"

2

பணிப்பதிவேடு திறப்பு விழா


நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய புத்திசாலித்தனம் எனக்கு இருக்கவில்லை.  ஆனால் பொது அறிவு மற்றும் அரசாங்க வேலைக்குத் தேவையே இல்லாத மற்றபல விஷயங்களில் மட்டும் மெத்தவே இருந்தது. என்னுடன் புதிதாக வந்த செட்டு என்று சொல்லும் ஆறு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலையில் இருந்தோம். வேலைக்கு சேர்ந்தவுடன் எல்லாருக்கும் பணிப்பதிவேடு ஆரம்பித்து பதிவுகள் செய்வது வழக்கம். சொல்லப்போனால் அதுதான் புதிதாக சேர்ந்தவருக்கு வைக்கப்படும் முதல் செலவு என்று சொல்லலாம்.  அப்போது முதல்தான் ஒரு அலுவலர்  யார் யார் தலையைத் தடவுவது என்றெல்லாம் முதன்முதலாகக் கற்றுக்கொள்கிறார் என்று சொல்லவேண்டும்.

சரி. விஷயத்திற்கு வருவோம். நான் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது.  பணிப்பதிவேடு ஆரம்பிக்கவேண்டும் என்று அக்கரை ஏதும் இல்லாமல் ஜாலியாக போய் வந்துகொண்டிருந்தேன். என் நண்பர்கள் ஐவரும் வந்து என்னை திட்டிய பின்னர்தான் எனக்கு சற்று உரைத்தது. எல்லாரும் அக்கவுண்டண்ட்டிடம் சென்று குழைந்து பேசி கோரிக்கை வைத்தோம். அவர் உடனே எங்களோடு டீ சாப்பிடக் கிளம்பி வந்துவிட்டார்.  ஆச்சு. டீ என்றால் டிபனும் சேர்ந்துதான் போலும். எல்லாரும் ஆளுக்கு ஒரு எஸ். ஆர் (பணிப்பதிவேடு) வாங்கி வந்துவிடுங்கள் என்றார்.

எல்லாரும் ஆளுக்கு ஒரு பதிவேட்டுடன் அக்கவுண்டண்ட் முன்பு ஆஜரானோம். அப்போதும் டீ சொல்லுங்க என்றார். பிரிவில் உள்ள எல்லாருக்கும் டீ சப்ளை முடிந்தது. நல்ல நேரம் பார்த்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டது.

அடுத்து நேர்முக உதவியாளரின் ஒப்புதல் பெறப்பட்டால்தான் அந்த பதிவேடு சட்டப்படி செல்லத்தக்கதாகும்.

எல்லோரும் மாலையில் நேர்முக உதவியாளர் முன்பாக ஆஜரானோம். அவர் ஒவ்வொருவரிடமாக விசாரித்து பதிவேட்டில் உள்ள விபரங்களை சரிபார்த்து ஒப்புதல் அளித்தார்.

என் முறை வந்தது. சொந்த ஊர் திருநெல்வேலி என்று இருந்ததைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

“திருநெல்வேலி என்று உள்ளதே அங்கு நீங்கள் எந்த இடம்”

“திருநெல்வேலி டவுண்தான்”

“அங்கே எந்த இடம்”

“கலெக்டார் ஆபீசுக்கு அருகில் கொக்கிரகுளம் என்ற சிறிய ஊர்”

“அங்கே எந்த இடம்”

“கிருஷ்ணன் கோயில் அருகில்”

“யார் வீடு”

“சு.பா.வி வீடு”

“ஓகோ“

நேர்முக உதவியாளர் குறும்பாகச் சிரித்துவிட்டு குடும்பார்த்த விபரங்களை கேட்டுவிட்டு ஒப்புதல்செய்து கொடுத்துவிட்டார். அவர் ஏன் குடும்பார்த்த விபரங்களை நம்மிடம் மட்டும் கேட்கிறார் என்று எனக்கு புரியவில்லை.

