32
மாமூல்.
இந்த மாமூல் இருக்கிறதே அதற்குப் பெரிய அதிகாரிகள் கடிவாளம் போடாதவரை அதை அடக்க முடியாது.
ஒரு முறை மத்திய அமைச்சர் இருவர் ஹெலிகாப்டரில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தனர். அவர்கள் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் ஓஎன்ஜிசி இறங்குதளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் நிகழ்ச்சிக்குப் போய்விட்டுத் திரும்பினர். கலெக்டர் உட்பட எல்லாரும் பக்கத்தில் நின்று வழிகொடுத்துவிட்டு தங்கள் கார்களில் இடத்தைக் காலிசெய்துவிட்டனர்.
எப்போதும் தாசில்தார் ஜீப்பானது முக்கியப் பிரமுகர் வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளித்தான் போகும். அவ்வளவு கண்டிஷனில் அந்த ஜீப் இருக்கும். புதிய ஜீப் வந்தால் உயர் அதிகாரிகள் அதனை எடுத்துக்கொண்டு தங்கள் வாகனத்தை கீழே தள்ளிவிடுவர். இப்படியாக உழைத்து ஓடாகிப்போன அறதப் பழைய வண்டிதான் தாசில்தாருக்குக் கிடைக்கும். அது யானை அசைவதுபோல் அசைந்து வரும். அதனை வைத்துக்கொண்டுதான் தாசில்தார்கள் குப்பைகொட்டி நற்பெயர் எடுப்பர்.
இப்படியாக வழியனுப்பிவிட்டு எல்லா கார்களும் புறப்பட்டுவிட, தாசில்தார் ஜீப் முக்கி முனகி திக்கித் திணறி ‘முன் இருவர் இழுக்க பின் இருவர் தள்ள’ என்று பரமார்த்த குருவின் குதிரை போன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. அமைச்சரின் ஹெலிகாப்டரோ வேகமாக ஆரம்பித்தது. சத்தம் பெரிதாக வந்தது. ஓரிரு அடிகள் மேலே எழும்பியது. அடுத்து அதிக லோடு ஏற்றப்பட்ட முரட்டு மாடுபோல் தரையில் படுத்துவிட்டது. ஆனால் சத்தம் மட்டும் பெரிதாகக் கேட்டது. அசையவில்லை. தாசில்தார் வண்டியில் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தவர்கள் ஏதோ கோளாறு என்று தாசில்தாரிடம் சொல்ல, ஓடிப்போய்ப் பார்த்தால் ஹெலிகாப்டரில் கோளாறு என்றும் மெக்கானிக் வந்தால்தான் போகும் என்றும் சொல்லிவிட்டார் பைலட்.
உடனே தாசில்தார் தமது ஜீப்பினை அனுப்பி கலெக்டர் காரைத் துரத்திச்சென்று திருப்பி அழைத்துவந்து அதில் சென்னைக்கு அனுப்பிவைத்தனர். மந்திரி புறப்பட்டுப் போனதுதான் தாமதம் ஹெலிகாப்டர் கிளம்பிப் போய்விட்டது. பின்னர்தான் தெரிந்தது. ஹெலிகாப்டர் பைலட்டுக்கு தாசில்தார் பாட்டில் உட்பட மாமூல் தரவில்லை என்பது.
கவர்னர் வந்தால் அவரது டபேதாரிடம் தாசில்தார் மாமூல் பணத்தை முன்னதாகவே தந்துவிடவேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு பொருளிலும் குற்றம் கண்டுபிடித்து டார்ச்சர் கொடுத்துவிடுவார். அப்புறம் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கப்போவது தாசில்தார்தான் என்றால் யார் நம்புவர்.
