18
நாங்கள் மட்டும் என்ன இளைத்தவர்களா?
பெரிய அதிகாரிகள்தான் வசூல் வேட்டை நடத்துவார்களா? நாங்கள் மட்டும் இளைத்தவார்களா என்பது சில தாசில்தார்களின் நடவடிக்கையிலிருந்து தெளிவாகும். இது தாசில்தார் பற்றியது. பழையகாலத்தில் தாசில்தார்கள் தமக்குக் கீழே வேலைபார்ப்பவர்கள் மூலம் மளிகை சாமான் முதற்கொண்டு துடைப்பம் ஈராக வசூல் செய்து குடும்பம் நடத்துவது சர்வசாதாரணம். அப்படி இண்டெண்ட் வைக்காத அதிகாரியைத்தான் கேவலமாக பார்ப்பர். அவருக்கு பட்டப்பெயர்கூட வைப்பர். அதிகாரி இண்டெண்ட் வைத்தால்தானே அதைக்கொண்டு தாமும் நாலு காசு பார்க்க முடியும் என்பது கீழே உள்ள வசூல்ராஜாக்களின் பாலிசி.
ஒரு தாசில்தார் ரொம்பவும் சின்னபுத்திக்காரர். அதற்காக அவருக்குப் பட்டப் பெயர்கூட வைத்துவிட்டனர். பெயரைச்சொன்னால் யாருக்கும் புரியாது அடைமொழியுடன் சொன்னால்தான் இன்னார் என்று தெரியும். அவ்வளவு ஜெகப் பிரசித்தம்.
ஒருநாள் காலையில் அவர் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தார். தபால்கள் பிரிக்கும் பணி நடந்தது. பியூன் ஒரு கவரை எடுத்து அய்யா இது உங்க பெயருக்கு வந்துள்ளது என்று கொடுத்தார். தாசில்தார் பிரித்தார். அதில் ஒரு உபயோகித்த காண்டம் இருந்தது. அதிகாரிக்கு ஒரே அதிர்ச்சி. பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் அலுவலகம் பூராவும் தகவல் பரவிவிட்டது. ஆனாலும் சிறிது நேரம்தான் அதிர்ச்சி எல்லாம். அவர் பாட்டுக்கு ஒன்றுமே நடக்காததுபோல் இருந்துவிட்டார். சிலருக்கு கொஞ்சம் தோல் தடிமனாக இருக்கும் அவ்வளவுதான்.
இந்த நிகழ்ச்சிக்கு துண்டுகோல் நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதனைச் சொன்னால்தான் நடந்தது சரியா தப்பா என்று புரியும்,
அவ்வப்போது டி.எஸ்.ஓ.-விடம் மாத்திரைகள் பெயர் எழுதி வாங்கி அனுப்பும்படி கொடுப்பார் தாசில்தார். அது தலைவலி மாத்திரையானாலும் சரி பீ.பி. மாத்திரையானாலும் சரி. வாங்கிக்கொடுத்துவிட்டு இப்படி மாத்திரைக்குக்கூட செலவு வைக்கிறாரே என்று புலம்புவார் டீ.எஸ்.ஓ. ஒருநாள் இப்படி ஒரு மாத்திரை பட்டியல் வந்தது அவரிடம். இந்த மாத்திரைகளை வாங்கிவா என்று எதிரில் நின்றவரிடம் கொடுத்துவிட்டார். அவர் மட்டும் என்ன கைவிட்டா செலவழிப்பார். சீட்டை வாங்கியவருக்கு அதிர்ச்சி. அதில் காண்டம் தேவை என்று இருந்தது. தாம் அசிங்கப் படுத்தப்பட்டதாக நினைத்து டீ.எஸ்.ஓவிடம் சண்டை வளர்த்துவிட்டார் வந்தவர். அப்புறம்தான் தாம் அடிக்கடி வாங்கித் தந்ததில் இதுவும் ஒன்று என்று தெரிந்தது இவருக்கு. இப்படியெல்லாம் இண்டெண்ட் வைக்கிறானே இந்த ஆள் என்று வழக்கம்போல் புலம்பிவிட்டார். இதனை அறிந்த யாரோ ஒருவர்தான் இப்படி உபயோகித்த காண்டத்தை ஒரு கவரில் வைத்து தாசில்தாருக்கு அனுப்பிவைத்துவிட்டார். திருடனைத் தேள் கொட்டியதுபோல் பேசாமல் இருந்துவிட்டார் தாசில்தார்.