மறுநாள் என் மாமாவிற்கு தகவல் வந்துவிட்டது. அவர் என்னிடம் பி. ஏ. என்ன கேட்டார் நீ என்ன பதில் சொன்னாய் என்று கேட்டார்.  அப்போதும் ஒன்றும் புரியவில்லை.  அதன்பின்னர் சிலதினங்கள் கழித்துதான் விபரம் தெரிந்தது. பி.ஏ. அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்றும், அங்கே வேலைபார்த்துவிட்டு பதவி உயர்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக வந்தவர் என்றும்.  நான் அசட்டுத் தனமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடத்தை கிராமம் என்றும்  அதைப்பற்றி அவருக்கு தெரியாது என்றும் நினைத்து உளறி இருக்கிறேன்.

பொதுவாக, புதிதாக ஒரு அதிகாரி வந்தால் அவர் குலம் கோத்திரம் எல்லாம் விசாரித்து அதற்குத் தகுந்தபடி தங்கள் குலம் கோத்திரம் எல்லாம் ஒத்துப் போய்விட்டால் போதும் நேராகப் போய் நீங்கள் என் பேத்தியின் நாத்தனாருக்கு ஓரகத்தியின் மகனுக்கு ஒன்றுவிட்ட சகோதரிக்கு சம்பந்தி வீட்டாரின் சொந்தக்காரருக்கு மிகவும் நெருங்கிய சொந்தம் என்று தங்களின் நெருங்கிய சம்பந்தத்தை விவரித்து ‘காக்கா’ பிடித்துக் கொள்வது வழக்கம். அதுபோல் திருநெல்வேலியில் இருந்து வந்தவர்கள் எல்லாரும் அவர் பணியேற்றவுடன் சொந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த டெக்னிக்தான் நமக்கு தெரியாதே. அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த டெக்னிக் எந்த கல்லூரியில் சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாததால் இன்று வரையிலும் நான் இப்படித்தான் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன்.

எனது உறவினர் ஒருவர் ஒருநாள் என்னை பார்த்துவிட்டு பி.ஏ. கேட்டதற்கு இப்படி பதில் சொன்னாயாமே என்று கேட்டபோதுதான் எனக்கு விபரம் விளங்கியது. அதுமுதல் பி.ஏ. கண்ணில் எப்படியும் பட்டுவிடக்கூடாது என்று சுற்றிக்கொண்டு வெளியே போவது வழக்கமாகிவிட்டது.  அவர் மாற்றலாகிப் போனது வரையிலும் அவர் கண்ணில் படவே இல்லையே. எப்படி என் சாமர்த்தியம்!

ஆனால் ஒன்று, எங்கள் ஆறுபேரையும் நேர்முகமாக விசாரித்து பணிப்பதிவேட்டில் ஒப்புதல் செய்தபோது அவர் சொன்னது சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகியும் என் மனதை விட்டு நீங்கவில்லை.

“இப்போது நீங்கள் எல்லாரும் எஸ்.ஆர் ஒப்பன் செய்ய என்னிடம் வந்திருக்கிறீர்கள்.  இந்த நேரத்தில் நான் எஸ்.ஆர் ஓப்பன் செய்தது நினைவுக்கு வருகிறது. எனக்கும் கலெக்டர் பி.ஏ. தான் எஸ்.ஆர் ஓப்பன் செய்தார். அவர் சொன்னார். ‘நான் உனக்கு எஸ்.ஆர் ஓப்பன் செய்தது போன்று நீ நன்கு முன்னேறி என்னைப்போல் ஒரு பதவிக்கு வரவேண்டும். நீயும் பலருக்கு எஸ். ஆர். ஓப்பன் செய்ய வேண்டும்’ என்று வாழ்த்தினார். அப்போது அவர் சொன்னது இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. அதுபோல் நீங்களும் எல்லா தேர்வுகளும் எழுதி நல்லபடியாக பணி செய்து பலருக்கு எஸ்.ஆர் ஓப்பன் செய்யும் வகையில் பதவி உயர்வு அடையவேண்டும்.” என்று மனமாற வாழ்த்தினார்.

அந்த வாழ்த்து அப்படியே பலித்து நானும் வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்று சிதம்பரம் ஆதி திராவிடர் நலத் தனி வட்டாட்சியராகப் பணியில் சேர்ந்து பல ஆசிரியர்களுக்குப் பணிப்பதிவேடு துவங்கி வைத்ததும் அல்லாமல் அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி அதே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். அந்த ஒரு நிறைவும். சந்தோஷமும் என் வாழ்நாள் முடியும் வரையிலும் நினைவில் நிற்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த நல்ல அதிகாரியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதுதான் அவருக்கு நான் செலுத்தக்கூடிய நன்றிக்கடன்.

