23
சம்பளப் பட்டியல்
ஒரு சாதாரண நிகழ்ச்சியை ரொம்பவும் பில்டப் கொடுத்து அப்படியே தூக்கு தூக்குண்ணு தூக்கினால் அப்புறம் “எச்சச்ச கச்சச்ச, கச்சச்ச எச்சச்ச”மாகிவிடும்.
சோ… கொஞ்சம் சுருக்கி வாசிக்கலாம்ன்னு தோணுது. சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் என்றாலும் சுவாரசியமாக இருக்கும் என்று எண்ணியே இவற்றை சொல்ல விரும்புகிறேன்.
சிதம்பரம் தாலுக்கா ஆபீசில் சிறு குமாஸ்தாவாக இருந்தபோது (அதாவது) காடா கிளார்க்கையெல்லாம் பார்த்தும், முக்கியமான பிரிவு பார்ப்பவர்களைப் பார்த்தும் நம்மால் முடியாது என்று மலைப்புடன் இருந்த கத்துக்குட்டி காலம். அதிலே ஒன்று இந்த ‘எஸ்ட்டாபிளிஷ்மெண்ட்’ பிரிவு. அப்போது தாலுக்கா ஆபீசில் 200 பேருக்குமேல் சம்பளம் மற்றும் அதன் தொடர்புடைய பணிகள் கவனிக்க வேண்டும். அதற்கென்று பில் போட ஒருவரும். அறிக்கைகள் தயார் செய்ய ஒருவரும் இரட்டை மாட்டு வண்டியாக ஒரே பிரிவு இயங்கிவந்தது. அவரவர்களும் கொடுத்த பில்டப் எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு அந்த பிரிவில் வேலை பார்க்க முடியாது என்ற தோற்றத்தை பதிவு செய்திருந்தது. அதிலும் சம்பளம் போடும் ஒரு குமாஸ்த்தா ஒருவாரம் பட்டியல் போடுவார். அப்புறம் ஒரிருநாள் இரவு ஆபீசில் தங்கியிருந்து பில் போடுவார்.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு துணை வட்டாட்சியர் எங்கள் செருக்கை அடக்க வேண்டும் என்று நினைத்தார். தாசில்தாரிடம் சொல்லி என்னையும் என் நண்பரை (திரு கலியபெருமாள்)-யும் அந்தப் பிரிவில் போட்டுவிட்டார். இரண்டுபேரும் பயந்துகொண்டுதான் அந்தப் பிரிவில் பணியேற்றோம். பட்டியல் போடும் வேலை எனக்கு.
ஒரு மாதம் மட்டும் கஷ்டமாக உணர்ந்தோம். முதன் முதல் சிகரெட் பிடிப்பவனுக்குதானே இருமல், தும்மல், முக்கல், முனகல், சிக்கல் எல்லாம் வரும். அப்புறம் சுருள் சுருளா விட்டு அசத்துவான் இல்லையா. அப்படிதான் இதுவும். ஒரு மாதத்தில் “என்னைவிட்டால் யாருமில்லை” என்ற நிலையை ஏற்படுத்தக் கற்றுக்கொண்டோம்.
பழிவாங்க நினைத்த துணை வட்டாட்சியரை அவரது விதி அவர்மீதே பாய்ந்து மாறுதலில் அனுப்பிவிட்டது. அப்புறம் எங்கள் வித்தைக் கிறுக்கு கொடியேற்றம் நடத்திவிட்டது. ஒரு வாரம் பட்டியல் போட்ட ‘ஸ்லோ மோஷண்’ எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. காலையில் ஆரம்பித்தால் மறுநாள் காலையில் அதிகாரிக்குப் போய்விடும். ஆக இப்படியாக செல்வாக்கு வளர்ந்துவிட்டால் அப்புறம் வாலை அவிழ்த்துவிட வேண்டியதுதானே.
சம்பளப்பட்டியல் கிளார்க்கு என்றால் சும்மாவா. எல்லாரும் தனி மரியாதை வேறு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் எங்கள் இருக்கையை ஆபீசில் நுழைந்தவுடன் பார்வையில் படும்படியான முக்கியமான இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டோம்.
