19
அதிகாரியின் கிறுக்குத்தனங்கள்
டான் குவிக்சாட் என்று ஒரு கேரக்டர். அவன் செய்யும் செயல்கள் எல்லாம் படித்தால் வயிறு குலுங்கும். அப்படிப்பட்ட ஒரு கேரக்டரைப் பற்றித்தான் இது.
ஒரு அதிகாரி. கோட்ட அதிகாரியின் அலுவலக வளாகத்திலேயே அவருக்கு ஆபீஸ். ஆளு கொஞ்சம் ‘ஷோக்’ பேர்வழி அடிக்கடி ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அவரைப் பார்த்து முறையிட வருவர். கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து உத்திரவிட்டால் ஏன் வந்து முறையிடப் போகின்றனர்?
வருபவர்கள் தமது பார்சனாலிட்டியைப் புகழ்ந்து பேசவேண்டும் என்பதுதான் அவருக்கு ஆசை. தாம் ஒரு அதிகாரி என்று தம்மை எண்ணிக்கொள்ளமாட்டார். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார். புகழ் ஒன்றே அவரது குறிக்கோள். அலங்காரம் ஒன்றே அவரது லட்சியம்.
ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை தமது இருக்கையிலிருந்து தடாபுடாவென்று எழுவார். ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து தன் முகம் கழுவிக்கொள்வார். தூக்கக்கலக்கம் என்று எண்ண வேண்டாம். அலங்காரத்திற்கு முதல்படி அது. அடுத்து தமது இருக்கையின் பின்னாலேயே வைக்கப்பட்டிருக்கும் சீப்பு கண்ணாடி பவுடர் இத்தியாதிகள் பயன்படுத்தப்படும். அவர் சீவிச்சீவியே அந்த சீப்பு கால்வாசி தேய்ந்துவிட்டது. இருக்கிற வழுக்கை மண்டையில் இல்லாத முடியை வளைத்து வளைத்து சீவி சுருட்டி பழைய காலத்து ஜெய்சங்கர் ஸ்டைலில் முன்னால் சுருட்டையை வரவழைப்பார். அப்படியே திரும்பி தனது இருக்கையில் உட்கார்ந்துகொண்டு எதிரில் நிற்பவரின் கோரிக்கையை விசாரிப்பார். வருபவருக்கு சிரிப்பு கொப்பளிக்கும். கொஞ்சம் பழகிவிட்ட சிலர் அய்யா இப்பதான் நீங்க ‘அந்தஸ்த்தா இருக்கீங்க’ ‘இளமையா இருக்கீங்க’ என்று ஐஸ் வைப்பர்.
அலுவலகத்தில் நான்கு ஐந்து கிளார்க்குகள் இரண்டு ஆசிரியர்கள் மூன்று பியூன்கள் என்று பட்டாளமே எப்போதும் இருக்கும். யாரும் எங்கேயும் போகக்கூடாது அலுவலக வேலை சுமாராக நடக்கும், புகழ் கோஷம் சிறப்பாக நடக்கும். பியூன்கூட அவரைப் புகழ்ந்து பேசி நையாண்டி செய்யும் அளவிற்கு நிர்வாகம் இருக்கும். அதிலும் ஒரு கிளார்க்கு கேலி பேசுவதில் பட்டம் பெற்றவர்.
அலுவலகத்தில் டீ காப்பிக்கு பஞ்சமே இருக்காது. யாராவது ஒருவர் முறையீடு செய்ய வருபவரின் தலையில் இண்டெண்ட் வைப்பார். பெரும்பாலும் தாசில்தாரே வாய்விட்டு கேட்பார் ‘தாசில்தாருக்கு டீ கூட கிடையாதா’ என்று.
சில சமயம், அதிகாரி மூடு அவுட்டாக இருப்பார். அப்போது பார்த்து யாராவது கோரிக்கை வைத்தால் கொஞ்சம் சிடுசிடுப்பார். வந்தவரும் சற்று உரச ஆரம்பிப்பார். உடனே நமது கிளார்க்கு வந்தவரிடம் “என்ன எல்லா அதிகாரியும் எங்க அய்யா மாதிரி என்று நினைத்துக்கொண்டாயா. கட்டபொம்மன் வசனம் எழுதியது யார் தெரியுமா? அய்யா திறமை என்ன தெரியுமா?” என்று அடித்துவிடுவார். அவ்வளவுதான். அதிகாரி முகத்தில் புன்னகைதான். வந்தவர் என்னவோ ஏதோ என்று போய்விடுவார். உடனே அதிகாரி தமது பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்து எல்லாருக்கும் டீ வாங்கிவரச் சொல்வார். சுமார் பத்து டீ வந்துவிடும் அதிகாரி செலவில். ‘டீ’ வேண்டும் என்றால் அதிகாரியை உசுப்பேற்றிவிட்டு சாதித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. பெரும்பாலும் அவரது வழக்கு பற்றிதான் பேச்சு இருக்கும்.
