"

30

வசூலோ வசூல்.


நான் வருவாய் ஆய்வாளராக இருந்தபோது ஒரு ஊரில்தான் அதிக பாக்கி இருந்தது.  காரணம் அந்த ஊரில் உள்ளவர்களுக்கு சுற்றுப்பட்ட பதினைந்துக்கு மேற்பட்ட கிராமங்களில் நிலம் இருந்தது.  அதனால் தடுக்கி விழுந்தால் அங்குபோய்தான் வீடுவீடாக வசூல் செய்வோம்.   அந்த ஊர்க்காரர்கள் மிகவும் நல்லவர்கள், எனக்குப் பிடித்தவர்கள், என்னைப் பிடித்தவர்கள் என்றால் துளிகூட பொய் இல்லை. ஆனால் எந்த ஊரிலும் ஒருசில துருப்பிடித்தவைகளும் இருக்குமல்லவா. அதிகாரிகளோ அரசு பாக்கியை எந்த முறைகளைக் கையாண்டாகிலும் வசூல் செய்யவேண்டும் என்று குறிக்கோள் உள்ளவர்கள்.  சில சமயங்களில் சிலரிடம் கடுமையாகக்கூட நடக்க வேண்டிவரும்.

அதில் ஒருவர். அவர் ஒரு வியாபாரி.  அந்த ஊரிலேயே வெளிநாட்டுப் பொருள்கள் வாங்கி விற்பது, வெளியூர்களுக்கு அனுப்புவது. நோட்டு மாத்துவது என்று பெரிய ஆள்.  அவருக்குப் போகத்தான் மற்றவர்களுக்குப் பொருள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் அவரது மகள் திருமண முறிவு சம்பந்தமாக ஒரு பெரும் தொகை அவர் அரசுக்குச் செலுத்த வேண்டும்.  அதனைக் கட்டும்படி கேட்டுச் சென்றால் நாம் போனவுடன் மிக அன்பாக வரவேற்று உபசாரிப்பார்.  ஹால் முழுக்க போட்டோக்கள் மாட்டப்பட்டிருக்கும்.  தம் பெருமைகளை விவரிப்பார்.  இதோ இந்தப் படத்தில் நான் இன்னாருடன் இருக்கிறேன் பாருங்கள். இன்னாருக்கு தொப்பிக்கு செண்ட் நான்தான் சப்ளை செய்கிறேன். என்றெல்லாம் அளப்பார்.  நமக்கும் அவ்வளவு பெரிய மனிதனிடம் கடிந்து வசூல் செய்வது எப்படி என்று சிறிது அச்சம் வரும்.

சில சமயம் அதெல்லாம் சரிதான் கட்டவேண்டிய பணம் என்னாச்சு என்றால் “அந்தப் பணம் நான் கட்ட வேண்டியதில்லை. என் மகள்தான் கட்டவேண்டும். அதோ இருக்கிறார். அவர்கிட்ட கேட்டுக்கொள்ளுங்கள்” என்று நம்மை நக்கலடிப்பார்.  ஆறுமாதத்தில் முப்பது நாற்பது முறையாவது போய் கேட்டிருப்பேன். ஒருநாள் அந்த ஊர் வி.ஏ.ஓ. ஒரு தகவல் சொன்னார். “அந்த ஆள்கிட்ட காசு நிறைய இருக்குங்க. டாலர் நோட்டெல்லாம் மாத்துறான். ஆனா எப்ப போனாலும் கையில் காசு இல்லைன்னுதான் சொல்வான். வெளிநாட்டுப் பணம் கணக்கில்லாமல் அவன் மூலம்தான் போகிறது” என்றார்.

எனக்கோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.  அந்த ஆளோ செல்வாக்கு மிகுந்தவர். நம்மால் ஒன்றும் ஆகாது என்று கணக்குப் போட்டேன்.  ஆபீசுக்கு வந்ததும் ஒரு நீளமான ரிப்போர்ட் தயார் செய்தேன். அவர் இன்னின்ன வியாபாரம் செய்கிறார்.  இருந்தாலும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணைக் காட்டி அவரிடம் வசூல் செய்துகொள்ளும்படி கிண்டல் செய்கிறார்.  அவரது மகளுக்காக அவர்தான் வாதாடி அந்த பணமும் அவருக்குத்தான் வந்துள்ளது. எனவே அவர்பேரில் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கவேண்டும் என்று முழுநீள திரைக்கதை வசனம் எழுதி அனுப்பிவிட்டேன்.  ஆனால் நான் என்னை அறியாமலே ஒரு காரியம் செய்தேன்.  அந்த அறிக்கையின் நகலை கஸ்டம்ஸ் கலெக்டர் சென்னை என்று மொட்டையாக விலாசம் அடித்து அனுப்பிவிட்டேன்.

