26
நடந்தாய் வாழி காவேரி.
எப்போதும் அதிகாரிகள் பலவிதம் ஆனால் இளிச்சவாயர்கள் ஒரேவிதம்தான்.
1976-ஆம் ஆண்டு. ஒரு குமாஸ்தா. அவருக்கு முதல்முதலாக தனி வருவாய் ஆய்வாளர் பணியிடம் வழங்கப்பட்டது. மத நம்பிக்கையுள்ள அவருக்கு, இறைவனால் அது சம்பந்தமான இடங்களைப் பாதுகாக்கும் ஒரு பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டதில் ரொம்ப சந்தோஷம்.
ரொம்ப ஆத்மார்த்தமாக வேலை பார்த்தார். தினமும் பறங்கிப் பேட்டையிலிருந்து கடலூர் செல்வார். அல்லது ஜில்லா முழுக்க எங்கெங்கு போகும்படி அவரது தாசில்தார் உத்திரவிடுகிறாரோ அங்குபோய் விபரம் சேகரித்து வருவார். இப்படியாக முப்பது நாட்கள் திரைப்படம் ஓடியது. சம்பளத் தேதி. மாலை சம்பளம் வந்துவிடும் என்ற மிதப்பில் ஒருவழிக்கு மட்டும் பஸ்கட்டணத்தை வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டார். அவரது எண்ணம் நிறைவேறிவிட்டது. கருவூலத்திலிருந்து சம்பளம் வந்துவிட்டது. முதல் சம்பளம். ஆனால் அதிகாரி அதனை வாங்கி பையில் வைத்துக்கொண்டு சீட்டாட கிளப்பிற்கு சென்றுவிட்டார். நம்மவரோ ‘கண்ணே பாப்பா அதிகாரி வருவார் சம்பளம் தருவார் வீட்டுக்குப் போகலாம் காத்திரு’ என்று மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே காத்திருந்தார்.
காத்திருந்தார்,,, காத்திருந்தார்…. காலம் கடக்க, கால் கடுக்க, காத்திருந்தார். அதிகாரியோ சூதாட்டத்தில் ஜெயித்த சந்தோஷமோ அன்றி தோற்ற துக்கமோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இவருக்கோ ஒன்றும் புரியவில்லை. இடமோ புதிது. யாரும் அறிமுகம் கிடையாது. யோசித்தார் மண்டைக்குள் பல்பு எரிந்து ஒரு வழி தெரிந்தது. நடையைக் கட்டினார்.
‘நடந்தாய் வாழி காவேரி’ என்று நடந்தார்… நடந்தார்… நடந்துகொண்டே இருந்தார். திடீரென்று நிமிர்ந்து பார்த்தால் அவரது வீட்டு வாசல். ஆம் கடலுரிலிருந்து பரங்கிப்பேட்டைக்கு வந்துசேர்ந்தார் அந்த நள்ளிரவில். ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல் இருபத்தைந்து கிலோமீட்டருக்கு மேல் அந்த விபரமறியாப் பருவத்தில் தைரியமாக வீடுவந்து சேர்ந்தார். இங்கே எனக்கு ஒரு சந்தேகம். கடலூரை ஒட்டிய அந்த மோகினிப்பாலத்தில் எப்படித்தான் அந்த கும்மிருட்டில் வந்தாரோ. அவரை மோகினி ஒன்றும் செய்யவில்லை போலும்.
மறுநாள் காலை, காலைப் பார்த்தால் காணோம். இரண்டு திருமலை நாயக்கர் மகால் துண்கள்தான் அந்த இடத்தில் இருந்தது. இரண்டும் வெள்ளரிப் பழங்களாக வீங்கிப்போய் நடக்க முடியாத நிலை. இரண்டு தினங்கள் எழுந்திருக்க முடியாத நிலை. அப்புறம் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு அலுவலகத்திற்கு வந்தால் அதிகாரியோ நடந்தது ஏதும் அறியாதவராக ஏன் இரண்டு தினங்கள் அலுவலகம் வரவில்லை என்று கடிந்துகொண்டார். இப்போதென்றால் உடனே சங்கத்தில் சொல்லி தகறாறு செய்துவிடுவர்.
இப்படிப்பட்ட சூதாடிகளுக்கு அதிகாரம் எதற்கு? உத்தியோகம்தான் எதற்கு? அதெல்லாம் சரி. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா. அதுதான் ஒரு நல்ல நாள் பார்த்து கையைப் பிடித்து இழுத்துவந்து எங்கள் பிரிவில் சிரஸ்ததாராகப்பட்ட ஹிட்லர் ஒப்படைத்துவிட்ட பின்னர் நண்பனாகிவிட்ட ரகமத்துல்லாதான் அந்த துரதிருஷ்ட்டசாலி.
அந்த சம்பவம் நினைவு வரும்போதெல்லாம் என் நினைவில் வருவது முகம்மது நபி பெருமானார் ‘சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்(ஸல்)’ அவர்கள் ஹிஜ்ரி யாத்திரை செய்தார். அவரளவிற்கு தகுதி இல்லாததால் இவன் தனது தகுதிக்கேற்ப பரங்கிப்பேட்டைக்கு யாத்திரை செய்தானோ என்று தோன்றும்.
