28
ஆரைய்யர் (வருவாய் ஆய்வாளர்).
அந்த நாட்களில் வருவாய் ஆய்வாளர் என்பவர் கிராமப் பகுதிகளில் மிகவும் மதிப்புக்கு உரியவர். அவரைத் தெய்வம்போலவோ, தன குடும்ப முக்கிய நபர் போலவோ தங்கள் ஊருக்கான தேவ தூதன் போலவோ மக்களால் மதிக்கப்பட்ட காலம்.
பொதுவாக கிராமப் பகுதிகளில் president என்பவரை ப்ரசெண்டு என்றும், மணியக்காரரை மணியார் என்றும் அழைப்பது போன்று R.I. (வருவாய் ஆய்வாளர்) என்பவரை ஆரய்யர் என்று அழைப்பது வழக்கம்.
இந்த வருவாய் ஆய்வாளர் பணியிடம் இருக்கிறதே அது ஒரு வித்தியாசமான அனுபவம். அந்த பதவியில் வேலை செய்யும்போது பல்வேறு படிப்பினைகள், அனுபவங்கள், சோதனைகள் என்று சுகமான சோகங்களும் சோகமான சுகங்களும் நிறைந்த வாழ்க்கையை வழங்கும்.
நான் சொல்வதெல்லாம் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை. இப்போதெல்லாம் அது ஒரு புரமோஷனுக்கான பயிற்சி.
கிராமத்திற்கு கலெக்டரே வந்தாலும் வருவாய் ஆய்வாளருக்குதான் முதல் முன்னுரிமை வழங்கத் தயாரான மக்கள் நிறைந்த காலம். வருவாய் ஆய்வாளர்களும் அந்த அளவிற்கு மக்களுடன் இணைந்து வாழ்ந்தனர்.
என்னுடைய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால ஆர்.ஐ. பணியில் என்னைத் தேடிவந்த அனுபவங்கள் சந்தித்த மனிதர்கள் என்று அது ஒரு மறக்க முடியாத பொற்காலம்.
என்னுடைய வருவாய் ஆய்வாளர் பணியேற்பே சற்று கோணலாகத்தான் ஆரம்பித்தது.
ஒரு சுபயோக சுபதினத்தில் எனக்கு கலெக்டர் ஆபீசில் சூனியம் வைத்துவிட்டார்கள். ஆம், காலையில் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் என்னை உடையார்குடி வருவாய் ஆய்வாளராகப் பணியமர்த்தப் பட்டிருப்பதாகவும் உடனடியாக சேரவேண்டும் என்றும் உத்திரவாகியிருந்தது.
கூட்ஸ் ரயிலிலிருந்து சிலபல பெட்டிகளைக் கழற்றி விடுவதுபோல் அப்போதே என்னை ஆபீசிலிருந்து கழற்றிவிட்டார்கள். அதன் விழைவு சிந்திக்கக்கூட நேரம் இல்லாமல் பணியேற்றாக வேண்டும். நானோ சப்ளை அண்டு சர்வீஸ் பிடிக்காமல் இரண்டு ஆண்டுகளாக ஆர்.ஐ. வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து வந்தவன். கடைசியில் பங்களா வரவு செலவு பார்க்க வேண்டிய பிர்க்காவிலேயே போட்டுவிட்டார்கள்.
தலைவிதியை நொந்துகொண்டு மதியம் தாசில்தாரிடம் உள்ள பலிபீடத்தில் தலையைக் கொண்டுபோய் வைத்தேன். அவருக்கு என்னை ஏற்பதற்கு விருப்பமில்லை. காரணம் நான் விடுவிக்கவேண்டிய நபர் நன்றாக வேலை பார்த்துவந்ததுதான். எப்பவுமே புது துடைப்பம் நல்லா பெருக்காது. கொஞ்சம் பழகும் வரை அதிலிருந்தே குப்பை கொட்டும்.
நான் விடுவிக்க வேண்டிய நபர் வேறு யாருமில்லை. என் நண்பன் ரகமத்துல்லாதான். ‘நேமிச் சக்கரத்தை’ சுமந்துகொண்டிருந்த அவனுக்கோ விட்டால் போதும் என்று ஓடத் தயார் நிலை. கடைசியில் வேண்டா வெறுப்பாக என்னை ஏற்றுக்கொண்டார் தாசில்தார். அப்போது அவர் சொன்னது ஏதோ நான் வீடுபுகுந்து திருட வந்ததுபோலவும் என்னைப் பிடித்து கட்டிப்போடச் சொல்வதுபோலும் இருந்தது.
துணை வட்டாட்சியரை அழைத்து “நாளை கலெக்டர் வரார். இந்தாள்கிட்ட பைண்டோவர்பண்ணி கையெழுத்து வாங்கிக்குங்க.” அப்படியே என்பக்கம் திரும்பி “இங்கேதான் தங்க வேண்டும் தெரியுமா?” எனக்கோ வாழ்க்கையே வெறுத்துப் போன நிலைமை. நான் டெம்பரரி குமாஸ்த்தாவாகப் பணிபுரிந்தபோதுமுதல் என் ஆத்மார்த்த வேலை காரணமாக அதிகாரியின் செல்லப் பிள்ளையாகத்தான் இருந்திருக்கிறேன்.
தன்மானம் பின்னிழுத்தபோதும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி போன்று கோர்ட் ஹாலைவிட்டு வெளியே வந்தேன். உடன் புறப்பட்டு வந்து கோட்டாட்சியரை சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டு மீண்டும் அதிகாலை சென்று வட்டாட்சியரை சந்தித்தேன். அப்போது அவரது பேச்சே மாறியிருந்தது. எனக்கு ஒரே சந்தேகம். ‘நமக்காக எந்த மந்திரி, எம்.எல்.ஏ. சிபாரிசு செய்திருக்கப் போகிறார். இப்படி குழைவாக பேசுராரே’ என்று.
அப்போதுதான் அவர் சொன்னர் “நீங்க ஹெட்குவார்ட்டர்ஸ்ல வேல பாக்குறதில பல நன்மை இருக்கு அதிகாரிங்க நல்ல அறிமுகத்துல இருப்பாக. அது பல விதத்தில உதவியா இருக்கும். தைரியமா வேல பாருங்க. உங்களைப் பத்தி கேள்விப்பட்டேன் எந்த பிரச்சினையும் இருக்காது. எதா இருந்தாலும் என்னிட்ட கொண்டுவந்திடுங்க”.
எனக்கு முன்னோடியான என் நண்பன் பக்கத்திலேயே இருக்கையில் எனக்கென்ன கவலை. அன்றே என்னுடைய பெட்டி படுக்கையுடன் ஜாகை மாறினேன். அப்புறம் நான் விடுவிக்கப்படும் வரையிலும் அங்கேதான் தனிக்குடித்தனம் செய்தேன். அந்த கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்த நான்தான் கடைசி. அதன் பின் வருவாய் ஆய்வாளர் தலைமையிடத்தில் தங்கியிருக்கவேண்டும் என்ற நடைமுறையெல்லாம் காற்றோடு போயாச்சு.
ஒரு மாதத்தில் கலெக்டர் ஜமாபந்தி. எனக்கோ ஒரே பயம். ஆனால் என் ஓ.ஏ. வின் பொறுப்புணர்ச்சி, என் வி.ஏ.ஓக்களின் ஒத்துழைப்பால் நல்லாவே முடிந்தது. அதிலே ஹைலைட் என்னண்ணா கலெக்டர் முதல் நாளும் கடைசி நாளும் மட்டும் வந்தார். என் சக ஆர்.ஐகளும் நண்பர்களாவிட்டனர். அப்புறம் என்ன கவலை.