அந்தக் கடிதம் போய்ச்சேருமா என்பதே கேள்விக் குறி.  ஆனால் பத்து நாட்கள் கடந்தது.  வி.ஏ.ஓ. ஓடிவந்தார். லால்பேட்டையில் ரெயிடு நடக்கிறது என்னை கூப்பிடுகிறார்கள். என்ன செய்வது என்றார்.  அவரது கடமையைச் சொல்லி போய் எதுவாக இருந்தாலும் நடந்தது நடந்தபடி எழுதினால் கையெழுத்து போடுங்கள் என்று அறிவுரைசொல்லி அனுப்பி வைத்தேன்.

என் அறிக்கை நகல் போனவுடன் கஸ்டம்ஸ் துறையினர் விழித்துக் கொண்டனர். உடனே பல ஆட்களை அனுப்பி வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் எல்லா கடைகளையும் நோட்டம் விட்டு விபரம் சேகரித்துவிட்டனர்.  அதுவரை அந்த ஊரில் அப்படி ஒரு வியாபாரம் நடப்பதே அந்தத் துறைக்குத் தெரிந்திருக்கவில்லை.  குறிப்பிட்ட நாளில் எல்லா கடைகளையும் காலை திறக்கும்போதே மடக்கிவிட்டனர்.

நம்ம உதார் பேர்வழி என்ன ஆனார் என்கிறீர்களா.  அவர் வீட்டில் பெட்டி பெட்டியாக பொருட்கள் மற்றும் கட்டுக்கட்டாக வெளிநாட்டு ரூபாய் என்று அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள்.  ஆயிரம் ரூபாய் பாக்கியை ஏமாற்றி லட்ச ரூபாய் இழந்த கதையானது.  அப்புறம் மீண்டும் நாங்கள் வசூலுக்கு அவரிடம் போனபோது எவனோ புகார் போட்டுட்டான். இப்படி நஷ்டமாகிவிட்டது என்று எங்களிடமே புலம்பினார்.  எங்களைப்போன்ற ஏழைகளின் கண்ணீர் ஒருநாள் அவரைச் சுட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

இந்த வரி வசூல் பணி இருக்கிறதே அது ஒரு விநோதமான நடைமுறை.  மேலே இருக்கிற அதிகாரிகள் கீழே இருப்பவர்களை டார்ச்சர் செய்வதற்கான ஒரு வழிமுறை.  தங்கள் எதிர்பார்ப்புக்கள் சரிவராத நிலையில் அதிகாரிகள் அவனைப் பழிவாங்க அவர் பேரில் நடவடிக்கை எடுக்கவென்று ஏற்பட்ட ஒரு அஸ்த்திரம்.  அந்த அஸ்த்திரத்திற்குப் பயந்து தன் வஸ்த்திரத்தை போட்டுவிட்டு தப்பி ஓடியவர்களும் உண்டு.  எவ்வளவு நாட்களுக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்?

சிலர் அந்த அஸ்த்திரத்தை வழிமாற்றிவிட்டு குளிர்காய்ந்ததும் உண்டு.  தோல் கொஞ்சம் தடிமனாக இருந்தால் எல்லாத்தையும் துடைத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

குரூப் கலெக்ஷன் என்று ஒன்றை அறிமுகம் செய்தோம்.  முதலில் ஒரு குறிப்பிட்ட ஊரில் யார்யார் பாக்கிதார் என்று பட்டியல் தயார் செய்தோம். அதனை ஒருங்கிணைத்து கும்பலாக பல கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் சேர்ந்துகொண்டு அந்த ஊரில்போய் முற்றுகையிடுவோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.  இப்படியாக சிதம்பரம் நகரில் பாக்கிவைத்துள்ள காட்டுமன்னார்கோயில் பட்டாதாரர்கள் பட்டியலைத் தயார் செய்தோம். தாசில்தார் தலைமையில் ஒருவாரம் படையெடுத்தோம்.  அப்போதைக்கப்போது அவரிடம் வந்து இன்னின்னார் இவ்வளவு வசூல் செய்தோம் என்று கணக்கு தெரிவித்தோம்.