ஒருமுறை நான் கலெக்டர் வருகைக்காக பங்களாவில் இருந்தேன். கலெக்டர் புறப்படும் நேரம்வரை காத்திருந்த டபேதார் என்னிடம் “ஆர்ஐ சார் படிகொடுத்தால் நாங்கள்ளாம் புறப்படுவோம். அய்யா ரெடியாயிட்டாங்க” என்றார். அன்று பார்த்து என்னிடம் காசு கிடையாது. அன்று கலெக்டர் உட்பட அனைத்து பரிவாரங்களுக்கும் சாப்பாடு இத்தியாதிகள் வாங்கியதில் கையில் காசு கிடையாது. நான் அடுத்தமுறை தருவதாகச் சொன்னதும். அவரோ ‘உங்களிடம் இருந்தால் பாங்கில் போட்டமாதிரி அதற்கென்ன’ என்று சொல்லிவிட்டார்.
ஆனால் முறட்டு டிரைவருக்கு பொறுக்கவில்லை. தாசில்தாரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். தாசில்தாரோ என்னை அழைத்து ‘அந்த ஆளுக்கு படி கொடுத்துத் தொலைக்க வேண்டியதுதானே’ என்று என்மேல் விழுந்தார். நான் காசு இல்லாத விரபத்தையும் அடுத்த முறை தருவதாகவும் சொல்லிவிட்டேன்.
இருந்தாலும் டிரைவரின் ‘லஞ்ச கெளரவம்’ பாதித்துவிட்டதல்லவா. அவர் தாசில்தாரிடம் கலெக்டர் உட்காருவதற்கு காரில் போடுவதற்காக மணிகளாலான ஒரு கவர் வேண்டும் என்று இண்டெண்ட் வைத்துவிட்டார். அன்று ஐம்பது ரூபாய் படிகொடுக்காததற்கு நான் நானுறு ரூபாய் செலவு செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு சிறுகதை குமுதத்தில் வந்தது. தலைப்பு: ‘கலெக்டர் வருகிறார்’. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள்வரை ஆகியும் மறக்கவில்லை. அந்தக் கதையின் சாரம் இதுதான்.
ஒரு ஊருக்கு வந்த கலெக்டர் கோழிக்கறி சாப்பிட்டுவிட்டு கெஸ்ட்ஹவுஸ் ரூமில் ரெஸ்ட் எடுப்பார். திடீரென்று தாசில்தாரை அழைப்பார் கலெக்டர். தாசில்தாருக்கு வயிற்றில் புளி கரைக்கும். இதுவரை செய்த தப்புகள் இனி செய்யப் போற தப்புகள் இப்படியெல்லாம் சிந்தித்து அவசர அவசரமாக சட்டைப் பித்தான்கள் பேண்ட் ஜிப்பு உட்பட சரிசெய்துகொண்டு மெதுவாகக கதவைத் திறந்துகொண்டு கலெக்டர் முன்பாக ஆஜராகி குனிந்து கொண்டு வணக்கம் செலுத்துவார். அவருக்கு பேஸ்மெண்ட் மட்டுமின்றி கட்டிடம் முழுவதும் வீக்தான் என்பது அப்போதுதான் நன்கு புலனாகும்.