வந்து சேர்ந்தார் ஒரு பெரிய குமாஸ்த்தா. அனுபவத்தாலும், வேலைத் திறத்தாலும். இன்னும் பல இத்தியாதிகளாலும், அவர் பெரியவர்தான். அவருக்கு அலுவலகத்திலேயே முக்கியமான முதன்மை ஸ்தானத்தில் பிரிவு வழங்கப்பட்டது. எங்களுக்கே இவ்வளவு என்றால் அவருக்கு எப்படியிருக்கும். எங்கள் இருக்கைக்கு முன்னதாக அவரது இருக்கையை போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டார். அது வரைக்கும் பிரச்சினை இல்லை. இனிதான் பிரச்சினையே ஆரம்பம்.
தாலுக்கா ஆபீசில் கூரை மிக உயரமாக இருக்கும். அதில் வெளிச்சத்திற்கு என்று நான்கு கண்ணாடிகள் மேலே பொருத்தப்பட்டிருக்கும். ஹாலில் பேனைப் போட்டவுடன் மேலிருந்து வீசும் வெளிச்சத்தாரையில் எங்கள் மேசைமேல் அதன் இறக்கை நிழல் அசைந்து அசைந்து எங்களால் வேலையே பார்க்க முடியாத நிலைமை. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் மாலை நான்கு மணி வரையில்கூட அந்த தொல்லை தாங்காது.
அவர் பேனைப் போட்டுவிட்டு சீட்டில் போய் உட்காருவார். நான் போய் அதனை அணைத்துவிட்டு வந்துவிடுவேன். இப்படியாக தினமும் போராட்டம் நடக்கும். அவரோ உனக்கு கஷ்டமாக இருந்தால் நீ வேறு இடத்திற்கு சீட்டை மாற்றிக் கொள் என்பார். அதெப்படி சீட்டை விட்டுக்கொடுப்பது. நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம். அடுத்தவன் சீட்டுக்கு வேட்டு வைத்தாலும் வைப்போமேயன்றி நம் சீட்டை விட்டுக்கொடுப்பதாவது. அப்புறம் நம் பண்பாடு என்னாவது.
சோ… வேட்டு வைக்க முடிவானது. எப்படி? ஒருநாள் அதிகாலையில் ஆபீசிற்குள் நுழைந்ததும் ஒரு சின்னஞ்சிறு பேப்பர் துண்டை எடுத்து பேன் சுவிட்சுக்குள் நுழைத்துவைத்துவிட்டு பேசாமல் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தேன். வந்தார் மகானுபவன். பந்தாவாக வழக்கம்போல் எங்களை நோக்கி ஒரு ‘லுக்கு’ விட்டுவிட்டு ஸ்விட்சைப் போட்டுவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். ஒன்றும் ஆகவில்லை. நாங்கள் காணததுபோல் வேலை செய்துகொண்டிருந்தோம். நிமிர்ந்து பார்த்தார். பேன் ஓடவில்லை. அது எப்படி ஓடும் அதைத்தான் ஆணியில் அறைந்து கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்களே.
திரும்பப் போய் சுவிட்சைப் போட்டுப் பார்த்தார். பலரிடமும் ஒரு பழக்கம் உண்டு எதையாவது காணவில்லை என்றால் தேடிய இடத்தில் மீண்டும் மீண்டும் தேடுவர். அது தானாக வந்து உட்காந்துவிடாதா என்ற நப்பாசை. இன்னும் ஒருபடி மேலே போய் அண்டாவைக் காணவில்லை என்றால் சொம்புக்குள் தேடிப்பார்ப்பர். அப்படியாக நம் தலைவர் மீண்டும் மீண்டும் ஆப் செய்து போட்டுப் பார்த்தார். சுவிட்சை நன்றாக அழுத்திப்போட்டுப் பார்த்தார். ஊகூம்…
எதற்கும் அசையவில்லை. நீங்கள்தான் ஏதோ செய்திருக்கிறீர்கள் என்று எங்களிடம் கேட்டுப்பார்த்தார். “இவன்தான் ஏதோ செய்துவிட்டான்” என்று என்னைப் பார்த்து புகார் சொல்லிப் பார்த்தார். “எங்களுக்கு வேறு வேலை இல்லையா” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டோம். அப்புறம் என்ன ஓரிரு மாதங்கள் வரை அப்படியே கிடந்ததுதான் மிச்சம்.