கலெக்டர் ஜமாபந்தியே முடித்துவிட்டதால் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது. ஏற்கனவே என் நண்பன் பிர்க்காவில் ரோடே போட்டு வைத்திருந்ததால் நான் ஹைவேயாக மாற்றி பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
ஆர்.ஐ. பணிகளில் முக்கியமான ஒன்று ஆறு மாதத்திற்கு ஒருமுறை முதியோர் உதவித் தொகை பெறுபவர்களை தணிக்கை செய்து அறிக்கை தரவேண்டும். அந்த நேரம் வந்தது. கிராமத்திற்குப் போனவுடன் பயனாளிகளை அழைத்து நேரடித் தணிக்கை செய்யப்போக ஒருவர் சத்துணவு மையத்தில் வேலை செய்வதாகத் தகவல் கிடைத்தது. கிராமத்திலேயே இப்படி என்றால் நகரத்தில் எப்படி இருக்கும் என்று எண்ணம் வந்தது.
மதியம் பன்னிரண்டு மணியளவில் நானும் என் ஓ.ஏ.வும் ஒவ்வொரு மையமாகப் போய் ஆயாக்களை பேட்டி கண்டு இந்த மாதம் “பென்ஷன் பணம் வந்துவிட்டதா” என்று கேட்கப்போக ஒரே நாளில் பத்துப் பதினைந்து கேஸ்கள் கிடைத்துவிட்டது. உடனே ஒரு அறிக்கை தயார் செய்து அனுப்பிவிட்டேன். அந்த மாதமே அவர்களின் பணம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் சிபாரிசு தாங்கவில்லை. வெளியிலிருந்தெல்லாம் சிபாரிசு வரவில்லை. ஆபீசில் வேலை பார்ப்பவர் வீட்டு வேலைக்காரர், அக்கம்பக்கத்து வீட்டு குடியிருப்பாளர்கள் என்று அலுவலக நண்பர்களே சிபாரிசுக்கு வந்துவிட்டனர். இதிலே ஒரு விசேஷம் அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் மாமியார் ஒருத்தர். அப்புறம் என்ன. ஆட்சி மாறிய அரசாங்கத் திட்டம் போல் தணிக்கை கைவிடப்பட்டு விட்டது.
இப்படியாக நான் தணிக்கை செய்கிற விஷயம் பிர்க்கா முழுவதும் பரவிப்போய் மாலை நான் வீட்டுக்கு வந்தால் ஒரே கிழங்கட்டை கூட்டம் உட்கார்ந்திருக்கும். ஒரே புலம்பலாக இருக்கும். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதில் ஒரு பெண்மணி உண்மையை உடைத்தார்.
அவரது கணவன் இறந்துவிட்ட நிலையில் வாழ வழியின்றி தவித்துள்ளார். கணவன் இருந்ததுவரை குடியிருந்த இடத்தையும் காலி செய்துவிட்டனர். அவர் ஒரு முசாபார்கானா அருகில் குடியிருந்துள்ளார். இந்நிலையில் தாலுக்கா ஆபீசில் ஜமாபந்தியின்போது தினமும் அலுவலக வாசலில் வந்து காத்திருந்ததை அப்போதைய சப்கலெக்டர் பார்த்துவிட்டு விசாரித்ததில் அவருக்கு 45 வயதாகவில்லை என்பது தெரிந்தும் அவரது நிலைக்குஇறங்கி“இவளுக்கு வயசுமட்டும்தான் குறைச்சல். மற்றபடி பணம் கொடுக்கலாம். பாவமா இருக்கு. நீங்க அனுப்புங்க. நான் சாங்ஷன் செய்கிறேன்” என்று உத்திரவிட்டுவிட்டார். தொடர்ந்து பணம் பெற்றுவந்தவருக்கு என் மூலம் ஆபத்து வந்துவிட்டது. அப்புறம் என் முன்னவர்களை விசாரித்ததில் உண்மைதான் என்று தெரிந்துகொண்டேன். போனால் போகிறது என்று நானும் சட்டத்தைத் தளர்த்திவிட்டேன்.
அப்புறம் என்ன. ஓ.ஏ.பி வாங்குகிறவர்கள் எல்லாம் தகுதியுடனா வாங்குகிறார்கள். அந்த ஏழைக்கு மட்டும் என்ன சட்டம். உதவித் தொகை வாங்குவதற்காகவே உயிருடன் உள்ள கணவனை இறந்துவிட்டதாக சாதிப்பர். அருகில் நிற்பவர் யார் என்றால் அவர் பக்கத்து வீட்டுக்காரர். உதவிக்கு அழைத்துவந்தேன் என்பார். விசாரணைக்கு வரும்போதுமட்டும் தாலியை அவிழ்த்து பையில் வைத்திருப்பார். ஆண்கள் மட்டும் என்ன. உயிருடன் உள்ள மகனையே செத்துவிட்டார் என்று சொல்வர் கரும காரியம் மட்டும் செய்திருக்கமாட்டார்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேட்டியோ புடவையோ முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு வழங்கப்படும். சிலர் அதனை வாங்கிய கையோடு கடையில் கொண்டுபோய் விற்றுவிடுவதை பார்த்திருக்கிறேன். அதே சமயம் அரசாங்கம் வழங்கிய துணியை அரதப் பழசானாலும் கட்டும் நிலையில் உள்ளவர்களையும் பார்த்திருக்கிறேன். அப்புறம்தான், சட்டம் ஒன்றையே பிடித்துத் தொங்காமல் யாதார்த்தத்தையும் மதிக்கக் கற்றுக்கொண்டேன்.
எனது பிர்க்காவில் மட்டும்தான் நிறைய மாணவர்கள் சாதி வருமான சான்று கேட்டு வருவர். மற்ற ஆர்.ஐ. எல்லாரிடமும் வரும் விண்ணப்பங்களைவிட என் ஒருவனிடம் மட்டும் அதிகமாக வருவதில் எனக்கு ஒரு பெருமை. சான்று கேட்பவர்களின் எண்ணிக்கைதானே கல்வி பயிலுபவர்களின் அளவைக் காண்பிக்கிறது. என் பிர்க்காவில் கல்வி அதிகம் என்பதில் ஒரு கர்வம்கூட. அதனால் இரவு எத்தனை நேரமானாலும் இருந்து எல்லா மாணவர்களையும் அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை. தூர கிராமங்களில் இருந்து வருபவர்களை முதலில் விசாரித்து முடித்து அனுப்பி விடுவேன். தற்காலம் போல் மொட்டைக் கையெழுத்தெல்லாம் கிடையாது.
அப்படியும் முண்டியடித்து முன்னால் வர முடியாத மாணவர்கள் ஓரிருவர் வெகு நேரம் கழித்து வந்து என் மனதைச் சங்கடப் படுத்தியிருப்பர். அவர்களுக்கு என் செலவிலேயே டிபன் வாங்கிக் கொடுத்து என் ஓ.ஏ. அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்த சில சந்தர்ப்பங்கள்கூட உண்டு.
