15
அதிகாரி செய்தால் எல்லாமே ஆச்சரியம்தான்.
இந்தத் தலைப்பில் எதை முன்னதாக சொல்வது எதை பின்னதாக சொல்வது என்று எடிட் செய்வது மிகவும் கஷ்டம் மேலும் நிறைய சொல்ல முடிந்தாலும் நீண்டுகொண்டே போகும் என்பதால் ஓருசிலவற்றை சொல்லாம் என்று தோன்றுகிறது.
மாவட்ட அளவிலான ஒரு அதிகாரி அவர் கீழே உள்ளவர்களிடம் நோகாமல் கொள்ளையடிப்பதில் வல்லவர். இருந்தாலும் மிக நல்லவராக தோற்றமளிப்பார். அதிகாரி எப்படிப்பட்டவராக இருந்தாலும், கீழே இருப்பவர்கள் அடிக்கும் ஜால்ரா இருக்கே அது கொஞ்சம் ஓவராகவே இருக்கும்.
ஒருநாள் தம் சொந்த ஊரிலிருந்து காரில் தலைமையிடத்திற்கு வந்து கொண்டிருந்தார். ஜில்லா எல்லையைத் தொட்டதும் அவர் பணி நிமித்தமாக வந்தவராக மாறிவிட்டார். நேராக ஆய்வுமாளிகைக்கு வந்து தங்கிவிட்டார். வட்டாட்சியர் குழாம் சென்று பரிச்சாரகம் செய்துகொண்டிருந்தது.
அவர் வந்திருப்பதோ காரில். புறப்பட்ட இடமோ சொந்தவீட்டிலிருந்து. இந்நிலையில் தாம் அழுக்குத் துணிகளை எடுத்து வந்திருப்பதாகவும் அவற்றை வைப்பதற்கு ஒரு பை வேண்டும் என்றும் கேட்டார். ஆர்.ஐ. ஓடிப்போய் நல்ல துணிப்பை வாங்கிவந்தார். அதிகாரிக்கு திருப்தியில்லை. முகபாவத்தைப் பார்த்தே புரிந்துகொண்டவர் ஓடிப்போய் சற்றுப் பெரியதாக இன்னும் கொஞ்சம் விலையில் வாங்கிவந்தார். அதிலும் திருப்தியில்லை. அளவு சின்னது என்றவர் திருப்பித் தரவில்லை. மீண்டும் ஓட்டம் இன்னும் பெரிய பை வந்தது. ஊகூம்… அதுவும் சரியில்லை. எங்கெங்கோ அலைந்து நான்காவதாக ஒரு பெரிய யானைப் பை வாங்கிவந்தார். அதனை அரை மனத்துடன் அங்கீகரித்துக்கொண்டு இந்த ஊரில் ஒரு நல்ல பைகூட கிடைக்காதா என்றவர் நான்கையும் கையிலேயே வைத்துக்கொண்டார். விடுவாரா நம்மவர். அதிகாரியின் திருப்திதானே முக்கியம்! ஒரு சூட்கேஸ் வாங்கிவிடவா என்று கேட்டார். என்ன நினைத்தாரோ அதிகாரி அதெல்லாம் வேண்டாம்யா நான் கடலூர் போய் வாங்கிக்கொள்கிறேன் என்றார். ஒரு அழுக்குத் துணி போட்டுவைக்க நான்கு பை. கேட்டது ஒன்று கிடைத்தது நான்கு!
ஒருநாள் அலுவலகத்தில் ஆய்வு செய்ய வந்திருந்தார். முன்னதாக மதிய சாப்பாட்டினை பங்களாவில் முடித்திருந்தார். ஊர்வனவற்றில் ரயிலும், பறப்பனவற்றில் ஆகாய விமானமும் நீந்துவனவற்றில் கப்பலும் தவிர அனைத்து வகைகளும் எப்பாடுபட்டாவது ஏற்பாடு செய்வது கீழ்நிலை அலுவர்களின் வேலை. அதிகாரியின் திருப்தியல்லவா முக்கியம்.
மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு வந்தார் அலுவலகத்திற்கு. உட்கார முடியாமல் மல்லாத்திக்கொண்டு அமர்ந்தார் நாற்காலியில். அவரது டபேதாரை அழைத்தார். மருந்துப் பெட்டகம் வந்தது. அதிலிருந்து ஒரு மாத்திரை எடுத்து தண்ணீர் டம்ளரில் போட்டார். நுரை பொங்கிவந்தது. சுற்றியிருந்த தாசில்தார் முதல் குமாஸ்த்தா வரை எல்லார் முகத்திலும் ஒரே ஆச்சாரியம். ‘இது என்னங்கய்யா’ என்றார் ஒருவர். ‘அட இதுகூட தெரியாத பட்டிக்காடுகளா’ என்ற பாவனையில் ஒரு பார்வை பார்த்துவிட்டு அதனை எடுத்துக் குடித்தார். அவரது கை அசைவுக்கு ஏற்ப தலையை ஆட்டி ஆட்டி, குடிக்கும் அழகைப் பார்த்து ரசித்தனர் சுற்றி இருந்தவர்கள்.
