"

20

சப்ளை அண்டு சர்வீஸ். 


 பொதுவாக எல்லா அதிகாரிகளும் கீழே உள்ளவன் செலவில் எப்படி வயிறு வளர்ப்பது என்பதிலேயே குறியாக இருப்பர்.  அதிலும் கொஞ்சம் இளிச்சவாயன் கிடைத்துவிட்டான் என்றால் போதும். சினிமாவில் வரும் வடிவேலு ஓட்டிலில் ஒரு குழந்தையை ஏமாற்றி சாப்பிட்டுவிட்டு அதோடு வீட்டுக்கும் பார்சல் கட்டி எடுத்துச் செல்ல முயற்சிப்பதுபோல் வீட்டுக்கு பார்சலும் கட்டியவர்களும் உண்டு.

ஒரு அதிகாரி இருந்தார். நான் வருவாய் ஆய்வாளராக இருந்த சமயம். அவர் எனக்குக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  அந்த நேரம் நிலவரி கடன் என்று அரசு பாக்கிகள் வசூல் பணி மிக கெடுபிடியாக இருந்தது.

ஒவ்வொரு கண்காணிப்பு அதிகாரியும் அதிகாலையில் கிராமங்களுக்குச் சென்று வசூல் பணிகளைக் கண்காணித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து வேலை பார்ப்பர். எனக்கு வாய்த்தவரோ பகல் பன்னிரண்டு மணிக்கு கேம்ப் கிளம்புவார். ஜீப்பில் நாலைந்து கிராமங்களுக்குப் போய் ‘நானும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதாக படம் காட்டிவிட்டு தலைமையிடத்துக்கு வந்துவிடுவார். வண்டி நேராக முனியாண்டி விலாசுக்கு போய்தான் நிற்கும். மற்ற இடத்தில் பிரேக் பிடிக்காது. டிரைவர், ஓ.ஏ. சகிதமாக உள்ளே புகுந்து ஒரு பிடி பிடிப்பார். எல்லாம் ஆர்.ஐ. கணக்குத்தான்.  சாப்பிட்டுவிட்டு நேராக தமது இருக்கையில் போய் உட்கார்ந்து தம் பிரிவு வசூல் வேலைகளைப் பார்ப்பார். அவரால் அரசாங்கத்திற்கு அன்றைய வசூல் பூச்சியம்.  வருவாய் ஆய்வாளருக்கு செலவு நூறோ நூற்றைம்பதோ.சில சமயம் கி.நி.அ.-கள் கைகொடுப்பர்.  ஆர். ஐ. தப்பிப்பார்.

சில நாட்களில் அவருக்கு குஷிவந்துவிடும். கூட வந்த தலையாரிகளையும் வி.ஏ.ஓவையும் சாப்பிட அழைப்பார். அவர்கள் மருகுவர். இவரோ கூச்சப்படாதே உன்னைவிட்டு சாப்பிட மனது வரவில்லை என்று ஆர்.ஐக்கு செலவு வைக்க முயற்சிப்பார்.

வாரத்தில் இரண்டு நாளாவது நேராக ஒரு கிராமத்திற்குப் போவார். ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்பாக வண்டி நிறுத்தப்படும்.

அங்கே ஒரு பெண். அவர் ஏற்கனவே சாராயக்கடை நடத்திய தைரியசாலி. அவரும் நிறைய பாக்கி வைத்திருந்த பேர்வழிதான். அவரிடம் பணம் கட்டுங்க என்று குழைந்துகொண்டு கேட்பார். அவரும் அதிகாரி வந்திருக்கீங்க சாப்பிட்டுப் போங்க பணம் கட்டிடலாம் என்று சமாதானம் சொல்வார். உடனே இருவரும் நட்பு ரீதியாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பர். வேறென்ன ஜொள்ளுதான். இந்த லொள்ளு தாங்க முடியாமல் அந்த கிராமத்தைத் தவிர்த்தாலும் உடன் வரும் ஒரு குமாஸ்தா உதவியாளர் கரெக்டாக அந்த இடம் வரும்போது நினைவூட்டுவார். இப்படியாக நம் வேலையையும் கெடுத்து தானும் வேலை செய்யாமல் படுத்துகிறாரே என்று பொருமுவோம் நாங்கள்.

ஒருநாள் அவர் தண்ணீர் வாங்கிக் குடித்த டம்ளர் கைநழுவி கீழே விழுந்துவிட்டது. ஒரே எண்ணைப் பசை. இவர் டம்ளரை நன்கு கழுவிக் கொடுக்கக்கூடாதா என்றார்.  எனது தலையாரி அவரிடம் ரகசியமாக “அது ஒண்ணுமில்லைங்க அய்யா, ஞாயிற்றுக் கிழமையில் இங்கேயெல்லாம் பன்றி இறைச்சி சாப்பிடுவாங்க. அது மறுநாளும் எல்லா பாத்திரத்திலும் கொழுப்பு பிசுபிசுக்கும்” என்று சொல்லிவிட்டார்.  அதிகாரிக்கு குமட்டிக்கொண்டு வந்துவிட்டது.