அப்படிப்பட்ட ஒரு மாணவர் என்னிடம் வந்தார். அவர் அவரது தாயார், அவருக்குத் தாயார் இதுதான் அவரது குடும்பம். வருமானம் என்றால் பூச்சியம். அப்புறம் எப்படி குடும்பம் என்றால் வீட்டு வேலை செய்து வயிறு வளர்த்துவந்தனர். அந்த பையன்பேரில் இறக்கம் இருந்தபோதும் சந்தேகமும் இருந்ததால் விசாரித்து பின்னர்தான் சான்று வழங்கினேன்.
நான் தடுக்கி விழுந்தால் கேம்பு போகும் இடமான லால்பேட்டைக்கு சைக்கிளில் போகும்போது அந்தப் பையன் நடந்துபோவதைப் பார்த்ததும் என் மனதில் இனம் புரியாத உணர்வு. அடுத்தடுத்து அந்தப் பையனும் என்னிடம் வந்து நின்ற சூழ்நிலை. அவனிடம் நடந்து போகாதே என்று இரண்டு ரூபாய் கொடுத்து அனுப்பியும் அவன் நடந்தே சென்றது தெரியவந்ததும் ஒருநாள் வழியில் பார்த்து கடிந்துகொண்டேன்.
அவன் சொன்னான் “இந்த காசைக்கொண்டுபோய் என் அம்மாவிடம் கொடுத்தால் ஏதாவது உதவியா இருக்கும்” என்று. அந்தக் குடும்பத்தை அழைத்து விசாரித்ததில் அவனது பாட்டிக்கு மட்டும் உதவித் தொகை வழங்கத் தகுதி இருந்ததால் அவருக்கு மட்டும் கிடைத்தது. ஒரு ஆண் மகன் இருந்த ஒரே காரணத்தால் அந்த ஏழைத்தாய்க்கு விதவை உதவித்தொகை வழங்க இயலாமல் போனது. அதன்பின்னர் அந்தப் பையன் என் சகோதரனாகிவிட்டான். இப்போது புரிந்திருக்கும் நான் இந்தப் பையனை அவன் இவன் என்று ஒருமையில் குறிப்பிட்டது. இது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் இதன் தொடர்ச்சிதான் உணர்வுப் பூர்வமானது.
அவனால் மேற்கொண்டு கல்லுரிக்குச் செல்ல இயலவில்லை. சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. வெற்றிலை மண்டியில் கணக்கு எழுதினான். அடுத்து ஊரார் உதவியுடன் வெளிநாடு செல்லப் பயணமானான். நானும்கூட உதவிசெய்தேன். சில மாதங்கள் கழித்து வந்தான். அப்போதுதான் தெரிந்தது. புரோக்கர் ஏமாற்றி மும்பையில் கைவிட்டார் என்பது.
கொஞ்சகாலம் கழித்து மீண்டும் முயற்சி செய்து அரபுநாட்டுக்குச் சென்றான். அங்கிருந்து வெளிநாடுகளில் வேலைக்கு ஆள் எடுக்கும் நோக்கில் நடைபெற்ற தேர்வில் பாசாகி தற்போது லண்டனில் போஸ்ட்டல் டிப்பார்ட்மெண்டில் பணிபுரிகிறார் அந்த சகோதரர்.
ஒவ்வொரு பொங்கல், தீபாவளி பண்டிகைக்கும் தவறாமல் தொலைபேசியில் அழைப்பு வந்துவிடும். என்னையும் குடும்பத்தையும் விசாரித்து. அதைவிட ஒருமுறை அவரது மனைவி என்னிடம் தொலைபேசியில் பேசினர். நான் இன்னார் என்று அறிமுகம் செய்து கொள்ளும் முன்னர் என்னைப்பற்றிய விபரங்களை அவர் தெரிவித்தார். நான் அசந்துபோய் விட்டேன். என்னைப்பற்றி சொல்லி வைத்திருப்பதுடன் அடிக்கடி என்னைப் பற்றி பேசுவார் என்றும் அவர் சொன்னார். என்னுடைய சகோதரன் ஒருத்தன் உலகின் வேறு மூலையில் இருக்கிறான். அவனது பூரண அன்பைப் பெறுவதற்கு அப்படி என்ன செய்தேன் என்பதுதான் என் முன் உள்ள கேள்வி.
இது ஒரு உதாரணத்திற்கு சொல்லப்பட்டதுதான். இதுபோல் நிறையபேர் இன்றும் அந்தப் பகுதியில் சென்றால் வயதானவர்கள் அடையாளம் கண்டு விசாரிக்கும்போது நாம் அப்படி என்ன செய்துவிட்டோம் இவர்களின் அன்பைப் பெறுவதற்கு என்று ஆச்சாரியம்தான் மிஞ்சும்.
நான் ஆர்.ஐ.யாகப் பணியாற்ற ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒருநாள் நான் லால்பேட்டையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன் என் எதிரில் வந்த நபர் ஒருவர் டபக்கென்று சைக்கிளிலிருந்து குதித்து என்னிடம் குசலம் விசாரித்தார். அவருக்கு சுமார் எழுபது வயதிருக்கலாம். எனக்கு அடையாளம் தெரியவில்லை. தனது சைக்கிளில் தொங்கிய மஞ்சள் பையைக் கழற்றி என்னிடம் கொடுத்தார். எதற்கு என்றெல்லாம் புரியவில்லை. யார் என்றும் புரியவில்லை. வெட்கத்தை விட்டு அவரிடமே விசாரித்தேன். சம்பவம் இதுதான்.
நான் பணியேற்ற சில தினங்களில் ஒரு பெரியவர் வந்தார். அவருக்கு அதற்கு முன்பு மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது வருமானம் என்ன என்று சான்று பெற்று நீதி மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பொருட்டு அவர் மூன்று மாதங்களாக அலைந்து கொண்டிருந்தார். என் நண்பன் ஏற்கனவே அறிக்கை அனுப்பியிருந்தும் சொத்தை கேள்விகேட்டு திருப்பி அனுப்பிக்கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் நான் பணியேற்றதும் என்னிடம் படையெடுத்தார் அந்தப் பெரியவர். நானும் மீண்டும் அறிக்கை அனுப்பிவைத்தேன். பல போராட்டத்திற்குப் பின் அவருக்கு சான்று கிடைத்து அவரது வழக்கும் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் காரியம் முடிந்தபின்னர் அவரை நானும் சந்திக்கவில்லை. அத்துடன் மறந்தும்விட்டது.
இரண்டு ஆண்டு கழித்து அவரது மகன் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளார். அவர் கொண்டு வந்த பொருட்களில் சிலவற்றை எனக்கென்று எடுத்துக்கொண்டு சில முறைகள் வந்துள்ளார். என்னை சந்திக்க முடியாமல் திருப்பிவிட்டிருக்கிறார். இந்நிலையில் வேறு வேலையாக சென்று வந்தவர் கண்ணில் நான் மாட்டிக்கொண்டேன்.
நான் எவ்வளவோ மறுத்தும் நடுத்தெருவிலேயே மஞ்சள் பையை அப்படியே என் கையில் திணித்துவிட்டார். வீட்டுக்கு வந்து பார்த்தால் உயர்தர பேண்ட் பிட், உயர்தர செண்ட் பாட்டில், ஷேவிங் கிரீம், பேனா என்று ஐந்தாறு பொருட்கள் அதில் இருந்தன. என்னால் அதனை ஜீரணிக்கவே முடியவில்லை. நான் மீண்டும் அவரது வீட்டுக்குப்போய் சண்டை பிடித்தேன். அவரோ நான் உங்களுக்குக் கொடுக்கவில்லை. என் மகனுக்குத்தான் கொடுத்திருக்கிறேன் என்றாரே பார்க்கலாம். இந்த அன்பைத்தான் என்னால் சம்பாதிக்க முடிந்தது.
