"

25

கருவூலம்


வருவாய்த் துறைக்கும் கருவூலத்திற்கும் எப்போதுமே நல்ல தொடர்பு உண்டு.  எல்லாத் துறைகளின் கணக்குகளையும் தணிக்கை செய்து பட்டியல் பாஸ் செய்வது கருவூலத் துறைதான் என்றாலும் வருவாய்த்துறையினருடன் சற்று பட்சமாகவே இருப்பது வழக்கம்.  காரணம் வருவாய்த்துறையிலிருந்து பிரிந்து உருவானதுதான்.

நான் சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் பணியில் இருந்த காலம்.  கருவூலத்தில் திரு நரசிம்மன் என்ற நண்பர் இருந்தார்.  நாங்கள் டீ சாப்பிடக்   கிளம்பும்போது அந்த அலுவலகம் வழியாகச் செல்வோம். வாசலில் நின்று கொண்டு தூரத்தில் அவரைப் பார்த்து சலாம் செய்வோம்.  ஆனால் அவரோ நாங்கள் ஏதோ பட்டியல் அனுப்புகிறோம் என்று எண்ணிக்கொண்டு ‘இன்னும் வரவில்லை நான் அனுப்பிவிடுகிறேன் நீ போ’என்று சாடைகாட்டி கை ஆட்டுவார்.  யாரும் போய் தள்ளிவிடாமலே பட்டியல்கள் போய்க்கொண்டே இருக்கும். ஒரு பட்டியல் என்றால் பட்டியல் அலுவலரால் குறைந்தபட்சம் பத்துக்குமேல் கையெழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும்.  ஒரு முறைக்கு பத்து பதினைந்து பட்டியல்கள் அனுப்பப்படும்.  இந்நிலையில் ஒரு கையெழுத்து விடுபட்டிருந்தாலும் அவரே நேரே எடுத்துவந்து வட்டாட்சியர் ஒப்பம் பெற்று பாஸ் செய்துவிடுவார். அவ்வளவு பாசம்.

ஒருமுறை தீபாவளியை முன்னிட்டு 25-ஆம் தேதியே சம்பளம் வழங்கும்படி 24- ஆம் தேதி அறிவித்துவிட்டது அரசாங்கம்.  இது விபரம் எங்களுக்குத் தெரியாது. மதியம் அலுவலகத்திற்கு வந்தார் கருவூல அலுவலர். நாளை சம்பளம். நீங்க என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று செல்லமாக கடிந்துகொண்டார்.

எங்கள் வட்டாட்சியரோ கவர்னர் வருகைக்காக பங்களாவில் குடியிருந்தார். அப்போதெல்லாம் அப்படித்தான். அலுவலகத்திலோ பட்டியல் அலுவலக நகல் மட்டும் முடிந்திருந்தது. நகல் தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது.  முடிய இன்னும் இரண்டு நாள் ஆகும்.  விபரத்தைக் கேட்டவர். எனக்கு வேண்டியது தாசில்தார் கையெழுத்துதான் பட்டியலைத் தைத்து எடுத்துவா என்றார்.  நானும் நண்பனும் (நண்பன்தான் பட்டியல் குமாஸ்த்தா) வேகவேகமாக முடித்து வட்டாட்சியரிடம் கொண்டுபோய் கையெழுத்து வாங்கி வந்தோம்.  ஆனால் சில பதிவேடுகளில் கையெழுத்து வாங்க முடியவில்லை. இணைப்புகளில் கையெழுத்து வாங்க முடியவில்லை.  எப்படியும் 45 பில்களுக்கும் சேர்த்து ஆயிரம் கையெழுத்தாவது அதிகாரி போடவேண்டும்.

ட்ரெஷரி அதிகாரியிடம் போனால் பில்லை கொண்டா என்று கேட்டு வாங்கி பில் சம்பந்தப்பட்ட முக்கியமான கையெழுத்துக்கள் உள்ளதா என்று பார்த்து பாஸ் செய்து வங்கிக்கு அனுப்பிவிட்டார்.  இதெல்லாம் நடக்கும்போது மாலை ஆகிவிட்டது.  மறுநாள் காலை வங்கியிலிருந்து முதல் ஆளாக பணம் பெற்றுவந்து சம்பளம் பட்டுவாடா ஆகிவிட்டது.  மறுநாள் வங்கியிலிருந்து பில்களைப் பெற்றுவந்து சீவிமுடித்து சிங்காரித்து பொட்டிட்டு பூச்சூட்டி தேவையான இணைப்புகளை இணைத்து மீண்டும் கொண்டுபோய் ஒப்படைத்தோம்.

இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் அதிகாரியும் நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டார்.  போதாதற்கு ‘தம்மை சும்மா சும்மா வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று சில வெற்றுப் படிவங்களிலும் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டார்.  மறுநாள் எல்லாம் செட்டில் ஆனபின்பு வட்டாட்சியரிடம் கொண்டுபோய் எல்லாவற்றையும் காண்பித்து தேவையில்லாத காகிதங்களையெல்லாம் அவர் முன்பாகவே கிழித்துப் போட்டது தனிக் கதை.

நான் பட்டியல் குமாஸ்த்தாவாக இருக்கும்போதும் இதுமாதிரி வட்டாட்சியர் (இப்போது வேறு ஒருவர்) என்னை அழைத்து தாம் வெளியே போவதாகவும் ஏதேனும் பட்டியல் கையெழுத்து வாங்கவேண்டுமெனில் இப்போதே வாங்கிக்கொள் என்றும் சொல்லி என்னிடமும் வெற்றுப் படிவத்தில் ஒப்பம் செய்து கொடுத்த சம்பவங்கள் உண்டு.

அந்த நாளில் அதிகாரிகள் குமாஸ்தாக்களை நம்பினர்.  குமாஸ்தாக்கள் அதிகாரிகளிடம் விசுவாசமாகப் பணிபுரிந்தனர்.  அது அதிகாரி-குமாஸ்தா என்ற உறவு அல்ல.  பெற்றோர் – பிள்ளைகள் போன்ற உறவு. அதற்கும் மேலே உற்ற நண்பர்களின் உறவு என்றால்கூடப் பொருந்தும். “கடிதோச்சி மெல்ல எரிவர்.”  இக்காலத்தில் அதையெல்லாம் நுற்றில் ஒருவரிடம் கூட எதிர்பார்க்க முடியாது.  அதைவிட இப்போது கூட்டுக்கொள்ளை, நம்பிக்கைத் துரோகம் வேண்டுமாயின் நடக்கும்.

நான் சப்கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த காலம். எல்லாருக்கும் டி.ஏ. பில் தயார் செய்தோம். கையால் எழுதுவதெல்லாம் கிடையாது.  எல்லாம் டைப்தான். கடைசியில் பட்டியல் போட்டு பணம் வந்து சேர்ந்துவிட்டது. சீனியர் குமாஸ்த்தா பணத்தை என்னிடம் கொடுத்து பட்டவாடா செய்யச் சொன்னார். பணம் கொடுத்துக்கொண்டே வந்தேன். கடைசியில் பணம் குறைந்தது.  யாருக்கோ தப்பாக கொடுத்துவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் சரிபார்த்தால் எல்லாம் சரியாக இருந்தது. பணம் எப்படி குறையும். சீனியரிடம் கேட்டேன் பயந்துகொண்டே. நம்மை கண்காணிப்பதற்காக பணத்தைப் பிடித்து வைத்திருப்பாரோ என்று எண்ணம். அவர் பட்டியலைக் கொண்டா என்று வாங்கி ஒவ்வொருவராக கூட்டிப் பார்த்து கடைசியில் கூட்டுப் புள்ளி தப்பாக போட்டதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்துவிட்டார்.  அதுதான் சீனியர்.  நான் போட்டால் சரியாக வந்தது.

நான் டைப் அடிக்கும்போது எண்கள் பதிவு செய்யும்போது இலக்கங்களை ஒழுங்கு படுத்தாமல் இடது ஒழுங்கில் தட்டச்சு செய்திருந்தேன். அப்படியே கூட்டினால் நுறும் பத்தும் சேர்ந்து தொகை அதிகமாக வந்துள்ளது. என்ன செய்வது என்று புரியவில்லை.

சப்கலெக்டரிடம் எப்படி சொல்வது என்று பயம். சீனியர் என்னையும் அழைத்துக்கொண்டு நேராக டிரஷரிக்குப் போய் அதிகாரியைப் பார்த்தார். அவர் சப்கலெக்டருக்குத் தொரியுமா என்றார்.  நாங்கள் இல்லை அவரிடம் போகுமுன்பாக என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள வந்ததாகச் சொன்னோம்.  அவரும் பட்டியலை ஒரு புரட்டு புரட்டிப் பார்த்தார்.  எவ்வளவு தொகை குறைவாக இருந்ததோ அதற்கு சமமாக ஒரு கிளாக்குக்கு சேரவேண்டிய தொகை இருந்தது.  அதனை ரத்து செய்து சப்கலெக்டர் கையெழுத்து வாங்கிக்கொண்டு புதுப் பட்டியல் தனியாக அவருக்கு தயார் செய்து பெறும்படி ஆலோசனை சொன்னார்.