அவரது திருப்பெயர் ஆர். அழகப்பன், பி.ஏ. உண்மையில் அவருக்கு அவரது பெற்றோர் அவரது மனதின் அழகின் அடிப்படையில்தான் அழகப்பன் என்று பெயர் வைத்திருக்கவேண்டும். அவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்த காலத்தில் யாரும் அவரைப்பற்றி சிறு குறைகூட சொன்னதில்லை.

இப்போதும்கூட அன்று முதன் முதலாக அவர் முன்பு எத்தனை துரம் வழிந்திருக்கிறோம் என்று நினைத்தால் சிரிப்புத்தான் வருகுதைய்யா.

இதே போன்ற பணிப்பதிவேடு திறப்பு விழா சுமார் பத்து அண்டுகள் கழிந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அது முற்றிலும் வித்தியாசமானது.

நுற்றுக்கணக்கான கிராம நிர்வாக அலுவலர்கள் பணியமர்த்தப்பட்ட நேரம். அவர்களுக்குப் பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்.  சற்று மிகுதியான வேலைதான். இருந்தாலும் அது கடமைதானே.  ஆனால் அதனை ஒரு பெரிய பாராங்கல்லை ஒற்றைக் கையால் தூக்கி வைப்பது போன்று பில்டப் கொடுத்து ஒவ்வொரு வி.ஏ.ஓ-வும் ஒரு பணிப்பதிவேடும் முப்பது ரூபாயும் கொண்டுவரவேண்டும் என்று வசூலித்துவிட்டார் அந்தக் கில்லாடி. இந்தத் தகவல் பரவி மாவட்டம் முழுவதும் அதே ரேட்டை பிக்ஸ்பண்ணி ஒரு அடி அடித்துவிட்டனர் மக்கள்.

ஏதோ என் காலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியதாலும் நல்ல அதிகாரிகள் இருந்ததாலும் சுலபமாக பணிப்பதிவேடு துவங்கப்பட்டது.  அதே கீழ் நிலை அலுவலகங்களில் பணியில் சேருவோர் பணிப்பதிவேட்டுக்காக அலைந்து திரிந்து வாங்கி வருவதும் அதனை பதிவுசெய்து துவங்கி வைக்க எஸ்டாபிளிஸ்மெண்ட் குமாஸ்த்தா பிகு பண்ணுவதும் அதற்காக டீ, டிபன் செலவு வைப்பதும் சகஜம்.

பணிப்பதிவேடு என்றதும் ஒரு முக்கிய விஷயம் சொல்லவேண்டும்.  இது 1974ல் நடந்தது.  நான் டெஸ்பாட்ச் பிரிவில் பதிவுத்தபால் அனுப்பும் வேலையில் இருந்தேன்.  அந்நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தினமும் நூற்றுக் கணக்கில் பதிவுத் தபால்கள் அனுப்பப்படும். அதற்காக தபால் அலுவலகத்தில் நடப்பது போன்று எல்லா வேலையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே செய்யப்பட்டுவிடும். அது ஒரு குட்டி தபால் ஆபீஸ்.

டி பிரிவு ஹெட்கிளார்க் வந்தார். தம் கண்முன்பாகவே ஒரு பணிப்பதிவேட்டை கவர் போட்டு ஸ்டாம்ப் ஒட்டி பதிவுசெய்து தன்னிடமே கொடுக்கும்படி வற்புறுத்தி வாங்கிக் கொண்டுசென்றார்.  பின்னர் அவர் சொன்ன தகவல்.

