருக்கிறேன்.
இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம். எங்கள் பிரிவில் ஒரு நண்பர். அவர் ஒரு நாள் எங்களிடம் (எங்கள் என்றால் நானும் ரகமத்துல்லாவும்தான்) வந்து தமது நண்பருக்கு முப்பது வயது பிறந்தநாள் வருவதாகவும், அதற்கு தாம் ஒரு சிறப்பான பரிசு தரவேண்டும் என்றும் அதனைத் தயார் செய்து தரும்படியும் கோரிக்கை வைத்தார்.
எலிப்பொறியின் மசால்வடை எங்கள் மூக்கைத் துளைத்தது. ஆலோசனை ஆரம்பமானது. கேள்விகள் கேட்டோம். அவர் ஆணா பெண்ணா? என்ன பிரிவு? எவ்வளவு ரூபாய்க்கு செய்யப்போகிறீர்கள்? இப்படியாக பல விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
கடைசியில் முப்பது ரூபாய்க்கு அலங்கரிக்கப்பட்ட ரூபாயாகவே தரவிரும்புவதாகச் சொன்னார் நண்பர். நாங்கள் எப்படிப் பரிசளிப்பது அதை எப்படி தயார் செய்வது என்றெல்லாம் ஸ்கெட்ச் போட்டு கட்டடம் கட்ட ஆரம்பித்துவிட்டோம். முதலில் முப்பது ரூபாயை நண்பரிடமிருந்து வாங்கிக்கொண்டு நேராக அக்கவுண்டெண்டிடம் கொடுத்து அதற்குப் புத்தம்புது முப்பது ஒரு ரூபாய் தாள்களை வாங்கிவந்தோம்.
சன்பாண்ட் பேப்பர் வாங்கிவந்து அதே சைசுக்கு வெட்டி அதனை ஒவ்வொரு தாளுக்கும் இடையில் வைத்தோம். கார்டுபோர்டில் முன் பின் அட்டைகள் தயாரானது. அடுத்து பரிசு பெறப்போகிறவர் கிறிஸ்த்தவர் என்பதால் ஒவ்வொரு இடைத்தாளிலும் பைபிளிலிருந்து முப்பது பொன்மொழிகள் எடுத்து நண்பனிடம் தரப்பட்டது. அவன் அவற்றைத் தனது கைவண்ணத்தில் ஒவ்வொரு இடைத்தாளிலும் எழுதினான்.
நான் அவ்வப்போது கடைக்கு ஓடிச்சென்று பெவிக்கால், குளு, கோல்டு பெளடர், ஆர்ட்டிஸ்ட் பிரஷ், கலர் பாக்ஸ் என்று என் ஸ்டூடியோ நண்பரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டுவந்து குவிப்பதும். அவ்வப்போது டிரையல் செய்வதுமாக பத்துநாட்கள் மும்முரமாக வேலை நடந்தது. இதிலே பலமுறை திருத்தங்கள் மாற்றங்கள் எல்லாம் ஜரூராக நடந்தது. எங்கள் பிரிவில் ஏதோ நடக்கிறது என்பது மற்றவர்களுக்கு கசிந்துவிட்டதால் அவ்வப்போது வந்து விசாரிப்புகள் வேறு. எங்கள் சிரிப்பு வில்லன் வேறு பார்த்துவிட்டு பாராட்டினார். போதாதா எங்களுக்கு.
இப்படிப்பட்ட நிலையில் என் ஸ்டூடியோ நண்பர் என்ன ஏது என்று எங்களின் மும்முரத்திற்கு காரணம் கேட்கப்போக, விபரத்தைச் சொன்னேன். பரிசு தயார் செய்ய ஆர்டர் கொடுத்த நண்பரின் யோக்கியதை என் ஸ்டூடியோ நண்பருக்கு மிக நன்றாகத் தெரியும்.
தலைவன் தன் கள்ளக்காதலியும் வேறொருவரின் மனைவியுமான ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் பரிசு தருவதற்காக எங்களிடம் கொடுத்திருக்கிறான். அது தெரியாமல் நாங்கள் எங்கள் திறமையை பறைசாற்ற முயன்றுகொண்டிருந்தோம். உலகம் தெரியாத அப்பாவிகளான நாங்கள்தான் ஊகிக்கத் துப்பில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தோம்.
வேலையோ இன்னும் முடியவில்லை. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் மறுநாள் காலை வந்தவுடன் என் நண்பனிடம் விபரத்தைச் சொல்லாமல் “போதுண்டா இதற்குமேல் செய்யவேண்டாம் நிறுத்து” என்று தடுத்துப் பார்த்தேன். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுக்கு முட்டுக்கட்டை போட்டா நிறுத்தமுடியும். அதுபாட்டுக்குப் போய் நிலையத்தில்தான் நின்றது.
அதன்பின்னர் ஒரு மாதம் கழித்து ஒருநாள் அடிக்கடி நாங்கள் மனம்விட்டுப் பேசும் ஒரு இடம் – அதுதான் கெடிலம் பழைய பாலம் – அங்கே நின்று பேசிக் கொண்டிருக்கையில் பரிசுக்குரியவர் யார் என்ற விபரங்களைச் சொன்னேன். என் நண்பனுக்கோ அங்கேயிருந்து ஆற்றில் பிடித்துத் தள்ளலாம் என்று அவ்வளவு கோபம். ஒரு பெண் சம்பந்தப்பட்டது என்பதால் உண்மையாக இருந்தபோதும் நான் முன்னதாக அவனிடம் சொல்லவில்லை. இவ்வளவெல்லாம் செய்யும் அளவிற்கு நண்பனாகப் பழகிய அந்த அயோக்கியன் எங்களின் ஹெட்கிளார்க்கு கொடுமைக்கு அவ்வப்போது தூபம் போட்டுவந்தது எல்லாம் அதன்பிறகுதான் உணர்ந்தோம்.
பல ஆண்டுகள் வரை இந்த இழிசெயலில் நாங்கள் ஆட்பட்டதைப்பற்றி பேசி நொந்துகொண்டோம் என்பது இணைப்புச் செய்தி.