அது ஒன்றுமில்லை ‘ஈனோ’ என்று அடிக்கடி தொலைக்காட்சிகளில் விளம்பரம் வரும். செரிப்பதற்காக குடிப்பது சிலரது வழக்கம். ஓ.சி சாப்பாட்டை செரிக்கவைக்க குடித்துதானே ஆகவேண்டும். ஆனால் சுற்றி நின்ற ‘காக்கா கூட்டம்’ அது என்ன என்று பார்த்து அதன் பேர் என்ன என்று கேட்டு நாங்கள் குடிக்கலாமா என்று விசாரித்து அறிந்துகொண்டது. கொஞ்சம் ஓவர் இல்லை. ரொம்ப ரொம்ப ஓவர். அதைவிட, தாசில்தார் அதன் பெயரை ஒரு அலுவலக உதவியாளாரிடம் வேகவேகமாக சீட்டில் எழுதிக்கொடுத்து சில மாத்திரைகள் வாங்கிவரும்படி சொன்னதுடன் அய்யாவுக்கும் சேர்த்துவாங்கிவரவா என்றார் பாருங்கள் அதுதான் ஓவரிலும் ஓவர். எதற்குத்தான் இப்படி நடிப்பார்களோ.
ஒரு அதிகாரிக்கு தமது ரிட்டையர்மெண்ட் தேதி நெருங்க நெருங்க பயம் வந்துவிட்டது. நல்லபடியாக ரிட்டையர் ஆகவேண்டுமே என்று கோயில் கோயிலாக அபிஷேகம், பூசை எல்லாம் செய்தார். முன்னதாக டூர் புரோகிராம் வந்துவிடும். அலுவலக தணிக்கை என்று போட்டு. ஆனால் நேராக கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவதுண்டு.
ஒரு முறை இல்லத்துப் பிள்ளையார் கோயிலில் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்ய உத்திரவாகிவிட்டது. தாசில்தார் அப்படி ஒரு கோயில் எங்கிருக்கிறது என்று எல்லாரையும் விசாரித்துப் பார்த்தார். எவருக்கும் தெரியவில்லை. அதிகாரியோ அங்கேதான் இருக்கிறது ரொம்ப சிறப்பானதாமே என்றார். பலரிடம் விசாரித்தும் இல்லத்துப் பிள்ளையாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் ஒருவர் பெரிய கோயிலில் உள்ள ஆழத்துப் பிள்ளையார்தான் இந்தப் பகுதியிலேயே சிறப்பானது அதற்குத்தான் பரிகாரமாக சிலர் பூசைகள் செய்வர் என்றார். தகவல் அதிகாரிக்குப் பறந்தது. ஆம் அதுதான் என்றார் அதிகாரி. அதிகாலையில் வந்திருந்து பூசைகள் முடிந்தது. பங்களாவில் வந்து தங்கியிருந்தார். அதிகாரி என்ன வேலையாக வந்தாலும் கீழ் நிலை அலுவலர்கள் சென்று சலாம் செய்வது வாடிக்கை. அதிகாரியும் அப்படியே அலுவல் பற்றி சில கேள்விகள் கேட்டுக்கொண்டு தமது நாட்குறிப்பில் அன்று தாம் கீழ்நிலை அலுவலர்கள் பணி ஆய்வு செய்ததாக போட்டுக் கொள்வது வழக்கம்.
அதிகாரிகுடும்பத்துடன் ரூமுக்குள் இருந்தார். நாங்கள் வெளியில் வெராண்டாவில் நின்றுகொண்டிருந்தோம். அதிகாரிஅழைத்தார்.நாங்கள் சங்கோஜத்துடன் உள்ளே போனால் அதிகாரிஒரு சேரில் உட்கார்ந்திருக்க குடும்பத்தினர்கோணல்மாணலாக கட்டிலில் கிடக்க எங்களுக்குத்தான் வெட்கமாக இருந்தது. போதாதற்கு ஒரு டீப்பாயில் ஒரு இலை நிறைய சார்க்கரைப் பொங்கல் வைத்திருந்தது. அதிகாரிகொஞ்சம்கொஞ்சமாக எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டே எங்களை வரவேற்றார்.
எங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நாங்கள் எப்படி அதிகாரியின் இலையில் கைவைத்து எடுப்பது. இருந்தும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவே ரொம்பவும் மாரியாதையாகவும் நாசூக்காகவும் ஒரு ஓரத்திலிருந்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டோம். அத்துடன் தரிசனம் நன்றாக நடந்ததா என்று கேள்வி வேறு. புறப்படும்போது தாசில்தாரை அழைத்து ஒரு நுறு ரூபாய் நோட்டை நீட்டினார். “கடவுள் காரியங்களுக்கு நாம்தான் செலவு செய்யவேண்டும் இல்லையென்றால் அதற்கு பலன் கிடைக்காது” என்று வியாக்கியானம் வேறு. இரண்டாயிரத்திற்குமேல் செலவுசெய்த பூசையின் மதிப்பு அவருக்கு நுறுரூபாயாகத் தெரிந்தது. ஒருவேளை டாலராக கொடுத்துவிட்டாரோ என்னமோ. இதெல்லாம் அதிகாரிகளிடம் சாதாரணமப்பா.
நான் சிதம்பரம் துணைக்கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அதிகாரி வந்தார். வந்த நாள் முதல் ஒரே வசூல் வேட்டைதான். யாரையாவது அழைத்தால் அவர் ஏதோ இண்டெண்ட் வைக்கத்தான் அழைக்கிறார் என்று முடிவாகிவிடும். இப்படிப்பட்ட அதிகாரிகள்தான் பலருக்குத் தேவை. ஏனென்றால் அதிகாரிக்கு நுறுரூபாய்க்கு ஒரு காரியம் செய்து கொடுத்துவிட்டு வெளியே போய் ஆயிரம் ரூபாய் வசூல் செய்துவிடுவர். புகார் வந்தால் மீண்டும் அதிகாரி அழைப்பார். போகும் போதே தட்சினை வழங்கிவிடுவர். அப்புறம் புகாராவது ஒண்ணாவது.
அவர் பணியேற்றதும் கீழ்நிலை அலுவலர்கள் சங்கத் தலைவர்கள் எல்லாம் போய் பார்த்தனர். ஒரு சங்கத் தலைவர் போகும்போதே கொஞ்சம் வெயிட்டாக தரிசித்துவிட்டார். அப்புறம் அவர்தான் அவருக்கு வேண்டியவராகிவிட்டார்.