அன்றுமுதல் அந்த வீட்டில் போய் நின்றிருக்கமாட்டார் என்று நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.  அதன் பின்னரும் அங்கு போய் உட்கார்ந்துகொண்டு தமக்கு சாப்பாடு வேண்டாம் என்றும் பலாப்பழம் கொடு, வாழைப்பழம் கொடு, மல்லாட்டை (மணிலா கொட்டை) கொடு என்று ஜொள்ளுவிட ஆரம்பித்துவிட்டார். ஒருநாள் அவர் ஒரு தாம்பாளம் நிறைய உரிக்காத மணிலாவை லேசாக சூடுகாட்டி வைத்துவிட்டார். இவர் சாப்பிட்டுப் பார்த்தார். ஒன்றும் சரி வரவில்லை. எல்லாத்தையும் ஒரு பொட்டலம் கட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

அப்போதுதான் எயிட்ஸ் என்ற நோய் பயங்கரமாகப் பயமுறுத்திய நேரம். என் நண்பர் ஒருவர் அந்தக் கிருமிகளைப் பற்றி இப்படி புகழுவார். சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு “இந்த சிகரெட் நெருப்பில் பட்டால்கூட எயிட்ஸ் வைரஸ் உயிரோடிருக்கும் தெரியுமா. அதை அழிக்க இன்னும் மருந்து வரவில்லை.  கண்டுபிடிக்கவும் முடியாது தெரியுமா” இலவசமாகவே எயிட்ஸ் எதிர்ப்பு பிரச்சாரம் செய்வார்.

என்னிடம் வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலர், ஒருநாள் அதிகாரியிடம் “அய்யா அந்த ஏரியாவெல்லாம் போய் பழகாதீங்கய்யா.  இங்கெல்லாம் எயிட்ஸ் ரொம்ப சர்வசாதாரணம். நாங்கள்ளாம் இந்தப் பக்கம் யாரிடமும் வச்சிக்கறதே இல்லை. கண்டாலே ஓடுறோம் நீங்க வரதால இங்க வரவேண்டியதா இருக்கு” என்றார்.  தலையாரியும் ஆமாங்கய்யா என்றார் பாருங்க. அதோட சரி. வண்டி அப்புறம் கோர்ட்டில் ஸ்டே வாங்கியது மாதிரி நேராகப் போய்விடும்.

சரி ஒரு தொல்லை விட்டது என்று பார்த்தால் அடுத்த தொல்லை ஆரம்பமாயிடுத்து. என்றோ ஒரு நாள் பக்கத்து ஊரில் போய் சாப்பிட்டிருக்கிறார்.  அதை வைத்துக்கொண்டு நேராக அங்கே போய் அங்கிருந்த ஒரு பெண் வருவாய் ஆய்வாளருக்கு தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டார் புண்ணியவான்.  அங்கு போய் உட்கார்ந்துகொண்டு அந்த கடையில் பிரியாணி வாங்கிவாருங்கள் என்று கேட்டு அவர் வேலையைக் கெடுக்க ஆரம்பித்துவிட்டார். அதற்கும் ஒரு சதியாலோசனை நடத்தி ஒருவர் மூலம் “அய்யய்யோ அந்த கடையிலேயா போய் சாப்பிடுறீங்க அங்கே சமயத்தில் பெருச்சாளிக் கறியெல்லாம் கலந்து போடுறான்.  நாங்கள்ளாம் அந்த கடைக்கு டிபன் சாப்பிடக்கூட போகமாட்டோம்” என்று சொல்லிவிட்டோம். அதோடு விட்டது தொல்லை. அவ்வப்போது என் செலவில் முனியாண்டி விலாஸ் சாப்பாட்டுடன் போயிற்று.

மனிதனின் மனதில் பயமோ குழப்பமோ விதைத்துவிட்டால் அப்புறம் பிரச்சினையை சுலபமா சமாளித்துவிடலாம்.

யாராவது அதிகாரி வந்தால் கீழே இருப்பவர்கள் காக்கா பிடிப்பதற்காக தமக்குக் கீழே இருப்பவரிடம் இண்டெண்ட் வைத்து வசூல் செய்து அதிகாரியின்பேரில் கரிசனத்துடன் வாங்கி வந்திருப்பதாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு தாமும் புறங்கையை நக்கிக்கொள்வார். சிலர் அதிகாரி பெயரைச் சொல்லி முழங்கை வரையிலும்கூட நக்கிக்கொள்வதுண்டு. யார் போய் அதிகாரியிடம் கேட்கப் போகிறார்கள் என்ற தைரியம்தான்.

ஒரு துணை கலெக்டர் புதிதாக வந்து சேர்ந்தார். நல்ல மாதிரியானவராகவே காணப்பட்டார்.  எனது தாசில்தாரோ கொஞ்சம் அப்படி இப்படி.  அதனால் முதல் கேம்ப் வந்து சென்றவுடன் என்னை அழைத்து அதிகாரிக்கு பழங்கள் வாங்கி அனுப்பினாயா என்றார்.  நானும் அப்பாவியாக அதெல்லாம் இதுவரை இல்லை. புதிய பழக்கம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.   தாசில்தாரோ “அதான் அய்யா போகும்போது மூஞ்சி சுழிச்சமாதிரி போனார் போல. நீ என்ன செய்றே…. கொஞ்சம் ஃபுரூட்ஸ் வாங்கிக்கொண்டுபோய் பங்களாவில் கொடுத்துவிட்டு வா” என்று துரத்தினார் என்னை.