இன்னொரு அதிகாரி. அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் டி.ஏ. பில் போட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்த ஒரு குமாஸ்தா முதன்முதலாக தாம் வாங்கிய பணத்தை அதிகாரி கையில் கொடுத்து வாங்கவேண்டும் என்று உயர்ந்த, ‘காக்கா’ பிடிக்கும் நோக்கில் அதிகாரி அலுவலகத்திற்கு வந்தவுடன் அவரிடம் கொடுத்தார். என்னுடைய டீ.ஏ. பணம் என்று சொல்லி. அதிகாரி கையில் வாங்கினார். பையில் போட்டார். கிணற்றில் போட்ட கல்லாகப் போனது அது. இவரோ அவரிடம் கேட்கும் தைரியம் இல்லாமல் காத்திருந்து பார்த்துவிட்டு இலவு காத்த கிளியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவரும் நானும் ஒரே வீட்டில் ஒட்டுக் குடித்தனம் இருந்ததால் இந்த தகவல் என்னிடம் புலம்பலாக சொல்லப்பட்டது. இந்த அதிகாரியை என்ன சொல்ல.
நான் ஆதி திராவிடர் நல தனி வருவாய் ஆய்வாளராக இருந்த சமயம். பெரிய செவலை சார்க்கரை ஆலையை முதலமைச்சர் திறந்து வைப்பதாகவும் அப்போது நடக்கும் விழாவில் அரசு நலத் திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்குவதாகவும் ஏற்பாடு. காட்டுமன்னார்கோயில் தாலுக்காவில் இரண்டு கிராமங்களிலிருந்து பட்டாதாரார்களை அழைத்து வரவேண்டும் என்று உத்திரவானது. நான் முன்னதாகப் போய் தகவல் சொன்னதும் முதலமைச்சரைப் பார்க்கவேண்டும் என்பதால் நிறைய பேர் வரத் தயாராகினர். முன் தினம் கலெக்டர் ஆபீசிலிருந்து காலை பதினோரு மணிக்கு விழா என்றும் பத்து மணிக்குள் அரங்கிற்கு வர வேண்டும் என்றும் எங்களை முடுக்கிவிட்டனர்.
நானும் காலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப்போய் எள்ளேரி என்ற கிராமத்தில் பத்துப் பதினைந்து பேர்களைத் திரட்டிக்கொண்டு மாமங்கலம் என்ற கிராமத்திற்குப் போய் அங்கும் பத்துப் பதினைந்து பேர்களைத் திரட்டிக்கொண்டு பெரிய செவலைக்கு வழி விசாரித்துக்கொண்டு போய்ச்சேர்ந்தோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது போல் நினைத்த மாத்திரத்தில் ஊர் வழி போக பஸ்வசதி கிடையாது. எப்படியோ பத்து மணிக்கெல்லாம் போய் சேர்ந்தோம். பின்னர்தான் நிம்மதி.
அந்தகால கூத்துக் கொட்டகைபோல் சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைத்து எங்களை உள்ளே அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் ஏதோ வெளிநாட்டு எல்லையிலிருந்து தாண்டி வந்த தீவிரவாதிகள் போல் எங்களை மடக்கி உட்கார வைத்துவிட்டனர். குடிக்கத் தண்ணீர்கூட கிடையாது. அகதிகள் போல் உட்கார்ந்திருந்தோம். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. மதியம் நோ சாப்பாடு. யாராவது பாத்ரூம் போகவேண்டுமென்றால் நான் துணைக்கு அழைத்துச்சென்று காவலரிடம் விபரம் சொல்லி சற்று தொலைவில் சென்றுவிட்டு மீண்டும் கையோடு அழைத்துக்கொண்டு வரவேண்டும். ஏன்னா என்கிட்டதானே பேட்ஜ் குத்தியிருக்கு.
மாலையும் வந்தது. முதலமைச்சர்தான் வருவாரா என்று தெரியவில்லை. கடைசியாக மாலை ஐந்து மணிக்கு முதலமைச்சர் வந்துவிட்டதாகவும். இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார் என்றும் பேசிக்கொண்டனர். மூன்றாம் பிறை தரிசனம் செய்யக் காத்திருக்கும் பக்திமான்கள் போல் மேடையையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். ஊகூம். இருட்டியும் விட்டது. அப்புறம்தான் முதலமைச்சர் மேடை ஏறினார். பேசினார். நான் அழைத்துச் சென்ற பட்டா பயனாளிகள் எல்லாம் முதலமைச்சர் கையால் பட்டா பெறப்போவதைவிட அவர் அருகில் போய் நிற்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் பசியைக்கூட மறந்து காத்திருந்தனர். கடைசியாக பத்து மணிக்கு மேல் விழா முடிந்துவிட்டது. செஞ்சியிலிருந்து காட்டுமன்னார்கோயில் வரை மரக்காணத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை பல ஊர்களிலிருந்து வந்த எங்களைப்போன்ற பயனாளிகள் ஏராளமாக காத்திருந்தனர். எங்களையெல்லாம் யாரும் சீண்டக்கூட இல்லை.
