"

31

சினிமா சினிமா.


ரொம்ப நல்லவன்னு பேரெடுத்துவிட்டாலும் அது தர்ம சங்கடத்தில்தான் கொண்டுவிடும். என் நண்பன் ரகமத்துல்லாவும் அடுத்து நானுமாக வருவாய் ஆய்வாளர் பணிசெய்த வகையில் ஐந்து ஆண்டுகாலம் அந்த குறுவட்ட மக்களைக் கெடுத்துவிட்டோம். அடுத்து வந்தவர்களுக்கு வருமானம் வராத அளவிற்கு பிர்க்காவைக் மாற்றிவிட்டோம்.  அதனால் எங்கே போனாலும் ஏதாவது ஒரு அன்புத் தொல்லை வந்து சேரும்.  காரியம் செய்து கொடுத்து பயனடைந்தால்தான் ஊழலா.  அன்பு என்ற பெயரால் மக்களிடம் ஏதேனும் பெற்றாலும்கூட அது ஒரு வகை ஊழல்தானே.

ஒன்று, எப்போதோ நாம் செய்த உதவிக்கு நன்றியாக இப்போது உபசரிக்கக்கூடும். அல்லது, வரும் காலத்தில் எப்போதாவது உதவி கிடைக்கும் என்று உத்தேசத்தில் இன்று உபசரிக்கப்படலாம் அல்லவா.

இப்படித்தான் நானும் என் நண்பனும் திடீரென்று சினிமாவிற்குப் போவது என்று முடிவு செய்து இரண்டாம் ஆட்டத்திற்குப் போவோம்.  என் நண்பன் பளிச்சென்று அடையாளம் கண்டுகொள்ளப்படுவான் என்பதால் ஒரு பெரிய ராஜஸ்தான் தலைப்பாகை கட்டிக்கொள்வான்.  இருவரும் பள்ளிக்கூடத்தினைக் கட்டடித்துவிட்டு ‘ஏ’ படம் பார்க்கச் செல்லும் மாணவன் போன்று திருட்டுத் தனமாக கவுண்டரில் நுழைந்து டிக்கட் எடுத்துக்கொண்டு வெளியே வருவோம்.

அந்த வினாடியிலிருந்து நாங்கள் சீட்டில் போய் உட்காருவதற்குள்ளாக ஒரு இரும்புக்கை எங்களைப் பிடித்துவிடும். நிமிர்ந்து பார்த்தால் தியேட்டர் ஓனர்.  சுதாரிப்பதற்குள் டிக்கட்டைப் பறித்துக்கொண்டு காசைக் கையில் கொடுத்துவிடுவார்.   அதுமட்டுமா தியேட்டருக்குள் கொண்டுபோய் உட்கார்த்தி வைத்துவிட்டுப் போவார்.  அடுத்து கேக், முருக்கு, டீ என்று வரிசையாக பலகாராதிகள் வேறு வந்துசேரும்.

சரி இப்படித்தான் நடக்கிறதே படம் பார்க்கவேண்டாம் என்றிருந்தால் ஒருநாளைக்கு நல்ல பழைய படமாகப் போட்டு எங்கள் நாக்கில் தேன் தடவிவிடுவர்.  அப்புறம் என்ன. தொல்லைகள் தொடர்ச்சிதான்…

அதே தியேட்டரில்போய் மக்களிடம் வசவு வாங்கியதும் உண்டு. எப்படி என்கிறீர்களா. அப்போதெல்லாம் திடீரென்று ஆர்.டீ.ஓ, ஆபீசில் வந்து உட்கார்ந்துகெர்ண்டு பத்து பதினைந்து அடியாட்களைத் தயார் செய்துவிடுவார். வேறுயார் நாங்கள்தான் அந்த அடியாட்கள்.  எல்லாரும் கிடைபோட்டு வைக்கப்படுவர். குறிப்பிட்ட நேரம் வந்ததும் இரண்டு ஜீப்புகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவார்.  நேராகத் தியேட்டரில் போய் இறங்கியதும். எங்களை ஆளுக்கு ஒரு கிளாசுக்கு அனுப்பி அங்கு எத்தனை டிக்கட் உள்ளது என்று எண்ணிவரச் சொல்வார்.