இப்படியாக ஒரு பட்டாதாரர் -முன்னாள் சண்டியர்- யாரும் அவரிடம் பேசக்கூடப் பயப்படுவர். தற்போது வயதும் அமைதியும் அதிகமாகிவிட்டது.  அவர் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்திருந்தார்.   நாங்கள் போய் ‘நிலைமை கெடுபிடியாக இருக்கு உடனே கட்டுங்கள்’ என்று நெருக்குதல் செய்ததில் மூவாயிரம் ரூபாய் நாளை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் மீதியை வாரம் தோரும் ஆயிரம் என்று செலுத்திவிடுகிறேன் என்று உத்திரவாதம் கொடுத்துவிட்டார்.  நாங்கள் தாசில்தாரிடம் இன்னார் இவ்வளவு செலுத்துகிறார் என்று தகவலைச் சொன்னதுதான் தாமதம்.  தாசில்தாரோ “அவரா? இங்கேயா இருக்கிறார்? அவர் எனக்கு ரொம்ப வேண்டியவராச்சே. நான் வந்திருந்தால் பூரா தொகைக்கும் பில் போட்டிருக்கலாமே. உடனே வாங்க” என்று எங்களையும் அழைத்துக்கொண்டு நேராக அவர் வீட்டுக்குப் போனார்.  அங்கே அவர் ஓய்வாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  நம்ம அய்யா வண்டியை விட்டு இறங்கியதும். அவிழ்த்துவிடப்பட்ட கன்றுக்குட்டி பசுவிடம் ஓடுவதுபோல் இரண்டு கைகளையும் நீட்டியவாறே முகமெல்லாம் பல்லாக ஓடிப்போய் தழுவிக்கொண்டார்.  இருவரும் குசலம் விசாரித்துக்கொண்டனர்.  நாங்கள் பில் போடத் தயாராக இருந்தோம்.

தாசில்தார் ஒரு கேள்வி, ஒரேஒரு கேள்விதான் கேட்டார். “வெள்ளாமை- யெல்லாம் எப்படி இருக்கு?”  அவரோ  மூக்கைச் சிந்தி தாசில்தார் சட்டையிலேயே துடைத்துவிட்டார்.  இவரு அவருக்கு சாதகமாக சேம்சைடு கோல் அடித்து “பாவம் ரொம்ப கஷ்டப்படுகிறார்.  விரைவில் கட்டிவிடுவார்” என்று எங்களுக்கு சொல்லிவிட்டு வண்டியில் ஏறி வந்துவிட்டார்.

எங்களிடம் அவர் கட்டுவதாக சொன்ன மூவாயிரமும் போனதோடு எப்போது கேட்டாலும் நான் தாசில்தாரிடம் பேசிக்கிறேன் என்று எங்களைத் துறத்திவிடுவார்.  அவரை வைத்து அந்த கிராமமே வரி செலுத்துவதை மறந்துவிட்டது.  எந்தப் பட்டாதாரிடம் கேட்டாலும் பெரியவரிடம் வசூலித்து விட்டீர்களா என்று கேட்பர்.

இன்னொரு பட்டாதாரர்.  அவர் விவசாய சங்கத்தில் முக்கிய புள்ளி.  வரி செலுத்தாதவர்.  அவரிடமும் பல ஆயிரம் பாக்கி.

எங்கள் கோட்டாட்சியரோ ரொம்ப நேர்மையானவர். தண்ணீர், சாப்பாடு எல்லாமும் வீட்டிலிருந்து எடுத்து வருபவர்.  தானே தமது துணிகளை துவைத்து அணிவார். அவர்தான் திரு மெய்வழி கோபாலகிருஷ்ண அநந்நர்.