இப்படியாகப்பட்ட நாளிலே சம்பளம் போடுவது நாங்கள். ஆனா பட்டுவாடா செய்யும் உரிமை அவருக்கு. ஒவ்வொரு மாதமும் அவர் பாட்டுக்கு துணை வட்டாட்சியரிடம் பணத்தை வாங்கிவந்து பட்டுவாடா செய்வார். நாங்கள் கூட அவரிடம் நின்றுதான் பணம் வாங்கவேண்டும்.
ஒருபக்கம் ஆத்திரமாக வந்தாலும், பட்டுவாடா தொல்லை இல்லை என்பதில் திருப்தி. ஆனால் எங்களுக்கு முன்னுரிமைப்படி பணம் தரவேண்டுமல்லவா. அதுதான் நடக்காது. நான் பார்த்தேன். அவர் முன்பாக நின்றுகொண்டு எதையாவது தொணதொணப்பது. அவர் நோட்டை எண்ணும்போது எதிரில் நின்றுகொண்டு ஏதாவது எண்களை முணுமுணுப்பது. அவருக்கு எண்ணிக்கை விட்டுப்போகும் மீண்டும் எண்ணுவார். ‘முதலில் உன் பணத்தை வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி பண்ணு’ என்று என் சம்பளத்தை எண்ணுவார். எனக்கு “நானுற்று முப்பத்து ஐந்து” ரூபாய் சம்பளம் என்றால், எதிரில் நின்றுகொண்டு “நுறுரூபாய் நோட்டுக்கட்டு நான்கு, பத்து ரூபாய் நோட்டுக்கட்டு மூன்று, ஐந்து ரூபாய் கட்டு ஐந்து” என்று அவருக்கு பணம் கொடுக்க உதவி செய்வதுபோல் கேட்பேன். பாவம் அவருக்கு வெறி ஏறிவிடும். அதெல்லாம் பிற்காலத்தில் எவ்வளவு தப்பு என்று உணர்ந்தபோது வருத்தப்பட்டது என்னவோ நிஜம்.
நானும் நண்பர் கலியபெருமாளும் சம்பளப் பிரிவு பார்த்தபோது ஆபீசில் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்தான். ஏனென்றால் அவரவர்கள் கோரிக்கையும் அவர்களே எதிர்பாராத வேகத்தில் நடந்ததுதான்.
அதிலும்கூட சிலர் வாங்கிக் கட்டிக்கொண்டதுண்டு. ஒரு முறை சம்பளக் கமிஷண் நிலுவை பட்டியல் போட்டு வழங்கப்பட்டது. மாதங்கள் கணக்கில் விபரங்கள் சேகரித்து பட்டியல் போட்டுத் தரவேண்டும். இதற்கிடையில் ஓய்வு பெற்றவர்கள் தொல்லை வேறு. அதில் ஒருவர் தினமும் காலை மாலை என்று வந்து எங்கள் வேலையை ஆய்வு செய்வார். அவர் ஏற்கனவே ஆபீசில் வேலைபார்த்தபோது யாரையும் மதிக்கமாட்டார். சண்டை வளர்த்துவார். இப்படிப்பட்ட நல்ல மனிதர். ஒரு பத்து நாள் பொருத்துப் பார்த்தேன். அவர் வரும்போதெல்லாம் பக்கத்தில் இருப்பவர்கள் எங்களுக்காக பரிந்து பேசி சமாதானம் செய்வர். அவர்களிடமும் சண்டை வளர்ப்பார் அவர். தொல்லை தாங்காமல் அவருக்கு மட்டும் தனி பட்டியல் தயார் செய்து அனுப்புங்கள் என்று துணை வட்டாட்சியர் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
மறுநாள் வழக்கம்போல் வந்தார். நான் அவரை அழைத்து “உங்க எஸ்.ஆர்-ஐ காணடித்துவிடுவேன். அப்புறம் உங்க குணத்திற்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள். எனக்கு ஒரு பனிஷ்மெண்ட்தான் கிடைக்கும் அதைப்பற்றி பரவாயில்லை” என்று சத்தமில்லாமல் மிரட்டிவிட்டேன். அத்துடன் போனவர்தான். சிலதினங்கள் கழித்து அழைத்து பணத்தைக் கொடுத்து போய்வாருங்கள் நாங்களும் மனிதர்தான் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம். சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் வேலை செய்கிறது. என்ன செய்ய.
