24
வணக்கம்
வணக்கங்கள் பலவிதம். மனிதர்கள் மட்டும் பலவிதம் என்னும்போது வணக்கங்களும் பலவிதம் இருந்தாலென்ன. மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் “சிரிப்பு அதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நம்ம பொருப்பு” என்ற பாடலில் ஒவ்வொரு வகை சிரிப்பையும் சிரித்துக் காட்டுவார். அதுபோன்று ஒருசிலரது வணக்கங்கள் பிரசித்தியானவை.
(1) ஒரு அலுவலர். அவரைவிடப் பெரிய அலுவலர் யாரைப் பார்த்தாலும் ஒரு கும்பிடு போடுவார் பாருங்கள். தற்கால அரசியல்வாதிகளைப் போல் தரையைத் தொடும் அளவிற்கு நன்றாகக் குனிந்து இரு கரம் குவித்து வணங்குவார். ஏதோ சினிமாக்களில் வரும் அரசர் முன் மூன்று முறை குனிந்து சலாம் செய்வது போல் இருக்கும். ஒரு தாசில்தார் அவரை “கீழே சாய்ந்து விடாதே அய்யா” என்று கேலி பேசுவார். இருந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தமாட்டார். ஒரு முறை அவர் அதே அதிகாரி முன்பு குனிந்து வணக்கம் தெரிவித்தார். அப்போது அவரது சட்டைப் பையில் வைத்திருந்த சில்லரை காசுகள் உட்பட பல துண்டுக் காகிதங்களும் அதிகாரி காலடியில் விழுந்து வணக்கம் செலுத்தியதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.
(2) ஒரு நண்பர். அவர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் கடவுளுக்கு முதல் வணக்கத்தை செலுத்திவிட்டுத்தான் மற்றவரை வணங்குவார். அதுவும் அலாதியான நகைச்சுவைதான். அலுவலகத்திற்குள் நுழைந்ததும் டபக்கென்று செருப்பினை கழற்றுவார். போலீசார் அட்டெண்ஷனில் நிற்கும்போது ஏற்படும் சத்தம் போன்று அனைவரையும் அது கவரும். அந்த செருப்புகளின் பின்னால் நின்றவண்ணம் கடவுளுக்கு வணக்கத்தைச் செலுத்துவார். எனக்கு வாய் சும்மா இருக்காது. “ஏண்டா கடவுளுக்கு செருப்பைப் படையலாகப் போடுகிறாயா” என்று சில சமயம் கேட்டு வம்பு வாங்கியது உண்டு.
(3) ஒரு கிளார்க்கு. அவர் அலுவலகத்திற்குள் வந்தவுடன் கண்ணில் படும் எல்லாருக்கும் வணக்கம் செலுத்துவார். வலது கையை நெஞ்சுக்கு நேராக விரைப்பாக வைத்து ஆங்கில வணக்கம் செய்வர். அதனைப் பார்த்த ஒரு துணை வட்டாட்சியர் “ஏன் சார் அவர் வணக்கம் செலுத்துகிறாரா அல்லது மவனே வெட்டிடுவேன் என்று மிரட்டுகிறாரா” என்று ஒருநாள் கேட்டுவைக்க அதன் பின்னர் அவர் எப்போது வணக்கம் சொன்னாலும் அந்த நினைப்புதான் வரும்.