நேராக சப்கலெக்டரிடம் வந்தேன். பயந்துகொண்டே ஒரு தப்பு செய்துவிட்டேன் என்று பாதிரியாரிடம் பாபவிமோசனம் தேடுபவனாக நின்றேன். அவர் சிரித்த முகம் மாறாமல் அப்படியானால் டிரெஷரியில் கன்சல்ட் செய்து சரிசெய்ய வேண்டியதுதானே என்றார்.  நாங்கள்தான் முன்பே சரிசெய்து பட்டியலும் தயார் செய்து வைத்திருந்தோமே உடனே நீட்டி ஒப்பம் பெற்றுவிட்டோம்.  ஒரு வார்த்தைகூட சொல்லாமல் ஒப்புதல் செய்து கொடுத்தார்.  அதைவிட, அதன் பின்னர் சுமார் ஓரு ஆண்டுகாலம் பலப்பல பட்டியல்கள் ஒப்புதல் பெற்றுள்ளேன்.  ஒரு தடவைகூட எந்தவித கேள்வியும் கேட்டதில்லை.  அது அவரது உயர்ந்த குணத்தைக் காட்டியிருக்கலாம்.  ஆனால் அவர் ஒரு வார்த்தையாவது திட்டியிருந்தால் என் மனம் சமாதானம் ஆகியிருக்கும். அவர் திட்டாததே எனக்கு மனதளவில் தண்டனையாக அமைந்துவிட்டது. அவர் என்னை முற்றிலுமாக ஏமாற்றிவிட்டார்.

நான் ஆதி திராவிடர் நலத் தனி வட்டாட்சியராகப் பணியேற்றதும் நேராக டிரெஷரி அதிகாரியிடம் சென்றேன். அவர் ஏற்கனவே என் நண்பர்தான். அவர் எனக்கு டீ வாங்கிக் கொடுத்து உபசரித்தார். அடுத்து அந்த அலுவலகத்திலிருந்து பட்டியல்கள் தாறுமாறாக வருவதாகவும் சற்று கவனமுடன் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.  நானோ. அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டேன். அதன்படி பட்டியல்கள் அனைத்தும் துல்லியமாகச் சரிபார்க்கவேண்டியது. எந்த பட்டியல் வந்தாலும் ஆடிட் போடக்கூடாது. தினமும் நான் வந்து போவேன் என்ன குறை என்றாலும் அங்கேயே சரி செய்து கொடுத்துவிடுவேன்.  பில் பாஸ் செய்யும் குமாஸ்தா என் நண்பர். அப்புறம் என்ன பட்டியல்கள் ஸ்பெஷல் டிராக்கில் செல்ல ஆரம்பித்துவிட்டது. ஆசிரியர்கள் மத்தியில் எனக்கு ஆச்சரியமான நல்லுறவு மலர்ந்தது என்றால் அதுதான் காரணம்.  டிரெஷரியின் குமாஸ்த்தாவை எனது பட்டியல் குமாஸ்தா அளவிற்கு மாற்றி சிக்கலான பட்டியல்களையெல்லாம் முன் தணிக்கை செய்து பின்னர்தான் ஒப்புதல் செய்வேன்.

நான் ஆர்.டி.ஓ. ஆபீசில் குமாஸ்தாவாக இருந்த சமயம். ஒரு புதிய குமாஸ்தா வந்து சேர்ந்தார். துருதுருப்பான பொருப்பானவர். அந்த நாளில் சம்பளப் பட்டியல் பதிவேடு இரண்டடி அகலத்தில் முறம் மாதிரி இருக்கும் எல்லோரும் கையாண்டு சீக்கிரம் தாள்தாளாக வந்துவிடும்.  நண்பரோ தாமே உட்கார்ந்து ஒட்டி சரிசெய்து தோட்டப் பக்கம் வெயிலில் காயவைத்துவிட்டு தாமும் பின்பக்க வெராண்டாவில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தார்.  அந்த நேரம் பார்த்து கலெக்டர் ஆபீசிலிருந்து போன் வரவும் நண்பர் சென்று பேசிவிட்டு வந்துபார்த்தால் காயவைத்ததைக் காணோம். மாடு வந்ததாகவும் தெரியவில்லை.  யாரைக்கேட்டாலும் தெரியவில்லை பார்க்கவில்லை என்ற பதில்தான்.  இரண்டுநாளாகத் தேடியும் துப்புத் துலங்கவில்லை.  இன்னும் இரண்டு நண்பர்களும் அக்கம் பக்க வீடுகள் எல்லாம் விசாரித்தனர். அருகில் உள்ள கடைகளில் எல்லாம் போய் இம்மாதிரி பேப்பர் ஏதேனும் கடையில் கொண்டுவந்து போட்டார்களா என்றெல்லாம் விசாரணை வேறு. இதற்கிடையில் ஒருவர் ஊர் கோடியில் குறியும் கேட்டுப் பார்த்தார்.

