21
தேர்தல் திருவிழா
தேர்தல் வந்துவிட்டாலே திருவிழாதான். அரசியல் கட்சிக்கல்ல. வருவாய்த் துறை அலுவலர்களுக்குத்தான். எப்படி என்கிறீர்களா?
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு மழை, தேர்த்திருவிழா, முக்கியப் பிரமுகர் இறப்பு என்று எதிர்பாராத காரணங்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் வருவாய்த்துறையில் வேலைபார்க்கும் குமாஸ்தாக்களுக்கு. ஏன்?
-
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பதிவேடுகள் தணிக்கைக்கு வைக்கும் சுமை இருக்காது.
-
மேலதிகாரிகளிடமிருந்து எந்த அவசரக் கடிதம் வந்தாலும் தேர்தல் பணி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம்.
-
பொதுமக்கள் தொல்லை அறவே இருக்காது. அவர்கள் கட்சி வேலையைப் பார்ப்பார்கள்.
-
பிரதி திங்கள் பொதுமக்கள் குறை தினம் போன்ற திட்டங்கள் கிடையாது.
-
வசூல் புள்ளி அந்த புள்ளி இந்த புள்ளி கரும்புள்ளி செம்புள்ளி என்று எதுவும் கேட்க மாட்டார்கள்.
-
இரவு பகல் என்று வேலை செய்தாலும். டிபன் சாப்பாடு என்று வேளைக்கு கிடைத்துவிடும். அதைவிட ஓவர் டைம் பார்த்ததற்கு சன்மானமும் கிடைக்கும்.
-
ஆகமொத்தம் தினசரி நடவடிக்கைகள் முழுவதும் முடங்கிப்போய் எந்த அவசரமும் இல்லாமல் இட்ட பணியைச் செய்தால் போதும்.
-
அதைவிட ஏதாவது தப்பு நடந்தால் அதிகாரிக்குதானே பொறுப்பு. நமக்கென்ன.
அப்புறம் யார்தான் தேர்தல் வந்தால் வரவேற்கமாட்டார்கள். இப்படியாகப்பட்ட திருவிழாவில் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது. அதில் ஒருசிலவற்றை மட்டும் சொல்லலாம் என்று எண்ணுகிறேன்.
நான் வேலைக்கு வந்த புதிது. ஒரு துணைக்கலெக்டர். அவரும் ஒரு உதவித் தேர்தல் அதிகாரி. தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் வாக்குச்சாவடிக்கு அனுப்பும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும் கடைசிப் பணி. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாக்குகளை வேலைபார்க்கும் இடத்திலேயே செலுத்தவோ அல்லது தபால் மூலம் செலுத்தவோ வசதியாக முன்னதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அவர்களின் சொந்த வாக்குச்சாவடியில் அவர்கள் பேரால் யாரும் கள்ள ஓட்டு போட்டுவிடக்கூடாது என்பதற்காக தபால் ஓட்டு அனுப்பட்டதாயின் அவர்கள் பெயருக்கு எதிரில் ‘PB’ என்றும் பணிச்சான்று வழங்கப் பட்டிருந்தால் ‘EDC’ என்றும் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி
அந்தத் துணைக்கலெக்டரும், இரண்டு ஹெட்கிளார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தனர். அவருக்கு எடுபிடியாக நானும் இன்னொரு நண்பரும் அழைக்கப்பட்டோம். கேட்கும் கட்டுகளை எடுத்துக் கொடுத்து திரும்பப்பெற்று அடுக்கி வைப்பதுதான் எங்கள் வேலை. அப்படியென்றால் எடுபிடி என்பது சரிதானே.
ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் ‘PB’ அல்லது ‘EDC’ போடும் வேலை அவர்களுடையது. திடீரென்று அவர்களுக்கு, திருவிளையாடல் திரைப்படத்தில் வரகுண பாண்டியனுக்கு வந்ததுபோன்று ஒரு பெரும் பிரச்சினையில் பெருத்த சந்தேகம் வந்துவிட்டது. இந்தக் குறியீட்டை வாக்காளர் பெயரைத் தொடர்ந்து போடுவதா அல்லது பெயருக்கு முன்னால் போடுவதா என்பதுதான் அது. சட்டப் புத்தகத்தை ஆராய்ந்தனர். சட்டம் எழுதிய படுபாவிகள் இப்படியெல்லாம் சந்தேகம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை போலும். ‘against the voter’s name’ என்று மொட்டையாக போட்டு விட்டிருந்தனர்.
யாரிடமெல்லாமோ தொலைபேசியில் பேசினர். அவர்களுக்குச் சாதகமான விளக்கம் தரவில்லையோ என்னவோ. எந்த ஆலோசனையும் ஏற்கப்படவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. கடைசியாக அவர்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்தனர்.