அவரது மருமகள் அடிக்கடி வந்து மாமனாரைப் பார்த்துவிட்டுப் போவார். அந்த நேரத்தில் யாராவது அய்யாவைப் பார்க்க வந்தால் மருமகள் உள்ளிருந்து சற்று எட்டிப்பார்த்துவிட்டுப் போவார். உடனே அதிகாரி, வந்தவரிடம் ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்பார். வந்தவர் தலையெழுத்தே என்று வாங்கித்தருவார். இப்படியாக ஒரு குடும்பத்திற்குத் தேவையான மிக்சி கிரைண்டர், கட்டில் மெத்தை உட்பட எல்லாம் வாங்கிவிட்டார் மருமகள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் பணியேற்க வரும்போது ஒரு சூட்கேசில் துணிமணிகளுடன் வந்து இறங்கினார். பால் காய்ச்சும் சம்பிரதாயம் புதிதாக எந்த அதிகாரி வந்தாலும் நடக்கும். அதற்காக புதிய ஸ்டவ், பாத்திரம், பால் எல்லாம் தாசில்தார் ஏற்பாடு செய்வார். ஒரு ஆண்டு கழித்து அவர் மாறுதலில் போகும்போது ஒரு லாரி நிறைய கட்டில் மெத்தை பீரோ உட்பட ஏற்றிப்போகும். அடுத்த அதிகாரி வந்தால் அவரும் இதேமாதிரிதான். எனக்குத் தெரிந்து ஓரிருவர் தவிர எல்லாரும் இப்படித்தான். வெட்கமில்லாமல் ரகசியமாக சம்பாதித்து வெளிப்படையாக ஏற்றிச்செல்வர்.
ஒருமுறை இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக ஒரு பயிற்சி வகுப்பு அதிகாரிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இண்டெண்ட் வைப்பதில் கைதோர்ந்த அதிகாரிக்கும் அழைப்பு வந்தது. உடனே குமாஸ்தாவை அழைத்தார். நாளை என்னுடன் வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். ஹெட்கிளார்கை அழைத்தார். நான் சென்னை செல்வதற்கு ஒரு சூட்கேஸ் வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அவர் முடியாது என்றதும் இதுவரை இண்டெண்ட் வைக்க முடியாமல் தப்பிச்செல்லும் என்னை கூப்பிட்டார். ஒரு சூட்கேஸ் ஏற்பாடு செய்யுங்கள் வந்ததும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். நானா மசிபவன் இவர் யோக்கியதை தெரியாதா. முடியாது என்று விட்டேன். ஒரு வழியாக ஒரு ஷோல்டர் பேக்கில் இரண்டு நாட்களுக்கு துணி எடுத்துக்கொண்டு கிளம்பினார். வழிச் செலவுக்கும் சுமை தூக்கவும் ஒரு குமாஸ்த்தா வேறு. பேக்கையும் குமாஸ்தாதான் தூக்கினார். செமினார் ஆரம்பித்தது. நடத்தியவர்கள் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனத்தினர். வந்தவர்கள் எல்லாருக்கும் ஒரு அலங்காரமான ஷோல்டர்பேக் கொடுத்தனர். குமாஸ்த்தாவுக்கும் கிடைத்தது. ரொம்ப சந்தோஷத்துடன், போர்ட்டர் வேலை பார்த்தது, டிக்கட் எடுத்தது, எல்லாம் மறந்துபோய் பையைத் தடவித்தடவி மகிழ்ந்துகொண்டிருந்தார் குமாஸ்த்தா. மதியம் இடைவேளையில் வெளியே வந்ததும். குமாஸ்த்தாவிடம் இருந்த பேக்கை பிடுங்கிக்கொண்டார் அதிகாரி. அத்துடன் அது வேறொரு அதிகாரிக்காக கொடுக்கப்பட்டதாக ஒரு கதைவேறு விட்டுள்ளார். மேலும் அதுவரை போர்ட்டர் உத்தியோகம் பார்த்த பையையும் வாங்கி எல்லாவற்றையும் ஒன்றாகத் திணித்து தாமே வைத்துக்கொண்டாராம். பார்த்தார் குமாஸ்தா. தமக்கு ஹைகோர்ட்டில் வேலை இருப்பதாகச் சொல்லி கழட்டிக்கொண்டுவிட்டார். பாவம் அதிகாரி வரும்போது தமது பாக்கெட்டிலிருந்து டிக்கெட் எடுக்கவேண்டியதாகிவிட்டது. மறுநாள் ஆபீசுக்கு வந்து ஒரே புலம்பல் “நட்டாற்றில் விட்ட இவனெல்லாம் ஒரு குமாஸ்தாவா?” என்று.