எனக்கு வந்ததே கோபம்.  யாரிடம் காட்டினேன் தெரியுமா?  எனக்குள் ஒருவன் பொருமிக்கொண்டே இருக்கானே, அதான் என் மனம். அவனிடம் வடிவேலு பாணியில் இதெல்லாம் உனக்கு தேவையா… தேவையா… என்று ஒரு கத்து கத்திவிட்டு நேராக பங்களாவுக்குப் போனேன். டிரைவரிடமும் டபேதாரிடமும் இன்ன சமாச்சாரம் என்றேன். அவர்கள் இருவரும் அய்யா ரொம்ப நல்லவர். ரொம்ப சிம்பிளானவர். அவர் எதுவும் எதிர்பார்க்கவில்லை. நீங்கபாட்டுக்கு போங்க என்று சொல்லிவிட்டனர்.

அடுத்தடுத்து அதிகாரி வரும்போதெல்லாம் தாசில்தார் எனக்கு உத்திரவிடுவதும் நான் நேரில் அய்யாவிடம் கொடுத்துவிட்டேன் என்பதுமாக சில முறை நடந்ததும் எப்படியோ தாசில்தாருக்குத் தெரிந்துவிட்டது. அப்புறம் இந்த வேலையெல்லாம் வைத்துக் கொள்வதை விட்டுவிட்டார்.  ஒருநாள் அய்யா சாப்பாடு வாங்கிவரச் சொன்னார் என்று டபேதார் வந்தார்.  நானோ “வி.ஐ.பி வந்தால் சாப்பாடு போடுவேன். மற்றவர்களுக்கு எல்லாம் போடமாட்டேன். போய் சொல்” என்று சொல்லிவிட்டேன். என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தாசில்தாரிடம் சொல்லிவிட்டனர். அதன் பின் என்னிடம் கடுகடுவென்றுதான் இருந்தார்.  ஆனால் எதுவும் கொஞ்சகாலம்தான். ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எம்.எல்.ஏவின் அதிருப்திக்கு ஆளாகி மாறுதலில் போய்விட்டாரோ,  நானும் தப்பிச்சேனோ.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும்.  நான் ஆர்.ஐ.யாக பணியேற்கும்போதே என் வீட்டில் “நான் சம்பளம் வாங்கி மீந்தால்தான் தருவேன். மற்றபடி என் சம்பளத்தை எதிர்பார்க்கக்கூடாது” என்ற கண்டிஷண் அடிப்படையில்தான் வந்து சேர்ந்தேன்.  நான் வந்த நேரம் பெயர் அறியாத அந்த ஊருக்கு உலகம் முழுக்க தெரியும் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்து  டில்லியிலிருந்தெல்லாம் முக்கியப் பிரமுகர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.  எந்த வி.ஐ.பி – துணை கலெக்டர் உட்பட – யார் வந்தாலும் ஆர்.ஐ. தலையில்தான் செலவு விடியும் அந்த நாளில். என் சம்பளத்தை வாங்கி ஓட்டல் அக்கவுண்டை அடைக்கத்தான் சரியாக இருந்தது.

ஆபீசிற்குள் ஆர்.ஐ. வந்தாலே உடனே முக்கிய குமாஸ்த்தாக்கள் முதல் அதிகாரி வரை டீ பிஸ்கட் கேட்பர்.  சில சமயம் ஆர்.ஐ.யை தள்ளிக்கொண்டுபோய்  டிபனும் சாப்பிட்டுவிடுவர். இரண்டு கையாலும் சம்பாதிப்பவர்களுக்கு அதெல்லாம் கட்டுப்படியாகும்.  அதற்கெல்லாம் நான் என்ன செய்ய. அதனால் ஆபீசில் நுழைந்தவுடன் யாராவது என்னிடம் உரிமையாக டீ கேட்டால் ஆர்.ஐ. என்ற முறையில் கேட்கிறாயா என்னிடம் நடக்காது. நண்பர் என்ற முறையில் கேட்கிறாயா என்னிடம் காசு இல்லை நீ வாங்கிக்கொடு என்று சொல்லிவிடுவேன். இது எனக்கு முன்னதாக ஆர்.ஐ.யாக இருந்த என் நண்பனின் டெக்னிக். அதை அப்படியே பிடித்துக்கொண்டேன்.

இப்படியெல்லாம் இருந்தும் கடைசி ஆறு மாதம் பெரும்பாலும் மதியம் நான் சாப்பிடாமல் இருந்துதான் எனது ஓட்டல் அக்கவுண்டுகளை பைசல் செய்துவிட்டு வரவேண்டியதாகியது என்றால் யாராவது நம்புவார்களா.

இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி.  ஒரு முறை வங்கக்கடலில் ஏற்பட்ட புயலானது போகும் வழி தெரியாமல் சிதம்பரம் வழியாகப்போனால் சீக்கிரம் போகலாம் என்று நினைத்து கரைகடந்து போய்விட்டது. ஏகப்பட்ட சேதம்.

இந்த புயல் வெள்ளம் என்று இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அது அடித்து ஓய்ந்து வெள்ளம்கூட வடிந்திருக்காது.  அங்கே மேலே உட்கார்ந்துள்ள சுகவாசி அதிகாரிகளுக்கு கீழே என்ன நடந்தது என்றுகூட தெரியாது.  இருந்த இடத்திலிருந்தே உடனடியாக சேதத்தின் மதிப்பு என்ன என்று கேட்பர். ஊருக்குள்ளேயே போக முடியாதவர்கள் அதிகாரிகளின் பிடுங்கல் தாங்காமல் ஏதோ ஒரு புள்ளிவிபரத்தை அந்த நேரத்தில் கொடுத்துவிடுவர். இருக்கும் கீழ் நிலை அதிகாரிகளும் “மானுக்கு ஒரு புள்ளி ஏறுனா என்ன  இறங்கினா என்ன கொடு பார்த்துக்கலாம்” என்று ஊக்குவிப்பர். அவர்தானே மேலேயிருந்து பாட்டு வாங்குபவர் அதனால் அவர் குறுக்கு வழி தெரியாதவனுக்கு சொல்லிக்கொடுத்து தப்பித்துக் கொள்வார்.  அப்புறம் எப்படி சரியான நிவாரணம் கிடைக்கும். தில்லுமுல்லு நடக்காமல் இருக்கும்.

இந்த முறை பலத்த சேதம். மழை பெய்ய ஆரம்பித்தவுடன் சிதம்பரம் ஆர்.டி.ஓ. மழை இப்படிப் பெய்கிறதே நான் போய் வெள்ளம் வரக்கூடிய இடங்களை ஆய்வு செய்கிறேன் போர்வழி என்று சேத்தியாதோப்புக்கு போனார்.  ஆனால் வரவில்லை. அதற்குள் வெள்ளம் பெருகி ரோடுகள் அடித்துக்கொண்டு போய்விட்டது. அவர் எந்த வழியாகவும் வரமுடியவில்லை. அப்படிப்பட்ட வெள்ளம் அது. போதாக்குறைக்கு புயல் அடித்து கொஞ்சம் நஞ்சமிருந்த மரங்களும் சாய்ந்துவிட்டது. சிதம்பரம் பகுதி எல்லா வகையிலும் தீவாக மாறிவிட்டது. கலெக்டரோ கால்நடையாகவும் பல வகையிலும் வந்து சேர்ந்து நிவாரணப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு வாரமாக சிதம்பரத்தில் மின் சப்ளை கிடையாது.  குடிநீர் கிடையாது. எல்லா வகையிலும் ஒரு பாலைவனம் போல் ஆகிவிட்டது.  இப்படிப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து பெரிய அதிகாரியை நிவாரணப் பணி பார்க்க அனுப்பி விட்டனர்.

பெரிய அதிகாரி வந்துசேர்ந்தார் எப்படியோ. வந்தவருக்கு சாப்பாடு போடவேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் ஊருக்குள்ளேயே வர வழி தெரியவில்லை. எல்லாரும் கஞ்சிகாய்ச்சிக் குடிக்கும் நிலை. அதிகாரிக்கு எப்படியோ சமையல் செய்து சாப்பாடு போட்டார் ஆர்.ஐ.  நாமாயிருந்தால் இதாவது கிடைத்ததே என்று சாப்பாடு போட்ட புண்ணியவானை வாழ்த்திவிட்டு போவோம்.  சொகுசாக இருந்த அதிகாரியை இப்படி கஷ்டத்தில் மாட்டிவிட்ட கோபத்தில் என்ன சாப்பாடு இது என்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். அப்புறம்தான் தெரிந்தது சாப்பட்டுக்கு கொத்தவரைக்காய் போட்டிருந்த விஷயம்.  ஒரு காய்கறியும் வரத்து இல்லாமல் ஒரு வாரமாக அவதிப்பட்ட ஊரில் அதுவாவது நமக்குக் கிடைத்ததே என்று திருப்திப்படாமல் போய்ச்சேர்ந்தார் அதிகாரி. விளைவு. கொத்தவரங்காய் போட்டவருக்கு மாறுதல்தான்.

