29
தலையாரி.
கிராம உதவியாளர்களை அந்நாளில் தலையாரி என்றுதான் அழைப்பர். பின்னார்தான் பெயர் மாற்றப்பட்டது. கிராம சிப்பந்திகள் சமயத்தில் அடிக்கும் கூத்து ரொம்ப சுவாரசியமானது. கிராம கர்ணம் மணியம் பதவிகள் ஒழிக்கப்பட்ட காலம். நிருவாகம் நடைபெறுவதற்காக அலுவலக குமாஸ்த்தாக்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் பயிர் ஆய்வு செய்து அடங்கலில் பதிவு செய்யப் பணித்துவிட்டனர். அதன்படி எனக்கும் என் நண்பன் ரகமத்துல்லாவுக்கும் நாலைந்து கிராமங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. கிராமத்திற்குச்சென்று ஒவ்வொரு சர்வே நம்பராகப் போய்ப் பார்த்து அதில் என்ன சாகுபடி என்ற விபரங்களை அடங்கலில் பதிவு செய்ய வேண்டும்.
அதில் ஒரு கிராமம். நாங்கள் இருவரும் கிராம சிப்பந்திகளை அழைத்துக்கொண்டு சாகுபடி விபரம் பதிவு செய்வதற்காக கணக்குகளுடன் விளை நிலங்களுக்குள் புகுந்தோம். புலப்படப் பதிவேட்டை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நிலத்தினை அடையாளம் கண்டோம். நாம் நிற்கும் இடம் சரியானதுதானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக இந்த நிலம் யாருடையது என்றோம். அந்தப் பட்டதார் பெயர் கணக்குகளின்படி சரியாக இருந்தால் பக்கத்து பட்டாதாரார்களையும் சரிபார்த்து உறுதி செய்துகொள்ளவேண்டும். அப்புறம் அடுத்தடுத்த புலங்களை வரிசையாக அடையாளம் கண்டு சுலபமாகப் பதிவு செய்துவிடலாம். இதுதான் முறை.
“இதுக்கு பட்டாதார் யாருப்பா” – இது நாங்கள்
“அய்யா இது நல்லுவரு கொல்லிங்க” – தலையாரி 1
“இல்லிங்கயா மூத்தார் கொல்லிங்க” – தலையாரி 2
“ஏ பட்டாதார் பேர சொல்லுங்கப்பா” – நாம்
“இது நல்லுவரு கொல்லதாங்க”
“ஹே. உனக்கு தெரிமாடா. இது மூத்தார் கொல்லதாங்க”
இப்படியாக இருவரும் மாறிமாறி எம்.ஜி.ஆர். நம்பியார் ரேஞ்சில் சிலம்பம் ஆட ஆரம்பித்துவிட்டனர். இருவருக்கும் பட்டாதார் பெயர் தெரியவில்லை என்று அடுத்த புலத்தினை காட்டி பட்டாதார் பெயர் கேட்டால் அங்கும் இதே கதைதான். நல்லுவரு மூத்தாருக்கு பதிலாக மோட்டாரு காட்டாரு ரேஞ்சில் பதில்சொல்லி எங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தனர். அப்புறம் அந்த வழியாக வந்த விவசாயிகளிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டு ஒருவழியாகப் பதிவு செய்து முடித்தோம்.
உண்மையில் அவர்களுக்கு பட்டாதாரைத் தெரியுமேயன்றி அவர்களின் பெயர் விபரம் தெரியாது. பொதுவாக கிராமத்தில் நிலவும் பட்டப் பெயர்களின் அடிப்படையில் தெரிந்துவைத்துக்கொண்டு எங்கள் மண்டைக்குள் மாவாட்டிவிட்டனர்.
இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் இந்த குறிப்பிட்ட இடம் அல்லது பட்டாதார் நிலம் எங்கு இருக்கிறது என்று கேட்டால் போதும் நம்மை காடுமேடெல்லாம் சுற்றிச்சென்று பக்கத்து கிராமத்தில் போய் நிறுத்துவர். அவ்வளவு ஞானம் அவர்களுக்கு. ஆனால் பாவம் அவர்கள் மணியம் கார்ணம் ஆகியோரின் ஏவல் பணிக்காக மட்டுமே நியமனம் செய்யப்பட்டவர்கள். மற்ற விபரங்கள் எல்லாம் சரியாகச் சொல்லிவிடுவார்.
சில கிராமங்களில் அந்தந்த பட்டதார் பெயர் சொல்லி கேட்டால் தெரியாது. ஆனால் ‘சட்டி…..’, ‘வவுத்து பூனை…..’ போன்று பட்டப் பெயர் சொன்னால் மட்டும் மிகச் சரியான நபரை சொல்வர். இதில் ஒரு வினோதம் சில பட்டப் பெயர்கள் கேட்ட வார்த்தைபோல் தொனிக்கும். இருந்தாலும் அதனை பெரியவர் சின்னவர் வித்தியாசம் இல்லாமல் சொல்வர்.
