17
அதிகாரிகளுடன் பனிப்போர்.
இந்த அதிகாரிகளுக்கும் கீழே இருப்பவர்களுக்கும் நடக்கும் பனிப்போர் இருக்கிறதே அது செம தமாஷாக இருக்கும். எப்போதென்றால் இருவரும் சம பலத்துடன் இருந்தால்! இல்லாவிடில் வலுத்தவர் மற்றவரை வீழ்த்திவிடுவார். அப்புறம் ஏது பனிப்போர்.
ஒரு அலுவலகம். அதிகாரி சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர். அவர் எந்த அலுவலகத்திற்கு மாற்றப்பட்டாலும் அதில் புகுந்து புறப்பட்டு கடைசியில் அந்த அலுவலகத்தால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம். அது தேவையில்லை மூடிவிடலாம் என்ற ரீதியில் செயல்பட்டு அறிக்கை அனுப்பிவிடுவார். அவரது நெருக்கடி தாங்காமல் அவரை வேறு அலுவலகத்திற்கு மாற்றிவிடுவர். அங்கேயும் இதே கதைதான்.
அவரை எந்த அலுவலகத்தில் போட்டாலும் தலைவலி என்று உணர்ந்து ஒரு அலுவலகத்தில் போட்டார்கள். அங்கு பொதுமக்கள் தொடர்பு ஏதும் கிடையாது. குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு நகர் அது. அங்கே இவரது ஜம்பம் ஏதும் சாயாது. ஆனால் நிறைய வேலை இருக்கும். அந்த அலுவலகத்திற்கு ஒரு குமாஸ்த்தாவை மாறுதல் செய்தனர். அவரோ வல்லாளகண்டன். இரண்டு கத்திகள் ஒரு உரையில் போய் உட்கார்ந்துகொண்டன. அதிகாரியால் அவரை மாற்ற முடியவில்லை. குமாஸ்தாவோ அதிகாரிக்கு சளைக்காமல் வாயடித்துக் கொண்டிருந்தார்.
கடைசியில் இருவருக்கும் பனிப்போர் துவங்கிவிட்டது. பேப்பர் யுத்தம் நடக்க ஆரம்பித்தது. அதிகாரிக்கு கோப்பில் எழுதிவைப்பார் குமாஸ்தா. அதிகாரி அதில் பேசவும் என்று ஒரு கருத்தை எழுதி அனுப்புவார். பொதுவாக ஒப்புதல் அளிக்க விரும்பாத அதிகாரிகள் தமது சந்தேகத்தை கோப்பில் பதிவுசெய்து விளக்கம் பெறமாட்டார்கள். மொட்டையாக பேசவும் என்று எழுதி அனுப்பிவிடுவர். குமாஸ்த்தாவோ அதிகாரி என்ன கேட்பாரோ என்று குழம்பிப்போய் நேரில் எடுத்துச்சென்று கேட்காமல் கட்டிவைத்துவிடுவார். அவசரம் வந்தாலன்றி அத்துடன் அக் கோப்பு உறங்க ஆரம்பித்துவிடும் ஏதாவது பிரச்சினை வந்தாலும். குமாஸ்த்தாதான் மாட்டிக்கொள்வார். அதிகாரி தப்பிவிடுவார்.
சில அதிகாரிகள் பேசவும் என்று போட்டால் தமக்கு இன்னும் ‘லஞ்சம்’ வந்து சேரவில்லை. ‘தாமதப்படுத்து’ என்று அர்த்தம்கூட உண்டு.
அதேபாணியில் அதிகாரி ‘பேசவும்’ என்று போட்டு அனுப்பிவிட்டார். அனுப்பிவிட்டார் என்றால் எங்கோ டில்லிக்கோ அன்றி இமயமலைக்கோ அல்ல. அதிகாரியின் சீட்டும், குமாஸ்தாவின் சீட்டும் ஒன்றை ஒன்று ஒட்டிதான் இருக்கும். அதிகாரி குமாஸ்தா பக்கம் முகத்தைமட்டும் திருப்பி கேட்டால் குமாஸ்த்தா பதில் சொல்லப்போகிறார். இவர்தான் அவரிடம் பேச விரும்பவில்லையே.