இதுபோல் இரண்டு மூன்று பேர் முறட்டு பேர்வழிகள் ஆபீசில் இருந்தனர். அவர்கள் மிரட்டலிலேயே காரியம் சாதிப்பர். ஒரு டிரைவர் இப்படித்தான் அவருக்கு டி.ஏ. இன்கிரிமெண்ட் என்று ஏக பாக்கி. நாங்கள் சேர்ந்த புதிது. அதற்கு முன் இருந்தவர்களிடம் வாங்கத் துப்பில்லை. அவர் ஒரு டெக்னிக் கையாளுவார். அதிகாரி வண்டியில் ஏறி ஊட்கார்ந்து ஜீப்பை ஸ்டார்ட் செய்யும்போது முகத்தைத் துக்கி வைத்துக் கொண்டு முணறுவார். அல்லது அப்போதுதான் ‘ஏ3’-யிடம் ஒரு வார்த்தை என்று தாமதம் செய்வார். அதிகாரிக்கு செண்டிமெண்டாக கோபம் வரும்.
எங்கள் பேரிலும் இந்த வேலையைக் காட்டினார். ஒருநாள் இரவு உட்கார்ந்தோம். அவரது பணிப்பதிவேட்டை எடுத்துப் பார்த்தோம். அவர் வாங்கும் சம்பளத்திற்கும் அதில் இருந்த பதிவுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. முதலிலிருந்து ஆராய்தோம். டிரைவர் பாணியில் சொல்வதென்றால் சர்வீஸ் ரிஜிஸ்ட்டரை முழுவதாக ‘இஞ்சினை பெட்டை விட்டு இறக்கி ஓவராயிலிங்’ செய்துவிட்டோம். ஏராளமான குளறுபடிகள். பட்டியலிட்டோம். ஒரே பெயரில் நாலைந்துபேர் இருந்ததால் பணிப் பதிவேட்டில் மாற்றி மாற்றி பதிவு செய்ததால் வந்த வினை என்று கண்டறிந்தோம்.
ஒரு நாலைந்து பக்கத்திற்கு ஆபீஸ் நோட் எழுதினோம். அவர் இன்னின்ன மாதிரி அதிகப்படியாக பணம் வாங்கியிருக்கிறார். அந்த வகையில் அவரிடமிருந்து மூவாயிரத்து சொச்சம் வசூல் செய்ய வேண்டியுள்ளது. அடுத்து அவருக்கு இன்னின்ன தொகைகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. அதன்படி அவருக்கு மூவாயிரத்து சொச்சம் அரியர் தரவேண்டியுள்ளது என்று கணக்குப் போட்டோம். போதாதற்கு இவர் வேறு வேறு அலுவலகங்களில் வேலை பார்த்திருப்பதால் அந்தந்த அலுவலகத்திற்கு அனுப்பி சரிபார்த்தால்தான் வேலைக்காகும் இல்லையென்றால் பிற்பாடு தப்பாக உத்திரவிட்ட அதிகாரிக்கு ஓலைவரும் என்று வண்ணம் வர்ணம் வைத்து எழுதிவிட்டோம்.
நுறு ரூபாய்க்கு வெள்ளி வாங்கினால் விரலுக்குள் மடங்கும் அளவில் ஒரு சிறு காசு கிடைக்கும். அதே ரூபாய்க்கு பொரி மூட்டை வாங்கினால்? நாங்கள் பொரி மூட்டையைத் தயார் செய்து அதிகாரிக்கு அனுப்பிவிட்டோம். போதக்குறைக்கு அதிகாரி டிரைவரைக் கூப்பிட்டு அவர் பங்குக்கு வேறு மிரட்டிவிட்டார்.