(4) ஒரு கிராம நிர்வாக அலுவலர். அவர் என்னிடம் வேலை பார்த்தவர். அவர் எப்போது அலுவலகத்திற்கு வந்தாலும். துணை வட்டாட்சியர் முதல் முக்கியமாக பந்தா பண்ணும் உதவியாளர்கள் வரை எல்லோரையும் பார்த்து “எஜமான் வணக்கம். அய்யா வணக்கம்” என்று விதவிதமான அடைமொழிகளைச் சேர்த்து பவ்யமாக வணங்குவார். ஆனால் என்னிடம் வந்து “எப்படி இருக்கீங்க. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்று சாதாரணமாக நண்பரிடம் கேட்பது போல் கேட்பார். ஒருநாள் அவரிடம் “அது என்ன ஒருசிலரிடம் மட்டும் அவ்வளவு அடைமொழிகளுடன் வணக்கம் சொல்கிறீர்கள்” என்று கேட்கப்போக “அய்யா, எஜமான் என்கிற அடைமொழி சொல்லும்போது கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் மனதில் நினைத்துக்கொண்டு வாயாற வணக்கம் சொல்வேன். உங்களிடம் எல்லாம் வரும்போது மனதார பேசுவேன் எது வேணும் சொல்லுங்க” என்றார். அப்புறம் ஏன் நான் வணக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
(5) ஒரு குமாஸ்த்தா சற்று ஜோவியலாக எல்லாரிடமும் பழகுபவர். அவர் சலாம் செய்யும் அழகே அழகுதான். பார்த்தவுடன் ராணுவ ரேஞ்சில் ஒரு காலை உதைப்பார். அடுத்து கண்ணுக்கு குடை பிடிப்பது போல் வலது கையை நெற்றியில் பிடித்து ஒரு சல்யூட் அடித்து அப்படியே ஒரு உதறு உதறி கையை விடுவிப்பார். அந்த உதறல்தான் ஹைலைட்.
(6) ஒரு தலையாரி. அவர் தொலைதுர கிராமத்திலிருந்து வருபவர். அவர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் செருப்பைக் கழற்றி கையில் துக்கிப் பிடித்துக்கொள்வார். அந்தக் காலப் பாரம்பாரியம் போன்று துண்டை இடுப்பில் கட்டி இறுக்கியிருப்பார். அலுவலர் யாரைப் பார்த்தாலும். அது பியூனாக இருந்தாலும் சரி இல்லை வட்டாட்சியராக இருந்தாலும் சரி. டக்கென்று செருப்புடன் இருகரம் துக்கி வணக்கம் செலுத்துவார். சில குறும்புக்கார அலுவலர்கள் “ஒன்று செருப்பைக் கீழே போட்டுவிட்டு வணக்கம் செலுத்து அல்லது வணக்கமே சொல்லவேண்டாம்” என்று சொல்வர். உடனே நாணிக்கொண்டு செருப்பை பின்பக்கம் கொண்டு சென்றுவிடுவார். கீழே மட்டும் போடமாட்டார். அவ்வளவு மரியாதை அலுவலகத்திற்கு. அடுத்ததாக அவருக்கு ரொம்பவும் பிடித்த ஒரு கிளார்க்கின் பீரோவிற்கு அடியில் கொண்டுபோய் செருப்பை மறைவாக வைத்துவிட்டு ஒவ்வொரு குமாஸ்த்தாவிடமாக வந்து வணக்கம் சொல்லுவார். ஏதாவது வேலை செய்ய வேண்டுமா என்பார். யாரும் சொல்லாமலே குப்பையைக் கூட்டுவது தண்ணீர் கொண்டு வந்து வைப்பது எல்லாம் செய்வார். தடுத்தாலும் கேட்கமாட்டார். யாராவது டீ சாப்பிடு என்று சில்லரை கொடுத்தால் அவருக்கு தெய்வமாக கண்ணில் தெரிவார்.