ஒரு நல்ல மனிதர். அதுவும் ரொம்ம்ம்ம்ப நல்ல மனிதர். நமது மாவட்டத்திலிருந்து பணி உயர்வில் சென்றார்.  அவரது பணிப்பதிவேடு தபாலில் அனுப்பப்பட்டது.  ஆனால் காணாமல் போய்விட்டது.  அடுத்து அவரது பணிப்பதிவேட்டை புனர் நிர்மாணம் செய்து அனுப்பி வைத்தனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து.  ஆனால் துரதிருஷ்ட வசமாக அதுவும் காணாமல் போய்விட்டது.  அவர் எவ்வளவு நல்ல மனிதராக இருந்தால் இரண்டு முறை காணாமல் போயிருக்கும்.  பலருக்கும் கெடுதல் செய்த அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் அவர்.

ஆனால் பணிப்பதிவேட்டினை மீண்டும் தயார் செய்து அனுப்பவேண்டிய கட்டாயத்தில் அந்த ஹெட்கிளார்க்கு தமது சொந்த பொருப்பில் மீண்டும் தயார் செய்து அனுப்பி வைத்தார்.

இதேபோன்று இன்னொரு நிகழ்ச்சி.   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் பணிபுரிந்தவார்கள் எல்லாருக்கும் ஏற்பட்டது.  அவர்களின் பணிப்பதிவேட்டில் ‘நடுவுல கொஞ்சம் பக்கங்களைக் காணோம்’.  ஆனால் விபரம் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாரும் அந்த பிரிவு எழுத்தரிடம் சண்டை பிடித்துவிட்டனர். கடைசியில் அவரது பணிப்பதிவேட்டிலும் சில பக்கங்கள் காணோம்.

அப்புறம்தான் தெரிந்தது.  அந்த அலுவலக அதிகாரியின் கைவண்ணம் என்று. அவரவருக்கும் ஏதாவது காரணம் பற்றி பணிப்பதிவேடு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட போது அந்த அதிகாரி சத்தமில்லாமல் சில பக்கங்களைக் கிழித்து எடுத்துவிட்டார்.  இது விபரம் தெரியாமல் கடைசியில் அந்தப் பக்கங்களில் செய்திருக்க வேண்டிய பதிவுகள் குறித்து விபரம் கேட்டு அவரவரும் அந்நாளில் வேலை பார்த்த அலுவலகங்களில் போய் அல்லாடிக் கொண்டிருந்தனர்.

இம்மாதிரியான அதிகாரிகளை முதலில் பதம் பார்த்திருக்க வேண்டாமா?  அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர்.  எவ்வளவு அடித்தாலும் தாங்குறவன்தான் வருவாய்த்துறை அலுவலன்.

பணிப்பதிவேடு எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அது தம்முடைய பணிப்பதிவேட்டுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று இருப்பவர்கள் பலர்.

சில சமயம் அனுப்பப்படும் பதிவேடு தமது பிரிவுக்குத் தவறாக வந்ததென்றால் அதனை உடனடியாக திருப்பித் தரமாட்டார்கள். அதனை எடுத்து ஒரு மூலையில் வைத்துவிட்டார் என்றால் அதன் பின்னர் அது ‘இனி அவுக்காக் கட்டாக’ மாறி அங்கேயே கிடைக்கும்.  சம்பந்தப்பட்டவர் திக்குத் திசை தெரியாமல் திண்டாடி அதிர்ஷ்டவசமாக கண்டுபிடித்தால்தான் உண்டு.  சில சமயம் சிலரது பணிப்பதிவேடுகள் பிரோவுக்கு அடியில் எல்லாம் கிடந்தது உண்டு.

ஒரு வித்தியாசமான சம்பவம்.  நான் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தபோது நடந்தது.

அங்கு பிரிவு எழுத்தர் விரைவில் ஓய்வு பெறும் நிலையில் இருந்த பெண்மணி.  அவர் ஆடிட் பார்ட்டி வருகிறார்கள் என்பதால் எல்லா பதிவேடுகளையும் சப்கலெக்டர் ஒப்புதல் பெற்று அடுக்கி வைத்திருந்தார்.  ஆடிட் எல்லாம் முடிந்து பத்து நாள் கழித்து திடீரென்று ஒரு குண்டைப் போட்டார்.  “சார் என்னோட எஸ்.ஆரைக் காணோம்”.   அவர்தானே பொருப்பு.  அதற்காகவே அவருக்கு யாரும் திறக்கமுடியாத ஸ்டீல் பீரோ கொடுக்கப்பட்டிருந்தது.