நாங்கள் இருட்டுக்குள் குறுக்காகப் புகுந்து தலையை எண்ணுவோம் அதிலும் தரை டிக்கட் என்றால் போச்சு.  எல்லாரும் அவரவர் வசதிக்கு கால்நீட்டிக்கொண்டு கும்பலாக உட்கார்ந்திருப்பர். புறாக்கூட்டத்தில் புகுந்து எண்ணிக் கணக்கெடுக்கும் கதைதான்.  படம் இண்ட்ரஸ்டாக போகும்போது மறைத்தால் காசுகொடுத்து டிக்கட் வாங்கியவர் சும்மா இருப்பரா? செந்தமிழ், வன்தமிழ் கொடுந்தமிழ் வார்த்தைகள் எல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

எண்ணிக்கொண்டு வந்து சொன்னால் டிக்கட் கொடுத்ததற்கும் எங்கள் கணக்குக்கும் ஒத்திருக்காது.  ஏதோ ஒன்றிரண்டு என்றால் அரை மனதுடன் ஏற்றுக் கொள்வார்.  கூட இருந்தால் தியேட்டர்காரர் மாட்டினார்.  குறைவாக இருந்தால் சரியாக கணக்கெடுக்கவில்லை என்று மீண்டும் கணக்கெடுக்கவேண்டும்.  மீண்டும்….

ஒருமுறை மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் தியேட்டர்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது. அதற்காக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் தலைமையில் ஒவ்வொரு குழு அமைக்கப்பட்டது. நாங்கள் நான்கு பேர் ஒரு தியேட்டருக்குப் போனோம். ஒரு கிராமப்பகுதி.  புது படம் ஓடும் அரங்குகளில்கூட அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆனால் அங்கே மிகப் பழைய எம்.ஜி.ஆர். படம். உள்ளே நுழைந்த எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  அரைகுறை ஆடை ரெக்கார்டு டான்ஸ் இலவசமாகப் பார்க்கும் அரங்கு போன்று அவ்வளவு கூட்டம். உள்ளே நுழையவே முடியாத அளவுக்கு கூட்டம்.  பாதைகளில்கூட அடைத்துக்கொண்டு நின்று கொண்டு பார்க்கின்றனர்.  கூரை மேல்தான் ஏறிப்பார்க்கவில்லை.  அதிகாரியிடம் வந்து நிலைமையை சொன்னோம்.

நான் நினைத்துக்கொண்டேன், ஒழிந்தார் இந்த தியேட்டர்காரர் என்று. சீல் வைக்கப்போவது போலெல்லாம் கற்பனை. தாசில்தாரோ அவரிடம் வாக்கு மூலம் வாங்கிக்கொண்டிருந்தார். வேலை முடிந்தது. புறப்பட வேண்டியதுதானே ஏன் இன்னும் உட்கார்ந்திருக்கிறார் என்று தெரியாமல் காத்திருந்தோம். கடைசியில் படம் முடிந்து எல்லோரும் வெளியே போன பின்னர்தான் கிளம்பினார் வட்டாச்சியர்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் பணிக்கு வந்து மூன்று ஆண்டுகூட ஆகவில்லை. அத்துடன் இந்த மாதிரி விவகாரம் எல்லாம் பார்த்தது கூட இல்லை.  என்னுடன் வந்த சீனியரிடம் கேட்டேன்.

அவர்தான் சொன்னார். கூடுதல் டிக்கெட் பற்றி, ஒரு வாக்குமூலம் வங்கிக்கொண்டது இடையில் யாரேனும் திடீர் தணிக்கைக்கு வந்தால் பாதுகாப்புக்காக என்றும், யாரும் வராததால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும், வட்டாட்சியருக்கு கவனிப்பு நடந்துவிட்டது என்றும் சொன்னதும்தான் இப்படிக்கூட நடக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன்.  அப்புறம் ஏன் எங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு போய் சிரமப்படுத்தவேண்டும்.

நான் திட்டக்குடியில் வேலை பார்க்கும்போது ஆற்றுக்கு அக்கரையில் ஒரு டென்ட் கொட்டகை இருந்தது. கிராமத்தில் உள்ள அதில் புதுப்புது படங்கள் போடுவர்.  நானும் என் நண்பரும் நள்ளிரவுக் காட்சிக்கு போய்வருவது உண்டு. ஒருநாள் நாங்கள் போகும்போது எங்களுடன் ஒரு அலுவலக உதவியாளர் சேர்ந்துகொண்டார்.  வாசலில் போய் நின்றால் படத்தின் பேரே வித்யாசமாக இருந்தது.  படம் போட்டுவிட்டிருந்தார்கள். உடன் வந்த அ. உ. சும்மா இருக்காமல் நாங்கள் துணை வட்டாட்சியர்கள் என்று முன்னதாக அறிமுகம் செய்துவிட்டார்.  அவ்வளவுதான், சிப்பந்திகளுக்குள் ஒரே பரபரப்பு.  கடைசியில் டிக்கெட் தீர்ந்துவிட்டது என்று எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.   பின்னர்தான் தெரிந்தது அங்கே அடிக்கடி பலான படம் போடுவார்கள் என்று.