அதிகாரி தன் மேசையிலிருந்து எட்டி குமாஸ்த்தாவின் மேசையில் கோப்பினை வைப்பார். அவர் எடுத்துப் பார்த்துவிட்டு பேசவும் என்று எழுதியிருப்பதால் ‘பேசுவதற்காகக் கோப்பு வைக்கப்பட்டுள்ளது’ என்று எழுதி உடனே அதிகாரி மேசைமேல் வைத்துவிடுவார். அதிகாரிக்கு எரிச்சல்தான்வரும். ஓரிரு தினங்கள் பார்த்துவிட்டு மீண்டும் தம் கைவரிசையைக் காட்டும் வகையில் ‘ஏன் பேசவில்லை’ என்று கேட்டு பக்கத்து மேசைமேல் வைப்பார். குமாஸ்த்தாவோ உடனடியாக ‘எப்போது பேசவேண்டும்’ என்று குறிப்பிட்டு வைப்பார். இப்படியாக ஒருவர் மேசையிலிருந்து அடுத்தவர் மேசைக்கு கோப்பு பந்தாடப்படும்.
இப்படியே சுமார் ஒருமாதம் கடந்தது. எல்லாம் இப்படியே ஜாலியாக நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. அதிகாரிக்கு குமாஸ்த்தா முகத்தில் முழிக்க விருப்பமில்லை. எனவே, அதிகாரி உளுந்துர்பேட்டையில் தாம் தங்கியிருந்த லாட்ஜிலேயே இருந்துகொண்டார். தினசரி கோப்புகள் பியூன்மூலம் இங்கும் அங்குமாகப் போய்வந்து கொண்டிருந்தது.
கடைசியில் சம்பளம் போடப்பட்டது. ‘பே-பில்’கள் அதிகாரியின் அறைக்கு எடுத்து வரப்பட்டு ஒப்புதல் பெற்று கருவூலம் மூலமாக காசாக்கப்பட்டுவிட்டது. தற்போது அதிகாரியின் சம்பளப்பணம் குமாஸ்தா கையில். அவர்தான் பண வரவு செலவு, கையிருப்புகளுக்குப் பொறுப்பு.
அதிகாரிக்கோ குமாஸ்த்தாவிடமிருந்து தமது சம்பளப் பணத்தைப் பெற விருப்பமில்லை. அதனால் ஒரு ‘பே-ஸ்லிப்’ தயார் செய்து ஸ்டாம்பு ஒட்டி அதில் ஒப்பம் செய்து பியூன்மூலமாக அனுப்பி பணம் கேட்டார். எந்த ஒரு அலுவலராவது நேரில் வந்து சம்பளம் பெற இயலவில்லை என்றால் அவர் தமக்கு நம்பகமான ஒரு அலுவலரிடம் இப்படி ‘பே-ஸ்லிப்’ கொடுத்து விடுவார். அந்த நபரிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். இந்த நடைமுறை பவர் ஆப் அட்டார்னி மூலம் அதிகாரம் அளிப்பதற்கு ஒப்பானது.
