"

3

கவர்னர் வருகிறார்


நான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த நேரம். முதலில் தட்டச்சுப் பிரிவில்தான் சேர்ந்தேன். எங்கள் சூப்பரிண்டெண்டெண்டு ஒரு முக்கியமான அறிவுரையைச் சொன்னர்.

சில தினங்கள் முன்பாக கவர்னர் வருவதாக தகவல் வந்துள்ளது. உடனே அதற்கான முன்னேற்பாடுகளின் துவக்கமாக கவர்னர் மாளிகை செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கவர்னரின் உணவுப் பழக்கம் குறித்து விபரம் தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியரின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  ஆனால் அதில் இருந்த வாசகம் ‘Governor’s good habits’ விபரம் தெரிவிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது. ‘food habit’ என்பதற்குப் பதிலாக கையெழுத்து புரியாமல் ‘good habit’ என்று தட்டச்சு செய்துவிட்டார் அந்த டைப்பிஸ்ட். அதனை யாரும் கவனிக்காமல் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.  வந்தது வினை.  கவர்னர் மாளிகையிலிருந்து பிடிபிடி என்று பிடித்துவிட்டார்கள். விளைவு, ஊருக்கு இளைத்தவர் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போன்று டைப்பிஸ்ட்டுக்கு மாறுதல் கொடுத்துவிட்டார்கள். கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட்டவர்களுக்கு ஒன்றுமில்லை.

கவர்னர் வருகிறார் என்றால் உடனே பல்வேறு பணிகள் நடக்கும் அந்தக் கூத்துக்கள் எல்லாம் பின்னாளில்தான் நான் கண்டு கேட்டு அனுபவித்தும் இருக்கிறேன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு முறை கவர்னர் வந்தார். அப்போதெல்லாம் வி.ஐ.பி வருகை என்றால் ஒரே கொந்தளிப்பாக இருக்கும் ஏதோ ஆக்ஸிடென்ட் ஆன இடத்தில் காப்பாற்றுவதற்கு ஓடி ஓடி வேலை பார்ப்பது போல் வட்டாட்சியர் பறப்பார். மேலேயிருந்து உத்திரவுகள் பறக்கும். காலையில் ஒன்று சொல்வர். மாலையில் ஒன்று சொல்வர். போர்முனையில் இருப்பதுபோல்தான் நடவடிக்கையெல்லாம் இருக்கும்.

கவர்னர் வருகை தொடர்பாக பணி செய்ததால் அடுத்த தணிக்கைக்கு பதிவேடுகளை சரி செய்து வைக்கிறேன் என்று குமாஸ்தாக்கள் தவணை வாங்கிவிடுவர்.

ஒரு கவர்னர் வந்தார். எல்லா முஸ்தீபுகளும் செய்யப்பட்டு விட்டது. இரவு எட்டுமணி இருக்கும். வட்டாட்சியருக்கு கவர்னரின் தனி அலுவலரிடமிருந்து வந்தது ஒரு உத்திரவு. கவர்னருக்கு காலையில் டிபனுக்கு இடியாப்பம் வேண்டும் என்று.  கவர்னருக்கு சாப்பாடு எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் ஏற்பாடு செய்வர். ஆனால் நேரம் கடந்த நிலையில் ஏதும் ஏற்பாடு செய்ய இயலாத நிலைமை.  வட்டாட்சியர் நேராக வந்தார் அலுவலகத்திற்கு.  நாங்கள் எல்லாம் கிராமத்தில் வயல்வெளியில் ஆடு மாடு கிடைபோடுவது போன்று உட்கார வைக்கப்பட்டிருந்தோம். வட்டாட்சியர் தன் பரிவட்டங்களின் ஆலோசனை கேட்டார். யாருக்கும் புரிபட வில்லை. தோன்றியது ஒரு குயுக்தியான யோசனை.

கூப்பிட்டார் டபேதாரை. “நாளை விடிகாலையில் எனக்கு இடியாப்பம் வேண்டும்”.

அவர் தலையைச் சொரிந்தவாறே. அய்யா, ஏற்பாடு செய்ஞ்சிட்டா போச்சு கையோடு இரண்டு அலுவலக உதவியாளர்களை அழைத்தார்.