ஒரு தாசில்தார். ஆர்.டீ.ஓ. பி.ஏ.-வாக இருந்தார். அவர் தம்மை யோக்கியமாக காட்டிக்கொள்வார். அவன் இப்படி காசு வாங்குகிறான். இவன் அப்படி காசு வாங்குகிறான் என்று எப்போதும் புலம்புவார். அவனவன் சொந்த வேலையைத்தான் ஆபீஸ் போனில் டிரங்க்கால் போட்டு பேசுகிறான். என்னைப்பார் சொந்த வேலைக்கு ஆபீஸ் போனை உபயோகிக்கமாட்டேன் என்று பெருமைவேறு பேசுவார்.
ஆனால் வெறும் கையெழுத்து வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் போய்விட்டான் என்றும் புலம்புவார். அவரது எதிர்பார்ப்பு என்னவென்றால் அவர் ‘வேண்டாம் வேண்டாம்’ என்பாராம். ஆனால் எதிராளி ‘இருக்கட்டும் இருக்கட்டும்’ என்று வற்புறுத்தி காசு கொடுக்கவேண்டுமாம். லஞ்சத்திலும் ஒரு கெளரவம்.
அவர் அலுவலகத்தில் இருந்துகொண்டு மதியம் தமது வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருவதற்கு ஒரு ஆள் அனுப்பச்சொல்லி தம் நண்பருக்கு அலுவலகத் தொலைபேசியில் தகவல் சொல்வார். கொஞ்ச நேரம் கழித்து ஆள் போயாச்சா என்று கேட்பார். சாப்பாடு வந்ததும் மீண்டும் போன் செய்து நன்றி சொல்வார். ஆக அலுவலக போனில் மூன்று கால் போட்டு ஒருசாப்பாடு வந்தது பெரிதாகத் தெரியாது. ஏன்னா அவர் லோக்கல் கால்தான் போட்டாராம். அதுமட்டும் தப்பில்லையாம். இதுமாதிரி வாரம் மூன்று நாளாவது நடக்கும்.
இன்னொன்று அவரது உறவினர் ஒருவர் சீர்காழியில் இருந்தார். அவரிடம் பேச அலுவலக போனை உபயோகிக்க மாட்டாராம். அப்போதெல்லாம் டிரங்க் கால் போட்டுதான் பேசமுடியும். ஆனால் தமது லோக்கல் நண்பருக்கு போன் செய்து அவரது எண்ணில் சீர்காழிக்கு டிரங்க்கால் புக் செய்துகொள்வதாக தெரிவிப்பார். அடுத்து அவரது நம்பரைச்சொல்லி டிரங்க் கால் புக் செய்து அதனை ஆபீஸ் எண்ணில் தரச்சொல்வார். தொடர்ந்து கால் வந்ததா என்று இரண்டொரு தடவை கேட்டுவிடுவார். அப்புறம் எக்ஸ்சேஞ்சை வேறு தொல்லைப்படுத்துவார். அங்குள்ள நண்பாரிடம் விசாரிப்பார். கடைசியில் ஒருவழியாகப் பேசிமுடித்துவிட்டு மீண்டும் நண்பருக்கு போன்போட்டு நன்றி சொல்வார். இப்படியாக நேரடியாக ஆபீஸ் போனில் சீர்காழிக்கு பேசியிருந்தால் அதிகபட்சம் மூன்று ரூபாய் ஆகியிருக்கும். அதற்குப் பதிலாக பத்து லோக்கல்கால் போட்டு முப்பது ரூபாய் செலவழித்திருப்பார். இப்படி ஒரு பசுத்தோல் போர்த்திய புலியைப் பார்த்திருக்கிறீர்களா.