அரசியல் வாதிகளாவது பரவாயில்லை. கூட்டம் காட்டுவதற்காக பிரியாணி குவாட்டார் சப்ளைசெய்து கையில் காசும் கொடுத்து அழைத்து வந்துவிடுகின்றனர். அந்த செலவுகூட இல்லாமல் அதிகாரிகள் முதலமைச்சருக்கு கூட்டம் கூட்டிவிட்டனர்.
இதற்குப் பின்னர்தான் கிளைமேக்ஸ். எல்லோரும் வெளியே வந்தோம் பார்த்தால் பெரிய செவலை கூட்டு ரோட்டில் இரண்டு பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன. பொதுமக்கள்தான் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து சீட்டு பிடிப்பர் என்றால் அங்கே காவலர்கள் எல்லா ஜன்னல்களிலும் ஏறிக் கொண்டிருந்தனர். பத்தாயிரம் பேருக்கு மேல் கூடிய இடத்தில் இரண்டு பேருந்துகள் எம்மாத்திரம்.
பலரும் நடந்தே போக ஆரம்பித்துவிட்டனர். காலையில் பட்டியில் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு டீ கூட குடிப்பதற்கு வழியில்லை. பசி தாகம் வேதாளமாக தொற்றிக்கொண்டது. இருந்தாலும் என்னுடன் வந்தவர்கள் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை அழைத்து வந்தனர். நேராக மடப்பட்டு கூட்டு ரோட்டுக்கு போனால் வண்டி கிடைக்கும் என்ற எண்ணத்தில் திருவிழாக் கூட்டத்தின் துணையுடன் நடந்தோம்…. நடந்தோம்……
நிலவு சாட்சியாக நடந்தோம்……நடந்தோம் கடைசியில் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கே வந்து சேர்ந்தோம். எப்படியும் இரவு இரண்டு மணிக்கு மேல் இருக்கும். எல்லாரும் வந்து படுத்துவிட்டோம். காலையில் முதல் பஸ் பிடித்து நாங்கள் போய்க்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு என்னுடன் வந்தவர்கள் கிடைத்த இடங்களில் படுத்துவிட்டனர்.
எனக்கும் முடியவில்லை. பஸ் நிலையத்தில் ஒரு டீ கடையின் மேசையில் படுத்துவிட்டேன். அதிகாலை ஒன்றிரண்டு பஸ் சத்தம் கேட்டதும் எழுந்தேன். மணியெல்லாம் தெரியாது. இருட்டில் எழுந்தவுடன் என் பக்கத்தில் ஒரு டிரம்மில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருந்த லைட் போஸ்ட்டிலிருந்து வந்த வெளிச்சத்தில் தண்ணீர் தளும்புவது கண்ணாடி காட்டியது. ஒரு கை அள்ளி முகம் கழுவி கொஞ்சம் குடிக்கலாம் என்று நினைத்து கையைவிட்டேன். அந்த வினாடியில் ஏதோ தப்பு என்று என் உணர்வு சொல்லியது. அது தண்ணீர் மாதிரியில்லாமல் சில பெரிய அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் மாதிரி கொழகொழவென்று இருந்தது. அப்படியே விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தேன். எந்தெந்த ஊருக்கோ பஸ் வந்தது. கடலூர் போய் சிதம்பரம் போகலாம் என்று எனக்கு உரைக்கவில்லை. சிதம்பரம் பஸ் வரவேயில்லை. காத்திருந்தேன். பலபலவென்று விடிந்தது. எனக்கு ஞானமும் பிறந்தது. நான் கைவிட்ட தண்ணீர் டிரம் கண்ணில் பட்டது. தினமும் டீக்கடையில் கிளாஸ் கழுவி ஊற்றவென்று ஒரு டிரம் வைத்திருக்கிறார். அதில் சாக்கடைத் தண்ணீர் இருந்துள்ளது. அதுதான் எனக்கு இருட்டில் குடிநீராக கங்கையின் புனித நீராகத் தெரிந்துள்ளது. பார்த்ததும் எனக்கு குமட்டல். என்ன செய்ய விதி வலிது.
கொஞ்ச நேரத்தில் சிதம்பரம் பஸ் வரவும் ஓடிப்போய் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். சில நாட்கள் வரை அந்த அறுவருப்பு மட்டும் மனதிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. பல ஆண்டுகள் இதனை நினைவு கூர்ந்திருக்கிறேன்.
கூட்டம் கூட்ட வழிகண்ட ஜால்ரா அதிகாரிகளுக்கு அடிப்படைத் தேவைகளைப் பற்றி சிந்திக்கக்கூட அறிவில்லாமல் போய்விட்டது. இப்போதென்றால் பத்திரிகைகள் கிழிகிழியென்று கிழித்துவிடும். மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுப்பர்.