இவரால் ஒரு சுவாரஸ்யமான செய்தி. ஒரு நாள் அதிகாலை நேரம் காலிங்பெல் அடிக்கவே யாராயிருக்கும் என்று கதவைத் திறந்தால் அந்த தலையாரி சிமெண்ட் சாக்கில் முக்கால் மூட்டை கட்டிக்கொண்டு வாசலில் நின்றார். என்னுடைய சர்வீசில் எந்த ஒரு கீழ் நிலை அலுவலரிடமும் என் சொந்த உபயோகத்திற்கு எதையும் கேட்டது கிடையாது. எந்த ஒரு சொந்த வேலையும் வாங்கியதும் கிடையாது. அப்படியிருக்க இவர் என்னத்தைக் கொண்டு வந்துள்ளார் என்று தெரியாமல் விசாரித்தால் என் முன்பாக மூட்டையைப் பிரித்து கொட்டினார். பத்துப் பதினைந்து கிலோ அளவிற்கு அவ்வளவும் கோவைக்காய். மிகவும் பவ்யமான தலையாரி என்பதால், சாந்தமாக யார் கேட்டது இவ்வளவும் எதற்கு கொண்டு வந்தார் என்று விசாரித்தால் “அய்யா தாங்கள்தானே அன்று கோவைக்காய் சாப்பிடச் சொன்னீர்கள்” என்று விளக்கம் வேறு. அப்புறம்தான் தெரிந்தது. நாங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோது சில நாட்கள் முன்பு நீரிழிவு நோய் கண்ட ஒரு நண்பரை தினமும் ஒரு பிடி அளவுக்கு கோவைக்காய் சாப்பிடும்படியும் நிறையக் கிடைக்கும்போது வாங்கி வற்றலாக போட்டு வைத்துக்கொள்ளும்படியம் சொன்னதை இவர் கேட்டிருக்கிறார். அவர் ஏதோ எனக்குத்தான் நோய் என்று மனம் கசிந்து கோவைக்காய் மொத்த வியாபாரம் செய்யும் அளவிற்கு மெனக்கெட்டு சேகரித்து இருபத்தைந்து கிலோமீட்டர் பயணம் செய்து கொண்டு வந்துள்ளார். அவரது பாசம் கலந்த மனித நேயத்தை மெச்சுவதா. அல்லது அவரது அறியாமை செயலுக்காக திட்டுவதா என்று புரியாமல் ஒருவழியாக டீ குடிக்க காசு கொடுத்து அனுப்பி வைத்தேன். அவரோ வற்றல் போட்டுக்கொள்ளுங்கள் என்று மன்றாடினார். ஒருவழியாக சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தேன். இரண்டு நாள் கழித்து ஒரு நண்பர் தம் வீட்டுக்குக் கோவைக்காய் கொண்டுவந்த விஷயத்தை சொன்னார். அப்புறம்தான் தெரிந்தது கொண்டு வந்த கோவைக்காயை வீணாக்காமல் ஒவ்வொரு அலுவலர் வீட்டுக்கும் கொண்டுபோன விவகாரம். இது எப்படி இருக்கு.
(7) அது ஒரு தனி திட்டப்பணி அலுவலகம், பத்து தாசில்தார்களும், ஒரு மாவட்ட வருவாய் அலுவலரும் அங்கு வேலை செய்தனர். ஒரு தாசில்தார். அவர் திடீரென்று எழுந்து சென்று ஒவ்வொரு தாசில்தாராக பார்த்து ஓரிரு வார்த்தை பேசிவிட்டு நேராக அதிகாரியைப் பார்த்து வணக்கம் செலுத்திவிட்டு வருவார். முதலில் அதிகாரி நேரங்கெட்ட நேரத்தில் வந்து இவர் ஏன் வணக்கம் சொல்லிவிட்டுப் போகிறார் என்று குழம்பினார். பின்னர்தான் தெரிந்தது. அவர் அப்படியே வீட்டுக்குப் போகிறார் என்பதும், இரண்டொரு நாட்களுக்குத் தாக்கு தகவல் ஏதும் இல்லாமல் அபீசுக்கும் வரப்போவதில்லை என்பதும். இப்படி ஒரு வாரம் கூட வராமல் இருப்பார். எந்த தகவலும் தெரியாது. சில நாட்கள் அலுவலக வாசல் வரை வந்து மனம் மாறி வீட்டுக்குப் போனதுகூட உண்டு. சுதாரித்துக்கொண்ட அதிகாரி மறுநாள் அவரது கிராமத்திற்குப் பணி மேற்பார்வை செய்ய வருவதாகச் சொல்லிக்கூடப் பார்த்தார். அதிகாரிதான் தன் போக்கை மாற்றிக்கொண்டார். மகானுபாவன் மாறவில்லை. அவருக்கும் ஒரே சம்பளம்தான். மாய்ந்து மாய்ந்து வேலை செய்த மற்ற ஒன்பது வட்டாட்சியர்களுக்கும்கூட ஒரே சம்பளம்தான்.