அது என்னவென்றால், அவர் ரேடியோ நாடகம் எழுதுவதில் வல்லவர், குடும்பமே நாடகம் எழுதி அதனைத் தாமே பதிவு செய்து அனுப்புதல், கதை எழுதுதல் என்று ஏகப்பட்ட எழுத்துலக திறமை அவருக்கு இருந்தது. இந்த நிலையில் அவரே சொன்ன, காட்டிய ஆதாரங்கள்தான் இவை.
(1) வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படத்திற்கான கதை வசனம் அவரே எழுதி அதில் சிவாஜிகணேசன்தான் கட்டபொம்மனாக நடிக்கவேண்டும் என்று எல்லாம் குறிப்பிட்டு பல திரைப்படக் கம்பெனிகளுக்கு எடுத்துச்சென்று காண்பித்துள்ளார். ஆனால் எல்லாரும் கதை நன்றாயில்லை. சிவாஜிக்கு ஏற்ற ரோல் இல்லை என்றெல்லாம் சிலதினங்களில் திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒருநாள் வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்துவிட்டது. பார்த்தால் அவர் எழுதிய வசனம் அடிபிறழாமல் அப்படியே வந்துள்ளது. சிவாஜி கணேசனே நடித்துள்ளார். இவருக்கு வந்ததே கோபம். நேராக கம்பெனியில் போய் வாதாடியுள்ளார். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வக்கீலை அணுகியுள்ளார். அவரோ இப்படிப்பட்ட வழக்குகளை நடத்துபவர். தாம் வழக்கை ஜெயித்துத் தருவதாகவும், ஆனால் நஷ்டஈட்டில் பாதியை தமக்கு பீசாகத் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார். இவருக்கு மனம் இல்லை. வேறு பல வக்கீல்களைப் பார்த்துவிட்டு இவரது எதிர்பார்ப்புக்கு சரியில்லாததால் விட்டுவிட்டார். ஆனால் வழக்கு மனு, நோட்டீஸ் என்று ஒரு கேஸ் கட்டு எப்போதும் கையுடன் வைத்திருப்பார்.
(2) ஆற்றங்கரை அழகி என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதி பாண்டிச்சேரி வானொலியில் இருமுறை ஒலிபரப்பாகியுள்ளது. அதையே ஆனந்தவிகடன் போட்டிக்கு அனுப்பி, தேர்வு செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆனந்தவிகடன் ஆபீஸ் முத்திரை இத்தியாதிகளுடன் அவரிடம் நகல் இருந்தது. அதனையும் எடுத்துச் சென்று பல கம்பெனிகளை பார்த்துள்ளார். ஆனால் யாரும் சீண்டவில்லை. ஒருநாள் இருகோடுகள் என்று திரைப்படம் வெளியாகியுள்ளது. பார்த்தால் வசனம் உட்பட எல்லாம் இவரது எழுத்து. நேராகப் போய் மோதிப்பார்த்தார். கோர்ட்டில் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டனர். அதிலும் வக்கீலுடன் மோதல். அப்படியே விட்டுவிட்டார். அந்த கேஸ்கட்டும் கைவசம்.
(3) அடுத்து ஒரு கதை எடுத்துச்சென்று பல கம்பெனிகளுக்கும் நடந்து கடைசியில் எம்.ஜி.ஆர்அவர்களைப் பாடுபட்டுப் பார்த்து காண்பித்துள்ளார். அவர்கதையைப் படித்துப் பார்த்துவிட்டு கதை மிக நன்றாக இருப்பதாகவும்,தாம் அந்த நேரத்தில் படம் எடுக்கும் நிலையில் இல்லாததால் வேண்டாம் என்றும் சொன்னதுடன் இவரது கதையைக் கேட்டுவிட்டு முடிந்தால் நீங்களே படம் எடுங்கள் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். திரைப்பட உலகம் மோசமாக இருக்கிறது. உங்களுக்கு நம்பிக்கை-யானவரென்றால் மட்டும் கதைகளைக் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவருக்காக எழுதிய கதையும் எப்போதும் கையில் வைத்திருப்பார். எம்.ஜி.ஆரின் அறிவுரையை அடிக்கடி சொல்லிக் காண்பிப்பார்.
(4) இவ்வளவுக்குப் பின்னரும் வீட்டிலேயே நாடகம் தயார்செய்து தாமே டேப்பில் பதிவுசெய்து வானொலி நிலையத்திற்கு அனுப்புவதை விடவில்லை. அவரது நாடகத் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. ஆதாரங்கள் எப்போதும் கைவசம் வைத்திருப்பார். சற்று பழகிவிட்டாலும். அவரிடம் எல்லாவற்றையும் காண்பித்து பெருமை தேடிக்கொள்வார்.வந்தவர்நையாண்டி செய்தாலும் அதனை புகழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் குணம் படைத்தவர்.