ஒரு அதிகாரி வந்து சேர்ந்தார். அவருக்கு என்று தனி இடம். அலுவலகம் அமைதியாக நடந்துகொண்டிருக்கும். திடீரென்று ‘முத்தமிடும் சத்தம்’ கேட்கும். முதலில் சற்று திகைத்தோம். தினமும் கேட்கவே சத்தம் வந்த இடத்தை ஆராய்ந்தால் அது அதிகாரி இருந்த இடத்திலிருந்துதான் வந்தது. அங்கே அவர் மட்டும்தான் தனியாக இருந்தார். ஒன்றும் புரியவில்லை. அடிக்கடி முனகலாக புலம்பும் சத்தமும் வந்துகொண்டிருந்தது. பின்னர்தான் தெரிந்தது. அவ்வப்போது அதிகாரி தனியே சூழ் கொட்டிக்கொண்டிருந்தார். நன்றாக வசூல் செய்து வசதியாக இருந்தவருக்கு இந்தமாதிரி வறண்ட அலுவலகத்தில் கொண்டுவந்து போட்டால் என்னாகும். கடைந்த மோரிலாவது வெண்ணை தேடிப்பார்க்கலாம் என்றால் அலுவலக தலைவர் சப்கலெக்டர். அவரை வைத்துக்கொண்டு மீன் பிடிப்பது எங்கே. அவ்வப்போது இப்படிப் புலம்பல் சத்தம் என்னவென்கிறீர்களா “ உச்… … ஒண்ணுமே இல்லை… … ஒருத்தனும் வரலை” இப்படியாகப்பட்ட புலம்பல்தான் அது. சற்று ஆழ்ந்து கவனத்தால்தான் கண்டுபிடிக்க முடியும். லோசாக வாய் விட்டு புலம்பினதால் பலவகை சந்தேகங்கள் வந்துவிட்டது.
ஒரு அதிகாரி இருந்தார். அப்போது நெல் கடத்தல் வேட்டை மும்முரமாக இருந்தது. தினமும் ரெய்டு போகவேண்டும் என்று கெடுபிடி. இவர்களுக்கா டெக்னிக் தெரியாது. கடத்தல் மன்னர்கள் தொழில் பாதிப்பு இன்றி நெல் கொண்டுபோகவும் வேண்டும். நாமும் ரெய்டு போகவேண்டும். இது பல அதிகாரிகள் செய்யும் டெக்னிக்தான்.
கடத்தல்காரர்கள் முன்னதாக அதிகாரியைக் கண்டுகொண்டுவிடுவர். அதிகாரி அன்று ரெய்டு போகமாட்டார். அல்லது அந்த லாரிபோகும் பக்கம் ரெய்டு போகமாட்டார். இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துகொண்டு வியாபாரம் சுமுகமாக நடந்தது. அவர்களுக்கு நினைப்பு. இது தமக்கே தெரிந்த டெக்னிக் என்று. ஆனால் அது அனைவருக்கும் தெரிந்த பகிரங்க ரகசியம்.
இப்படிப்பட்ட நிலையில் கலெக்டர் அதிகாரியை ஒரு பிடி பிடித்துவிட்டார். உங்கள் செயல்பாடு திருப்தியில்லை என்று. தாம் தினமும் ரெய்டு போவதாகவும் தாம் ஒரு பக்கம் போனால் வேறு பக்கம் கடத்தப்பட்டு விடுவதாகவும் சமாளித்துப் பார்த்தார். கலெக்டருக்கென்ன இவர்களின் தில்லாலங்கடி பற்றி தொரியாதா என்ன. பிடிபிடியென்று பிடித்துவிட்டார். பார்த்தார் அதிகாரி வருவாய் ஆய்வாளர்களைக் காவு கொடுத்துவிட்டார். அவர்கள் இரவு நேரத்தில் ரெய்டுபோனால் கட்டுப்படுத்தலாம் என்று போட்டுக்கொடுத்து அந்த நேரத்தில் தப்பிக்கொண்டார்.
இது வருவாய் ஆய்வாளர்களுக்குத் தெரிந்தது. அந்த நேரத்தில் வேலைபார்த்த வருவாய் ஆய்வாளர்கள் எல்லாரும் ஒருநட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கூடி திட்டம் போட்டனர். அதிகாரி எந்தப் பக்கம் போகிறாரோ அதற்கு எதிர்பக்கத்தில் கிராம சிப்பந்திகளை அழைத்துக்கொண்டு கூட்டணியாக செயல்பட்டு வண்டிகளைப் பிடித்து அலுவலகம் கொண்டுவர ஆரம்பித்துவிட்டனர். அப்புறம் என்ன. அதிகாரி இதென்னடா வேலியில் போகிறதை எடுத்து வேட்டியில் விட்டுக்கொண்டோமே என்று பரிதவித்தார்.