கலெக்டர் ஹாயாக சாய்ந்துகொண்டு “கோழி ரொம்ப நல்லா இருந்ததையா. கோழி என்ன விலை” என்பார். தாசில்தாருக்கு கோழிவிலை பற்றி குழப்பம் வந்துவிடும். கையிலிருந்து காசுகொடுத்து வாங்கி சாப்பிடுகிறாரா என்ன! டக்கென்று வெளியில் வந்து பிரசவ வார்டில் எட்டிப் பார்த்துக்கொண்டு காத்திருக்கும் கணவன் போன்ற நிலையில் நின்றுகொண்டிருக்கும் பி.டி.ஓ.விடம் கேட்பார். அவருக்கும் கோழி விலை என்னவென்று சொல்லத் தைரியம் வராது. கோழிவிலையை அதிகமாகச் சொன்னால் விலைவாசி இப்படி விற்கிறதே நீர் என்ன நடவடிக்கை எடுத்தீர் என்று பிடித்துக்கொண்டால் என்ன செய்வது. குறைத்துச் சொன்னால் இன்ன விலை விற்கும் கோழியை குறைத்துச் சொல்கிறீரே என்று பிடித்துக்கொண்டால் என்னாவது அல்லது ஒருவேளை கோழிவிலையைக் கேட்டு நமக்கு டெஸ்ட் வைக்கிறாரா, என்றெல்லாம் பலவாறாகக் குழப்பிக்கொண்டு அவசர மந்திராலோசனை நடத்தி ‘ஒரு கோழி ஒரு ரூபாய்’ என்று சொல்வதென்று முடிவெடுத்தனர். கலெக்டர் கேட்டால் இருவரும் ஒரே மாதிரி சொல்லவேண்டும் அல்லவா.
மீண்டும் மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போன தாசில்தார், கலெக்டரிடம் “ஒரு கோழி ஒரு ரூபாய் அய்யா” என்று பவ்யமாகத் தெரிவித்தார். கலெக்டருக்கு பரம சந்தோஷம். பாக்கெட்டிலிருந்து முப்பது ரூபாயை எடுத்து தாசில்தாரிடம் நீட்டி “கோழி நல்லாவும் இருக்கு. சீப்பாகவும் இருக்கு – தினம் ஒரு கோழி பங்களாவுக்கு அனுப்பிவிடும்” என்று சொல்லிவிடுவார்.
தாசில்தாரும் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று வெளியே வந்து பி.டி.ஓ.-விடம் தாம் தப்பித்த கதையைச் சொல்லி ஒரு மாதம்தானே பல்லைக் கடித்துக்கொண்டு தினம் ஒரு கோழி வாங்கி அனுப்பிவிடுவோம் என்று திருப்தியாக சென்றுவிடுவார். ஆனால் மாதம் முடிந்ததும் கலெக்டரிடமிருந்து முப்பது ரூபாய் வந்துவிட்டது அடுத்த மாதத்திற்கு கோழிவாங்கி அனுப்புவதற்காக. இப்படியாக மாதம் தோரும் தினம் ஒரு கோழியாக அனுப்பிக் கொண்டிருப்பார்.
அதேபோன்று ஒரு நிகழ்ச்சி. கலெக்டர் வந்தார். அவருக்காக மீன்துறை வளர்க்கும் பண்ணையிலிருந்து அதிகாலையில் மீன் வாங்கி தனியே சமையல் செய்து பரிமாறப்போக மீனின் ருசி கலெக்டர் நாக்கில் ஒட்டிக்கொண்டு விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. கலெக்டர் தம் வீட்டுக்குப் போனதும் தாசில்தாரை போனில் அழைத்து தமக்கு அந்த மீன் இத்தனை பேருக்கு சமைக்கும் வகையில் தேவை என்றும் உயிருடன் அனுப்பி வைக்கும்படியும் உத்திரவிட்டுவிட்டார்.
உடனே மீன் துறை வளர்ப்பிடத்திற்கு ஓடிப்போய் அதிகாலையில் மீன்பிடிக்கும்போதே காத்திருந்து நல்ல பெரிய மீனாக வாங்கினோம். அந்த மீன் வகையானது பிடித்த ஐந்து நிமிடத்திற்குள் இறந்துவிடும். ஆனால் கலெக்டர் உத்திரவிட்டுவிட்டால் அது உயிரை விடலாமா! அதற்கென்று பெரிய பிளாஸ்ட்டிக் பக்கெட் வாங்கி அதில் தண்ணீர் நிரப்பி அதில் மீனைத் தலைகீழாக நட்டுவைத்து (ஒரு முழம் மீன் நீந்துவதற்கு வேறு என்ன செய்வது) ஜீப்பில் பறந்தோம். இருந்தாலும் அது அதிகபட்சமாக அரைமணிகூட தாக்குப் பிடிக்கவில்லை.