போதாதா இப்படிப்பட்ட அப்பாவிதானே வைத்து அடிப்பதற்கு எங்களுக்குத் தேவை. அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை.
ஒருநாள் அலுவலகத்திலுள்ள அனைவருக்கும் ஒரு அன்புக் கட்டளை. “எல்லாரும் நாளை காலை வீட்டுக்கு வரவேண்டும். டிபன் எங்கள் வீட்டில்தான்” என்று. மறுநாள் பத்து ரூபாய் டிபன் சாப்பிட இருபது ரூபாய் பஸ்டிக்கட் எடுத்துக்கொண்டு எட்டு மணிக்கெல்லாம் ஆஜராகிவிட்டோம். போகும்போதே சம்பளப் பட்டியல் மற்றும் கையெழுத்து வாங்கவேண்டிய கோப்புகளையும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு போய்விட்டோம்.
அன்று பார்த்து அடைமழை ரிக்கார்டுகளை எல்லாம் நனையாமல் பெருமுயற்சியுடன், பெரும் அல்லாலலுடன், கொண்டுபோனோம். அங்கேபோனால் எங்களுக்கு மட்டும்தான் உள்ளே அனுமதி.. “இன்று ரிலாக்ஸாக இருக்கவேண்டும். கோப்பு எல்லாம் ஆபீசில்தான்” என்று செக்யூரிட்டி செக்கில் கோப்புகள் வெளியேற்றப்பட்டுவிட்டன.
அன்போடு வைத்த உணவை குறை சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்லாமலும் இருக்க இயலவில்லை நமது நகைச்சுவை உணர்வு. காலை டிபனுக்கு அப்பளமும் தொட்டுக்கொள்ள குருமாவும் வைத்தார் அவரது துணைவியார். இதென்னடா புதுமையா இருக்கு ரெண்டு இட்லிகூட இல்லையே என்று எங்களுக்கு ஏக்கம். அவரது துணைவியார் மற்றும் மகன் மகள்கள் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்துள்ளதால் அவரது குடும்பமே எங்களுக்கு அறிமுகம்.
துணைவியார் “இந்த மனிதர் படுத்திய அவசரம் பூரியெல்லாம் அப்பளம்போல் ஆகிவிட்டது” என்றார் வழிசலாக. ஒருவழியாக டிபன் முடிந்து வந்து ஹாலில் குழுமினோம்.
தன் மகன் மகளை அழைத்தார். “அந்த ‘ஒத்தல்லோ’ நாடகத்தை போட்டுக்காட்டு” என்றார். டேப்ரிக்கார்டர் வந்தது. ஆன் செய்தனர். பின்னணி இசை வந்தது. தீடீரென்று அண்ணன் தங்கையைப் பார்த்து “அன்பே ஆருயிரே” என்று வசனம் பேசினார். எங்களுக்கு ஒன்றும் புரியாத அதிர்ச்சி. பின்னென்ன அண்ணனும் தங்கையும் அருகருகில் நின்றுகொண்டு காதல் வசனத்தை ஆக்ஷனுடன் தீடீரென்று ஆரம்பித்தால் என்னசெய்வது. நாங்கள் டேப்ரிக்கார்டரில் போட்டுக் காட்டப்போகிறார்கள் என்று நினைத்திருந்தோம். டேப்ரிக்கார்டர் பி.ஜி.எம்-காகத்தானாம். என்ன இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்ததில் எல்லாருக்குமே அதிர்ச்சிதான்.
அடுத்து ஒரு நாடகம் பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார்போலும். எங்களுக்கும் வசனம் கொடுத்தார். ஆளைவிடுடா சாமி என்று எவ்வளவோ சொல்லியும் சின்ன சின்ன ரோல்தான் என்று தலையில் கட்டிவிட்டார். ஒருவருக்கு கூட்டத்தில் வரவேற்பு, ஒருவருக்கு வழிமொழிதல் என்று எனக்கும் ஒரு ஒரத்தில் நின்று வெண்சாமரம் வீசும் காட்சி போன்று ஒன்று. ஆனால் எங்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். நாடகம் என்றால் எல்லாரும் சுற்றி உட்கார்ந்திருக்கிறோம். வேறு எதுவும் தென்படவில்லை.