இதற்கிடையில் ஏ.ஜி. ஆடிட் வேறு வந்து உட்கார்ந்துகொண்டு அந்த பதிவேட்டை கொண்டா என்றனர். பதிவேடு பயிண்டிங் கொடுத்ததாகவும் கடையைப் பூட்டிக்கொண்டு போனவர் வரவில்லை என்றும் சமாளிப்பு வேறு. இவர்கள் அல்லாடியதைப் பார்த்து ஆடிட் பார்ட்டி அடுத்த தணிக்கைக்கு ஆஜர் செய்கிறேன் என்று எழுதிவாங்கிக்கொண்டு போய்விட்டனர்.  மற்ற எல்லா பதிவேடும் திருப்தியாக இருந்ததால் பிரச்சினை செய்யவில்லை.  இப்படியாக, பத்து நாள் ஓடிவிட்ட நிலையில் ஒரு பெட்டிக்கடைக்காரர் இரண்டு மாணவர்கள் தம்மிடம் வந்து பேப்பர் போட்டதாகவும் அரசாங்க பேப்பர் மாதிரி இருந்ததால் திட்டி அனுப்பியதாகவும் தெரியவந்தது.

நண்பர் ஒரு காரியம் செய்தார். ஆபீஸ் வளாகத்தில் சுற்றித்திரியும் மாணவர்களை பிடித்து விசாரித்ததில் ஒரு மாணவன் ஸ்டாம்பு வைத்து பல்பத்திற்கு விற்றதாக தகவல் கிடைத்தது.  அவனது வீட்டைக் கண்டுபிடித்து போய் விசாரித்ததில் அவனது அம்மா சண்டை வளர்த்திவிட்டார்.  இதற்கிடையில் அந்த வீட்டில் ஒரு ஸ்டூலுக்கு அடியில் கட்டாக இருந்த பேப்பர் கட்டைக் கண்டுபிடித்து எடுத்துவிட்டார்.  எல்லாம் தாள் தாளாகக் கிழிக்கப்பட்டு அதில் ஒட்டப்படிருந்த ஸ்டாம்புகள் பிய்க்கப்பட்டு அனாதையாக கிடந்ததை கைப்பற்றிக் கொண்டுவந்து பயிண்டிங் செய்து புதிதாக ஸ்டாம்பு ஒட்டி எல்லாரிடமும் கையெழுத்து வாங்கி…….. அம்மாடியோவ்

எனது நன்பன்தான் பட்டியல் குமஸ்தா. அவன் ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வரவில்லை.  அவன் வீடோ கடைக்கோடி. தகவல் சொல்லவும் யாருமில்லை.  சம்பளப் பட்டியல் வேறு தயார் செய்ய வேண்டும்.  நண்பர்கள் கூடி நேரில் சென்று பார்த்து வரலாம் என்று கிளம்பிய நேரத்தில் தலைவர் ஒரு குதிரைவண்டியில் வந்து அலுவலக வாசலில் இறங்குகிறார் பந்தாவாக. கூடவே பெரியவர் ஒருவர் பாடிகார்டு மாதிரி. அப்புறந்தான் தெரிந்தது, புள்ளாண்டானுக்கு ஒரு வாரமாக பீஸ் பிடுங்கிக்கொண்ட விவரம். வந்த பெரியவர் ஒரு மந்திரவாதி கம் வைத்தியர்.  எதேச்சையாகப் போய்ப் பார்த்தவர் வைத்தியம் பார்த்து ஆபீசுக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றார்.  அப்புறம் என்ன அவனை உட்கார வைத்து, பட்டியலை இரவு முழுவதும் தயார் செய்து அதிகாலையில் தாசில்தார் கையெழுத்து வாங்கி, கருவூலத்தில் கொண்டுபோய் சேர்த்தோம்.  ஒரே பகல் இரவில் 45 பில் போட முடிந்ததென்றால் அனைத்தையும் டைப் அடித்து தள்ளிவிட்டேன் அடியேன்.  டிக்டேஷன் செய்தது நண்பன். எங்கள் காலத்தில் பட்டியல் கருவூலத்துக்கு அனுப்பினால் நேரில் போய் உட்கார்ந்துகொண்டு தள்ளிவிடும் வேலையெல்லாம் கிடையாது.