ஒரு முறை நான் ஆதி திராவிடர் நலத் தனி வருவாய் ஆய்வாளராக இருந்தபோது சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டதால் நான் ஒரு குக்கிராமத்திற்குப்போய் நேரில் விபரம் அறிந்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது கிராம மணியம் கர்ணம் பதவி ரத்து செய்யப்பட்ட காலம். சம்பந்தப்பட்ட ஊர் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. முதல் நாள் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்று விசாரித்ததில் பாளையங்கோட்டை கிராமத்திற்கான குக்கிராமம் அது என்றும் போகும் வழி விபரமும் தகவல் தெரிவித்தனர். அத்துடன் தாலுக்கா ஆபீசிலிருந்து அந்த கிராமக் கணக்குகளையும் வாங்கிக்கொண்டேன்.
அந்த கிராம வரைபடத்தைப் பிரித்துப் பார்த்தால் ஒரு பஞ்சகச்சம் வேட்டியை தரையில் விரித்தமாதிரி அவ்வளவு பெரியதாக இருந்தது. எல்லா கணக்குகளையும் இரண்டு பெரிய சாக்குப் பையில் அடைத்துக்கொண்டு சிதம்பரம் வந்துவிட்டேன். மறுநாள் காலை சுமார் ஏழு மணிக்கு சிதம்பரத்தில் பஸ் பிடித்தோம். என்னுடன் ஒரு அலுவலக உதவியாளர் வந்தார். பாவம் அவர் ஒரு கை பயன்படுத்த இயலாதவர். நான் இரண்டு கைகளிலும் அவர் ஒரு கையிலுமாக கணக்குக் கட்டுகளுடன் புறப்பட்டோம். பேருந்து திருவாருர் தேர் போல அசைந்து அசைந்து சென்றது. ஒன்பது மணிக்கு மேல் ராமாபுரம் கைகாட்டி என்ற நிறுத்தத்தில் ஒரு வீரப்பன் காட்டுக்குள் இறங்கினோம். அங்கிருந்து தெற்கில் செல்லும் பாதையில் போகவேண்டும் என்று முன்தினம் எங்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.
போகும் பாதை சரிதானா என்றெல்லாம் கேட்பதற்கு யாரும் இல்லை. கணக்குப் பைகளைத் துக்கிக்கொண்டு நடந்தோம். நடந்தோம் நடந்துகொண்டே இருந்தோம். பலப்பல கிளைப் பாதைகள் குறுக்கிட்டன. வழி சொல்ல யாரும் இல்லை. ஒரு இடத்தில் வரப்பு வெட்டிக்கொண்டிருந்த ஒருவரிடம் இன்ன இடத்திற்கு எப்படி போகவேண்டும் என்று கேட்டோம்.
“நீ யார், யாரைப் பாக்கணும்” – அவர்
“நான் ஆர்.ஐ. இன்ன வாலீஸ்பேட்டை கிராமத்தில் விபரம் தெரியணும். அவசரமா கேட்கிறார்கள்” இது அமைதியாக நான்.
“அதான் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு ஆர்.ஐ. இருக்காரே. அப்புறம் நீ யாரு”
“நான் இதற்கென்று தனியாக ஆர்.ஐ. என்னோட வேலை இம்மாதிரி விஷயங்கள்பற்றி நடவடிக்கை எடுக்கறதுதான். கொஞ்சம் சொல்லுங்க நாங்க காலையிலிருந்து அலைகிறோம்.”
உள்ளுக்குள் எரிச்சல் மூண்டாலும். எங்கள் கையாலாகத தனம். பசி, தாகம் எல்லாவற்றையும் விட குறிப்பிட்ட இரண்டு கிராமங்களின் விபரங்கள் சேகரித்துக்கொண்டு போகவேண்டும் என்று அவசரம். அவரிடம் பொருமையைக் காட்டியது.
“இதோ இப்படியே போ” அவர் கைகாட்டிவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார். நாங்கள் எங்கள் யாத்திரையைத் தொடர்ந்தோம். அங்கிருந்து அரை மணிநேரம் நடந்துசென்று நாங்கள் தேடிவந்த பகுதியை அடைந்துவிட்டோம். அங்கு மக்களிடம் தேவையான விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம். சாதாரணமாக சாமியாரிடமோ சீட்டுக் கம்பெனிக்காரனிடமோ ஏமாறும் மக்கள் எங்களை லேசில் நம்பவில்லை. அவர்களுக்கு சமாதானம் சொல்லி கணக்கெடுத்தோம். அப்போது ஓடிவந்தார் ஒருவர். அவர்தான் எங்களுக்கு வழிகாட்டிய நல்ல மனிதர்.