“ஏண்டா இவனே அய்யா இடியாப்பம் கேட்கிறாங்க என்ன பண்ணலாம்.” பதில் பாசிட்டிவாக வந்தது.

மறுநாள் அதிகாலை அலுவலக டிபன் கேரியரில் இடியாப்பம் வந்துவிட்டது. வட்டாட்சியர் “யாரும் மூச்சுவிடக்கூடாது நேராக பங்களாவில் கொண்டுபோய் கவர்னர் டபேதாரிடம் கொடுத்துவிட்டு வந்துவிடு” என்று சொல்லிவிட்டார்.

முன்னதாக முக்கியப் பிரமுகர்கள், ஓட்டல்கள் எல்லாம் கேட்டுப் பார்த்து கிடைக்காத இடியாப்பம் எப்படிக் கிடைத்தது.

அந்த நாளில் விடியற்காலை நான்கு ஐந்து மணியளவில் தெருவில் “இடியாப்பேய்” என்று குரல் கேட்பது சிதம்பரத்தில் வழக்கம். ஒரு ஆள் சுமார் மூன்று  அடிக்குமேல் வட்டமான ஒரு மூங்கில் தட்டில் ஒரு வெள்ளை துணியினை வைத்து அதில் இடியாப்பம் அடுக்கி அதன்மேல் ஒரு மூங்கில் தட்டு மூடி இடது கையில் ஏந்திக்கொண்டு மறு கையில் ஒரு பாத்திரமும் ஏந்திக்கொண்டு பல தெருக்களில் வலம் வருவார்.  நான்கூட சிதம்பரம் வந்த புதிதில் இந்த நேரத்தில் விற்கிறாரே இதென்ன அதிசயம் என்று எண்ணியதுண்டு ஆனால் அந்த அதிசயம் இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் போலும்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் கவர்னர் விரும்பி சாப்பிட்டதாகவும். பாராட்டியதாகவும் டபேதார் சொன்னதாக வட்டாட்சியர் வந்து அலுவலகத்தில் சொன்னதுதான்.

ஆமாம். நம்மைப்போல் சாமான்யர்கள் ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிடக்கூடிய சுவைமிக்க உணவுகளை எல்லாம் பெரிய இடத்தில் உள்ளவர்கள் எங்கே சாப்பிட்டிருக்கப் போகிறார்கள்.

ஒரு முறை கவர்னர் வரும் நேரத்தில் மழை பெய்யும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. மழை பெய்யவில்லை. மூட்டம்தான்.  உடனே குடை ஏற்பாடு செய்யும்படி வட்டாட்சியருக்கு உத்திரவு வந்துவிட்டது. ஏதோ கவர்னருக்கு ஒரு குடை ஏற்பாடு செய்யச்சொன்னதாக எண்ணிவிட வேண்டாம். மழையே கொட்டினாலும் கவனர்ருக்கு என்ன குடையா தேவை? அவர் நனையாமல் பங்களாவில் போய் இறங்கி விடப்போகிறார். எல்லாம் சுற்றி வருகிற அதிகாரிகள் பட்டாளத்திற்குத்தான். உடனே கணக்குப்போட்டார்கள் இருபத்தைந்து குடைகள் வாங்கிவிட்டனர்.

கவர்னர் வந்தார். மழை வரவில்லை. கவர்னர் போனார் மழைமேகமும் கூடவே போய்விட்டது. குடைகளை என்ன செய்வது?

வட்டாட்சியர் நேராக கடைக்காரரை கேட்டுப்பார்த்தார். அவரோ விற்ற பொருள்கள் தோஷம் பட்டிருக்கும் என்பதால் வாங்க மறுத்துவிட்டார். பேரம் பேசிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. இருபத்தைந்து குடைகளும் அலுவலகத்திற்கு வந்து இறங்கிவிட்டது. அவ்வளவுதான் எல்லா வருவாய் ஆய்வாளருக்கும் ஒரு குடை கொடுத்துவிட்டார். அதிகாரிகள் மட்டத்தில் கோட்டாட்சியர் முதல் துணை வட்டாட்சியர் வரை ஒரு குடை கொடுத்துவிட்டனர். மீதமிருந்ததை அலுவலகத்தில் செல்லப் பிள்ளைகளாக இருக்கும் உதவியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.  எப்படியோ குடைகள் விற்காமலே தீர்ந்துவிட்டது.  பின் என்ன! இலவசமாக யானை கொடுத்தால் வாசலில் ஒன்று தோட்டத்தில் ஒன்று என்று கட்டிக் கொள்வோம். காசுக்கு என்றால் யாருக்கு வேண்டும்!