எல்லா பிரிவிலும் தேடிப்பார்த்து ‘இல்லை’ என்று சொல்லிவிட்டனர்.  ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.  குமாஸ்த்தாவோ யாரும் இல்லாத நேரத்தில் மற்ற குமாஸ்த்தாக்களின் ரிக்கார்டுகளை துளாவிப் பார்க்க, அதுவேறு பிரச்சினையாகிவிட்டது.  அவரவரும் ஏதோ தம்மை சந்தேகிப்பதாக அர்த்தம் செய்து கொண்டனர்.  இதற்கிடையில் தங்கள் பதிவேட்டை தங்களிடமே கொடுக்கும்படி ஒவ்வொருவரும் கேட்கத் துவங்கினர்.  யாராவது தமது பதிவேட்டை தாமே தொலைப்பாரா?

இப்படியாக ஒரு மாதம் சென்றது.  இதற்குள் மந்திரம் முடிகயிறு எல்லாம் வந்து சேர்ந்தது.  என்னிடம் விசாரணைக்காக வந்த ஒருவர் தமக்கு மந்திரம் தெரியும் என்றுசொல்லி ஏதோ ஜெபம் செய்து அது இருக்குமிடம் நிறைய பேப்பர் பேப்பராக வருவதாக ஒரு கதை விட்டார்.  வருவாய்த்துறை அலுவலகத்தில் பேப்பரைத் தவிர தங்கக் கட்டியா கொட்டி வைத்திருக்கிறது.  குமாஸ்த்தாவுக்கு தினமும் துக்க விசாரிப்புகள் இலவச ஆலோசனைகள் என்று ஒரே கலக்கல்தான்.  அவர்கள் சொன்னபடி சிலபல கோயில்களுக்கெல்லாம் போய்வந்தார்.

ஒரு நாள் சற்றே சோம்பலாக உட்கார்ந்திருந்த பி.ஏ. திடீரென்று எழுந்தார். என்னையும் பதிவறை எழுத்தரையும் அழைத்துக்கொண்டார்.  பதிவறைக்குள் சென்று ஒவ்வொரு ரேக்காக ஒரு கண்ணோட்டம்விட்டார். ஒரு ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பச்சைக் கலர் அட்டை ஒட்டிய கட்டுகளை இறக்கச்சொன்னார்.  பார்த்தால் அதன் நடுவே. பச்சை பயிண்டு செய்த பதிவேடு ஓய்வு பெற்றவர்களின் பதிவேடுகளுக்கு இடையில் இருந்தது.  ஒரு பதினைந்து நிமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.  அலுவலகமே ஒரே கொண்டாட்டம்தான்.

அந்த குமாஸ்த்தாவோ குறி சொன்னவரைப்பற்றி புகழ்ந்து தள்ளினார்.  ஆனால் இரண்டு தினங்கள் கழித்து ஒரு சந்தேகத்தினைக் கிளப்பினர் மக்கள். “அத்தனை நாள் தேடியும் கிடைக்காத அந்த பதிவேட்டை பி.ஏ. எப்படி டக்கென்று கண்டுபிடித்தார். ஒரு வேளை அவர்தான் அதனை ஒளித்துவைத்திருப்பாரோ” என்று.

எப்பவுமே உதவி செய்பவனுக்கு ஒரு சிறு பழியாவது வந்து சேரும். அது இயற்கை. அதனை மாற்ற இயலாது.  அவர் ஒரு நாள்கூட பதிவறைக்குள் வந்தவரல்ல.  பதிவறை சாவிகூட அவரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.  அவர் குயுக்தியாக ஆடிட்டுக்கு வந்த பதிவேடுகள் ரிக்கார்டுகளில் கலந்து இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்  போய்ப்பார்த்து கண்டுபிடித்துவிட்டார்.

உண்மையில் நடந்ததும் அதுதான் பதிவேடுகளைக் கொண்டுவந்து ஆடிட் பார்ட்டியிடம் காண்பித்தவர். தவறுதலாக பணிப்பதிவேட்டையும் கொண்டுபோய் அடுக்கிவிட்டார் பதிவறையில்.  கடைசியில் கண்டுபிடித்தவார் தலையில் பழி.