சற்றைக்கே ஒரு பெரிய பெட்டி போன்ற டேப்ரிக்கார்டர், ஆம்ப்ளிபையர், பி.ஜி.எம்முக்கு ரிக்கார்டு பிளேயர், மைக்குகள் என்று கொண்டுவந்து வைக்கப்பட்டதும்தான் தெரிந்தது மனிதர் ஒரு மினி ரிக்கார்டிங் தியேட்டரையே வைத்திருக்கிறார் என்பது. அவரது கலை ஆர்வம் எவ்வளவு ஆழமானது என்பது அப்போதுதான் புரிந்தது.
எங்களுக்கோ பகல் சாப்பட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஒரே துடிப்பு. ஒருவழியாக ரிக்கார்டிங் முடிந்தது. உண்மையில் இசை ஏற்ற இறக்கங்களுடன் மிக நன்றாகவே பதிவுசெய்திருந்தார். ஒருவழியாக விடைபெறும் வேளை வந்தது. விடைபெறும் வேளையில் அனைவரது அன்பும் எங்களை மிகவும் கவர்ந்தது.
ஆனாலும் ஒரு நெருடலை ஏற்படுத்தினார் அவரது மனைவி. ஒரு தாயின் எதிர்பார்ப்பு ஆதங்கம் எல்லாம் தன் பிள்ளைகளைத்தான் சுற்றிவரும் என்பதற்கு ஒரு உதாரணம் அது.
இல்லத்தரசியார் சொன்னது. அதிகாரியின் மகளோ நல்ல கருப்பு. நல்ல குண்டு வேறு. இப்படிப்பட்டவருக்கு கணவன் கிடைப்பது எவ்வளவு அரிது என்பதை இந்த சமூகத்தின் அவல நிலையின் கண்ணோட்டத்தில் சொல்கிறேன்.
பல வழிகளிலும் தேடி பலரும் நிராகாரித்த வேளையில் ஒரு குடும்பத்தினர் வந்து பெண்பார்த்துவிட்டு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லியுள்ளனர். எல்லாருக்கும் ஒரு சந்தோஷம். கடவுளுக்கு ஸ்தோத்திரம் சொல்லியுள்ளனர். வழியனுப்பச் சென்ற நம் அதிகாரி அவர்களிடம் ‘தங்கள் குடும்பம் கலைக் குடும்பம் என்றும் திருமணத்திற்குப் பின்னரும் கலைத்துறையில் ஈடுபட அனுமதிக்கவேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர்களும் அதற்கென்ன ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டனர். அவ்வளவுதான் டாட்டா மொத்தமாக காட்டிவிட்ட விஷயம் பிற்பாடுதான் தெரிந்துள்ளது. அன்றிலிருந்து, வந்த வரனையும் கெடுத்துவிட்டாரே என்ற ஆதங்கம் அவர் சொற்களில் நன்றாகவே பிரதிபலித்தது. பாவம். அதுதானே நம்மால் முடிந்தது.
இப்படிப்பட்ட அதிகாரி, ஒருநாள் நிலம் எடுப்பது சம்பந்தமாக ஒரு பங்களாவில் விசாரணை வைத்து நிலச் சொந்தக்காரர்களை வரவழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களில் ஒருவர். நிலத்தின் மதிப்பு ரொம்ப குறைவா இருக்கு என்று வாதாடிக்கொண்டிருந்தார். நம்மவரோ ‘அவ்வளவுதான் தரமுடியும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதிகாரி ஒன்றும் தம் விருப்பப்படி தொகை நிர்ணயம் செய்யவில்லை. அரசு விதிகளின்படிதான் மதிப்பு நிர்ணயம் செய்திருந்தார். அதனை வந்தவரிடம் தெளிவாக சொல்லியிருக்கவேண்டும். அதைவிடுத்து ‘அவ்வளவுதான் தரமுடியும்’ என்று திரும்பத் திரும்ப சொல்லப்போக, வந்தவரோ அதிகாரி நினைத்தால் அதிகமாகத் தரமுடியும் என்று எண்ணிக்கொண்டு பேசப்போக கடைசியில் வாக்குவாதம் முற்றி “வெளியே வா பால் தெளிக்கக்கூட எலும்பில்லாமல் பண்ணிவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.