ஒரு அதிகாரி வெளிப்படையாகவே “காசு வாங்காமல் கையெழுத்துபோடுவது அதர்மம்” என்பார். தன் கையெழுத்துக்கு அப்போதுதான் மதிப்பு இருக்குமாம். இல்லையென்றால் தம்மிடம் இலவசமாக பெற்றுச் செல்லும் சான்றுகள் உத்திரவுகள் போன்றவற்றை தொலைத்துவிட்டு அதுதான் இலவசமாக கிடைக்கிறதே என்று மீண்டும் வந்து நிற்பராம். சரி கையெழுத்து போடத்தானே உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் என்ன சொல்வார் தெரியுமா அது சர்வீஸ் கமிஷண் தேர்வில் பல ஆயிரம் பேருக்கு மத்தியில் நான் பாசாகியிருப்பதற்காக. கையெழுத்து போடுவதற்காகவா என்பார் மகானுபவன்.
ஒரு வகையில் அவரது பாலிசி சரிதானோ என்று சில சமயம் நடந்த சந்தர்ப்பங்கள் உணர்த்தியிருக்கின்றன. நேற்று சான்று வாங்கிப் போன ஒருவர் இன்று மீண்டும் வந்து நிற்பார். நேற்றுதானே வாங்கிச் சென்றீர். இன்று என்ன என்று கேட்டால் “அய்யா நான் நேற்று பஸ்சில் இடம் பிடிக்க என் பையை ஜன்னல் வழியாக போட்டேன். காணாமல் போய்விட்டது. அதில் வைத்திருந்த சான்றும் காணாமல் போய்விட்டது” என்பார். நாள் முழுவதும் காத்திருந்து காசும் கொடுத்து, ‘கடன்காரன்போல் காத்திருக்கிறாயே’ என்று திட்டும் வாங்கிக்கொண்டு சான்று பெற்றிருந்தால் இவ்வளவு அலட்சியம் இருக்குமா. அந்த சான்றுக்கு தனி மதிப்பல்லவா ஏற்பட்டிருக்கும் பணம் வைக்கும் இடத்தில் அதனையும் வைத்து பாதுகாத்திருப்பார் அல்லவா.
நான் ஆதி திராவிடார் நலத் தனி வட்டாட்சியராக இருந்தபோது சில ஆசிரியர்கள் தங்கள் சம்பள சான்று வழங்கக்கேட்டு மனுகொண்டுவருவர். சென்ற மாதமும் வாங்கினீர்களே என்றால் ‘இருக்கட்டுங்க அய்யா இப்ப வேறு காரணம்’ என்பர். முதலில் எனக்கு காரணம் புரியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது. அதற்கு முன்பெல்லாம் சம்பள சான்று தேவையென்றால் அதற்காக பக்கத்துக் கடையில் இரண்டு படிவங்கள் வாங்கிக்கொண்டு அதற்கு ஒரு மனுவும் எழுதி அத்துடன் ரூபாய் இருநுறு தட்சணையும் வைத்து கொண்டுவந்து தந்தால் இரண்டு தினங்களில் தாசில்தார் ஒப்பம் பெற்று தரப்படுமாம்.
நான் வந்தபின்னர். ஒரு மனுமட்டும் எழுதிக் கொண்டுவந்தால்போதும். அதனைப் பெற்றதும். வழங்கவும் என்று எழுதி தட்டச்சரிடம் கொடுத்துவிடுவேன். தட்டச்சர் கணிணியில் அதற்கான பட்டனைத் தட்டி நகல் எடுத்துக் கொடுத்துவிடுவார். நான் ஒப்பம் செய்து கொடுத்ததும். அதனை உரியவரிடம் கொடுத்து ஒப்பம் பெற்றுக்கொள்வார் தட்டச்சர். மனு கொடுத்ததுமுதல் அவர் சான்று பெறுவது வரையிலும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே ஆகும். அந்த நேரத்திற்குள் அவர் ஒரு டீயைக்கூட குடித்து முடித்திருக்கமுடியாது. இப்படி ஒரு டீக்கு கூட செலவில்லாமல் சான்று கிடைத்தால் சும்மா இருப்பரா. பாவம் ஆபீசில் சுற்றிக்கொண்டிருந்த சான்று வாங்கிக்கொடுக்கும் வியாபாரிகள்தான் பாதிக்கப்பட்டனர். இப்படி அவசரம் அவசரமாக காரியம் செய்து கொடுத்தால் அப்புறம் நம் கையெழுத்துக்கு மதிப்பு எங்கிருந்துவரும்.