கன்னடத்து விருந்துக்கு போனானாம், வேறு மொழி கற்கமாட்டோம் என்று உறுதியெடுத்த தமிழன் ஒருவன். விருந்தில் பரிமாரிக்கொண்டிருந்தவர் சாதத்தை இலையில் கொட்டி “சாக்கா – பேக்கா” என்றானாம். மொழி தெரியாத நம் அப்பாவி அது ஏதோ பலகாரம் என்று எண்ணிக்கொண்டு “சாக்கில ரெண்டு பேக்கில ரெண்டு போடு” என்றானாம். அந்தக் கதையாக வாக்காளர் பெயருக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கமும் பதிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
வாக்காளர் பட்டியலைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்நாளில் மூன்று வரிசைகள் நெருக்கமாக இருக்கும். அதில் இரண்டு பக்கமும் போட்டால் ஒருவருடைய பதிவு இரண்டு பேருக்கானதாகத் தெரியும். இந்த முடிவை அறிவித்தவுடன் வேலை துவங்கும் சமயம். எனக்குப் பொருக்கவில்லை. அய்யா இரண்டு பக்கம் பதிவு செய்தால் பக்கத்து வரிசையில் உள்ள வாக்காளருக்கும் அந்தப் பதிவு குறிப்பிடுவதாக அமைந்துவிடாதா என்று அப்பாவியாக ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தேன். எப்போதுமே அதிகாரிகளிடம் ஒரு மிக நல்ல குணம் உண்டு. அவர்களுக்குக் கீழே உள்ளவர்கள் யாரும் ஆலோசனை சொல்லக்கூடாது. கோபம் வந்துவிடும். அப்படித்தான் நடந்தது அப்போதும்.
“ஏன்யா உன்னைய வடய எண்ணச்சொன்னா தொளைய எண்ணிக் கிட்டிருக்கே” என்று கடித்துவிட்டார். காதில் ஒரு துளியோண்டு ரத்தம். அப்புறம் ஏன் நான் வாயைத் திறக்கிறேன். அதற்குள் என்ன நினைத்தார்களோ மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று எங்கள் இருவரையும் போகச்சொல்லிவிட்டனர். மறுநாள் எங்களைக் கூப்பிடவில்லை. Against என்பதற்கும் In front of / before என்பதற்கும் வித்தியாசம் தெரியாமலே தேர்தல் பணி நடந்தால் என்ன செய்வது.
மற்றொரு சமயம் தேர்தல் அதிகாரி ஒருவர் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறைக்கு நல்ல பெரிய பூட்டு வாங்கி வரவேண்டும் என்று சொன்னார். நான் போய் கோத்ரேஜ் கம்பெனியின் மிகப் பெரிய பூட்டு வாங்கி வந்தேன். அனால் அதிகாரிக்குத் திருப்தி இல்லை. தமக்கு பெரிய பூட்டுதான் வேண்டும் என்றார். நானும் அலையாய் அலைந்து பார்த்தேன். அதைவிட பெரியதென்றால் கம்பெனியில் சொல்லித்தான் செய்யவேண்டும் என்று கடைக்காரர் கிண்டலடித்தார். காட்டுமன்னார்கோயிலிலிருந்து கும்பகோணத்திற்கும் சென்று அலைந்து திரிந்தும் அவர் கேட்டது கிடைக்கவில்லை.
“வஞ்சர மீன் இருகுன்றான், நெத்திலிமீன் இருகுன்றான், சுறாமீன் இருகுன்றான், திமிங்கிலம் கூட இருகுன்றான் நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் கிடைக்கல. ஏன் கடல்லையே இல்லையாம்” – என்ற கதைதான்.
திண்டுக்கல்லுக்கோ அங்கும் கிடைக்கவில்லை என்றால் அலிகாருக்கோ போக சட்டம் இடம் கொடுக்கவில்லையோ என்னவோ அங்கு போய் வாங்கச்சொல்லவில்லை அந்த அதிகாரி. தேர்தல் துணை வட்டாட்சியரோ அதிகாரியின் முன் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார். அதிகாரி கடைசியில் ஒரு வார்த்தை சொன்னார். கோயிலில் எல்லாம் பூட்டு தொங்குமே அதுமாதிரி பெரிய பூட்டு என்றார். அத்தகைய பூட்டுகள் அளவில்தான் பெரிதாக இருக்குமே தவிர சாதாரணமாக ஒரு கம்பியை வைத்து திறந்துவிடலாம். பெரிய பூட்டு என்று சொல்லி எங்கள் தலை கிறுகிறுக்க வைத்தார் அந்த அதிகாரி. கடைசியில் ஒரு நாட்டுப் பூட்டினை பெரியதாக வாங்கிவந்து காட்டினோம். அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதி இருந்தது அது. முற்றிலும் துணி சுற்றி அரக்கு சீல் வைத்து 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்போகும் பூட்டுக்கு அவ்வளவு அலைச்சல் தேவையா என்பதுதான் கடைசிவரை விளங்கவில்லை.