துணை வட்டாட்சியர் என்று சொன்னதும் ஏதோ ரெய்டுக்கு வந்திருக்கிறோம் என்று பயந்துபோய் எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டார் உரிமையாளர். ஆக, எங்களை அறிமுகம் என்ற பேரில் நாங்கள் பலான படம் பார்த்து சொர்க்கத்துக்கு போவதை தடுத்துவிட்டார் எங்கள் அ. உ.

சில நாட்களில் அந்த திரை அரங்கில் பத்து மணி ஆனாலும் படம் போடுவதற்கான அறிகுறியே இருக்காது. காட்சி ரத்து என்பது போல் தோன்றும்.  அர்த்த ராத்திரியில் டிக்கட் கொடுத்து பலான படம் போடுவார்களாம்.  அந்த பகுதி மக்களுக்கு விபரம் தெரியுமாம்.  அதனால் அந்த அரிய சந்தர்ப்பத்தை அவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுவார்களாம்.

ஒருமுறை நாங்கள் மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் போனபோது சற்று முன்னதாக ஒரு திரை அரங்கில் தங்கிக்கொண்டு சற்று நேரம் கழித்து போகலாம் என்று உத்தேசித்து படம் பார்க்கப் போனோம்.  கிராமப்பகுதி என்பதால் கூட்டம் குறைவுதான். நாங்கள் போனபோது படம் ஒடிக்கொண்டிருந்தது.  ஏதோ நாங்கள் படம் பார்க்கத்தான் வந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு ஓடிய படத்தை நிறுத்தி மீண்டும் முதலில் இருந்து ஓட விட்டார்கள்.  ஆனால் பார்வையாளர்களோ எந்தப் பிரசின்னையும் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம். ஒருவேளை ஒரு டிக்கட்டுக்கு இரண்டு படம் பார்த்த சந்தோஷம் போலும்.

திரை அரங்கு தணிக்கைக்கு என்று போனால் கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்று பார்க்கும் அவலம் இருக்கிறதே.  அப்பப்பா.  நாங்களோ சுத்தம் செய்யவில்லை என்போம்.   ஓனரோ இப்பதான் மக்கள் பயன்படுத்தினர் என்பார். ‘தீ’ வாளிகள் எங்கே என்றால் செந்தில் வாழைப்பழம் கதையாக அதுதான் இது என்பார்.  அதைவிட இருக்கும் வாளிகளில் மணல் நிரப்பி இருந்தால் அதைத்தாண்டி நம் மக்கள் வெற்றிலை பாக்கு எச்சில் துப்பி தொடமுடியாத அளவுக்கு மாற்றியிருப்பர்.

கொடிநாள் வசூல் என்பதற்காக குறிப்பிட்ட ஒருநாள் வசூலை தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்திரவிடுவார்.  சில திரை அரங்குகளில் அந்த ஒருநாளில் மட்டும் அரதப் பழைய படம் போடுவர்.  ஒரு நாள் வசூல் என்றால் தாங்காது என்று முறையீடு செய்ததன் பேரில் ஒரு காட்சி என்று மாறியது. அதிலும் ‘அகாஜுகா’ செய்து மிகக் குறைந்த தொகையைதான் செலுத்துவார்கள்.

முன்பெல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கடிதம் வரும். ‘குறிப்பிட்ட படத்தில் இத்தனை அடியிலிருந்து இத்தனை அடி வரை இன்னின்ன வசனம் அல்லது காட்சி நீக்கப்பட்டுள்ளது. அதனை தணிக்கை செய்து அறிக்கை அனுப்பவும்’ என்று.   அந்தோ பரிதாபம். அந்த படம் ஓடி முடிந்து தியேட்டரை விட்டுத் தூக்கிய பின்னர்தான் கடிதம் வரும். அதைவிட சின்னி ஜெயந்த் மாதிரி படப்பெட்டியை திறந்து ரீல்களை அளந்து முழம்போடவா நேரம் இருக்கிறது.

இந்த நாளைய அரசு பேருந்து சீட்டுகளை விட அந்நாளைய திரை அரங்கு இருக்கைகள் நன்றாகவே இருக்கும். இருந்தும் அது சரியில்லை இது சரியில்லை என்று குறை சொல்லி வசூல் செய்வதில் எங்கள் ஆட்களைப் போல் கில்லாடிகள் இருக்க முடியாது.

அதிலும் சில சமயம் கூடுதல் கட்டணம், டிக்கெட் முறைகேடு என்று கண்டுபிடித்து அறிக்கை அனுப்பினால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாதாம். அதனை விற்பனை வரித் துறைக்குத்தான் அனுப்புவர்.  அதனால் எங்களவர்கள் நாம் ஏன் வேறு துறைக்கு வாய்க்கால் வெட்ட வேண்டும் என்று கழிப்பறை, சுற்றுப்புறம், என்று தணிக்கை செய்துகொண்டிருப்பர்.