அப்புறம் குடைக்கான செலவு என்னாச்சு என்கிறீர்களா.  அதுதான் வருவாய் ஆய்வாளர்கள் பொதுச் செலவில் சேர்ந்துவிட்டதே. ஆம்.  ஒரு விஷயம் உங்களுக்குப் புரியாது என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு முக்கியப் பிரமுகர் வந்தாலும், மற்றும் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் இன்னபிற அதிகாரிகள் கேம்ப் வந்தாலும் அவர்களின் சாப்பாடு முதல் பல்வேறு செலவுகள்வரை வருவாய் ஆய்வாளர்தான் பார்க்கவேண்டும். மாதம் முடிந்ததும் அந்த மாதத்தில் அவர் என்னென்ன செலவு செய்தார் என்று கணக்கினை வட்டாட்சியரிடம் கொடுத்துவிடுவார்.  மற்றவர்கள் போன்று வருவாய் ஆய்வாளர்கள் எல்லாம் நேராக அலுவலகத்தில் வந்து ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்து போட்டு சம்பளத்தை பெற்றுச்சென்றுவிட முடியாது.  வட்டாட்சியர் வரும் வரை காத்திருந்து மீட்டிங் நடக்கும். அப்புறம் வரவு செலவு கணக்கு சொல்லப்படும்.  அதற்கு ஒவ்வொரு வருவாய் ஆய்வாளரும் எவ்வளவு ரூபாய் பங்கு தரவேண்டுமென்று வட்டாட்சியர் முன்பாக முடிவாகும். அதனை சம்பளப் பட்டுவாடா செய்யும் அலுவலர் பிடித்துக் கொண்டு மீதியைத்தான் வருவாய் ஆய்வாளரிடம் கொடுப்பார். பணத்தைக் கொடுத்துவிட்டு பின்னர் பங்கு கேட்டு வாங்கும் பேச்செல்லாம் கிடையாது. வருவாய் ஆய்வாளர் பாட்டுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டால் என்ன செய்வது.

அதைவிட அலுவலகத்தில் யாருக்குமே தாம் வரும் வரையிலும் சம்பளம் கொடுக்காதே என்று உத்திரவிட்டு ஆசுவாசமாக இரவு ஏழு மணிக்குமேல் அலுவலகத்திற்கு வந்து மீட்டிங் நடத்திய தாசில்தாரும் உண்டு என்பது சிறப்புத் தகவல்.

அதுசரி, இப்படி சம்பளத்திலிருந்து வருவாய் ஆய்வாளர்களிடம் பிடித்தம் செய்தால் அது தர்மமா நியாயமா என்றெல்லாம் கேட்காதீர்கள் இது அந்நாளில் எழுதப்படாத சட்டம். யாராவது கசந்துகொண்டு பணம் கொடுத்தால்கூட அவர் அதற்கான விலையை கொடுக்கவேண்டியதுதான். அப்புறம் எப்படி வருவாய் ஆய்வாளர்கள் நேர்மையாக இருக்கமுடியும்.

உன் யோக்கியதை என்ன என்கிறீர்களா நானும் என் நண்பன் ரகமத்துல்லாவும் வைராக்யத்திற்காக காதை அறுத்துக் கொண்டவர்கள். அதிலும் நான் எனது கடைசி ஆறு மாத கடனை அடைப்பதற்காக மதியம் ஒரு வேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்து மிச்சம் பிடித்து பணியிலிருந்து விடுபடும்போது யாருக்கும் கடன் வைக்காமல் வந்தேன் என்றால் நம்பவா போகிறீர்கள்.  ஆனால் ஒரு சந்தோஷம் எல்லாரும் எங்களை ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளனர்.  யாருக்குக் கிடைக்கும் அந்த பேரு!