அந்த அதிகாரி ஆபிசிற்கு வருகிறார் என்றாலே எரிச்சலாக இருக்கும். பின் என்ன! எப்போது எப்படி சம்பாதிக்கலாம் என்றே சிந்தனையில் இருந்தால் என்ன செய்வது. விடுமுறை நாட்களில் குமாஸ்த்தாக்கள் வந்து தங்கள் பிரிவு வேலைகளை செய்வது வழக்கம். அந்த நேரத்தில் அதிகாரியின் ஜீப் சத்தம் கேட்டால் போதும் அவரவரும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு பின்வாசல் வழியாக ஓடிப்போய்விடுவர். ஏன்னா, அவர் அலுவலகத்தில் நுழைந்ததும் அப்படியே ஒரு ரவுண்டு வருவார். கண்ணில்பட்ட மேசை நாற்காலி ஸ்டூல் ரேக்கு என்று ஏதாவது ஒன்றை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விடுவார். சில சமயம் நம்மையே வண்டியில் ஏற்றிவிடச்சொல்வதும் உண்டு. அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருக்கவேண்டாம் என்று ஓடிப்போய்விடுவோம். எதற்கு வம்பு என்றுதான்
அந்த அதிகாரியின் மகள் லண்டனில் இருந்தார். இங்கு அலுவலகத்தில் எஸ்.டீ.டி வசதிகூட கிடையாது. பி.ஏ.விடம் கேட்டார். அதற்கெல்லாம் மாவட்ட ஆட்சியர் அனுமதி வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதிகாரி என்ற வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முக்கியப் பிரமுகர் வருகை தொடர்பாக வி.சியைப் போய்ப் பார்த்தார். அத்துடன் அங்குள்ளவர்களை சினேகம் செய்துகொண்டார். வி.சி. இல்லாத நேரம் தெரிந்துகொண்டு நேராக அங்கு ஆஜராகிவிடுவார். அங்குள்ள வாட்சுமேன், தோட்டக்காரர் ஆகியவர்களிடம் வி.சியைப் பார்க்கவேண்டும் என்பார். அவர் இல்லையென்று சொன்னதும். ‘வி.சி. இல்லையென்றால் நீதான் வி.சி’ என்று கட்டிப்பிடி வைத்தியம் செய்துவிடுவர்! அதுபோதாதா. அய்யாவுக்கு என்ன வேண்டும் என்று கனிவுடன் கேட்பார் அவர். இவரோ, ‘அவசரமாக கலெக்டருடன் பேசவேண்டும் வி.சி இருப்பார் என்று பார்த்தேன்’ என்று அங்கலாய்ப்பார். அவரும் அப்பாவியாய் அதற்கென்னய்யா நீங்க பேசுங்க என்று சொல்லிவிடுவார். அவ்வளவுதான் தொலைபேசியில் லண்டன் கிடைத்துவிடும். அரைமணிநேரமாவது பேசுவார். என்ன சமையல், உட்பட கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் முடித்துக்கொண்டு வந்துவிடுவார்.
பக்கத்து அலுவலகத்தில் எஸ்.டீ.டி. வசதி இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார். அங்குபோய் பேசவேண்டும் என்று பி.ஏ.வை தூதுவிட்டார். பி.ஏ.வுக்குதான் விபரம் தெரியுமே. அங்குபோய் “இப்படி நடக்கப்போகிறது. அதிகாரி வந்தால் ‘எஸ்.டீ.டி இல்லை’ என்று சொல்லிவிடுங்கள்” என்று சொல்லிப்பார்த்தார். அவர்களோ விஷயம் புரியாமல் அதிகாரிக்கு இல்லாததா என்று அனுமதி கொடுத்துவிட்டனர். போதாக்குறைக்கு அதிகாரிக்கு டீ பிஸ்கட் உபசரிப்பு வேறு. அவ்வளவுதான் மாவட்ட ஆட்சியருக்குப் பேசுவதாக சொல்லிவிட்டு லண்டன் பயணம் செய்துவிட்டார்.
அதுமுதல் அவ்வப்போது பக்கத்து ஆபீசையும் பதம் பார்த்துக்கொண்டிருந்தார். டெலிபோன் பில் பத்தாயிரத்துக்கு மேல் வந்துவிட்டது. அலறிப்போய் மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திவிட்டனர். புரியலையா! எஸ்.டீ.டியை கட்பண்ணிவிட்டனர். அவர்களும் டிரங்க்கால் போட்டு காத்திருந்து பேச வேண்டியதாகிவிட்டது.
இப்படியாக அந்த அதிகாரி வி.சி.பங்களாவிற்கு போய்வந்து எல்லாரையும் சினேகம் பிடித்து வைத்துக்கொண்டார். ஒவ்வொரு முறை அங்கு போகும்போதும் அங்கு தோட்டத்தில் ஒரு இரும்பு ஸ்டேண்ட் வைத்து அதில் பெரிய பித்தளை ஜாடி வைத்து அதில் பூஞ்செடிகள் வைத்திருப்பதைப் பார்த்துப்பார்த்து மோகம் உண்டாகிவிட்டது. எப்படி கிளப்புவது என்று பார்த்துக்கொண்டிருந்தார்.
கடலுர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. முதலமைச்சர் தலைமையில் விழா விழுப்புரத்தில் நடந்தது. அதிகாரிக்கு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. நேராக வி.சியைப் போய் பார்த்தார். விழுப்புரம் விழாவில் மேடை அலங்காரத்திற்காக பூஞ்செடிகள் தேவையென்றும், மாவட்ட ஆட்சியர் சொன்னதாகவும் ஆறு தொட்டிகள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதில் அங்கலாய்ப்பு வேறு ‘மாவட்ட ஆட்சியருக்கு எப்படி இங்கு தொட்டிகள் இருப்பது தெரியுமோ’ என்று
வி.சி.யிடம் அனுமதி கிடைத்துவிட்டது. உடனடியாக ஜீப்பில் ஏற்றினார் தொட்டிகளை நேராக விழுப்புரத்திற்கு விட்டார். தொட்டி என்ன மேடைக்கா போயிற்று. விழுப்புரத்தில் இருந்த தன் மகன் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிட்டார். சரி… திருப்பிக் கொடுக்க வேண்டாமா என்கிறீர்களா. விழா முடிந்து ஒருவாரம் வரையிலும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. ஒருநாள் வி.சி.யைப் போய்ப்பார்த்தார். மூஞ்சியை ரொம்ப சோகமாக வைத்துக்கொண்டு “தங்கள் முகத்தில் விழிப்பதற்கே வெட்கமாக இருக்கிறது. விழாமேடைக்கு கொண்டுபோன பூந்தொட்டிகளை யார்தான் எடுத்துச்சென்றார்களோ கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னால் தங்களுக்கு நஷ்டம்” என்று புலம்பினார். வி.சியைப் பொருத்தமட்டும் அது கடலில் கரைத்த பெருங்காயம் அல்லவா. அவர் இவரை சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார்.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதைத் தெரியாத வி.சி. என்று எண்ணுகிறேன்.