நாங்கள் எல்லாம் சுற்றி அமர்ந்து விசாரணை அறிக்கை தயார் செய்துகொண்டிருந்த வேளையில் என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்னமே சில வினாடிகளில் முடிந்துவிட்டது வாக்குவாதம். நாங்கள் சுதாரிப்பதற்குள் அதிகாரி எழுந்து தன் கைப்பையை எடுத்துக்கொண்டு பங்களாவைவிட்டு வெளியேறினார். சாலையோரம் வந்த பஸ்சில் கையைக்காட்டி ஏறிக்கொண்டு போயே போய்விட்டார். நாங்களோ அதிகாரி எங்கே என்று தெரியாமல் தடுமாறி அப்புறம் அங்கே இருந்தவர்கள் சொன்ன விபரத்தைக் கேட்டுவிட்டு மூட்டைகளைக் கட்டிக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
அலுவலகம் வந்து விசாரித்தால் தலைவர் போலீஸ் கம்ப்ளெயிண்டு எழுதி சப்கலைக்டரிடம் கொடுக்கச் சென்றிருந்தார். அங்கிருந்த அலுவலர்களை விசாரித்தால் அதிகாரி நேராக அலுவலகம் வந்ததாகவும், ஏதோ எழுதியதாகவும் அப்புறம் அலங்காரம் செய்துகொண்டு சப்கலெக்டரிடம் (பெண் அதிகாரி) சென்றதாகவும் சொன்னார்கள். சப்கலெக்டரிடம் நடந்ததை சொல்லி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கோ இவர் சொன்னதைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. பின் என்ன எங்கேயாவது அடிக்க வருபவர்கள் எலும்பை எண்ணிக் கொண்டிருப்பார்களா? அங்கேயே ஒரு கம்ப்ளெயிண்டை எதிரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தந்துவிட்டு இங்கு வரவேண்டியதுதானே என்று கேட்டதற்கு அதற்குள் அவர் என்னை அடித்துவிட்டால் என்னாவது என்று புலம்பியிருக்கிறார். ‘பால் தெளிக்க எலும்பு’ இல்லை என்றால் என்ன செய்வது என்ற பயம் போலும்.
ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். தன் பின்னால் உள்ள ஜன்னலை மூடச்சொன்னார். இரண்டு பக்க கதவுக்கு அருகிலும் இரண்டு பியூன்களை நின்றுகொண்டு காவல் காக்க வேண்டும் என்றும் யாரையும் விடக்கூடாது என்றும் உத்தரவாயிற்று. வந்த ஆசிரியர்களைக்கூட அனுமதிக்கவில்லை. சிறிது நேரம் சென்றது. தன் மேசையை வேறு இடத்திற்கு மாற்றிப்போடச் சொல்லி தான் இருந்த இடத்தில் ஹெட்கிளார்க்கை உட்காரச் சொன்னார். காரணம் கேட்டதற்கு வருபவன் நேராக என் இடம் தெரிந்துவந்து அடித்துவிட்டால் என்ன செய்வது மாறி உட்கார்ந்துகொண்டால் யார் வந்தாலும் கண்டுபிடிப்பதற்குள் சுதாரித்துக் கொள்ளலாம் என்றார்.
அடுத்து, வீட்டுக்குப் போகவேண்டும். எல்லா அலுவலர்களையும் கூட்டிக்கொண்டார். அங்கிருந்த ஆசிரியர்களையும் அழைத்துக்கொண்டார். பதினைந்துபேருக்குக் குறையாமல் அவரைச் சூழ்ந்துகொண்டு அழைத்துச் சென்றனர். புலிக்குப் பயந்தவனெல்லாம் என்மேல் வந்து படுத்துக்கொள்ளுங்கள் என்றானாம் ஒரு பயில்வான். அதுபோல் இருந்தது அந்த ஊர்வலம். மெயின்ரோட்டுக்கு வந்ததும். ஒரு பேருந்து வந்தது. அது ஸ்டாப்பிங் இல்லை. இருந்தும் பதினைந்துபேர் கை காட்டினால் நிறைய டிக்கட் வருகிறது என்ற ஆசையில் டிரைவர் நிறுத்திவிட்டார் வண்டியை. ஏறியதோ அதிகாரியும் வழிப்பாதுகாப்புக்கு என்று ஒரு பியூனும் மட்டுமே.
மறுநாள் காலை ரயில்வே ஸ்டேஷனில் அவர் வரும் நேரத்தில் அப்படியே ஒரு கும்பல் சென்று இருந்து அவரைச் சூழ்ந்து அழைத்து வந்தது. பாதுகாப்பு கருதி தினமும் இந்த கருப்புப்பூனைப் படை சென்றுகொண்டேயிருந்தது. வேறு வேலை ஏதும் நடக்கவில்லை. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பத்துப் பதினைந்து நாட்களில் பாதுகாப்பு எல்லாம் யார் உத்திரவும் இன்றி விலகிவிட்டது.
இப்படியாகப்பட்ட ஊர்வலத்தில் ஒருநாள் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தார் கைப்பை ஊசலாட. எங்களில் ஒருவர் அய்யா என்ன பை திறந்திருக்கே என்றார். அவ்வளவுதான் அதிலும் சந்தேகம் வந்துவிட்டது. அங்கேயே பையில் இருந்ததைக் கொட்டி செக்கப் செய்தார். அந்தோ பரிதாபம் தாம் என்னவெல்லாம் பையில் வைத்திருந்தோம் என்பது அவருக்கு புரியவில்லை. தெரியாத ஒரு பொருளைக் காணாமல் போக்கிவிட்ட வருத்தத்தில் அன்று பூராவும் கழிந்தது. அடிக்கடி அந்தப் பையைக் கவிழ்த்துக் கொட்டி சரிபார்த்தும் என்னதான் காணாமல் போனது என்பது மட்டும் தெரியவில்லை.