இவரைப்பற்றி இன்னும்கூட சுவாரஸ்யம் உண்டு. அவர் மயிலாடுதுறையில் வசித்தார். எங்கு பணி புரிந்தாலும் ரயிலில் வருவார். கடலூருக்கு இந்த அலுவலகத்துக்கு வந்ததும் தினமும் காலை ரயிலில் ஏறியதும் சட்டையைக் கழற்றி மாட்டுவார். செருப்பு ஒரு பக்கம் கிடக்கும். ஆசுவாசமாக உட்கார்ந்து வருவார். பாசஞ்சர் என்பதால் மூன்று மணிநேரம் ஆகும். பயணத்தின்போது எதிரில் வண்டி வந்து கிராசிங் என்றால் அப்படியே இறங்கி வீட்டுக்கு போய்விடுவார். சில நாள் மறதியாகக் கடலூர் வரை வந்துவிட்டால் காலாற நடந்து ஆபீஸ் வரை வருவார். சந்து முனையில் அவருக்கு வேண்டிய ஒரு சர்வேயர் சந்தித்து விவரம் சொல்வார். அதற்கேற்ப ஆபீசுக்கு வந்தாலும் வருவார் அப்படியே போனாலும் போவார். இது எல்லாருக்கும் விக்கிலீக்ஸ் போல் லீக் ஆகிவிட்டது. ஆனாலும் மனிதன் அலட்டிக்கொள்ளவில்லை.
ஆகக்கூடி அவரது அலுவலகத்தில் மட்டும் வேலை எதுவும் நடக்கவில்லை. பார்த்தார் பெரிய அதிகாரி. அவர் தன்னிச்சையாகப் பணிக்கு வரவில்லை என்று அறிக்கை எழுதிவிட்டு அவரது வேலையை மற்ற எட்டு தாசில்தார்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். இந்த தகவல் தெரியாத அவரும் அவருடைய பணியாளர்களும். ஏதோ தங்களுக்கு வேலை பளு குறைந்துவிட்டது என்று ஒருமாதம் காலம் ஒட்டினர். ஒரு மாதம் கழித்துதான் தெரிந்தது சமாசாரம். விளைவு அவர்களுக்கு வரவேண்டிய பயணப்படி வகைகள் பறிபோய்விட்டது.
(8) நாங்கள் தாலுக்கா அலுவலகத்தில் இளங் குமாஸ்த்தாக்களாக இருந்த சமயம். அருகில் உள்ள கடையில் டீ சாப்பிட நான்கைந்து பேராக போவோம். நாங்கள் எப்போது போனாலும் ஒரு குமாஸ்தா வணக்கம் சொல்லி எங்களுடன் சேர்ந்துகொள்வார். ஒரு சில மாதங்கள் வரை எங்களுக்கு ரகசியம் புரியவில்லை. ஒரு நாள் ஒரு நண்பர்தான் கண்டுபிடித்தார்.
நாங்கள் டீ குடித்ததும் யாராவது ஒருவர் காசு கொடுப்போம். அவர் ஒரு நாளும் கொடுத்ததில்லை. ஆக, எங்களுக்கு ஒரு வணக்கத்தை கடாசிவிட்டு எங்களுடன் வந்து தினமும் ஓசி டீ குடித்து வந்துள்ளார் நண்பர். அவர் பிரிவு வழியாதான் நாங்கள் போகவேண்டும் என்பதால் அவரிடம் தப்பவும் முடியாது. அவரிடம் சொல்லிக் காட்டி வெட்டிவிடவும் மனம் வரவில்லை. இருந்தாலும் பாடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
வழக்கம்போலவே ‘டீ’ கடைக்கு போவோம். அவரிடம் கொஞ்சம் தண்ணீர் மட்டும் கேட்டுவாங்கிக் குடித்துவிட்டு சற்று நேரம் பேசிவிட்டு திரும்பி விடுவோம். இப்படி செய்தும் அவர் எங்களுடன் வருவதை நிறுத்தவில்லை. கடைசியில் அவருக்கு திருச்சிக்கு மாறுதல் வந்ததால் எங்களை ஏங்கவிட்டுப் போய்விட்டார்.