இதுபோன்று ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் இல்லை. பலர் என் நண்பர்கள் ஆயினர். இதுபோன்று ஒருவர் மோதலில் நண்பராக மாறினார் கடைசியில் பிசிராந்தையார் அளவிற்கு நட்பு மலர்ந்த ஒரு கதை.
ஒரு வீட்டுக்கு நிலவரி பாக்கிக்காக போய் நின்றோம் நானும் என் உபதளபதிகளான வி.ஏ.ஓ. மற்றும் போர்வீரர்களான தலையாரிகளும். அந்த வீட்டில் நெல் அறுவடை முடிந்து மூட்டைகள் உள்ளே போய்க்கொண்டிருந்தது. எங்களையெல்லாம் அவர் வைக்கோல் துரும்பாகக்கூட நினைத்துப் பார்க்கவில்லை. பக்கத்திலிருந்து ஒரு பெரியவர் வந்தார். எங்களை வரவேற்று உட்காரச்சொல்லி கணக்கு பார்த்து சொல்லுங்கள் கட்டிவிடுகிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்தார். எனக்கோ பயங்கர கோபம். அவரை விடக்கூடாது என்றெல்லாம் பொருமல்.
சில தினங்கள் சென்றது. சிமெண்ட் பார்மிட் கேட்டு விண்ணப்ம் வந்திருந்தது. அந்தப் பெரியவர்தான் எடுத்துவந்தார். அப்போது சிமெண்ட் தட்டுப்பாட்டு காலம். கோட்டாட்சியர்தான் நூறு நூறு மூட்டையாக வழங்குவார். அதற்கு முன்னோடியாக கீழே இருந்து ஒவ்வொரு முறையும் அறிக்கை வரவேண்டும். அந்தப்பாடு படுவதற்குப் பதிலாக கள்ள மார்க்கெட்டிலேயே வாங்கலாம் என்ற நிலை. என்னுடைய பிர்க்காவில்தான் அதிக பர்மிட் வரும். நானும் இடத்தைப் பார்க்காமல் அறிக்கை தரமாட்டேன். ஆனால் ஒன்று. ஒரு முறை இடம் பார்த்தால் போதும். பின் நலைந்து அறிக்கைகள் இருந்த இடத்திலிருந்தே அனுப்பிவிடலாம்.
இந்தப் பெரியவர் வந்தவுடன் இடம் பார்க்கச் சென்றேன். அவர் கேட்டது போலி பார்மிட்டாக என் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் பெரியவர் பச்சையாகத் தெரிவித்துவிட்டார். அந்த வீட்டுக்கு அருகில் பள்ளிவாசல் கட்டுவதற்காகத்தான் இந்த பர்மிட் என்றும். அதற்காகவே முன்சொன்ன என் கோபத்திற்கு உட்பட்டவர் பெயரில் பார்மிட் கேட்டிருப்பதாகவும் சொன்னர். இருந்தாலும் என் கோபம் தலைகாட்ட ‘அவருக்கு வழங்கமுடியாது. வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன் வந்து நின்றால்கூட என்ன வென்று கேட்கவேண்டியிருக்க அவர் சற்றும் மதிக்கவில்லை’ என்று குமுறினேன். ஆனால் அந்தப் பெரியவர் என்னை வரவேற்று பதில்சொன்னதை உத்தேசித்து ‘அவருக்காகத்தான் இந்த பர்மிட் பரிந்துரைக்கிறேன்’ என்று சொல்லி அறிக்கை அனுப்பிவிட்டேன். அடுத்தடுத்து வேலை நடந்து பள்ளிவாசலும் முடிந்தது. ஒருநாள் அந்த இடம் பார்க்கப்போனபோது எனக்கே ஆச்சரியம் அந்த அளவிற்கு வேலை முடிந்திருந்தது.
அவரோடு ஒரு சிறு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது முன்சொன்ன கோபக்காரர் வந்து வணக்கம் சொல்லிப் பேசியதும் எனக்கு ஆச்சரியம். அதன் பின்னர் என் நண்பராக மாறிவிட்டது அதைவிட ஆச்சரியம்.
ஒரு சாதாரண சிமிண்ட் பர்மிட் என்னை அந்த ஊர் தலைவரின் நண்பராக்கிவிட்டது. அதன் பின்னர் அந்த ஊர்காரர்களே இவன் இன்னாருடைய ஆள் என்று பேசும் அளவிற்கு சினேகிதமாகிவிட்டோம்.
இதில் ஒரு விசோஷம் என்னண்ணா, ஒருவாரம்கூட இருவரும் சந்திக்காமல் இருக்க முடியாது. நான் அவரைப் பார்க்கவேண்டும் என்று காதலனைத் தேடும் காதலியாக உருகிக் கொண்டிருப்பேன். ஒரு குதிரை வண்டி வந்து என் வாசலில் நிற்கும். பார்த்தால் “ஆரைய்யா உங்களை பார்க்கணுண்ணு ஒரே ஆவல் அதான் வந்தேன்” என்பார். அதேபோன்று நானும் சென்று பார்த்தால் அப்போதுதான் அவர் என்னைப் பார்க்கக் கிளம்பிக் கொண்டிருப்பார். இப்போது நான் சொன்ன பிசிராந்தையார் நட்பு சரிதானே.
நண்பர்களைச் சம்பாதித்த நான் ஒரு எதிரியையும் சம்பாதித்தது ஒரு சுவாரியமான கதை.
நான் பணியேற்ற புதிது. நிறைய மாணவர்கள் சான்றுக்காக வந்து நின்றிருந்தனர். அந்த முன் இரவு நேரத்தில் ஒரு பெரியவர் வந்து தாலுக்கா ஆபீசிலிருந்து ஒரு கடிதத்தை கொண்டு வந்திருந்தார். அவர் ஒரு முக்கியப் பிரமுகரின் கணக்குப் பிள்ளை. மின் இணைப்புக்காக அவருக்கு வெறும் ரூ 35,000 சொத்து மதிப்புள்ளவர் என்று சான்று தேவை. அதில் சொல்லியிருந்த சொத்துக்கள் எல்லாம் அந்நாளில் 35 லட்சம் பெறுமானமுள்ளது. அது என்ன சட்டமோ முப்பத்தைந் தாயிரம்தான் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அந்த விண்ணப்பம் தாலுக்கா ஆபீசிலிருந்து ஒரு மாதம் முன்னதாக அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. நான் வாங்கிப் பார்த்துவிட்டு இப்படி நீங்கள் தாமதமாக கொண்டு வருகிறீர்களே பின்னாளில் நான் தாமதப் படுத்தியதாக அர்த்தமாகுமே என்று சொல்லிவிட்டு மறுநாள் வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன். மறுநாள் விசாரணை முடித்து அறிக்கை தயார் செய்து அனுப்பி வைத்தேன். மீண்டும் ஒரு மாதம் கழித்து அந்தப் பெரியவர் மேல் விபரம் கேட்டு அனுப்பிய கடிதத்தினை எடுத்துவந்தார். அப்போதும் இரவு சுமார் எட்டு மணி. அவரிடம் இப்படி தாமதமாக கொண்டுவந்ததற்காக கடிந்துகொண்டு மறுநாள் வரும்படி தெரிவித்திருந்தேன்.