நான் ஆர்.ஐ.யாக இருந்தபோது ஒரு பெரிய கலவரம் நடந்து துப்பாக்கிச்சூடு வேறு நடந்துவிட்டது. அதனை சாக்கு வைத்து பெரிய அதிகாரிகளும். முக்கியப் பிரமுகர்களும் கொத்துக்கொத்தாக வர ஆரம்பித்துவிட்டனர். அந்த முன்னேற்றம் இல்லாத ஊருக்கு பெரிய அந்தஸ்த்து வந்துவிட்டது. வழக்கம்போல் வருபவர்களுக்கு எல்லாம் உண்டைக்கட்டி வழங்கும் வேலை என்னுடையதாகிவிட்டது.  ஒவ்வொருமுறையும் வருபவர்களுக்கு டீ பிஸ்கட் கொடுப்பதற்காக அவர்கள் அந்தஸ்த்து கருதி கோப்பைகள் ஏற்பாடு செய்ய வேண்டியதாகிவிட்டது. பின் என்ன அவர்கள் அந்தஸ்த்துக்கு நம்மை மாதிரி டீக்கடை கிளாசில் எல்லாம் குடிப்பார்களா என்ன.  மேலேயிருந்து உத்தரவு வேறு நல்லமுறையில் கவனிக்கும்படி.  நான் தவித்த நேரத்தில் ஒரு முஸ்லிம் நண்பர் கைகொடுத்தார்.  என்னை அவரது வீட்டுக்கு அழைத்துப்போய் ஒரு சாக்குமூட்டையை ஒப்படைத்தார். அதில் வெளிநாட்டிலிருந்து வாங்கிவந்த பீங்கான் டீ கப்புகள் அழகழகாக ஐம்பதுக்கு மேல் இருந்தன.   போதாக்குறைக்கு தாம் டீ போட்டுத் தருவதாகவும் உதவிசெய்தார்.

ஆக வந்தவர்களுக்கு மிக அழகான கோப்பைகளில் மிக சுவையான மொகலாய டீ பாரிமாறப்பட்டது.  வந்தவர்களில் பலர் டீயை ருசிப்பதற்குப் பதிலாக கோப்பையை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.  சிலர் கோப்பையை லவட்டிக்கொண்டு போவதில் குறியாக இருந்தனர்.  நம்மிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கலாமா. அதனை நாம் கைப்பற்றி நம்முடையதாக்கிக் கொள்ளவேண்டாமா? அறிவைத் தவிர அது வேறு எதுவாக இருந்தாலும்!

என்னுடைய ஜவான் வல்லாள கண்டன். தலையாரிகளைக் கையில் வைத்துக் கொண்டு கோப்பைகளைக் கண்காணித்து வண்டியில் ஏறியவரிடமிருந்துகூட பிடுங்கி வந்திருக்கிறார்.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். திருமதி மரகரம் சந்திரசேகர் அவர்கள் வந்தார்கள்.  ஒரு அரசியல் வாதியும்கூட என்பதால் அவருடன் ஒரு படை புடைசூழ வந்தது.  பங்களா வாசலில் வரவேற்ற எங்களை தாம் சீக்கிரமாக செல்லவேண்டும் என்றும் நேராக வந்த வேலையை கவனித்துவிட்டு செல்வதாகவும் சொல்லிவிட்டார். நாங்கள் வழிகாட்டிச் சென்றோம்.  அவர் ஒரு கட்சியின் முக்கிய பிரமுகர் என்பதால் கடைத் தெருவில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.  அது தாலுக்கா ஆபீஸ் வாசல். அங்கிருந்து அவர் விடைபெறும் சமயம்.  தாசில்தாரை அழைத்தார்.  நான் இப்படியே புறப்படுகிறேன். மிக்க நன்றி என்று சொன்னவர் “ஒரே ஒரு டீ கிடைக்குமா” என்றார்.

அவ்வளவுதான்.  தெருவில் நின்ற ஒவ்வொருவரும் ஓடிப்போய் தள்ளுமுள்ளு செய்து டீ என்ன, பிஸ்கட் பாக்கெட் என்ன, பழம் என்ன சோடா என்ன என்று அவரை நோக்கி நீட்டினர். அந்த இடத்தில் சுமார் ஆயிரம் பேர் கூட்டம் கூடிவிட்டது.  எந்த வி.ஐ.பி. வந்தாலும் நானும் என்னுடைய ஜவானும் எப்போதும் டீ வகையறாக்களை கையுடனே எடுத்துச் செல்வது வழக்கம்.

அந்த வி.ஐ.பி. யாரையும் சட்டை செய்யவும் இல்லை. முகம் சுழிக்கவுமில்லை.  “நான் தாசில்தாரிடம்தான் கேட்டேன்” என்றார். தாசில்தார் தாலுக்கா ஆபீசில் வந்து அமர்ந்து சாப்பிட்டுவிட்டு போகலாமே என்றார்.  ஆனால் அவரோ பரவாயில்லை இங்கேயே கொடுங்கள் என்று கேட்டுவாங்கிச் சாப்பிட்டுவிட்டு நன்றி தெரிவித்துச் சென்றார்.  அவருக்கு பந்தா பண்ணத் தெரியாதுபோலும்.

இன்னொரு சம்பவம். நான் ஆர்.ஐயாக இருந்தபோது நடந்தது.  ஒரு முக்கியப் பிரமுகர் வீட்டு விசேஷத்திற்காக வெளி மாநில கவர்னர் வருவதாக வரவேற்பு போஸ்ட்டர்கள் ஒரு வாரம் முன்னதாகவே நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.  நான் போய் தாசில்தாரிடம் விஷயத்தை சொல்லி நமக்கு ஒரு தகவலும் வரவில்லையே கலெக்டர் ஆபீசில் கேளுங்கள் என்றேன். அவரோ “நீ வேறே கவர்னராவது இங்கெல்லாம் வர்றதாவது” என்று சொல்லிவிட்டார்.