மறுநாள் காலையில் ‘இப்படி அவசர கதியில் பட்டியல் போட்டோம் குறைகள் இருந்தால் சரி செய்து விடுகிறோம்’ என்று சொல்வதற்காக, கருவூல குமாஸ்தாவிடம் சென்றோம்.  அங்கே என்றால் அவர் வேறொரு துறை குமாஸ்தாவிடம் எங்கள் பட்டியலைக் காட்டி திட்டிக்கொண்டிருந்தார். எங்களுக்கு கொஞ்சம் பயம். கடைசியில் பார்த்தால், “பட்டியல் என்றால் இப்படி இருக்கவேண்டும்” என்று எங்களைப் பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார்.  நாங்கள் விஷயத்தை சொன்னதும் பட்டியலை எடுத்து எங்களிடம் கொடுத்துவிட்டார். பார்த்தால் எல்லாம் பாஸ் செய்து வங்கிக்கு அனுப்பும் நிலையில் இருந்தது. எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையேது.

ஒருமுறை நான் காட்டுமன்னர்கோயில் வட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சிதம்பரம் வட்டாட்சியர் அழைப்பதாக சேதி வந்தது. வந்து பார்த்தால் “எங்கள் சம்பள பட்டியலை கொஞ்சம் ஒப்பேற்றுங்கள்” – இது வட்டாச்சியர் கோரிக்கை.

பட்டியலை வாங்கிப் பார்த்தால் ஏக அடித்தல் திருத்தல் கருவூலத்திலோ ஆடிட் செய்திருந்தனர். பட்டியலை புதியதாக நகல் எடுத்து கூட்டுப் புள்ளி போட்டால் தொகைகளில் ஏக வித்தியாசம்.

நடந்தது இதுதான்.  ஒரு தற்காலிக குமாஸ்தா வந்தார். தெரியாத அவருக்கு சொல்லிக்கொடுக்க யாருக்கும் மனசு இல்லை. அவர் பாட்டுக்கு கூட்டல் போட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தொகை வந்துள்ளது. அடித்து அடித்து காகிதம் சில இடங்களில் ஒட்டைகூட விழுந்துவிட்டது.  கடைசியில் புதியதாகத் தயார் செய்து கொடுத்துவிட்டு, பட்டியல் போடவும் சொல்லிக் கொடுத்துவிட்டு கருவூலம் சென்றால் நான் போட்ட பட்டியல் என்றதும் பாஸ் செய்துவிட்டனர்.  நல்ல வேலை தப்பு ஏதும் இருக்கவில்லை.  சென்ற மாதத்துக்கும் நடப்பு மாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சரிபார்த்து பாஸ் செய்துவிட்டனர் கருவூலத்தில்.

காட்டுமன்னார் கோயிலில் நானும் என் நண்பனும் வேலை பார்க்கும்போது ஒரு சம்பவம். புதிதாக வந்த குமாஸ்தாவுக்குச் சொல்லிக் கொடுக்கும்படி துணை வட்டாட்சியர் உத்திரவு.  எங்கள் வேலையை விட்டுவிட்டு இரண்டு நாட்கள் சொல்லிக்கொடுத்தோம்.  ஆனால் அவரோ கற்றுக்கொள்வதற்கு பதில் எங்களிடம் வேலை வாங்கிக்கொள்வதில் குறியாக இருந்தார்.  கடைசியில் பட்டியலை முடித்து அவரிடம் ஒப்படைத்து எடுத்து வரும்படி சொல்லிவிட்டு நாங்கள் முன்னால் நடந்தோம். அவரோ எங்கள் பின்னால் நடந்து வந்தவர் பட்டியல் பதிவேட்டை முன்னால் சென்று கொண்டிருந்த என் நண்பனின் தலைமீது வைத்தார்.  எங்களுக்கோ சரியான கோபம். என்ன செய்ய துணை வட்டாட்சியரோ ஒரு சரியில்லாத நபர்.

கடைசியில் மறுநாள் கருவூலத்திலும் நாங்களே சென்று பாஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது.  அடுத்த மாதம் வட்டாட்சியர் எவ்வளவோ கேட்டும் முடியாது என்று சொல்லிவிட்டோம். நடந்ததை சொன்னதும் அவரும் எங்கள் வேலையைப் பார்க்கும்படி சொல்லிவிட்டார்.