சற்று நேரம் கழிந்தது. ஒரு அந்தஸ்தான மனிதர் வந்தார். அந்த சான்று அவருக்குத்தான் கேட்கப்பட்டிருந்தது. வந்தவர் சாதாரணமாக ஆரம்பிக்காமல் ஒரு சான்றுக்கு இவ்வளவு அலைக்கழிப்பா என்ற ரீதியில் பேசினார். நானும் அவரிடம் அப்போதுதான் தபால் கொண்டு வந்த விபரம் சொல்லி மறுநாள் கணக்கப் பிள்ளையை அனுப்பச்சொன்னேன். அவரோ எழுந்து செல்லும்போது “பத்து இருபதுக்கெல்லாம் ஆசைப்பட்டுக்கொண்டு ஏன் தாமதப் படுத்துகிறீர்கள்” என்று ஒரு வார்த்தையை விட்டுவிட்டு கதவுக்கருகில் சென்றுவிட்டார்.
வந்ததே கோபம் எனக்கு. என் அருகில் இருந்த தலையாரியிடம் “இந்த ஆளை பிடித்து கட்டுடா” என்று ஒரு கத்து கத்தினேன். அவர் அப்படியே விக்கித்துப் போய்விட்டார். என் தலையாரிக்கு அவர் எவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர் என்பது தெரியுமானதால் அவர் கைகால் நடுங்க நின்றுகொண்டிருந்தார். என் கட்டளைக்குப் பணியாத தலையாரியிடம் நான் அடுத்து ஒரு குரல் கொடுத்தேன். ரோஷம் வந்துவிட்டது அந்தப் பெரிய மனுஷனுக்கு.
“நான் என்ன தப்பா சொன்னேன் பத்து இருபது நாளா அலைக்கழிக்கிறீங்களே என்றுதானே கேட்டேன். நான் யார் தெரியுமா” என்று எகிறப்பார்த்தார். நானோ அவர் யாரா இருந்தால் என்ன சொன்ன வார்த்தையை மாற்றிப் பேசுறவன் பெரிய மனுஷனா என்று இன்னும் வேகம். என்னைச் சுற்றி பத்துப் பதினைந்து மாணவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
“இப்படி வந்து உட்காருங்க நீங்க என்ன சொன்னீங்க என்று பார்ப்போம். வேறு யாரிடமாவது இதெல்லாம் வைத்துக் கொள்ளுங்க” என்று படபடவென்று பேசிவிட்டேன். இந்த சத்தம் கேட்டு எதிரில் இருந்த ரைஸ்மில் ஆட்கள் முதற்கொண்டு சிறு கூட்டம் கூடிவிட்டது.
அந்தஸ்தானவர் போயே போய்விட்டார். மறுநாள் தாசில்தாரிடம் புகார் சொல்லியிருக்கிறார். அவரோ பிரச்சினைக்குக் காரணமானவன் நான் என்று தெரியாமல் வேறு ஆர்.ஐ. என்று எண்ணி தாம் விசாரிப்பதாக சொல்லி விட்டார். மாலை மீட்டிங்கின்போது இதனைத் தெரிவித்தார். நானும் அந்த பிரச்சினையாளன் நான் தான் என்று சொல்லி நடந்ததைச் சொன்னேன். என் அறிக்கையை வாங்கிப் பார்த்தார் வட்டாட்சியர். அதில் இரண்டு முறையும் அந்த கடிதம் என்னிடம் ஒருமாத தாமதத்தில் வந்துள்ள விபரத்தை நான் எழுதியிருந்ததைப் பார்த்து சரி பார்த்துக்கங்க என்று அத்துடன் விட்டுவிட்டார்.
ஆனால் இந்த சம்பவம் ஏதோ நான் பெரிய வஸ்த்தாது என்ற தோற்றத்தை என்னைச் சுற்றியிருந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. காசு கொடிகட்டிப் பறக்கிற இடத்தில் அந்தக் கருமம் வேண்டாம் என்று இருப்பதுகூட பெரிய தொல்லைதான்.
அடுத்தடுத்து ஆபீசில் குசலம் விசாரிப்பு, எச்சரிக்கை என்று வர ஆரம்பித்தது. என்னடா என்று பார்த்தால் அந்தப் பெரிய மனிதரின் வளாக வீடுகளில் நம் அலுவலகத்தில் வட்டாட்சியர் முதல் கிளார்க்கு வரை குடியிருக்கிற விபரம் பின்னர்தான் தெரிந்தது. அவரவர் பயம் அவரவருக்கு. மடியில் கனமில்லை என்னும்போது எனக்கென்ன மனக்கவலை.
ஆர்.ஐ. என்றாலே அந்த பிர்க்காவில் வரிவசூல் கண்காணிப்புதான் முக்கியமானது. அப்போதெல்லாம் ஒருபக்கம் வரி கொடா இயக்கம் நடக்கும். அதிகாரிகளோ எப்படியோ வசூல் செய்யுங்கள் என்பர். ஆனால் ஜப்தி நடவடிக்கையும் கூடாது. பதினாறு வயதினிலே திரைப்படத்தில் ஒரு கிளிசோதிடர் சொல்வார் ‘இருபத்தோரு சுற்று சுற்றவேண்டும் ஆனா எண்ணக்கூடாது’ என்று. அதுபோல் அடிக்கவேண்டும் ஆனால் அடி விழக்கூடாது. நாம் என்ன சாட்டை வைத்து வித்தைகாட்டும் பிச்சைக்காரனா என்ன. அவன்தான் தன்மேல் அடிவிளாமல் அடித்துக்கொள்வான்.
இருந்தாலும் அங்கங்கே பயங்கர உதாரெல்லாம் விடுவோம். ஒரு வீட்டில் அதிக அளவில் வரி பாக்கி. கேட்டுக் கேட்டுப் பார்த்து அன்று அந்த அழும்பு பட்டாதாரை ஒரு வழி பண்ணுவது என்று முடிவாயிற்று. வீட்டில் மாட்டைப் பிடித்துவா என்று தலையாரிக்கு உத்தரவாகிவிட்டது. போய் மாட்டின் கயிற்றை தலையாரி பிடித்ததுதான் தாமதம். வெள்ளிக் கிழமையும் அதுவுமா இப்படி செய்திட்டாங்களே என்று செண்டிமெண்ட் ஏற்பட்டுவிட்டது. பெரிய போராட்டம் ஆகிவிட்டது. நாங்களோ விடுவதாக இல்லை. கடைசியில் பட்டாதாராரிடம் அவரது வீட்டு பெண்கள் சண்டை பிடித்துவிட்டனர். கடைசியில் இரண்டு தினங்களில் கட்டுகிறேன் என்று ஜகா வாங்கினர். நாங்கள் கதவு அது இது என்று இறங்கி குடத்தில் வந்து நின்றோம். “குடத்தைக் கொடுத்துவிடு பணம் கட்டிவிட்டு வாங்கிக்கொள்” என்றோம். குடமும் லட்சுமி வசிக்கிற இடமாம். கடைசியில் ஒரு டம்ளரை கொண்டு வந்துகொடு அல்லது பணம் கட்டு என்று மத்தியஸ்த்தம் செய்ததில் அசிங்கத்திற்குப் பயப்படாதவர் செண்டிமெண்டுக்கும் பெண்களுக்கும் பயந்துகொண்டு வள்ளிசாக பூரா பாக்கியையும் கட்டிவிட்டார் அப்போதே. அவர்கள் கொடாக் கண்டர்கள் என்றால் நாங்கள் விடாக்கண்டர்கள் அல்லவா.