பார்லிமெண்ட் தேர்தல் என்றாலே சிதம்பரம் தொகுதிக்கான அனைத்து வாக்குப் பெட்டிகளும் சிதம்பரம் அரசு கலைக்கல்லுரியில் வைத்துப் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணுவதும் அங்குதான். முதல் தளத்தையும் இரண்டாம் தளத்தையும், ஆறு சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவர். வாக்குப் பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச் சாவடியிலிருந்தும் பகுதி அலுவலர்கள் பெட்டிகளைப் பெற்றுக்கொண்டு நேரடியாக அங்கே வந்துவிடுவர். அந்தப் பகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியது முதல் வாக்கு எண்ணி முடித்து கடைசியாகப் பெட்டிகள் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் வரையிலும் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுவிடும்.
அந்த இடத்தை ஒரு மாதம் முன்னதாகவே தேர்தல் பார்வையாளர், மாவட்ட ஆட்சியர், காவல் துறையின் உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் என்று பலரும் பார்வையிட்டு பாதுகாப்பு, குடிநீர் கழிப்பறை வசதி உட்பட சகல வசதிகளையும் உறுதி செய்துகொண்டு தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி அங்கீகாரம் பெற்றபின்னர்தான் வாக்கு எண்ணுமிடமாக அறிவிக்கப்படும்.
இப்படிப்பட்ட நிலையில் சகல ஏற்பாடுகளும் முடிந்து வாக்குப் பதிவும் முடிந்து ஒரு சில மணி நேரங்களில் பெட்டிகள் வரும் என்ற சூழ்நிலை. ஒரு தேர்தல் பார்வையாளர் வந்தார். கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்தார். கடைசியாக மொட்டை மாடிக்குச் சென்றார். பெரிய தண்ணீர் டாங்க் அவரது கவனத்தைக் கவர்ந்தது. சின்னஞ்சிறு உலகம் நாகேஷ் கணக்கில் சிந்தித்தார். அதில் தண்ணீர் இருப்பதால் அது இடிந்தால் அதிலுள்ள தண்ணீர் வழிந்து வாக்குப் பெட்டிகள் வைக்கும் இடங்களில் சேதம் அடைந்துவிடும் என்றும் அதனால் அதில் உள்ள தண்ணீரை முழுவதும் காலி செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டதுடன் அருகிலேயே நின்றுகொண்டு திறந்துவிட வைத்துவிட்டார்.
உள்ளே வேலையாக இருந்த எங்களுக்கு மழைபெய்வதுபோன்று தொடர்ந்து சத்தம் கேட்கவே இந்த நேரத்தில் மழைவந்து வேலையைக் கெடுக்கிறதே என்று வெளியே வந்து பார்த்தால் கட்டிடத்தின் நாலா புறமும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
கீழே வந்த பார்வையாளருக்கு திடீர் ஞானோதயம் வந்தது. அதிகாரிகளை அழைத்தார். இங்கு வேலை பார்க்கும் எல்லாருக்கும் உடனடியாக குடிநீர் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் கடமை முடிந்துவிட்டது. அப்போது இரவு மணி பதினொன்று.
ஆர்.டீ.ஓவும் தாசில்தாரும் பெருமுயற்சிக்குப்பின்னர். சிதம்பரம் நகர சேர்மனைத் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தனர். அந்த அர்த்த ராத்திரியில் அவர் யார்யாரையோ பிடித்து நகராட்சி தண்ணீர் டாங்கர் டிரைவரை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்துவிட்டார். இரண்டு மூன்று டாங்கர்களில் தண்ணீர் வந்து நின்றுவிட்டது. பகலெல்லாம் அலைந்து திரிந்து வாக்குச்சாவடிகளைப் பாதுகாத்து பெட்டிகளை எடுத்துவந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட அலுவலர்களும் காவலர்களும் அங்கே பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் என்று பலரும் தங்கள் ஆயாசம் தீர தண்ணீரைக் குடித்து தாகசாந்தி செய்துகொண்டனர். மறுநாள் காலையிலேயே பலருக்கு சுரம் ஜலதோஷம் என்று வந்துவிட்டது. அந்த ராத்திரியில் எந்த இடத்திலிருந்து தண்ணீர் பிடித்துவந்தனரோ. அதிகாரிகளின் எதேச்சாதிகார முடிவுகள் இப்படித்தான் முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எனக்கு ஒரு சந்தேகம். அந்த கல்லுரியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்தனை ஆண்டுகளாக அந்தத் தண்ணீர் தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீரைத்தானே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு தொட்டி இடிந்து பாதிப்பு வந்தால் பரவாயில்லையா. மாணவர்களின் மனித உயிரைவிடவா வாக்குப் பெட்டிகள் மதிப்பு வாய்ந்தவை. அட இந்த வாக்குப்பெட்டிகள் அழிந்துபோனால்தான் என்ன. மறுதேர்தல் நடத்திவிட்டால் போகிறது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி வேறு அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்திருப்பார். அதற்கு யார் கியாரண்டி.