என்னுடன் வந்த ஓ.ஏ.விற்கு கோபம் வந்துவிட்டது. “ஏன்யா நாங்க வழி கேட்டப்ப அவ்வளவு அலட்சியமா எங்களை பார்த்தே. இப்ப எதுக்கு ஓடி வர்றே” என்று திட்டிவிட்டார். அங்கிருந்து விபரங்களை வாங்கிக்கொண்டு அடுத்த கிராமத்திற்குப் போனோம். வழியில் ஏதாவது டீக்கடை கிடைக்காதா என்று தேடினால் எதுவும் தட்டுப்படவில்லை. ஒரு கடையைப் பார்த்தோம். கிட்ட போனாலே பரபரப்பாகியது. அங்கு ஒருவர் இங்கு டீயெல்லாம் கிடைக்காது. சாராயம்தான் கிடைக்கும் என்றார். விட்டோம் ஓட்டம்.
அடுத்து அந்த கிராமத்திலும் வேலையை முடிக்கும்போது மணி இரண்டு இருக்கும். காலை ஒன்பது மணியிலிருந்து ஒரு இடத்தில்கூட உட்காராமல் நடந்துகொண்டேயிருந்ததில் ரொம்பக் களைப்பாக இருந்தது. இருந்தாலும். இவ்வளவு தூரம் நடக்க வேண்டுமே என்று சாலைக்கு சுருக்கு வழி போவது எப்படி என்று கேட்டதில் தெற்கில் ஏரி ஒன்றைக் காட்டி அதைக் கடந்தால் அதோ தெரிவது விளந்தை பேருந்து நிருத்தம். அங்குபோனால் சுலபம் என்றனர் புது இடம் என்பதால் பயந்துகொண்டு வேறு வழி கேட்டால் ஒரு பாதையைக் குறிப்பிட்டு இப்படியே போனால் இரண்டு வழி வரும் அதில் நேராகப் போனால் மாமங்கலம் ஸ்டாப்பிங் வரும் என்று தகவல் தந்தனர்
அங்கிருந்து புறப்பட்டோம் மீண்டும். சிறிது தொலைவு நடந்ததும். சில பெண்கள் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தனர் எங்கள் களைப்பு நீங்க அவர்களிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தோம். அந்த கிணற்றை சற்று எட்டிப் பார்த்த எனக்கு பயம் வந்துவிட்டது. கிணற்றுக்கு கைப்பிடிச் சுவர் எல்லாம் கிடையாது. செம்மண் பூமியில் நேராகத் தோண்டப்பட்ட பெரிய துளை அது. எட்டிப்பார்த்தால் பாதாள லோகத்தைப் பார்த்த மாதிரி அவ்வளவு ஆழம். அதன் ஓரமாக நின்றுகொண்டு சர்வசாதாரணமாக குடத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு தண்ணீர் இறைத்தனர் பெண்கள்.
பாவம் அந்தப் பகுதி மக்கள். அந்நாளில் தண்ணீர் வசதி கிடையாது. மின் வசதி கிடையாது. சாலை என்பது செம்மண்ணில் வண்டிகள் போன தடம்தான். செம்மண் பாலைவனத்தில் நடுநடுவே சிலர் குடிசைகளில் வசித்தனர். அது ஒரு மலையும் மலை சார்ந்த பகுதி. வெய்யிலில் நடந்த எனக்கு அந்த செம்மண் பாதையைப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துவிட்டது. நிற்க நிழல்கூடக் கிடையாது.
கடைசியில் இரண்டாகப் பிரியும் பாதை வந்தது. எதில் போகவேண்டும் என்று கேட்க யாரும் தென்படவில்லை. நல்ல பாதையாகத் தெரிந்த ஒன்றில் புகுந்து நடந்துகொண்டேயிருந்தோம். சற்று தொலைவில் ஒரு டீக்கடை தென்பட்டது. அந்த நேரம் வியாபாரம் முடிந்துவிட்டது. அவரிடம் இரண்டு பேரும் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு மாமங்கலம் ஸ்டாப்புக்கு இன்னும் எவ்வளவு துரம் என்று கேட்டோம்.
அவரோ எங்களிடம் விபரம் கேட்டுவிட்டு “அதற்கு ஏன் இப்படி வந்தீர்கள் நீங்க இப்ப வந்த இடத்துக்குத்தான் போகிறீர்கள். கொஞ்சம் பின்னால் போய் ரோடு பிரியும் இடத்தில் மாற்றுப் பாதையில் போங்க” என்று வழிமாற்றிவிட்டார். மீண்டும் நடையைக் கட்டினோம். அந்த முடியாத சோகத்திலும் நடந்ததை நினைத்து சிரித்துக்கொண்டு போனோம்.
சற்று துரம் நடந்ததும் பழக்கப்பட்ட ஒரு பகுதி தெரிந்தது. அதுதான் நான் ஏற்கனவே முதமைச்சார் கையால் பட்டா வாங்கிக்கொடுக்க அழைத்துச்சென்ற மக்கள் வசிக்கும் ஊர் – மாமங்கலம். உடனே தைரியம் வந்து நடக்க ஆரம்பித்தால் ஒருவர் எங்களை மறித்துவிட்டார் யார் என்று சட்டென்று அடையாளம் தெரியவில்லை.