இந்த உதாரெல்லாம் எல்லா நேரமும் பலிக்காது. வேறு ஒரு ஊரில் இப்படித்தான் பாக்கிப் பட்டாதாரின் கட்டை வண்டியை மறித்து மாட்டை ஓட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு தொழுஉரம் ஏற்றிய வண்டியை நடுத்தெருவில் அவிழ்த்து விட்டுவிட்டோம். பட்டாதாரோ சற்றும் கவலைப்படாமல் போய்விட்டார். ஒரு வாரமாகியும் நடுத்தெருவிலேயே கிடந்தது. கடைசியில் வி.ஏ.ஓ. சரண்டராகி வண்டியை எடுத்துபோனார் பட்டாதாரர்.
திடீரென்று ஒரு நாளைக்கு ஆர்.டி.ஓ. அதிகாலையில் வந்து பார்க்கச் சொல்லுவார். காலையில் சிதம்பரம் போய் ஆஜரானால் அன்று தமக்கு வேலை ஏதுமில்லை என்றும் ஜீப்பை எடுத்துக்கொண்டுபோய் வசூல் பணி செய்யுங்கள் என்பார். இரண்டு பிர்க்காவுக்கு அந்த வண்டி பயன்படும். ஒரு மைக் செட் கட்டிக் கொள்வோம். என்னுடைய ஓ.ஏ. படு மிரட்டலாக அட்சர சுத்தமாக வெட்டுவேன் குத்துவேன் என்ற ரீதியில் மைக்கில் பேசுவார். கூட்டம் சேர்ப்பதற்காக சமயத்தில் விதவிதமான மிமிக்ரியெல்லாம் செய்வார். அரசாங்க விளம்பரத்தில் அப்படியெல்லாம் பேசாதே என்றால் சற்றுநேரம் அடக்கி வாசிப்பார். அடுத்து வாலை அவிழ்த்துவிடுவார். இடையிடையே சினிமா பாட்டுவேறு போடுவார். அவரை அடக்குவதுதான் சற்று தமாஷான சிரமமாக இருக்கும்.
ஆர்.டி.ஓ. பக்கத்து கிராமத்தில் கணக்கு தணிக்கை செய்வதாகவும், அடுத்து இங்கு வருகிறார் என்றும் கதைவிட்டு வசூல் செய்வோம். கொண்டை வைத்த (சிவப்பு விளக்கு) ஆர்.டி.ஓ. ஜீப்பு என்றால் மக்களுக்கு சற்று பயம் கலந்த மரியாதை ஏற்பட்டு கணிசமாக வசூல் ஆகும். அப்புறம் மாதம் இரண்டு முறையாவது ஜீப் கொடுத்து வசூல் செய்யச் சொல்லிவிடுவார்.
என் பணிக்காலத்தில் என்னாளும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான் இரண்டு பிரிவினர். ஒருவர் நடவடிக்கை இன்னொருவருக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிடும். எங்காவது சாவு விழுந்தால் முக்கிய சொந்தக் காரருக்கு சொல்கிறார்களோ இல்லையோ. ஆர்.ஐ.க்கு சேதி வந்துவிடும். போலீஸ் பந்தோபஸ்த்து என்ன, சில சமயம் ஆர்.டி.ஓ. தலைமையில் அடக்கம் நடைபெறும். ராஜமாரியாதை அடக்கம்.
அதுபோல் கோயில் திருவிழா என்றாலும் ஆர்.டி.ஓ. தலைமையில் ஊர்வலம் போகும். உறுமி மேளம் அடிக்கத் தடை இருந்தது. ஆனால் சாதாரண மேளத்திலேயே உறுமி போல் சத்தம் வரவைப்பார் அந்தக் கலைஞர். இழுக்கிறான் பார் என்று கத்துவர் எதிர்தரப்பினர். ஊர்வலம் போய் முடியும் வரை எப்ப சண்டை வரும் என்று படபடப்புடன்தான் நடக்கும்.
இப்படித்தான் 1985 சுதந்திர தினம். எங்கள் சுதந்திரம் கேள்விக் குறியானது. அதைவிட எங்கள் உயிருக்கு உடலிடமிருந்து சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டிய நாள். அன்று ஒரு திருவிழா தொடர்பாக பெரும் கலவரம் ஏற்படும் நிலை. கலவரம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொண்ட எங்கள் நிலவரம்தான் கலவரமாகப் போய்விட்டது.
ஆர்.டீ.ஓவுடன் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தேன் முன்னதாக போலீஸ் வண்டிபோனது. திடீரென்று ஒரு குடிசையை வண்டி கடக்கவும் பின்னாலேயே ஒரு காவலர் துப்பாக்கியுடன் கைகால்களை விரித்த நிலையில் திரைப்படங்களில் வருவதுபோல் காற்றில் பறந்துவந்து விழுந்தார். நானும் என் ஓ.ஏ. அன்பழகனும் சட்டென்று இறங்கித் தூக்கவும் காவலர்கள் ஓடிவரவும் அப்படியே ஜீப்பில் போட்டுக் கொண்டுபோய் மருத்துவ மனையில் சேர்த்தோம்.
அடுத்து துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் நான் இருக்க நேரிட்டது. அந்த நொடியில், ‘சரி நாம் இனி வீட்டுக்குப் போகப்போவதில்லை’ என்று முடிவு செய்துகொண்டேன். நடந்து முப்பது ஆண்டு ஆகிவிட்டபோதிலும். அங்கு பயந்துகொண்டு நின்றிருந்ததும். அந்த நேரத்திலும் மாலைச் சூரியன் ஒருபக்கம் இறங்கவும் வாய்க்கால் கரைமேல் காவலர்கள் வரிசையாக துப்பாக்கியுடன் நின்றிருக்கவுமாகத் தெரிந்த காட்சியை பயத்திலும்கூட ரசித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. நான் ஒரு ஓவியனாக இருந்தால் இன்றும்கூட அதனை வரைந்துவிடுவேன். எல்லையைக் காவல் காக்கும் ராணுவ வீரர்களை அந்த நேரத்திலும்கூட நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஒருமுறை மாலை நேரம். நான் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்தில் இருந்த முக்கிய நபர்கள் சிலர் சற்று பரபரப்புடன் தாங்கள் பக்கத்து கிராமத்தினரால் தாக்கப்படலாம் என்றும் எதிர்தாக்குதலுக்கு ரெடியாவதாகவும் சொன்னர்கள். இது ஏதடா வம்பு என்று உடனே புறப்பட்டு பக்கத்து கிராமத்திற்குச் சென்றேன். அங்கு நண்பர் ஒருவரை சந்தித்தபோது அவர்கள்தான் தங்களைத் தாக்கப் போவதாகவும். அதற்காக தாங்கள் தற்காப்புக்கு தயாராவதாகவும் தெரிவித்தனர். ஆக இரண்டு தரப்பும் ஒருவர் பேரில் ஒருவர் பயம் கொண்டு எப்படா அடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். மீண்டும் இரண்டு இடங்களுக்கும் அலைந்து அப்படியெல்லாம் நடக்காது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பயத்தில் இப்படி நடந்துகொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டு வட்டாட்சியரிடம் தெரிவித்தால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றும் ஸ்பெஷல் பிராஞ்சிலிருந்து ஏதும் வரவில்லை என்றும் சொல்லிவிட்டார். இருந்தும் சில தினங்கள் வரை எனக்கு சற்று பயம்தான். இப்போது நினைத்தால் அன்று இப்படி இரண்டு கிராமத்திற்கும் பரபரப்பாக ஷட்டில் அடித்தது ஒரு வேடிக்கையாகத் தெரிகிறது.