டிரைவர் நேராக வந்தார் எங்களிடம். இன்னைக்கு எனக்கு வர வேண்டிய பட்டியலை போடச்சொன்னால் பழையதை எல்லாம் ஏன் கிளறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சண்டை வளர்த்தினார். தாசில்தார் அவரைக் கூப்பிட்டு எதுவானாலும் என்னைக் கேள் என்று அடக்கிவிட்டார். அதோடு போச்சா என்றால் அதுதான் இல்லை. நேராக மாவட்ட ஆட்சியருக்குப் போனது. அங்கிருந்து கோட்டாட்சியருக்கு வந்தது. மீண்டும் அறிவுரை கேட்டு மாவட்ட ஆட்சியருக்குப் போனது. ஆக சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் சுற்றிக்கொண்டிருந்தது. டிரைவரும் ஏதடா வம்பில் மாட்டிவிட்டார்களே என்று அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்படியாக இரண்டு மூன்று முறட்டு ஆத்மாக்கள் எங்களிடம் மாட்டிக்கொண்டு அடங்கிப் போயிருக்கிறார்கள். மற்றவர்களாக இருந்தால் அவர்கள் பர்செண்டேஜ் கொடுத்து சத்தம் காட்டாமல் அரியர் போட்டு வாங்கியிருப்பர். எங்களிடம் அது நடக்காததுதான் வருத்தம்.
விளையாட்டாக வேட்டு வைப்பது கைவந்த கலையாக இருந்தது. ஆனால் அவரவருக்கும் நாங்கள் செய்தது நல்லதுதான் என்பது காலம் கடந்துதான் தெரியும். ஒரு சீனியர் குமாஸ்தா, ‘டிரைவருக்கு இப்படி செய்துவிட்டீர்களே’ என்று பரிந்துகொண்டு பேசினார். அன்று இரவு அவரது எஸ்.ஆர்.-ஐ பரிசீலனை செய்தால் அவர் எப்படி வேலைக்கு வந்தார் என்ற முதல் பதிவே இல்லை. திடீரென்று அவர் ஒரு அலுவலகத்திலிருந்து மாறுதலில் வந்ததாக ஆரம்பித்தது. ஆணி வேர் இல்லாமல் ஒரு மரம் சுமார் இருபது வருடத்திற்குமேல் வளர்ந்திருந்தது. காலையில் அவர் வந்ததும் அவருக்கு பேதி கொடுத்தோம். மனுஷன் ஆடிப்போய்விட்டார். வீட்டுக்கு ஓடிப்போய் பழைய பஞ்சாங்கங்களைத் தேடி முதல் பணி நியமன ஆணையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். அவரது எஸ்.ஆர்-ஐ சரி செய்து கொடுத்துவிட்டு ‘இந்த வேலைதான் நடக்கிறது. மற்றவர்கள் பேச்சை கேட்டு கோபிக்காதீர்கள்’ என்று தெரிவித்தோம். நாங்கள் இதைக் கண்டுபிடிக்காவிட்டால். அவர் ரிட்டையர் ஆனபின் அவருக்கு பென்ஷன் வழங்குவது தாமதமாகியிருக்கும்.
நானும் நண்பர் கலியபெருமாளும் பிரிவில் சேர்ந்த புதிதில் நிறைய பேருக்கு நிலுவைகள் இருந்தது. குழப்பமான பிரிவினைச் சரிசெய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த நிலையில் ஒரு துணை வட்டாட்சியர் தமக்கு மூன்று மாத ஊதிய உயர்வு நிலுவை ரூ 15/- மட்டும் போட்டுத் தரும்படி தினமும் அரிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த தொகைக்கு பட்டியல் போடும் வேலைக்கு அந்த தொகையை கைவிட்டு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்த நண்பர் அவரிடம் தனது சொந்த பணத்தை எடுத்து கொடுத்துவிட்டார். காசு காசு என்று அலைகின்ற அவரும் வெட்கமில்லாமல் வாங்கிக்கொண்டு போய்விட்டார். அதன் பின் அவர் வாய் திறக்கவே இல்லை. அவருக்கு “காசி…” என்ற பட்டப் பெயர் சேர்ந்துவிட்டது.