அதுபோலவே நம் அதிகாரியும் ‘பே-ஸ்லிப்’ அனுப்பி வைக்க, குமாஸ்தாவோ அதனை ஏற்க மறுத்ததுடன் கீழ்நிலை அலுவலர்கள் ஏதாவது முக்கியக் காரணத்தினால் நேரில் வர இயலாத நிலை ஏற்பட்டால் அப்படிப்பட்ட நடைமுறையைப் பின்பற்றலாம். அதிகாரியோ அவரே பணம் பெற்று பட்டுவாடா செய்யக் கடமைப்பட்டவர். எனவே அதிகாரிக்கு பே-ஸ்லிப் மூலம் பணம் தர இயலாது என்று மறுத்துவிட்டார்
அடுத்து, அதிகாரி பியூன் மூலம் சம்பளப்பட்டியலையும், தொகையையும் கொடுத்து அனுப்பினால், தாம் ஒப்புதல் செய்து அனுப்புவதாகத் தெரிவித்தார். குமாஸ்த்தாவோ அதிகாரி ஒப்புதல் செய்து அவரிடம் ஒப்படைப்பது வரையிலும் அதற்குத் தாம்தான் பொறுப்பு என்றும் ஒருவேளை அதிகாரியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்துவிட்டாலோ, அன்றி தொலைத்துவிட்டாலோ அதனால் ஏற்படும் பின் விழைவுகளைத் தாம் ஏற்கமுடியாது என்று நிராகரித்துவிட்டார். அதற்குள் அவருக்கு சம்பளம் பட்டுவாடா செய்யுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சமாதானத்தூது அனுப்பப்பட்டது. குமாஸ்த்தாவோ அசையவில்லை. மாறாக அதிகாரியாகப்பட்டவர் தமது சூழ்நிலையைப் பற்றி தெரிவித்து தாம் நேரில் வர இயலாத நிலையில், இன்னாரிடம் தொகையை கொடுத்து அனுப்பினால் அது தமக்கு சேர்ந்ததாக கருதிக் கொள்வதாகவும். அத்தொகைக்கு வழியில் ஏதாவது ஆனால் அதற்குத் தாமே பொறுப்பு என்றும் ஒரு டிக்ளரேஷன் பத்திரம் எழுதிக்கொடுத்தால் பணத்தைக் கொடுப்பதாகத் தெரிவித்துவிட்டார்.
விடாக்கண்டனுக்கும் கொடாக்கண்டனுக்கும் இடையிலான இழுபரியினை முடித்துக்கொள்ள இயலாமல் அதிகாரி விடுப்பில் சென்றுவிட்டார். அதுவரையிலும் அவரிடம் வேலைபார்த்த குமாஸ்த்தாக்கள் கெடுபிடி தாங்காமல் ஓடிப்போவதுதான் வழக்கம். மாறாக அதிகாரி ஓடிப்போனார் இங்கே.
இன்னொரு நிகழ்ச்சி. ஒரு தனி அலுவலகம். அதில் ஒரு அதிகாரியும், ஒரு வருவாய் ஆய்வாளரும் வேலைபார்த்தனர். சில காலத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிகாரியானவர்வருவாய் ஆய்வாளரை ஒழித்துக் கட்டவேண்டும் என்று முடிவுசெய்து காத்திருந்தார். அதற்கு வாகாக சில கோப்புகள் அலுவலகத்தில் காணாமல் போய்விட்டது. வருவாய் ஆய்வாளர்தான் அவற்றிற்குப் பொறுப்பு என்று கடினமான குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்திவிட்டார்அதிகாரி.
வருவாய் ஆய்வாளர் சற்றும் அசரவில்லை. தமது பதிலில் எழுதினார் இப்படி. “அய்யா தாங்கள் அலுவலகத்திலேயே தங்கி சமையலும் செய்து வருகிறீர்கள். அப்போது தங்களின் கவனக் குறைவாக, தாங்கள் மேசைமேல் அடுப்பை வைத்து சமையல் செய்ததால் மேசை எரிந்துபோய்விட்டது. அப்போது சில கோப்புகளும் எரிந்து போய்விட்டது. அந்த மேசை இன்னும் தங்கள் அலுவலக மேசையாகப் பயன்பட்டு வருவது நன்கறிவீர்கள். அப்படி எரிந்த கோப்புகளில் தாங்கள் என்னைப் பொறுப்பாக்கி குற்றச்சாட்டு ஏற்படுத்தக் காரணமாக கோப்புகளும் சேர்ந்ததே. அதனால் நான் எந்த வகையிலும் அந்தக் கோப்புகளுக்குப் பொறுப்பல்ல. அவை எரிந்துபோனதற்கு நீங்களும் உங்களின் செயல்பாடுகளும்தான் காரணம். அதற்காக உங்கள் பேரில்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
பார்த்தார் அதிகாரி ‘இதென்னடா தேன்கூட்டைக் கலைத்த கதையாக இருக்கிறதே’ என்று அப்படியே விட்டுவிட்டார். ஆனால் எந்த அலட்டலும் இன்றி குமாஸ்தா காலரைத் துக்கிவிட்டுக்கொண்டு வேலைபார்த்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.