ஸ்பெஷல் பிராஞ் என்றால் எல்லா தகவலையும் சரியாக மோப்பம் பிடித்து விடுவர் என்று நினைப்பு. முன்சொன்ன துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்பே என் ஓ.ஏ. அன்பழகன், ‘அய்யா கிராமங்களில் ஏதோ நடக்கிறது. அவரவர்களும் ஆயுதம் சேகரிக்கிறார்கள். சிலர் கிராமங்களைக் காலி செய்து வெளியேறுகிறார்கள்’ என்று சொன்னர். நானும் தாசில்தாரிடமும் ஸ்பெஷல் பிராஞ்ச் ஆட்களிடமும் சொன்னேன். அவர்களோ விவசாய வேலை தேடி குடிபெயர்ந்திருப்பார்கள் என்று சொல்லிவிட்டனர். ஒரு பெரும் கலவரத்தின் முன்னோடி என்பது கடைசியில்தான் தெரிந்தது.
என் ஓ.ஏ. அன்பழகன் துப்பறிவதில் கெட்டிக்காரர். அய்யா இங்க இன்னமாதிரி பிரச்சினை வரும் என்று தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பார். அதைவிட பிரச்சினையான போஸ்ட்டர் ஒட்டப் பட்ட மறுநிமிடம் அதனை பசையோடு பிய்த்துக் கொண்டு வந்து கழுவி சுத்தம் செய்து அலுவலகத்தில் கொடுத்துவிடுவார். சட்டம் ஒழுங்கு பிரிவு பார்த்த என் நண்பனும் உடனடி நடவடிக்கை எடுத்துவிடுவான்.
வருவாய் ஆய்வாளர் பணியில் நான் பாதி அளவிற்குத்தான் என் திறமையை செலுத்தினேன். மீதி பாதியை என் ஓ.ஏ. அன்பழகன்தான் ஏற்றுக்கொண்டார். அந்த அளவிற்கு அவருக்கு கணக்கு வழக்குகள் சொல்லிக் கொடுத்துவிட்டேன். அவரும் புத்திசாலியாக இருந்ததாலும் ஆர்வம் மிகுந்திருந்ததாலும் நன்கு கற்றுக்கொண்டார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் நுழையும்போதே அவர்களிடமிருந்து வரவேண்டிய அறிக்கைகள் விபரங்கள் என்று துளைத்துவிடுவார். என்னிடம் சாக்கு போக்கு சொல்லுபவர்கள் அவரைக் கண்டால் ஓடுவர். மனுக்கள் பேரில் விசாரணைகள் செய்ய வேண்டிய இனங்களில் முக்கியமானவைகளை நான் வைத்துக்கொண்டு சாதி வருமானம் போன்ற வாலாயமானவற்றை அவரிடம் தள்ளிவிடுவேன். மிக நேர்த்தியாக விசாரித்து வாக்குமூலம் பெற்றுவிடுவார். ஒரு குறை சொல்ல முடியாது. நான் படித்துப் பார்த்துவிட்டு அறிக்கை தயார்செய்வேன். அதைவிட எங்கள் இருவரின் கையெழுத்தும் ஒன்றுபோலவே இருக்கும் அதனால் யாராலும் அது யார் எழுதியது என்று கண்டுபிடிக்க முடியாது. இவ்வளவிற்கும் என்னிடம் அவர் பணியேற்கும்போது அலுவலக நடைமுறை ஏதும் அறியாதவராக இருந்தார். என்னிடம் அவ்வளவு வேலை கற்றுக் கொண்டவர் சற்று சிரமம் எடுத்து பள்ளி இறுதித் தேர்வை முடித்திருந்தால் அவர் இந்நேரம் வட்டாட்சியராக இருக்கவேண்டியவர். தலையெழுத்துதான் சரியில்லாமல் போய்விட்டது போலும்.
திரு அன்பழகனைப் பற்றி சொல்லிய நான் அவருக்கு முன் என்னிடம் பணிபுரிந்த திரு இராஜமாணிக்கத்தைப் பற்றி நினைத்தால் இன்னும் பெருமையாக உள்ளது. அவர் என்னிடம் வேலை பார்த்த நாட்களில் எப்போதும் புன்னகை மாறாத முகத்துடன்தான் இருப்பார். நான் சாப்பிடுவதை முதற்கொண்டு கண்காணித்து என்னைப் பார்த்துக்கொள்வார். அவர் பள்ளி இறுதி வகுப்பு முடிக்காமல் இருந்ததை தூண்டிவிட்டு தேர்வு எழுதவைத்தேன். அந்த ஊக்கத்தில் தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரிந்த நாலைந்து ஓ.ஏ.களும் தேர்வு எழுதி தங்களை குமாஸ்தாவாகப் பதவி உயர்வு பெறும் அளவிற்கு தகுதிப்படுத்திக் கொண்டனர். அந்த நேரத்தில் ஜில்லா பிரிந்தபோது விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊக்கப்படுத்தியதில் அவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்டத்திற்குச் சென்றுவிட்டனர். அனைவரும் வட்டாட்சியராகப் பணிபுரிந்தது வரை கேள்விப்படும்போது அந்த சந்தோஷமே தனிதான்.
தேவன் கதை படித்தவர்களுக்குத் துப்பறியும் சாம்புவைப் பற்றி தெரிந்திருக்கும். அந்த மாதிரி சில சந்தர்ப்பங்களில் நடந்துகொண்டதுண்டு. ஒரு முறை வானமாதேவியிலிருந்து மன்னர்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு குறுகிய பாலத்தில் காய்ந்துபோன ரத்தக் கறை. அங்கிருந்து பாலத்திற்கடியில் வரை இழுத்துச் சென்ற அடையாளம் வேறு. ‘ஆகா ஏதோ தப்பு நடந்திருக்கு. யாரையோ தீர்த்துக் கட்டி புதைத்திருக்கிறார்கள் அதனைக் கண்டுபிடிப்பது’ என்று முடிவு செய்து, ‘செய்ய வேண்டிய வேலையை விட்டுவிட்டு சினையாட்டுக்கு பரிச்சாரகம் செய்யும் ஆராய்ச்சியில்’ இறங்கினோம். கீழே ஒரே புதர்க்காடு. அதற்குள் சென்று ஆராய்ச்சி செய்தால் ஒன்றும் தெரியவில்லை. அப்போது அந்த வழியாக ஒருவர் வந்தார். நாங்கள் ஏதோ ஆராய்ச்சி செய்கிறோம் என்பதைப் பார்த்ததும் தமிழருக்கே உரிய சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் குணத்தின்படி சற்றுநேரம் எங்களுடன் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். சற்றுப் பொருத்து அவருக்கு ரகசியம் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆவலில். என்ன பார்க்கிறீங்க என்றார். நாங்கள் விஷயத்தை சொன்னதும். அவர் சிரித்துக்கொண்டே, ‘நேற்று மாலை ஒரு நாயை அடித்துப்போட்டுவிட்டு போய்விட்டார்கள். ஒரு ரணகளமா இருந்ததால் அதனை இழுத்துவந்து கீழே புதைத்திருக்கிறார்கள்’ என்று சொல்லி அந்த இடத்தையும் காட்டினர். இது எங்களுடன் இருந்த தலையாரிக்கும் வி.ஏ.ஓவுக்கும் தெரியவில்லை. அப்புறம் என்ன வழக்கம்போல் அசடுதான். வழிசல்தான்.