ஒரு மாதம் சென்றது. அலுவலகத்தில் ஒரு பியூன் புதிதாக சைக்கிள் வாங்கிவந்தார். வெகு அலங்காரமாக கைப்பிடிகளில் குஞ்சங்கள் இரண்டு பெல்கள் அது இது என்று குருவாயூர் யானைகணக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதுவும் அதிகாரியின் கண்ணுக்கு நேராக சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலே ஒரு ஹைலைட் என்னண்ணா அதன் பெல்தான். பெல் லீவரை அசைத்தால் கலகலவென்று ட்டிர்ர்ர்ர்ரிங் ட்டிர்ர்ர்ர்ரிங் என்று அடித்து அனைவரையும் கவர்ந்தது. இல்லையில்லை அதிகாரியை மட்டும் ரொம்பவே கவர்ந்தது.
அதிகாரி சீட்டில் உட்கார்ந்துகொண்டு பார்த்துப் பார்த்து பொருமினார். “ஒரு பியூன் சைக்கிளையும் பார் என் சைக்கிளையும் பார்” என்று வந்தவர்களிடம் எல்லாம் அங்கலாய்த்தார். கடைசியில் தம்மைக் கவர்ந்த அந்த பெல்லை தாமும் பொருத்துவது என்று முடிவு செய்தார். இதற்கிடையில் பியூனோ திருஷ்ட்டி பட்டுவிடக்கூடாது என்று கருதி வீட்டில் வைத்துவிட்டு மறுநாள் முதல் நடந்தே வர ஆரம்பித்துவிட்டார். பார்த்தார் அதிகாரி அவரது பெல் மோகம் குறையாமல் பசலைபிடித்துப் புலம்பிய நேரத்தில் ஒரு ஆசிரியர் வந்தார். அதேமாதிரி தனக்கும் ஒரு பெல் வாங்கித் தரும்படி இண்டெண்ட் வைத்துவிட்டார்.
சைக்கிளை எடுத்துச்சென்று பெல் வைத்து வந்து நிறுத்திய பின்னர்தான் பியூன் தன் சைக்கிளை கொண்டுவந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நம்ம அதிகாரியோ குழந்தைத்தனமாக கொஞ்சநேரத்திற்கு ஒரு முறை போய் பெல் அடித்துப் பார்த்துவிட்டு ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வாங்கிய வீரரைப் போன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வந்து உட்காருவார்.
ஒரு வாரம் போனது. திடீரென்று ஒருநாள் மதியம் ஒரு கிராமத்திற்கு சைக்கிளில் போகவேண்டும் என்று பிடிவாதம் செய்தார். அந்தப் பகுதியில் எல்லாம் மாலை நேரத்தில் போவது சரியல்ல என்று எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. புறப்பட்டாயிற்று. அதிகாரி முன்னதாக பெல்லை அடித்து அடித்து ரசித்துக்கொண்டே குனிந்துகொண்டு முன்னே சென்றார். அவரை நானும் புதுசைக்கிள் பியூனும் தொடர்ந்துகொண்டிருந்தோம். ஒரு சாலை சந்திப்பில் டமால் என்று சத்தம் நிமிர்ந்து பார்த்தால் சைக்கிள் கீழே கிடக்க அதன்மேல் சாஷ்டாங்கமாக கிழக்கு நோக்கி நமஸ்கரித்த நிலையில் அதிகாரி. நான் சைக்கிளை விட்டு இறங்கி ஓடிப்போய் அவரைத் துக்க முயற்சித்தேன். நம்ம புதுசைக்கிள் பியூனோ ஆர அமர இறங்கி தன் சைக்கிளை பாதுகாப்பாக ஒரு கடையோரம் நிறுத்தி பூட்டிவிட்டு வந்துசேர்ந்தார்.
நான் அதிகாரியின் கையைப் பிடித்து துக்கியதில் அவர் அசையவில்லை. என் பலம் அவ்வளவுதான். அந்த நொடியில் அவர் செத்துப்போய்விட்டாரோ என்று நினைவில் வந்து எனக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது. ஒன்றும் புரியவில்லை. அதற்குள் மோதிய ஸ்கூட்டர்காரரும் வந்து தூக்கிவிட்டு சைக்கிளையும் தூக்கி நிறுத்தினார். நம் அதிகாரி என்ன செய்தார் என்கிறீர்கள். மோதியவரிடம்கூட எதுவும் கேட்கவில்லை. நேராக பெல்லை அடித்துப் பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்.