இப்படிப் பலர் என்றால் சில கிராமங்களில் தலையாரிக்கு தெரிந்த விபரம் கர்ணம் மணியத்திற்கோ அல்லது தற்போதைய கிராம நிர்வாக அலுவலருக்கோ தெரியாது. அவ்வளவு விபரமாக இருப்பர்.
ஒரு கிராம நிர்வாக அலுவலரிடம் தெருவாரியாக வீடுவாரியாக பட்டாதார் பாக்கிப் பட்டியல் தயார் செய்யும்படி கேட்டேன். இது வசூல் பணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒரே வீட்டிற்கு பல முறை போகாமல் ஒரே நேரத்தில் அந்த வீட்டின் மூலம் அரசுக்கு சேரவேண்டிய பாக்கி எவ்வளவு என்பதைக் குறித்துப் பேசி வசூல் செய்ய உதவும்.
அந்த கிராம அதிகாரியோ சற்றும் கூச்சப்படாமல் தலையாரியை அழைத்துக் கேட்டார். அடுத்த நொடி ஒரு நோட்டை எடுத்து வந்து நீட்டினார் தலையாரி. அதில் பட்டாதார் விபரங்கள் பாக்கி விபரங்கள் பல ஆண்டுகளுக்கு பராமரித்திருந்தார். இப்படி சில தலையாரிகள் சூட்டிகையாக பணியாற்றுவர்.
இன்னும் ஒருபடி மேலே போய் கிராமக் கணக்குகள் அனைத்தையும் அவர்தான் எழுதிப் பராமரிப்பார். கையெழுத்து போடுவது மட்டும்தான் வி.ஏ.ஓ. வேலை. இவர்களுக்கு அரசாங்கமே தனித்தேர்வு வைத்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு முறையை அனுசரித்து வி.ஏ.ஓ.வாகப் பதவி உயர்வு கொடுக்கலாம்.
இன்னொரு தலையாரியின் கூத்து. நான் லால்பேட்டை பங்களா வாசலில் முக்கியப் பிரமுகர் வருகைக்காக காத்திருந்தேன். ஒரு தலையாரி திடீரென முளைத்து சலாமிட்டார். “எங்கப்பா போய் வருகிறீர்” என்றேன். “அய்யா வி.ஓ தாலுக்காபிஸ்ல கணக்கு கேட்டாங்கன்னு எடுத்துட்டுப் போனார் என்ன ஆபீஸ்ல வெக்கச் சொல்லிட்டு அவர் ஊருக்கு பூட்டார்” என்றார். சரியென்று விடைகொடுத்து அனுப்பிவிட்டேன்.
என்னுடன் இருந்த வி.ஏ.ஓ. “இந்தாளை நம்பி கணக்கைக் கொடுத்திருக்காரே மனிதன். கணக்கு போய் சேர்ந்தால்தான் உண்டு. இவனே ஒழுங்கா ஊருக்குப் போவானோ தெரியலை” என்று அங்கலாய்த்தார்.
அவர் சொல்லி வாய் மூடவில்லை ஒருசில தப்படிகள் நடந்தவர் எங்கள் கண் முன்பாகவே சாலையை விட்டு இறக்கத்தில் இறங்கிவிட்டார். அப்போது சாராயக் கடைகள் இருந்த காலம். அங்கு சாராயக் கடைக்குப் போய்விட்டார். எனக்கு அதிர்ச்சி. அந்த நேரம் பார்த்து வி.ஐ.பியும் வந்து குதிக்க வேறு வழியில்லாமல் அதை மறந்து எங்கள் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டோம்.
மறுநாள் மதியம் அந்த ஊர் வி.ஏ.ஓ. வந்தார். “அய்யா என் வேலை போய்விட்டது. யார் மூஞ்சிலும் முழிக்க முடியாது. ஒரு தப்பு நடந்துபோய்ட்டுது.” என்று புலம்பிக்கொண்டு அலமாடிக்கொண்டு நின்றார். உட்காரச்சொன்னாலும் கேட்கவில்லை. அப்புறம் இரண்டு மூன்று நாட்கள் கழித்துதான் தெரிந்தது நடந்த விஷயம்.
கணக்குகளை எடுத்துச்சென்ற தலையாரி எங்கள் கண் முன்பாகவே சாராயக்கடைக்குச் சென்றவர் களைப்புத் தெரியாமல் ஐந்து கிலோமீட்டர் தூரம் ரோட்டை அளந்துகொண்டே போய் நேராக, – தப்பு தப்பு, கோணல்மாணலாக என்பதுதான் சரி. – அலுவலகம் வைத்திருந்த வீட்டுக்குப் போயிருக்கிறார்.