ஒரு அதிகாரி அவரது காலத்தில் எல்லா கிராம நிர்வாக அலுவலர்களையும் மாறுதல் செய்ய வேண்டிய நிலை. அவரவர்களும் தங்களுக்கு எந்த ஊர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பல கிராமங்களுக்கு போட்டி அதிகமாகிவிட்டது. விடுவாரா பேரம் பேச ஆரம்பித்துவிட்டார். இதற்குள் ஒருசிலர் எம்.எல்.ஏவிடம் போய் புகார் சொல்லிவிட்டனர்.
எம்.எல்.ஏ அதிகாரியைக்கூப்பிட்டு விசாரித்தார். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பாலையா இரவு தண்ணியடித்துவிட்டு ரகளை செய்திருப்பார். காலையில் சிவாஜிகணேசன் கவனத்திற்கு வந்ததும் அவரை அழைத்து கண்டிப்பார். அதற்கு பாலையா “அதுவா தம்பி ராத்திரி வயிறு சரியில்லை. வெளியே குளிர் வேறு. அப்படியே கடைப்பக்கம் போய் ஒரு ஜிஞ்சர் பீர் கேட்டேன். படுபாவிப்பய எதையோ குடுத்துட்டான். பித்த உடம்பாச்சா அப்படியே தூக்கிடுச்சு” என்று சமாதானம் சொல்வர். அதுபோல்தான் இதுவும். “அய்யா எனக்கு சர்வீஸ் கம்மி. ரிட்டையர் ஆகப் போறேன். வந்து போயி” என்று வழிந்தார். எம்.எல்.ஏ புகார் சொன்ன கிராம நிர்வாக அலுவலர்களிடம் அந்த ஆள் அழறான்யா ஏதோ கொஞ்சம் கொடுத்து காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார்.
அவ்வளவுதான் “எம்.எல்.ஏ சொல்லிட்டாகல்ல நீ இவ்வளவு கொடு” என்று கேட்டு வசூல் செய்துவிட்டார். யாரிடமும் வசூல் செய்யாமல் விடவில்லை.
இதற்கிடையில் இன்ன கிராமம் வேண்டும் என்று கேட்டு ஒருவர் வந்து முன்பணம் கொடுத்துவிடுவர். உடனே கிளார்க்கை கூப்பிட்டு இன்னாருக்கு இன்ன கிராமம் போஸ்ட்டிங் எழுதி வை என்று உத்திரவிட்டுவிடுவார். இதற்கிடையில் அந்த கிராமத்தில் உள்ளவருக்கு தகவல் போய்விடும். அவர் ஓடிவந்து அய்யா என்னை மாற்றாதீர்கள் என்று முறையீடு செய்வார். அவரிடம் உன்மேல் புகார் அதிகமா இருக்கு அதனால் உன்னை மாற்றப்போகிறேன் என்பார். அவரும் கவனித்துவிட்டால் முன்னவரை வரவழைப்பார் அவரிடம் “என்னையா நீபாட்டுக்கு போஸ்ட்டிங் போடும் முன்னரே தம்பட்டம் அடித்துவிட்டாயா ஒரே எதிர்ப்பா இருக்கு! அவர் சொன்னார் இவர் சொன்னார்” என்று சொல்வார். அவருக்கு அவரது யோக்கியதை தெரியாதா வேறு கிராமம் ஒன்றைக் கேட்பார். அதிலும் சில சமயம் இப்படி ஒரு டபிள் கேம் ஆடி அவரிடமும் வசூல் செய்துவிடுவார்.
இப்படியாக வசூல் செய்ததில் சாக்குமூட்டையில் கட்டும் அளவிற்கு பணம் சேர்ந்துவிட்டது. அதிகாரிக்கு பயம் வந்துவிட்டது. அந்தரங்கப் பியூனைக் கூப்பிட்டார். ‘இதில் உள்ள பணத்தையெல்லாம் நீ உன் வீட்டுக்குக் கொண்டுபோய் வைத்துக் கொள். உன்பேரில் யாருக்கும் சந்தேகம் வராது. நான் கேட்கும்போது கொண்டுவந்து கொடுத்தாலும் கொடு இல்லாவிட்டாலும் இல்லை’ என்று சொல்லி ஒப்படைத்து விட்டார். டிரைவரை கூப்பிட்டார். அவரிடம், ‘வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை ஓ.ஏ. கேட்டார் நானும் சும்மாதானே கிடக்கிறது என்று கொடுத்துவிட்டேன். அவரால் துக்கிச் செல்ல முடியலையாம் கொண்டுபோய் கொடுத்துவிடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவர் மாறுதல் ஆனபின் இந்த விபரம் எல்லாம் வெளியே வந்துவிட்டது.
ஒரு அதிகாரி வந்தார். அவர் தன் சம்பளத்திலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டார். பெரும்பாலான அதிகாரிகள் இப்படித்தான். அவரது மனைவி ஒரு மளிகை சாமான் பட்டியலை தயார் செய்து சிவில் சப்ளை தாசில்தாருக்கு அனுப்பி வைத்தார். இப்படி மாதம் இரண்டு முறையாவது வந்தால் யாரிடம் போய் நிற்பது. வெவ்வேறு கடைகளில் போய் மளிகை பிச்சை எடுத்து அனுப்பிவைப்பார். இப்படி அனுப்பும் பொருட்களில் சில சமயம் பெளடர் டப்பா வாங்கினால் அதற்கு சிறிய சோப்பு இலவசம் என்று இருப்பதுபோல் இலவசங்கள் போட்டிருக்கும். அது காசுகொடுத்து வாங்குபவர்களுக்குத்தானே பொருந்தும். ‘பிச்சை’போடும் கடைக்காரர் அதையுமா கொடுப்பார்.