பொதுவாக தேர்தல் பார்வையாளர்கள் வரும்போது அவருக்கு ஒரு தாசில்தாரை உதவியாக நியமித்துவிடுவர். மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தி பார்வையாளர்கள் எந்த குறையும் சொல்லாத அளவில் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கடுமையான அறிவுரைகள் வழங்கிவிடுவர். பார்வையாளர் பயன்பாட்டுக்கு என்று புதிதாக பிரிட்ஜ், டி.வி., கம்யூட்டர், இத்தியாதிகளெல்லாம் ஏற்பாடு செய்வதுகூட உண்டு. அப்புறம் என்னாகும் என்பது தெரியாது.
ஒரு பார்வையாளர் வந்தார். அவர் தாம் சுத்த சைவம் என்றும் மற்ற பார்வையாளர்களைப் போன்று தமக்கு செலவளிக்க வேண்டாம் என்றும் தெரிவித்துவிட்டார். கடைசியில் அவர் பிரிட்ஜ் ஏற்பாடு செய்யச்சொல்லி அதில் பலவகைக் காய்கறிகளை முழுக்க முழுக்க அடுக்கி வைத்துக்கொண்டு வெறும் ஜூசாக வடித்துச் சாப்பிட்டார். வேறு எதுவும் சாப்பிடவில்லை. அவர் திமிங்கிலக் கறி கேட்டிருந்தால்கூட அதைவிட குறைந்த செலவில் ஏற்பாடு செய்திருக்கலாம். போதாக்குறைக்கு அவர் பங்களாவைவிட்டு வெளியே போகவே இல்லை.
ஒரு பார்வையாளர் வந்தார் காலையில் அவர் வாக்கிங் போகும்போது அவருக்கு பிளாக் கேட் ரேஞ்சில் ஒரு வருவாய் ஆய்வாளர் கூடவே நடக்க வேண்டும். அவருக்கு வாலாக ஒரு தலையாரி செல்வார். அவரிடம் ஒரு கூடையில் குறைந்தது நாலைந்து தண்ணீர் பாட்டில்கள் இருக்கும். பார்வையாளர் கை நீட்டும் போதெல்லாம் ஒரு தண்ணீர் பாட்டிலைத் தரவேண்டும். அதன் சீல் உடைபட்டிருக்கக்கூடாது. அவர் தாமே திறந்து ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு வீசிவிடுவார். அவ்வளவு ஆடம்பரம். ஆனால் இவரெல்லாம் தம் வீட்டில் இப்படித்தான் சொந்தக் காசில் குடிப்பாரோ அல்லது முனிசிபல் தண்ணீரைக் குடிப்பாரோ?
மற்றும் ஒரு பார்வையாளர் வந்தார். அவர் வந்தவுடன் மறுநாள் கிளம்பிப் போய்விட்டார். அடுத்து வரும்போது தம்முடன் ஒரு சமையல்காரரை அழைத்து வந்துவிட்டார். அவருக்கும் சகல அந்தஸ்த்துடன் சோடச உபசாரங்கள் நடந்தது என்றால் நம்பவா போகிறீர்கள். அவர் வந்துபோன செலவு எல்லாமும் அரசாங்க தேர்தல் செலவில்தான்.
ஒரு பார்வையாளர் அவர் தமிழர். அவரை வெளி மாநிலத்தில் பணியில் அமர்த்தியிருந்தது அரசு. அவருக்கு தேர்தல் பார்வையாளர் பணி. அவர் வந்தார் கோயில் குளம் என்று சுற்றினார். தமக்கு அமர்த்தப்பட்ட வீடியோகிராப்பர் சரியில்லை என்று சொல்லி தாமே ஒருவரை நியமித்துக்கொண்டார். கடைசியில் தாம் ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதனை அரங்கேற்ற வேண்டும் என்றும் சொல்லி அரசாங்க செலவிலேயே பிரிண்ட் செய்து கோவிலில் வைத்து பூசை புனஸ்காரங்களுடன் அரங்கேற்றிக்கொண்டார். வீடியோ உட்பட செலவு செய்ததாக ஒரு தொகையையும் கைப்பற்றிக்கொண்டார் அவர்.