இந்த இடத்தில் எனது தட்டச்சரைப்பற்றி கட்டாயம் சொல்லவேண்டும். அவர் தற்காலிகப் பணியாளராக முதல் முதலாக என்னிடம் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னர் அவர் எந்த ஒரு அலுவலகத்தையும் மழைக்கு ஒதுங்கும் நிமித்தமாகக்கூட நாடியது இல்லை. ஆனால் வேலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும். நேர்மையாகப் பணிபுரியவேண்டும் என்ற குறிக்கோளினாலும், (கம்ப்யூட்டரை அவர் தொட்டுப் பார்த்ததுகூட கிடையாது). கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே வேலைகளை கற்றுக்கொண்டார். ஆசிரியர்கள் ஜி.பி.எப். கடன் கேட்டுவந்தால் அதனை சரிபார்த்து ஐந்து நிமிடத்திற்குள் என் மேசைக்கு அனுப்பிவிடுவார். நான் ஒப்புதல் தந்த அடுத்த ஒரு நிமிடத்திற்குள் பட்டியல் தயார் செய்யப்பட்டு என் மேசைக்கு வந்துவிடும். அதற்காக நான் கணிணியில் ஒரு புரோகிராம் செய்து கொடுத்திருந்தேன். அதனை நன்கு புரிந்துகொண்டு செய்தார். ஒரு நாள் கூட நான் அவரிடம் ஏன் இதனைச் செய்யவில்லை என்று கேட்டதே கிடையாது. அவர்தான் திருமதி லட்சுமி. தற்போது அவர் சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றிபெற்று வேறு துறையில் பணிபுரிகிறார். அந்தத் துறைக்குக் கிடைத்த மாணிக்கம் அவர். அவரை வைத்து வேலைவாங்கும் அதிகாரி உண்மையில் புண்ணியம் செய்தவர்தான். அவர் விட்டுப்போனது வருவாய்த் துறைக்கு உண்மையில் இழப்புதான்.
இது தலைப்புக்கு ஏற்காத ஒரு வித்தியாசமான அனுபவம்.
தாசில்தாருக்கு திடீரென்று தகவல் வந்தது “தினமும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மணல் கடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அதனை விட்டுவிட்டு வேறு இடத்தில் போய் ரெய்டு செய்கிறீர்கள்” என்று. நாங்கள் அடிக்கடி அந்த கிராமத்திற்கே போய் பல முறை வண்டி பிடித்திருக்கிறோம். பிடித்தால் பிடித்ததுதான் நேராக அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்திவிடுவோம். காசுவாங்கிக்கொண்டு விடும்பேச்சே கிடையாது. மாதத்திற்கு ஐந்து அல்லது ஆறு வண்டிகள் கட்டாயம் பிடித்துவிடுவோம். அந்த ரெய்டுகளுக்கெல்லாம் நானும் கட்டாயம் போவது வழக்கம். மற்ற வட்டங்களிலிருந்து அலுவலக நண்பர்கள் சந்திக்கும்போது தினமும் உங்கள் பெயர் பேப்பரில் வருகிறதே என்பர். அவ்வளவு பிரசித்தம்.
அப்படிப்பட்டவருக்கு ரோஷம் வந்துவிட்டது. நான் துணை வட்டாட்சியராக இருந்தேன். என்னையும் இன்னும் ஒரு துணை வட்டாட்சியர், மூன்று நான்கு ஓ.ஏக்கள் என்று ஜீப்பில் நிரப்பிக்கொண்டு இரவு பத்துமணிக்குப் புறப்பட்டு பதினோரு மணிக்கு மேல் போய் காத்திருந்தோம். ஒரு வண்டிகூட வரவில்லை. தகவல் போயிருக்க வாய்ப்பில்லையே என்று ஆற்றுக்குள் இறங்கியும் ஒரு சுற்று தேடிவிட்டோம். ஒன்றும் தட்டுப்படவில்லை. திடீரென்று நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் ஒரு சரிவான பாதை தென்பட்டது. அதில் சிரம பரிகாரத்திற்காக விளையாட்டுபோல் இறங்கிப்போனால் அங்கே ஒரு டிராக்டர் மணல் ஏற்றிக்கொண்டு புதர்களுக்குள் நின்றிருந்தது. அப்படி ஒரு துறை இருப்பது வெளியே தெரியாது. அதில்தான் தினசரி மணல் கடத்தியிருக்கிறார் பேர்வழி. மாட்டியவரை விடுவோமா. டிராக்டர் டிரைவரை மிரட்டி வண்டியை ஆற்றிலிருந்து ரோட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தினோம்.