அவர் முகாம் வந்துவிட்டு தலைமையிடம் திரும்பும் வழியில் ரைஸ்மில் தணிக்கை செய்வதற்காக என்னை தனது ஜீப்பில் அழைத்துக்கொண்டு திரும்பினார்.  நானும் ஒவ்வொரு இடமாக காட்டிக்கொண்டு வந்தேன்.  ஒரு மில்லில் கணக்குகளை வண்டியில் உட்கார்ந்துகொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.  நான் பின்பக்கம் நின்றுகொண்டிருந்தேன். எனக்கோ தாகம் தாங்கமுடியவில்லை.  ஈப்பு ஓட்டுனர் அங்கே இருந்த ஒரு அடி பம்பில் தண்ணீர் அடித்துத்தர முன்வந்தார்.  நான் இந்த கிராமத்தினர் வரி செல்லுத்தக்கூடாது என்று இருப்பதால் இந்த கிராமத்தில் தண்ணீர்கூட குடிக்கமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.   அது எப்படித்தான் அதிகாரி காதில் விழுந்ததோ தெரியவில்லை.  கணக்கு தணிக்கை முடித்துவிட்டு என்னை   விசாரித்தார்.

‘அவரிடம், அலுவலகத்திலும் ஒத்துழைப்பதில்லை. எந்த பகுதி அலுவலரும் எனக்கு வசூல் பணிக்கு வருவதில்லை.  என் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஆய்வு செய்வதில்லை.’ என்று என் கையறு நிலைமையை சொல்லும்போதே அழுதுவிட்டேன்.  பின்னர் பலமுறை அதைப்பற்றி வெட்கப்பட்டதுண்டு.

என் அதிகாரி சொன்னார் “இதோ பாருமையா நீர் ஆள் வேண்டுமென்கிறீர். அதைவிட உமக்கு ஒரு ஜீப் தருகிறேன். அது எல்லாத்தையும் விட சிறப்பா வேலை செய்யும்”.  மறுநாள் டி.எஸ்.ஓ. ஜீப்பை எனக்கு வழங்கி உத்திரவு வந்துவிட்டது. அப்புறம் என்ன ஆட்களை அழைத்துக்கொண்டு கிராமங்களில் கலக்கியது தனிக்கதை.

அழுதுவிட்டதைக் கண்டதும் என்ன தோன்றியதோ.  அதிகாரி கேட்டார் “இந்த ஊரிலேயே அதிகம் பாக்கி வைத்துள்ள பட்டாதாரர் யார்” என்று.  என் வி.ஏ.ஓ. அழும்பு பட்டாதார் திலகத்தைக் காட்டிவிட்டார். எனக்குள் சற்று பயம். ‘சங்கத்தில் இருக்கிறானே ஏதாவது வம்பு அடித்துவிட்டால் என்ன செய்வது’ என்று.

இந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருக்கிறார்களே. அவர்களுக்கு ஒரு அடிப்படைக் குணம் உண்டு. தனக்கு ஒத்துவராத ஆட்களை இப்படி அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து மோதவிட்டுவிடுவர். அப்புறம் எது கேட்டாலும் அய்யாகூட ஏற்கனவே வந்தீர்களே அப்படிப்பட்ட ஊரில் எப்படி வசூலாகும் என்று அதையே காட்டித் தப்பித்துக்கொள்வர்.  அப்படித்தான் இப்போதும் நடந்தது.

அதிகாரி, “ஏறுங்கள் வண்டியில்” என்று கூட்டிக்கொண்டு நேராக அவரது ரைஸ் மில்லுக்குப்போய் வண்டியை நிறுத்தினார்.  ஓரே கூட்டம்.  அறவை ஜரூராக நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு வாலிபன் வந்து வணக்கம் செலுத்தினார்.  நான் யார் என்று தெரியுமா என்று கேட்டார். அவர் “தாங்கள் ஆர்.டி.ஓ என்று தெரியும். நான் மயிலாடுதுறையில் படிக்கும்போது நீங்கள் அங்கு கோட்டாட்சியராக இருந்தீர்கள் உங்களைத் தெரியும்” என்றார்.

அதிகாரி இறங்கி ரைஸ்மில்லை சுற்றி நோட்டம் விட்டார்.

என்பக்கம் திரும்பி “என்னையா ஆர்.ஐ., இவர் எவ்வளவு நிலவரி செலுத்தவேண்டும்”

நான் பவ்யமாக கொஞ்சம் பயத்துடன் “அவர் பத்தாயிரத்துக்கு மேல் பாக்கி வைத்திருக்கிறாருங்க.”

அங்கேயிருந்த ஒரு ஆயில் இஞ்சினைக் காட்டி “என்னையா துப்புகெட்ட ஆர்.ஐ. நீர். யானை படுத்திருக்கிறமாதிரி ஒரு ஆயில் இஞ்சின் இருக்கு துக்கி வெளியே போடவேண்டியதுதானே. அதை விட்டு தைரியம் இல்லாம என்ன உத்தியோகம் பார்க்கிறீர்.  நீர் ஜப்தி செய்யும் நான் கலெக்டரிடம் பேசிக்கிறேன்.”