மோதியவர்பேரில் எந்த தப்பும் இல்லை. அவர் சரியான பாதையில் ஒலிகொடுத்துதான் சீராக வந்திருந்தார். நம்மவர்தான் பெல் அடிக்கும் ஜாலியில் கவனத்தை சிதறவிட்டு விபத்தை ஏற்படுத்திக்கொண்டார்.
இருந்தும், மோதியவர் தாம் சைக்கிளை ரிப்பேர் செய்து தருவதாக சொல்லிப் பெற்றுக்கொண்டு அவரை அலுவலகத்தில் கொண்டுவந்து விட்டுச் சென்றார். நம் அதிகாரியோ கூடவே ஒருவரை அனுப்பி சைக்கிள் முழுவதையும் ஓவர்ஹாலிங் செய்து பெற்றுக்கொண்டார்.
ஒரு நபர் தென்னமரக்குடி எண்ணை வாங்கிவந்து அதனை பக்கத்து வீட்டில் கொடுத்து சூடாக்கிக் கொண்டுவந்து கைகால்களில் தடவிவிட்டார். அதிகாரி போட்டிருந்ததோ வெள்ளை நிற பேண்ட் ஜிகினா சட்டை. கழுத்தில் டை வேறு. சிகரெட் பிடிக்கும் ஆவலைத் தணிக்க முடியாமல் பேண்டில் கைவிட்டு அங்காங்கே திட்டுதிட்டாக பச்சை வண்ணம் வேறு. இருந்தும் அலங்காரம் எல்லாம் செய்துகொண்டு காத்திருந்தார்.
அதோடு விட்டாரா சைக்கிள் வந்துசேர்ந்தவுடன் நேராக சப்கலெக்டரை சந்தித்து ஒரு புகார் கொடுத்துவிட்டார். அதில் ஏற்கனவே நடந்த பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நபர்தான் ஏற்பாடு செய்து இப்படி ஒரு விபத்தினை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கேட்ட சப்கலெக்டருக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை. முன்னதாகவே அவருக்கு இதன் விபரம்தான் சொல்லப்பட்டுவிட்டதே. இப்படிப்பட்ட அலங்காரத்துடன் ஒரு பபூன் அதிகாரியை அவர் வாழ்நாளில் பார்க்க முடியுமா.
இன்னொரு சம்பவம். ஒருநாள் எல்லா அலுவலர்களையும் அழைத்துக்கொண்டு நல்ல மழை நாளில் கிராமத்தில் இடம் பார்வையிடச் சென்றார். மழையில் கணக்குகள் பாழாகிவிடும் என்பதாலும் பாதைகள் சரியாக இருக்காது என்பதாலும் வேறு ஒரு நாள் போகலாம் என்று தடுத்துப் பார்த்தோம். கேட்கவில்லை.
நாலைந்து பேராக கிராமத்திற்கு பஸ்சில்போனோம். ஸ்டாப்பிலிருந்து இரண்டு கிலோமீட்டார் துரம் நடந்துபோய் இடம் பார்த்தோம் நன்கு இருட்டிச்கொண்டது. பாதையும் சரியில்லை.
எங்களை வம்பு செய்து ஒரு பெருந்தனக்காரர் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஆளுக்கு ஒரு செம்பு காப்பி போட்டு வாங்கி குடிக்க வைத்தார். மழை காரணமாக வேறு இடம் பார்க்க முடியாமல் திரும்ப வேண்டிய நிலை.
அங்கு வந்த ஒருவர் நீங்கள் திரும்பிச் செல்வதற்கு, வந்த பாதைக்குப் பதிலாக தெற்கில் உள்ள வாய்க்காலைக் கடந்தால் மெயின்ரோடு வரும் அதிலிருந்து பஸ் பிடித்து போவதுதான் சுருக்கு வழி என்று சொன்னார். மேலும் சிறிது தூரம் நடந்துபோனதும் அவர்சொன்ன வாய்க்கால் வந்தது அதில் தண்ணீர்ஏராளமாக சென்றுகொண்டிருந்தது. அதனைக் கடப்பதற்கு குறுக்காக ஒரு தென்னை மரம் வெட்டிப்போடப்பட்டிருந்தது. சிலர்அதில் சர்வசாதாரணமாகக் கடந்து போய்வந்து கொண்டிருந்தனர்.