கீழே இறங்கியதுதான் தாமதம் எங்களுடன் வந்த ஒரு ஓ.ஏ. விட்டார் ஒரு ‘பளார்’. அவ்வளவுதான் அந்த டிரைவர் பிடித்தார் ஓட்டம் பக்கத்திலிருந்த மரவள்ளிக் காட்டின் ஊடாக. எதையும் சட்டை செய்யாமல் சிலைபோன்று வண்டியில் உட்கார்ந்திருந்த முக்காடு போட்ட ஒரு ஆளைப் பிடித்துக்கொண்டோம். அவர்தான் அந்த வண்டியின் சொந்தக்காரர். அவருக்கு அர்ச்சனை விழுந்தது.
டிரைவர் ஓடிப்போனதில் கோபம் எல்லாருக்கும். சுமார் அரை மணிநேரப் போராட்டத்தின் பின் ஓனர் டிரைவரைக் கூவிக்கூவி அழைத்தார். டிரைவர் சற்றே பதுங்கிப்பதுங்கி பயத்துடன் தலை நீட்டினார். ஓ.ஏ சும்மா இருந்திருக்கக்கூடாதா. ஓடிப்போய் பிடிக்கப் பாய்ந்தார். அவ்வளவுதான். டிரைவர் கண்மண் தெரியாமல் விட்டார் சவாரி.
அப்போது இரவு மணி பன்னிரண்டு இருக்கும். நேரம் ஆக ஆக எப்படி எப்படியோ அழைத்தும் ஆள் வரவில்லை. ஓனர், தாசில்தார் ஓ.ஏ. எல்லாரும் “ராசு அடிக்கமாட்டேண்டா வாடா” என்று கெஞ்சியும் கொஞ்சியும் கூப்பிட்டும் ஒரு சத்தமும் காணோம். இடமோ கும்மிருட்டுக் காடு.
அந்தப் பகுதியில் எல்லாம் ஆங்காங்கே பெரிய கிணறு வெட்டி அதில் போர் இறக்கி பாசனம் செய்வர். கிணற்றுக்கு கைப்பிடிச் சுவர் எல்லாம் கிடையாது. இருட்டில் ஓடிப்போனவர் ஏதாவது கிணற்றில் விழுந்திருந்தால் கபால மோட்சம்தான். எங்களுக்கு பயம் பிடித்துக்கொண்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. டிராக்டர் ஓனர் எங்களுக்கு ஆறுதல் சொன்னார். பொழுது விடியும்நேரம். கீழ்வானம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது. அத்துவானக் காட்டில் மெக்கானிக் யாரும் இல்லை. டிராக்டருக்கோ சாவி இல்லை. எப்படி எடுத்துச்செல்வது என்று தெரியவில்லை. விடிந்துவிட்டால் மக்கள் கூடிவிடுவர். வண்டியை எடுத்துவருவது கஷ்டம்.
திடீரென்று ஒரு ஐடியா வந்தது. முன்பு ஒரு முறை டிராக்டரை ஒருவர் ஒரு ஸ்குரூ டிரைவரால் ஸ்டார்ட் செய்ததைப் பார்த்திருக்கிறேன். அதைச் சொன்னதும். எப்படியோ தேடி ஒரு இரும்புக் கம்பி சம்பாதித்தோம். அதனைக்கொண்டு செல்ப் மோட்டாரின் இணைப்பை தொட்டு ஒருவழியாக ஸ்டார்ட் செய்தோம். அடுத்து ஒட்டி வருவது யார் என்று பிரச்சினை. அங்கே இங்கே தேடி உழவு ஓட்ட ஏற்பாடு செய்துகொண்டிருந்த ஒரு டிரைவரைப் பிடித்து டிராக்டரை ஆபீசுக்குக் கொண்டுவந்து சேர்த்தோம்.
இரண்டு மூன்று தினங்கள் வரை யாராவது ‘கிணற்றில் விழுந்து செத்தார்’ என்ற சேதி வருகிறதா என்று பயந்துகொண்டே இருந்ததை என்ன சொல்ல.