ஒரு பார்வையாளர் நல்ல பிள்ளையாக வலம் வந்தார் ஓரிரு நாட்கள். தேர்தல் நெருக்கம். தமக்கு பட்டுப் புடவைகள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டார். அடுத்து புலிப்பால் வேண்டும் என்று கேட்பது போல் 14 கேரட்டில் தங்க நகை வேண்டும் என்றார். பிரபல நகைக்கடைகளில் கேட்டால் சிரிக்கிறார்கள். அப்படி எதுவும் தயாரிப்பதுகூட இல்லை என்று சொல்லி, தேவையானால் 22 கேரட் நகைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றால் கேட்கவே இல்லை. கடைசியில் எங்கள் ஊரில்போய் வாங்கிக்கொள்ளுகிறேன் என்று சொல்லி ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு போய்விட்டார். அவருக்கு வாங்கிக்கொடுத்த செல்போனைக்கூட திரும்ப ஒப்படைக்கவில்லை.
பிடிவாதமாக இந்தியில் பேசி பாடாய்ப்படுத்திய பார்வையாளார்கள் உண்டு. அவர்களுக்கு உண்மையில் ஆங்கிலம் தெரியாதோ என்னவோ.
அங்கே இங்கே சுற்றுலா போன அதிகாரிகள் பலர் உண்டு. தேர்தல் பார்வையாளர் டில்லியிலிருந்து போன் செய்வார். தாம் இன்ன ஃப்ளைட்டில் வருவதாகவும் தாம் நேராக அருகில் உள்ள திருப்பதிக்கு போய் வரவேண்டும் என்றும் சொல்லிவிடுவார். ஏதோ திருப்பதி, கடலுருக்கு அடுத்த கிராமம் என்பது போன்று. ஒரு பார்வையாளர் மதுரைக்கு வந்து இறங்கிக்கொண்டு சுற்றுலா முடித்துவிட்டு அப்படியே கொஞ்சம் தேர்தல் கண்காணிப்பு வேலையையும் செய்துவிட்டு போவார். இப்படி பல பார்வையாளர்கள் ஜாலி டிரிப்பாகத்தான் வந்து சென்றனர். தற்போதுதான் பத்து ஆண்டுகாலத்தில் திருந்தியுள்ளனர். இதற்கெல்லாம் மீடியாக்களின் புண்ணியம்தான் என்றால் மிகையாகாது.
தேர்தலுக்கு முன் தினம் எல்லா வாக்குச்சாவடிக்கும் பொருட்கள் அனுப்பப்படும் நிலையில் வந்து நின்றுகொண்டு வாக்குப் பதிவுக்கான பொருட்களை மூட்டையை அவிழ்த்து சரிபார்க்கிறேன் பேர்வழி என்று படுத்திய பார்வையாளர்கள் உண்டு. வாக்குப் பதிவுப் பொருட்கள் அனைத்தும் ஒரிரு தினம் முன்னதாகவே சரிபார்த்து அடுக்கிவைத்து சீல் வைத்து காவல் துறை உதவியுடன் பாதுகாக்கப்படும். அந்த நேரத்தில் வந்து தணிக்கை செய்தால் அவர்கள் கெளரவம் என்னாவது.
தேர்தல் ஆணையம் பார்வையாளர்களைக் கண்காணிக்கத் தனியே ஒரு ஏஜென்சியை ஏற்பாடு செய்தால்தான் அவர்கள் அடிக்கும் கொட்டம் வெளியில் தெரியும்.
வாக்குப் பதிவுக்கு வரும் அலுவலர்கள் இருக்கிறார்களே அவர்கள் அடிக்கும் கூத்து பலவகை. நான் விருத்தாசலம் தாலுக்காவில் பணியில் இருந்த நேரம் அடுத்துள்ள பள்ளிக்கூடத்தில் வந்து தங்கியிருந்த சில அலுவலர்கள் தங்களுக்கு அதிகாலையில் வென்னீர் வேண்டும் ஷேவ் செய்ய பொருட்கள் வேண்டும். என்றெல்லாம் பிரச்சினை செய்தனர். முன்தினம் முதல் சமாளித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர்கள் படுத்திய பாடு தாங்காமல் என்னிடம் வந்து முறையிட்டார். நான் என் உதவியாளர் ஒருவரை அனுப்பி வைத்து இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் வாக்குப் பதிவுக்குத் தயாராக இருக்காவிடில் அவர்கள் பேரில் தேர்தல் பணியில் குறைபாடு தொடார்பாக காவல் துறை மூலம் நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள ரிசர்வ் அலுவலர்களைக்கொண்டு வாக்குப் பதிவு நடத்தப்படும் என்றும் பின்னாடியே சஸ்பென்ஷன் வருகிறது என்றும் கடுமையாக எச்சரித்தபின்னர் வாலைச் சுருட்டிக்கொண்டு வேலை பார்த்தனர். இப்படிப் பல அலுவலர்கள் வரும்போதே தமக்குத் தேவையானதை கொண்டு வராமலும், காசும் கொடுக்காமலும் கிராம நிர்வாக அலுவலர்களையும், தலையாரிகளையும் வாங்கித் தரச்சொல்லி டார்ச்சர் செய்வர்.