அங்கிருந்த எல்லாருக்கும் அதிர்ச்சி. ஊரிலேயே பெரிய மனிதர். விவசாய சங்கத்துக்காரர்.  எல்லாரையும் வரி செலுத்தாதீர்கள் என்று முன்னின்று தடுப்பவர்.  அவர் மில்லிலேயே வந்து அதிகாரி இப்படிப் பேசினால்….

அதிகாரியோ மகாராஜா போல் ஒரு தலைப்பாகை. அதில் ஒரு பதக்கம் என்று ஏக அந்தஸ்த்தாக இருந்தார்.  அதுவேறு கொஞ்சம் அச்சத்தை ஊட்டியிருக்க வேண்டும்.

வாலிபன் வேறு யாருமல்ல பாக்கிவைத்துள்ள பேர்வழியின் திருக்குமாரன்தான்.  ஏற்கனவே மயிலாடுதுறையில் கல்லுரியில் படித்தபோது ஒரு பிரச்சினை ஏற்பட்டு அங்கு வந்த நம் அதிகாரி செமையாகப் பிடித்துவிட்டிருக்கிறார்.  அவரது நேர்மை தைரியம் கடுமை எல்லாம் நம் வாலிபருக்கு மனதில் பதிவாகியிருந்ததால் வாலிபர் பயந்துவிட்டார்.

தாம் தந்தையிடம் சொல்லி தொகை செலுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டார்.  ஆனால் அதிகாரியோ அடுத்து கணக்குப் பார்த்தார். பதிவு செய்யாமல் பல மூட்டை நெல் இருந்தது.  ஆனால் கூடவே அதற்கான நபர்கள் அறவைக்கு வந்து காத்திருந்தனர்.  விபரத்தை எழுதி வாக்குமூலம் பதிவு செய்துகொண்டார்.  அறவைக்கு வந்தவர்களை அழைத்து மில்லை சீல் வைக்கும் விபரம் சொல்லி பக்கத்து மில்லில் அறைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டு என்னை அழைத்து மில்லை என் கையாலேயே பூட்டி சாவியை வாங்கிக்கொண்டார்.  கணக்குகளையும் அள்ளிக்கொண்டு நேராக மெயின்ரோடு வந்து சாவியை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

பட்டாதாரர், மகன் கொடுத்த பேதி மருந்தில் சங்கம் பரிவாரம் எல்லாத்தையும் மறந்துபோய்  நேராக கோட்டாட்சியரிடம் ஆஜராகி விரைவில் செலுத்திவிடுகிறேன் என்று மன்றாடியுள்ளார்.  அதிகாரியோ நிலவரி பாக்கி பற்றியெல்லாம் கவலையே படவில்லை. “உங்க மில் தொடார்பா ஆர்.ஐ. ரிப்போட் வந்ததும் நான் பரிசீலித்து உத்திரவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டார் என்னை போனில் கூப்பிட்டு அவரை சரியாக டீல் செய்துகொள்வது உனது பொறுப்பு என்று எனக்கு முழு அதிகாரமும் கொடுத்துவிட்டார்.  அப்புறம் என்ன.

அவர் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு என் அலுவலக வாசலில் வந்து ஆர்.ஐ.யை பார்க்கவேண்டும் என்று நின்றதும் என் ஓ.ஏ. ‘அய்யா இன்னார் வந்திருக்கார்’ என்பார்.  நான் ஏதோ கலெக்டர், மந்திரி போன்றோர் வந்தால் பரபரப்பாவது போல் போட்டது போட்டபடி நேராக தாலுக்கா ஆபீசுக்கு போய்விடுவேன்.  அங்கு வந்து கேட்டுக்கு அருகிலேயே நிற்பார்.  அவர் கண்ணில் படாமல் நேராக கேம்பு போய்விடுவேன். இப்படியாக ஒருவாரம் கழிந்தது.  ஒருநாள் என் ஓ.ஏ. மூலம் பணம் கட்டிவிடுவதாகவும்  மில் சாவி தரவேண்டும் என்றும் ஆர்.டீ.ஓ-வுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் தூதுவிட்டார்.  சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை வரவழைத்து அவர் பாக்கி முழுவதையும் கணக்குப் போட்டு பைசா சுத்தமாக வசூல் செய்தபின்னர்தான் அவருக்கு சாவியை ஒப்படைத்தேன்.