இப்படியாக சில சந்தார்ப்பங்களில் அசடு வழிந்தாலும் பல சமயங்களில் அட்வெஞ்சர்கள் செய்ததும் மறக்க முடியாததுதான். 1985-ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு பெருமழை பிடித்துக்கொண்டது. போதாக்குறைக்கு மேற்கிலிருந்து வேறு வெள்ளம் வர ஆரம்பித்துவிட்டது. தீபாவளிக்கு முன் தினம். காலையில் தாசில்தாருடன் கிளம்பி ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டே வந்தோம். எனக்கு காலையிலேயே சற்று சுரம் வேறு அடித்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் கடமைக்கு முன்பு அது எம்மாத்திரம். ஜீப்பின் பின்பக்கம் நான் படுத்துக்கொள்வதும் அவ்வப்போது இடம் பார்ப்பதுமாக சென்றது. நிலைமை மோசமாக ஆக என் சுரம் இருந்த இடம் தெரியவில்லை. மாலை திருநாரையூரில் வெள்ளம் சூழ்ந்ததாகத் தகவல் வந்தது. எப்போதும் முதல் பாதிப்பு அங்குதான் ஏற்படும். எந்த அறிவிப்பும் இன்றி தீடீரென்று திறந்துவிட்ட தண்ணீர் சூழ்ந்துவிட்டது.
முதலில் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வந்ததில் உடனடியாக உணவு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைமை. அந்த நேரத்தில் எந்த வழியும் புலப்படவில்லை. அப்படியே மன்னார்குடியில் உள்ள அனைத்து ஓட்டல், கடைகளையும் தொடர்புகொண்டு பிரட், பிஸ்க்கட், மற்றும் சாப்பிடக்கூடிய இனங்கள் என்று எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி வட்டாட்சியர் ஜீப்பில் நிறைத்துவிட்டோம். வருவாய் ஆய்வாளர் கேட்டால் இல்லை என்று சொல்லாத காலம். எல்லாவற்றையும் அடுக்கிக்கொண்டு இரவு ஏழு மணியளவில் கிராமத்திற்குப் போய்க்கொண்டிருந்தோம். டிரைவர் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டார். சாலையில் இரண்டு பக்கமும் தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் இரண்டு பக்கமும் சுழித்துக்கொண்டிருந்தது. என்னுடைய ஜவான் இறங்கி அங்கு போய் தன் முழுநீள குடையினை விட்டார். அது முழுவதும் முழுகிப்போகவே அவரைத் திரும்பி வரச்சொல்லிவிட்டு அந்த இடம் சந்தேகமாக இருக்கிறது என்று சொன்ன டிரைவர் மெதுவாக ஜீப்பினை அந்தப் பக்கம் கொண்டுபோய்விட்டார்.
கிராமத்திற்குப் போய் எல்லாரையும் கரையேற்றி பள்ளி, கோயில் என்று மேடான இடங்களில் அமரவைத்து உணவு கொடுத்துவிட்டு மறுநாள் காலை வந்து பார்க்கிறோம் பத்திரமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு தலைமையிடம் திரும்பும் நேரம். டிரைவர், ‘அந்த வழியாக போகவேண்டாம். ஏதோ சந்தேகமா இருக்கு’ என்று சொல்லவே. சுற்றிக்கொண்டு வந்து சேர்ந்தோம். இரண்டு தினங்களில் வெள்ளம் வடிந்தது. ஒரு வாரம் கழித்து ஒவ்வொரு கிராமமாகப் போய் பயிர் அழிவு கணக்கெடுப்பு செய்துவந்தோம். அப்போது நாங்கள் பார்த்து பயந்த இடத்திற்கு வந்தால் அது ஒரு மதகு இரண்டு பக்க கட்டைச் சுவர்களும் இடிந்துபோய் உள்ளே கிடந்தது. சுமார் பதினைந்து அடி ஆழம் வாய்க்கால் இருந்தது. நல்ல வேளை நாங்கள் அதில் அதிர்ஷ்டவசமாக அன்று தப்பித்தோம். அப்படி நாங்கள் அதில் கவிழ்ந்திருந்தால் எங்கள் உடல்கள் சுமார் இருபது கிலோமீட்டர்கள் கழித்து சிதம்பரத்திற்குக் கிழக்கில்தான் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த வெள்ளத்தின்போது ஒரு விசேஷம் என்னவென்றால் வெள்ள நிவாரணம் வழங்கும்போது. அனைவருக்கும் ஒரு வேட்டி சேலை வழங்கப்படும். அதனை கொள்முதல் செய்து கொண்டுவர ஒருவருக்கும் தைரியமில்லை. ஏதோ அவர்கள் தங்கள் கைவிட்டு காசு கொடுப்பது போன்று. நான் நேராக கோஆப்டெக்ஸ் மேலாளாரிடம் சென்றேன். இவ்வளவு வேட்டி சேலை வேண்டும் என்று கேட்டு என்னுடைய சொந்தப் பொறுப்பில் பெற்றுவந்து அடுக்கிவிட்டேன். பின்னர் ஒரு மாதம் கழித்து அலாட்மெண்ட் வந்தபின்னர் பணம் கொடுத்தனர். எவ்வளவு தெரியுமா? ஆறு லட்ச ரூபாய். அந்த நாளில் அவ்வளவு பெறுமானத்தை ஒரு வருவாய் ஆய்வாளரால் கடனாக சாதிக்க முடிந்தது. இன்று யாரிடமும் நாணயமும் இல்லை. ‘நா-நயமும்’ இல்லை. இப்போதெல்லாம் வெள்ள நிவாரணப் பணி என்று படம் காட்டுகிறார்கள் என்பதுதான் உண்மை. அந்த நாட்களில் வந்ததுபோன்று கடுமையான வெள்ளம் ஏற்பட்டதும் இல்லை. உண்மையான கடுமையான வெள்ளம் அதன்பின்னர் 2005-ல்தான் வந்தது.
இதிலே இன்னென்றையும் சொல்ல வேண்டும். நான் வருவாய் ஆய்வாளர் பணி முடித்து ஆறுமாதங்களில் இலங்கை அகதிகள் ஆர்.ஐ.யாக சிதம்பரத்தில் வந்து சேர்ந்தேன். அப்போது, ஏராளமான அகதிகள் சிதம்பரத்தில் பல இடங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வேட்டி புடவை வழங்க வேண்டும். சிதம்பரம் கோஆப்டெக்சில் அந்த மேலாளார் கடன் கொடுக்கத் தயாராக இல்லை. நான் முன்பழக்கத்தை வைத்து நேராக காட்டுமன்னர்கோயில் சென்று தேவையானதை கடன் அடிப்படையில் வாங்கி வந்துவிட்டேன்.
இதனால் சிதம்பரம் கோஆப்டெக்சை விட காட்டுமன்னர்கோயில் விற்பனை அந்த ஆண்டில் எங்கோ போய்விட்டது. அத்துறை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்தனர். விளைவு சிதம்பரம் மேலாளருக்கு மாற்றல் வந்துவிட்டது. தீபாவளிக்கு துணி எடுக்கப்போனபோது அங்கிருந்த ஊழியார்கள் புலம்பித் தீர்த்துவிட்டனர்.