வாக்குப் பதிவுக்கான பொருட்கள் பட்டியலில் குண்டூசி, நூல், கோந்து டிராயிங் பின் உட்பட பல பொருட்கள் பட்டியலிட்டு வழங்கப்படும். வாக்குப் பதிவு முடிந்தபின்னர் திரும்பப் பெறவேண்டிய பட்டியலிலும் இந்தப் பொருட்கள் இடம்பெற்றிருப்பதுதான் அபத்தம். சில அலுவலர்கள் பென்சில் கோந்து எரிந்த மெழுகுவார்த்தி உட்பட இந்த பொருட்களைக்கூட கணக்கிட்டு பொறுப்பாக வாங்கிக்கொண்டுவந்து ஒப்படைப்பர்.
வாக்குப் பதிவுக்கு வரும்போதே சில அலுவலர்கள் வீட்டிலிருந்து மகாத்மா காந்தியின் புளுக்கைப் பென்சில், எரிந்த சிறிய மெழுகுவர்த்தித் துண்டு, முதற்கொண்டு கொண்டுவந்து போட்டுவிட்டு வழங்கப்பட்டதை லவட்டிக்கொண்டு போனவர்கள் உண்டு. பெரிய பெரிய அளவில் கொள்ளையடித்து புகழ் பெறுபவர்களைக் கொண்ட இந்த திருநாட்டில் இப்படி அல்பத்தனமாக ஆசைப்படுபவர்களை என்ன சொல்ல.
ஆரம்ப காலத்தில், முதல் பயிற்சிக்கூடத்திலேயே அவரவர்களுக்கு எந்த வாக்குச் சாவடியில் பணி என்பது தெரிவிக்கப்பட்டுவிடும். சிலர் தங்களுக்கு அந்த ஊரில் என்னென்ன வசதிகள் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதை உறுதி செய்துகொண்டு அதற்குத் தக்கபடி மாற்றிக் கேட்பர். இதற்காக பல தரப்பட்ட சிபாரிசுகள் வந்ததுண்டு. இவர்களின் தேர்தல் பணி எப்படி நேர்மையாக இருக்கமுடியும்.
ஒரு தேர்தலின்போது ஒரு குறிப்பிட்ட ஊரில் மட்டும் அமைந்திருந்த சுமார் பத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 99 சதவீதம் வாக்குப் பதிவு நடந்திருந்தது. பிற்பாடுதான் தெரிந்தது. அந்த ஊரில் பணிக்கு வந்தவர்கள் அனைவரையும் விருந்துவைத்துக் கவனித்துவிட்டு வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர்கள் உட்பட எல்லாருக்கும் வாக்குப் பதிவு செய்யப்பட்ட விபரம். 100 சதவீதம் பதிவு செய்துவிட்டால் சந்தேகம் வந்துவிடும் என்று கருதி 99ல் நிறுத்திக்கொண்டனர் போலும். அந்த ஊர் கட்டுப்பாட்டின்படி இன்ன கட்சிக்கு என்று முடிவு செய்துவிட்டால் யாரும் மாற்றிப் போடமாட்டார்கள் அந்நாளில்.
ஊர் இரண்டுபட்டால்தானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஒரு ஊரில் இரண்டு பிரிவுகளுக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டு சமாதானக் கூட்டங்கள் பாதுகாப்பு எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காலம் கழித்து தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி அந்த ஊருக்கான வாக்குச்சாவடியை கடைசி நேரத்தில் இரண்டாகப் பிரித்து அந்தந்தப் பகுதியிலும் ஒரு வாக்குச்சாவடியாக அமைத்துவிட்டனர். ஆனால் சமாதானமாகிவிட்ட அந்தப் பிரிவினர் இருவரும் ஒரே வாக்குச்சாவடியில் சென்று வாக்குப் பதிவு செய்துவிட்டனர். ஒரு வாக்குச் சாவடியில் பெயருக்கு ஒருசிலர் வாக்குப் பதிவு செய்திருந்தனர். இது விபரம் தெரியமால் வாக்குப் பெட்டிகள் வந்தவுடன் வாக்குப் பதிவான விபரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் இருந்த நான் அந்த ஊருக்கு பதிவு செய்யும்போது ஒரு வாக்குச் சாவடியில் 5 சதவீதமும் அடுத்த வாக்குச்சாவடியில் 140 சதவீதமும் பதிவானது போன்று வந்ததைக் கொண்டு நெடுநேரம் தலையைப் பிய்த்துக்கொண்டேன். பின்னர்தான் தெரிந்தது. இரண்டாகப் பிரித்த விபரம் தெரியாமல் வாக்குச்சீட்டுக்களை மொத்தமாக இரண்டு வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பிய விபரம்.