அப்போதுதான் என் ஓ.ஏ. கேட்டார் அவரைப்பார்த்து  “நாங்கள் எத்தனை முறை உங்கள் வீட்டு வாசலில் பிச்சைக்காரன்போல் வந்து நின்றிருப்போம். நீங்கள் உள்ளே இருந்துகொண்டே பெண்களை விட்டு இல்லை என்று சொன்னீர்களே” என்று.  கடைசியில் ஓ.ஏ.விடம்கூட மன்னிப்புக் கேட்கும் நிலைமை வந்துவிட்டது அவருக்கு.

ஒரு நேர்மையும் தைரியமும் நிறைந்த அதிகாரி நமக்கு அமைந்து விட்டால் புல்லைக்கூட மந்திரித்து ஏவல் விடலாம்.  ஆனால் ஒன்று. அங்கே நாமும் நேர்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த ஏவல் நம்மீதே பாய்ந்துவிடும்.

ஒரு கிராமம். அதற்கு துணை கிராம அந்தஸ்த்துதான்.  வீராணம் ஏரியின் உள் வாயில் அமைந்திருந்ததால்  யாரும் அங்கு போகவும் மாட்டார்கள்.  கோரிக்கை எதும் வரவும் வராது. அமைதியான அழகான கிராமம். அங்கே ஒரே அரசு அலுவலர் அந்த ஊர் தலையாரி மட்டுமே. அப்புறம் என்ன அவர்தான் அதன் சிற்றரசர்.  அவர் வைத்ததுதான் சட்டம். ஏரி கோடையில் காய்ந்துவிட்டால் குறுக்குப் பாதையாக எரியில் இறங்கி சைக்கிளில் அந்த கிராமத்தை அடைந்து மேற்கு கிராமங்களுக்கு செல்வேன்.  அப்போது ஒரு பெண்மணி என்னிடம் தலையாரி அடிக்கும்  கொட்டம் பற்றி சொன்னார்.  எனக்கு நம்பிக்கையில்லை. முதல்முதலாக எனக்கு ஒரு புகார் அவர்மீது.  இப்படியாக ஒரு மாதம் கழிந்தது. ஒருநாள் நானும் என் ஓ.ஏவும் அந்த கிராமம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தோம், மாலை நான்கு மணியிருக்கும் ஒரு அரச மரத்தடியில் தலையாரி நின்றுகொண்டு போதையில் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார்.  என் ஓ.ஏ. அவர் அருகில் சென்று ஆர். ஐ. வந்திருப்பதாகச் சொல்லி கண்டித்தார்.

ஒன்றும் மசியவில்லை.  நான் ஏதோ என்னிடம் ‘ஏ.கே.47’ இருப்பதுபோன்ற தைரியத்தில் அவரைப்போய் கண்டித்தேன்.

அவரைப் பார்த்தால் கிங்கரன்போன்ற உருவம்.  ரத்தம் சிவந்த முட்டைக் கண்கள் என்று அய்யனார் கோயில் சிலைபோன்று பூதாகரமாக இருப்பார்.  நானோ, நானோகார் மாதிரியிருப்பேன்,  யானையின் காலடியில் நிற்கும் ஒரு முயல்போல் அவருக்குத் தோற்றமளித்தேனோ என்னவோ.  என்னையும் பார்த்து ‘‘யார்ரா நீ ஆர்.ஐ.’’ என்று ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்துவிட்டார்.  அந்த வழியாக போய்வந்த ஏதோ ஒரு சிலரும் ஏதோ ரோட்டோரத்தில் ஆடு மாடு மேய்கிறது என்ற நினைப்பில் எங்களைக் கண்டு கொள்ளாமல் போய்க்கொண்டே இருந்தனர்.  எனக்கு அவமானம் தாங்கவில்லை.

என் ஓ.ஏ. என்னைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.  ஒருவாரத்துக்கு மேலாகியும் என் மனதில் அமைதி ஏற்படவில்லை.  அந்த கிராம நிர்வாக அலுவலரையும் அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த கிராமத்திற்குப் போனோம்.  அங்கே அன்று தலைவர் ஆஜரில் இல்லை.  அவர் தாலுக்கா ஆபீசுக்குப் போயிருப்பதாக தகவல் கிடைத்தது.