அதிகாரி இரண்டு அடிவைத்துவிட்டார். வழுக்கலாக இருந்ததும் அவருக்கு பயம் வந்துவிட்டது. அதனை எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை. நாங்கள் நடந்துவரவேண்டாம் உட்கார்ந்த நிலையில் ஊர்ந்து வந்துவிடுங்கள் என்று ஆலோசனை சொன்னோம். அவரது பயமோ எதையும் செய்யவிடவில்லை. சரி திரும்பிப் போய்விடுங்கள் என்றாலும் கேட்கவில்லை. ஒரு திரைப்படத்தில் வந்ததுபோன்று நடுவில் தடுமாறிக்கொண்டிருந்தார்.
அந்த வழியே வந்தவர் “தைரியமா போங்கய்யா ஆழம் அதிகமில்லை இடுப்பளவுதான்” என்று இலவச ஆலோசனை வழங்கினார். அது கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. ஆனால் அவர் செய்த பின்னிணைப்பு வார்த்தை “வாய்க்காலில் முட்கள் கிடக்கும் ஜாக்கிரதை” என்பதுதான்.
கிழிஞ்சது கிருஷ்ணாபுரம் என்கிறீர்களா. நிலைமை அப்படித்தான் ஆகிவிட்டது அதிகாரிக்கு கைகால்கள் வெடவெடத்து தடுமாற ஆரம்பித்துவிட்டார். ஆலோசனை சொன்னவர் அதிர்ந்துபோய் சரவரவென்று வாய்க்காலில் இறங்கிச்சென்று அவரைக் கையைப்பிடித்து தண்ணீரில் இறக்கி மறுகரையில் விட்டுவிட்டுப் போனார். நனைந்துபோன அதிகாரி கொஞ்சமும் வெட்கப்படாமல் நடந்துவர, பஸ் பிடித்து வந்துசேர்ந்தோம்.
சில சமயம் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலைபார்த்துக்கொண்டே இருப்பார். திடீரென்று எழுந்து சென்று அலுவலகத்தின் திறந்தவெளியில் கிரிக்கெட் மட்டையால் ஒருநபர் ஆட்டமாக சிறிது விளையாடிவிட்டு வருவார். சில சமயம் வந்த ஆசிரியர் யாரேனும் ஒருவர் மாட்டிக்கொண்டு பந்துவீசுவார். இவர் அடிப்பார். பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பர்.
சமயத்தில் தமது துணைவியாரையும் அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிடுவார். அவரை அழைத்துக்கொண்டுபோய் பதிவு வைப்பறையில் தங்கவைத்துவிடுவார். அவரோ அங்குள்ள பேப்பர் நெடிதாங்காமல் போரடித்துப்போய், தலைவன் வரவை எதிர்பார்த்து கதவோரம் நின்றுகொண்டு எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பார். பிரியாணி அது இது என்று ரிக்கார்டு ரூமே டைனிங்ஹால், பெட்ரூம், லிவிங்ரூம் என்று பல அவதாரங்கள் எடுத்துவிடும். நாங்கள் பதிவறையில் ஏதேனும் கோப்பு எடுக்கவேண்டுமெனில் தார்மசங்கடத்துடன் தவிப்போம்.
சமயத்தில் குடும்பத்தார் எல்லாரும் வந்துவிடுவர். அவர்கள் மாலையில் அதிகாரியுடன் கிரிக்கெட் விளையாடுவர். அது தற்காலத்தில் பள்ளிமாணவர்கள் எந்த வரைமுறையும் இல்லாமல் ஒரு சிரிய இடத்திற்குள் நாலைந்துபேர் மட்டும் சேர்ந்துகொண்டு சாலையோரத்தில் விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் போல் இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு செங்கல் மூன்று வேப்பங்குச்சி இவைதான் ஸ்டம்ப்.
அந்த அதிகாரியின் கூத்துக்கள் சொல்லிமாளாது. எப்போதும் அலுவலகத்தில் ஹீரோ. ஜோக்கர், வில்லன் எல்லாமும் அவர்தான். நாங்கள் எல்லாம் டிக்கட் எடுக்காமல் பார்க்க வந்த வி.ஐ.பிக்கள். அலுவலகத்தில் வேலை என்னாவது என்கிறீர்களா. அதுதான் ஒரு இளிச்சவாய் அதிகாரி அவருக்கு முன்னதாக கடுமையாக உழைத்து நிறைய நில எடுப்பு கோப்புகள் தயார் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே. அவற்றை நகாசு செய்து அறிக்கை அனுப்பி வைத்தால் அலுவலகத்தில் வேலை நடப்பதாக உயர் அதிகாரிகள் மெச்சிவிடுகின்றனர்.
எப்போதுமே நமக்கு முன்னதாக ஒரு நல்ல உழைப்பாளி இருந்து வேலை செய்துவிட்டுச் சென்றால் அடுத்து நாம் போய் கால் மேல் கால்போட்டு ஓய்வெடுத்து நற்பெயர் சம்பாதித்து விடலாம்.