வாக்குப் பதிவு அலுவலர்கள் சில சமயம் என்ன எழுதுகிறோம் என்பது தெரியாமல் அதிகாரிகள் அவசரப்படுத்தும்போது மொத்தத்தை நிகரத்திலும் நிகரத்தை மொத்தத்திலும் என்று மாற்றி மாற்றி எழுதி நம் மண்டை காயவைப்பர். இப்படியாக ஒரு வாக்குச் சாவடி அலுவலர் அதே கட்டிடத்தில் உள்ள வேறு வாக்குச்சாவடி அலுவலரின் கணக்கைப் பார்த்து அப்படியே ‘காப்பி’ அடித்து அனுப்பிவிட்டார்.
சில அலுவலர்கள் சீல் வைக்க வேண்டிய முக்கியமான கவர்களுக்குப் பதிலாக குப்பைக் காகிதங்கள் பொருட்கள் அடங்கிய உறைக்கு சீல் வைத்து பயபக்தியுடன் ஒப்படைப்பர். ஆனால் முக்கிய ஆவணங்கள் திறந்த நிலையில் கிடக்கும்.
அப்போதெல்லாம் வாக்குப் பெட்டியினைத் திறந்து கொட்டியவுடன் ரூபாய் நோட்டுக்கள், விபூதி பொட்டலம், கோரிக்கை மனுக்கள் எல்லாம் கிடைக்கும். நம் மக்களைச் சொல்வதா, அல்லது கண்காணிப்பு பணியில் இருந்த அலுவலர்களைச் சொல்வதா.
வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு மூன்று முறை வகுப்பு நடைபெறும். பெரிய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும். உயர் அலுவலர்கள் எல்லாம் வந்து பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு லெச்சர் கொடுப்பர். ஒரு சிலர் மட்டுமே என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பர். பெரும்பாலானவர்கள் நாற்காலிகளை வட்டவட்டமாகப் போட்டுக்கொண்டு தங்கள் சொந்தக் கதைகளைப் பேசிக்கொண்டிருப்பர். கூட்ட முடிவில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்பார் பயிற்சியாளர்.
சிறிது அமைதிக்குப் பின்னர் பலர் கேட்கும் ஒரே கேள்வி தங்களுக்கான தேர்தல் பணிச் சம்பளம் எப்போது தரப்படும், எவ்வளவு தரப்படும் போன்றதுதான். தேர்தல் நடத்துவது தொடர்பான எந்த சந்தேகமும் கேட்கமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை நம்முடன் வரும் மற்ற மூன்று அல்லது நான்கு அலுவலர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார் அவர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று. சில சமயம் துரதிருஷ்டவசமாக, நான்கு வியாபாரிகள் சோறு வடித்த கதையாக எல்லாரும் ஒன்றுபோல் அமைந்து பகுதி அலுவலரின் கழுத்தை அறுத்ததும் உண்டு.
அது என்ன சோறு வடித்த கதை என்கிறீர்களா. வியாபாரத்திற்குப் போன இடத்தில் நாலைந்து பேர் கூடினர். அவர்கள் அனைவரும் தனித்தனியே சமையல் செய்வானேன். ஒன்றாகவே உலை வைத்துக்கொண்டால் சிக்கனமாகப்போயிற்று என்று முடிவு செய்து உலை வைத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு ஒரு பிடி அரிசி உலையில் இடவேண்டும் என்று முடிவானது. ஒவ்வொருவரும். தம் கணக்கிற்கு அரிசி போட்டதாகப் பாவனை செய்தால் போயிற்று மற்றவர்தான் அரிசி போடுகிறாரே அதில் தமக்கு பங்கு வந்துவிடப்போகிறதே என்ற மிதப்பில் ஒவ்வொருவரும் வெறும் கையில் முழம் போட்டுவிட்டனர். கடைசியில் அடுப்பிலிருந்து இறக்கிப் பார்த்தால் ஒரு பருக்கைகூட இல்லை அந்த நிலைதான் மேலே சொன்னது.