ஒரு அதிகாரி இருந்தார். அவருக்குக் கீழே ஒரு குமாஸ்தா. அவர் அதிகாரியைக் காக்கா பிடித்துக்கொண்டு கீழே இருப்பவர்களிடம் மிரட்டி தொகைகளை வசூல் செய்து அதில் அதிகாரிக்கு வேண்டிய தேவைகளை செய்துகொடுத்துவிட்டு தாமும் லாபம் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் பிரிவில் வேலை ஏதும் செய்யவில்லை. புரோக்கர் வேலையே பிரதானமாகிவிட்டது. நாளடைவில் விஷயம் அதிகாரிக்குத் தெரிந்துவிட்டது. அதிகாரி அவரது இருக்கையில் பல குறைபாடுகளைக் கண்டறிந்து பழிவாங்க முடிவெடுத்தார். குற்றச்சாட்டு ஏற்படுத்தப்பட்டது. குமாஸ்த்தா எழுதினார் தம் பதிலில். “அய்யா, நான் பிரிவில் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். தாங்கள் எனது வருகைப்பதிவேடு மற்றும் பயணப்படி பதிவேடுகளைப் பரிசீலனை செய்தால் அது நன்கு விளங்கும். நான் மாதத்தில் இருபதுநாட்கள் வரை கேம்ப் போயிருக்கிறேன். அப்படியிருந்தும் பிரிவில் என்னால் முடிந்த அளவிற்கு வேலை செய்திருக்கிறேன். எனவே, என்னை கடுமையாக வேலை வாங்கியதுடனல்லாமல் என்பேரில் இப்படி உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு ஏற்படுத்தியிருப்பது ஞாயமா?” இப்படி இருந்தது விளக்கம்.
ஒவ்வொரு அலுவலகத்திலும் அவர்களுக்கு வழங்கப்படும் பயணப்படி அந்த குமாஸ்த்தாக்களுக்கு வழங்கப்படும் பூஸ்ட் போன்றது. ஆனால் போடுவது பாதி பொய்தான். அவரவரும் தாங்கள் அயல் பணிக்கு சென்றதாக வருகைப் பதிவேட்டிலும் பதிவு செய்து அந்த நாட்களில் அலுவலக வேலையாக வெளியூர் சென்றதாகச்சொல்லி பயணப்படி பெற்றுவிடுவர். ஆனால் பிரிவில் அமர்ந்து வேலை பார்த்திருப்பர். அதிகாரிகளுக்கும் இது நன்கு தெரியும். நம்மவர், தான் பொய்க் காரணம் காட்டி பயணப்படி பெற்றதும் அல்லாமல், கொடுத்த அதிகாரியையே சிக்க வைத்துவிட்டார். பொய்யான காரணங்களின் அடிப்படையில் பயணப்படி வழங்கினார் என்ற அளவில் அவர் போரில்தான் குற்றச்சாட்டு ஏற்படும். பின்னர் அந்த அதிகாரி போலி பயணப்பட்டியல் ஒப்புதல் செய்த பாவத்திற்காக தொகையையும் திருப்பிச் செலுத்துவதுடன் ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்.
அப்புறம் என்ன! அதிகாரி சத்தமில்லாமல் குற்றச்சாட்டு நடவடிக்கையை கைவிட்டுவிட்டார். குமாஸ்தாவோ வேறு ஏதாவது குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டால் தப்ப இயலாதே என்பதாலும் மேற்கொண்டு போலி பயணப்படி பெற இயலாத நிலையிலும் வேறு அலுவலகத்திற்கு டிரான்ஸ்பர் பெற்றுச் சென்றுவிட்டார். வருமானம் இல்லாத சீட்டில் வேலை பார்க்க அவருக்கென்ன தலையெழுத்தா!