“அய்யா அண்ணைக்கு எப்படி ஊருக்கு போய் சேர்ந்தீங்க” என்று கேட்டதும்தான் அவரை அடையாளம் தெரிந்தது. பின்னர் அவரிடம் நடந்ததை புலம்பினோம். அவரோ எங்களை விடுவதாக இல்லை. சரசரவென்று அருகில் இருந்த தென்னை மரங்களில் ஏறி ஏராளமாக இளநீர் இறக்கிக் கொடுத்தார் ஆளுக்கு நாலைந்து சாப்பிட்டுவிட்டு ஆசுவாசப் படுத்திக்கொண்டு எங்களுடன் வந்து பஸ்சை நிறுத்தி ஏற்றிவிட்டார், அப்படிப்பட்டவர்களால்தான் இன்னும் நம் நாடு உயிர்ப்புடன் இருக்கிறது.
அது கும்பகோணத்திலிருந்து வடக்கே போகும் பஸ். அதில் நாங்கள் சேத்தியாதோப்பில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ்சில் போகவேண்டும். நேரடி பஸ்செல்லாம் கிடையாது. பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டுக்குப் பின்னால் எங்கள் கணக்கு மூட்டைகளை வைத்துவிட்டு நின்றுகொண்டோம். எங்கள் காலடியில் ஒரு பெரிய சாக்கு மூட்டை கிடந்தது. அது பேருந்து ஓட்டத்திற்கு ஏற்ப அசைந்துகொண்டே இருந்தது. அதன் ஓட்டைகளில் கருப்பாக துருத்திக் கொண்டிருந்தது.
நான் பன்றியைக் கட்டி சாக்கில் அடைத்து கொண்டுபோகிறார்கள் போலும். அது தப்பித்தவறி முட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேறினால் நம்மைத்தானே முதலில் கடிக்கும் என்று பயந்துகொண்டே பயணம் செய்துகொண்டிருந்தேன். சேத்தியாதோப்பில் இறங்கியதும் என் ஓ.ஏ சொன்ன பின்புதான் தெரிந்தது. அது நாட்டு சாராயம் என்று. ஆம். குடிசைத் தொழிலாக தயாரித்த சாராயத்தை பெரிய லாரி டியூபுகளில் அடைத்து அதனை சாக்கில் கட்டி பகிரங்கமாக பேருந்திலேயே அனுப்பியுள்ளனர். அப்புறம்தான் எல்லாம் உரைத்தது.
இப்படியாக காலை ஒன்பது மணியிலிருந்து இருமுடிகட்டிக்கொண்டு வழிநடைப் பயணமாக மாலை ஐந்து மணி வரை நடந்தது ஒரு பெரிய கொடுமைதான். அதன்பின்னர் நாங்கள் இருவரும் சந்திக்கும்போது ராமாபுரம் கேம்பு போகலாமா என்று ஒருவரை ஒருவர் கேலி பேசிக்கொள்வோம்.
ஒரு முறை நானும் என் நண்பரும் காட்டுமன்னார்கோயில் தாலுக்காவில் வேலை பார்த்த சமயம். பல மாதங்கள் கழித்து எங்களுக்கு சேரவேண்டிய சில அரியர் தொகைகள் வந்தது. அனைவருக்கும் பட்டுவாடா செய்துவிட்டு தாமதமாக வீட்டுக்குப் புறப்பட்டோம் நானும் என் நண்பரும். இருவரும் பேருந்தில் ஏறும்போது மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். கடைசி பஸ். கூட்டம் அதிகமில்லை. நண்பர் தம்மிடம் இருந்த தனது தொகை மற்றும் மறுநாள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய தொகை ஆகியவைகளை கணக்குப் பார்த்துவிட்டு தன் டிபன் பாக்சில் வைத்திருந்த பணத்தை எண்ணி சரிபார்த்துக் கொண்டார். அடுத்து பையில் வைத்துக் கொள்ளவும் நாங்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. சிதம்பரம் நகரின் முதல் நிறுத்தம் அது. அந்தப் பகுதியில் இறங்கினால் நேராக வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
இருவரும் இறங்கினோம். இரவுமணி பத்துக்கு மேல் ஆகியிருக்கும் அனைத்தும் அடங்கிப்போன நேரம். தெருவில் படுத்திருந்த ஓரிரு நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு “அட நீதானா உனக்கு தினம் இந்த நேரம்தான் ஒழியும் போலிருக்கு” என்று எண்ணிக்கொண்டு அசிரத்தையாக தலையைத் தொங்கவைத்துக் கொண்டுவிட்டது. இறங்கியது முதல் நாங்கள் நடந்து வரும்போது எங்களை ஒருவர் பின் தொடர்ந்தார். பத்து தப்படி நடந்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் நடந்தோம். என் பையை இருவருக்கும் நடுவில் உள்ளபடி கையில் பிடித்துக்கொண்டேன். என் நண்பரும் தன் கைப் பையை அதேபோல் பிடித்துக்கொண்டார். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பயம் முழுமையாக என்னை பீடித்திருந்தது. நாங்கள் வேகமாக நடந்தால் அவரும் வேகமாக எங்களை ஒட்டியே நடக்கிறார். சற்று தளர்ந்தால் அவரும் அப்படியே. நான் உள்ளுர மனதில் நண்பரைத் திட்டிக்கொண்டே நடந்தேன். அவர்பாட்டுக்கு பேருந்தில் வைத்து பணத்தை எண்ணியதை பார்த்துவிட்டுத்தான் அதை அடித்துக்கொண்டு போக வந்திருக்கிறார் என்று திடமாக நம்பியது மனது.