நேராக பங்களாவில் கொண்டுபோய் டபேதார் மூலமாக சமையல் ஆளைக் கவனித்து, ‘கேட்டால் மீன் உயிருடன்தான் வந்த’தென்று சொல்லச்சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தோம். வெளியில் வந்துபார்த்தால் ஜீப்பில் பின்பக்கம் மீன் வியாபாரம் செய்த வண்டிபோல் வாடையும் அதனால் கவரப்பட்ட ஈக்கூட்டமும் தாங்கவில்லை. ஒருவழியாக கழுவி சுத்தம் செய்து வந்துசேர்ந்தோம்.
ஆனால் ஒன்று அந்தக் கதையில் வந்ததுபோன்று தினமும் கேட்கவில்லை. எப்போதோ ஒருநாள் நினைவுவந்தால் கேட்பார் அல்லது விருந்தாளி வந்தால் கேட்பார்.
ஒரு கலெக்டர் முகாம் வந்தால் சமயத்தில் தன் மகனையும் கூட அழைத்து வந்துவிடுவார். அவ்வளவுதான் அன்று குடிதண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெறும் கோல்டு ஸ்பாட்தான். ஒரு டஜனுக்குக் குறையாமல் வாங்கிவிடுவேன். வந்து இறங்கியது முதல் கையில் ஒரு பாட்டில் இருக்கும். செயின் ஸ்மோக்கர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் செயின் ட்ரிங்க்கர். சாப்பிடும்போதுகூட தண்ணீருக்கு பதிலாக கோல்டு ஸ்பாட்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பத்துவயதுகூட ஆகாத சிறுவன் டபுள்காட் மெத்தை சைசில் இருப்பார்.
ஒரு அதிகாரி தம் மகனுக்கு நான்காம் வயது பிறந்தநாள் கொண்டாடினார். கைத்தடிகளின் மூலமாக தாசில்தார்கள், பி.டி.ஓ.க்கள் என்று கீழ் நிலை அதிகாரிகளுக்கு எல்லாம் ஓலை அனுப்பி பரிசுகளுடன் வரும்படி கேட்டுக்கொண்டனர். ஒவ்வொரு தாசில்தாரும் அவனே ஒரு பவுன் செய்கிறானே நான் அதைவிடக் குறைத்து செய்தால் நம் கெளரவம் என்னாவது என்ற எண்ணத்தில் அதைவிட கூடுதலாக செய்தனர். பி.டி.ஓ.களும் மற்றும் பல அதிகாரிகளும் அப்படியே. அரசியல் தலைவர் வீட்டு விசேஷம் கணக்காக தடபுடல் விருந்துவேறு. விருந்து செலவு கீழே இருப்பவர் உபயத்தில்தான். இப்படி ஒரு கலெக்ஷன் டெக்னிக்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்த அதிகாரி மூன்று வயது வரை பிறந்தநாளை எப்படிக் கொண்டாடினார். ஐந்தாவது முதல் அடுத்தடுத்த பிறந்தநாளை எப்படி கொண்டாடினார் என்பதுதான்.
ஒரு கிராமத்தில் தொழில் வளாகம் அமைக்கவேண்டி நிலம் எடுக்கப்பட்டது. அந்த கிராமம் முழுவதும் மணற்பாங்கானது அங்கு சில இடங்களில் சவுக்கு பயிரிட்டிருந்தனர். அதுவும் வளரவில்லை. பெரும்பாலும் பனைமரங்களும் மணிலாவும்தான் இருந்தது மற்ற இடங்கள் சாகுபடிக்கு லாயக்கில்லாத கடற்கரை ஓர கிராமம் என்பதால் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. ஆர்ஜிதம் செய்ய உத்தேச நிலங்களுக்கு அதில் என்ன பயிர் என்பதைக் காட்டும் அடங்கல் நகல்கள் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்று அறிக்கை தயார் செய்து சென்னைக்கு அனுப்பப்பட்டது.