அதிகாரி மனைவியோ ஒரு ஆள் அனுப்பி வாங்கிக்கொடுத்தவரிடம் இன்னின்ன பொருட்களுக்கு உரிய இலவசங்கள் வரவில்லை. அது என்னாச்சு என்று அதிகாரமாகக் கேட்பார். பாவம் வாங்கிக்கொடுத்தவரோ கடையில் வேறு ஒன்றை வாங்கி அனுப்பி வைப்பார். அதிகாரிக்கு மட்டும்தான் லஞ்சம் வாங்கும் உரிமை உள்ளதா. அதிகாரியைக் கட்டிக்கொண்டதால் அவருடைய மனைவிக்கும் அந்த அதிகாரம் வந்துவிடாதா என்ன. இப்போதெல்லாம் பெண் மக்கள் பிரதிநிதிகள் உள்ள இடத்தில் அவரது கணவர் அதிகாரம் செலுத்தும்போது இதுவும் சரிதானே.
இப்படியாக அடிக்கடி இண்டெண்ட் வைத்ததும் சக தாசில்தார்களிடம் புலம்பினார் சிவில் சப்ளை அதிகாரி. அதைக்கேட்ட அவரோ அட என்ன இது நானும் இதெல்லாம் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறேனே என்றார். ஆக, நான்கு அதிகாரிகளிடம் எல்லா வகை மளிகைப் பொருட்களும் மாதம் இருமுறை வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டார் அதிகாரிணி. மாறுதல் ஆகிச் சென்ற பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு காசுகொடுத்து வாங்கவேண்டியதில்லை அல்லவா.
அந்த அதிகாரியின் மகளுக்கு கல்யாணம் கூடிவந்தது. ஸ்பெஷல் இண்டெண்ட் போட்டு எல்லாவற்றையும் லாரிவைத்து அனுப்பிவிட்டார் ஊருக்கு. சர்க்கரை மூட்டைதான் கடைசியாக போக வேண்டியிருந்தது. அதையும் திருமணத்திற்கு லீவு எடுத்துக்கொண்டு போகும்போது கொண்டுபோக முடிவு செய்தார் அதிகாரி.
அதிகாரியானவர் ஊருக்கு பஸ்சில் போனால் மாரியாதையா இருக்குமா என்ன. தாசில்தார் டாக்சி ஏற்பாடு செய்துவிட்டார். அன்று மாலைவரை வசூல் வேட்டையெல்லாம் நடத்திவிட்டு இரவு புறப்பட்டார் அதிகாரி. வழித்துணைக்கு ஆபீஸ் வாட்சுமேனை முன்னறிவிப்பின்றி ஏற்றிக்கொண்டார். அதிகாரிகூட போகிறோம் அப்புறம் என்ன என்று வீட்டை விட்டு காதலனுடன் ஓடிப்போகும் அப்பாவிப் பெண்ணைப்போல் கட்டிய துணியுடன் கிளம்பிவிட்டார் வாட்சுமேனும். வண்டி நேராக மதுரை போனது. அங்கே ஏதோ சந்துபொந்தெல்லாம் சுற்றிவிட்டு ஒரு வீட்டில் போய் இறங்கிக்கொண்டார். டிரைவரும் வாட்சுமேனும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் பசி வேறு. இருந்தும் அதிகாரி வந்து சாப்பிட அழைப்பார் என்று காத்திருந்தனர்.
வெளியே வந்த அதிகாரி, இருவரும் சாப்பிட்டாச்சா என்றார். இன்னும் இல்லீங்கய்யா என்றார் வாட்சுமேன். இப்போதே நேரமாகிவிட்டது. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று புறப்பட்டுவிட்டார். ஒன்றும் செய்ய முடியாமல் கிளம்பிவிட்டனர். ஒரு டீகூட குடிக்க நாதியில்லாமல் பயணம் போயிற்று. கடைசியில் அதிகாலையில் நாகர்கோயில் அருகில் ஒரு ஊரில் போய்தான் வண்டி நின்றது. சர்க்கரை மூட்டையை டிரைவரும் வாட்சுமேனுமாக சேர்ந்து தூக்கிக் கொண்டுபோய் உள்ளே வைத்தனர். அப்போதாவது ஒரு காபி, டீ சாப்பிடுங்க என்று சொல்லவில்லை. சரி போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டார். என்னடா வாட்சுமேனை ஆபிசிலிருந்து கிளப்பிக்கொண்டு வந்திருக்கிறோமே அவனிடம் காசு இருக்கா இல்லையா என்றெல்லாம்கூட நினைக்கவில்லை அந்தப் புண்ணியவான். இருவரும் வெளியே வந்தனர்.
அதிகாரி வீட்டுச் சவாரி என்பதால் டிரைவர் மிதப்பாக வந்துவிட்டார். இனி ஜென்மத்திற்கும் அவர் அதிகாரி வீட்டுக்கு சவாரி வரமாட்டார். அல்லது தேவையான முன்னேற்பாட்டுடன் வருவார். டிரைவருக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துவிட்டார் அதிகாரி.