சம்பள பட்டியல் பிரிவில் சேர்ந்தவுடன் ஒரு கால்குலேட்டர் வாங்கினோம். அப்போதெல்லாம் தினசரி வசூல் விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்து தலைப்பு வாரியாக கூட்டுப்புள்ளி போடவேண்டும். அன்றைய சீனியர் குமாஸ்த்தாக்கள் எல்லாம். சர்வ சாதாரணமாக முன்று இலக்கங்களைக்கூட ஒரே நேரத்தில் கூட்டுவதையும் அதில் ஒரு தவறுகூட இல்லாததையும் கண்டிருக்கிறேன். நமக்கு அப்படி வரவில்லையே என்று ஏக்கம்கூட உண்டு. எங்கள் மேஜையில் கால்குலேட்டர் இருப்பதைப் பார்த்ததும் ஒரு சீனியர் கூட்டுப்புள்ளி போடும்படி என்னிடம் கொடுத்தார். கேல்குலேட்டரை அப்போதுதான் முதன் முதலாகத் தொடுகிறேன். அதை வைத்துப் போட்டால் சீக்கிரம் முடித்துவிடலாம் என்று அதனைப் பெற்றுவந்து உட்கார்ந்தேன்.
மிகப் பிரமாதமாக கூட்டுப்புள்ளி போட்டு இவ்வளவு ரூபாய் என்று குறித்துக் கொடுத்துவிட்டேன். அந்தத் தொகையானது மாவட்டத் தொகையைவிடவும் பல மடங்கு அதிகமாக வந்துவிட்டது. சீனியரோ, “தம்பி புள்ளி தப்பா இருக்கு”என்றார். நானோ “மனுஷன் தப்பு பண்ணலாம். கேல்குலேட்டர் தப்பு செய்யாது” என்று சாதித்தேன். ஐந்து நிமிடத்தில் அவர் கணக்குப் பார்த்து நான் போட்டது தப்பு என்று நிரூபித்துவிட்டார். எனக்கோ ஆச்சரியம். நாம் சரியாகத்தானே போட்டோம். அப்புறம் எப்படி என்று. இரண்டு மூன்று நாட்கள் சென்றுதான் சூட்சுமம் புரிந்தது.
நான் ஒன்றும் பெரிய தப்பு செய்துவிடவில்லை. (அப்போதுதான் நான் முதன்முதலாக கால்குலேட்டரைத் தொடுகிறேன்.) கால்குலேட்டாரில் 1 3 4 9 என்று அடித்தால் 1349 என்றுதானே பதிவாகும். அப்போது அது எனக்குத் தெரியவில்லை. நான் 9 3 4 1 என்று அடித்தால்தான் அது சரியாகக் கூட்டும் என்று நானாகவே கணித்துக்கொண்டு சுமார் முன்னுருக்கு மேற்பட்ட எண்களையும் அதே ரீதியில் கேல்குலேட்டரில் பதிவுசெய்திருந்தேன். அதுபாட்டுக்கு நான் சொல்வதுதான் சரி என்று எண்ணிக்கொண்டு ரூ 9341என்று கணக்கில் எடுத்துக்கொண்டது. இப்படியே எல்லாத் தொகையையும் கூட்டினால் என்னாகும். நல்லவேளை பட்ஜெட் போடும் இடத்தில் என்னை வேலைக்கு வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தால் காற்றிலேயே கணக்குப்போட்டு இல்லாத தொகைக்கு செலவழிக்க வழிசெய்திருப்பேன். இந்தக்காலத்தில் அப்படித்தான் நடக்கிறது என்பது வேறு விஷயம். பிற்பாடு பல ஆண்டுகள் வரை நான் போட்ட கேல்குலேட்டர் கூட்டல் என் நினைவுக்கு வந்து கிண்டலடிக்கும்.