மெல்ல மெல்ல விசேஷ தினமும் வந்தது. கலெக்டர் ஆபீசிலிருந்து தாசில்தாரைப் பேசச்சொல்லி போன் வந்தது.   அவரோ ஒரு தியேட்டரில் நடந்த இசைக் கச்சேரிக்கு ஓசி டிக்கட்டில் போய் ரசித்துக்கொண்டிருந்தார்.  போன சேதியும் யாருக்கும் தெரியாது.  ஒரு துணை வட்டாட்சியரை அழைத்து கவர்னர் வருவதையும் மற்றும் ஒரு அமைச்சர் வருவதையும் சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டனர். அவரோ என்னை அழைத்து உங்க தாசில்தார் போன இடம் தெரியவில்லை. டி.ஆர்.ஓ. சொன்னார் நாம் போவோம் என்று சொல்ல, ஜீப்பை எடுத்துக்கொண்டு பங்களா போய் ஏற்பாடு செய்தோம். இரண்டு ரூம்களிலும் கவர்னருக்கு ஒன்றும், அமைச்சருக்கு ஒன்றுமாக டீ பிஸ்கட் இத்தியாதிகள் ஏற்பாடு செய்துவிட்டு அமைச்சரை வரவேற்க திருநாரையூருக்குப் போய்விட்டோம்.  பங்களாவில் ஒரு வருவாய் ஆய்வாளாரிடம் இன்னின்ன ஏற்பாடுகள் என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டோம்.

அமைச்சர் வந்தார். அவரை அழைத்துவந்து பங்களாவில் விட்டுவிட்டு நிமிர்ந்தால் கவர்னர் கார் வந்துவிட்டது. அவரை டி.ஆர்.ஓ. அழைத்து வந்திருந்தார். கவர்னரோ தாம் நேராக நிகழ்ச்சிக்குப் போவதாகவும், தமக்கு ஏதும் தேவையில்லை என்றும் சொல்லிவிட்டார். நம் வீட்டுக்கு வந்தவரை அப்படி அனுப்பிவிட்டால் நம் பண்பாடு என்னாவது.  டீ.ஆர்.ஓ அவரை வற்புறுத்தி டீ மட்டும் சாப்பிட்டுச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.  பணியில் இருந்த ஆ.ஐ.யிடம் டீ கொண்டு வரச்சொன்னார்.

டீ வந்தபாடில்லை.  கவர்னரோ பரவாயில்லை நான் போகிறேன் என்று சொல்ல, அதிகாரி பொறுமையிழந்து டீ வர ஏன் தாமதம் என்றறிய  கவர்னர் தங்கியிருந்த அறையின் பின்பக்கக் கதவைத் திறந்திருக்கிறார்.  அங்கே இருந்த ஆர்.ஐ. முதல் தலையாரி வரை எல்லாரும் ஆளுக்கு ஒரு கப்பில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கின்றனர்.  அப்போதுதான் நுழைந்த நான் அதிர்ச்சி அடைந்து இங்கே கவர்னருக்கு டீ வைத்திருந்தேனே எங்கே என்று கேட்க அதனை அமைச்சருடன் வந்த கட்சிக்காரர்கள் சாப்பிட்டுவிட்டதாகவும் வேறு டீ வாங்க ஆள் அனுப்பியிருப்பதாகவும், சொன்னார்கள்.  அங்கே டீக்கடை ஏது. ஒரு கிலோமீட்டர் தள்ளிச்சென்றால் ஒரு சாதாரண டீக்கடை இருக்கிறது. நான் பின்பக்கமாக ஓடிப் பார்த்தால் அங்கே என்னிடம் வேலை செய்த தலையாரி டீ வாங்கிக்கொண்டு ஆசுவாசமாக வெற்றிலை போட்டுக் குதப்பிக்கொண்டு தலையைக் குனிந்தவண்ணம் எதையோ சிந்தித்துக்கொண்டு நடைபயின்றுவந்தார்.  அவரிடமிருந்து பிளாஸ்க்கைப் பிடுங்கிக்கொண்டு வந்து உள்ளே நுழைந்தால் கவர்னரோ, நிகழ்ச்சிக்கு நேரமாகிறது என்று போயே போய்விட்டார்.

இந்தக் களேபரத்தில் இசைக் கச்சேரிக்குச் சென்ற தாசில்தார் எப்படியோ கேள்விப்பட்டு ஆபீசுக்குப் போக அங்கே எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் எங்கு போனீர்கள் என்று வசவு வழங்க, அடித்துப் புரண்டு பங்களாவுக்கு வந்து சேர்ந்தார்.