வாட்சுமேனுக்கு ஒரே நடுக்கம் என்ன செய்வது என்று புரியவில்லை. பசிவேறு. இன்னும் பன்னிரண்டு மணிநேரம் கழித்துதானே வீட்டுக்கு போகவேண்டும் என்று பதட்டம். பல ஊர் தண்ணிகுடித்த டிரைவர் ஆறுதல் சொன்னார். ‘கவலைப்படாதீங்கண்ணே நான் பார்த்துக்கறேன்’ என்று. நேராக ஒரு டீ கடையில் போய் டீ பன் சிகரெட்டு என்று சிரம பாரிகாரம் செய்துகொண்டனர். நேராக நாகர்கோயில் பஸ் நிறுத்தத்தில் வந்து திருநெல்வேலிக்கு டிக்கட் ஏற்றினார். திருநெல்வேலியில் சாப்பாட்டை முடித்துக்கொண்டனர். அப்படியே ஒவ்வொரு ஊராக பலித்தமட்டும் டிக்கட் ஏற்றிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தனர். வாட்சுமேன் இந்த உத்தியோகமே வேண்டாங்கய்யா என்று வெறுத்துப்போய் புலம்பித் தீர்த்துவிட்டார்.
அதுமட்டுமா, அதிகாரி தம்மகள் கல்யாணம் என்பதால் அலுவலகத்தில் எல்லாருக்கும் பத்திரிகை வைத்தார். மரியாதையாக இவர்கள் என்ன செய்திருக்கவேண்டும் பதிலுக்கு மொய்ப்பணத்தை வசூல் செய்து அதிகாரியிடம் கொடுத்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அதிகாரி வீட்டு கல்யாணத்திற்கு நாம் நேரில் போய் மரியாதை செய்ய வேண்டும் என்று வேன் வைத்துக்கொண்டு இருபது பேர் சென்றனர். காலையில் கல்யாண வீட்டுக்குப் போய் இறங்கினால் வா என்று கூப்பிட ஒரு பாவிகூட முன்வரவில்லை. எல்லாருக்கும் ஒரு காப்பி மட்டும் கிடைத்தது. அதிகாரி இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. கல்யாணம் முடிந்ததும் அதிகாரியிடம் விடைகேட்டனர். சம்பிரதாயத்திற்குக்கூட சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று அதிகாரி சொல்லவில்லை. இவர்களுக்கு ரோஷம் தாங்கவில்லை. ‘‘உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடிபெறும்’’ என்ற ஓளவையாரை மனதில் தியானித்து அவர் வழி நடந்துவிட்டனர். நேராக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கன்னியாகுமாரி போய் சுற்றிப்பார்த்துவிட்டு காந்தி மண்டபத்தில் மன அமைதியைத் தேடிக்கொண்டு வந்து சேர்ந்தனர். இப்படிகூட சில ஜென்மங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.
சில்லியான பலரைப் பார்த்திருப்போம். தாம் அமர்ந்திருக்கும் சீட்டுக்கு இழுக்கு தேடக்கூடாது என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் செயல்பட்ட அதிகாரிகள் நிறையபேர். இப்படித்தான் ஒரு அதிகாரி. காலை பதினோரு மணிக்கு திடும் பிரவேசமாக தாலுக்கா அலுவலகத்தில் நுழைவார். எந்த அதிகாரி ஆபீசிற்குள் வந்தாலும் குமாஸ்தாக்களிடையே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அவர் அதைக் கேட்பாரோ இதைக் கேட்பாரோ என்று. அதிலும் ஆர்.டீ.ஓ என்றால் எப்படி இருக்கும்.
வந்தவுடன் அட்டெண்டன்ஸ் கொண்டுவா என்பார். மேசைமேல் வைக்கப்படும். சிறிது நேரம் கழித்து துணை வட்டாட்சியரை அழைத்து கடிந்துகொள்வார். ஏதோ தப்பு கண்டுபிடித்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா.
“ஏன்யா நான் வந்து எவ்வளவு நேரம் ஆச்சு. ஒரு டீ பிஸ்கட்டுக்குகூட யோக்கியதை இல்லையா? என்னையா ஆபீஸ் நடக்குது?” என்று கத்துவார். துணை வட்டாட்சியர் உடனே பின்பக்கம் திரும்பி “எப்போ போன ஆள் இன்னுமா வரான். அய்யா எவ்வளவு நேரம் காத்திருக்காங்க. டபேதார்… அவனை எதுக்கு அனுப்பினீங்க அதற்கு நீங்களே போயிருக்கலாம்” என்று தன் பங்குக்கு கத்துவர். இதோ வந்துட்டுதுங்க அய்யா என்று ஒரு நாடகம் ஆடுவார்.
‘டீ’, ‘பச்சி’ (இது பஜ்ஜி என்பதற்கான அதிகாரியின் பாஷை)வந்ததும் சாந்தமாகி விடுவார். அவ்வளவுதான் இன்ஸ்பெக்ஷன் முடிந்தது. போய்க்கொண்டே இருப்பார் அதிகாரி.
சமயத்தில் பி.ஏ. போன் செய்வார். “ஆர்.டீ.ஓ. டீ கேக்கிறாங்க அனுப்புங்க” என்பார். உடனே ‘பிஸ்கட் பாக்கெட், டீ, பச்சி’ எல்லாம் வாங்கி அனுப்பி வைப்பார். போன் வரவில்லை என்றால் அன்று அதிகாரி ஆபீசுக்கு வரவில்லை என்று அர்த்தம்.