திருப்பதி என்றால் ‘லட்டு’ என்பது போலவும், திருநெல்வேலி என்றால் ‘அல்வா’ போலவும் கடலுர் என்றால் ‘முந்திரி’ என்று மனதில் பதிந்து வைத்துக்கொண்டனர் அந்த மேலோர். காரணம் நெய்வேலி சுரங்க ஆர்ஜிதம் முழுக்க முந்திரி சாகுபடி நிலங்கள்தான். என்.எல்.சி நிறுவனத்தினர் அந்த மேலோருக்கு அவ்வப்போது முந்திரிப் பருப்பு சப்ளை செய்து பேப்பர்களைத் தாமதமின்றி தள்ளிச்சென்று கொண்டிருந்தனர். அந்த ‘ருசி’ கண்டவர்கள் எங்களையும் விடவில்லை. எங்கள் அறிக்கையைப் பார்த்ததும் அத்துடன் முந்திரிப் பருப்பு இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு கட்டிப்போட்டுவிட்டனர். நாங்கள் போய் இந்தப் பகுதியில் அம்மாதிரி நிலம் இல்லை என்று எவ்வளவோ வாதாடியும் கேட்கவில்லை.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இணைக்கப்பட்டிருந்த அடங்கலை எடுத்துக் காண்பித்து இதோ முந்திரி சாகுபடி செய்துள்ளதாக பதிவாகியிருக்கிறதே என்று கேள்விகேட்டனர். சாகுபடிப் பயிர் விபரத்தைப் பதியச்சொன்னால் அந்த வி.ஏ.ஓ. முட்புதர்களாகக் கிடந்த இடங்களைப்பொறுத்து “முள்” என்று அடங்கலில் பதிவுசெய்திருந்தார். அதனை நாங்கள் அப்போதே கண்டுபிடித்து விட்டிருந்தோம். எனவே, மேலாவிடம் அய்யா இது முந்திரியில்லை ‘முள்’ என்று வி.ஏ.ஓ. பதிவு செய்திருக்கிறார் என்றால் கேட்டால்தானே. அவர்களுக்கு நம்பிக்கையே பிறக்கவில்லை.
வி.ஏ.ஓ.-க்கள் அடங்கலில் பயிர் விவரத்தை சுருக்கித்தான் பதிவு செய்வர். அதன்படி முந்திரியை ‘முந்’ என்று பதிவு செய்வர். அதை வைத்துக்கொண்டு எங்களிடம் வம்பு செய்தனர். ‘அரசுக்கு அனுப்பினாலும் சரி, இல்லையென்றாலும் சரி, உங்கள் இஷ்டம்’ என்று தெரிவித்துவிட்டு வந்துவிட்டோம்.
இது மற்றொரு நிகழ்ச்சி. ஒரு அதிகாரி தமது துறையினரின் திறமைகுறித்து பெருமை பேசும் வகையில், என் சீனியர் அடிக்கடி சொல்லும் நிகழ்ச்சி. ஒரு கலெக்டர், பங்களாவில் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். நண்பர்களுக்குள் சிறு வாக்குவாதம். கலெக்டரோ, ‘எங்கள் தாசில்தார் நினைத்தால் எதுவும் சாதித்துவிடுவார். அதிகாரிகளின் குறிப்பறிந்து அதற்குத் தக்கபடி காரியம் செய்வதில் வல்லவர்கள்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததை நண்பர் சற்றும் ஏற்கவில்லை. கலெக்டர் தம் வாதத்தை நிரூபிப்பதாகச் சொல்லிவிட்டு தாசில்தாரை அழைத்துள்ளார்.