பங்களாவிலேயே விசாரணை ஆரம்பமானது. துணை வட்டாட்சியரிடமும் என்னிடமும் நீங்கள் ஏன் இங்கிருந்து பார்க்கவில்லை என்று கோபித்துக்கொண்டார் அதிகாரி.  நீங்கள்தானே என்னையும் ஆர்.ஐ.யையும் திருநாரையூரில் இருந்து அமைச்சரை வரவேற்கும்படி சொன்னீர்கள். நாங்கள் தேவையானதையெல்லாம் தனித்தனியாக ஏற்பாடு செய்துவிட்டுத்தானே போனோம் என்று தைரியமாக எதிர் கேள்வி கேட்டார்.   டி.ஆர்.ஓ.விற்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும்.  அதனால் சரியென்று போய்விட்டார்.

மறுநாள் காலையில் தொலைபேசியில் தாசில்தாருக்கு மாறுதல் வந்துவிட்டது.  வருத்தப்பட்ட துணை வட்டாட்சியர், டி.ஆர்.ஓவிடம் உரிமையாக சண்டை பிடித்தார். ‘அவர் ஒரு அப்பாவி. அவரை நீங்கள் இப்படி பழி வாங்கியிருக்கவேண்டாம்’ என்று.

அப்புறம்தான் தெரிந்தது. இந்த ஒரு சம்பவத்திற்காக மட்டுமில்லை என்பது.  தாசில்தார் சற்று முடியாதவரும்கூட. அதனால் மதியம் சாப்பிட்டவுடன் சற்று நேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம்.  அவர் தமக்குத் துணையாக ஒருவரை வைத்திருந்தார்.  அவரும் கம்பிக் கதவைப் பூட்டிவிட்டு படுத்துவிடுவார். படுத்ததுதான் படுத்தனர் கண்மறைவாக உட்புறமாகப் படுத்துத் தொலைக்க வேண்டியதுதானே.  வாசலுக்கு நேராகப் படுத்துக் கொள்வர். அதிலும் வயதான முடியாத இருவரும் சற்று அப்படி இப்படியாக தூங்கியுள்ளனர்.  தாசில்தாரைப் பார்க்கவந்தவர் யாரோ கம்பிக் கதவு வழியாகப் பார்த்துவிட்டு கலெக்டருக்கு புகார் தெரிவித்துவிட்டனர். தாசில்தார் குடித்துவிட்டு விழுந்துகிடப்பதாக.  போதாதா.  இப்போது நடந்தது ஒரு நல்ல காரணமாகிவிட்டது. மாற்றிவிட்டார்கள்.

ஒரு விஷயம். நல்ல வேளை கவர்னருக்கு என் தலையாரி வாங்கிவந்த அந்த டீயைக் குடிக்கக் கொடுத்திருந்தால் இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ.

இன்னொரு சம்பவம். நான் ஆர்.ஐ.யாக இருந்த வரையில் பெரிய அதிகாரி வந்தால் பெரும்பாலும், ஏரியிலிருந்து மீன் பிடித்து வந்து தனியே சமையல் செய்து பரிமாறுவோம். அதேபோல்தான் கோழியும்.  இப்படியாக ஒரு அதிகாரி குடும்பத்துடன் வந்துவிட்டார். அதற்காக விரால் மீன் ஸ்பெஷலாக பிடித்துவந்து சமையல் செய்து பரிமாறப்பட்டது.  இதற்கெல்லாம் எனக்கு ஒரு வயது முதிர்ந்த அலுவலக உதவியாளர் கைகொடுப்பார். அவருக்கு குஜராத்தி வங்காளி உட்பட பல பாஷைகள் தெரியும். அவரவரது மொழியில் பேசிக் கவர்ந்துவிடுவார். வி.ஐ.பி வந்தால் அவர் செல்லும் வரையிலும் என்னுடன் இருந்து வழியனுப்பிவிட்டு என்னை உட்கார்த்தி சாப்பிட வைத்துவிட்டுத்தான் செல்வார்.

அன்று அந்த அதிகாரிக்கு பரிமாறிவிட்டு வந்தவர் அய்யா அவ்வளவு மீன் வாங்கிக் கொடுத்திருந்தும் பத்தவில்லையே என்று அங்கலாய்த்தார். எனக்கு சமையல் செய்தவர் பேரில் சற்று சந்தேகம் வந்தது.  இருந்தாலும் இப்படி ஒருநாளும் நடந்தது கிடையாது. நான் இன்னாரிடம்தான் கொடுத்தனுப்பினேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு தலையாரி துப்புக் கொடுத்தார்.  “அய்யா காலையில் அவன் சைக்கிளில் ஒரு மீன் எடுத்துச்சென்றான்” என்று.  ‘எந்த தப்பு செய்பவரும் குறைந்தது ஒரு சாட்சியத்தை விட்டுச்செல்வார்’ என்று போலீசில் சொல்வர்.

அது இங்கேயும் நடந்தது. அந்த தலையாரி மீனைக்கொண்டுபோய் சமைக்கக் கொடுக்கும்போது ஒன்றை எடுத்துக்கொண்டு விட்டார். அதனை சைக்கிள் கேரியரில் வைத்து தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.  அதனை ஒருவர் பார்த்துவிடுவார் என்று நினைக்கவில்லை. மறுநாள் தலையாரி வந்தார்.

நான் எதுவும் கேட்கவில்லை.

“அய்யா வணக்கம்” என்றார்.