(9) ஒருவர் சற்று வசதியானவர் மிதப்பானவர். சட்டையில் ஒரு பட்டன் மட்டும் தான் போடுவார். விரல் மொத்த சங்கலி வயிறு வரை தொங்க, காவி பல்லில் கொப்பளிக்க, விரல்களில் கட்டி மோதிரங்கள் பளபளக்க ஆர்ப்பாட்டமாக வருவார். அவர் அதிகாரி முன்பு வந்தால் மட்டும் வணக்கம் சொல்வார். மற்றவர்களுக்கு – குட்டி அதிகாரியாக இருந்தாலும் சரி – இடது கையால் சலாம் அடிப்பார். அதுவும் அலட்சியமாக. அதற்கு வசதியாக வெற்றிலை பெட்டியை தனது வலது அக்குளில் இடுக்கிக்கொள்வார். அதனால் யாரும் அவரது செயலை தப்பா எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைப்பு. இதில் வினோதம் என்னவென்றால் சிலர் அவரிடம் வேற்றிலை கேட்டு வாங்கி போடுவர். அவருக்கு மக்கள் வைத்த பட்டப் பெயர் நாயனக்காரர். அது அவருக்கு தெரியுமோ தெரியாதோ.
(10) நான் திருக்கோயிலூரில் வேலை பார்த்த பொது என்னுடன் ஒரு வயதான எழுத்தர் வேலை பார்த்தார். அவர் அதிகாரியை பார்த்தவுடன் ஒற்றை வணக்கம் எல்லாம் சொல்லமாட்டார். அநேகம் கோடி நமஸ்காரம் என்பார். தாசில்தாரும் எனக்கு ஒரு வணக்கம் போதும். கோடி நமஸ்காரத்தை கடவுளுக்கு கொடுங்கள் என்பார். ஆனால் இவரோ மாற்றிக்கொள்ளவே இல்லை.
நான் விழுப்புரத்தில் வேலை பார்த்த பொது ஒரு முதிய எழுத்தர். அவர் அடிக்கடி புரோஹிதம் பார்க்கப் போவார். அவருக்கு எத்தனை நாள்தான் விடுப்பு என்று தெரியாது. இன்று விடுப்பு கேட்பார். மதியம் வந்து தாமத வருகை என்று சொல்லி விடுப்பை ரத்து செய்வார். இப்படியே குழப்பம் செய்து தேவையான விடுப்புகளை அனுபவிப்பார். அவர் அதிகாரிக்கு விடுப்பு கடிதம் எழுதும் அழகே தனி. வணக்கத்துடன்தான் கடிதம் ஆரம்பிப்பார் இப்படி.
“மகாராஜ ராஜஸ்ரீ சப்ரி ஆபீசர் இருக்கும் திசைநோக்கி தெண்டனிட்டு அநேக நமஸ்காரங்களுடன் எழுதிகொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால் …..” என்று எழுதி கடைசியில் நன்றி நன்றி நன்றி என்று மூன்று முறை எழுதி முடிப்பார். அதிகாரியோ கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். வயதான பெரியவர் என்பதால் சிரித்துக்கொண்டே கடிதத்தை வாங்கி வைத்துக்கொள்வார். அவருக்குத் தெரியும் மீண்டும் சற்று நேரத்தில் ரத்து செய்யப்படும் என்று. இருந்தும் வயதை முன்னிட்டும் அவர் அலுவலகத்தில் இருந்தாலும் வேலை செய்யப்போவதில்லை என்பதாலும் ஒழியட்டும் என்று விட்டு விடுவார்.