அறை வாசலில் காத்திருந்த தாசில்தார் உள்ளே வந்ததும் ஒரு விண்ணப்பத்தினை அவரிடம் கொடுத்து “இந்த மனுவைப் பரிசீலித்து எனக்கு உடனடியாக அறிக்கை கொடுங்கள். எனக்கென்னவோ இதில் சொல்லப் பட்டிருப்பது ரொம்ப நியாயமாகப்படுகிறது” என்று சொல்லியுள்ளார்.
வட்டாட்சியர் உடனடியாகக் கிளம்பிப்போய் விசாரித்து தமது அறிக்கையினை கலெக்டருக்குக் கொடுத்துவிட்டார். அதில் இன்னின்ன காரணங்களால் இவரது கோரிக்கை மிகவும் சரியானதுதான் என்று பல பாயிண்டுகளைத் தெரிவித்திருந்தார். கலெக்டரோ அந்த அறிக்கையினை வாங்கிக்கொண்டே “ஏதோ தகுதியுள்ளதாகத் தெரிகிறது என்று அப்போது நான் சொன்னேனே ஒழிய பின்னர் சிந்தித்ததில் அது தவறாகப் படுகிறது.” என்று சொல்லியிருக்கிறார். அடுத்த நிமிடம் தாசில்தார் அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக ஒரு அறிக்கையை கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த அறிக்கையில், தாம் ஏற்கனவே பரிந்துரைத்து ஒரு அறிக்கை சமர்ப்பித்ததாகவும், தொடர்ந்து பரிசீலனை செய்தவகையில் தமது அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தும் கீழ்கண்ட ஆவணங்களின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தாம் பரிந்துரைத்ததை மறுதலிப்பதாகவும். மனுவைத் ‘தள்ளுபடி’ செய்யலாம் என்றும் விளாவாரியாக அறிக்கை கொடுத்துவிட்டார். அதில் ஒவ்வொரு பரிந்துரைக்கும் ஒரு மறுதலிப்பினை மிகவும் நேர்த்தியாகக் கொடுத்திருந்தார். கலெக்டரின் நண்பர் அதனைப் பார்த்துவிட்டு அசந்துபோய் விட்டாராம்.
ஆனால் இந்தத் திறமையெல்லாம் இப்போது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதென்னவோ உண்மை.
இப்படிப்பட்ட திறமைமிக்க அலுவலர்கள் நிறைந்திருந்த துறையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று. புன்செய் தரிசு நிலத்திற்கு தாசில்தாருக்கு பட்டா வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தும். அதனைக் கையெழுத்துப்போட மனமின்றி கோட்டாட்சியருக்குப் பரிந்துரைத்தார். மாமூல் வந்திருந்தால் ஒப்புதல் செய்திருப்பார். அதுவே அசத்தலாக வந்திருந்தால் தனது அதிகாரத்தை மீறிக்கூட பட்டா கொடுத்திருப்பார்.
கோட்டாட்சியரோ அந்த இடத்தைப் போய்க்கூட பார்வையிடாமல் வட்டாட்சியர் பார்வைக் குறிப்பையே தமது பார்வைக் குறிப்பாக மாற்றி அதனை கலெக்டருக்கு அனுப்பி வைத்துவிட்டார். அங்கேயாவது இந்த பேப்பர் ஏன் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று கேட்டார்களா. அல்லது உத்திரவுதான் பிறப்பித்தார்களா. இதுவரை இம்மாதிரி அறிக்கைகள் ஏதும் வந்ததில்லையே என்று குழம்பிப்போய் கட்டிவைத்து விட்டனர் போலும். பேப்பரின் கதி சுனாமியில் காணாமல் போனமாதிரி ஆகிவிட்டது.
பாகம் இரண்டில் மீண்டும் சந்திப்போம்!!!
தங்கள் கருத்துக்களை pasupathilingam@gmail.com -க்குமின்னஞ்சலிடவும்.
நன்றி
வணக்கம்.