நமக்குத்தான் நாக்கு துடித்துக் கொண்டிருக்கிறதே. “என்னப்பா மீன் நல்லா இருந்ததா?
குடும்பத்துக்கு முழுவதும் மீன் பத்துச்சா”

அவரோ அப்பாவியாக “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்களே”

“அய்யா, நீங்க சைக்கிளில் மீன் எடுத்துக்கொண்டு போனது, வீட்டிலே கொண்டுபோய்
கொடுத்துட்டு பங்களாவுக்கு வந்தது எல்லாம் நான் பார்த்துட்டுதான் இருந்தேன்” என்று
போட்டு வாங்கினேன்.

“அதுங்க அய்யா நீங்க மீன் கொடுத்தனுப்பினீங்களா நான் கேரிலில்
வச்சி எடுத்துட்டுப்போம்போது லால்பேட்டை பாலத்துல கீழவிழுந்து மண்டை வெடிச்சு
செத்துப்போயிட்ச்சிங்க. அதான் அதனை வீட்ல கொண்டுபோய் கொடுத்தேன்.”

வந்ததே கோபம் எனக்கு “என்ன எனக்கு விக்கிரமாதித்தன் கதை சொல்றியா” என்று கடிந்துகொண்டு ஒரு பேப்பரைக் கையிலெடுத்து நடந்ததை எழுதி அறிக்கையை அவரிடமே கொடுத்து வட்டாட்சியரிடம் அனுப்பிவிட்டேன்.

அவரோ தம் பேரில்தான் ரிப்போர்ட் போகிறது என்று தெரியாமல் ஏதோ தபால் நம்மிடம் கொடுத்திருக்கிறார். நம்பேரில் ஆர்.ஐ.க்கு கோபம் தணிந்துவிட்டது என்று நினைத்து கடமையைச் சரியாகச் செய்துவிட்டார்.  அடுத்த நாளே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள் ஆபீசில்.

பக்கத்தில் இருந்த ஒரு கிராம நிர்வாக அலுவலர் ரொம்ப கண்டிப்பானவர். நேர்மையானவர். அதனால் வரிபாக்கி வைத்திருந்த ஒரு பெரிய பெருந்தனக்காரருக்கே சவாலாக இருந்தவர். அவரிடம் மாறுதல் செய்துவிட்டனர்.  நம்மாளு ஓடிவந்து எவ்வளவோ கெஞ்சியும் என் மனம் இறங்கவில்லை. பின் என்ன. நான் எந்த கீழ் நிலை அலுவலரிடமும் அல்லது பெருந்தனக்காரர்களிடமோ வசூல் செய்து செலவு செய்யவில்லை. என் காசைக் கொடுத்து மீன் வாங்கி அனுப்பினால் அது தலையாரி வீட்டு சமையலுக்கு போனால் எப்படி.

இதிலே இன்னொரு சுவாரசியமும் சேர்ந்துகொண்டது.  மீன் திருடிய அந்த நபர் தன்னுடன் வேலைபார்த்த வேறொரு தலையாரிதான் தன்னை போட்டுக் கொடுத்துவிட்டார் என்று எண்ணி என்னிடம் அவர் இன்ன தப்பு செய்தார். அது எனக்குத் தெரியும். அதனால்தான் என்னை இப்படி காட்டிக்கொடுத்துவிட்டார் என்று முறையிட்டார்.

அதுஒன்றும் பெரிய தப்பு இல்லைங்க. அந்தத் தலையாரி மாலையில் சரக்கு வைத்துக்கொண்டு பெண்டாட்டியிடம் போய் தகறாரு செய்வது அடிப்பது. கிராமத்தில் அலம்பல் செய்வது என்று இருந்திருக்கிறார்.  நமது மக்களிடம் ஒரு குணம் உண்டு. எவனாவது குடித்துவிட்டு கலாட்டா செய்தால் அவன் என்ன நிதானத்திலா இருக்கான். அவனைப்போய் கண்டித்து என்ன செய்ய என்று சமாதானப் படுத்திக்கொள்வர்.  நம்மாளு ஒருநாள் போதை அதிகமாகி தன் மனைவியை இழுத்துவந்து அவர் கையில் துணியைச் சுற்றி எண்ணையும் ஊற்றி நெருப்பு வைக்க முயற்சி செய்திருக்கிறார். எப்படியோ அக்கம்பக்கத்தினர் தலையிட்டு காப்பாற்றியுள்ளனர்.  இந்த பிரச்சினையில் அந்த இனிய தகவல் கிடைத்துவிட்டது.

சம்பந்தப்பட்டவரை பெண்டாட்டியுடன் அழைத்துவந்து விசாரணை செய்தால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்றார். மனைவியோ கள்ளானாலும் கணவன், புல்லா(Full)னாலும் புருஷன் என்று காட்டிக் கொடுக்கவில்லை.  ஆனால் இவரோ தம் மனைவிதான் ஆர்.ஐ.யிடம் புகார் தெரிவித்துவிட்டார் என்று நினைத்து மேலும் டார்ச்சர் செய்ய அவர் விட்டால் போதும் என்று கணவனை விட்டே ஓடிவிட்டார்.