அந்த ஊரில் பெருந்தனக்காரர் ஒருவர் தம் வீட்டின் முன்பக்கப் பகுதியை வீ.ஏ.ஓ ஆபீசுக்கு இலவசமாகக் கொடுத்திருந்தார். தலையாரி போன நேரத்தில் அந்த வீட்டு பெரிய ஆச்சி வாசலில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இவர் போதையில் கணக்குகளை அவர் முன்பாகத் துக்கி வீசிவிட்டு அவரையும் திட்டிவிட்டு தெரு முழுவதும் அலம்பல் பண்ணிக்கொண்டே போய்விட்டார். இவர் இப்படி போதை ஏற்றிக்கொண்டு திட்டுவது வழக்கம். இருந்தாலும் வயதானவர் என்பதால் மக்கள் அவ்வப்போது திட்டிவிட்டு அனுப்பிவிடுவர்.
அன்று அந்த பெண்மணி கணக்குகளை எடுத்துச்சென்று வீட்டுக்குள் வைத்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டார். மறுநாள் வி.ஏ.ஓ வந்து கணக்குகள் எங்கே என்றால் தலையாரிக்கு தாம் என்ன செய்தோம் என்பதே தெரியவில்லை. யாரும் நடந்ததையும் சொல்லவில்லை. கணக்குபற்றி துப்பு ஏதும் கிடைக்கவில்லை. வி.ஏ.ஓ நேராக தாலுக்கா ஆபீசில் போய் விசாரித்தால் அங்கும் எதுவும் தெரியவில்லை. கணக்குகள் போய்விட்டது என்று முடிவு செய்துதான் என்னிடம் வந்து நின்றார். அவருக்கு கெளரவம் போய்விடுமே என்ற கவலை. எனக்கோ கணக்கு போச்சே என்ற கவலை.
ஒரு அறிக்கை வாங்கிக்கொண்டு தாலுக்கா ஆபீசுக்கு அனுப்பிவிட்டேன். ஒரு வாரம் கழிந்தது. வி.ஏ.ஓவின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் அந்த அம்மா கணக்குகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட தெம்மாங்கு தலையாரியை வைத்துக்கொண்டு என்ன செய்வது. இதுமாதிரி நிறைய நடக்கும் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு இழுத்துப்பிடித்து ஓட்டினால்தான் வண்டி ஓடும்.
இன்னொரு சம்பவம். ஒரு வி.ஏ.ஓ கணக்குகளை எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு நான்கு தலையாரிகள் புடைசூழ பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். வி.ஏ.ஓ ஒரு பேருந்தைப் பார்த்து கை காட்டினார். பஸ்சில் ஏறி சீட்டு பிடித்து உட்கார்ந்துகொண்டார். காட்டுமன்னார்கோயில் வந்து பார்த்தால் அவர் மட்டும்தான் இறங்கினார். கணக்கும் வரவில்லை. தலையாரியும் வரவில்லை. சரி அடுத்த பஸ்சில் வருவார் என்று நினைத்து தாலுக்கா ஆபீசில் ஆஜராகிவிட்டார். இரவு வரை கணக்கு வரவில்லை. ஆபீசில் பின்னர் வருவதாக தகவல் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.
மறுநாள் காலையில் கும்பகோணம் பஸ் டெப்போவிலிருந்து தாசில்தாருக்கு போன். ஏதோ கட்டு ஒன்று பஸ்சில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்து இறங்க மறுத்துவிட்டதாகவும், இறக்கிப் பார்த்தால் பல பதிவேடுகள் இருந்ததாகவும் வேறு விபரம் இல்லை என்றும் ஆனால் சில இடங்களில் தாலுக்கா ஆபீஸ் சீல் போட்டிருந்ததாகவும் அதை வைத்து போன் செய்வதாகவும் தகவல். தாசில்தாருக்கு கும்பகோணத்திற்கு ஏன் நம் ரிக்கார்டு போகப்போகிறது. மேலும் புகார் ஏதும் வரவுமில்லையே என்ற நினைப்பில் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த குமாஸ்த்தா கிளப்பிய சந்தேகத்தில் கொஞ்சம் சூடு பிடித்து வி.ஏ.வை வரவழைத்துவிட்டனர். அப்புறம் அவரை கும்பகோணத்திற்கு அனுப்பி கட்டுகளை சரிபார்த்து வாங்கி வந்தனர்.
நடந்தது இதுதான். வி.ஏ.ஓ. காட்டுமன்னார்னோயில் போகும் பஸ்சை நிறுத்தி முன்பக்கம் ஏறிவிட்டார். அந்த நேரத்தில் அதன் பின்னாலேயே ஒரு கும்பகோணம் போகும் பேருந்து வந்துள்ளது. நம் தலையாரிகள் சேர்ந்து கட்டினை கடைசி சீட்டுக்கு அடியில் ஏற்றிவிட்டனர். யாரும் பஸ்சில் ஏறவில்லை. இவர் போவார் என்று அவரும் அவர் போவார் என்று இவரும் போட்டிபோட்டுக்கொண்டு யாருமே வண்டி ஏறவில்லை. கடைசியில் வி.ஏ.ஓ. கிழக்கிலும், டிக்கெட் எடுக்காமலேயே கணக்கு தெற்கிலுமாக பயணம் செய்துவிட்டது.