ஒரு முறை தபால் ஓட்டுக்கள் வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குச் சீட்டுக்களை அதிகாரி முன்னிலையில் உரிய கவர்களில் போட்டு மூடி ஒட்டி அதன் தொடர்புடைய ஆவணங்களை இணைத்து தனி கவரில் போட்டு வாக்காளர் முகவரிக்கு தனி கவரில் அனுப்பி வைக்க வேண்டும். வாக்காளர் அக்கவரைப் பிரித்து அதில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் வாக்குப் பதிவுசெய்து உரிய கவரில் இட்டு தபால் பெட்டியில் போட்டால் மிகச் சரியாக வந்து சேர்ந்துவிடும். எந்த குழப்பமும் இல்லாத அளவில் மூன்று கவர்கள் வழங்கப்படும். வாக்காளர்களுக்கு அனுப்பவேண்டிய கடைசி கவரில் போட வேண்டிய அனுப்புனர் (தேர்தல் அலுவலர் முத்திரையை) முத்திரையை பெறுநர் இடத்தில் அடித்து தபாலில் சேர்த்துவிட்டார். போஸ்டாபீசில் அனுபவம் வாய்ந்த அந்த அலுவலருக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. மறுநாள் காலையில் போன் செய்துவிட்டார். இப்படி வந்துள்ளதே என்ன என்று. அவ்வளவுதான் அலரிப் புடைத்துக்கொண்டு ஓடிப்போய் அனைத்து கவர்களையும் வாங்கி வந்து சரிசெய்து மீண்டும் அதிகாரியே எடுத்துச்சென்று தபாலில் போட்டார்.
ஒரு சில தபால் ஓட்டுக்களைப் பிரிக்கும்போதே தமாஷாக இருக்கும். வாக்குசீட்டிளை ஒரு கவரில் போட்டு ஒட்டி அனுப்புவதற்குப் பதிலாக வாக்குச்சீட்டு வாயைப் பிளந்துகொண்டு முழித்துக்கொண்டிருக்கும் அதற்குப் பதிலாக அறிவுரைக் கடிதங்கள் போன்றவை எல்லாம் கவரில் வைத்து சில சமயம் சீல் கூட வைத்து இணைத்து அனுப்பப்பட்டிருக்கும்.
இந்த தபால் ஆபீஸ்காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் நுல் பிடிக்கும் அழகே அழகுதான். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் ஒரு சீக்ரட் சீல் வழங்கப்படும். வாக்கு எண்ணி முடித்த 24 மணி நேரத்திற்குள் அதனை சீல் வைத்து பார்சலில் புதுதில்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த விபரத்தையும் தந்திமூலம் தெரிவிக்க வேண்டும்.
ஒரு முறை தேர்தல் முடிந்து அந்த சீக்ரட் சீலை ஒரு மரப் பெட்டியில் வைத்து அதனை கேன்வாஸ் துணியில் பொதிந்து சுற்றிலும் அரக்கு சீல் வைத்து தபாலாபீசில் கொண்டுபோய் கொடுத்தால் அதனை வாங்கிப் பார்த்த அதிகாரி ஒரங்களில் சீல் வைத்தால் போதாது பக்கம் பக்கத்தில் சீல் வைக்க வேண்டும் என்று திருப்பித் தந்துவிட்டார். அடுத்து ஆபீசுக்கு ஓடிப் போய் கூடுதல் அரக்கு சீல்கள் வைத்து கொண்டு வந்து கொடுத்தால் அப்போதும் திருப்தி அடையவில்லை. இரண்டு அங்குல இடைவெளிக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்து திருப்பிக் கொடுத்துவிட்டார். மீண்டும் ஓடி விஷயத்தை அதிகாரியிடம் சொன்னவுடன் அவர் சிரித்துக்கொண்டே ஒரு அங்குலத்திற்கு ஒரு சீல் வைத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டர். அடுத்து பெரியம்மை வார்த்த முகம் போன்று அட்ரஸ் தவிர எல்லா இடங்களிலும் சீல் தெரியும்படி கொண்டுபோய் கொடுத்தவுடன் அதனை புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அது இன்ஷூர்டு பார்சல் என்றவுடன் அவருக்கு பயம் வந்துவிட்டது போலும். அடுத்து பெரிய அதிகாரியிடம் கொண்டு போய் காண்பித்தார்.
அவர் அதனை வாங்கிக் குலுக்கிப் பார்த்தார். உடனே உள்ள இருப்பது ஆடுகிறது என்று சொல்லி திருப்பித் தந்துவிட்டார். நாங்கள் ஆட்டிப் பார்த்தால் எதுவும் ஆடவில்லை. ஆனால் பிடிவாதமாக மறுத்துவிட்டார். மீண்டும் அதனை எடுத்துப்போய் அலுவலகத்தில் ஒப்படைத்து அந்த பண்டலைப் பிரித்து உள்ளே குப்பை காகிதங்களைத் திணித்து மீண்டும் முன்போலவே அரக்கு முத்திரைகள் வைத்து கொண்டு வந்து கொடுத்தால் மதியம் ஆகிவிட்டது. வாங்கமாட்டேன் என்று சொல்லிவிட்டனர். எங்கள் அதிகாரிக்கு வந்தது கோபம். தொலைபேசியில் கூப்பிட்டு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்பிவிடுவேன் என்று ஒரு பிடி பிடித்துவிட்டார். உடனே வாயை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு ரசீது கொடுத்துவிட்டார் அந்த அதிகாரி. “அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்” என்று சொல்வது இதுதான் போலும்.