நான் மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன் எப்படி தற்காத்துக்கொள்வது. பையைப் பிடுங்கினால் எப்படி தாக்குவது என்றெல்லாம் மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டே நடந்தோம். சுமார் முக்கால் கிலோமீட்டருக்கு மேல் கடந்ததும் வீடுகள் நிறைந்த பகுதியை நெருங்கிவிட்டோம். அங்கு ஒரு பிள்ளையார் கோயிலுடன் கூடிய நான்கு முக்கு ரோடு குறுக்கிட்டது. நாங்கள் அதையும் கடந்து நேராக நடக்க வேண்டும். அதை அடையும்போது என்ன செய்வது என்று பயம் உச்சக் கட்டத்தில் இருந்தது.
அந்த நான்கு முக்கு ரோட்டை அடைந்ததுதான் தாமதம் எங்கள் பின்னால் வந்தவர் எங்களை முந்திக்கொண்டு நடந்தார். மனம் பயத்தினால் அடித்துக்கொள்ள பையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு எதற்கும் தயாராக இருந்தோம். வந்தவரோ எங்களைக் கடந்து வலப்பக்கம் திரும்பி வேகவேகமாக நடந்து சென்றுவிட்டார்.
என் நண்பர் “பசுபதி” என்றார். ஆக அவருக்கும் என்னைப் போலவே பயம் இருந்திருக்கிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளாமலே பயத்தில் பையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒன்றிருக்க ஒன்றாக சிந்தித்துக்கொண்டு நடந்திருக்கிறோம். .
சரி எங்களுக்குத்தான் பயம் இப்படி நடந்துகொண்டோம். வந்த அந்தப் புதியவருக்கு என்னாயிற்று. வேறென்ன. அவருக்கும் பயம்தான். அவர் அந்த சாலையில் நடக்கப் பயந்துகொண்டு யாரும் வருகின்றனரா என்று காத்திருந்து எங்களைப் பார்த்ததும் எங்களைத் துணையாகக்கொண்டு நடந்துவந்திருக்க வேண்டும். பாதுகாப்பான இடம் வந்ததும் அவர் எங்களை முந்திக்கொண்டு வேகமாக நடந்து சென்றதே நிரூபித்துவிட்டதே. அன்று நடந்ததை பல முறை நினைத்தும் பேசியும் சிரித்துக்கொண்டதுண்டு. அதன்பின் எந்த ஒரு பொது இடத்திலும் பணவிஷயத்தைப் பற்றி பேசுவதோ சரிபார்ப்பதோ கிடையாது.
இன்னொரு சம்பவம், இது கொஞ்சம் வேறு மாதிரி.
நான் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக இருந்தபோது நடந்தது. ஜமாபந்தி அறிக்கை என்ற ஒன்றினைத் தயார் செய்து எடுத்துக்கொண்டு கடலூர் சென்றேன். அங்குள்ள பிரிவு குமாஸ்த்தாவிடம் ஒப்படைத்தேன். வழக்கமாக அந்த அறிக்கையைக் கொண்டு போய் கொடுக்கும்போது கொஞ்சம் தட்சிணையும் வைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் பிரிவு எழுத்தரோ நன்கு தெரிந்தவர். அதைவிட என்னைப் பற்றியும் நன்கு தெரிந்தவர். அதனால் நான் போகவர மட்டும் காசு எடுத்துச் சென்றேன். போகும்போதே என் நண்பர் செல்வராசு உதவிக்கு தாமும் வருவதாக சொன்னதையும் உதாசீனப் படுத்திவிட்டுச் சென்றேன். என் அறிக்கை துல்லியமாக உள்ளது என்பதில் அவ்வளவு நம்பிக்கை.
கலெக்டர்அலுவலகத்தில் கொண்டுபோய் அறிக்கையை ஒப்படைத்தேன். அதனை சரிபார்க்க மாலை ஆகிவிட்டது. நான் புறப்படும்போது அந்த குமாஸ்தா ‘டீ சாப்பிட்டுப் போ’என்றார். பொதுவாக நாம்தான் அவருக்கு சப்ளை சர்வீஸ் செய்யவேண்டிய அளவிற்கு பெரிய குமாஸ்தா அவர். கலெக்டர்அலுவலகத்தில் அந்த குமாஸ்தா பணியிடம் கிட்டத்தட்ட அதிகாரிக்கு சமமானது. ஆனால் அவர்என்னை டீ சாப்பிட அழைத்துச் சென்றார்.