(11) அப்போது என்னுடன் ஒரு தற்காலிக எழுத்தர் வேலை பார்த்தார். அவர் மேல் பட்டம்பாக்த்திலிருந்து தினமும் வருபவர். சில நிமிடங்கள் தாமதமாகத்தான் வருவார். அவர் கால் சற்று ஊனமுற்றவர். அதனால் அவருக்கு சிறிது சலுகை உண்டு அதிகாரியிடம். அலுவலகம் முழு அளவில் நடந்துகொண்டிருக்கும். இவர் அலுவலக வாசல் படியைத் தாண்டி ஒரு காலை வைக்கும்போதே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய வண்ணம். “வணக்கம் சார்” என்று ஒரு கர்ண கடூர சத்தம் கொடுப்பார். அதன் பின்னர்தான் உடல் உள்ளே நுழையும். சில தினங்களில் அதிகாரி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்து ‘பயமுறுத்தாதே’ என்பார்.
இவரைப் பற்றி சுவையான செய்தி. நானும் இன்னொரு நண்பரும் கடலூரிலிருந்து தினமும் வருவோம். மாலையில் ஆறு மணிக்கு ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் புறப்படும். நாங்கள் மூவரும் அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டால் அதிகாரி விடமாட்டார். வேண்டுமென்றே கடிகாரத்தை பார்த்துக் கொண்டே இருப்பார். சரியாக ஆறு மணிக்கு “போங்கடா” என்பார் சிரித்துக்கொண்டே. நாங்கள் எப்படியும் ஓடி ரயிலை பிடித்துவிடுவது என்று உத்வேகத்துடன் நிலையத்தின் பின்புற வழியாக ஓடுவோம். சில நேரம் நிற்கிற கூட்ஸ் எல்லாம் தாவிக் குதித்து ஓடுவோம். ரயில் நிர்ப்பது போலவே தோன்றும். கடைசியில் பிடிக்க முடியாது. அப்புறம். ஸ்டேஷனிலேயே காத்திருப்போம். நாகூர் வண்டி இரவு ஒன்பது மணிக்கு வரும். தாமதமானால் ஒன்பதரைக்கு போட் மெயில் வரும். அதில் ஏறுவோம். மேல்பட்டாம் பக்கத்தில் நிற்காது. இருந்தாலும் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிவிடுவான் அந்த கில்லாடி.
சில சமயத்தில் அவனது பேசி பேசியே கொல்லும் அறுப்பு பிடிக்காமல் எப்படி அவனை கழட்டி விடுவது என்று பார்ப்போம். அவன் சற்று ஜொள்ளு பேர்வழி. நாங்கள் இருவரும் அவனிடம் “….சா கொஞ்சம் லேட்டா வரியே இப்பதான் ஒரு பொண்ணு சிகப்பு தாவணி பச்சை சட்டை போட்டு இந்த பக்கம் போச்சு” என்று அடித்து விடுவோம். அவனோ உடனே எந்த பக்கம், எவ்வளவு நேரம், அடையாளம் என்று பரபரப்பான்.
நாங்களும் எதாவது சொல்லிவைப்போம். கற்பனைதானே எதை சொன்னால் என்ன. ஆனால் அவனோ காற்றில் கணக்கு போட்டு வேகவேகமாக போவான். நாங்களும் விட்டது தொல்லை என்று அரட்டை அடிப்போம். அவனோ யாரையாவது பார்த்துவிட்டு சற்று நேரத்தில் வந்து எங்களை ரசனை குறைந்தவர்கள் என்று திட்டுவான். இப்படியே பொழுது போகும். கடைசியில் இரவு ரயிலை பிடிப்போம். மேல் பட்டாம்பக்கத்தில் ரயில் நிற்காது. ஆனால் நண்பனோ துணிச்சலாக ஏறிக்கொண்டு ஸ்டேஷன் வரும்போது சற்று வேகம் குறைந்தவுடன் இறங்கிவிடுவான். நாங்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். இப்படியாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஜாலியாக போனது வாழ்க்கை.