என்னிடம் ஏற்கனவே முறையிட்ட பெண்பற்றிய விபரங்களைச் சொல்லி விசாரித்ததில் கடைசியில் ஒரு வீட்டில் இருந்த பெண்மணி வந்தார்.  அவர்தான் என்னிடம் முறையிட்டவர்.  ஆனால் யாரும் தலையாரி பற்றி புகார் எழுதித் தரத் தயாராக இல்லை.  கடைசியாக ஒரு பெரியவர். அந்த ஊரில் அவர் ஒரு பெருந்தனக்காரர். அவர் தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசாரித்தர்.  கடைசியில் அவரும் புகார் தரமறுத்து அவரை அடக்கி வைத்தால் போதும். தினசரி அடிக்கும் லுட்டி தாங்கவில்லை என்று சொன்னார்.  புகார் என்று எதுவும் இல்லாமல் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று யோசிக்கையில் அவரே ஒரு துண்டு சீட்டினைக் காட்டி என்னிடம் நிலவரிக்கு என்று நாநூறு ரூபாய் வாங்கிச்சென்று ஒரு ஆண்டு ஆகிறது. இன்னும் ரசீது தரவில்லை வாங்கித்தாருங்கள் என்றார்.  ஆனால் எழுத்து மூலமாக புகார் அல்லது வாக்குமூலம் ஏதும் தர மறுத்துவிட்டார்.

ஆனால் நம்ம தலையாரி, அதில், இன்ன பசலி இன்ன பட்டாவுக்கு இவ்வளவு ரூபாய் வாங்கிக்கொண்டேன் என்று அரசாங்க ரசீதுக்குச் சமமாக எழுதிக் கொடுத்திருந்தார்.  அப்போது சிரத்தையில்லாமல் அவரிடம் அந்த சீட்டை வாங்கிக்கொண்டு சம்பளத்தில் பிடித்தம் செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

வந்தபின்னர் அந்த சீட்டில் கண்ட தொகை வரவாகியிருக்கிறதா என்று பார்த்ததில் அப்படி ஏதும் வரவாகவில்லை.  அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாத நிலையில் ஆர்.ஐ.தான் எல்லாவற்றுக்கும் பில் போட்டுக் கொடுத்துவந்தனர்.  அதனால் யார் கேட்கப் போகிறார்கள் என்று பலர் வாங்கிச் சாப்பிட்டதுண்டு.  அதையே நம்ம தலையாரியும் செய்திருந்தார்.   மறுநாள் தலையாரியை முறைப்படி வரவழைத்து விசாரித்தேன்.  அவரோ நடந்தது தெரியாமல் கொஞ்சம் எடுப்பாகவே பதில் சொன்னார்.  சரி இவருக்கு தூக்கு தண்டனைதான் என்று முடிவாகிவிட்டது.

அன்று இரவே ஒரு பெரிய அறிக்கை தயார் செய்து போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர். போடுவதுபோல் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி துண்டுச்சீட்டுக்கு நகல் எடுத்து அதையும் தாசில்தாரிடம் கையொப்பம் வாங்கி அறிக்கையினை தயார் செய்து கொடுத்துவிட்டேன். நகலையும் ஆர்.டீ.ஓவிற்கு அனுப்பிவிட்டேன்.  அலுவலகத்தில் இப்படி ஒரு அறிக்கை வந்தால் சம்பந்தப்பட்டவரை வரவழைத்துக் கறந்துகொண்டு ஒன்றுமில்லாமல் செய்துவிடுவர்.  ஆனால் மேலே ஒரு நேர்மையான அப்பழுக்கற்ற அதிகாரி உட்கார்ந்திருந்ததால் வேறு வழி இல்லாமல் சஸ்பெண்ட் செய்துவிட்டனர்.

அப்புறம்தான் வழிக்கு வந்தார் நம்ம தலையாரி.  எந்த சிபாரிசும் செல்லுபடியாகவில்லை.  கடைசியில் அவர் பேரில் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களுக்கு நானே சமாதானம் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.  அதற்குள் ஆறுமாதங்கள் உத்தியோகம் போச்சு.  அப்புறம் கிராமத்தில் பெட்டிப்பாம்பாக வேலைபார்த்தார் அவர்.  கொட்டினால்தான் தேள் என்பது சரிதான்.