டீக்கடைக்குப் போனோம். அந்த நேரத்தில் அவரது நண்பர் அங்கு வர அவருக்கும் டீ பிஸ்கட் சொல்லப்பட்டது.
ஒரு திரைப்படத்தில் நாகேஷ் தாம் சாலையில் கண்டெடுத்து பையில் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் 25 பைசாவைக் கணக்கில் வைத்துக்கொண்டு விலை விபரம் கேட்டுக்கேட்டு டிபன் சாப்பிடுவார். அதுபோல் நானும் சிதம்பரம் வருவதற்கான பேருந்து கட்டணம் ஆறு ரூபாயை நினைத்துக்கொண்டு டீ சாப்பிட்டேன்.
நண்பர் தாம் தருவதாக சொல்லியும் நான் ஆறு ரூபாயை நிறுத்தி வைத்துக் கொண்டு மீதியை செலவழித்தேன். மற்றவர் கொடுத்தால் என் கெளரவம் என்னாவது. நண்பரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு நான் விடைவாங்கிக்கொண்டு புறப்பட்டால் எங்கள் தேர்தல் துணை வட்டாட்சியர் வழிமறித்துவிட்டார். சிதம்பரம்தானே! வாங்க போகலாம் என்று அழைத்தார். நான் எவ்வளவோ மறுதலித்தும் என்னை வலுகட்டாயமாக அழைத்துச் சென்றார்.
பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து சென்று அங்கிருந்து போவது என் திட்டம். அவரோ என்னை டவுண் பஸ்சுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அதிகாரி உடன் வந்தால் நாம்தானே டிக்கட் எடுக்க வேண்டும். நான் எடுத்துவிட்டேன். ஆக சிதம்பரம் போக நான்கரை ரூபாய்தான் மீதம் இருந்தது. வழியில் என்னென்னமோ சிந்தித்து பேருந்து நிலையம் வந்ததும் கொஞ்சம் வேலை இருக்கு என்று கழட்டிக்கொண்டுவிட்டேன்.
பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு பலவாறு சிந்தித்து கடைசியில் இரண்டு வழி தென்பட்டது. ஒன்று முட்லூர் வரை சென்று இறங்கி நடப்பது. இரவு ஆகிவிட்டதால் அது சரிப்படாது என்று திட்டம் கைவிடப்பட்டது.
இரண்டாவது. கடலூரில் ஒரு குடும்ப நண்பர் இருக்கிறார். அவரிடம் சென்று காசு வாங்கிக்கொண்டு செல்வது. அதுவே சரியென்று பட்டதால் மீண்டும் மேற்குநோக்கி இரண்டு கிலோமீட்டர் நடந்து அவர் வீட்டுக்குப் போனேன். ஏக வரவேற்பு. அகம் குளிர்ந்தது. கெளரவமாக “அவசரமாக ஒரு இருபத்தைந்து ரூபாய் தேவை” என்று கேட்டேன். அவர்களோ “நீங்களே பணம் கேட்டால் எப்படி? உங்ககிட்ட இல்லாததா. கிண்டல் செய்கிறீர்களா” என்று வழுக்கிக் கொண்டே இருந்தனர்.
நானும் சற்று நேரம் இருந்து பார்த்துவிட்டு பணம் ஏதும் பெயராது என்று உறுதி செய்துகொண்டு புறப்பட்டேன். இங்கே எனக்கு ஒரு புத்திக் கொள்முதல் ஏற்பட்டதை கட்டாயம் சொல்லவேண்டும். 1980-ல் நண்பர் அவசரமாக தமக்கு 500 ரூபாய் (அது என் ஒரு மாத சம்பளத்தைவிட மிக அதிகம்) வேண்டும் என்று கைமாற்றாக வாங்கியவர். எப்போது போனாலும் ‘நான் வேறு உங்களுக்கு பணம் தரவேண்டும். விரைவில் தந்துவிடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். 1988ல் அவருக்கு அதெல்லாம் நினைவுக்கே வரவில்லை. (இன்று வரை தரவில்லை என்பது சோகம்)
ஆனால் அன்றோ ஒரு பத்து ரூபாய்கூட தரும் மனநிலையில் அந்தக் குடும்பம் இல்லை. சரி இன்று நடை பயணம்தான் என்று முடிவுசெய்து சோகமாக திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் கடைத்தெருவில் ஒரு நண்பர் மிக வறிய நிலையில் ஆர்ட்டிஸ்டாக இருந்தார். எதற்கும் முயற்சிப்போம் என்று அவரிடம் “ரூ 25/- அவசரமாக வேண்டும் நாளை கொடுத்து அனுப்புகிறேன்” என்று கேட்டதும். பக்கத்துக் கடையில் வாங்கிக் கொடுத்தார். இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. விரைந்து வந்து கடைசி பஸ் பிடித்து வீடு சேர்ந்தேன். வறுமையில் செம்மை என்பது இதுதான்.
அன்று அவர் உதவாமல் போயிருந்தால் என் நண்பனுக்கு நடந்தது ஒரு மாமாங்கம் கழித்து எனக்கு நடந்திருக்கும்.