அந்த அதிகாரிக்கு ஒரு மகன் அவர் தன்போக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். தேர்தல் பணிக்கு செக்ஷன் ரைட்டர்கள் ஆள் எடுத்தார்கள். அதிகாரி தன் மகனையும் அனுப்பிவைத்துவிட்டார். அதிகாரி மகனை என்ன வேலை வாங்குவது. அவரும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார். இல்லையென்றால் இருப்பவர் வேலையைக் கெடுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார். செக்ஷன் ரைட்டர்கள் பலர் பெண்கள். அந்த பையனோ புகைப்படக்கலையில் ரொம்ப ஆர்வம் உள்ளவர். அவர்பாட்டுக்கு வேலை செய்பவர்கள் மத்தியில் சுய ப்ரதாபம் அடித்து வேலையை கெடுக்க ஆரம்பித்துவிட்டார். என்ன செய்வதென்று புரியவில்லை. ஒருநாள் ஆபீசிற்கு வந்தவரிடம் சற்று துணிச்சலாக பேசிவிட்டார் துணை வட்டாட்சியர். அப்படியாவது வேலைக்கு அனுப்பமாட்டார் என்று எண்ணம் அவருக்கு. அதிகாரி நேராக தேர்தல் பிரிவு ஸ்டோர் ரூமுக்கு வந்தார். அங்கு ஒரு மேசை நாற்காலி போடச்சொன்னார். அங்கு மகனை உட்கார வைத்தார். கதவைப் பூட்டி சாவியை தாசில்தாரிடம் கொடுத்து மாலைதான் திறந்து விடவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
தாசில்தார் என்ன செய்வார் பாவம். அவர் போனதும் கதவைத் திறந்துவிட்டுவிட்டார். பத்து நாள் வரை வேலை செய்ததில் பையனுக்கு அலுத்துவிட்டது. தந்தையிடம் சண்டை போட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார் தனையன்.
ஒரு அதிகாரி. வரும்போதே அவரது செயல்கள் முந்தைய அதிகாரிகளுக்கு கோயில் கட்டும் நிலையில் இருந்தது. யார் வந்தாலும். அவரிடம் ஒரு சிம் கார்டு வாங்கிவா என்பார். ரீசார்ஜ் கூப்பன் வாங்கிவா என்பார். குறைந்த தொகைக்கு வாங்கிவந்தால் என் பதவியைக் கேவலப்படுத்திவிட்டாயே என்று துக்கிவீசிவிடுவர். எங்கே, தன் வண்டிக்குள்ளேதான். உடனே வந்தவர் வேறொரு கூப்பன் வாங்கிவந்துவிடுவார். முன்னர் கொடுத்ததை கேட்கவா முடியும். அதிகாரிக்கு இரட்டை லாபம்.
அவர் சத்துணவு மையத்தைக்கூட விடமாட்டார். சத்துணவு பொருப்பாளரிடம் கணக்கைக் காட்டச்சொல்லி கேட்பார். பொருப்பாளர் கணக்கையும் சில்லரை செலவின கையிருப்பையும் பரிசீலனைக்கு காட்டுவார். அப்படியே தொகையைப் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுவர். கூடவே முட்டை வைத்திருந்தால் நாலைந்தை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். பாவம் அந்த பொருப்பாளர்.
நியாயவிலைக் கடைக்குப் போனால் சர்க்கரை, அரிசி, பாமாயில் என்று கொள்ளையடித்துக்கொண்டு வந்துவிடுவார். கூடப் போனவர்கள் தலையில் அடித்துக்கொள்வர். டாஸ்மாக் கடையில் மட்டும்தான் பாட்டில் வாங்கியதாக தகவல் இல்லை.
மாணவர் ஹாஸ்ட்டலுக்குத் தணிக்கைக்குப் போனால் தனக்கு வசூல் செய்வது போதாதென்று தன் பியூனுக்கு டிரைவருக்கு என்று கேட்டு வசூல் செய்து எடுத்துக்கொள்வார். கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதையாக நொந்துபோவர் பியூனும் டிரைவரும். ஆபீசில் அனுமதி கேட்டு வரும் கோப்புகளில் சம்பந்தப்பட்டவரை விசாரணைக்கு அழைத்து அவரிடம் நீங்கள் ஆபீசில் யாருக்கும் காசு கொடுக்க வேண்டாம் நானே கொடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கும் சேர்த்து லஞ்சம் வசூலித்து எடுத்துக்கொள்வார்.
சிம்கார்டு, செல்போன் முதல் ரேஷன் அரிசி உட்பட அவர் அடித்து சேர்த்த பொருட்களைக் கொண்டு ஒரு பல்பொருள் அங்காடி திறந்து பிழைத்துக் கொண்டிருக்கலாம். ‘கிரேஸி பாய்ஸ் இன் த சூப்பார் மார்க்கட்’ என்ற ஒரு திரைப்படம் இவர் கதைபோலத்தான் இருக்கும்.
போதாக்குறைக்கு தாம் மந்திரிக்கு சொந்தக்காரர் என்றும் மந்திரிக்கு அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்றும் பில்டப் கொடுத்துக்கொண்டிருந்தார். பலருக்கு அது தற்காப்பு ஆயுதம் என்று தெரியும். ஆனால் சிலரோ உண்மை என்று நம்பி பயந்துகொண்டிருந்தனர். அவ்வப்போது மந்திரி இவரை அழைத்து கண்டித்ததெல்லாம் ஒன்றுக்கும் உதவவில்லை.
ஆறு மாதத்தில் அவர் ஆடிய ஆட்டம் ஜெகப் பிரசித்தமாகிவிட்டது. ஒருநாள் லஞ்ச ஓழிப்புத்துறை வந்துவிட்டது. இரவோடு இரவாக தப்பி ஓடிவிட்டார் புண்ணியவான். அப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிக்கு அரசு நல்ல வருமானமுள்ள இடம் வழங்கி அழகு பார்த்தது. அங்கே போய் மீண்டும் தாண்டவம் ஆடியதில் எப்படியோ சிக்கிக்கொண்டு சஸ்பெண்ட் ஆனதாகக் கேள்வி.