இன்னொரு அதிகாரி. அவரிடம் ஒரு குமாஸ்த்தா. இருவரும் ஆரம்பத்தில் குடும்பார்த்த விஷயங்கள் முதற்கொண்டு பரிமாரிக்கொண்டு ரொம்ப செளஜன்யமாக பழகிவந்தனர். ஒருவரை ஒருவர் போட்டோ எடுத்துக்கொள்வது என்ன, ‘நீ என் நண்பேண்டா’ என்ற ரீதியில் பழகிக்கொண்டிருந்தனர்.
ஒரு நிலையில் இவர் ‘பைசா’வுக்கு லாயக்கில்லாதவர் என்பது விளங்கிவிட்டது. ஜாடைமாடையாக ‘பைசா’வின் அவசியத்தைச் சொல்லிப்பார்த்தார் அதிகாரி. அப்படி ஒரு வேலை எனக்கு வேண்டாம் என்ற ரீதியில் போய்விட்டார் குமாஸ்த்தா. அதிகாரியோ படு சீனியர். குமாஸ்த்தாவோ படு கத்துக்குட்டி. “நீ கடைசி வரை இப்படியே இருந்துவிடுவாயா? நீ இன்னும் ஆர்.ஐ. பீரியட் முடிக்கவில்லை. அப்ப தெரியும் உன் சேதி” என்றெல்லாம் உசுப்பி சூடாக்கினார் அதிகாரி. அவரோ இன்னின்னார் என் குருவுக்கு சமம் அவர்கள் எல்லாம் ஆர். ஐ. பீரியட் பார்த்தது பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களால் முடிந்தது என்னாலும் முடியாதா? அப்படி முடியவில்லையென்றால் நான் இந்த உத்தியோகத்தையே விட்டுவிடுவேன். என்றெல்லாம் மறுப்பறிக்கை (வாய்மொழியாகத்தான்) விட்டார். இப்படியாக கண்ணாடியில் கீரல் விழுந்து விரிசலாக பாரிணாம வளர்ச்சி கண்டது.
இந்த நிலையில் ஒரு நாள் உள்நோக்கத்திலோ அல்லது வெளிநோக்கத்திலோ ஒரு உத்திரவு பிறப்பித்தார் அதிகாரி. அதன்படி கூடுதலாக வேறொரு பிரிவிலிருந்து சில வேலைகளைச் செய்ய வேண்டும் என்று. குமாஸ்த்தாவோ ஏற்கனவே தாம் செய்யும் வேலைகளையே இரவு வெகுநேரம் வரை வீட்டிற்குக் கொண்டுபோய் செய்வதாகவும் கூடுதல் சுமையை ஏற்க முடியாது என்றும் மற்ற குமாஸ்த்தாக்கள் சுற்றித் திரியும்போது தம்மை எதற்கு துன்பப்படுத்துகிறீர்கள் என்றும் கேள்வி கேட்டார்.
அதிகாரியோ, ‘ஒரு பார்மாலிட்டிக்காகத்தான் இந்த உத்தரவு’ என்றும் நீ கூடுதல் பணி பார்க்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார். ஆக இப்படியாகத்தானே மூன்று மாதங்களுக்கு மேல் ஓடிவிட்டது. இந்த நிலையில் குமாஸ்த்தாவுக்கு மறுநாளே மாறுதல் செய்து கலெக்டராபீசிலிருந்து உத்தரவாகிவிட்டது.
அப்போதுதான் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. தாம் ஏற்கனவே போட்ட உத்திரவுக்கு கீழ்படியவில்லையென்றும். அந்த கோப்புகளை எல்லாம் பெற்று வேலை செய்தால்தான் அனுப்ப முடியும் என்றும் வீம்பு பிடித்தார் அதிகாரி. அதற்குள் சம்பளம் தரும் அதிகாரி மாவட்ட ஆட்சியர் உத்திரவை நிறுத்திவைக்க இவருக்கு ஏது அதிகாரம் என்று அவரை விடுவித்து அனுப்பிவிட்டார்.
காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் புயலாக மாறுவதுபோல் வேகம் அதிகமாகி குற்றச்சாட்டு தயாராகிவிட்டது. இதை அறிந்த அவருக்கு வேண்டியவர். தாம் அந்த அதிகாரிவழங்கிய நிவாரணங்கள் குறித்த பட்டியலை தகவல் அறியும் சட்டப்படி வாங்கி அனைவரையும் சாட்சியாகப் போட்டு ஒரு வழக்கு தொடுத்து அவர்ஒவ்வொருவரிடமும் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்என்பதை நிரூபிக்கப்போவதாக ஆரம்பித்துவிட்டார்.போதாக்குறைக்கு குமாஸ்த்தாவும். எந்தெந்த நேரத்தில் என்னென்ன சொன்னார். தம் பேரில் குற்றச்சாட்டு ஏற்படுத்துவதற்கு முகாந்திரமே தாம் லஞ்சம் வாங்கித் தராததுதான் என்று பக்கம் பக்கமாக விளக்கம் தயார்செய்துவிட்டார்.
அப்புறம் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துவிட்டு கோட்டாட்சியரிடம் சொல்லி விடுவிக்கும்படி ஆகிவிட்டது. ‘லஞ்சம்’ என்ற ஒரு சாதாரண சொல் அது எப்படியெல்லாம் அவதாரம் எடுத்து வாங்காதவர்களைத் துறத்துகிறது என்பதற்கு இது உதாரணம்.
எப்பவுமே பக்கத்துவீட்டுக்காரன் பழையது சாப்பிட்டா நமக்கு பொருக்காது. இப்படி சிலர் உண்டு டிப்பார்ட்மெண்ட்டில்.
ஒரு அதிகாரி உதவித் தொகை வழங்கும் பொருட்டு பல லட்சம் பணம் வங்கி கணக்கில் புரண்டது. அரசு கணக்கு என்றாலும் இருப்புக்கு ஏற்ப வட்டி வரும். அதனை அவ்வப்போது எடுத்து அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். இவர் அதனை தன்னுடைய கணக்கில் வரவு வைத்துக் கொண்டுவிட்டார். அத்துடன் ருசி கண்ட பூனையாக மேற்கொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தன் கணக்கில் வரவு வைத்துகொண்டார். தணிக்கையில் எப்படி தப்பித்தாரோ.
இது அவரது ஜீப் ஓட்டுனருக்கு தெரிந்துவிட்டது. அவரும் நமக்கேன் வம்பு என்றுதான் இருந்தார். அதிகாரியோ அரசாங்க வண்டியை நமக்கு கொடுத்ததால் அது நம்ம வண்டி என்று நினைத்துகொண்டு ஸ்தல யாத்திரைக்கெல்லாம் பயன்படுத்தி வந்தார். அதில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு வண்டி சேதம் ஆகிவிட்டது. அதனை அரசு பணிமனையில் ரிப்பேர் செய்ய எடுத்துச் செல்லும்படி ஓட்டுனருக்கு உத்திரவு போட்டார் அதிகாரி. ஓட்டுனரோ சேதத்திற்கு தாம் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். விளைவு. அதிகாரி சொந்த பொறுப்பில் ரிப்பேர் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அந்த கோபத்தில் இருவருக்கும் வாங்கல் வந்து விட்டது. ஒருவரை ஒருவர் மிஞ்ச முடியவில்லை. கடைசியில் ஊழல் வெளிவந்துவிட்டது.
பிரச்சனை பெரிதானதும் குற்றச்சாட்டு ஏற்படுத்தப்பட்டது. கையாடல் செய்த தொகைக்கு வட்டி போட்டு லஞ்சம் கொடுத்து வெளி வந்தார் அதிகாரி. அதனாலென்ன வேறு வழியில் வந்த பணம் அவரிடம்தானே இருந்தது. என்ன லாபத்தில் நஷ்டம். அவ்வளவுதான்.